உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w88 10/1 பக். 26-28
  • உங்களுடைய கொடுத்தல் ஒரு தியாகமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுடைய கொடுத்தல் ஒரு தியாகமா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • காணிக்கைப் பெட்டிகள்
  • வித்தியாசமான கருத்துக்கள்
  • “தன் வறுமையிலிருந்து”
  • இன்று மெய்வணக்கத்தை முன்னேற்றுவித்தல்
  • ‘நன்மையான எந்த ஈவையும்’ கொடுப்பவர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • ‘உன் விலைமதிப்புள்ள பொருட்களால் யெகோவாவை கனம்பண்ணு’—எவ்வாறு?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • “பணம் எங்கேயிருந்து வருகிறது?”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • யெகோவாவுக்கு நாம் எவ்விதம் திரும்பச் செலுத்தக்கூடும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
w88 10/1 பக். 26-28

உங்களுடைய கொடுத்தல் ஒரு தியாகமா?

நன்கொடைகளைப் பற்றிய ஒரு சமநிலையான கருத்து

ஆலயத்தில் ஜனங்களுக்கு இயேசு அநேக காரியங்களைக் குறித்துப் போதித்தப் பின்பு “காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.“ (மாற்கு 12:41) இதைத் தொடர்ந்து வருவது நன்கு அறியப்பட்ட விதவையின் சிறியத் தொகை காணிக்கையைப் பற்றிய பதிவாகும். ஆனால் இயேசு ஏன் அங்கே உட்கார்ந்து, ஜனங்கள் தங்கள் காணிக்கைகளைச் செலுத்துவதைப் பார்த்துக்கொண்டிருந்தார்? தர்மஞ்செய்யும்போது வலதுகை செய்கிறதை இடதுகைகூட அறியாதிருக்க வேண்டும் என்பதாக அவர் தம்முடைய சீஷர்களிடம் சொல்லவில்லையா?—மத்தேயு 6:3.

இதற்கு முன்னால் இயேசு, “விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்” போடுவதற்கு கொள்கையற்ற வழிமுறைகளையெல்லாம் உபயோகிப்பதற்காக மதத்தலைவர்களை மிகவும் பலமாக, வெளிப்படையாகக் கண்டனம் செய்திருந்தார். இந்த மதத்தார் “அதிக ஆக்கினையை அடைவார்கள்” என்பதாக அவர் சொன்னார் (மாற்கு 12:40) ஒரு பாடத்தைக் கற்பிப்பதற்காக பின்பு அவர் அங்கே காணிக்கைப் பெட்டி அருகே ஜனங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு தம்முடைய கவனத்தைத் திருப்பினார். இன்று, சர்ச் அமைப்புகளில் உட்பட்டிருக்கும் பெருந்தொகையான பணத்தைப் பற்றியும் இப்படிப்பட்ட நிதிகள் தவறாகப் பயன்படுத்துவது பற்றியும் இதற்கு பொறுப்பாயிருப்பவர்களின் ஊதாரித்தனமான வாழ்க்கை முறைகளைப் பற்றியும் இத்தனை அதிகம் கேள்விப்படும்போது இயேசு என்ன சொன்னார் என்பதைக் கூர்ந்து கவனிப்பது நமக்கு நன்மையாக இருக்கும்.—தயவுசெய்து மாற்கு 12:41 வாசிக்கவும்.

காணிக்கைப் பெட்டிகள்

இயேசு, “காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்தார்” என்பதாகப் பதிவு சொல்லுகிறது. இது பெண்களின் கூடமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. இங்கே ஜனங்கள் தங்கள் காணிக்கைகளைப் போடுவதற்காகச் சுவர் ஓரமாக அநேக பேழைகள் அல்லது பெட்டிகள் இருந்ததாக யூத பாரம்பரியம் நமக்குச் சொல்லுகிறது. எபிரெயுவில் அவை எக்காளங்கள் என்றழைக்கப்பட்டன. ஏனென்றால் ஒரு எக்காளத்தின் மணிவடிவத்தில் மேலே அவற்றிற்குச் சிறிய துவாரம் இருந்தது. “எதையாவது போடாமல் எவரும் ஆலயத்துக்குள் பிரவேசிப்பதில்லை’ என்பதாகச் சொல்லப்படுகிறது.

கிறிஸ்துவின் காலத்தில் பலஸ்தீனா (1985) என்ற தன்னுடைய புத்தகத்தில் பிரெஞ்சு தேசத்து பேராசிரியர் எட்மண்ட் ஸ்டாப்பர், இந்தக் காணிக்கைப் பெட்டிகளைப் பற்றி,, விளக்கமான வருணனையைக் கொடுத்திருக்கிறார். அவருடைய பதிவு, அந்தக் காலத்து மக்களின் மதசம்பந்தமான வாழ்க்கையைப் பற்றிய, விசேஷமாக ஆலயத்து சேவைகளுக்காக அவர்கள் கொடுத்து நன்கொடைகளைப் பற்றிய சில விஷயங்களைப் புரிந்துக்கொள்ள நமக்கு உதவி செய்கிறது.

ஒவ்வொரு பேழையும் வித்தியாசமான ஒரு நோக்கத்துக்காக வைக்கப்பட்டிருந்தது. எபிரெய எழுத்தில் இவற்றின் மீது அவை பொறித்து வைக்கப்பட்டிருந்தன. முதல் பேழையின் மீது புதிய சேக்கல்கள் என பொறிக்கப்பட்டிருந்தது. அதாவது இவை நடப்பு ஆண்டு செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட சேக்கல்கள்: இரண்டாவது: பழைய சேக்கல்கள்; அதாவது முந்தைய ஆண்டின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட சேக்கல்கள். மூன்றாவது: காட்டுப் புறாக்களும் புறாக்குஞ்சுகளையும்; இந்தப் பேழையில் செலுத்தப்பட்ட பணம், தகன பலிக்காக ஒன்றும் பாவத்துக்காக ஒன்றும் இரண்டு காட்டுப் புறாக்களையும் இரண்டு புறாக்குஞ்சுகளையும் செலுத்த வேண்டியவர்கள் அவற்றிற்காக கொடுக்கும் பணமாகும். நான்காவது பேழையின் மீது தகனபலி என்று எழுதப்பட்டிருந்தது. மற்ற தகன பலிகளுக்காகும் செலவுக்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது. ஐந்தாவதின் மீது கட்டைகள் என்பதாக பொறிக்கப்பட்டிருந்தது. இவை பலிபீடத்துக்குக் கட்டைகள் வாங்குவதற்காக விசுவாசமுள்ளவர்கள் செலுத்திய காணிக்கைகளாக இருந்தன. ஆறாவது: தூபவர்க்கம் (தூபவர்க்கம் வாங்க பணம்) ஏழாவது: பரிசுத்த ஸ்தலத்துக்கு (இரக்கத்தின் ஆசனத்திற்காக பணம்) மீதமுள்ள 6 பேழைகளின் மீதும் மனமுவந்து செலுத்தப்படும் காணிக்கைகள் என்பதாகப் பொறிக்கப்பட்டிருந்தது.

முதல் இரண்டு பேழைகள், ஆலய பராமரிப்புக்கும் அங்கு செய்யப்படும் சேவைக்கும், முழு தேசத்துக்காகவும் செலுத்தப்படும் அன்றாட பலிகளுக்கும், ஒவ்வொரு ஆணும் சட்டத்தின்படி செலுத்த வேண்டியிருந்த அரை சேக்கல் (கிரேக்க பணத்தில் இரண்டு வெள்ளி நாணயங்கள்) வரிபணத்துக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த வரி பொதுவாக உள்ளூரில் தண்டல் செய்யப்பட்டு பின்னர் ஆலயத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.—மத்தேயு 17:24.

ஜனங்கள் தங்களுக்காகவும்கூட பல்வேறு காணிக்கைகளை செலுத்தும்படியாகச் சட்டம் அவர்களைத் தேவைப்படுத்தியது. அவற்றில் சில செய்யப்பட்ட பாவங்களுக்காகவும் மற்றவை பண்டிகை சமயங்களுக்காகவும் இன்னும் மற்றவை அவர்களுடைய பக்தியையும் ஸ்தோத்திரத்தையும் முன்னிட்டும் செலுத்தப்பட்டன. “காட்டுப்புறாக்களும் புறாக் குஞ்சுகளும்” மற்றும் “தகன பலிகள்” என்பதா குறிப்பிடப்பட்டிருந்த பெட்டிகள் இவைகளுக்காக வைக்கப்பட்டிருந்தன. “தகன மற்றும் பாவ நிவாரண பலிக்காகக் காட்டுப் புறாக்களைக் கொண்டுவர வேண்டிய பெண்கள் அவற்றை வாங்குவதற்குரிய பணத்தை மூன்றாவது எக்காளத்தினுள் போட்டார்கள். இது தினந்தோறும் திறக்கப்பட்டு அதிலுள்ள பணத்துக்குச் சமமான எண்ணிக்கையில் காட்டுப் புறாக்கள் பலிசெலுத்தப்பட்டன” என்பதாக ஆலயம், அதன் ஊழியமும் சேவைகளும் என்ற புத்தகம் சொல்லுகிறது. இதைத் தானே குழந்தை இயேசுவின் பெற்றோர்களும் செய்திருக்க வேண்டும்.—லூக்கா 2:22-24; லேவியராகமம் 12:6-8.

பின்பு பலிபீடத்துக்கும் மனமுவந்து அளிக்கப்படும் காணிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும் கட்டைகள் மற்றும் துபவர்க்க காணிக்கை இருந்தது. மறுபடியுமாக பேராசிரியர் ஸ்டாப்பரின் பிரகாரம், “கட்டை அல்லது தூபவர்க்கத்துக்காக எவராவது பணம் கொடுத்தால். குறைந்த பட்ச தொகை ஒன்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதற்கும் குறைவாகச் செலுத்தப்படக்கூடாது. ஒரு கைப்பிடி தூபவர்க்கம் அல்லது ஒரு முழம் நீளமும் அளவில் பரந்தகன்றதுமான இரண்டு மரத்துண்டுகளுக்குரிய விலையையாவது கொடுப்பது அவசியமாக இருந்தது.”

இவை அனைத்திலிருந்தும் நாம் கற்றுக்கொள்வது என்ன? மெய் வணக்கத்துக்கு மையமாக இருந்த பரிசுத்த ஸ்தலத்தையும், பின்னால் எருசலேமிலிருந்த ஆலயத்தையும் பராமரிப்பதில் இஸ்ரவேலருக்கு அநேக உத்தரவாதங்கள் இருந்தன என்பது தெளிவாகத் தெரிகிறது. பலிகளும் காணிக்கைகளும் வணக்கத்தின் முக்கியமான பாகமாக இருந்தன. உண்மையில் “யெகோவாவுடைய சந்நிதியில் வெறுங்கையோடே” வரக்கூடாது என்பது சட்டமாக இருந்தது. (உபாகமம் 6:16) இந்தக் கடமைகளைப் பற்றிய அவர்களுடைய கருத்து என்னவாக இருந்தன?

வித்தியாசமான கருத்துக்கள்

மோசே மற்றும் தாவீதின் காலத்திலும் பின்னால் யோவாஸ் மற்றும் யோசியா ஆண்டகாலத்திலும் ஜனங்கள் மிகவும் பெருந்தன்மையானவர்களாயும் தாராளமாகக் கொடுக்கிறவர்களாயும் இருந்தார்கள் என்பதாக பைபிள் பதிவு காண்பிக்கிறது. யெகோவாவின் வீட்டைக் கட்டுவதிலும் அதைப் பராமரிப்பதிலும், மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதிலும் ஒரு பங்கைக் கொண்டிருப்பதில் அவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருந்தார்கள். தாவீதின் பின்வரும் வார்த்தைகளில் அவர்களுடைய உணர்ச்சிகள் மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன: “யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம்’ வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.”—சங்கீதம் 122:1.

என்றபோதிலும் இந்த தாராளமான ஆவி எல்லாரிடத்திலும் இருக்கவில்லை. உதாரணமாக. மல்கியாவின் நாட்களில், ஆசாரியர்கள் யெகோவாவுக்குப் “பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல் கொண்டதையும்” செலுத்திக் கொண்டிருந்ததாக நாம் வாசிக்கிறோம். ஊழிய சிலாக்கியத்தைக் குறித்து களிகூறுவதற்கு பதிலாக அவர்கள், “இதோ இது எவ்வளவு வருத்தமென்று” சொன்னார்கள்.—மல்கியா 1:13.

அதேவிதமாக, இயேசுவின் நாளில் சிலர் தங்களுடைய சொந்த அக்கறைகளை முன்னேற்றுவித்துக்கொள்ள நிலைமையை அனுகூலப்படுத்திக் கொண்டார்கள். உதாரணமாக, ஆலயத்திலிருந்த பேர்போன காசுக்காரர்கள் வெறுமென நாணயத்தை மாற்றுவதற்காக அங்கில்லை, மாறாக. எபிரெய சேக்கல்கள் மாத்திரமே காணிக்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாலும், ரோம அல்லது கிரேக்க நாணயங்களையுடையவர்கள் அதைக் கொடுத்து மாற்ற வேண்டியிருந்தாலும் இதை அவர்கள் தங்கள் ஆலயத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். யூத சரித்திரத்தில் வல்லுநரான ஆல்பர்ட் எடர்ஷீமின் பிரகாரம், “ஒவ்வொரு அரை சேக்கலுக்கும் காசுக்காரர்கள் ஒரு வெள்ளி மேயா அல்லது கால் பணத்தை [அல்லது ஒரு நாள் வேலைக்கு ஒரு வேலையாளின் கூலியாகிய ஒரு பணத்தை] வரியாக விதிக்கும்படியாக அனுமதிக்கப்பட்டார்கள்.” இது சரியாக இருக்குமானால், இது எத்தனை லாபகரமான வியாபாரமாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் இயேசு காசுக்காரர்களை வெளியே விரட்டியபோது மதத்தலைவர்கள் ஏன் அத்தனை ஆத்திரமடைந்தார்கள் என்பதையும் புரிந்துகொள்வது கடினமாக இல்லை.

“தன் வறுமையிலிருந்து”

இவை அனைத்துமே, “மனமுவந்து செலுத்தப்படும் காணிக்கைகள்” என்பதாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு பெட்டிக்குள் ஒரு சிறிய தொகையைப் போட்டது ஏழை விதவையைப் பற்றிய இயேசுவினுடைய எடுத்துக்காட்டின் முக்கியத்துவத்தையே காண்பிக்கின்றன. ஒரு விதவையாக அவள் வரிகாசைச் செலுத்தவேண்டியவர்களாக இல்லை. வறுமையிலிருந்து அவளால் ஒருவேளை தகனபலிகள் அல்லது கட்டை அல்லது தூபவர்க்க காணிக்கைகளுக்குத் தேவைப்பட்ட குறைந்தபட்ச தேவைகளையும்கூட பூர்த்தி செய்ய முடியாதவளாக இருந்திருக்க வேண்டும். என்றபோதிலும் யெகோவாவிடமாக தனக்கிருந்த அன்பைக் காண்பிக்க அவள் எதையாவது செய்ய விரும்பினாள். இவள் தன் கடமையை புறக்கணிக்கவோ அல்லது வசதியுள்ளவர்களிடமாக அதை விட்டுவிடவோ விரும்பவில்லை. இயேசு சொன்னார்: “இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்.”—மாற்கு 12:44.

இந்தப் பதிவிலிருந்து நாம் அநேக மதிப்புள்ள பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். இதில் முக்கியப் பாடமானது, நம்முடைய பொருள் சம்பந்தமான உடைமைகளின் மூலமாக மெய் வணக்கத்துக்கு ஆதரவைக் காண்பிக்கும் சிலாக்கியம் நம் அனைவருக்கும் இருந்தபோதிலும், கொடுக்கையில் எதையும் இழக்காமல் நாம் என்ன கொடுக்கிறோம் என்பது அல்ல, ஆனால் நாம் நமக்கு மதிப்புள்ளதாக இருப்பதைக் கொடுப்பதே கடவுளுடைய பார்வையில் ஒரு வேளை உண்மையில் விலையேறப்பெற்றதாக இருக்கிறது. வேறு வார்த்தையில் சொன்னால், உண்மையில், தேவைப்படாத எதையாவது கொடுக்கிறோமா? அல்லது நாம் கொடுப்பது உண்மையில் ஒரு தியாகமாக இருக்கிறதா?

இன்று மெய்வணக்கத்தை முன்னேற்றுவித்தல்

இன்று யெகோவாவின் சாட்சிகள், “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷத்தை. . ..குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும்” வைராக்கியத்தோடு பிரசங்கிப்பதன் மூலம் மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்கிறார்கள். (மத்தேயு 24:14) உலகம் முழுவதிலும் செய்யப்பட வேண்டிய இந்த வேலையை முடிப்பதில், முழு ஈடுபாட்டுடன் முயற்சியும், நேரமும், சக்தியும் மட்டுமல்லாமல், கனிசமான செலவும்கூட உட்பட்டிருக்கிறது. “1986-ன் போது 2,762 மிஷனெரிமார்களுக்காகவும் 13,351 விசேஷ பயனியர்களுக்காகவும் வட்டார மற்றும் மாவட்ட கண்காணிகள் மற்றும் அவர்களுடைய மனைவிமார்களுக்காகவும் மொத்தம் 30,60,95,426 ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதை” 1987 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம் அறிவிக்கிறது. இதில், “கட்டடங்களை வாங்குவதற்கும் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்குமான செலவுகளும் தொழிற்சாலைகளிலும் தலைமைக் காரியாலயத்திலும் சங்கத்தின் 93 கிளைக் காரியாலயங்களிலும் அலுவலகங்களுக்குத் தேவையானவற்றை வாங்குதற்கான செலவுகளும், பெத்தேல் குடும்பத்தில் சேவை செய்யும் 8,920 வாலண்டியர்களின் பொருளாதாரத் தேவைகளுக்கான செலவுகளும் சேர்க்கப்படவில்லை.”

‘இவைகளுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது?’ என்பது அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. கிறிஸ்தவ மண்டலத்தின் சர்ச்சுகள் செய்வது போல யெகோவாவின் சாட்சிகள் காணிக்கைகள் வாங்குவதோ அல்லது நன்கொடைகளைப் பெற்றுக்கொள்ள உறைகளை அனுப்பிவைப்பதோ இல்லை. மாறாக, பைபிள் காலங்களிலிருந்த காணிக்கைப் பெட்டிகளைப் போல நன்கொடை பெட்டிகள் அவர்களுடைய ராஜ்ய மன்றங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. சில சமயங்களில், “ராஜ்ய மன்றங்கள் அல்லது அசெம்பிளி மன்றங்கள் கட்டுவதற்காக உதவி” அல்லது “மிஷெனரிகள் அவர்களுடைய தாய் நாட்டில் நடை பெறும் மாநாடுகளில் ஆஜராயிருக்க உதவி” என்பதாக குறிப்பிடப்பட்ட மற்ற பெட்டிகளும் வைக்கப்படுகின்றன. உலகம் முழுவதிலும் பிரசங்க வேலையை முன்னேற்றுவிப்பதற்காக நன்கொடைகள் நேரடியாக 25 கொலம்பியா ஹைட்ஸ், புரூக்ளின், நியு யார்க் 11201-லுள்ள உவாட்ச்டவர் சொஸைட்டிக்கோ அல்லது உங்கள் தேசத்திலுள்ள சங்கத்தின் கிளைக் காரியாலயத்துக்கோ அனுப்பப்படலாம்.

நன்கொடைகள் அளிப்பதற்குரிய இந்த அநேக மற்றும் வித்தியாசமான முறைகளை நீங்கள் எவ்விதமாக கருதுகிறீர்கள்? மல்கியாவின் நாளிலிருந்த சிலரைப் போல அதைச் சலிப்பூட்டும் ஒரு சுமையாகக் கருதி ஒருவேளை உங்கள் இருதயங்களில் “இதோ இது எவ்வளவு வருத்தம்” என்பதாக நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது “ஏழை விதவை”யைப் போல மெய் வணக்கத்துக்கு உங்கள் வைராக்கியத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதற்கும் விலைமதிப்புள்ள உங்கள் பொருட்களால் யெகோவாவைக் கனம் பண்ணுவதற்கும் இவைகளை வாய்ப்புகளாக நீங்கள் கருதுகிறீர்களா? நீங்கள் கொடுப்பது ஒரு தியாகமாக இருக்கிறதா? என்ற பொருத்தமான கேள்வியை மறந்துவிடாதீர்கள்.

“‘அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோவென்று அதினால் என்னை சோதித்துப் பாருங்கள்’ என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.” (மல்கியா 3:10) யெகோவாவின் ஜனங்களின் மத்தியிலுள்ள ஆவிக்குரிய செழுமையும் உலகம் முழுவதிலும் காணப்படும் விஸ்தரிப்பும் யெகோவா ஏற்கெனவே இதைச் செய்து வருகிறார் என்பதை நிரூபித்திருக்கிறது. உண்மையில் தியாகமாக இருக்கும் பலிகளை நாம் யெகோவாவுக்குத் தொடர்ந்து செலுத்திக் கொண்டிருப்போமாக. (W87 12/1)

எப்படி சிலர் ராஜ்ய வேலைக்கு நன்கொடை அளிக்கிறார்கள்

◻ வெகுமதிகள்: பணமாக மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகள் நேரடியாக உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு (Wath Tower Bible & Tract Society of Pennsylvania, 25 Columbia Heights, Brooklyn, New York 11201) அல்லது உள்ளூரிலுள்ள கிளைக் காரியாலயத்துக்கு அனுப்பப்படலாம். நிலம், கட்டடங்கள், மனைகள் போன்ற சொத்துக்களும், நகைகளும் அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களும்கூட நன்கொடையாக அளிக்கப்படலாம். இவை மொத்தமாக ஒரு நன்கொடையே என்பதைத் தெரிவிக்கும் சுருக்கமான ஒரு கடிதம் இந்த நன்கொடைகளோடு சேர்ந்துவர வேண்டும்.

◻ நிபந்தனைக்குட்பட்ட நன்கொடை ஏற்பாடு: உவாட்ச் டவர் சங்கத்தின் பொறுப்பில் வைத்துக்கொள்ளும்படியாகப் பணம்கொடுக்கப்படலாம். இந்தப் பணம் சொந்த தேவை ஏற்பட்டால் நன்கொடையாளருக்குத் திரும்பத் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு அளிக்கப்படக்கூடும்.

◻ காப்புறுதி (இன்சூரன்ஸ்): ஒரு ஆயுள்-காப்புறுதி திட்டத்தின் அல்லது ஓய்வு/ஊதியத் திட்டத்தின் அனுபவ பாத்தியத்தை உடையதாக உவாட்ச் டவர் சொஸைட்டி பெயரிடப்படலாம். இத்தகைய ஏற்பாடுகள் யாவற்றையும் குறித்து சங்கத்துக்குத் தகவல் தெரிவித்திட வேண்டும்.

◻ நம்பிக்கை பொறுப்புறுதி (Ω): வங்கி சேமிப்பு கணக்குகள் சங்கத்திடம் நம்பிக்கை பொறுப்புறுதியாக (Trusts) வைக்கப்படலாம். இவ்வாறு செய்யப்பட்டால், சங்கத்துக்கு இது தெரிவிக்கப்பட வேண்டும். நன்கொடையாளர் உயிரோடிருக்கும் வரை அதை அனுபவிப்பார் என்ற ஓர் ஏற்பாட்டின்கீழ் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் சொத்துக்களும்கூட நன்கொடையாக அளிக்கப்படலாம். இம்முறையில் உயில் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்காகும் செலவையும் அநிச்சயங்களையும் நீக்கிவிடக்கூடும். மரணம் நேரிடுமானால் சங்கம் இதைப் பெற்றுக்கொள்வதை இது உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும்.

◻ உயில்கள்: சொத்து அல்லது பணம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட ஒரு உயில் மூலமாக உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு ஒப்படைக்கப்படலாம். அதன் நகல் ஒன்று சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இதன் பேரில் கூடுதலான தகவல்கள் அல்லது ஆலோசனைகளுக்கு உவாட்ச் டவர் சொஸைட்டியின் பொருளாளர் அலுவலகத்துக்கு (Wath Tower Bible & Tract Society of Pennsylvania, 25 Columbia Heights, Brooklyn, New York 11201) அல்லது சங்கத்தின் உள்ளூர் கிளைக் காரியாலயத்துக்கு எழுதி கேட்கவும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்