உண்மையான நண்பர்களை அடைய முயற்சி
இளம் மனிதன் ஒருவன் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் மிகவும் மோசமாகக் காயமடைந்தான். பல வாரங்களாக உணர்ச்சிகளை இழந்து முழு மயக்க நிலையிலிருந்த அவன் பின்னர் மெதுவாக குணமடைய ஆரம்பித்தான். “எனக்கு அறிமுகமானவர்களாயிருக்கும் இத்தனை அநேகரைப் போல எனக்கு நல்ல நண்பர்களும் இருந்திருந்தால், இன்னும் வேகமாக நான் சுகமடைந்துவிடுவேன்” என்று அவன் சொன்னான். ‘விபத்துக்கு முன்னால் எனக்கிருந்த அநேக நண்பர்கள் என்னைவிட்டு போய்விட்டார்கள். ஆனால் நல்ல நண்பர்கள் நோயைக் குணப்படுத்தும் மருந்தாக இருக்கக்கூடும்.’
இந்த நிலைமை, சிநேக உணர்வுகளற்ற இன்றைய உலகிற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. எல்லாம் செளகரியமாக இருக்கையில், நண்பர்களெனப்படுகிறவர்கள் அநேகராயிருக்கக்கூடும். ஆனால் இன்னல்கள் தாக்கும்போது அவர்கள் மறைந்துவிடுகிறார்கள். உண்மையான நண்பர்கள் பொதுவாகக் கிடைப்பதற்கு அரிதாக இருக்கிறார்கள்.
என்றாலும் ஓரிரண்டு அன்பார்ந்த நண்பர்களைக் கொண்டிருப்பதுதானே வாழ்க்கையில் பெரிய வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது. இந்த விஷயத்தின் பேரில் நிபுணர்கள் சொல்வதாவது “நெருக்கமான தனிப்பட்ட பிணைப்புகளை நாடுவது நம்முடைய காலங்களில் முக்கிய பேச்சுப் பொருளாக இருக்கிறது.” பழமொழி ஒன்று சொல்கிறபடி, ‘ஆபத்தில் உதவுகிறவனே நண்பன்.’
ஒரு காலத்தில் மக்கள் மற்றவர்களைக் குறித்து அதிக அக்கறையுள்ளவர்களாயும் தங்கள் நண்பர்கள் அல்லது அயலகத்தாருக்கு உதவி செய்ய மனமுள்ளவர்களாயும் இருந்தார்கள். ஆனால் திருப்பு கட்ட காலமாக அமைந்துவிட்ட முதல் உலகப்போர், மனித உறவுகளில் பொதுவாக மோசமான நிலையைக் கொண்டுவந்தது. நன்றிகெட்ட, உணர்ச்சியற்ற, நானே முதல் என்ற மனநிலையே இயல்நிலையாக மாறிவிட்டிருக்கிறது.
விசனகரமான இந்நிலை, 19 நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இந்த வார்த்தைகளில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது: “கடைசி நாட்களில், ஒரு கிறிஸ்தவனாக இருப்பது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. ஏனென்றால் மக்கள் தங்களையும் தங்கள் பணத்தையும் மட்டுமே விரும்புவார்கள்; அவர்கள் மேட்டிமையாயும், பெருமையடித்துக் கொள்கிறவர்களாயும், கடவுளை ஏளனஞ் செய்கிறவர்களாயும், தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், அவர்களிடம் நன்றியில்லாதவர்களாயும், முழுவதும் மோசமாயும் இருப்பார்கள். அவர்கள் காரியத்தில் கண்ணாயிருந்து, மற்றவர்களுக்கு ஒருபோதும் விட்டுகொடாதவர்களாயும் இருப்பார்கள். அவர்கள் ஓயாத பொய்யராயும், தொல்லைகளை உண்டுபண்ணுகிறவர்களாயும் இருந்து ஒழுக்கங்கெட்ட நடத்தையை ஒரு பொருட்டாக எண்ணாதவர்களாயும் இருப்பார்கள். அவர்கள் முரடர்களாயும், கொடுமையானவர்களுமாயிருந்து நல்லவர்களாக இருக்க முயற்சிப்பவர்களை ஏளனஞ்செய்வார்கள். அவர்கள் தங்கள் நண்பர்களைக் காட்டிக் கொடுப்பவர்களாயும் இருப்பார்கள்.”—2 தீமோத்தேயு 3:1-4, தி லிவ்விங் பைபிள்.
இது எத்தனை மன சோர்வுண்டாக்குவதாக, ஆனாலும் இன்றைய உலகின் நிலையை துல்லிபமாக விளக்குவதாக இருக்கிறது! உண்மையான நண்பர்களைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் இது நமக்கு அதிக நம்பிக்கையூட்டுவதாக தெரியவில்லை. என்றபோதிலும் இப்பொழுதும்கூட நல்ல நண்பர்களை உண்டுபண்ணிக்கொள்வது கூடிய காரியமாக இருக்கிறது. அவர்கள் எத்தனை அருமையானவர்களாக இருக்கிறார்கள்! உதவியையும், ஆலோசனையையும், ஆறுதலையும், அன்புள்ள தோழமையையும் எப்பொழுதும் நீங்கள் அவர்களிடம் எதிர்பார்க்கலாம். ஆனால் உண்மையான நண்பர்களுக்கும் போலி நண்பர்களுக்குமிடையே நாம் வேறுபாட்டை அறிவது இன்றியமையாததாக இருக்கிறது.
எல்லா “நண்பர்களுமே” உண்மையான நண்பர்களல்ல
விபத்தில் காயமுற்ற, கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இளம் மனிதன் கால்பந்தாட்டக் குழுவின் உறுப்பினனாக அநேக நண்பர்களை உடையவனாக இருந்தான். க்ளப் அல்லது சிறிய சமுதாயக் குழுக்களின் உறுப்பினர்கள், அநேகமாக மகிழ்ச்சியைத் தரும் உறவுகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட “நட்புகள்” நிலையானதாக இருப்பதில்லை. அநேக நண்பர்களை உடையவர்களாயிருந்து அவர்கள் அனைவரையும் இழந்துவிடுவது, அந்த இளம் மனிதன் கண்ட விதமாகவே மிகவும் சோர்வூட்டுவதாக இருக்கிறது. பரிச்சயமானவர்களைப் பெறுவது எளிது; உண்மையான நண்பர்களைப் பெறுவது அப்படியில்லை.
பணக்காரர்களும் உயர்ந்த அந்தஸ்திலிருப்பவர்களும் அநேக நண்பர்களை எளிதில் உண்டுபண்ணக்கூடும். பைபிள் சொல்கிறவிதமாகவே: “ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.” “முக்கியமான ஆட்களின் தயையை பெற்றுக்கொள்ள அனைவரும் முயற்சி செய்கிறார்கள்; கொடை கொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்.” (நீதி. 14:20; 19:6, Today’s English Version) ஆனால் அவர்களில் எத்தனைப் பேருக்கு மறைமுகமான உள்நோக்கங்கள் இருக்கின்றன? அதிகமாக சிநேகிக்கப்படும் ஆட்கள் செல்வத்தை அல்லது அந்தஸ்தை இழந்துபோனால், விரைவில் அவர்கள் முழுவதுமாக நண்பர்களற்றவர்களாகிவிடக்கூடும்.
சரீரப் பிரகாரமாக கவர்ச்சியான தோற்றமுள்ள ஆட்களுக்கும்கூட அநேக நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் அநேகர் வெளிப்புறத் தோற்றத்தினால் கவரப்படுகிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட நட்புகள் மிகவும் தீங்கிழைப்பதாக இருந்து, வெப்பத்தில் பனிப்போல துன்பங்கள் ஏற்படுகையில் மறைந்துவிடக்கூடும். ஆகவே கவனமாகத் தெரிந்தெடுப்பது உண்மையில் அவசியமாயிருக்கிறது.
கவனமாகத் தெரிந்தெடுங்கள்
ஆம், நண்பர்களைக் கவனமாகத் தெரிந்தெடுப்பதில் ஞானமிருக்கிறது. போலி நண்பர்கள் அநேகமாக முகமன் பேசி மறைமுகமான உள்ளெண்ணத்தோடு, நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். “பிறனை முகஸ்துதி செய்கிறவன் அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.”—நீதி. 29:5, தி ஜெருசலேம் பைபிள்.
ஆகவே, உங்களுடைய தற்போதைய நண்பர்களின் வட்டத்தைப் பற்றி கவனமாகச் சிந்தித்துப் பாருங்கள். அவர்களுடைய செல்வாக்கு உங்களுக்கு நன்மை செய்கிறதா அல்லது தீமை செய்கிறதா? அவர்கள் தன்னலம் கருதுகின்ற கொள்கை பிடிவாதமுள்ள அல்லது இறுமாப்புள்ள ஆட்களா? அவர்கள் கண்மூடித்தனமாக செயல்பட்டு ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் அதில் துணிந்து இறங்குவதில் மகிழ்ச்சியைக் காண்பவர்களா? எதிர்பாலரிடமாக அவர்களுடைய மனநிலை என்ன? அவர்கள் பண்புள்ளவர்களாய் மரியாதையுடன் நடந்துகொள்கிறார்களா? அல்லது மிகவும் நெருக்கமாகப் பழகி ஒருவேளை உண்மையில் ஒழுக்கங்கெட்டவர்களாகவும் இருக்கிறார்களா? உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் நேர்மையற்ற நம்பத்தகாத ஆட்களாக நிரூபிக்கப்பட்டவர்களா? அவர்கள் போதைப் பொருட்களை உபயோகிப்பவர்களா? அதிகமாக குடிப்பவர்களா? அப்படியென்றால் நீங்கள் ஆபத்திலிருக்கிறீர்கள். நீங்கள் ஒருவேளை நேர்மையானவராக, சுத்தமானவராக மற்றும் மனத்தாழ்மையுள்ளவராக இருக்கலாம். ஆனால் “மோசமான கூட்டுறவுகள் நல்ல பழக்கவழக்கங்களைக் கெடுத்துவிடும்” என்பதை மறந்துவிடாதீர்கள்.—1 கொரிந்தியர் 15:33.
கெட்ட தோழர்களைக் கொண்டிருப்பதிலிருக்கும் பெரிய ஆபத்து, நீங்கள் அவர்களைப் பார்த்து, அவர்களைப் பின்பற்றக்கூடும். நெருக்கமான பழக்கத்தால் படிப்படியாக, ஒருவேளை உங்களை அறியாமலே, அவர்களுடைய வழிகளும் மனநிலைகளும் உங்களுடையதாகிவிடும். பைபிள் சொல்கிறவிதமாகவே: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.”—நீதி 13:20.
நண்பர்களை முயன்று அடைவதில் தவறான அடியை எடுத்து வைப்பது எளிதாக இருக்கிறது. ஆனால் சோர்வடைந்துவிடாதீர்கள். உலகில் இன்னும் லட்சக்கணக்கான சிறந்த சிநேகபான்மையுள்ள ஆட்கள் இருக்கிறார்கள். ஆகவே இப்படிப்பட்ட உண்மையான நண்பர்களை எவ்விதமாக நீங்கள் கண்டடையலாம்?
(w87 9⁄15)
[பக்கம் 4-ன் படம்]
உங்கள் தோழர்கள் உங்கள் மீது பலமான செல்வாக்கைச் செலுத்திட முடியும்