ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
ராஜ்ய அதிகரிப்புக்குப் பொருத்தமாக விரிவான வசதிகள்
அண்மையில் விரிவாக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளின் கிளைக்காரியாலய வசதிகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த நாள் ஜமெய்க்காவின் கரீபியன் தீவு சாட்சிகளுக்கு அதிக மகிழ்ச்சியான ஒரு நாளாக இருந்தது. இந்த விஸ்தரிப்பு அவசியமாயிருந்தது, ஏனென்றால் இந்த அழகிய வெப்பமண்டல தீவில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் சகோதரர்களின் உண்மையான முயற்சிகள் மீது யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்தது.
ஜமெய்க்காவில் 1946-ல் ஒரு மிஷினரி இல்லம் நிறுவப்பட்டது. இந்த மஷினரிகள் முன்சென்று வேலையில் மும்முரமாக ஈடுபட்டதால் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்தது. இதன் பலனாக பத்து வருடங்களுக்குள்ளாக மாதந்தோறும் அறிக்கை செய்துவந்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 732-லிருந்து 3,216-ஆக உயர்ந்தது. இந்த அதிகரிப்பைக் கவனித்துக்கொள்வதற்காக புதிய விரிவான வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
1954-ல் ஓர் அருமையான நிலம் வாங்கப்பட்டது. கிங்ஸ்டனில் புறநகர்ப் பகுதியில் அமைதியான ஓர் இடத்தில் வாங்கப்பட்ட இந்த மனையில் பலமான இரண்டு மாடி கட்டடம் ஒன்று எழும்ப ஆரம்பித்தது. இது 1958-ல் கட்டி முடிக்கப்பட்டது. அந்த ஆண்டில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 4,367-ஆக உயர்ந்தது.
‘நடுவதும்’ ‘நீர்ப்பாய்ச்சுவதும்’ தொடர்ந்தது. யெகோவா “அதை விளையச் செய்து” கொண்டிருந்தார். இதனால் 1983-ல் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 7,000 கடந்துவிட்டது. இது கூடுதலான விரிவுபடுத்துதலுக்கான தேவையை ஏற்படுத்தியது. (1 கொரிந்தியர் 3:6) ஆளும் குழுவின் அங்கீகாரத்துடன் கிளைக்காரியாலய கமிட்டி தற்போதைய வசதிகளை விரிவுபடுத்திட தீர்மானித்தது. இதில் உதவி செய்வதற்குத் தீவின் எல்லா இடங்களிலிருந்தும் 250-க்கும் அதிகமான சகோதரர்கள் வந்தனர். பயிற்சி பெற்ற வேலையாட்களும் பயிற்சி பெறாத வேலையாட்களும் கல்கட்டுகிறவர்களாக, தச்சர்களாக, மின் பணியாளராக, குழாய் போடுகிறவர்களாக தங்களுடைய சேவைகளை மனமுவந்து கொடுக்க முன்வந்தார்கள். அதில் 10 முதல் 86 வயதுடையவர்கள் இருந்தார்கள். சிலர் இந்தக் கட்டட வேலைக்குப் பணமாக நன்கொடைகள் கொடுத்தார்கள், மற்றும் சிலர் வேலை செய்கிறவர்களுக்கு உணவு கொண்டுவந்தார்கள், இன்னும் சிலர் இந்த வேலைக்காக தூரத்திலிருந்து வந்த மனமுவந்த வேலையாட்களுக்குத் தங்கும் இடவசதி அளிப்பதற்குத் தங்களுடைய வீடுகளைத் திறந்து வைத்தார்கள். ஒரே ஆண்டில், ஐந்து அறைகளும் மனமகிழ் கூடமும் கொண்ட மூன்றாவது அடுக்கும், இரண்டாவது அடுக்கில் ஓர் அறையும் 400 சதுர அடி (37 ச.மீ.) பரப்புள்ள புத்தக சேமிப்புக் கூடமும் அடங்கிய இந்தக் கட்டடத் திட்டம் 11 அங்கத்தினர்களுடைய பெத்தேல் குடும்பத்தின் உபயோகத்திற்குத் தயாராகிவிட்டது.
மில்டன் ஹென்ஷெல், யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழுவின் ஓர் அங்கத்தினர், பிப்ரவரி 22, 1986 அன்று பிரதிஷ்டை பேச்சைச் கொடுத்தார். “வெற்றிப் பவனி” என்ற பொருளில் அவர் பேசினார். (2 கொரிந்தியர் 2:14, NW) பிரதிஷ்டை நிகழ்ச்சியை மொத்தம் 2,949 பேர் கேட்டுக்கொண்டிருந்தனர். இவர்களில் 380 பேர் ராஜ்ய மன்றத்திலும் மற்ற இடங்களிலும் அமர்ந்திருந்தனர். மற்றவர்கள் நகரத்திலுள்ள மற்ற ராஜ்ய மன்றங்களிலும் ஒரு பள்ளி மன்றத்திலும் கூடியிருந்தனர். இவர்கள் தொலைப்பேசி மற்றும் வானொலி இணைப்பின் மூலம் நிகழ்ச்சியை அனுபவித்தனர்.
கிளைக்காரியாலய ராஜ்ய மன்றத்துக்கு அழைக்கப்பட்டவர்களில் பலர் சத்தியத்தில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருந்த சகோதர சகோதரிகள். இந்தப் புதிய கட்டட இணைப்புக்கான போற்றுதலின் வார்த்தைகள் பல கேட்கப்பட்டன. ஜமேய்க்காவில் ராஜ்ய அதிகரிப்புக்குக் கவனிப்பு செலுத்துவதற்காக இந்தப் புதிய கிளைக் காரியாலய வசதிகள் பயன்படுத்தப்படுகையில், “வேறே ஆடுகளின்” “திரள் கூட்டத்”தாரில் இன்னும் அநேகர் இந்த வெற்றிப் பவனியில் சேர்ந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம். (w87 3/1)