நீங்கள் யெகோவாவின் அமைப்போடு ஒரு சமயம் கூட்டுறவு கொண்டிருந்தீர்களா?
அந்த இளம் மனிதன் குற்ற உணர்வால் வெட்கி உள்ளத்தில் சோர்வடைந்தான். அவனுடைய உடைகள் பழுதடைந்து கந்தல் கோலத்தில் ஒரு காலம் நாகரீகமான உடை அணிந்திருந்ததன் அறிகுறிகளைக் கொண்டிருந்தது. இப்பொழுதோ அவன் கடினமான நாட்களை அநுபவிக்கிறான் என்ற காரியத்தைத் தெளிவாகக் காண்பித்தது. தூரத்திலுள்ள தன்னுடைய தாயகம் பற்றிய எண்ணம் திரும்பியபோது, தான் வாழ்ந்து வந்திருக்கும் நெறிபிறழ்ந்த வாழ்க்கையின் பேரில் வெறுப்பு தட்டுகிறது, தன்னுடைய ஆஸ்தியை அவசரப்பட்டு பெற்றுக்கொண்டு அதை விரயம் பண்ணின விதத்தையுங் குறித்து ஆழ்ந்து யோசிக்கிறான். அவனுடைய வெற்று வயிறு வேதனையைக் கூட்டுகிறது, வீட்டு ஏக்கம் ஆரம்பித்துவிட்டது. ஏன், தன்னுடைய தகப்பனின் வீட்டிலுள்ள வேலைக்காரருங்கூட அவனைவிட எவ்வளவோ மேன்மையான நிலையிலிருந்தார்கள்! ஆ, அவர்களுடைய இடத்தில் தன்னை வைத்து பார்ப்பதில் எவ்வளவு ஆர்வம்!
ஆனால் இப்பொழுது அவன் தன்னுடைய தகப்பனிடத்திற்குத் திரும்பினால் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும்? தான் அன்போடு அனலோடு வரவேற்கப்படுவதையோ அல்லது தன்னுடைய தகப்பனின் தயவை தவறாகப் பயன்படுத்திய ஒரு வெட்கங்கெட்ட வாழ்க்கைக்குப் பின்பு வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவதையோ அவன் எதிர்பார்க்க முடியாது. என்றபோதிலும் அவனுடைய மனதையும் இருதயத்தையும் ஓர் உணர்வு ஊடுருவியது: தான் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
இந்த இளம் மனிதன் தன்னுடைய தகப்பனின் உணர்ச்சிகளை சற்றும் புரிந்துகொள்ளவில்லை! தன்னுடைய பழைய வீட்டை நெருங்குகையில் அவன் ஆச்சரியப்படுமளவுக்கு நிலைமை இருந்தது! உண்மையில் “அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ் செய்தான்.”—லூக்கா 15:20.
கெட்ட குமாரனைப் போன்று நீங்கள் உங்கள் வீட்டை விட்டு போய்விட்டீர்களா? உங்களுடைய தகப்பனாகிய யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் விட்டு வழுவி சென்றுவிட்டீர்களா? இப்பொழுது நீங்கள் ‘வீடு திரும்ப’ விரும்புகிறீர்களா?
அநேக சந்தர்ப்பங்களில் யெகோவாவின் அமைப்பைவிட்டு வழுவிச் சென்றவர்கள் அந்தக் கெட்ட குமாரனைப் போலவே இருப்பதில்லை. பலருடைய விஷயத்தில் அது அநேகமாய் புலப்படாத வகையில் மெதுமெதுவாக வழுவிச் செல்லும் ஒன்றாக—ஒரு சிறிய படகு மெதுமெதுவாக கரைக்கு தூரமாகப் போய்க் கொண்டிருப்பது போன்று இருக்கிறது. சிலர் பொருளாதார நெருக்கடியில் அல்லது நோயினால் குடும்பப் பிரச்னைகளில் அமிழ்த்தப்பட்டவர்களாக அல்லது உலகத்தில் “முன்னேறுதல்” காரியத்தில் ஆழமாகச் சென்றுவிடுகிறவர்களாய் ஆவிக்குரிய காரியங்களுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது. இன்னும் மற்றவர்கள் கிறிஸ்தவ சபையுடன் கூட்டுறவு கொண்டிருக்கும் சில தனிப்பட்ட ஆட்களால் இடறுவதற்கு இடங்கொடுத்து விட்டிருக்கிறார்கள் அல்லது ஒரு வேதப்பூர்வமான குறிப்பின் பேரில் யெகோவாவின் அமைப்பு கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாய் கிறிஸ்தவ சபையைவிட்டு விட்டார்கள். இன்னும் சிலர் இந்தத் தற்போதய ஒழுங்குமுறை தாங்கள் எதிர்பார்த்த சமயத்தில் முடிவுக்கு வராததைக் கண்டு சோர்வடைந்து விட்டார்கள்.
யெகோவாவின் அமைப்போடு சுறுசுறுப்பாக கூட்டுறவு கொள்ளாத ஒரு நபராக நீங்கள் இருப்பீர்களானால் இந்தக் காரணங்களில் ஒன்றோ அல்லது அதிகமோ உங்களுடைய சூழ்நிலைக்குப் பொருந்துவதாய் இருக்கும். ஆனால், காரணம் என்னவாயிருந்தாலும், திரும்பி வருவதைக் குறித்து யோசிப்பதற்கான காலம் இதுவல்லவா?—மத்தேயு 18:12-14.
நீங்கள் இடறலடைந்துவிட்டீர்களா?
மனிதவர்க்கம் பரிபூரணத்திலிருந்து எவ்வளவு தூரம் வீழ்ச்சியுற்றிருக்கிறது என்பதைக் கவனிக்கும்போது, தனி மனிதரின் மாறுபட்ட தன்மைகள் சம்பந்தமான மோதல்கள் அவ்வப்போது ஏற்படுவதை ஒருவர் எதிர்பார்க்கலாம். இது சிலர் இடறுவதற்கு ஏதுவாயிருந்திருக்கிறது. இன்னும் மற்றவர்கள், தங்களுடைய மதிப்புக்குரிய ஒரு நபர் கடுமையாகவோ அல்லது கிறிஸ்தவமல்லாத முறையிலோ அல்லது ஒரு தவறை செய்வதிலோ உட்பட்டுவிடும்போது இடறிவிட்டிருக்கிறார்கள்.
இது உங்களுக்கு சம்பவித்திருக்கிறதா? உங்களை இடறச் செய்த காரியம் என்னவாயிருந்தாலும், உங்களை யெகோவா இடறச் செய்யவில்லை என்பது நிச்சயம். (கலாத்தியர் 5:7, 8-ஐ ஒப்பிடவும்) எனவே யாரோ ஒருவர் செய்த காரியத்துக்காக யெகோவாவோடு நம்முடைய உறவை துண்டித்துக் கொள்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? மாறாக, என்ன நடக்கிறது என்பது யெகோவாவுக்குத் தெரியும், அவர் நம்மோடு அன்பாய் நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து அவரை உண்மையுடன் சேவிக்க வேண்டாமா?—கொலோசெயர் 3:23-25.
காலம் கடந்து சென்றிருக்க, ஆரம்பத்தில் தங்களுக்கு இடறலாயிருந்த காரியங்கள் இப்பொழுது அவர்களுக்கு அவ்வளவு முக்கியமானதாய்க் காணப்படுவதில்லை, அல்லது அதன் தடம்கூட மறைந்துவிட்டிருக்கிறது. அல்லது காரியத்தை அமைதலோடு சிந்தித்துப் பார்க்கையில், உண்மையில் தவறு தங்களுடையதே என்ற முடிவுக்கு அவர்கள் வரக்கூடும். இது அநேக சமயங்களில் கொடுக்கப்பட்ட ஆலோசனை அல்லது சிட்சையை ஏற்றுக்கொள்ளாமல் இடறியிருக்கும் ஆட்களின் விஷயத்தில் உண்மையாக இருக்கிறது. அவன் அதை நிதானமாய் சிந்தித்துப் பார்க்கும்போது, அப்படிப்பட்ட சிட்சை உண்மையான அன்பின் அடிப்படையிலும் தன்னுடைய சொந்த நன்மைக்குமே கொடுக்கப்பட்டது என்பதை உணரக்கூடும். (எபிரெயர் 12:5-11) எனவே அப்போஸ்தலனாகிய பவுலின் பின்வரும் புத்திமதியின் பேரில் செயல்படுவது எவ்வளவு பொருத்தமானது! அவன் எழுதியதாவது: “நெகிழ்ந்த கைகளையும், தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி, முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் உங்கள் பாதங்களுக்கு வழிகளை செவ்வைப்படுத்துங்கள்.”—எபிரெயர் 12:12, 13.
நீங்கள் ஒரு போதனையை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?
ஏதோ ஒரு வேதப்பூர்வமான குறிப்பை நீங்கள் வித்தியாசமாகப் புரிந்திருப்பதால் நீங்கள் யெகோவாவின் அமைப்பை விட்டுவிட்டிருக்கக்கூடும். எகிப்திலிருந்து மீட்கப்பட்ட இஸ்ரவேலர் தங்கள் சார்பாக கடவுள் செய்திருந்த “அவருடைய கிரியைகளை சீக்கிரமாய் மறந்து அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல்” இருந்ததுபோல, நீங்கள் சரி என்று கருதிய கருத்துக்கு அமைப்பு உடன்படவில்லையாதலால் அதோடு உங்கள் தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் என்ற அவசர முடிவுக்கு வந்திருக்கக்கூடும். (சங்கீதம் 106:13) ஒருவேளை அதற்குப் பின்பு அந்தக் குறிப்புக்கு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கக்கூடும். கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலின் கீழ் செய்யப்பட்ட கூடுதல் வேத ஆராய்ச்சியினால் அந்தக் குறிப்பு மாற்றப்பட்டிருக்கக்கூடும் அல்லது உறுதிசெய்யப்பட்டிருக்கக்கூடும். எனவே யெகோவாவில் காத்திருந்து அவருடைய அமைப்போடு நெருங்கி தங்கியிருந்திருப்பது மேன்மையானதாய் இருந்திருக்குமல்லவா?
யெகோவா எப்பொழுதுமே ஒரே அமைப்பு மூலமாகத்தான் செயல்பட்டு வந்திருக்கிறார் என்பதை மனதிற்கொள்வது நல்லது. நம்முடைய நாட்களில், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” ஆவிக்குரிய ஆகாரத்தை “ஏற்ற காலத்தில்” கொடுத்து வருகிறது. அந்த அடிமை ‘எஜமான் வரும்போது அப்படிச் செய்வதாகக் காணப்பட வேண்டும்’ என்பதைக் கவனியுங்கள். (மத்தேயு 24:45-47) உண்மையில் எஜமான் ஏற்கனவே வந்துவிட்டார் என்பதை இன்று யார் உணருகிறார்கள்? குறிப்பிடப்பட்ட வேலையை இன்று சுறுசுறுப்பாக செய்துகொண்டிருப்பது யார்? கிறிஸ்தவ சாட்சிகளாலான யெகோவாவின் அமைப்போடு கூட்டுறவு கொண்டிருப்பவர்கள் மட்டுமே!
மற்றவர்கள் இயேசுவை விட்டுச் சென்ற சமயத்தில், அப்போஸ்தலனாகிய பேதுரு பின்வருமாறு சொன்னான்: “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.” இயேசுதான் மேசியா என்பதில் பேதுருவுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. எனவே இயேசு பேசிய சில வார்த்தைகள் சீஷரில் பலருக்கு அதிர்ச்சியாயிருந்தபோது, “நித்திய ஜீவ வசனங்களின்” ஊற்று மூலத்தை விட்டுவிடுவது ஞானமற்ற போக்கு என்பதைப் பேதுரு உணர்ந்தான். காலப்போக்கில் எந்த ஒரு சந்தேகமோ அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட காரியமோ சரியாக விளக்கப்படும். (யோவான் 6:51-68; லூக்கா 24:27, 32-ஐ ஒப்பிடவும்) இன்னும் இது உண்மையாக இருக்கிறது. ஏனென்றால், யெகோவா தம்முடைய ஊழியர்களை சத்திய பாதையில் முன்னேற படிப்படியாக வழிநடத்தி வருகிறார்.—நீதிமொழிகள் 4:18.
இப்பொழுதே திரும்பிவாருங்கள்
“நமது வழிகளை ஆராய்ந்து சோதிப்போம், யெகோவாவிடம் திரும்பிடுவோம்,” என்றான் தீர்க்கரிசியாகிய எரேமியா. (புலம்பல் 3:40, தி.மொ.) என்றபோதிலும், சபையிலுள்ள சிலர் தங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கமாட்டார்கள் என்ற பயத்தால் சிலர் இன்னமும் பின்வாங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் கெட்ட குமாரன் வீடு திரும்பியபோது பிரதிபலிப்பு என்னவாயிருந்தது? “நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்,” என்றார் அவனுடைய தகப்பன். “உன் சகோதரனாகிய இவனோ மரித்தான். திரும்பவும் உயிர்த்தான்; காணாமற் போனான், திரும்பவும் காணப்பட்டான்.” (லூக்கா 15:32) அதுபோன்று அவருடைய சித்தத்தை செய்ய வேண்டும் என்ற உள்ளான விருப்பத்தோடு ‘யெகோவாவிடம் திரும்பிவருவோருக்கு’ அன்பான அனல்கொண்ட வரவேற்பு காத்திருக்கிறது.—லூக்கா 15:7-ஐ ஒப்பிடவும்.
ஆனால் அப்படிப்பட்டவர்கள் ‘வீடு திரும்ப’ தீர்மானிப்பார்களானால் மற்றும் தீர்மானிக்கும்போது கிறிஸ்தவ சபை சாய்ந்து உட்கார்ந்த வண்ணம் காத்துக்கொண்டிருப்பதில்லை. இயேசுவின் உவமையில், தன் மகன் “தூரத்தில் வரும்போதே” அவனை சந்திக்க தகப்பன் ஓடினான். அதுபோல, ஒரு சமயத்தில் தங்களோடு கூட்டுறவு கொண்ட ஆட்களைத் தேடி அவர்கள் யெகோவாவின் அமைப்புக்குள் திரும்ப வருவதற்கு உதவி அளிப்பதை யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய தனிப்பட்ட கடமை என்று கருதுகிறார்கள்.
ஆனால், யெகோவாவின் அமைப்பை விட்டுப் பிரிந்திருந்த நிலையில் ஒருவர் வினைமையான குற்றமாகிய தவறான ஒரு நடத்தையில் ஈடுபட்டவராயிருந்தால் அப்பொழுது என்ன? அல்லது வினைமையான ஒரு தவற்றின் காரணத்தால் ஒருவர் கடவுளுடைய மக்களின் கூட்டுறவிலிருந்து விலக்கப்பட வேண்டியதாயிருந்து, அதுமுதல் அவர் கிறிஸ்தவமல்லாத நடத்தையில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டிருந்தால், அப்பொழுது என்ன? யெகோவாவுடன் காரியங்களை சரிசெய்துகொள்வதற்கு அவருக்கு தயவாயும் அன்பாயும் எப்படி உதவி செய்ய வேண்டும் என்பதை மூப்பர்கள் அறிவார்கள். எனவே திரும்பி வருவதற்கும் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாகவும் வாழ விரும்பும் எவரும் இந்த விருப்பத்தை மூப்பர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். “இப்போதும் வழக்காடுவோம் [காரியங்களை நமக்குள் சரி செய்துகொள்வோம், NW] என்று யெகோவா சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.”—ஏசாயா 1:18.
நம்முடைய பரம பிதா எவ்வளவு தயவும், அனலும் அன்புமுள்ளவர்! அவர் எவ்வளவு பொறுமையுள்ளவராயும் நம் ஒவ்வொருவரிலும் தனிப்பட்ட விதத்தில் அக்கறையுள்ளவராயும் இருக்கிறார்! நிச்சயமாகவே நாம் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையுடன் அழிந்துவிட வேண்டும் என்று அவர் விரும்புவதில்லை. (2 பேதுரு 3:9) தம்முடைய பூர்வீக மக்களை, “என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன்” என்று யெகோவாதான் துரிதப்படுத்தினார். அதே அழைப்பு இன்றும் பொருந்துகிறது.—மல்கியா 3:7.
காலம் கடந்துபோகிறது, எனவே தாமதிக்க வேண்டாம். ‘கடவுளுடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்குரிய மிகுந்த சமாதானத்தை’ யெகோவாவின் மக்களுடன் சேர்ந்து அனுபவியுங்கள். “அவர்களுக்கு இடறலில்லை,” என்றான் சங்கீதக்காரன். (சங்கீதம் 119:165) உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில், நீங்கள் யெகோவாவின் பிரமாணத்தை நேசிக்கிறீர்களா? நீங்கள் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஒரு ஊழியராக இருப்பீர்களானால், இந்தக் காரணத்தினிமித்தமே நீங்கள் அவருக்கு உங்களை ஒப்புக்கொடுத்தீர்கள். யெகோவாவுடன் உங்கள் உறவை மீண்டும் புதுப்பித்துக்கொள்வதைப் பார்க்கிலும் வேறு எந்த காரியமும்—ஆம், எந்த ஒரு காரியமும்—முக்கியமானதாக இருக்க முடியாது. யெகோவாவுக்குப் புறங்காட்டாதீர்கள். இந்தக் காரியத்தைக் கவனமாகவும் ஜெபத்தோடும் சிந்தித்துப் பாருங்கள். யெகோவாவின் மக்களுடைய ஐக்கியத்தையும் அனலான அன்பையும் தவறவிடுகிறீர்களென்றால், யெகோவாவின் அமைப்புக்குத் திரும்பிவர காலம் பிந்திவிடவில்லை. அதைத் தாமதிக்காமல் செய்யுங்கள். (w88 1⁄15)