அலெக்ஸாண்டிரின் கோடெக்ஸ் ஏடு
அலெக்ஸாண்டிரின் கோடெக்ஸ் ஏடு தானே பைபிள் அறிஞர்களின் கைக்கு எட்டிய முதல் முக்கிய பைபிள் ஏடுகளாகும். அதன் கண்டுபிடிப்பு, அதைத் தொடர்ந்துவந்த பரிசுத்த வேதாகமத்தின் மொழிபெயர்ப்பாளர்களின் நன்மைக்காக கிரேக்க பைபிள் வசனப் பகுதிகளின் பேரில் பயனுள்ள திறனாய்வுக்கு வழிநடத்தியது. அது எப்படி, எப்பொழுது வெளிச்சத்திற்கு வந்தது?
எகிப்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டிரியாவின் குலபதி கிரிலோஸ் லூக்கேரிஸ், புத்தகங்களைச் சேகரிப்பதில் சிறந்து விளங்கினார். 1621-ல் அவர் துருக்கியிலுள்ள கான்ஸ்டான்டிநோப்பிளில் குலபதியானபோது, அவர் இந்தக் கோடெக்ஸ் அலெக்ஸாண்டிரினஸைத் தன்னுடன் எடுத்துச்சென்றார். என்றபோதிலும் மத்திய கிழக்கில் அமைதி இல்லாதிருந்ததால், மற்றும் அந்த ஏடு முஸ்லீம் கைகளில் சிக்கினால் அழிந்துவிடக்கூடுமாதலால், அது இங்கிலாந்தில் இருந்தால் இன்னும் அதிக பாதுகாப்பாக இருக்கும் என்று லூக்கேரிஸ் உணர்ந்தார். எனவே 1624-ல் ஆங்கிலேய மன்னர் முதலாம் ஜேம்ஸ்க்கு அதை வெகுமதியாக, துருக்கியிலிருந்த பிரிட்டிஷ் தூதுவரிடம் கொடுத்தார். அந்த ஏடு அவரிடம் கொடுக்கப்படுவதற்கு முன்பு மன்னர் மரித்துவிட்டார். எனவே அவருக்குப் பின்னர் மன்னராய்த் தொடர்ந்த முதலாம் சார்ல்ஸிடம் மூன்று வருடங்கள் கழித்து அது கொடுக்கப்பட்டது.
இந்த ஏடு கிரிலோஸ் லூக்கேரிஸ் உணர்ந்தவிதமாக அந்தளவுக்கு மதிப்புக்குரியதாய் இருந்ததா? ஆம். அது பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியைச் சேர்ந்ததாயிருக்கிறது. அதை எழுதுவதில் அநேக வேதபாரகர்கள் ஈடுபட்டார்கள் என்பது தெளிவாயிருக்கிறது. அதன் வசனங்கள் முழுவதுமாக பிழைதிருத்தம் செய்யப்பட்டிருக்கின்றன. அது மென் தோல் தாளில் ஒவ்வொரு பக்கத்திற்கும் இரு பத்திகளைக் கெண்டிருந்தது. மற்றும் பெரிய எழுத்துக்களில் வார்த்தைக்கு வார்த்தை இடைவெளியின்றி எழுதப்பட்டிருந்தது. மத்தேயுவின் பெரும்பகுதியுடன், ஆதியாகமம், சங்கீதங்கள், யோவான் மற்றும் 2 கொரிந்தியரின் சில பகுதிகள் அதில் காணவில்லை. இப்பொழுது, அதிகாரப் பூர்வமாக்கப்பட்ட கோடெக்ஸ் A, 773 இதழ்களைக் கொண்டதாகவும், பேரளவான முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் ஆரம்ப சாட்சியாகவும் இருக்கிறது.
அநேக பைபிள் மூல ஏடுகள் அவற்றிற்கிடையே இருக்கும் ஒத்தத்தன்மைகளினிமித்தம் தொகுதிகளாக, அல்லது குடும்பங்களாக வைக்கப்படுகின்றன. இந்நிலை ஏற்படுவதற்குக் காரணம், வேதபாரகர்கள் ஒரே மூலத்திலிருந்து அல்லது அவற்றிற்கு நெருங்கியிருப்பவற்றிலிருந்து நகல்களை எடுத்தனர். என்றபோதிலும், அலெக்ஸாண்டிரின் கோடெக்ஸ் ஏட்டைக் குறித்ததில் வித்தியாசமான குடும்பங்களின் வாசகத்தை ஒன்றுபடுத்தி கூடியமட்டும் ஒரு நல்ல ஏட்டை வழங்குவதில் வேதபாரகர் அக்கறையாக இருந்திருப்பதாய்த் தெரிகிறது. உண்மையில் பார்க்கப்போனால், 1611-ன் கிங் ஜேம்ஸ் வெர்ஷன் (King James Version) என்ற ஆங்கில மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்தப்பட்ட எல்லாக் கிரேக்க ஏடுகளைக்காட்டிலும் இதுவே அதிக பழமையானதும் மேன்மையானதுமாக நிரூபித்தது.
அலெக்ஸாண்டிரின் ஏட்டில் 1 தீமோத்தேயு 3:16 வாசித்த விதம் அது வெளியிடப்பட்ட போது அதிகளவில் கருத்து வித்தியாசத்தை ஏற்படுத்தியது. கிங் ஜேம்ஸ் வெர்ஷன், கிறிஸ்துவைக் குறிப்பிடுகையில் “தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்,” என்று வாசிக்கிறது. ஆனால் இந்தப் பூர்வீகக் கோடெக்ஸில் “கடவுள்” என்பதற்குப் பயன்படுத்தப்படும் “ΘC” என்ற இரண்டு கிரேக்க எழுத்துக்கள் மூலப்பிரதியில் “அவர்” என்ற சொல்லைக் குறிக்கும் “OC” என்று வாசித்ததாகத் தெரிகிறது. தெளிவாகவே, இயேசு “கடவுள்” இல்லை என்பதைத்தான் குறித்தது.
“அவர்” அல்லது “அது” என்ற பதங்கள் சரி என்பதை உறுதிப்படுத்திட 200 ஆண்டுகளுக்கு மேலும் அதைவிட பழமையான ஏடுகள் கண்டுபிடிக்கப்படுவதையும் தேவைபடுத்தியது. புரூஸ் M. மெட்ஜர் கிரேக்க புதிய ஏற்பாட்டின் பேரில் வசனக் கருத்துரை (Textual Commentary on the Greek New Testament) என்ற தன்னுடைய நூலில் இப்படியாக முடிக்கிறார்: எட்டாவது அல்லது ஒன்பதாவது நூற்றாண்டுக்கு முற்பட்ட எந்த மேல்நிலை எழுத்து முறையும் (முதலிடத்தில்) . . . θεός [தியாஸ்]-ஐ ஆதரிப்பதாயில்லை; எல்லாப் பூர்வீக மொழிபெயர்ப்புகளும் ὅς அல்லது ὅ-ஐ முன்னூகிக்கின்றன; நான்காவது நூற்றாண்டின் மூன்றாவது இறுதிப் பகுதிக்கு முன்னான எழுத்தாளரில் எந்த ஓர் ஆரம்பக்கால ஏட்டெழுத்தாளரும் θεός [தியாஸ்] என்ற சொல்லமைப்புக்கு சான்றளிப்பவர்களாயில்லை.” இன்று பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் இந்த வசனத்தில் “கடவுள்” என்று பயன்படுத்துவதை விட்டுவிடுவதில் ஒத்திருக்கின்றன.
1757-ல் மன்னரின் அரச நூலகம் பிரிட்டிஷ் நூலகத்தின் பாகமானது, இந்த அருமையான கோடெக்ஸ் ஏடு பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் ஏட்டு அறையில் யாவரறிய காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இது பார்க்கவேண்டிய ஒரு பொக்கிஷம். (w88 12/15)