இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
இதுவரை கொடுத்திராத மிகப் பிரபலமான அந்தப் பிரசங்கம்
பைபிள் வரலாற்றில் அது எளிதில் மறக்கமுடியாத ஒரு காட்சியாகும்: இயேசு மலையோரத்தில் அமர்ந்து கொண்டு தம்முடைய பிரபலமான பிரசங்கத்தைக் கொடுக்கிறார். அது கலிலேயா கடலோரத்தின் அருகே ஒருவேளை கப்பர்நகூமுக்கு அருகாமையில் இருக்கலாம். இயேசு ஒரு இராமுழுவதையும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுவதில் செலவிட்டப் பின்பு, அடுத்த நாள் காலை அப்போஸ்தலர்களாயிருக்கும்படி தம்முடைய 12 சீஷர்களைத் தெரிந்துகொண்டிருந்தார். பின்பு, அவர்கள் அனைவரோடுங் கூட அவர் மலையின் மீது இந்தச் சமனான இடத்துக்கு வந்திருந்தார்.
இதற்குள் மிகவும் களைப்படைந்தவராய் இயேசு சற்றே ஓய்வெடுக்க விரும்புவார் என்பதாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் திரளான ஜனங்கள் வந்துவிட்டிருக்கிறார்கள். சிலர் 60-லிருந்து 70 மைல்களுக்கு (100-லிருந்து 110 கிலோமீட்டர்) அப்பால் யூதேயாவிலும் எருசலேமிலிருந்தும் பிரயாணப்பட்டு வந்திருக்கிறார்கள். மற்றவர்கள் வடக்கே தீரு, சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரப்பகுதியிலிருந்தும் வந்திருக்கிறார்கள். அவர்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும் தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படியும் வந்திருக்கிறார்கள். அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களுங்கூட அங்கே இருக்கிறார்கள்.
இயேசு கீழே இறங்கி வருகையில், வியாதியஸ்தர்கள் அவரைத் தொடுவதற்கு அவரை நெருங்கி வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் அவர் குணமாக்குகிறார். அதற்குப் பின்னர் இயேசு மலையின் மேல் சற்றே உயரமான இடத்துக்கு ஏறிப் போகிறார். அங்கே அவர் உட்காருகிறார், தமக்கு முன்னால் சமனான இடத்தில் பரவி உட்கார்ந்திருந்த திரளான ஜனக்கூட்டத்துக்குப் போதிக்க ஆரம்பிக்கிறார். அதைக் கற்பனை செய்து பாருங்கள்! அந்த முழு ஜனக்கூட்டத்திலும் இப்பொழுது கவலைக்குரிய நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் கூட இல்லை!
வியப்பூட்டும் இந்த அற்புதங்களைச் செய்ய வல்லவராயிருக்கிற போதகர் பேசுவதைக் கேட்க ஜனங்கள் ஆவலாயிருக்கிறார்கள். என்றபோதிலும், இயேசு தம்மைச் சுற்றி அமர்ந்திருந்த தம்முடைய சீஷர்களின் நன்மைக்காகவே பிரசங்கிக்கிறார். ஆனால் நாமுங்கூட நன்மையடையும் பொருட்டு மத்தேயுவும் லூக்காவும் அதைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
பிரசங்கத்தைப் பற்றிய மத்தேயுவின் பதிவு லூக்காவினுடையதைவிட நான்கு மடங்கு நீளமாயுள்ளது. மேலுமாக மத்தேயுவின் பதிவிலுள்ள சில பகுதிகளை இயேசு அவருடைய ஊழித்தின் போது மற்றொரு சமயத்தில் சொன்னதாக லூக்கா பதிவு செய்கிறான். மத்தேயு 6:9–13-ஐ லூக்கா 11:1–4 உடனும் மத்தேயு 6:25–34-ஐ லூக்கா 12:22–31 உடனும் ஒப்பிடுகையில் இதைக் காண முடிகிறது. என்றபோதிலும் இது ஆச்சரியப்படுவதற்குரிய ஒன்றல்ல. இயேசு சில காரியங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் போதித்திருக்கிறார். இந்தப் போதகங்களில் சிலவற்றை லூக்கா வேறு ஒரு சூழ்நிலையில் பதிவு செய்வதைத் தெரிந்துக் கொண்டிருக்கிறான்.
அதில் அடங்கியுள்ள ஆவிக்குரிய காரியங்களின் ஆழம் மட்டுமல்லாமல், இந்தச் சத்தியங்கள் எளிமையாகவும் தெளிவாகவும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதே இயேசுவின் பிரசங்கத்தை அத்தனை மதிப்புள்ளதாகச் செய்கிறது. அவர் சாதாரணமான அனுபவங்களையும் ஜனங்களுக்கு பழக்கமாயிருந்த காரியங்களையுமே பயன்படுத்தி கடவுளுடைய வழியில் மேம்பட்ட வாழ்க்கையை நாடிக் கொண்டிருந்த அனைவரும் அவருடைய கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ளும்படிச் செய்தார். அவர் பேசிய காரியங்கள் சிலவற்றைப் பின்வரும் பிரதிகளில் ஆராய்வோம். லூக்கா 6:12–20; மத்தேயு 5:1, 2.
◆ எளிதில் மறக்கமுடியாத இயேசுவின் பிரசங்கம் எங்கே கொடுக்கப்பட்டது? யார் கூடியிருந்தார்கள்? அதை அவர் கொடுப்பதற்குச் சற்று முன்னால் என்ன சம்பவித்திருந்தது?
◆ இயேசுவின் பிரசங்கத்தின் போதகங்களில் சிலவற்றை லூக்கா வேறு ஒரு சூழ்நிலையில் பதிவு செய்வது ஏன் ஆச்சரியப்படுவதற்கில்லை?
◆ இயேசுவின் பிரசங்கத்தை அத்தனை மதிப்புள்ளதாகச் செய்வது என்ன? (w86 9⁄15)