கடைசி நாட்கள்—ஓர் அறுவடையின் காலம்
“பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷக்குமாரனுக் கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற் கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்.”—வெளிப்படுத்துதல் 14:14.
இந்த 20-ம் நூற்றாண்டு எப்பேர்ப்பட்ட கொந்தளிப்பும் கூக்குரலும் மிகுந்த காலமாக இருந்துவந்திருக்கிறது! மனிதவர்க்கம் இரண்டு மூர்க்கமான உலக மகா யுத்தங்களைப் பொறுக்க வேண்டியதாயிருந்திருக்கிறது. நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக புரட்சியால் சிதைவுற்று வருகின்றன. மானிட சரித்திரத்தில் இதுவரை இருந்திராதளவுக்குப், பஞ்சம், மிஞ்சிய துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மை, குற்றச்செயல், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுத்தல் மற்றும் பயங்கரமான நோய்கள் ஒவ்வொருவருடைய நலனையும் அச்சுருத்துகின்றன. அதே சமயத்தில் மனிதன் பிரமாண்டமான விஞ்ஞான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறான். அணு சக்தியை பயன்படுத்தக்கூடியவனாகவும் சந்திர மண்டலத்தில் நடக்கக்கூடியவனாகவும் இருந்திருக்கிறான். உண்மையிலேயே, நம்முடைய சந்ததி பலவழிகளில் தனித்தன்மை வாய்ந்ததாயிருக்கிறது. என்றபோதிலும் ஒரு காரியம் நம்முடைய காலத்தின் மிக முக்கியமான சம்பவமாகத் தனித்து நிற்கிறது, அதன் பக்கத்தில் மற்ற எல்லா காரியங்களும் ஒன்றுமில்லாமலாகிவிடுகின்றன.
2. சரித்திரம் படைக்கும் இந்தச் சம்பவம் பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டில் தானியேல் தீர்க்கதரிசியால் முன்னறிவிக்கப்பட்டது. தேவாவியால் ஏவப்பட்ட அவனுடைய அறிக்கைக்குக் கவனமாகச் செவிகொடுத்து கேளுங்கள்: “இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும் [தேசத்தாரும், NW] பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது.”—தானியேல் 7:13, 14.
3. “நீண்ட ஆயுசுள்ளவர்” யெகோவா தேவன். தானியேல் அவரை “வானத்து மேகங்களில்” அதாவது காணக்கூடாத ஆவிக்குரிய பகுதியில் “மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவருக்கு” ராஜரீகப் பொறுப்பு கொடுக்கப்படுவதை பார்க்கிறான். அந்த “ஒருவர்” யார்? பொ.ச.33-ல் யூதரின் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது இயேசு அந்தக் கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கிறிஸ்துவோ அல்லவோ என்று ஆணையிட்டுச் சொல்லும்படி யூதரில் பிரதான ஆசாரியன் அவரைக் கேட்டான். அதற்கு பதிலளிப்பவராக இயேசு தைரியத்தோடு தானியேலின் தீர்க்கதரிசனத்தைத் தனக்குப் பொருத்தி சொன்னதாவது: “மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்கள்.” யெகோவாவால் தெரிந்துகொள்ளப்பட்ட அரசனுக்குப் பணிந்துகொள்வதற்குப் பதிலாக அந்தப் பிரதான ஆசாரியன் அவரை தேவதூஷணம் சொன்னார் என்று குற்றப்படுத்தினான். அதைத் தொடர்ந்து அந்த யூத மதத் தலைவர்கள், இயேசுவுக்கு மரண தீர்ப்பளிக்கும்படியாக பொந்தியு பிலாத்தை வற்புறுத்தினார்கள்.—மத்தேயு 26:63-65; 27:1, 2, 11-26.
4. இயேசுவின் வார்த்தைகளை அர்த்தமற்றதாக்குவதற்கு எடுக்கப்பட்ட இந்த முயற்சி, ராஜ்யம் கொடுக்கப்படுவதற்கான யெகோவாவின் உரிய காலம் வரும் வரை காத்திருப்பதற்காக அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்ட போதும், பரலோகத்திற்கு ஏறிச்சென்றபோதும் தோல்வி கண்டது. (அப்போஸ்தலர் 2:24, 33, 34; சங்கீதம் 110:1, 2) அந்தக் காலம் 1914-ல் வந்தது. அனைத்து அத்தாட்சிகளின்படி, அந்த ஆண்டின் பிற்பகுதியில், இயேசு “நீண்ட ஆயுசுள்ளவரிடம்” இருந்து ராஜரீகக் கிரீடத்தைப் பெற்று அரசாள ஆரம்பித்தார். (மத்தேயு 24:3-42) புதிதாகப் பிறந்த அந்த ராஜ்யம் கடுமையான எதிர்ப்பை எதிர்பட்டது. ஆனால் முதல் நூற்றாண்டு யூத மதத் தலைவர்களும், தேசங்களின் ஒன்று சேர்ந்த சகல அதிகாரமும், சாத்தானும் அவனுடைய பேய்களுங்கூட கடவுளுடைய சித்தம் நிறைவேற்றப்படுவதைத் தடைசெய்ய முடியவில்லை. (சங்கீதம் 2:2, 4-6; வெளிப்படுத்துதல் 12:1-12) 1914-ல் இந்தப் பரம சேனையின் ஒன்று சேர்ந்த குரல் சரியான நேரத்தில் ஒலித்தது: “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும் அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதா காலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்.” (வெளிப்படுத்துதல் 11:15) அந்த நாள் முதல் நாம் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களில்” வாழ்ந்துவருகிறோம்.—2 தீமோத்தேயு 3:1.
ஓர் அறுவடையின் காலம்
5. தானியேல் தீர்க்கதரிசனத்தின்படி, இயேசு தம்முடைய கிரீடத்தைப் பெறும்போது, “சகல ஜனங்களும் ஜாதியாரும் [தேசத்தாரும், NW] பாஷைக்காரரும் அவரையே சேவிப்”பவர்களாயிருப்பார்கள். மனிதவர்க்கம் மொத்தத்தில் அவரை அரசராக ஏற்றுக்கொள்ள மறுக்கிறவர்களாயிருக்கையில் அது எப்படி அவ்விதம் இருக்கக்கூடும்? அப்போஸ்தலனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட ஒரு தரிசனம் பதிலைச் சுட்டிக்காட்டுகிறது. தான் பார்த்ததை யோவான் பின்வருமாறு கூறுகிறான்: “இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற் கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறார்.” (வெளிப்படுத்துதல் 14:14) தானியேலின் தரிசனத்திற்கு ஒப்பாகவே இயேசு இங்கு ஒரு மேகத்தில் காணப்படுகிறார், மற்றும் “மனுஷகுமாரனுக்கொப்பானவராய்” அடையாளங் காட்டப்படுகிறார். அவர் ராஜரீகக் கிரீடத்தை அணிந்திருக்கிறார், ஆனால் அவருடைய கையில் செங்கோல் இல்லை, மாறாக அறுவடை செய்பவரின் ஓர் அரிவாள் இருக்கிறது. ஏன்?
6. யோவான் தொடர்ந்து சொல்லுகிறான்: “அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின் மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.” இயேசு, ஓர் அரசராயிருந்த போதிலும் “தேவாலயத்தில்” இருக்கும் யெகோவா தேவனிடமிருந்து வரும் அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிகிறார். எனவே, கடைசி நாட்களில் ஓர் அறுவடை வேலையில் ஈடுபடும்படியாக யெகோவா இயேசுவிடம் சொல்ல, அவர் அதற்குக் கீழ்ப்படிகிறார். இயேசு “தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.”—வெளிப்படுத்துதல் 14:15, 16; எபிரெயர் 9:24; 1 கொரிந்தியர் 11:3.
7. அறுவடை செய்யப்படும் “பூமியின் பயிர்” என்ன? அது யெகோவாவையும் அவருடைய நியமிக்கப்பட்ட அரசரையும் சேவிப்பதற்காக சாத்தானுடைய இந்த ஒழுங்குமுறையை விட்டு வெளியேறும் மக்களாகும். அந்த அறுவடை, இயேசுவோடுகூட பரலோக ராஜ்யத்தில் ஆட்சி செய்யப்போகும் 1,44,000 பேரில் மீதியானவர்களைக் கூட்டிச் சேர்ப்பதுடன் ஆரம்பமாகிறது. (மத்தேயு 13:37-43) இவர்கள் “தேவனுடைய இஸ்ரவேலர்,” “தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலன்.” இவர்கள் “சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். (கலாத்தியர் 6:16; வெளிப்படுத்துதல் 14:4; 5:9, 10) இந்த விதத்தில் “சகல ஜனங்களும் ஜாதியாரும் [தேசத்தாரும், NW] பாஷைக்காரரு”மானவர்களைச் சேர்ந்த தனிப்பட்டவர்கள் அரசதிகாரம் பெற்ற இயேசுவை சேவிக்க ஆரம்பிக்கிறார்கள்.
8. என்றபோதிலும் அவர்கள் தனிமையில் இல்லை. மற்றொரு தரிசனத்தில், அந்த 1,44,000 பேரின் கடைசியாட்கள் முத்திரிக்கப்படுவதை யோவான் காண்கிறான். (வெளிப்படுத்துதல் 7:1-8) தெளிவாகவே, இவர்களைக் கூட்டிச் சேர்த்தல் செயலளவில் 1935 போல் முடிவடைந்தது. ஆனால் அதற்குப் பின்பு “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும் ஒருவரும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டத்தைக்” காண்பதாக யோவான் அறிக்கை செய்கிறான். (வெளிப்படுத்துதல் 7:9-17) ஆக, “ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரருமான”வர்களிலிருந்து அநேகர் இயேசுவை அரசராக ஏற்று சேவிப்பதற்கு ஆரம்பித்துக்கொண்டிருக்க அறுவடை வேலையும் தொடருகிறது.
9. இந்தப் புதியவர்கள் யெகோவாவினால் நியமிக்கப்பட்ட அரசரின்கீழ் பரதீஸான பூமியில் வாழ்க்கையை மகிழ்வுடன் களிக்க எதிர்ப்பார்த்தவர்களாயிருக்கிறார்கள். (சங்கீதம் 37:11, 29; 72:7-9) இவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவது மற்ற அநேக தீர்க்கதரிசனங்களிலும் முன்னறிவிக்கப்பட்டது. உதாரணமாக, “கடைசி நாட்களில்” ஜாதிகள் யெகோவாவின் ஆலயத்துக்கு ஓடிவருவார்கள் என்று ஏசாயா முன்னறிவித்தான். (ஏசாயா 2:2, 3) ஜாதிகள் அல்லது தேசங்கள் அசைக்கப்படும்போது “சகல ஜாதிகளிலும் விரும்பப்பட்டவைகள் வரும்” என்று ஆகாய் முன்னறிவித்தான். (ஆசாய் 2:7) “பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர்” கடவுளுடைய ஜனத்தாரோடு தங்களைச் சேர்த்துக்கொள்வார்கள் என்று சகரியா பேசினான். (சகரியா 8:23) மேலும் இயேசு தாமே இந்தத் “திரள் கூட்டத்தைப்” பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தார். அவர் சொன்னதாவது: “மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வெறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும் வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.”—மத்தேயு 25:31-33.
10. ஆம், “செம்மறியாடு” யார், “வெள்ளாடு” யார் என்பதைப் பார்க்க மனிதவர்க்கம் முழுவதும் பரிசோதிக்கப்படுகிறது. இந்தப் பரிசோதனை வேலை எப்படி நிறைவேற்றப்படுகிறது? யோவானின் தரிசனத்தில், தேவதூதர்களால் அறிவிக்கப்பட்ட வல்லமை வாய்ந்த செய்திகளுக்கிடையே “பூமியின் பயிர்” அறுவடை செய்யப்படுகிறது. தேவதூதரில் ஒருவன் “நித்திய சுவிசேஷத்தை” அறிவிக்கிறான். மற்றொருவன் “மகா பாபிலோனின்” வீழ்ச்சியை அறிவிக்கிறான். மூன்றாவது தேவதூதன், “மிருகத்தை” அதாவது சாத்தானின் அரசியல் ஒழுங்கு முறையை வணங்குவதற்கு எதிராக எச்சரிக்கிறான். (வெளிப்படுத்துதல் 14:6-10) தேவதூதர்களின் உண்மையான சத்தத்தை ஒருவரும் கேட்டதில்லை என்பது உண்மைதான். ஆனால் அவற்றையொத்த செய்திகள் உண்மையுள்ள மனிதரால் அறிவிக்கப்படுவதை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். (மத்தேயு 24:14; ஏசாயா 48:20; சகரியா 2:7; யாக்கோபு 1:27; 1 யோவான் 2:15-17) ஆக, அந்தச் செய்திகள் தேவதூதரின் வழிநடத்துதலின் கீழ் மனிதரால் எதிரொலிக்கப்படுகிறது என்பது தெளிவாயிருக்கிறது. இந்த தேவதூதரின் செய்திகளுக்கு ஒருவர் எப்படி பிரதிபலிக்கிறார் என்பதன் பேரிலேயே அவர் “செம்மறியாடாக” அல்லது “வெள்ளாடாக” அடையாளப்படுத்தப்படுகிறார். இந்த 20-ம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே இந்த முக்கியமான வேலையில் தேவதூதர்களுடன் ஒத்துழைத்து வந்திருக்கின்றனர்.
11. இந்தச் செய்திகளைப் பரப்புவது இன்று செய்யப்பட்டுவரும் வேறு எந்தக் காரியத்தைக் காட்டிலும் அதிக முக்கியமான ஒரு வேலையாக இருக்கிறது. வேறு எந்த அரசியல் சாதனையோ அல்லது விஞ்ஞான கண்டுபிடிப்போ இந்தளவு முக்கியத்துவமுடையதல்ல. இந்தச் செய்திகள் மனிதவர்க்கத்தின் எல்லாப் பிரச்னைகளுக்கும் பரிகாரத்திற்கான வழியைச் சுட்டிக்காட்டுகின்றன, மற்றும் விசுவாசமுள்ள மனிதரின் நித்திய இரட்சிப்பைக் குறித்தும் சொல்லுகின்றன. அதைவிட மிக முக்கியமானது, அவை யெகோவாவின் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவதுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
ஆண்டு அறிக்கை
12. இந்தக் காரணத்தினிமித்தமே, யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் யெகோவாவுடைய அமைப்பின் செயல்கள் குறித்த ஆண்டு அறிக்கையை வாசிப்பதை எதிர்நோக்கியிருக்கின்றனர். தங்களுடைய வேலையில் தொடர்ந்திருக்கும் ஆசீர்வாதத்திற்கான அத்தாட்சியைக் கண்டு கிளர்ச்சியடைகின்றனர். அவர்களுடைய 1987-ம் ஆண்டு அறிக்கையை நீங்கள் ஆராய்வீர்களானால், தேவ தூதரும் அவர்களுடைய உடன் மனித வேலையாட்களும் கடந்த ஆண்டு அதிக சுறுசுறுப்பாக இருந்திருக்கின்றனர் என்பதைக் காண்பீர்கள்.
13. நற்செய்தி 210 நாடுகளில் கேட்கப்பட்டது—நிச்சயமாகவே ‘ஒவ்வொரு ஜனமும் ஜாதியாரும் பாஷைக்காரரும்’ தற்போது நற்செய்தியால் எட்டப்படுகின்றனர். (மாற்கு 13:10) மேலும் அதை நிறைவேற்ற ஓர் உச்சநிலையாக 33,95,612 பேர் ஒன்று சேர்ந்து வேலை செய்தனர்—கிறிஸ்தவ சரித்திரத்தில் இதுவரை இருந்திராத அதிக எண்ணிக்கையான ஆட்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் சில தனிப்பட்ட நாடுகளில்கூட அதிக அக்கறைக்குரியனவாக இருக்கின்றன. ஐக்கிய மாகாணங்களில் 7,73,219 என்ற ஒரு புதிய உச்சநிலை எட்டப்பட்டது. வேறு இரண்டு நாடுகளுங்கூட, பிரேஸில் மற்றும் மெக்ஸிக்கோ முறையே 2,16,216 மற்றும் 2,22,168 என்ற உச்சநிலையைக் கண்டன. கூடுதலாக ஆறு நாடுகள், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நைஜீரியா மற்றும் பிலிப்பீன்ஸ் ஆகியவை 1,00,000-ற்கும் அதிகமான பிரஸ்தாபிகளில் உச்சநிலைகளை அறிக்கை செய்தன. மறுபட்சத்தில் பேரளவான மக்கள் தொகை கொண்டதும், ஒரு சில ஆயிரம் அல்லது அதற்கும் குறைவான பிரஸ்தாபிகளை உடையதுமான நாடுகளும் உண்டு. இந்த விசுவாசமுள்ள ஆட்களின் வேலையுங்கூட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால், கடினமான சூழ்நிலைகளில் சத்தியத்தின் ஒளியைப் பிரகாசித்திட கடினமாக உழைக்கிறார்கள்.—மத்தேயு 5:14-16.
14. உண்மைதான், கடவுளுடைய மக்கள் வெறுமென அதிகரிப்பில் மட்டும் அக்கறையாயில்லை. என்றபோதிலும் யெகோவாவின் அமைப்பிற்குள் ஓடிவரும் எல்லாரும் யெகோவாவின் கண்களுக்கு “விரும்பப்பட்டவை” என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அநேகர் கிறிஸ்தவமண்டலத்தில் தாங்கள் கண்ட “சகலவித அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டழுகிற”வர்களாயிருந்தனர். (எசேக்கியேல் 9:4) அவர்கள் எல்லாருமே “யெகோவாவின் பர்வதத்துக்கு” ஓடிவருகிறார்கள், ஏனென்றால், அவர்கள் கடவுளுடைய வழிகளில் போதிக்கப்பட விரும்புகின்றனர். (ஏசாயா 2:2, 3) யெகோவாவின் ஆசீர்வாதத்துக்கு எப்பேர்ப்பட்ட பலமான ஓர் அத்தாட்சி—அதாவது கெட்டுப்போன பொருளாசை மிகுந்த இந்த ஒழுங்குமுறையில் ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான புதியவர்கள் யெகோவாவால் “விரும்பப்பட்டவை”யாக தங்களைக் காண்பித்து வருகிறார்கள்!
அவசர காலங்கள்
15. யெகோவாவின் சாட்சிகள் செய்யும் பிரசங்கவேலை மிகவும் அவசரமானது. ஏன்? ஒன்று, பிராந்தியம் மிகவும் பெரியது. “சுவிசேஷம்” அல்லது நற்செய்தி “சகல ஜாதிகளுக்கும் கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்” அறிவிக்கப்பட வேண்டும். (வெளிப்படுத்துதல் 14:6) இயேசுவின் உவமையில் “சகல ஜனங்களும்” “செம்மறியாடுகளாக”வும் “வெள்ளாடுகளாக”வும் பிரிக்கப்படுகிறார்கள். செய்யப்படுவதற்கு அதிக வேலை இருக்கிறது. அப்படியிருக்க, யோவான் பார்த்த “திரள் கூட்டம்,” தேவனை “இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில்” துதித்துக் கொண்டிருப்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:15) இந்தத் தரிசனத்தின் நிறைவேற்றமாக, தங்களுடைய அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரர்களுடன் சேர்ந்து வேலை செய்வதில் இந்தத் “திரள் கூட்டம்” பிரசங்க வேலையில் கடந்த ஆண்டு மொத்தம் 73,90,19,286 மணிநேரங்களை அறிக்கை செய்திருக்கின்றனர்—கிரகித்துக்கொள்வதற்கு பெரியதோர் எண். உலகமுழுவதும் ஒது ஒவ்வொரு பிரஸ்தாபியின் மாத சாரசரியாக 18 மணி நேரத்திற்கும் அதிகத்தைக் குறிக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் மாத சராசரியாக இருந்த 12 மணிநேரத்துடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள். பிரசங்க வேலையின் வேகம் கூடுகிறது என்பதை நீங்கள் காணமுடிகிறது. உலக சராசரியுடன் உங்களுடைய சராசரியை ஒப்பிட்டுப் பார்த்தால் அது எப்படி இருக்கிறது?
16. துணைப் பயனியர் மற்றும் ஒழுங்கான பயனியர்களின் புதிய உச்சநிலையையும் கவனியுங்கள்: 6,50,095. அப்படியென்றால், 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளி ஊழியத்தில் ஈடுபட்டிருந்த பிரஸ்தாபிகளைவிட கடந்த ஆண்டு அதிகமான பயனியர்கள் இருந்திருக்கிறார்கள். அந்தப் பயனியர்களில் நீங்களும் ஒருவராயிருந்தீர்களா? அப்படியென்றால், பவுலின் பின்வரும் ஆலோசனையைத் தனிப்பட்ட விதத்தில் பொருத்துவதில் ஒரு சிறந்த வழியைக் கண்டுபிடித்தீர்கள்: “வார்த்தையைப் பிரசங்கி, அதை அவசர உணர்வோடு செய்.” (2 தீமோத்தேயு 4:2, NW] 1988 ஊழிய ஆண்டில் நீங்கள் ஒரு மாதமாவது துணைப்பயனியர் சேவையில் பங்குகொள்ள ஏன் திட்டமிடக்கூடாது?
கூடுதலான வளர்ச்சிக்கு வாய்ப்புகள்
17. எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது. வீட்டு பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை 30,05,048—ஒவ்வொரு பைபிள் மாணாக்கனும் ‘விரும்பப்பட்டவை’யில் ஒருவனாக ஆகும் வாய்ப்பு இருக்கிறது! மேலும் கடந்த ஏப்ரல் மாதம் கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்புக்கு வந்திருந்தவர்கள் 89,65,221. வருகை தந்தவர்களில் பெரும்பாலோர் யெகோவாவின் சாட்சிகள் அல்லர். சிலர் புதிதாக அக்கறை காண்பித்தவர்கள். அவர்களை வரவேற்கிறோம், அதே சமயத்தில் அவர்கள் தொடர்ந்து நல்ல முன்னேற்றங்களைச் செய்ய உற்சாகப்படுத்துகிறோம். மற்றவர்கள் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்குப் பலமுறை வந்திருக்கக்கூடும். யெகோவாவின் சாட்சிகளோடு இருப்பதை அவர்கள் வெகுவாக விரும்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது, ஆனால் அதைவிட அதிகத்தைச் செய்ய வேண்டிய அவசியத்தை உணராதவர்களாக இருக்கிறார்கள்.
18. பைபிள் சத்தியத்திற்கான அவர்களுடைய அக்கறை போற்றப்பட வேண்டும். ஆனால், இயேசுவின் உவமையில், நித்திய ஜீவனைப் பெற பாத்திரவான்களாயிருந்த “செம்மறியாடுகள்” இயேசுவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரருக்கு உதவியாக இருந்து அவர்களோடு ஒத்துழைப்பவர்களாவர். (மத்தேயு 25:34-40, 46) சகரியா தீர்க்கதரிசனத்தில் பூரண எண்ணாகிய அந்தப் “பத்து புருஷர்” எந்த நிபந்தனையுமின்றி செய்யும் அறிக்கை: “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூட போவாம்.” (சகரியா 8:23) அவர்கள் வெறுமென ஒரு சிநேக மனப்பான்மை உடையவர்களாக இல்லை. இவர்களுடைய தேவனை சேவிப்பதற்காக தங்களை ஒப்புக்கொடுத்து கடவுளுடைய ஜனங்களை “பிடித்துக்கொண்டு” அவர்களோடே போகிறார்கள். நம்முடைய நாளில் யெகோவாவின் அமைப்பில் தன்னை முழுமையாக உட்படுத்திக் கொள்வதும் இதிலடங்குகிறது.
அதிக காலம் எடுக்காது
19. அறுவடை வேலை அவசரத்தன்மை வாய்ந்ததாயிருப்பதற்கு இரண்டாவது காரணமும் இருக்கிறது. விரைவில் அது முடிக்கப்படும். (மத்தேயு 24:32-34) பின்பு என்ன நடக்கிறது? “வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டு வந்தான். அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டு வந்து, கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருக்கிறவனை நோக்கி: “பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான். அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின் மேலே நீட்டி, பூமியின் திராட்சப் பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான்.”—வெளிப்படுத்துதல் 14:17-19.
20. “விரும்பப்பட்டவை” அறுவடை செய்யப்பட்டு அவை கூட்டிச் சேர்க்கப்பட்ட பின்பு இந்தக் கெட்டுப்போன பழைய உலகம் தொடர்ந்து இருப்பதற்கு எந்தக் காரணமும் இருக்காது. “பூமியின் திராட்சப்பழங்கள்” அதாவது இந்தச் சாத்தானிய உலக ஒழுங்குமுறை முழுவதும் அறுப்புண்டு அழிக்கப்படும். அந்தச் சமயத்தில் எதிராளிகளுங்கூட யெகோவாவின் நியமிக்கப்பட்ட அரசரை அங்கீகரிக்க வேண்டிய நிபந்தனை ஏற்படும். யோவான் பின்வருமாறு எழுதினான்: “இதோ! மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்.” (வெளிப்படுத்துதல் 1:7; மத்தேயு 24:30) அப்பொழுது “அவரைக் குத்தினவர்களில்” பிரதானமானவர்களாயிருந்த யூத மதத் தலைவர்களிடம் இயேசு சொன்ன வார்த்தைகள் நிறைவேற்றத்தைக் காணும். (மத்தேயு 26:64) உண்மைதான், இயேசுவை நேரடியாகக் “காண்பதற்கு” அந்த மாய்மால மதத் தலைவர்கள் உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள். (மத்தேயு 23:33) ஆனால் அதே ஆவியை வெளிப்படுத்துகிறவர்களும், யெகோவாவின் நியமிக்கப்பட்ட அரசரை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுமாகிய ஆட்கள் எல்லாரும், ஜாதிகளை அர்மகெதோனில் அழிப்பதற்காக அவர் வரும்போது அவரை அங்கீகரிக்க வேண்டியதாயிருக்கும்.—வெளிப்படுத்துதல் 19:11-16, 19-21.
21. ஆம், தனிப்பட்ட மனிதர் தப்பிப் பிழைப்பது இக்கட்டான நிலையிலிருக்கிறது. தேவதூதர்களுடன் உடன் வேலையாட்களாக இருக்கும் ஒரு பெரிய உத்தரவாதம் நமக்கு இருக்கிறது. ஆனால் அது எப்பேர்ப்பட்ட ஒரு சிலாக்கியம்! அறுவடை வேலை முடிவு பெறுவதற்கு முன்பு யெகோவாவால் “விரும்பப்பட்டவை”யாகிய செம்மறியாடு போன்ற ஆட்களைக் கண்டுபிடிப்பதில் பரலோக தூதர்களுடன் சேர்ந்து கடுமையாக உழைப்போமாக! (w88 1/1)
நீங்கள் விளக்க முடியுமா?
◻ இந்த 20-ம் நூற்றாண்டு வரையில் மிக முக்கியமான சம்பவமாக இருப்பது எது?
◻ “பூமியின் பயிர்” என்ன? அது எப்படி கூட்டிச்சேர்க்கப்படுகிறது?
◻ யெகோவாவின் “செம்மறியாடுகளுக்குரிய“ சில தன்மைகள் யாவை?
◻ அறுவடை வேலையில் யெகோவாவின் ஆசீர்வாதம் இருப்பதை ஆண்டு அறிக்கை எப்படிக் காட்டுகிறது?
◻ பிரசங்க வேலை ஏன் அவசரமானது?
[கேள்விகள்]
1. இந்த நூற்றாண்டை தனித்தன்மை வாய்ந்ததாக்கும் சில காரியங்கள் யாவை?
2. தானியேல் முன்னறிவித்த எந்தச் சம்பவம் நம்முடைய காலத்தில் நடக்க வேண்டியதாயிருந்தது?
3. (எ) “நீண்ட ஆயுசுள்ளவர்” யார்? “மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவருக்கு” அவர் எதைக் கொடுத்தார்? (பி) “மனுஷகுமாரனுடைய சாயலானவர்” யார்? இயேசு அடையாளங் காண்பித்தபோது யூத மதத் தலைவர்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்?
4. ராஜரீக கிரீடத்தை இயேசு எப்பொழுது பெற்றார்? என்ன எதிர்ப்பு இருந்தபோதிலும்?
5. (எ) தானியேல் தீர்க்கதரிசனத்தின்படி புதிதாக முடிசூட்டப்பட்ட அரசரை யார் சேவிப்பார்கள்? (பி) புதிதாக முடிசூட்டப்பட்ட அரசராக இயேசுவை உட்படுத்திய என்ன தரிசனத்தையும் யோவான் கண்டான்?
6. புதிதாக முடிசூட்டப்பட்ட இயேசு என்ன வேலையில் ஈடுபடும்படியாக யெகோவா கட்டளை கொடுத்தார்?
7. (எ) அறுவடை செய்யப்படும் “பூமியின் பயிர்” என்ன? (பி) இந்த “அறுவடையின்” ஆரம்பம் எதுவாயிருந்தது?
8. (எ) அபிஷேகம் பண்ணப்பட்டவர்களின் கடைசியாட்கள் கூட்டிச் சேர்க்கப்படுவது எந்த வருடத்தில் முடிவடைந்தது? (பி) யோவானின் மற்றொரு தரிசனத்தின்படி அறுவடையின் வேலை எவ்வாறு தொடர்ந்தது?
9. இந்தப் புதியவர்கள் யார்? இவர்கள் “கடைசி நாட்களில்” தோன்றுவதைக் குறித்து வேறு எந்தத் தீர்க்கதரிசனங்கள் குறிப்பிடுகின்றன?
10. (எ) “பூமியின் பயிர்” எந்த விதத்தில் அறுவடை செய்யப்படுகிறது? (பி) இந்த வேலையில் யார் மட்டுமே தேவதூதர்களோடு ஒத்துழைக்கின்றனர்?
11. இந்தத் தூதரின் செய்திகளை எங்கும் பரப்புவது எந்தளவுக்கு முக்கியமானது?
12, 13. ஏற்கெனவே ஒரு பெரிய “அறுவடை” அல்லது “பயிர்” கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிடும் சில புள்ளி விவரங்களை ஆண்டு அறிக்கையிலிருந்து எடுத்துக் காட்டுங்கள்?
14. யெகோவாவின் அமைப்புக்குள் எப்படிப்பட்ட மக்கள் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள்?
15. (எ) பிரசங்க வேலை செய்யப்பட வேண்டிய பிராந்தியம் எவ்வளவு பெரியது? (பி) யோவானின் தரிசனத்தின்படி “திரள் கூட்டம்” எவ்வளவு சுறுசுறுப்பாயிருக்கிறது?
16. (எ) ‘வார்த்தையை அவசர உணர்வோடு பிரசங்கிப்பதற்கு’ ஒரு சிறந்த வழி என்ன? (பி) இந்த வேலையில் கடந்த ஆண்டு எத்தனை பேர் பங்குகொண்டார்கள்?
17. எதிர்கால வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்பதை எந்த எண்ணிக்கை காட்டுகிறது?
18. இயேசு மற்றும் சகரியா சொன்ன தீர்க்கதரிசனங்களின்படி, யெகோவாவின் “செம்மறி ஆடாக” கருதப்படுவதற்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
19, 20. (எ) யோவானின் தரிசனத்தின்படி அறுவடை செய்யப்படும் “பூமியின் பயிர்” கூட்டிச் சேர்க்கப்பட்டதற்குப் பின்பு என்ன சம்பவிக்கும்? (பி) அரசராகிய இயேசுவுக்குத் தங்களைக் கீழ்ப்படுத்தாதவர்களுக்கு இது எதைக் குறிக்கும்?
21. கடவுளுடைய ஜனங்கள் ஏன் பரலோக தூதர்களோடு சேர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும்?