யெகோவாவில் நம்பிக்கையை வளருங்கள்—யெகோவாவுடைய வார்த்தையை ஊக்கமாய்ப் படிப்பதன் மூலம்
“நான் இன்று உங்களுக்கு எச்சரிப்புண்டாகப் பேசும் எல்லா வார்த்தைகளுக்கும் உங்கள் இருதயங்களைப் பொருத்துங்கள் . . . ஏனென்றால் இது உங்களுக்கு மதிப்பில்லா வார்த்தை அல்ல, ஆனால் இது உங்களுக்கு ஜீவனைக் குறிக்கிறது.”—உபாகமம் 32:46, 47, NW.
வனாந்தரத்தில் அவர்களுடைய நீண்ட பயணத்தின் முடிவு நெருங்கியது. வளைந்து செல்லும் யோர்தான் நதிதான் அவர்களை வெகு காலமாகக் காத்திருந்த வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து பிரித்தது. என்றபோதிலும் இஸ்ரவேலர் அந்தத் தேசத்திற்குள் பிரவேசிக்கும் எதிர்பார்ப்பு அவர்களுடைய தலைவனாயிருந்த மோசேக்கு ஆழ்ந்த எண்ணங்களை ஏற்படுத்தியது. அந்தத் தேசம் யெகோவாவில் நம்பிக்கை கொண்டிராததால் எப்படி இதற்கு முன்னால் ஒரு சமயம் இடறியது, இதனால் கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பது மறுக்கப்பட்டது என்பதை அவன் ஞாபகப்படுத்தினான். —எண்ணாகமம் 13:25–14:30.
2 இப்படியாக மோசே தேசத்தை மோவாப் சமவெளியில் ஒன்றுகூட்டினான். தேசத்தின் சரித்திரத்தை விமர்சனம் செய்து கடவுளுடைய பிரமாணத்தை மீண்டும் வலியுறுத்திய பின்பு மோசேயின் தலைசிறந்த படைப்பு என்று சொல்லப்படும் பகுதியை அவன் அளித்தான். மிகச் சிறந்த கவிதை நடையில் அவன் யெகோவாவை நம்பி அவருக்குக் கீழ்ப்படியும்படி இஸ்ரவேலரைத் துரிதப்படுத்தினான். “அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.” முடிவாக மோசே பின்வரும் புத்திமதியைக் கொடுக்கிறான்: “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்கு எச்சரிப்புண்டாகப் பேசும் எல்லா வார்த்தைகளுக்கும் உங்கள் இருதயங்களைப் பொருத்திடுங்கள். . . . ஏனென்றால் இது உங்களுக்கு மதிப்பில்லா வார்த்தை அல்ல, ஆனால் இது உங்களுக்கு ஜீவனைக் குறிக்கிறது.”—உபாகமம் 32:4, 46, 47, NW.
கடவுளுடைய வார்த்தைக்குத் ‘தங்களுடைய இருதயங்களைப் பொருத்துதல்’
3 தன்னுடைய பாடலுக்கு மட்டும் ‘அவர்களுடைய இருதயங்களைப் அமையப்பண்ணவேண்டும்’ என்று மோசே இஸ்ரவேலரைத் துரிதப்படுத்தவில்லை, ஆனால் அனைத்து பரிசுத்த வார்த்தைகளுக்குமே அப்படிச் செய்ய சொன்னான். அவர்கள் கடவுளுடைய பிரமாணத்திற்கு “நன்றாய்ச் செவிகொடுக்க வேண்டியதாயிருந்தது” (Knox), “கீழ்ப்படிய நிச்சயமாயிருக்கவேண்டியிருந்தது (Today’s English version), அல்லது “தியானம் செய்யவேண்டியிருந்தது” (The Living Bible). அவர்கள் அதை முழுவதுமாக அறிந்து அதில் பழகியவர்களாக இருந்தால் மட்டுமே, ‘இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் அவர்களுடைய பிள்ளைகள் செய்யும்படி கட்டளையிட’ முடியும். உபாகமம் 6:6–8-ல் மோசே எழுதினான்: “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து . . . அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது.”
4 இந்த வார்த்தைகள் பிற்காலத்தில் எப்படி “யூதர்களால் நேர்பொருள் கொள்ளப்பட்டது, அவற்றில் அடங்கியிருந்த வழிநடத்துதல்கள் அர்த்தமற்ற மூட பழக்கத்தின் உபயோகங்களாயின,” என்று பைபிள் குறிப்புரையாளர் W. H. தாவே கூறுகிறார். “சில வசனங்கள் . . . தோல் பட்டைகளில் எழுதப்பட்டு ஜெபங்களின்போது கைகளிலும் நெற்றியிலும் அணியப்பட்டது.” வேதவசனமடங்கிய அகன்ற காப்பு நாடாக்கள் இயேசுவின் காலத்தில் அணியப்பட்டது, இன்றுங்கூட சில யூத மத பிரிவினரால் பயன்படுத்தப்பட்டுவருகிறது. (மத்தேயு 23:5) ஆனால் தாவே மேலும் குறிப்பிடுவதாவது: “ஆண்கள் தங்கள் பேதமையில் நியாயப்பிரமாணத்திலுள்ள சட்டங்களைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதைத் தங்கள் வாழ்க்கையில் காண்பிப்பதற்குப் பதிலாக அவற்றின் வார்த்தைகளின் ஒரு நகலைத் தங்களுடைய சரீரத்திலேயே தாங்கிச்செல்வதில் திருப்தியடைந்தார்கள்.”
5 இல்லை, கடவுளுடைய பிரமாணம் அவர்களுடைய சொல்லர்த்தமான கைகளில் அல்லது நெற்றிகளில் இருப்பது அல்ல, ஆனால் ‘அவர்களுடைய இருதயங்களில்’ இருக்க வேண்டும். அதைக் குறித்த அறிவைப் பெறுவது மட்டுமல்லாமல் அதற்கான ஆழ்ந்த போற்றுதல் உடையவர்களாய் இருப்பதன் மூலம் பிரமாணம் எல்லாச் சமயத்திலும் பார்வையில் இருக்கும், அதாவது தங்களுடைய கண்களுக்கு முன் ஒரு பலகையிலே எழுதி வைக்கப்பட்டிருப்பது போல் அல்லது தங்களுடைய கைகளில் கட்டப்பட்டிருப்பது போல் அவர்களுடைய கண்களுக்கு முன்னால் இருக்கும்.
கடவுளுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள்
6 இஸ்ரவேலர் நியாயப்பிரமாணத்தின் சுமார் 600 சட்டங்களை எப்படி கற்றுக்கொள்ள முடியும்? முதன்முதலில் அதன் நகல்கள் அதிகமாயில்லை என்பது உண்மைதான். இஸ்ரவேலின் எதிர்கால அரசன் “நியாயப்பிரமாண நூலைப் பார்த்துத் தனக்காக ஒரு பிரதியை எழுதித் தன்னிடம் வைத்துக்கொண்டு தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை ஆராய்ந்து வாசிக்க வேண்டும். அப்பொழுது இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும் . . . கைக்கொண்டு இவைகளின்படி செய்வதற்குத் தன் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளுவான்.” (உபாகமம் 17:18, 19, தி.மொ.) கடவுள் கூடாரப் பண்டிகைகளின் ஒவ்வொரு ஏழாவது ஆண்டும் நியாயப்பிரமாணம் வாசிக்கப்படுவதற்கான ஓர் ஏற்பாட்டை செய்தார். (உபாகமம் 31:10–13) அப்படிப்பட்ட சமயங்கள் உற்சாகப்படுத்துவதாயிருந்தாலும், ஆழ்ந்த அறிவைப் புகட்டுவதற்கு அது போதாததாயிருந்தது.
7 லேவி கோத்திரத்தார் ‘யாக்கோபுக்கு அவருடைய நியாயங்களையும் இஸ்ரவேலுக்கு அவருடைய பிரமாணத்தையும் போதிக்க’ யெகோவா ஏற்பாடு செய்திருந்தார். (உபாகமம் 33:8, 10; மல்கியா 2:7-ஐ ஒப்பிடவும்.) சில முக்கியமான சமயங்களில் லேவியர் முழு தேசத்திற்குமான விசேஷ போதனா ஏற்பாடுகளை நிறைவேற்றினர். இப்படியாக முழு தேசத்துக்கும் அவர்கள் சேவை செய்தனர். (2 நாளாகமம் 17:7–9; நெகேமியா 8:7–9) சில சமயங்களில் மக்களுக்குக் கடவுளுடைய வார்த்தையின் சில பகுதிகள் கிடைப்பதாயுமிருந்ததாகத் தெரிகிறது.a எனவே சங்கீதக்காரன் பின்வருமாறு எழுதக்கூடியவனாயிருந்தான்: “யெகோவாவின் பிரமாணத்தில் பிரியமாகி இரவும் பகலும் அவர் பிரமாணத்தைத் தியானஞ்செய்கிற மனிதன் பாக்கியவான்.” (சங்கீதம் 1:1, 2, தி.மொ.) ‘கடவுளுடைய வார்த்தைக்குத் தங்களுடைய இருதயத்தைப் பொருத்துவதற்காக’ மோசே கொடுத்த புத்திமதி பைபிளை ஊக்கமாகப் படிப்பதற்கான ஒரு கட்டளைக்குச் சமமாக இருந்தது.
இன்று கடவுளுடைய வார்த்தைக்கு ‘நம்முடைய இருதயங்களைப் பொருத்துதல்’
8 இஸ்ரவேல் மோசேயின் புத்திமதிக்குச் செவிகொடுக்கத் தவறியது. இஸ்ரவேல் கடைசியாக அரசர் ஆட்சியை ஸ்தாபித்தபோது, அதன் அரசர்களில் பெரும்பான்மையினர் ‘நியாயப்பிரமாண நூலைப் பார்த்துத் தங்களுக்காக ஒரு பிரதியை எழுதித் தங்களிடம் வைத்துக்கொண்டு தங்கள் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை ஆராய்ந்து வாசிக்கத்’ தவறினர். பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டுக்குள், யோசியா அரசனின் நாட்களில் “நியாயப்பிரமாண புஸ்தகம்” எல்லாமே காணாமற்போனது. (2 இராஜாக்கள் 22:8–13) தேசத் தலைவர்களின் கெட்ட முன்மாதிரி தேசம் விசுவாச துரோகத்தில் ஆழ்ந்துவிடுவதைத் துரிதப்படுத்தியது. மோசே எச்சரித்தபடியே தேசீய அளவான பேரழிவு பொ.ச.மு. 607-ல் ஏற்பட்டது.—உபாகமம் 28:15–37; 32:23–35.
9 பூர்வீக இஸ்ரவேலரைப்போலவே, இன்றைய கிறிஸ்தவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட ஒரு தேசத்தின் வாயிலில்—கடவுளுடைய நீதியான புதிய உலகத்தின் வாயிலில்—இருக்கின்றனர். (2 பேதுரு 3:13) கிளர்ச்சியூட்டும் சம்பவங்கள் அடிவானில் குவிகின்றன: “சமாதானம் சவுக்கியம்” என்ற அறிக்கை, “மகா பாபிலோனின்” வீழ்ச்சி, ‘மாகோகின் கோகுவின்’ தாக்குதல். இந்தச் சம்பவங்கள் யெகோவாவில் நமக்கு இருக்கும் நம்பிக்கையைப் பரீட்சைக்குட்படுத்தும். எனவே நாம் இப்பொழுதே ‘கடவுளுடைய வார்த்தைக்கு நம்முடைய இருதயத்தைப் பொருத்துதல்’ மிகவும் அவசரமானது!—1 தெசலோனிக்கேயர் 5:3; வெளிப்படுத்துதல், அதிகாரம் 18; எசேக்கியேல், அதிகாரம் 38.
10 என்றபோதிலும் அப்படிச் செய்வது இந்தக் கையாள முடியாத இக்கட்டான காலங்களில் உண்மையிலேயே ஒரு சவாலாக இருக்கக்கூடும். (2 தீமோத்தேயு 3:1) உலகப்பிரகாரமான வேலை, பிள்ளைகளை வளர்த்தல், பள்ளி மற்றும் சபை பொறுப்புகள் ஆகிய எல்லாமே நம்முடைய நேரத்தை அதிகமாகக் கேட்பதாயிருக்கிறது. இதன் விளைவாக, என்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்று விவாதித்து நம்முடைய பைபிள் படிப்பில் அக்கறை இழந்து, சாக்குப்போக்குச் சொல்ல ஆரம்பித்துவிடுவோம். என்றாலும் பைபிள் கிறிஸ்தவர்களுக்குப் பின்வரும் புத்திமதியைக் கொடுக்கிறது: “இவைகளையே சிந்தித்துக்கொண்டு இவைகளிலே நிலைத்திரு.” (1 தீமோத்தேயு 4:15, 16) அப்படிச் செய்வதற்குச் சில பலமான காரணங்களைச் சிந்திப்போமாக.
கடவுளோடு நம்முடைய உறவைப் பலப்படுத்துதல்
11 யோபு “தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.” ஆனால் யெகோவா ஒரு பெருங்காற்றிலிருந்து தம்மை வெளிப்படுத்திய பின்பு, யோபு பின்வருமாறு சொல்லக் கூடியவனாயிருந்தான்: “என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.” (யோபு 1:1; 42:5) இன்று நாம் கடவுளைக் “காண” முடியுமா, அதாவது, மேலாகத் தெரிந்திருப்பதையும் கடந்து சென்று, அவருடைய தன்மையின் பல அம்சங்களை அதிக நெருக்கமாக அறிய முடியுமா? நிச்சயமாக அறிய முடியும்! பைபிளின் பக்கங்களில் யோபு அறிந்திருந்ததைவிட அதிகமாக யெகோவா தம்மைக் குறித்து வெளிப்படுத்தியிருக்கிறார்.
12 கடவுளுடைய அன்பின் ஆழத்தை நாம் தெளிவாகக் காண்கிறோம், அவர் “தம்முடைய ஒரே பேறான குமாரனை . . . தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்பதை அறிந்திருக்கிறோம். (யோவான் 3:16) பைபிள் தீர்க்கதரிசனங்கள் மூலம் நாம் கடவுளுடைய நடவடிக்கைகள் பேரில் குறிப்புகளைக் கொண்டிருக்கிறோம்—ஆயிர வருட ஆட்சியின் முடிவு வரையான குறிப்புகளைக் கொண்டிருக்கிறோம்! (வெளிப்படுத்துதல், அதிகாரங்கள் 18–22) கிறிஸ்தவ சபையுடன் கடவுள் கொண்டிருந்த தொடர்பு பற்றிய பதிவையும் நாம் கொண்டிருக்கிறோம்: அவர் புறஜாதியாரைக் கொண்டுவருதல், தம்முடைய மக்களைப் போஷிப்பதற்கு “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரரை” அவர் நியமித்தல், பூமியின் மேல் பரதீஸில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுடன் “ஒரு திரளான கூட்டத்”தை அவர் அழைத்தல். (மத்தேயு 24:45; வெளிப்படுத்துதல் 7:9, 14–17; எபேசியர் 3:3–6) கடவுளுடைய ஆழ்ந்த காரியங்களை உற்றுப் பார்த்ததற்குப் பின்பும் நம்முடைய சார்பில் அவர் செய்திருக்கும் மகத்தான செயல்களை தியானித்தப் பின்பும் நாம் பின்வருமாறு வியந்து சொல்லாமல் இருக்க முடியாது: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!”—ரோமர் 11:33.
13 சங்கீதக்காரன் சொன்னான்: “என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன்.” வேதவசனங்கள் சார்ந்த தகவல்களை நாம் தினந்தோறும் வாசிப்பதன் மூலம் அப்படிச் செய்யக்கூடும்; அது யெகோவாவுடன் நமக்கு இருக்கும் பிணைப்பைப் பலப்படுத்த அதிகத்தைச் செய்யக்கூடும். ஊக்கமான படிப்பு கடவுளுடைய சட்டதிட்டங்களைக் கைக்கொள்ள ‘நம்முடைய நடையை ஸ்திரப்படுத்தவும்’ உதவுகிறது.—சங்கீதம் 119:5, 10.
நம்முடைய விசுவாசத்தைத் தற்காத்துக்கொள்ள படிப்பு உதவுகிறது
14 “சாட்சிகளாகிய நீங்கள் என் வீட்டிற்கு வர வேண்டாம்,” என்று அவருடைய வீட்டிற்குச் சென்ற இரண்டு சாட்சிகளிடம் ஒரு கானா மனிதர் சென்னார். “இரத்தம் ஏற்றிக்கொள்ளாததற்கும் தேசீய கொடியை வணங்காததற்கும்” அவர் சாட்சிகளைத் தாழ்வாகப் பேசினார். இவை வெளி ஊழியத்தில் பொதுவாக எதிர்ப்படும் எதிர்ப்புகளாகும். “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் . . . உத்தரவுசொல்ல” முடியாவிட்டால் அது என்னே ஒரு பழியாக—அவமானமாக—இருக்கும்! (1 பேதுரு 3:15) நல்லவேளையாக, இரத்தத்தைக் குறித்த சரியான நோக்குநிலையையும், ஒரு கிறிஸ்தவன் எப்படி தேசீய சின்னங்களை மதிக்கிறதிலும் விக்கிரகாராதனையைத் தவிர்ப்பதிலும் சமநிலையைக் காத்துக்கொள்கிறான் என்பதை விளக்குவதிலும் இந்தச் சாட்சிகளால் பைபிளைத் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்த முடிந்தது. பலன் என்ன? அவர்களுடைய நேரடியான பதில்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தது. இன்று அவரும் அவருடைய மனைவியும் முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாக இருக்கிறார்கள்.
15 பவுல் பின்வருமாறு துரிதப்படுத்துகிறான்: “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.” தனிப்பட்ட படிப்பு நம்மை நித்திய ஜீவ பாதையில் நிலைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், மற்றவர்களும் அப்படிச் செய்ய நாம் முழுவதும் “தேறினவனாகவும் . . . தகுதியுள்ளவனாகவும்” இருப்பதற்குங்கூட உதவும்.—2 தீமோத்தேயு 2:15; 3:17.
சாத்தானின் கண்ணிக்கு இடங்கொடாதிருத்தல்
16 இன்று விளம்பரங்கள் நம்முடைய ‘மாம்சத்தின் இச்சைக்கும், கண்களின் இச்சைக்கும், ஜீவனத்தின் பெருமைக்கும்” கவர்ச்சித்து நம்மைத் தாக்குகிறது. (1 யோவான் 2:16) அநேகமாக இந்த விளம்பர ஏதுவின் மூலமாகப் பாலுறவு சம்பந்தப்பட்ட ஒழுக்கக்கேடுகள் மேன்மைப்படுத்தப்பட்டு உடன் வேலை செய்பவர்களாலும் பள்ளித் தோழர்களாலும் சுறுசுறுப்பாக வளர்க்கப்படுகிறது. உணர்ச்சிகளைக் கிளறிவிடக்கூடிய விசுவாசதுரோக பிரசுரங்கள் நம்முடைய வீடுகளுக்குக் கேட்கப்படாமலேயே அனுப்பப்படலாம். காரியங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத் தூண்டுதலால் சில சகோதரர்கள் அப்படிப்பட்ட அசுத்தமான புத்தகங்களை வாசித்திருக்கின்றனர்—அவர்களுடைய விசுவாசம் சேதமடைந்திருக்கிறது. அதே சமயத்தில் “கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைச் செய்கிற” தன்னல, மாம்சத்துக்குரிய “ஆவி” இருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டு எதிர்மறையான, குற்றங்கண்டுபிடிக்கிற ஆவியை வளர்த்துவிடுவது எவ்வளவு எளிது!—எபேசியர் 2:2.
17 உண்மைதான், சாத்தானுடைய கண்ணியில் சிக்கிக்கொள்ள எவரும் விரும்பமாட்டார்கள். மாறாக, தனிப்பட்ட படிப்பை அசட்டை செய்துவிடுவதால், தன் பிணைப்பிடத்திலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஒரு படகைப் போன்று அவர்கள் மெதுவாக “விட்டு விலகி” சாத்தானுடைய தாக்குதலின் முக்கிய குறியிலக்காகி விடுகின்றனர். (எபிரெயர் 2:1) உதாரணமாக, ஓர் இளம் சகோதரன் பள்ளியில் ஓர் இளம் பெண்ணுடன் பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டான். “இதற்கு முக்கிய காரணம், நான் ஆவிக்குரிய பிரகாரமாய்ப் பட்டினியில் இருந்தது என்பதைக் கண்டுபிடித்தேன்,” என்று அவன் நினைவுபடுத்திச் சொல்கிறான். “நான் தனிப்பட்ட படிப்பைச் செய்யவில்லை. அதனால்தான் நான் சோதனையை மேற்கொள்ளமுடியவில்லை.” என்றபோதிலும், தனிப்பட்ட படிப்புக்கான ஒரு திட்டம் அந்த சகோதரர் ஆவிக்குரிய பிரகாரமாய்ப் பலப்படுவதற்கு உதவியது.
18 கடவுளுடைய மக்களில் எவ்வளவுக்கதிகமான ஆட்களை அழிக்க முடியுமோ அவ்வளவு பேரை அழிப்பதற்குச் சாத்தான் உறுதிபூண்டிருக்கிறான். கடவுளுடைய வார்த்தையிலிருந்தும் அவருடைய உண்மையுள்ள உக்கிராணக்காரனிடமிருந்தும் வரும் நல்ல காரியங்களால் நம்முடைய மனதைத் தொடர்ந்து போஷிப்பதன் மூலம், நாம் கண்ணியில் அகப்பட்டுக்கொள்வதைத் தவிர்க்கலாம். (பிலிப்பியர் 4:8) பொருளாசை, பாலுறவு சம்பந்தப்பட்ட ஒழுக்கக்கேடு, விசவாசதுரோக எண்ணம், எதிர்மறையான ஆவி ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கான நினைப்பூட்டுதல்கள் பைபிளிலும் காவற்கோபுர சங்கத்தின் பிரசுரங்களிலும் ஏராளமாக நிறைந்திருக்கிறது. எப்பொழுதும் செலுத்தும் கவனத்தைவிட கூடுதல் கவனம் செலுத்துவோமானால், நாம் ஒருபோதும் கொஞ்சம் கொஞ்சமாக வழுவிச்செல்ல மாட்டோம்.
நமக்கு உதவ யெகோவாவின் அமைப்பினிடமிருந்து வரும் ஏற்பாடுகள்
19 படிப்பு கடினமான உழைப்பு. எனவே யெகோவாவின் அமைப்பு நமக்கு அளிக்கும் ஏராளமான உதவிக்காக நான் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். அண்மை ஆண்டுகளில், பைபிளுக்குத் தாங்களே விளக்கமளிக்க தனிப்பட்ட நபர்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்று சிலர் கூறியிருக்கின்றனர். என்றபோதிலும், தனக்கு ஆவிக்குரிய உதவி தேவை என்பதை அந்த எத்தியோப்பியன் வெளிப்படையாக ஒப்புக்கொண்டான். யூத மதத்துக்கு மாறியிருந்த விருத்தசேதனம் செய்யப்பட்ட ஒருவனாக அவனுக்கு பைபிளைப் பற்றிய ஓரளவு அறிவு இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. தீர்க்கதரிசனமாகிய ஏசாயா 53 போன்ற ஆழமான பகுதியைப் படிக்க அவன் முற்பட்டதுதானே இந்தக் காரியத்தைக் குறிப்பிடுவதாய் இருக்கிறது. என்றபோதிலும், தான் வாசித்துக்கொண்டிருந்ததைத் தான் புரிந்துகொண்டானா என்று கேட்கப்பட்டபோது, அவன் பின்வருமாறு ஒப்புக்கொண்டான்: “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்.”—அப்போஸ்தலர் 8:26–33.
20 இன்றுள்ள யெகோவாவின் மக்களுக்கும் அது போன்ற ஆவிக்குரிய வழிநடத்துதல் தேவையாயிருக்கிறது. ஆவிக்குரிய காரியங்களில் “ஒரே காரியத்தைப் பேச” விரும்புகிறவர்களாய் அவர்கள் யெகோவாவின் அமைப்பால் கொடுக்கப்படும் உதவியை வரவேற்கின்றனர்—அது எவ்வளவு மகத்தான ஓர் உதவி! (1 கொரிந்தியர் 1:10) காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் மூலம் தகவல் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கிறது. வெவ்வேறு பைபிள் பொருள்களையுடைய ஏராளமான சிற்றேடுகளை நாம் கொண்டிருக்கிறோம். குறிப்பாக ஆங்கிலம் பேசும் வாசகர்களுக்கு காவற்கோபுர பிரசுரங்களின் இன்டெக்ஸ் 1930–1985 (Watch Tower Publications Index 1930–1985) ஓர் ஆசீர்வாதம். இது ‘ஞானத்தை வெள்ளியைப்போல் நாடவும் புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடவும்’ ஒருவருக்கு உதவும் ஓர் உபகரணமாகும்.—நீதிமொழிகள் 2:2–4.
21 சங்கத்தின் பிரசுரங்களைப் படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் பயன்படுத்துவதன் மூலம் அவற்றை முழுமையாகப் பயன்படுத்துகிறீர்களா? அல்லது அவை வெறுமென அலமாரியை அழகுபடுத்துபவையாக இருக்கின்றனவா? ரோமிலிருந்த பவுல் தீமோத்தேயுவிடம், “புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும் . . . எடுத்துக்கொண்டு வா,” என்று சொன்னது அக்கறைத் தூண்டுவதாயிருக்கிறது; தெளிவாகவே, பவுல் எபிரெய வேதாகமத்தின் பகுதிகளைக் குறிப்பிட்டுச் சொன்னான். (2 தீமோத்தேயு 4:13) படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் துணையாக இருக்க அவற்றைத் தன்னிடம் கொண்டிருக்க விரும்பினான். நீங்கள் இன்னும் அப்படிச் செய்யாமலிருந்தால், நீங்களும் ஆராய்ச்சி செய்வதற்கு தேவராஜ்ய பிரசுரங்களடங்கிய உங்களுடைய சொந்த நூலகத்தை ஏன் விருத்திசெய்யக்கூடாது? அந்தப் பிரசுரங்களை பயன்படுத்துவதற்கு வசதியான இடத்தில், வரிசையாக, ஒழுங்காக, சுத்தமாக வைக்கவும். படிப்புக்காக அமைதியான, வெளிச்சமான ஒரு தனி இடத்தை அமைத்துக்கொள்ளுங்கள். ஒழுங்காகத் தனிப்பட்ட படிப்பு செய்வதற்காக நேரத்தை அட்டவணைப்படுத்திக்கொள்ளுங்கள்.
22 மோவாபின் செழிப்பான சமவெளியில் கூடியிருந்த இஸ்ரவேலரைப் போல நாம் புதிய உலகின் விளிம்பில் இருக்கிறோம். இதுவரை இருந்திராதளவுக்கு நாம் கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாகப் படிக்கவும், படிப்புக்காகக் ‘காலத்தை வாங்கவும்’ வேண்டும்; இதற்காக ஒருவேளை தொலைக்காட்சி பார்ப்பது போன்ற அக்கறைகளைத் தியாகம் செய்ய வேண்டும். (எபேசியர் 5:16, NW) வெறுமென முதிர்ச்சியினிடமாக மட்டும் அல்ல, ஆனால் “இரட்சிப்புக்கென்று வளரும்படி . . . திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்,” என்று பவுல் புத்திமதி கொடுக்கிறான். (1 பேதுரு 2:2; எபிரெயர் 5:12–14-ஐ ஒப்பிடவும்.) நம்முடைய உயிர் உட்படுகிறது. எனவே தனிப்பட்ட படிப்பு விஷயத்தில் பின்வாங்கும் எந்தவித மனச்சாய்வையும் எதிர்த்துப் போராடுங்கள். கடவுளிடமாக உங்களுக்கிருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் ஆழப்படுத்துவதற்காக அதை ஒரு வழியாகப் பயன்படுத்துங்கள்; நமக்கு உதவியளிப்பதற்காக அவர் பயன்படுத்தும் அமைப்புக்கு உங்களுடைய போற்றுதலை அதிகப்படுத்துவதற்கும் அது ஒரு வழியாக இருக்கிறது. ஆம், ஊக்கமாகவும் ஒழுங்காகவும் கடவுளுடைய வார்த்தைக்கு ‘உங்களுடைய இருதயத்தைப் பொருத்துங்கள்.’ “இது உங்களுக்கு மதிப்பில்லா வார்த்தை அல்ல, ஆனால் இது உங்களுக்கு ஜீவனைக் குறிக்கிறது.” (w88 8⁄15)
[அடிக்குறிப்புகள்]
a பைபிள் காலங்களில் உடைந்த மட்கலங்கள் எழுதுவதற்கு மலிவான பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. தி இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்டு பைபிள் என்ஸைக்ளோபீடியா (1986) (The International Standard Bible Encyclopedia 1986): “எழுதுவதற்கு வேறு எந்தப் பொருளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலிருக்கும் மிக ஏழ்மையான மக்கள் பிரிவினராலும் உடைந்த மட்கலங்கள் பயன்படுத்தப்படக்கூடியவை.” பைபிள் வசனங்களைக் குறித்துக்கொள்வதற்கு இந்த மட்கலங்கள் எந்தளவுக்குப் பூர்வ இஸ்ரவேலரால் பயன்படுத்தப்பட்டன என்பதை அறியோம். என்றபோதிலும் பைபிள் வசனங்களைக் கொண்ட பொ.ச. ஏழாவது நூற்றாண்டு மட்கலத் துண்டுகள் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இது பொது மக்கள் பைபிள் பகுதிகளுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு வழியாக இருந்தது என்பதைத் தெரிவிக்கிறது.
விமர்சனக் குறிப்புகள்
◻ ‘கடவுளுடைய வார்த்தைக்குத் தங்களுடைய இருதயத்தைப் பொருத்தும்படியாக’ மோசே இஸ்ரவேலருக்கு ஏன் புத்திமதி கொடுத்தான்? அதை அவர்கள் எவ்விதம் செய்யவேண்டியதாயிருந்தது?
◻ கடவுளுடன் நம்முடைய உறவைப் பலப்படுத்திக்கொள்வதற்கும் நம்முடைய விசுவாசத்தைத் தற்காத்துக்கொள்வதற்கும் தனிப்பட்ட படிப்பு நமக்கு எவ்வாறு உதவுகிறது?
◻ சாத்தானின் கண்ணிகளை நாம் எதிர்த்து நிற்கும் காரியத்தில் தனிப்பட்ட படிப்பு என்ன பாகம் வகிக்கிறது?
◻ கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கு யெகோவாவின் அமைப்பு என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது?
[கேள்விகள்]
1, 2. (எ) மோவாப் சமவெளியில் கூடியிருந்த இஸ்ரவேலருக்கு முன் என்ன எதிர்பார்ப்பு இருந்தது? (பி) மோசே அவர்களுக்கு என்ன புத்திமதியைக் கொடுத்தான்?
3, 4. (எ) இஸ்ரவேலர் எதற்குத் ‘தங்களுடைய இருதயங்களைப் பொருத்த’ வேண்டியதாயிருந்தது? (பி) பின்வந்த சந்ததி மோசே கொடுத்த புத்திமதியை எவ்விதமாகப் பொருத்தினர்?
5. உபாகமம் 6:6–8-லுள்ள மோசேயின் வார்த்தைகளின் சரியான பொருத்தம் என்ன?
6, 7. (எ) இஸ்ரவேலர் மோசேயின் நியாயப்பிரமாணத்தை அறிந்துகொள்ள யெகோவா என்ன ஏற்பாடுகளைச் செய்திருந்தார்? (பி) பூர்வ காலத்திய கடவுளுடைய மக்கள் கடவுளுடைய வார்த்தையில் எவ்விதம் போதிக்கப்பட்டிருக்கக்கூடும்?
8. இஸ்ரவேலர் மோசேயின் புத்திமதிக்கு எந்தளவுக்குச் செவிகொடுத்தனர்? என்ன விளைவுகளுடன்?
9. இன்றைய கிறிஸ்தவர்களின் நிலைமை எவ்விதம் பூர்வ இஸ்ரவேலரின் நிலைமையைப் போன்றது?
10. ஏன் சிலர் தனிப்பட்ட படிப்பில் பின்வாங்கக்கூடும்?
11, 12. (எ) கடவுளைப் பற்றி அதிக தனிப்பட்ட விதமாக அறியவந்தது யோபுவை எவ்விதம் பாதித்தது? (பி) கடவுளைப் பற்றிய நம்முடைய தரிசனம் ஏன் யோபுவின் நாளில் இருந்ததைவிட தெளிவாயிருக்கிறது?
13. நாம் எவ்விதம் ‘கடவுளைத் தேடலாம்’? அப்படிச் செய்வதன் நன்மைகள் என்ன?
14. நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையைக் குறித்து கேட்பவர்களுக்கு ‘உத்தரவு சொல்ல ஆயத்தமாக’ இருப்பதன் மதிப்பை விளக்குங்கள்.
15. தனிப்பட்ட படிப்பு எவ்விதம் நம்மை ஊழியத்திற்குத் தகுதியாக்குகிறது?
16. யெகோவாவின் மக்கள் எதிர்ப்படும் சாத்தானின் சில கண்ணிகள் யாவை?
17, 18. தனிப்பட்ட படிப்பு எவ்விதம் ‘மெதுமெதுவாக வழுவிச்செல்வதிலிருந்து’ நம்மை தடுக்கக்கூடும்?
19. ஆவிக்குரிய வழிநடத்துதலின் தேவை சம்பந்தமாக எத்தியோப்பியன் எடுத்துக்காட்டுவது என்ன?
20. (எ) தனிப்பட்ட பைபிள் படிப்பில் நமக்கு உதவியாகக் கடவுளுடைய அமைப்பு என்ன சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது? (பி) அந்த ஏற்பாடுகளைக் குறித்து நீங்கள் எவ்விதம் உணருகிறீர்கள்?
21. (எ) பவுல் அப்போஸ்தலன் எவ்விதம் தனிப்பட்ட படிப்பில் அக்கறை காண்பித்தான்? (பி) தனிப்பட்ட படிப்புக்கு ஏதுவாகக் கொடுக்கப்படும் சில ஆலோசனைகள் என்ன?
22. ‘கடவுளுடைய வார்த்தைக்கு நம்முடைய இருதயத்தைப் பொருத்துதல்’ இதுவரை இருந்திராதளவுக்கு ஏன் இன்று அதிக அவசியமாக இருக்கிறது?
[பக்கம் 11-ன் படம்]
கடவுளுடைய பிரமாணத்தைத் தங்கள் இருதயங்களில் எழுதிக்கொள்வதற்குப் பதிலாக, யூதர்கள் வேதவசனமடங்கிய காப்பு நாடாக்களைக் கட்டிக்கொண்டனர்