தேவதூதர்கள்—கடந்த காலத்திலும் தற்காலத்திலும்
“கிறிஸ்மஸ் காலங்களின் போது நாம் மரத்தில் தொங்கவிடும் அலங்கார பொருட்களில் அல்லது கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளில் அவர்கள் அழகான முகங்களையுடைய பொன்னிற பொம்மைகளாக சுரமண்டலத்தை அல்லது சர்ச் ஆர்கனை வாசிப்பது போல அல்லது மெழுகுவர்த்திகளை ஏந்திச் செல்வதுப் போல—காண்பிக்கப்படுகிறார்கள். சிறிய பறவைகளுக்கிருப்பது போன்ற தடித்த குட்டையான இறக்கைகள் அவர்களுக்கிருக்கின்றன. ஒரு வார்த்தையில் சொன்னால் அவை கவர்ச்சிமிக்கவையாக இருக்கின்றன.”—தி சன்டே டென்வர் போஸ்ட்.
“தேவதூதர்கள் இறைமையியல் ஆய்வுத்துறைப் பள்ளிகளில் பொதுவாக அசட்டைச் செய்யப்படுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் வேதபாடப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படுகிறார்கள். அமெரிக்காவிலுள்ள கத்தோலிக்க மத கல்வி வழிகாட்டி ஏடாக இருக்கும் தேசீய சமய வாய்மொழிப் பாட குறிப்பு நூலின் அட்டவணையில் இவர்கள் பெயர் குறிப்பிடப்படவுமில்லை.”
சமய பதிப்பாசிரியர் சார்லஸ் W.பெல் இவ்விதமாக அறிவிப்பு செய்திருக்கிறார். சில இறைமையியல் வல்லுநர்கள் விசேஷமாக புராட்டஸ்டாண்ட் சர்ச்சுகளிலிருந்து வருபவர்கள் தேவதூதர்களைக் குறித்து “குழப்பமாகவும் அநிச்சயமாகவும்” உணருகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். நவீன சிந்தனையாளர்கள் சிலர், “தேவதூதர்களில் அனைத்து நம்பிக்கையும் கைவிடப்பட வேண்டும்,” என்று சொல்வதாக நியு கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது.
எப்பொழுதும் இது இவ்விதமாக இருக்கவில்லை. உதாரணமாக 13-வது நூற்றாண்டில், இறைமையியலில் ஒரு துணைப்பாடமாக இருந்த தேவதூதர் பற்றிய கோட்பாட்டைப் படித்த பண்டிதர்கள், தேவதூதர்களின் “தன்மையையும் புத்திக்கூர்மையையும் துணிவையும்” முன்னிட்டு கிளர்ச்சியடைந்ததாகச் சொல்லப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக ஜெபங்களுங்கூட “காவல் தூதர்களுக்கு” ஏறெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மேலே காணமுடிகிறபடி, அது முதற்கொண்டு கருத்துக்கள் மாறி விட்டிருக்கின்றன.
நியு கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியாவின் பிரகாரம், “நவீன கால மனிதரின் மனதில் தேவதூதர்கள் . . . அதிகமதிகமாக பழங்கதைகளோடும் கட்டுக்கதைகளோடும் சிறு பிள்ளையின் கற்பனை உலகோடும் சம்பந்தப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.” ஆம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதிக்குள் அநேக ஆட்களின் மனங்களில், தேவதூதர்கள் வெகு குறைவாகவே மதத்தோடும், அதிகமாக பொதுவான காதல் காவியக் கருத்துக்களோடும் சம்பந்தப்படுத்தப்பட்டனர். இன்று இன்னும் அநேகர் அவர்களைக் கற்பனையின் விளைவுகளாகக் கருதுகிறார்கள். ஆகவே இப்படிப்பட்டவர்கள் தேவதூதர்களை நம்புவதில்லை.
சில மதங்களில் தேவதூதர்கள்
என்றபோதிலும், தேவதூதர்கள் சில மதங்களில் இன்றும் இடம் பெறுகின்றனர். உதாரணமாக, ரோமன் கத்தோலிக்க சர்ச் “தேவதூதர்களில் அன்புகூர்ந்து, அவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களை தொழுது வேண்டிக்கொள்ளும்படியாக மதப்பற்றுள்ள ஆட்களை ஊக்குவிக்கிறது.” உண்மையில், கத்தோலிக்க மதம், தேவதூதர்கள் என தான் கருதும் மூவரை—மிகாவேல், காபிரியேல் மற்றும் ரபேல் தூய திருத்தொண்டர்களென உயர்த்தியிருக்கிறது. தள்ளுபடியாகமத்தில் மாத்திரமே ரபேல் என்ற பெயரைக் காணமுடிகிறது. பைபிள் தொகுப்பில் காணமுடிவதில்லை.
கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளில், தேவதூதர்கள் வழிப்பாட்டு பாசுரத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றனர். இது மத குருவின் பாடலுக்கு சபையார் பதில் வாசகம் சொல்வதாக அமைக்கப்பட்டிருக்கும் வேண்டுதலை அல்லது விண்ணப்பத்தைச் செய்யும் ஒரு வகையான ஜெபமாகும். தேவதூதர்கள் முகமதிய மதத்திலுங்கூட இடம் பெறுகிறார்கள். முகமதிய இறைமையியலில் வகுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் கொள்கைக் கூறுகளில் தேவதூதர்களில் நம்பிக்கை இடம் பெறுகிறது.
என்றாலும்கூட, நம்முடைய நாளில் தேவதூதர்களில் நம்பிக்கை குறைந்துகொண்டே வருவதில் சந்தேகமேதுமில்லை.
நீங்கள் தேவதூதர்களை நம்புகிறீர்களா?
தேவதூதர்களில் நம்பிக்கையைப்பற்றி நியு கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா சொல்வதாவது: “படிப்படியாக . . . நீண்டகால வளர்ச்சி மற்றும் தூய்மைப்பாட்டின் போது . . . பரிசுத்த வேதாகமத்தில் அடங்கியிருக்கும் பொது கருத்துக்களின் ஊகிப்புகளை விரிவாக்கியதன் மூலம், தேவதூதர்களில் நம்பிக்கை வித்தியாசமான அளவு உறுதிபாட்டோடு சர்ச்சின் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.) “ஊகிப்புகளை விரிவாக்கியதன்” அடிப்படையில் உங்கள் விசுவாசம் இருப்பது உங்களுக்கு தெரிந்தால், தேவதூதர்களில் உங்கள் நம்பிக்கை எவ்வளவு உறுதியாக இருக்கும்?
கத்தோலிக்க சர்ச்சினுள்ளுங்கூட இந்த விஷயத்தின் பேரில் கருத்து வேற்றுமை இருப்பது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. தேவதூதர் எப்பொழுது சிருஷ்டிக்கப்பட்டார்கள் என்பதன் பேரில் கத்தோலிக்க மத என்ஸைக்ளோப்பீடியா (Enciclopdia de la Religion Catolica) பின்வருமாறு சொல்கிறது: “கிரேக்க குருமார்களின் கருத்தில், தேவதூதர்கள் காணக்கூடிய உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பாக சிருஷ்டிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் அதற்கு பிற்பாடு சிருஷ்டிக்கப்பட்டார்கள் என்பது லத்தீன் மத குருமார்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது. என்றபோதிலும், உலகம் சிருஷ்டிக்கப்பட்ட அதே சமயத்தில் அவர்களும் சிருஷ்டிக்கப்பட்டார்கள் என்பதே பெரும்பாலான ஆதரவாளர்களின் கருத்தாக இருக்கிறது.” இப்படிப்பட்ட சந்தேகம் மனிதரின் மனங்களில் குழப்பத்தை உருவாக்கி இன்று அவநம்பிக்கை கொள்ளும் போக்குக்கே வகை செய்வதாக இருக்கிறது.
ஒரு யூத தத்துவ ஞானியான பில்லோ, தேவதூதர்கள் வெறுமென “சர்வலோக சக்திகளின் வெளிக்காட்டல்களே” என்பதாக வாதிட்டார். ஆண்டுகளினூடே இறைமையியல் வல்லுநர்கள், தேவதூதரின் தன்மைகளையும் பண்புகளையும் பற்றிய பொருத்தமற்ற விவாதங்களை வாதிட்டிருக்கிறார்கள். ஒரு ஊசி முனையின் மீது எத்தனை தூதர்களால் நிற்கமுடியும் போன்ற மடத்தனமான கேள்விகளை இவர்கள் வாதிட்டிருக்கிறார்கள். நம்முடைய நவீன சகாப்தத்தில் அநேக ஆட்கள் தேவதூதர்களை நம்பாதிருப்பதைத் தெரிந்துகொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதும் இருக்கிறதா?
மாறுப்பட்ட இந்த எல்லா கருத்துக்களையும் முன்னிட்டுப் பார்க்கையில், தேவதூதர்களைப்பற்றி பைபிள் தானே என்ன சொல்லுகிறது என்பதை ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? இது, தேவதூதர்கள் மெய்யானவர்களா? அப்படியானால், அவர்கள் எப்போதாவது மனித விவகாரங்களில் தலையிட்டிருக்கிறார்களா? மிக முக்கியமாக, தேவதூதர்கள் உங்களுடைய வாழ்க்கையை பாதிக்கமுடியுமா போன்ற கேள்விகளுக்கு திட்டவட்டமான பதில்களைக் கண்டுபிடிக்க இது நமக்கு உதவும். (w87 12⁄15)