முடிவு நெருங்குகையில் யெகோவாவுக்குச் செவிகொடுத்தல்
“எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான். என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்.”—நீதிமொழிகள் 8:34, 35.
சரித்திரம் முழுவதிலும், முக்கியமாய் இந்த 20-ம் நூற்றாண்டில், சமாதானம் இல்லையெனினும், தேசங்கள் தங்கள் இடையூறுகளை முடிவுசெய்ய நடவடிக்கைகள் எடுக்கிறார்களென சிலர் சொல்கின்றனர். சமாதானத்தைப் பற்றிப் பேசுவதற்கு உலக அதிபதிகள் உயர் அரசாங்கக் கூட்டங்கள் நடத்துவதையும் பல்வேறு ஒப்பந்தங்களுக்குக் கையொப்பமிடுவதையும் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். ஐக்கிய நாட்டுச் சங்கம் சென்ற ஆண்டை “சர்வதேச சமாதான ஆண்டு” எனவும் அறிவித்ததே! இது, தேசங்கள் சமாதானத்தை முன்னேற்றுவிக்க எடுக்கும் மிகைப்படியான முயற்சியின் தொடக்கத்தைக் காணுமெனவும், சமீப எதிர்காலத்தில் வெற்றிக் கூடியதாயிருக்கலாமெனவும் நம்பப்பட்டது.
2 எனினும், சரித்திரம் முழுவதிலும், இதைப்போன்ற முயற்சிகள் எப்போதாவது நிலையான சமாதானத்தைக் கொண்டுவந்தனவா? மனித முயற்சிகளால் கூடியதென்றால், வெகு காலத்துக்கு முன்னதாகவே ஐந்நூறு கோடி மக்கள் 160-க்கு மேற்பட்ட தேசங்களாக எண்ணற்றப் பல்வேறு அரசியல் பொருளாதார, மற்றும் மதத் தத்துவங்களாகப் பிளவுற்றதற்கு முன்னதாகவே—சமாதானம் இருந்திருக்கும். ஆனால் ஒருபோதும் சமதானம் இல்லை; இந்த உலக அதிபதிகளின் முயற்சிகளின் பலனாகவும் ஒருபோதும் சமாதானம் உண்டாகப்போவதில்லை. ஏன்? ஒரு காரணம் என்னவெனில், மனிதவர்க்கத்தின் பிரச்னைகள் இப்பொழுது அவ்வளவு கடும் சிக்கலான நிலையில் இருப்பதால் அவை வெறும் மனிதருடைய முயற்சிகளால் மாத்திரமே தீர்க்கமுடியாதவை. எரேமியா 10:23-ல் வெகு திருத்தமாய்ச் சொல்லியிருக்கிற பிரகாரம்: “தன் நடையை நடத்துவதற்கு நடக்கிறவன் வசத்தில் இல்லை.”—தி.மொ.
மனிதருடைய முயற்சிகள் ஏன் வெற்றிபெற முடியாது
3 மனிதரும் தேசங்களும் எடுக்கும் முயற்சிகள் ஏன் ஒருபோதும் உண்மையான சமாதானத்தைக் கொண்டுவர முடியாது என்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. 1 யோவான் 5:19-ல் பைபிள் இதைக் குறிப்பிடுகிறது. அதாவது: “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.” இந்தப் “பொல்லாங்கன்” “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட”வன் என வெளிப்படுத்துதல் 12:9 தெரிவிக்கிறது. 2 கொரிந்தியர் 4:4-ல் அவன் “இப்பிரபஞ்சத்தின் [இந்தக் காரிய ஒழுங்குமுறையின், NW] தேவன்” என்று அவன் அழைக்கப்படுகிறான். இவ்வாறு, இவ்வளவு மிக வன்முறையை விளைவித்துள்ள அரசியல், பொருளாதார, மத ஆட்சியின் தற்போதைய முழு ஒழுங்குமுறையும் சாத்தானுடைய ஆட்சியின் விளைபயனேயாகும், கடவுளுடைய ஆட்சியின் பயனல்ல. இதன் காரணமாகவே, கடவுளிடமிருந்து வரும் ஞானத்தைப் பற்றிப் பேசுகையில் 1 கொரிந்தியர் 2:8-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “அதை [தேவ ஞானத்தை] இப்பிரபஞ்சத்துப் [இந்தக் காரிய ஒழுங்குமுறையின், NW] பிரபுக்களில் ஒருவனும் அறிவில்லை.”—லூக்கா 4:5, 6.
4 சாத்தான் கடவுளுக்கு விரோதமாகக் கலகம் செய்தபோது, நம்முடைய முதல் பெற்றோர் கடவுளுக்குச் செவிகொடுப்பதற்குப் பதிலாகத் தனக்குச் செவிகொடுக்கும்படி அவர்களைத் தூண்டுவித்தான். இதன் விளைவாக, அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிவதை விட்டு விலகி மனிதக் குடும்பத்தின் மீது ஏறக்குறைய 6000 ஆண்டுகள் அனுபவித்துவரும் கடுந்துயரத்தைக் கொண்டுவந்தனர். தங்கள் சிருஷ்டிகளுக்குச் செவிகொடாமற்போவது தங்களுக்கு மேலும் நன்மை பயக்குமென நம்பும்படி சாத்தான் மனிதரைத் தூண்டினான் என்று பைபிளில் நமக்குத் தெளிவாய்ச் சொல்லியிருக்கிறது. (ஆதியாகமம் 3:1-5) யெகோவா, தம்முடைய ஞானத்தில், இந்தத் தற்போதைய காலம் வரையில், பொதுவில் மனிதவர்க்கம், தம்முடைய வழிநடத்துதல் இல்லாமல் அதன் சொந்தப் போக்கில் சென்றுகொண்டிருக்க அனுமதித்தார். நிச்சயமாகவே, மனித ஆட்சி தோல்வியே என இந்த நூற்றாண்டுகளிலெல்லாம் போதிய வண்ணம் மெய்ப்பித்துக் காட்டப்பட்டு வந்திருக்கிறது.—உபாகமம் 32:5; பிரசங்கி 8:9.
5 மேலும், பரிபூரண ஜீவனுக்கு மூலக்காரணராகிய யெகோவாவுக்குச் செவிகொடுப்பதை ஆதாமும் ஏவாளும் நிறுத்திவிட்டபோது, அவர்கள் அபூரணராகி முடிவில் மரித்தார்கள். இவ்வாறு, அவர்களுடைய சந்ததியார் யாவரும் அபூரணராய்ப் பிறந்தார்கள். நோயும், முதுமையும்., மரணமுமே மனிதவர்க்கத்தின் பங்கானது. (ரோமர் 5:12) ஆகையால், சமாதானத்தைக் கொண்டுவருவதில் மனிதர் வெற்றியடைந்தாலுங்கூட, சுதந்தரித்த அபூரணத்தை அவர்கள் இன்னும் நீக்க முடியாது. நாம் இன்னும் நோய்ப்பட்டு, வயோதிபராகி, மரிப்போம். சாத்தான் இதற்குக் காரணனாதலால், இயேசு அவனைக் குறித்து: “அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; . . . அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை,” என்று சொன்னார். (யோவான் 8:44) கடந்த காலத்தில் வாழ்ந்து மரித்தக் கோடிக்கணக்கான ஆட்களை நீங்கள் எண்ணிப் பார்க்கையில், மெய்யாகவே, சாத்தான் அவர்கள் எல்லாரையும் கொலை செய்ததைப் போன்றே இருக்கிறது.
6 மற்ற ஆவி சிருஷ்டிகளும் கலகத்தில் தன்னைச் சேர்ந்துகொள்ளும்படி சாத்தான் தூண்டுவித்தான். இந்தப் பொல்லாதவர்கள் எல்லாரும் யெகோவா பேசினபோது செவிகொடுக்க மறுத்துவிட்டனர். ஆகவே, சாத்தானும், அவனுடைய பேய்களும், கலகக்கார மனிதருமே இவ்வுலகத்தை அதன் தற்போதைய நிலைமைக்குக் கொண்டுவந்தனர். அவர்கள் யாவரும் ஒழிக்கப்பட வேண்டும், இவ்வாறு கடவுளை விட்டு தன்னாட்சி செய்த வருத்தந்தோய்ந்த 6,000 ஆண்டு சோதனை முடிவு செய்யப்படும். “சமாதானத்தைத் தரும் கடவுள் சீக்கிரத்தில் சாத்தானை . . . நசுக்கிப் போடுவார்,” (NW) என்று ரோமர் 16:20-ல் அவர் நமக்கு உறுதியளிக்கிறார். அவனை மட்டுமல்லாமல் அவனுடைய பேய்களையும் கடவுள் பேசுகையில் செவிகொடுக்க மறுக்கும் எல்லா மனிதரையும் அழிப்பார்.—மத்தேயு 25:41.
செவிகொடுப்பதற்கு இப்பொழுது மிகஅதிகத் தேவை
7 இப்பொழுது நாம் “கடைசி நாட்களின்” முடிவு பகுதிக்குள் வெகு தூரம் சென்றுவிட்டிருக்கிறோம். (2 தீமோத்தேயு 3:1-5) இதன் விளைவாக, யெகோவா நமக்குச் சொல்லிக் கொண்டிருப்பதைக் கவனித்துக் கேட்பதற்கு மேலும் மேலும் அதிகத் தேவையாயிருக்கிறது. அதோடுகூட அவரைச் சேவிப்பதற்குத் தியாகங்கள் செய்ய நாம் மனங்கொள்வதற்குத் தீவிர முயற்சி செய்வதும் தேவை. நம்முடைய முயற்சிகளை ஏன் தீவிரப்படுத்த வேண்டும்? ஏனென்றால் சாத்தான் தனக்குக் “கொஞ்சக்காலமாத்திரம்” மீந்திருக்கிறதென்று அறிந்திருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:12) ஆகவே கெடுத்து அழிப்பதற்குத் தன் முயற்சிகளை அவன் நிச்சயமாகக் கடுமையாக்குவான்.
8 முக்கியமாய், ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலிருந்து யெகோவாவின் சாட்சிகளை நிறுத்திப்போட சாத்தான் விரும்புவான். ஆனால் அவன் இதைச் செய்ய முடியாது, ஏனெனில் யெகோவா அவர்களுக்குப் பின்வருமாறு வாக்குக் கொடுத்திருக்கிறார்: “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.” (ஏசாயா 54:17) தம்முடைய ஊழியர்களை எதிர்க்கிறவர்கள் உண்மையில் “கடவுளோடு போர் செய்கிறவர்களாகக் காணப்படு”வார்கள். (அப்போஸ்தலர் 5:38, 39, தி.மொ.) யெகோவாவின் ஆவியும், கிறிஸ்து இயேசுவும், திரள் கூட்டமான தேவதூதர் சேனைகளும் வல்லமைவாய்ந்த ஆதரிப்பைத் தருவதோடு ராஜ்ய அறிவிப்பு வேலை ஒவ்வொறு ஆண்டும் உச்ச அளவில் வேகமாய் வளருகிறது. இந்தத் தெய்வீக ஆதரிப்பைக் காத்துகொள்ள, யெகோவாவின் ஊழியர் யாக்கோபு 4:7, 8-லுள்ள பின்வரும் அறிவுரைக்குக் கீழ்ப்படிய கவனமாயிருக்கிறார்கள்: “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.”
9 வஞ்சிப்பதற்கும் தீங்குசெய்வதற்கும் சாத்தானுக்கு இருக்கும் திறமையைக் குறைவாய் மதிப்பிடாதீர்கள். கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு எச்சரிக்கிறது; “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்துநில்லுங்கள்.” (1 பேதுரு 5:8, 9) வெறிகொண்ட ஒரு சிங்கம் உங்கள் சுற்றுப்புறத்தில் கட்டுப்பாடில்லாமல் அலைந்துத் திரிகிறதென நீங்கள் அறிந்தால் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பீர்கள். சாத்தானைக் குறித்ததில், நாம் அதைவிட அதிக விழிப்புடன் இருக்கவேண்டும், ஏனெனில் அவன் நமக்கு நித்தியமான தீங்கைச் செய்யமுடியும். விசனகரமாய், மக்கள் பெரும்பான்மையர் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றனர், ஏனெனில் சாத்தான் இருக்கிறானென அறியாமலும் அவர்கள் இருக்கின்றனர். ஏன்? ஏனென்றால் யெகோவாவின் வார்த்தைக்குச் செவிகொடாதிருக்கவே அவர்கள் தெரிந்துகொள்கின்றனர். இந்தத் தவறான தெரிந்துகொள்ளுதலினால் உண்டாகப்போகும் விளைவென்ன? “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.”—கலாத்தியர் 6:7.
“சமாதானமும் பாதுகாப்பும்” என்று அவர்கள் கூக்குரல் எழுப்புகையில்
10 சமாதானத்தைக் கொண்டுவருவதில் ஜாதிகளுக்கு கிடைக்கும் எந்த வெற்றியாலும் முன்னெச்சரிக்கையில்லாமல் ஏமாற்றப்படாதீர்கள். அதை நிறைவேற்ற யெகோவா இவ்வுலக காரணத்துவ அமைப்புகள் எவற்றையும் உபயோகிக்கவில்லை என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருங்கள். மெய்ச் சமாதானத்தைக் கொண்டுவர யெகோவா தம்முடைய சொந்த வழியை உடையவராயிருக்கிறார், அது கிறிஸ்துவின் கீழுள்ள தம்முடைய ராஜ்யத்தின் மூலமாக மட்டுமே. ஆகையால் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு ஜாதிகள் என்ன வெற்றியைக் கண்டாலும், அது குறுகிய காலத்துக்கு மட்டுமே நிலைநிற்கும், வெறும் மேற்பூச்சானதாக மட்டுமே இருக்கும். உண்மையில் ஒன்றுமே மாறியிருக்காது. குற்றச்செயல், வன்முறை, யுத்தம், பசி, ஏழ்மை, குடும்ப வாழ்க்கையில் முறிவு, ஒழுக்கக்கேடு, வியாதி, மரணம், இவை யாவற்றையும் மற்றும் சாத்தானையும் அவனுடைய பேய்களையும், யெகோவா முற்றிலுமாக ஒழித்துப்போடும்வரை அவை நம்முடன் தொடர்ந்து இருக்கும். “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா.”—சங்கீதம் 127:1.
11 நம்முடைய காலங்களில் ஜாதிகள் சமாதானத்தைக் கொண்டுவர தங்களுடைய முயற்சிகள் எல்லாவற்றையும் ஊன்றவைப்பார்கள் என்று பைபிள் தீர்க்கதரிசனம் நிச்சயமாகவே காட்டுகிறது. அது கூறுகிறதாவது: “இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.” (1 தெசலோனிக்கேயர் 5:2, 3) “சமாதானமும் சவுக்கியமும்!” உண்டென்று அவர்கள் கூக்குரல் எழுப்பும்போது இவ்வுலகத்தின் சீரழியும் போக்கு மாற்றப்பட்டுவிட்டது என்று அர்த்தங்கொள்ளாது. இரண்டாவது தீமோத்தேயு 3:13 இவ்வாறு சொல்லுகிறது: “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் . . . மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.” உண்மையானது, ஒரு சுற்றுப்புற அமைப்பின் தலைவர் சொன்னபடியே இன்னும் இருக்கும்: “சமுதாயத்தை எதிர்ப்படும் மிகமுக்கிய பிரச்னை என்னவெனில், அது அடக்கியாளப்பட முடியாததாகிவிட்டிருக்கிறது.”
12 “சமாதானமும் சவுக்கியமும்!” என்று எழுப்பப்பட இருக்கும் கூக்குரலின்போது வீண் நம்பிக்கைகளால் உலகத்திலுள்ள அநேகர் திருப்திகொண்டு ஏமாற்றமடைவார்கள். ஆனால் யெகோவாவின் ஊழியர் ஏமாற்றப்படமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் கடவுள் பேசுகையில் செவிகொடுக்கிறார்கள். ஆகையால், அப்பேர்ப்பட்ட அறிவிப்பு மெய்ச் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவராது என்று அவருடைய வார்த்தையிலிருந்து அவர்களுக்குத் தெரியும். எதிர்மாறாக, “அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்” என்பதற்கு அதுதானே உண்மையில் கடைசி அடையாளமாக இருக்கும். நம்முடைய காலத்துக்காக இயேசு முன்னறிவித்த, நெருங்கிக்கொண்டிருக்கும் “மிகுந்த உபத்திரவத்தின்” துவக்கத்தை அது அறிவிக்கும். அவர் சொன்னதாவது: “ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.”—மத்தேயு 24:21.
13 “மிகுந்த உபத்திரவத்”தின்போது, மனித ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்படும். சங்கீதம் 2:2-6 (தி.மொ.) பின்வருமாறு சொல்லுகிறது: “யெகோவாவுக்கும் அவர் மேசியாவுக்கும் விரோதமாய்ப் பூமியின் ராஜாக்கள் எழும்புகிறார்கள், அதிகாரிகளும் கூடி ஆலோசனை செய்கிறார்கள். அவர்கள் கட்டுகளை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மிடமிருந்து எறிந்துவிடுவோம் என்கிறார்கள். பரலோகத்தில் வீற்றிருப்பவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களைப் பரியாசம் செய்வார். பின்பு அவர் தமது கோபத்திலே அவர்களோடு பேசித் தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கடிப்பார். நானே சீயோனில், எனது பரிசுத்த பர்வதத்தில், என் ராஜாவை ஏற்படுத்தினேன் என்கிறார்.” சங்கீதம் 110:5, 6 (தி.மொ.) மேலுமாக கூட்டுகிறது: “யெகோவா . . . கோபத்தின் நாளிலே ராஜாக்களைச் சங்கரிப்பார். அவர் புறஜாதிகளுக்குள் நியாயந்தீர்ப்பார்.” அரசியல் சதித்திட்டங்கள் யாவும் முடிவுக்குக் கொண்டுவரப்படும், ஏனெனில் ஏசாயா 8:9, 10 அறிவிக்கிறது: “இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள், ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்.!”
தப்பிப்பிழைப்போம் என்ற திடநம்பிக்கை
14 வரப்போகும் “மிகுந்த உபத்திரவத்”தைத் தப்பிப்பிழைப்பதற்கான சரியான நடவடிக்கைகளை எடுக்கத்தக்கதாக யெகோவா தம்முடைய ஜனங்களுக்குத் தேவையான காரியங்களைத் தெரிவிப்பார் என்று நாம் திடநம்பிக்கையுடன் இருக்கலாம். நாம் ஏன் அவ்வளவு உறுதியுடன் இருக்கலாம்? ஏனெனில் வெளிப்படுத்துதல் 7:9, 14-லுள்ள தீர்க்கதரிசனம், ஒரு “திரள் கூட்டம்” நிச்சயமாகவே தப்பிப்பிழைக்கும் என்று காட்டுகிறது. ஏன்? ஏனெனில் யெகோவா பேசுகையில் செவிகொடுப்பதன் காரணமாகவும் அவரால் சரியான விதத்தில் போதிக்கப்பட்டவர்களாய் இருப்பதனாலும். இவ்விதமாக “திரள் கூட்டத்”தாரைச் சேர்ந்தவர்கள் வெளிப்படுத்துதல் 7:15 சொல்லுவதை செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்: “இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்.” இப்படியாக அவர்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள், அவருடைய பிரியத்தைச் சம்பாதிக்கிறார்கள், இவ்வுலகத்தின் முடிவைத் தப்பிப்பிழைக்க பாதுகாக்கப்படுகிறார்கள்.
15 யோவேல் 3:13-16-ம் கூட இந்தக் காரிய ஒழுங்குமுறை, திராட்சப்பழங்கள் ஆலையத்தில் மிதிக்கப்படுவதுபோல நசுக்கப்படுகையில், கடவுளுடைய ஊழியர் தப்பிப்பிழைப்பதைக் குறித்து பேசுகிறது. அது சொல்வதாவது: “அறிவாளையெடுத்து அறுங்கள், பயிர் முதிர்ந்தது; . . . ; ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது, அவர்கள் செய்த தீமை அதிகம், நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள் திரளாய்க் கூடியிருக்கிறார்கள். நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே யெகோவாவின் நாள் சமீபம். சூரியனும் சந்திரனும் அந்தகாரப்படும்; நட்சத்திரங்கள் ஒளிகொடாதிருக்கும். யெகோவா கெர்ச்சித்து [பரலோக] எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அசையும்; யெகோவா தமது ஜனத்துக்கு அடைக்கலம்.”—தி.மொ.
16 அதேவிதமாக, ஏசாயா 26:20, 21-ல் வரப்போகும் அந்தச் சமயத்தைக் குறித்து யெகோவா இவ்வாறு கூறுகிறார்: “என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே புகுந்து உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள். இதோ, பூமியில் குடியிருப்போரின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களைத் தண்டிப்பதற்கு யெகோவா தமது ஸ்தானத்திலிருந்து வெளிப்பட்டு வருவார்” (தி.மொ.) ஆகையால், செப்பனியா 2:2, 3 நம்மை துரிதப்படுத்துவதாவது: “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, யெகோவாவின் நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.”—தி.மொ.
யெகோவாவிடம் ‘ஓடுதல்’
17 யெகோவாவின் திருநாமம் பலத்த கோபுரம், நீதிமான் அதற்குள் ஓடி அடைக்கலம் பெறுவான்,” என்பதாக நீதிமொழிகள் 18:10 (தி.மொ.) சொல்லுகிறது. நீங்கள் யெகோவாவிடம் ‘ஓடு’கிறீர்களா? நோவாவின் நாட்களிலுள்ள ஜனங்களைப் பற்றி இயேசு என்ன சொன்னார் என்பதை நினைவுகூருங்கள். அவர்கள் “நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்.” (மத்தேயு 24:38, 39) “நீதியைப் பிரசங்கித்தவனாகிய” தம்முடைய ஊழியன் நோவாவின் மூலமாக கடவுள் பேசினபோது அவருக்குச் செவிகொடுப்பதைத் தவிர மற்ற எல்லா காரியங்களிலும் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்ததுதானே தவறாக இருந்தது. (2 பேதுரு 2:5) அவர்கள் செவிகொடாமற் போனதால், ஜலப்பிரளயம் வந்தபோது, “அனைவரையும் வாரிக்கொண்டுபோ”யிற்று.
18 ஜலப்பிரளயத்தில் மாண்டுபோனவர்களில் அநேகர், அந்நாட்களில் சமுதாயத்தை நிரப்பிய வன்முறையில் ஈடுபடாதவர்களாய் இருந்ததனால், தங்களை “நல்ல” ஜனங்களாக நினைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் வெறுமென “நல்லவர்”களாக இருந்ததுதானே அவர்களை இரட்சிக்கவில்லை. அவர்களுடைய அசட்டை மனப்பான்மையின் மூலம் தங்களுடைய நாளின் தீங்கை அவர்கள் ஆதரித்து அனுமதித்தார்கள். நெருக்கடியான காரியம் என்னவெனில் அவர்கள் யெகோவாவிடம் ‘ஓட’வில்லை; கடவுளுடைய ஊழியக்காரன் பேசுகையில் அவர்கள் செவிகொடுக்கவில்லை. ஆகையால் அவர்கள் இரட்சிப்புக்காக சரியான நடிவடிக்கைகளை எடுக்கவில்லை. மறுபட்சத்தில், செவிகொடுத்தவர்கள் தப்பிப்பிழைத்தார்கள்.
19 இன்று தமக்கு செவிகொடுப்பவர்களிடம் கடவுள் சமாதானத்தைப் பேசுகிறார். அவர்களுக்கு என்ன விளைவுடன்? ஏசாயா 54:13 (தி.மொ.) கூறுகிறது: “உன் பிள்ளைகளெல்லாரும் யெகோவாவால் போதிக்கப்படுவார்கள்; உன் பிள்ளைகளுக்குப் பெரிய சமாதானமிருக்கும்.” ஆம், “யெகோவா தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி அவர்களை ஆசீர்வதிப்பார்.” (சங்கீதம் 29:11, தி.மொ.) இப்படியாக, இந்த வன்முறையான உலகத்தின் மத்தியில், யெகோவாவின் சாட்சிகள் தங்கள் மத்தியில் மெய்யான, தகர்க்கப்படமுடியாத சமாதானத்தை உடையவர்களாய் இருக்கிறார்கள். உலக தலைவர்களும், அவர்களுடைய தேசத்தின் மக்களும், மற்றும் அவர்களுடைய மதங்களும் சாதிக்கமுடியாத ஒரு அன்பான சர்வதேச சகோதரத்துவத்தை யெகோவாவின் சாட்சிகள் உடையவர்களாய் இருக்கிறார்கள். ஏன் அவர்களால் இதைச் சாதிக்க முடியாது? ஏனெனில் கடவுள் பேசுகையில் அவர்கள் உண்மையில் செவிகொடுப்பதில்லை. ஆனால் யெகோவாவின் சாட்சிகள் கடவுளுக்குச் செவிகொடுக்கிறார்கள். பிரசங்கி 12:13-லுள்ள வார்த்தைகளை அவர்கள் உள்ளார்ந்த அக்கறையோடு எடுத்துக்கொள்கிறார்கள்: “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.”
20 ஒவ்வொரு ஆளும்—ஆம், கடவுளுடைய புதிய உலகத்தில் வாழ விரும்பும் யாவரும்—இதைத்தான் செய்ய வேண்டும். அவர்கள் தாமதமில்லாமல் யெகோவாவிடம் ‘ஓட’ வேண்டும். கடவுள் கொடுக்கும் ஞானத்தால் அவர்கள் வழிநடத்தப்பட வேண்டும். ஞானம் பின்வருமாறு சொல்வதாக பேசப்படுகிறது: “எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள். . . . எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான். என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்.”—நீதிமொழிகள் 8:32-35. (w87 5/15)
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்
◻ மனித முயற்சிகள் சமாதானத்தைக் கொண்டுவருவதில் ஏன் ஒருபோதும் வெற்றியடையாது?
◻ கடவுளுக்குச் செவிகொடுக்க ஏன் இப்போது மேலும் அதிக தேவை இருக்கிறது?
◻ எழுப்பப்பட இருக்கும் மெய்யான “சமாதானமும் சவுக்கியமும்” என்ற கூக்குரல் உண்மையில் எதை அர்த்தப்படுத்தும்?
◻ கடவுளுடைய புதிய ஒழுங்கிற்குள் தப்பிப்பிழைக்க நாம் என்ன செய்யவேண்டும்?
[கேள்விகள்]
1. 2. (எ) மனிதனின் சரித்திரம் முழுவதிலும் சமாதானம் இல்லாதபோதிலும், சிலர் இப்பொழுது என்ன சொல்லுகிறார்கள்? (பி) மனிதருடைய முயற்சிகளின் மூலம் உண்மையான சமாதானம் ஏன் வரமுடியாது?
3. வேறு என்ன காரணத்தினிமித்தம் மனிதரும் தேசங்களும் உண்மையான சமாதானத்தை ஒருபோதும் கொண்டு வர முடியாது?
4. நம்முடைய முதல் பெற்றோர் யெகோவாவுக்குச் செவிகொடுப்பதை நிறுத்திவிட்டபின் என்ன விளைவுற்றது?
5. மனிதருடைய முயற்சிகளால் சமாதானம் கொண்டுவர முடிந்தாலுங்கூட, எது இன்னும் நம்முடன் இருக்கும்?
6. சமாதானத்தைக் கெடுப்போர் யாவர்? அவர்களுக்கு என்ன நடக்க வேண்டும்?
7. யெகோவாவை இப்பொழுது சேவிக்க நாம் ஏன் நம்முடைய முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்?
8. (எ) பிரசங்க வேலையை அதன் எதிரிகள் ஏன் நிறுத்திப்போட முடியாது? (பி) தெய்வீக ஆதரிப்பைக் காத்துக்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும்?
9. சாத்தானை நாம் ஏன் குறைவாய் மதிப்பிட்டுவிடக்கூடாது?
10, 11. (எ) சமாதானத்தைக் கொண்டுவருவதில் ஜாதிகள் பெறக்கூடிய எத்தகைய வெற்றியைக் குறித்தும் நாம் எதை மனதில் கொண்டிருக்க வேண்டும்? (பி) நம்முடைய நாளில் ஜாதிகள் சமாதானத்துக்காகத் தேடும் முயற்சியைப் பற்றி எந்தப் பைபிள் தீர்க்கதரிசனம் பேசுகிறது? (சி) அத்தகைய சமாதானம் எதுவுமே எவ்வளவு காலம் நீடிக்கும்?
12. எழுப்பப்பட இருக்கும் மெய்யான “சமாதானமும் சவுக்கியமும்” என்ற கூக்குரலைப் பற்றி யெகோவாவின் ஊழியர்கள் என்ன மெய் அர்த்தத்தை அறிந்தவர்களாய் இருக்கிறார்கள்?
13. மானிட அரசாட்சிகளின் முடிவை பைபிள் எவ்வாறு விவரிக்கிறது?
14. இவ்வுலகத்தின் முடிவைத் தப்பிப் பிழைப்பவர்கள் இருப்பார்கள் என்று நாம் ஏன் திடநம்பிக்கையுள்ளவர்களாய் இருக்கிறோம்?
15. இந்த ஒழுங்குமுறை நசுக்கப்படுவதை யோவேல் எவ்வாறு விவரிக்கிறான், கடவுளுடைய ஊழியர்களுக்கு விளைவு என்னவாக இருக்கும்?
16. உலக அழிவினூடே யெகோவா தம்முடைய ஜனங்களைப் பாதுகாப்பார் என்று வேறு என்ன தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன?
17. (எ) யெகோவாவின் பாதுகாப்பை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்? (பி) ஜலப்பிரளயத்திற்கு முந்தின பகுதியில் இருந்த உலகத்தின் மக்கள் எதில் தவறினார்கள்?
18. வெறுமென ‘நல்ல’ மக்களாக இருந்ததுதானே, ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்டவர்களை ஏன் பாதுகாக்கவில்லை?
19. இப்போதுங்கூட யெகோவாவின் ஜனங்கள் என்ன மகத்தான நன்மைகளை அறுக்கிறார்கள்? ஏன்?
20. கடவுளுடைய புதிய ஒழுங்கிற்குள் நுழையவேண்டுமானால் ஒவ்வொரு தனி நபரும் என்ன செய்யவேண்டும்?
[பக்கம் 17-ன் படம்]
கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல சாத்தான் தன் முயற்சிகளை மும்முரமாக்குகிறான்
[பக்கம் 18-ன் படம்]
திராட்சப்பழங்கள் ஆலையத்தில் மிதிக்கப்படுவதுபோல இந்தக் காரிய ஒழுங்குமுறை நசுக்கப்படுகையில், கடவுள் தம்முடைய மக்களுக்குப் புகலிடமாக இருப்பார்