உங்கள் வாழ்க்கைப் பணியாக நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
நீங்கள் இளம் வயதினராக பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், இளமையின் ஆஸ்திகள்—நல்ல ஆரோக்கியம், தெம்பு மற்றும் உடல் உறுதி—ஆகியவற்றால் நீங்கள் ஆசீர்வதிப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள். உங்களுடைய வாழ்க்கை, உங்களுக்கு முன்பாக பயணம் செய்யப்படாத ஒரு சாலையைப் போன்றிருக்கிறது. உங்களுக்கு முன்பாக இருக்கும் வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு உபயோகிப்பீர்கள்?
நீங்கள் எதிர்காலத்தை குறித்து நினைக்கும்போது, உங்கள் மனதில் அநேக கேள்விகள் எழும்புகின்றன என்பதில் சந்தேகமில்லை. நான் ஒரு பல்கலைக்கழகத்துக்குச் சென்று, வழக்கறிஞர், மருத்துவர் அல்லது விஞ்ஞானியாக பட்டம் பெற வேண்டுமா? பொருளாதார வெற்றிக்கும் சமுதாயத்தின் பெருமதிப்புக்குமாக நிறுவனம் என்ற ஏணியில் ஏறும் கனவு என்னை குழப்பத்தில் ஆழ்த்துகிறதா? நடிப்பு மற்றும் ஓவியக் கலை ஆகியவற்றில் ஒரு பிரசித்திப்பெற்ற பெயரை பெற்றிடுவேனா? அல்லது யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்த ஒரு இளைஞனாக, முழு-நேர ஊழியத்தின் மூலம் ‘என்னுடைய வாலிப பிராயத்தில் சிருஷ்டிகரை நினைப்பதை’ என்னுடைய வாழ்க்கைப் பணியாக தேர்ந்தெடுப்பதா?—பிரசங்கி 12:1.
செய்தித்தாள்களும் பத்திரிகைகளின் பக்கங்களும் பிரபலமடைந்த ஆட்களின் வாழ்க்கையைக் கிளர்ச்சியும் பொலிவும் மிகுந்ததாய் சித்தரிக்கின்றன, ஆனால் ஒரு முழு-நேர ஊழியனின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது சோர்வுள்ள அல்லது சலிப்பூட்டும் ஒரு வாழ்க்கையா? அல்லது உண்மையில் அக்கறையூட்டுவதாக அல்லது கிளர்ச்சியூட்டுவதாக இருக்கிறதா? முழுநேர ஊழியத்தில் பல வருடங்களாக இருந்த சிலருடைய உண்மையான வாழ்க்கை அனுபவங்கள் உங்கள் மனதைத் திடப்படுத்திக்கொள்ள உதவி செய்யும்.
முழு-நேர ஊழியத்தை ஏன் தேர்ந்தெடுத்தனர்
வியட்நாமில் போர்மூண்டபோது, ஹாரி ஒரு சரித்திராசிரியனாவதற்கு ஹவாய் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தான். அச்சமயத்தில் அவன் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளையும் படித்துக் கொண்டிருந்தான். அவனுடைய வகுப்பு மாணவர்களில் அநேகரைப் போன்று அந்தச் சமயத்திலிருந்த மாணவர் முற்போக்கு இயக்கத்தில் ஈடுபட்டான். போதை பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்தான், முக்கியமாக LSD என்ற போதை வஸ்துவை அற்புதமான ஒன்றாகக் கண்டான். ஒருநாள் காலை அவன் படுக்கையிலிருந்து எழுந்தபோது, சாராய புட்டிகள் உடைந்து இங்கும் அங்கும் கிடப்பதையும், சிகரெட் துண்டுகளும், ஆண்களும் பெண்களும் தரையில் ஆங்காங்கே கிடப்பதையும் கண்டான். முன்தினம் வீட்டினுள் சென்று சோதனையிடுவதற்கு அனுமதிக்கும் உத்தரவுடன் காவல் துறையினர் செய்த ஒரு சந்ததிப்பும் அதைக் குறித்து அவர்களுடன் விவாதித்ததும், அதைத் தொடர்ந்து வீட்டுக்காரர் அவர்கள் வீடு காலி செய்யவேண்டும் என்று வற்புறுத்தியதும் அவனுக்கு மங்கலாக நினைவுக்கு வந்தது. இந்த சமயத்தில்தானே தான் பைபிள் படிப்பதை நிறுத்திவிட வேண்டும் அல்லது தன்னுடைய வாழ்க்கையை சுத்தம் செய்ய வேண்டும் என்ற ஒரு தீர்மானம் செய்யும் நிலைக்கு வந்தான். ஞானமுள்ளவனாக பைபிளைத் தொடர்ந்து படிக்க அவன் தெரிந்துகொண்டான்.
ஹாறி பைபிள் அறிவில் வளர்ந்து வந்தபோது, அவனுக்கு பல்கலைக்கழகம் படிப்பைத் தொடர வேண்டுமென்ற இலக்கும் கற்பிக்கும் தொழிலும் இனிமேலும் கவர்ச்சியாக இருக்கவில்லை. அவன் கல்லூரியை விட்டு விலகினான், ஒரு பகுதி நேர வேலையில் சேர்ந்தான், வெகு சீக்கிரத்தில் ஒரு பயனியராக—முழு-நேர பிரசங்கியாக—தன்னைத் தகுதியாக்கிக் கொண்டான். இப்படியாக ஹாரி ஒரு புதிய வாழ்க்கைப் பாணியில் இறங்கினான், சவால்களும் நல்நடத்தைக்கு அநுகூலமான மற்றும் அக்கறையூட்டும் அனுபவங்களும் நிறைந்த ஒன்றாய் அது இருந்தது.
விசேஷ பயனியர்களாக சேவை செய்து வந்த ஹாரியும் அவனுடைய மனைவியும், இப்போது மிஷனரிகளாக அழகிய மேற்கத்திய பசபிக் கடலிலுள்ள பெலெள என்றழைக்கப்பட்ட “பாறைத் தீவுகளுக்கு” அனுப்பப்பட்டார்கள். இப்போதுங்கூட அவர்கள் அங்கே சேவை புரிந்து வருகிறார்கள். இந்தத் தீவுகளில் மிஷனரி வாழ்க்கை எப்படிப்பட்டதாயிருந்தது?
படகில் சென்று சாட்சி கொடுப்பது
மைக்ரோநீஸியா தீவுகளில் சாட்சி கொடுக்கும் வேலையின் பெரும்பகுதி படகில் செல்வதன் மூலமும் கால்நடையாகவும் செய்யப்படுகிறது. ஹாறியும் அவனுடைய மனைவி ரெனியும் வெளியேயுள்ள தீவுகளில் முதல் முறையாக படகின் மூலம் சாட்சி கொடுத்ததை நினைவுகூருகின்றனர். “எங்கள் தலைகளுக்கு மேல் பசுமைத் தோட்டம் இருந்தது போன்று தோன்றச்செய்யும் அளவுக்கு அடர்த்தியான காடுகளினூடே வளைந்து வளைந்து செல்லும் ஒரு நதியின் வழியாய்ப் படகில் சென்றெட்ட வேண்டிய தூரத்திலுள்ள ஒரு வீட்டில் நாங்கள் தங்கியிருந்தோம். நாங்கள் ஆற்றில் பிரயாணம் செய்து, கரையோரங்களில் வாழ்ந்த மக்களிடம் பிரசங்கிப்பதற்கு நிறுத்தினோம். ஒரு நாள் மாலைப் பொழுதில் இருள் சூழ்வதற்கு முன்பு, நாங்கள் வெளி ஊழியத்திலிருந்து திரும்பி ஆற்றின் கரையேறி, இரவு வீடு திரும்புவதற்காக விரைந்து சென்றுகொண்டிருந்தோம். திடீரென்று ரெனி கூச்சல் போட்டாள். உடனே நான் திரும்பினேன், தண்ணீர் தெளிக்கும் சப்தம் கேட்டேன், அதே சமயத்தில் ஊர்ந்து செல்லும் ஒரு பிராணியின் நீண்ட வால் நீருக்குள் மூழ்கி மறைவதைக் கண்டேன். அது உப்புத் தண்ணீரில் வாழும் முதலை—உலகத்திலேயே மிகப் பெரிய உயிரின வகை. நாங்கள் சுகமாகவும் பத்திரமாகவும் வீடு வந்து சேர்ந்ததற்கு நன்றியுள்ளவர்களாக இருந்தோம். ஆற்றில் குளிப்பதற்கான நேரமாக இருந்த போதிலும் மிகப் பிரமாண்டமான அந்த முதலையைப் பார்த்த பிறகு, ஒரு வாளியில் கயிற்றைக் கட்டி படகில் அந்தத் தண்ணீரை இறைத்துக் கொள்வதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தோம்.”
அநேக கிராமங்களையும் வீடுகளையும் வாகனத்தின் மூலம் அல்லது படகின் மூலம் சென்றெட்டகூடாமல் இருந்ததனால், காட்டு பாதையின் இருபக்கங்களிலும் வரிசையாக நடப்பட்ட தென்னை மர தோப்பினூடே கால்நடையாக பிரயாணப்பட்டு, சிநேகபான்மையான தாழ்மையுள்ள ஜனங்களைச் சத்திப்பதற்கு மிஷனரிகள் பல மணி நேரங்கள் செலவழித்தனர். ஹாரி பின்வருமாறு குறிப்பிடுகிறான்: “சத்தியத்திற்கு செவி கொடுக்கும் ஆட்களை நாங்கள் எப்போதுமே காண்கிறோம். தனியாக இருக்கும் இந்த ஜனங்கள் நன்கு உபசரிப்பவர்கள். தென்னை மரத்தில் ஏறி, இளநீர் தேங்காயை பறித்து, அதன் மேல் பாகத்தை வெட்டுக்கத்தியால் சீவி, ‘ஓரிஜினல் பெட்டியிலிருந்தே’ உங்களுக்கு ஒரு பானத்தை அளிப்பார்கள். அது அதிக புத்துயிரளிப்பதாகவும் சுவையானதாகவும், சத்துள்ளதாகவும் இருக்கிறது”.
பெலெளவிலிருக்கும் மிஷனரிகளின் முயற்சிகள் எவ்வாறு பலனளிக்கப்பட்டிருக்கிறது? 42 மெய்க் கிறிஸ்தவர்களைக் கொண்ட ஒரு சபை இப்போது அங்கு இருக்கிறது. சராசரியாக, கடந்த வருடத்தில் 10 பேர் முழு-நேர ஊழியத்தில் பங்கு கொண்டார்கள், 1985-ம் வருட கிறிஸ்துவின் ஞாபகார்த்த ஆசரிப்புக்கு 193 பேர் ஆஜராயிருந்தார்கள்.
முழு-நேர ஊழியத்தில் 17 வருடங்களாக இருந்த பிறகு, யெகோவாவின் சேவையில் தன்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக உபயோகித்த தனது தீர்மானத்தைக் குறித்து ஹாறி எவ்வாறு உணருகிறான்? “17 வருடங்களுக்கு முன்பு நான் கடவுளுடைய சத்தியத்தை அறிந்திராவிட்டால், என்னுடைய நேரத்தையும் வாழ்க்கையையும் உலகப்பிரகாரமான நாட்டங்களில்தானே வீணாக செலவழித்திருப்பேன்,” என்று அவன் சொல்லுகிறான். “ஒரு பயனியராகவும் மிஷனரியாகவும் சேவை செய்வதில் எனக்கு கிடைத்த மன சமாதானத்தையும் பாதுகாப்பையும் வேறு எதிலும் நான் கண்டடைந்திருக்க முடியாது. தனிமையில் இருக்கையிலும், பின்பு கடந்த எட்டு ஆண்டுகளாக ரெனியோடு மிஷனரி ஊழியத்திலும் நான் அதை அனுபவித்திருக்கிறேன்.”
முழு-நேர ஊழியத்தைச் சிபாரிசு செய்தல்
மில்டன் என்ற சிறுவன் ஹவாயில் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றுவந்தான். மற்றவர்கள் அவனை பொருளாதார பாதுகாப்புடைய வாய்ப்புவளம் மிகுந்த ஒரு வாழ்க்கைப் பாணியை எடுத்துக்கொள்ளும்படி உற்சாகப்படுத்தினர். ஆனால் ஏற்கெனவே பயனியர் ஊழியத்தில் இருக்கும் அவனுடைய சகோதரியின் உதாரணமும் மற்றும் வேறு இரண்டு சகோதர்களின் முன்மாதிரியும், அவனை முழு-நேர ஊழியத்தில் பிரவேசிக்கும்படி உற்சாகப்படுத்தியது. மேலுமாக, முழு-நேர ஊழியத்தின் ஆசீர்வாதங்களைப் பற்றியும், நாம் யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து, நம்முடைய வாழ்க்கையில் அவரை முதலாவதாக வைக்கும்போது அவர் நம்முடைய பொருளாதார தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வார் என்பதைப் பற்றியும் ஒரு பேச்சை அவன் கேட்டான். மில்டன் பின்வருமாறு சொல்லுகிறான்: “இதுதான நான் முழு-நேர ஊழியத்தை என் வாழ்க்கைத் தொழிலாக தேர்ந்தெடுக்க என்னைத் தூண்டியது. எனவே, உயர்நிலைப்பள்ளி படிப்பை முடிப்பதற்கு முன்பே நான் முழுக்காட்டுதல் பெற்று முழு-நேர ஊழியத்தைத் துவங்கினேன்.”
மில்டன் பயனியர் சேவை செய்ய துவங்கினபோது, சபையில் பத்து பயனியர்களுக்குக் குறைவாகவே இருந்தனர். அதைக் குறித்து அவன் என்ன செய்தான்? “என்னோடு வெளி ஊழியத்தில் வரும்படி இளம் சகோதரர்களை அழைத்தேன், அதன் விளைவாக பின்னால் அநேகர் என்னோடு முழு-நேர ஊழியத்தில் சேர்ந்து கொண்டார்கள்.”
“என்னுடைய மைத்துனர் ஒரு மூப்பராகவும் பயனியராகவும் இருந்தார். நாங்கள் இருவரும் ஒரே சபையில் இருந்தோம், மற்றவர்களை பயனியர் செய்ய உற்சாகப்படுத்துவதில் இருவரும் ஒன்றாக உழைத்தோம். நான் வாலிபர்களை உற்சாகப்படுத்தவும், அவர் வீட்டு மனைவிகளை உற்சாகப்படுத்தவும் தீர்மானித்தோம். பல மாதங்களுக்குப் பிறகு, 25 முழு-நேர ஊழியர்கள் சபையில் இருந்தனர். வட்டார கண்காணி வந்தபோது, அதில் பத்து பேர் விசேஷ பயனியர் சேவைக்காக விண்ணப்பிக்கும்படி சொல்லி, பக்கத்திலிருக்கும் சபைக்குப் போகும்படி சொன்னார். வெளியே அனுப்பப்பட்டிருக்கும் பத்து பேருக்கு பதிலாக இன்னும் சிலர் பயனியர் இலக்கைக் கொண்டிருக்கும்படி கலந்தோலோசிக்கப்பட்டது. அடுத்த வட்டார கண்காணியின் விஜயத்தின்போது, மேலும் 15 பேர் முழு-நேர ஊழியத்தை எடுத்துக்கொண்டிருந்தனர். இப்போது 30 பயனியர்கள் இருந்தார்கள். மறுபடியும் வட்டார கண்காணி அவர்களில் 10 பேரை வேறு சபைகளுக்குப் போகும்படி கூறினார். மறுபடியுமாக வேறு சகோதரர்கள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்ய நாங்கள் உழைத்தோம். அடுத்த வட்டார கண்காணியின் விஜயத்திற்குள்ளாக, மேலும் 20 பேர் பயனியர் ஊழியம் செய்ய விண்ணப்பம் செய்தார்கள்!”
இளைஞர்கள் மீது இந்தப் பயனியர் ஆவி தொத்து வியாதியைப் போன்று பரவியது. அவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வந்தபோது, எல்லோரும் முழு-நேர ஊழியத்தை தங்கள் இலக்காக கொண்டிருந்தனர். 13 வயதில் ஒரு சகோதரி பயனியர் செய்ய தீர்மானித்திருந்தாள். அவள் பின்வருமாறு சொன்னாள்: “இயல்பாகவே செய்ய வேண்டிய ஒரு காரியமாக இது இருந்தது.” அவளும் சபையிலுள்ள மற்ற இளைஞர்களும் வேறு எந்தக் காரியத்திற்கும் கவனம் செலுத்தவில்லை. பள்ளி முடிந்த பிறகு தொகுதியாக ஊழியம் செய்வது ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் மூன்று பள்ளிகளிலிருந்து வந்த 60 மாணவர்கள் பயனியர்களோடு சேர்ந்து இந்த ஊழியத்தை ஆதரித்து வந்தார்கள். கோடை மாதங்களில், தொகுதியாகச் செய்யப்படும் ஊழியத்தில் 130 பேர் கூடி வருவதைப் பார்ப்பது அதிக உற்சாகமாயிருந்தது!
பயனியர் ஊழியம் அதிகமான சிலாக்கியங்களுக்கு வழிநடத்தியது
“1974-ல் நான் மிஷனரி ஊழியத்தை ஏற்கும்படி, என் சொந்த ஊரிலிருந்து 4,000 மைல்கள் [6.400 கி.மீ.] தூரத்திலிருக்கும் மைக்ரோநீஸியாவிலுள்ள பெலெள தீவுகளுக்கு வரும்படி அழைக்கப்பட்டேன்.” தூரமான இடங்களுக்குச் செல்ல உஷ்ணத்தில் புல் மற்றும் வயல் வெளிகளில் நடந்து செல்வதையும் படகில் பயணம் செய்வதையும் பழக்கப்படுத்திக்கொள்வது தானே ஒரு சவாலாக இருந்தது.
புழுதி படிந்த தண்டவாளங்களில், ஒரு உஷ்ணமான நாளில் பல மணி நேரங்கள் நடந்த பிறகு, நடந்த ஒரு சம்பவத்தை மில்டன் இவ்வாறு நினைவுகூருகிறான்: “ஒரு அக்கறையுள்ள குடும்பத்தினரின் வீட்டை நாங்கள் அடைந்தபோது, மிகவும் களைப்படைந்தவர்களாய் இருந்தோம். தாய் தன்னுடைய மகனை ஆற்றுக்கு அனுப்பினாள். பெரிய குளிர்ந்த ஒரு தர்பூசனியோடு அவன் வந்தான். நாங்கள் அதில் பாதிக்கு மேல் சாப்பிட்டோம், அது அதிக புத்துயிரளிப்பதாயிருந்தது!”
தன்னுடைய ஒரு வருட மிஷனரி ஊழியத்திற்குப் பிறகு பெலெளவில் மூன்று இலக்குகள் நிறைவேற்றப்படுவதைக் காண ஆசைப்பட்டான், அதாவது உள்ளூர் சகோதரர்கள் சபைக்குரிய உத்தரவாதங்களை ஏற்றுக்கொள்வது, இளைஞர்கள் முழு-நேர ஊழியத்தை எடுத்துக்கொள்வது, சபை தன்னுடைய சொந்த ராஜ்ய மன்றத்தைக் கட்டுவது போன்றவை. இப்போது அவன் குறிப்பிடுவதாவது: “இங்கே பத்து வருடங்களுக்குப் பிறகு, இந்த மூன்று இலக்குகளையும் அடைய வேண்டுமென்ற எங்கள் ஜெபம் நிறைவேறியிருக்கிறது.”
14 வருடங்களுக்கு முன்பு அவன் முழு-நேர ஊழியத்தைத் தன்னுடைய வாழ்க்கைப் பணியாக தெரிந்துக்கொண்டதுதான் சரியானது என்று அவன் உணருகிறானா? “முழு-நேர ஊழியத்தில் நான் இருந்த எல்லா வருடங்களிலும் நான் கற்றுக்கொண்டது இதுவே: நமக்கு மனமிருந்தால், யெகோவா சரியான நேரத்தில் நம்மை உபயோகிப்பார்,” என்று அவன் பதிலுரைக்கிறான். “நாம் விட்டுவிடாமல், அவருடைய சேவையில் நம்மை மனமுவந்து அளிப்பவர்களாக இருக்க வேண்டும். ஒரு முழு.நேர ஊழியராக யெகோவாவைச் சேவிக்கும் ஒரு வாழ்க்கைப் பணியை மேற்கொண்டிருப்பதில் நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள்.”
உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துவீர்கள்?
இளைஞர்களே, உங்களுடைய எதிர்காலத்தை நீங்கள் எவ்வாறு உபயோகிப்பீர்கள்? உங்களுக்காகவா அல்லது முற்றிலும் யெகோவாவுக்காகவா? (ரோமர் 14:8) உங்களுடைய இளமையில்தானே முழு.நர ஊழியத்தை செய்யும் இலக்கை ஏன் ஜெபத்தோடு சிந்திக்கக்கூடாது? உங்களுடைய எஞ்சிய வாழ்க்கையைக் “கடவுளுடைய சித்தத்திற்காக” வாழ்வதன் மூலம் இயேசுவை பின்பற்றுங்கள். (1 பேதுரு 4:2) தீமையான உலகப் பிரகாரமான குறிக்கோள்களை, வேலைகள் மற்றும் கூட்டுறவுகளிலிருந்து ஒரு பாதுகாப்பாக நிரூபிக்கும் உங்களுடைய சூழ்நிலைமைகளைக் கலந்தாராய்ந்து, முழுநேர ஊழியத்தில் பிரவேசிப்பதற்கான ஒரு குறிப்பிட்ட தேதியை உங்கள் இலக்காக வையுங்கள். அதற்காக பிரயாசப்படுங்கள். அதை அடைவதற்கு யெகோவாவிடம் ஜெபியுங்கள்.—எபேசியர் 6:18.
பயனியர் செய்வதை உங்கள் வாழ்க்கைப் பணியாக தேர்ந்தெடுப்பதுதானே, நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அநேக நல்ல சிலாக்கியங்களுக்கு உங்களை வழிநடத்தும். உங்களுடைய வாழ்க்கை சந்தோஷம், பாதுகாப்பு மற்றும் அன்பால் நிறைந்திருக்கும். அது கிளர்ச்சியூட்டுவதாயும், ஆர்வமிகுந்ததாயும், திருப்தியளிப்பதாயும் இருக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவைப் பிரியப்படுத்தும் ஒரு வாழ்க்கையாக இருக்கும்.—நீதிமொழிகள் 27:11. (w86 4/15)