நேர்மையாயிருத்தல்—நம் நாளுக்கு பொருந்தாத ஒன்றா?
நேர்மையை ஒரு வாழ்க்கை முறையாக கடைப்பிடிப்பது இந்த நவீன உலகில் பொருந்தாத ஒன்றாக, இனிமேலும் நடைமுறையற்றதாக அல்லது எந்த ஓர் உண்மையான மதிப்புமில்லாத ஒன்றாக கைவிடப்பட்டிருக்கிறதா? அவ்வாறு தோன்றக்கூடும். நேர்மையின்மை எவ்வளவு பரவலாக இருக்கிறது? அது உருபடுத்திருக்கும் முறைகள், அது ஊடுருவிப் பாய்ந்திருக்கும் சமுதாய படிநிலைகள் மற்றும் எந்தளவுக்கு அது கடுஞ்சுமையாக ஆகிவிட்டிருக்கிறது என்பதை காண ஒரு சில எடுத்துக் காட்டுகளை கவனியுங்கள்.
சமீப ஆண்டுகளில், மேற்கு ஜெர்மனியில் வரி-ஏய்ப்புகளின் மொத்த தொகை ஓராண்டிற்கு 150 கோடி ரூபாய் என்றும், ஸ்வீடனில் மொத்த தொகை ஒரு ஆளுக்கு 10,800 ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் இவற்றில் ஏதாவதொரு நாட்டில் வாழ்கிறீர்களென்றால் வரியாக நீங்கள் செலுத்தும் தொகையை நேர்மையின்மை பாதிக்கிறது. வருமான வரி கட்டுவதில் ஏய்ப்புகள் ஐக்கிய மாகாணங்களில் மிகப் பரவலாக இருக்கிறது. இதனால் வருடந்தோறும் 1,500 கோடி ரூபாய் வருமானத்தை அரசாங்கம் இழக்கிறது. இத்தனையநேக பணமும் கூட்டாட்சி வரவு செலவு திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு என்னே ஒரு உதவியாயிருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! கூடுதலாக, சட்ட விரோதமான வியாபார நடவடிக்கைகள், ஐ.மா. அரசாங்கத்தை மற்றொரு 150 கோடி ரூபாய் ஏய்ப்பு செய்கிறது. கடைத்திருட்டுகள், சிறுசிறு களவுகள், ஐக்கிய மாகாண கடைகளில் ஓராண்டிற்கு 60 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி, பொருட்களின் விலையை அதிகரிக்கிறது. நீண்ட தூரத்திற்கான தொலைபேசி கட்டணத்தை மற்றொருவரின் தொலைபேசி எண்ணில் நேர்மையின்றி சுமத்துவதால் அமெரிக்கர்களுக்கு வருடந்தோறும் ஆகும் செலவு 150 லட்ச ரூபாய் ஆகும்.
கானடாவில் வேலை “நேரத்தைக் கொள்ளையடிப்பவர்கள்,” அதாவது நேரத்தை வீணாக்கும் ஆட்கள் தங்கள் எஜமானருக்கு ஓராண்டிற்கு 187 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்துகின்றனர். இவை “தொழிலாளர் மோசடி, திருட்டு கணக்குகள், காப்புறுதி சம்பந்தப்பட்ட ஏமாற்றல்கள், பிறர் உடைமைகளை நஷ்டப்படுத்துதல், தீ வைப்புகள், மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு எதிரான மற்ற நேரடியான குற்றச் செயல்கள் ஆகிய இவற்றின் மூலம் ஏற்படும் மொத்த இழப்பைக் காட்டிலும் வேலையில் நேரத்தை வீணாக்குபவர்கள் இழைக்கும் நஷ்டம் மூன்று மடங்கு அதிகம்.” 1986-ல் செய்யப்பட்ட ஓர் ஆராய்ச்சியின்படி ஐக்கிய மாகாணங்களில் நேரத்தை திருடுவதனால் ஏற்படும் சுமை வருடத்துக்கு 2,550 கோடி ரூபாய் ஆகும்.
வியாபாரத்தில் வெற்றிகரமான கோடீஸ்வர நிறுவனங்களுங்கூட தங்களுடைய நாட்டு அரசாங்கங்களிடமிருந்தே பேராசையுடன் திருடுகின்றன. எப்படி? இயந்தர கருவிகளையும் பாகங்களையும் மட்டுக்கு மீறிய விலைகளில் விற்பனை செய்வதன் மூலமாகும். ரூ.1.80 விலையுள்ள ஆலன் திருக்கு குறடுகளை 1,44,090 ரூபாய்க்கும்; ரூ.10 விலையுள்ள ட்ரான்சிஸ்டர்களை 12,210 ரூபாய்க்கும்; ரூ.2.55 விலையுள்ள இருக்கையின் கால்களுக்கு போடப்படும் பிளாஸ்டிக் உறைகளை 16,770 ரூபாய்க்கும் விற்பனை செய்திருக்கிறது. அரசாங்கத்திற்கு ஆகும் “பல்லாயிரங்கோடி ரூபாய் நஷ்டத்தைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று ஒரு ஐக்கிய மாகாண சட்ட மாமன்ற மேலவை உறுப்பினர் குறிப்பிட்டார்.
மேற் கூறப்பட்ட விவரங்களோடுகூட, எல்லா துறையிலுமிருக்கும் பிரபலமான ஆட்களுடைய கெட்ட முன்மாதிரிகள் நேர்மையினிடமாக மனத்தளர்ச்சியை உண்டாக்குகிறது. நீங்கள் கவனித்திருக்கிறபடி சில நாடுகளிலுள்ள தலைவர்கள் பொய் சொல்லுகின்றனர், சத்தியத்தை புரட்டுகின்றனர், காரியங்களை மூடி மறைக்கின்றனர், தங்கள் கடமையை தட்டிக் கழிக்கின்றனர்—ஆம், அரசியல் போட்டியாளரையும் கொலை செய்துவிட்டு, அதை வேறொருவர் செய்ததாகத் தோன்றும்படி செய்துவிடுகின்றனர்.
ஆகவே நேர்மையாயிருத்தல் நம் காலத்துக்கு ஒத்துவராத ஒன்றா? அது இனிமேலும் மிகச்சிறந்த கொள்கையாக இல்லையா? நாம் நேர்மையாக இருக்க வேண்டுமென்று கடவுளுடைய வார்த்தை சொல்வதன் காரணத்தால் மட்டுமே நேர்மை மிகச் சிறந்த ஒன்றாக இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் விடைகளை விரும்பினால் பின்வரும் கட்டுரை உங்களுக்கு மிக முக்கியமானது. (w88 2⁄15)