உண்மையில் மதிப்புள்ளது எது?
“அவர்களில் அநேகர் அர்த்தமில்லாத ஒரு வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்களால் ஒரு வேலையில் நிலைத்திருக்க முடிவதில்லை. அவர்களுக்கு நிலையான உறவுகள் இருப்பதில்லை. தனிமையாக ஒரு வளையத்துக்குள் குறிக்கோளில்லாமல் அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு போய் கொண்டிருக்கிறார்கள்—எவருக்கும் அக்கறையுமில்லை. காரணம்: அவர்கள் அதிக செல்வந்தர்களாக இருக்கிறார்கள்”—தி நியு யார்க் டைம்ஸ், மே 15, 1984.
உணவுக்கும் உடைக்கும் உறைவிடத்துக்கும் பிரயாணம் செய்வதற்கும் மருத்துவ உதவிக்கும் வாழ்க்கைக்கும் இன்றியமையாதவையாக இருக்கும் மற்றவைகளுக்கும் பணம் அவசியமாக இருப்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். உண்மையில், நவீன சமுதாயத்தில் பணமின்றி வாழ்வது கடினமாக இருக்கும் என்பதை நீங்கள் ஓப்புக்கொள்வீர்கள். ஏனென்றால் பைபிள் சொல்கிற விதமாகவே, “பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.”—பிரசங்கி 10:19.
என்றபோதிலும், மேலே மேற்கோள் காண்பிக்கப்பட்ட செய்தித்தாள் கட்டுரை, பணக்காரர்களின் உணர்ச்சி சம்பந்தமான பிரச்னைகளைப் பற்றி பேசியது. பணத்தையும் பொருளுடைமைகளையும் பெற்றுக் கொள்வதையே மையமாகக் கொண்டு அதைச் சுற்றியே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் ஆபத்து இருக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது. என்றபோதிலும் அநேகர் இவ்விதமாக வாழ்கிறார்கள். சில சமயங்களில் பேராசை உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடுகிறது. 30 மற்றும் 40 வயதுகளிலுள்ள ஆண்கள், கடினமாக இதற்காக வேலை செய்து மாரடைப்பினால் உயிரிழப்பதை நாம் கேள்விப்படுகிறோம். இவர்களில் சிலர் பணத்தை உட்படுத்தும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள தங்களுடைய உடல் ஆரோக்கியத்தை, தங்களுடைய உயிரையும்கூட ஆபத்திற்குள்ளாக்கிவிடுகிறார்கள்.