கடவுள் உங்களுக்காக என்ன செய்திருக்கிறார்?
‘ஒன்றுமே இல்லை!’ என்று சிலர் பதிலளிக்கலாம். ‘நான் கடினமாக வேலை செய்து பிழைப்பதற்கு வழியை நானே பார்த்துக்கொள்ள வேண்டும்.’ இவ்விதமாக நீங்கள் நினைப்பீர்களேயானால், ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் எவ்விதமாக வந்தீர்கள்?
நீங்கள் பிறப்பதற்குச் சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு, இரண்டு மிகச் சிறிய உயிரணுக்கள் உங்கள் தாயின் உள்ளே சந்தித்துக் கொண்டன. இரண்டும் சேர்ந்து புதிய, தனித்தன்மை வாய்ந்த ஓர் உயிர் பொருளை உண்டுபண்ணியது.
இரண்டு உயிர் பொருட்களில் பெரியது உங்கள் அம்மாவின் சினையாக அல்லது முட்டையாக இருந்தது. சிறிய உயிர் பொருள் உங்கள் தந்தையின் விந்துவாக இருந்தது. இது அத்தனைச் சிறியதாக இருப்பதால், உலகிலுள்ள எல்லா ஆட்களையும் பிறப்பித்த எல்லா விந்துகளையும் அருகருகே வைத்தால், அவை “ஓர் அங்குலத்துக்கும் சற்று அதிகமான நீளமாகவே [2.5 செ.மீ.] இருக்கும்” என்கிறது ஷீலா கிட்சிங்கர் எழுதிய குழந்தை பேற்றின் அனுபவம் என்ற புத்தகம். ஆனால் உங்கள் தந்தையின் விந்து தாயின் முட்டையை ஊடுருவிச் சென்றபோது, உங்கள் பிறப்பு மூல தொகுப்பு ஊர்ஜீதமாகிவிட்டது. நீங்கள் கருவாக தரித்துவிட்டீர்கள்!
கடுஞ் சிக்கல்வாய்ந்த இயல் வளர்ச்சி அப்போது ஆரம்பமானது. அவை அத்தனை சிக்கலானதாக இருப்பதால் நூறு வருடங்களுக்கு மேலான ஆராய்ச்சிக்குப் பின்னும்கூட விஞ்ஞானிகள் அவைகளை கண்டுபிடிப்பதற்கு அருகாமையிலும்கூட இன்னும் செல்லவில்லை” என்பதாக சையன்ஸ் டைஜஸ்டில் அன்டிரியா டார்ஃப்மேன் எழுதினார்.
விஞ்ஞானிகளுக்குப் புதிராக இருக்கும் இயல்பான வளர்ச்சிக்கு ஓர் உதாரணமாக அதே எழுத்தாளர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் திறனும்கூட அதே அளவு சிக்கலான ஒரு விஷயமாகும். உதாரணமாக வலது மற்றும் இடது கைகள் ஒரு மில்லிமீட்டர் நீளமுள்ள திசு குருத்திலிருந்து முற்றிலும் தனித்தனியாகவே வளர்ச்சியடைகின்றன. என்றபோதிலும் அதன் நீளம் ஒரே அளவாகவே இருக்கின்றது. எப்பொழுது வளர்ச்சியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது உயிரனுக்களுக்கு எப்படித் தெரியும்? . . . ஒவ்வொரு உறுப்புக்கும் உள்ளே ஒரு வளர்ச்சி கட்டுப்பாட்டு அமைப்பு ஒன்றிருப்பது போல இருக்கிறது.” இது இவ்விதமாக இருப்பதற்காக நாம் மகிழ்ச்சியாக இல்லையா?
உயிர் பொருட்களில் வளர்ச்சியை உண்டுபண்ணுவதும் அதைக் கட்டுப்படுத்துவதும் என்ன? இயற்கை என்றழைக்கப்படும் புத்தியில்லாத ஒரு சக்தியா? பரிணாமம் என்றழைக்கப்படும் குருட்டுத்தனமான ஒரு செயல்முறையா? வனப்பு மிக்க இந்தக் கிரகத்தில் காணப்படும் திகைக்க வைக்கும் சிக்கலும், பல்வகை வேறுபாட்டு நிலையும், மிகச் சிறந்த அழகு வாய்ந்த உயிர் வகைகளும் சர்வ வல்லமையுள்ள ஒரு சிருஷ்டிகரின் வேலைப்பாடாக மட்டுமே இருக்க முடியும் என்பதை தெளிவாக காண்பிக்கவில்லையா? அது அவ்விதமாக இருப்பதால், அவர் நமக்காகச் செய்திருக்கும் காரியங்களுக்காக நாம் வெகுவாக நன்றியுள்ளவர்களாக உணர வேண்டாமா?
மகத்துவமான சிருஷ்டிப்புக்கு எல்லையற்ற அத்தாட்சி
ஒவ்வொரு நாளும்—ஒவ்வொரு மணிநேரமும்கூட—மகத்துவமான சிருஷ்டிப்பிலிருந்து நாம் பயனடைந்து வருகிறோம். உதாரணமாக நாம் தூங்கும்போது என்ன நடக்கிறது? மனது மற்றும் தசைநார் சம்பந்தமான செயல்களின் வேகம் தானாகவே குறைந்துவிடுகிறது. நம்முடைய சொந்த விருப்பத்தின்படி இது இப்படியாகிறதில்லை. ஏனென்றால் அநேகமாக நம்மை அறியாமலே நாம் தூங்கிவிடுகிறோம். நல்ல தூக்கம் எத்தனை புத்துயிரளிப்பதாக இருக்கிறது! சிலரால் பல வாரங்கள் உணவின்றி இருக்க முடியும். ஆனால் மூன்று நாட்களுக்கு மேல் தூக்கமின்றி இருப்பவர்களுக்குச் சிந்திப்பதும், பார்ப்பதும் கேட்பதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
காலையில் நீங்கள் எழுந்தபிறகு, சர்க்கரை கலந்த காப்பியை ஒருவர் உங்களுக்குக் கொண்டுவந்து தரக்கூடும். ஒரு சமயம் அபூர்வமாயும் விலையுயர்ந்ததாயுமிருந்த சர்க்கரை இப்பொழுது அவ்வளவு ஏராளமாக இருப்பதால், அதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆனால் அது எவ்விதமாக உண்டாகிறது? அது தாவரங்களில் ஒளிச்சேர்க்கை என்ற ஒரு முறையினால் தயாரிக்கப்படுகிறது—இது சூரிய ஒளி, தண்ணீர் மற்றும் கார்பன் டைஆக்சைட்டின் எதிர் விளைவாக இருக்கிறது. அதே சமயம் பூமியிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் இன்றியமையாததாக இருக்கும் ஆக்ஸிஜன் விடுவிக்கப்படுகிறது. ஒளிச்சேர்க்கையானது, விஞ்ஞானிகள் இன்னும் முழுமையாக புரிந்துகொண்டிராத மிகவும் சிக்கலான ஒரு செயல் முறையாகும். “ஒளிச் சேர்க்கை தானே எவ்விதமாக நடைபெறுகிறது” என்பதாக தாவரங்கள் புத்தகம் கேட்கிறது. (உயிர் இயற்கை நூலகம்) “இது உயிர் எவ்விதமாக ஆரம்பமாகிறது என்று கேட்பதுபோல இருக்கிறது—நமக்கு அது தெரியாது.”
ஒருவேளை, உங்கள் காப்பியை நீங்கள் அருந்தும்போது, முந்தின தினம் பார்த்த டெலிவிஷன் நிகழ்ச்சியை உங்களால் நினைவுபடுத்திப் பார்க்க முடியும். உங்கள் மனக்கண்களில் அந்தச் சுவாரசியமான காட்சிகளைப் பார்க்கமுடியும். அவை எவ்விதமாக உங்கள் மூளைக்கு அனுப்பப்பட்டு, ஒது திரைப்படச் சுருளைப்போல சேகரித்து வைக்கப்பட்டு, அதை நீங்கள் மற்றவர்களுக்கு விவரிக்கும்படிக்கு மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க முடிகிறது? அது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? மனிதன் சாதிக்கும் வியப்பூட்டும் காரியங்களுக்கு அவன் எங்கிருந்து புத்திக்கூர்மையைப் பெற்றுக்கொண்டிருக்கிறான்? நிச்சயமாகவே மிருகங்களிலிருந்து இல்லை. மனித மூளை வியப்பூட்டுவதாக இல்லையா?
இந்த நாள் இப்போதுதானே ஆரம்பமாகி இருக்கிறது. என்றபோதிலும் சிருஷ்டிகருக்கு நன்றி சொல்ல ஏற்கெனவே நமக்கு எவ்வளவு காரியங்கள் இருக்கின்றன! ஆனால் இன்னும் எவ்வளவோ அதிகமிருக்கிறது. (w87 5/15)