சத்தியத்தை நீங்கள் உறுதியாக பற்றிக் கொண்டிருப்பீர்களா?
நீங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்க ஆரம்பித்திருந்தால், உங்களுக்கு திருப்தியுண்டாகும் வகையில் நீங்கள் பதிலளிக்க வேண்டிய முக்கிய கேள்வியானது, இது சத்தியம்தானா? அது சத்தியம் என்பதாக நீங்கள் காண்பீர்களேயானால் அதை உறுதியாக நீங்கள் பற்றிக்கொண்டிருப்பீர்களா? இதேப் போன்ற கேள்வியை இயேசு கிறிஸ்துவின் நாட்களிலும் அவருடைய அப்போஸ்தலர்களின் நாட்களிலும் மக்கள் எதிர்பட்டனர்.
அப்போஸ்தலர்கள் இயேசுவைப் பற்றி பிரசங்கித்தபோது, மக்கள் எவ்விதமாக பிரதிபலித்தார்கள்? ஆம், கிறிஸ்துவின் ராஜ்யம், அவருடைய அற்புதங்கள், அவருடைய மீட்பின் பலி, அவருடைய உயிர்த்தெழுதல் மற்றும் நித்திய ஜீவனைப் பற்றிய செய்தி கேட்பதற்கு நன்றாக இருந்தது. அநேகர் அவர்கள் கேள்விப்பட்டதை சத்தியம் என்பதாக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் பெரும்பாலானோர் அவ்விதமாக ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையில் அந்த சமயத்திலிருந்த கிறிஸ்தவ சபை எல்லா இடங்களிலும் “விரோதமாய்ப்” பேசப்பட்டது. (அப்போஸ்தலர் 28:22) ஆகவே இயேசுவின் சீஷர்கள் பிரசங்கித்த சத்தியங்களை ஏற்றுக்கொள்வது பிரபலமான கருத்துக்களுக்கு எதிராகச் சென்று எதிர்ப்புகளை சந்திப்பதை அர்த்தப்படுத்தியது. ஆகவே அக்கறையுள்ள ஆட்கள், கிறிஸ்தவ போதகங்கள், சத்தியமாக இருந்ததை தங்களுக்கு திருப்தியுண்டாகும் வகையில் உறுதி செய்துகொள்ள வேண்டியவர்களாக இருந்தனர். அப்போது தானே, அவர்களால் ஒரு உறுதியான நிலைநிற்கையை எடுக்க முடியும்.
பவுலும் பர்னபாவும் சிறிய ஆசியாவிலுள்ள அந்தியோகியாவுக்குச் சென்றபோது, அநேக ஆட்கள் அவர்களுடைய செய்திக்கு ஆர்வத்தோடு அக்கறை காண்பித்தார்கள். பைபிள் பதிவு சொல்வதாவது: “அவர்கள் யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வு நாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக் கொண்டார்கள். அடுத்த ஓய்வு நாளிலே கொஞ்சங் குறையப் பட்டணத்தாரனைவரும் தேவ வசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.” (அப்போஸ்தலர் 13:42, 44) ஆனால் அப்போஸ்தலர்களுக்கு எதிராக உணர்ச்சி வசப்பட்டு எதிராளிகள் பேசுவதை கேட்டபோது, அநேக ஆட்களில், ஆரம்பத்தில் காணப்பட்ட இந்த அக்கறை மறைந்துபோனது.
அப்போஸ்தலர் 13-ம் அதிகாரத்தில் வசனம் 45 சொல்வதாவது: “யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள்.” பின்னர் வசனம் 50 தொடர்ந்து சொல்வதாவது: “யூதர்கள் பக்தியும் கனமுமுள்ள ஸ்திரீகளையும் பட்டணத்து முதலாளிகளையும் எடுத்துவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப் படுத்தும்படி செய்து, தங்கள் எல்லைகளுக்குப் புறம்பாக அவர்களைத் துரத்திவிட்டார்கள்.” அக்கறை காண்பித்த ஆட்கள், துன்புறுத்தலின் மத்தியிலும் இயேசுவை பின்பற்றியவர்களின் வார்த்தைகளுக்கு தொடர்ந்து செவிகொடுக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டியவர்களாக இருந்தனர். சத்தியம் என்பதாக அவர்கள் கேள்விப்பட்டிருந்ததை ஏற்றுக்கொள்ளவோ அல்லது அதற்கு தங்கள் காதுகளை மூடிக்கொள்ளவோ வேண்டியவர்களாக இருந்தார்கள்.
இன்று எதிர்ப்பு
பொ.ச. முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களுக்கு இருந்ததுபோலவே, யெகோவாவின் சாட்சிகள் போதித்து வரும் வேத பூர்வமான சத்தியங்களுக்கு அக்கறை காண்பிக்கும் ஆட்களின் காதுகளை மூடிவிட முயற்சிக்கும் எதிராளிகள் இன்று அவர்களுக்கு இருக்கிறார்கள். அக்கறை காண்பிக்கும் ஆட்கள் சாட்சிகளோடு பைபிள் படிப்பதை தடைசெய்ய நண்பர்களும் உறவினர்களும் மதத் தலைவர்களும் அடிக்கடி மிகவும் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். வேத ஆதாரம் எதுவுமின்றி, போதிக்கப்படுவதை எதிராளிகள் மறுத்துப்பேசி, பொய் குற்றச் சாட்டுகளை அவர்கள் மீது சுமத்துகிறார்கள்.
அக்கறை காண்பிக்கும் ஆட்கள் என்ன செய்ய வேண்டும்? அந்தியோகியாவில் சிலர் செய்ததுபோல எதிராளிகளின் வார்த்தைகளைக் கேட்டு தங்களுடைய மனங்களையும் காதுகளையும் மூடிக்கொள்ள வேண்டுமா? அல்லது அவர்கள் படிப்பது சத்தியமா இல்லையா என்பதை பைபிளிலிருந்தே தங்களுக்கு உறுதி செய்துக்கொள்ள வேண்டுமா?
வசனத்தை ஏற்றுக்கொண்ட பெரோயா பட்டணத்தார், பவுல் சொன்னவைகள் சத்தியம்தானா என்பதைப் பார்க்க வேத வசனங்களை ஆராய்ந்ததன் காரணமாக போற்றப்பட்டனர். அவன் பேசியது சத்தியம் என்பதை அறிந்து கொண்டபோது அவர்கள் அதற்காக உறுதியான நிலைநிற்கையை எடுத்தார்கள். நாம் பின்வருமாறு சொல்லப்படுகிறோம்: “அந்தப் பட்டணத்தார் [பெரோயா] மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால் தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.—அப்போஸ்தலர் 17:10, 11.
பெரோயா பட்டணத்தார், எதிர்ப்பவர்களின் சொல் கேட்டு, நற்செய்திக்கு தங்கள் மனங்களை மூடிக்கொள்ளவில்லை, மாறாக, அவர்கள் கேள்விப்பட்ட காரியங்கள் உண்மைதானா என்பதை உறுதிசெய்துகொள்ள வேத வசனங்களை தினந்தோறும் ஆராய்ந்து பார்த்தார்கள். அவர்கள் விலையேறப் பெற்ற பொக்கிஷத்தைக் கண்டுபிடித்தார்கள். எதிராளிகள் அதனிடமிருந்து அவர்களை விலகிப் போகச் செய்வதை அவர்கள் அனுமதிக்கப்போவதில்லை. இன்று யெகோவாவின் சாட்சிகள் அறிவித்து வரும் அதே நற்செய்தியின் சம்பந்தமாகவும் இதுவே மேற்கொள்ள வேண்டிய ஞானமான போக்காக இருக்குமல்லவா?
ஏன் சிலர் எதிர்க்கிறார்கள்
சில சமயங்களில் எதிர்ப்பவர்கள் நீங்கள் நேசிக்கின்ற, நீங்கள் உயர்வாக போற்றுகின்ற நல்லெண்ணம் படைத்த உறவினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உங்களுடைய நலனில் உண்மையாக அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று நம்புவதற்கு உங்களுக்கு எல்லா காரணமுமிருக்கிறது. ஆனால் நீங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிப்பதை அவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவசியமாயிருக்கிறது. நீங்கள் கற்றுக்கொண்டு வருவது சத்தியம் அல்ல என்பதற்கு உறுதியான வேத ஆதாரம் அவர்களிடம் இருக்கிறதா? அல்லது அவர்கள் எதிர்ப்பதற்கு காரணம் மற்றவர்கள் அவர்களுக்குச் சொல்லியிருக்கும் காரியங்களா? சாட்சிகள் என்ன கற்பிக்கிறார்கள் என்பதைக் குறித்ததில் திருத்தமான அறிவில் அவர்கள் குறைவுபடுகிறார்களா? இயேசுவை எதிர்த்த அநேகர், அவர் கற்பித்தவற்றை அறியாததாலும் எதிராளிகளின் பொய் குற்றச்சாட்டுகளை நம்பியதாலுமே அவ்விதமாகச் செய்தார்கள். இயேசு கழுமரத்தில் தொங்கிக் கொண்டிருந்தபோது, “அந்த வழியாய் நடந்து போகிறவர்கள், தங்கள் தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை, நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கி வா’ என்று அவரைத் தூஷித்தார்கள். அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம் பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக் கொள்ளத் திராணியில்லை. நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக் கொண்டார்கள்.” (மாற்கு 15:29-32) இந்த மோசமான மனநிலைக்கு காரணம் என்னவாக இருந்தது?
மெய் கடவுளின் பிரதிநிதிகளாக இருப்பதாக உரிமைப் பாராட்டிக் கொண்டு, அதற்கிசைவாக வாழ்ந்துவராத மதத்தலைவர்களை பொய்ப் போதகர்களென இயேசு வெளிப்படுத்தியதன் காரணமாக அவரைப் பகைத்த மதத்தலைவர்களால், இயேசுவைப் பற்றிய தங்கள் கருத்து உருப்படுத்தப்படும்படியாக மக்கள் அனுமதித்துவிட்டனர். ஒளிவு மறைவின்றி இயேசு அவர்களிடம் பின்வருமாறு சொல்லியிருந்தார்: “நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? மாயக்காரரே, உங்களைக் குறித்து: ‘இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்’ என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான்.”—மத்தேயு 15:3, 7-9.
இயேசுவையும் அவர் கற்பித்த சத்தியங்களையும் மதத் தலைவர்கள் அவ்வளவு தீவிரமாக எதிர்த்ததன் காரணமாக அவரை கொலைசெய்ய அவர்கள் சதி செய்து அவருக்கு எதிராக மக்களைத் திருப்ப எல்லா முயற்சியையும் மேற்கொண்டார்கள். இன்று அநேக மதத் தலைவர்கள் அதே அளவு தீவிரத்தோடு யெகோவாவின் சாட்சிகளை எதிர்த்து வருகிறார்கள். பூர்வ கிறிஸ்தவர்களின் விஷயத்தில் இருந்தது போலவே சாட்சிகள் எல்லா இடங்களிலும் “விரோதமாய்ப் பேசப்”படுகிறார்கள். ஆனால் பிரபலமாக இருக்கும் இந்த எதிர்ப்பு உங்கள் சிந்தனையை உருபடுத்தி அமைக்க நீங்கள் அனுமதிப்பது ஞானமான காரியமாக இருக்குமா?
இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கித்த அதே வேத ஆதாரமுள்ள சத்தியங்களையே இன்று யெகோவாவின் சாட்சிகள் அறிவித்து வருகிறார்கள். உலகம் முழுவதிலுமுள்ள நூறாயிரக்கணக்கான ஆட்கள், நண்பர்களின், உறவினர்களின், மதத்தலைவர்களின் எதிர்ப்பு இருந்தபோதிலும் இந்த நற்செய்தியை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொள்பவர்கள் தங்களுக்கு திருப்தியுண்டாகும் வகையில் இதுவே சத்தியம் என்பதை உறுதி செய்துகொண்டு அதைப் பற்றிக் கொண்டிருக்க தீர்மானமாயிருக்கிறார்கள்.
ஆகவே இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய விரும்பப்படாத ஆட்கள் மூலமாக தங்களுக்கு கிடைத்த ஜீவனைக் கொடுக்கும் வேதாகமச் சத்தியத்திலிருந்து விலகிப் போகும்படியாகச் செய்ய மற்றவர்களை அனுமதித்த முதல் நூற்றாண்டிலிருந்த ஆட்களைப் போல் ஏன் இருக்க வேண்டும்? மாறாக நீங்கள் கற்று வருவது உண்மையில் சத்தியமாக இருப்பதை கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தி, நீங்கள் உங்களுக்கு திருப்தியுண்டாகும் வகையில் உறுதி செய்துக்கொள்ள தொடர்ந்து சாட்சிகளோடு பைபிளைப் படியுங்கள். (யோவான் 8:32) கடவுளுடைய உதவியோடு சத்தியத்தை உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள். (w87 3⁄15)