யெகோவாவின் ஒழுக்க தராதரங்களின்படி வாழ தீர்மானமாயிருத்தல்
சட்டப்பூர்வமாக தங்கள் திருமணத்தைப் பதிவு செய்யாத ஒரு ஆணும் பெண்ணும், வேசித்தனத்தில் வாழ்வதாகவும், அவ்விதமான நிலையில் அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்க முடியாது என்றும் பைபிள் தெளிவாக காட்டுகிறது. (1 கொரிந்தியர் 6:9, 10) பிரிட்டனுக்குச் சொந்தமான வெஸ்ட் இன்டீஸில், சத்தியத்தைக் கற்றுக்கொண்ட ஒரு இளம் பெண்ணின் அனுபவம் பின்வருமாறு சொல்லுகிறது:
செய்ன்ட் லூசியாவில் யெகோவாவின் சாட்சிகளில் இரண்டு பேர் அந்த இளம் பெண்ணைச் சந்தித்தபோது, அவள் பைபிளில் அக்கறையைக் காட்டினாள். அதன் விளைவாக, அவளோடு ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. காரியங்களைப் புரிந்துகொள்ளுவதில் அவள் முன்னேறியபோது, சில ஒழுக்க சம்பந்தமான மாற்றங்களைச் செய்ய வேண்டியதை அவள் உணர்ந்தாள். அவள் நான்கு பிள்ளைகளுக்குத் தாயாக இருந்த போதிலும், விவாகமில்லாமல் ஒரு மனிதனோடு வாழ்ந்து, ஒரு சிறிய வீட்டைக் கட்டி, மொத்தமாக அதில் ஆறு பேர் வசித்து வந்தனர்.
கடவுளுடைய நீதியான சட்டங்களுக்கு இசைவாகத் தனது வாழ்க்கை இல்லாததினால், மாற்றங்களைச் செய்ய அந்த இளம் பெண் தீர்மானமாயிருந்தாள். அவள் வாழ்க்கை நடத்தி வந்த அந்த மனிதனை விவாகம் செய்ய வேண்டும் அல்லது அவனை விட்டுப் பிரிந்திருக்க வேண்டும். அந்தக் காரியத்தைக் குறித்து அவனோடு பேசினாள், ஆனால் திருமணம் செய்துகொள்ள அவனுக்கு விருப்பமில்லை. விவாகமின்றி ஒப்பந்த உறவோடு வாழ்வதில் அவன் திருப்தியாக இருந்தான். அவளுடைய விசுவாசம் எதைச் செய்யும்படி தூண்டியது? யெகோவாவைப் பிரியப்படுத்த அவள் விரும்பினால், கட்டாயம் ஒரு தீர்மானம் செய்ய வேண்டியதாக இருந்தது. ஜெபத்தோடு சிந்தித்த பிறகு, அந்த மனிதனிடமிருந்து பிரிந்திருக்க வேண்டும் என்று அவள் தீர்மானித்தாள். ஆனால் அந்த நான்கு பிள்ளைகளோடு அவள் எங்கு சென்று வாழ முடியும்?
அந்தக் காரியத்தைப் பற்றி அந்த மனிதனோடு பேசிய பிறகு, ஒரு சமநிலையான முடிவு எடுக்கப்பட்டது—ஒவ்வொருவருக்கும் பாதி வீடு! சகோதரர்களுடைய அன்பான உதவியோடு, அவள் விட்டுவிடும் அந்த மனிதனோடு அந்த வீடு பிரிக்கப்பட்டது, அதாவது ஒரு பாதி அவளுக்கும், மற்றொரு பாதி அவனுக்கும் என்று பிரிக்கப்பட்டது. அதே நாள்தானே தனக்குச் சொந்தமான பாதி வீடு, ஐந்து மைல்கள் (8 கி.மீ.) தள்ளியிருக்கும் இன்னொரு இடத்திற்கு அனுப்பப்பட்டது. ஒரு வாரத்திற்குள், அது மறுபடியும் கட்டப்பட்டு, இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட ஒரு சிறிய வீடாக அது மாற்றியமைக்கப்பட்டது.
யெகோவாவின் தராதரங்களுக்கு இசைவாக தன்னுடைய வாழ்க்கையைக் கொண்டுவருவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அவள் எடுத்தபிறகு, அவள் தன்னுடைய நான்கு பிள்ளைகளோடு சேர்ந்து வெளி ஊழியத்தில் கலந்துகொண்டாள். தன்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, சீக்கிரத்தில் முழுக்காட்டுதலும் பெற்றாள். அந்த நிகழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, அவள் ஒரு துணைப் பயனியராக சேவை செய்தாள். அவளுடைய புதிய வீடு, சராசரியாக 17 பேர் ஆஜராயிருக்கும் ஒரு புத்தக படிப்பு தொகுதியாக உபயோகிக்கப்படும் மேலுமான ஒரு ஆசீர்வாதத்தையும் அவள் பெற்றாள். உண்மையில் தம்முடைய சுத்தமான வணக்கத்தாராக இருக்க வேண்டுமென்ற அவளுடைய தீர்மானத்தை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார். (w86 4/1)