இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
கப்பர்நகூமில் கூடுதலான அற்புதங்கள்
இயேசு தம்முடைய முதல் நான்கு சீஷர்களை பேதுரு, அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவானை தம்மைப் பின்பற்றி வரும்படியாக அழைத்த பின்னர் ஓய்வுநாளில், அவர்கள் அனைவரும் கப்பர்நகூமிலிருந்த ஜெப ஆலயத்துக்குப் போகிறார்கள். இயேசு அங்கே போதிக்கத் தொடங்குகிறார். அவர் வேதபாரகரைப் போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தப்படியால் அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
இந்த ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருக்கிறான். சிறிது நேரத்துக்குப் பின்பு அவன் சத்தமாக: “நாசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர்” என்று சொல்கிறான்.
அந்த மனிதனைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது உண்மையில் சாத்தானின் தூதர்களில் ஒருவனே. இயேசு பிசாசை அதட்டி, “நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் போ” என்கிறார். உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிடுகிறது. ஆனால் அவனுக்கு ஒரு சேதமுஞ் செய்யாமல் அவனை விட்டுப் போய்விடுகிறது. எல்லாரும் ஆச்சரியப்படுகிறார்கள்! “இது என்ன?” என்று அவர்கள் கேட்கிறார்கள். “இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே” என்கிறார்கள். இந்தச் செய்தி சுற்றுப்புறப் பகுதிகளுக்கு வேகமாக பரவுகிறது.