வேதவாக்கியங்கள் கற்பிக்கும் பாடங்கள்: ஒபதியா 1–21
உங்களைப் பாதிக்கும் தெய்வீக எச்சரிப்புகள்
“உங்களைத் தொடுகிறவன் என்னுடைய கண்மணியைத் தொடுகிறான்.” (சகரியா 2:8) அச்சத்தை ஏற்படுத்தும் அந்த வார்த்தைகள் எல்லாருக்கும் எச்சரிப்பின் செய்தியாக இருக்கிறது: தேசங்கள் அவருடைய மக்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதை யெகோவா கவனிக்கிறார். என்றபோதிலும் அப்படிப்பட்ட ஒரு தெய்வீக எச்சரிப்பை அசட்டை செய்து, கடவுளுடைய மக்களுக்குத் தீமை விளைவிக்கும் வகையில் அவர்களைத் தொடும் தேசங்களுக்கு என்ன நடக்கிறது? எபிரெய வேதாகமத்தில் மிகச் சிறிய புத்தகமாகிய ஒபதியா இதற்குப் பதிலளிக்கிறது.
ஏதோமுக்கு அழிவு
யெகோவாவின் நியாயத்தீர்ப்பை ஒருவரும் தப்பிப்பதில்லை. ஏறக்குறைய பொ.ச.மு. 607-ல் உரைக்கப்பட்ட ஒபதியாவின் தீர்க்கதரிசனம், ஏதோமியர் தங்கள் தேசத்தில் உயர “நட்சத்திரங்களுக்குள்ளே” பாதுகாப்பாக இருப்பதுபோல நினைத்த போதிலும், அவர்கள் தள்ளப்படுவார்கள் என்பது குறித்து முன்னறிவித்தது. இந்தப் பைபிள் எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகள் வெளிப்படுத்தப்படாவிட்டாலும், அவன் “யெகோவாவின் ஊழியன்” என்ற தன்னுடைய பெயரின் அர்த்தத்துக்கு ஏற்ப வாழ்கிறான். எப்படி? பேரழிவுக்குரிய நியாயத்தீர்ப்பைக் குறித்து அறிவிப்பதன் மூலம். ஏதோம் வீழ்ச்சியுறும்போது, தன்னுடன் உடன்படிக்கை செய்த நண்பர்களால் அவள் முழுவதுமாகக் கொள்ளையடிக்கப்படுவாள். அவளுடைய ஞானவான்களும் பலவான்களுங்கூட தப்பிப்பிழைக்கமாட்டார்கள்.—1–9.
தம்முடைய ஜனத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள்மீது கடவுள் அழிவைக் கொண்டுவருகிறார். ஏதோமியர் மீது அழிவு வருவதற்குக் காரணம் என்ன? தங்களுடைய சகோதரர்களாகிய யாக்கோபின் புத்திரருக்கு விரோதமாக வன்முறைச் செயல்களில் திரும்பத் திரும்ப ஈடுபட்டனர். ஏசாவின் வம்சத்தினரான ஏதோமியர் இஸ்ரவேலருக்கு உறவினர். என்றபோதிலும் தங்களுடைய நெருங்கிய உறவினரைக் கொள்ளையடித்து, எருசலேமின் வீழ்ச்சி கண்டு விஷமம் நிறைந்தவர்களாய்ப் பூரித்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றனர். இப்படியாக ஏதோம் தன் முடிவை உறுதியென முத்திரித்துவிட்டது.—10–16.
யாக்கோபின் வீடு திரும்ப நிலைநாட்டப்பட்டது
யெகோவாவின் வாக்குத்தத்தங்கள் எப்பொழுதுமே நம்பத்தகுந்தவை. ஒபதியாவின் நாளிலே, தம்முடைய மக்கள் தங்கள் தேசத்தில் மீண்டும் குடியேறுவார்கள் என்று யெகோவா உத்தரவாதம் அளிக்கிறார். இஸ்ரவேலர் இனிமேலும் பிரிந்தவர்களாயிருக்க மாட்டார்கள். வைக்கோல் அக்கினிக்கு இறையாவது போல ஏதோமியரை அழித்து அவர்களுடைய பிரதேசத்தைக் கைபற்றும் காரியத்தில் யூதாவின் இரண்டு கோத்திர ராஜ்யமாகிய யாக்கோபின் வீடு, பத்து கோத்திர வடக்கு ராஜ்யமாகிய யோசேப்பின் வீட்டுடன் திரும்ப ஒன்றுபடுவார்கள். உற்சாகமூட்டும் விதத்தில் முடிப்பவனாய், தாயகம் திரும்பிய இஸ்ரவேலர் தங்கள் கடவுளை ஒன்றுபட்டு வணங்குவார்கள், அவருடைய குடிமக்களாய் இருப்பார்கள், ஆம், ராஜரீகம் யெகோவாவுடையதாக இருக்கும் என்று ஒபதியா அறிக்கை செய்கிறான்.—17–21.
இன்றைக்குரிய பாடம்: அசட்டை செய்யப்படும் எச்சரிப்புகளின் கனிகள் கொடிது. எனவே, ஒபதியா ஏதோமுக்கு அறிவித்த அச்சுறுத்தும் எச்சரிப்பு, நவீன நாளில் கடவுளை எதிர்த்திடும் ஆட்களின் செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும்: யெகோவாவுக்கும் அவருடைய மக்களுக்கும் எதிராகப் போராடுகிறவர்கள் நித்தியமாக அழிக்கப்படுவார்கள். (w89 4⁄15)
வேதவாக்கியங்கள் கற்பிக்கும் பாடங்கள்: யோனா 1:1–4:11
அழிவைத் தவிருங்கள்! இரக்கம் பெறுங்கள்! எப்படி? 2,800 ஆண்டுகளுக்கு முற்பட்ட உண்மையான ஒரு கதை கற்பிக்கும் பாடத்துக்கு—யோனா புத்தகத்துக்கு—செவிகொடுப்பதன் மூலம். கலிலேயனாகிய யோனா தீர்க்கதரிசியால் சுமார் பொ.ச.மு. 844 எழுதப்பட்ட இந்தப் புத்தகம் ஆவிக்குரிய உட்பார்வை கொண்டது.
யோனா ஓடிப்போகிறான்
யெகோவாவுடைய சேவையில் நமக்கு வேண்டிய ஆதரவு பெற்றிட நாம் அவரை நம்பியிருக்க வேண்டும். என்றாலும், கடவுள் கொடுத்த வேலையில் அவரை சார்ந்திருப்பதற்குப் பதிலாக யோனா அதை விட்டுவிட்டு ஓடிப்போகிறான். உண்மைதான், அவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலை எளிதான ஒன்றல்ல. அவன் பொல்லாத நினிவேக்கு விரோதமான தெய்வீக அழிவைக் குறித்து வெட்கமின்றி அறிவிக்கவேண்டியதாயிருந்தது. ஆனால் யோனா எதிர்த்திசையாக, இப்பொழுது ஸ்பேய்ன் தேசமாக இருக்கும் தர்ஷீசுக்குக் கப்பலேறினான். செல்லும் வழியில் ஒரு கடுமையான புயல் அந்தக் கப்பல் பயணிகளின் உயிரையும் மாலுமிகளின் உயிரையும் ஆபத்துக்குள்ளாக்குகிறது. யோனா தன் தவறை அறிக்கையிடுகிறான், கப்பற்காரர் அவனைக் கடலில் போட்டுவிடுகிறார்கள், கடல் கொந்தளிப்பு நின்றுவிடுகிறது. ஒரு பெரிய மீன் தீர்க்கதரிசியை விழுங்கிவிடுகிறது.—1:1–17.
கடவுள் தங்களுடைய ஜெபங்களுக்குச் செவிகொடுப்பார் என்பதில் அவருடைய ஊழியர்கள் நம்பிக்கையாயிருக்கலாம். மீனின் வயிற்றிலிருக்கும் யோனா, யெகோவாவிடம் உதவிக்குக் கெஞ்சுகிறான், ஒரு நீர்க் கல்லறையிலிருந்து தன்னை மீட்ட தேவனுக்கு ஜெபத்துடன்கூடிய நன்றியை ஏறெடுக்கிறான், தான் செய்த பொருத்தனையை நிறைவேற்றிவிடுவதாக வாக்குகொடுக்கிறான். சமயம் வந்தபோது, அவன் கரையிலே கக்கப்படுகிறான்.—2:1–10.
யோனா நினிவேக்குப் போகிறான்
யெகோவாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் ஒரு வேலையைத் தட்டிக்கழிக்கக் கூடாது. இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டவனாய், ஒரு சமயம் பின்வாங்கிய தீர்க்கதரிசி அந்த “மகா நகரத்தில்” பிரசங்கிக்கிறான். யோனா ஒரு சாதாரணமான ஆனால் குறிப்பான எச்சரிப்பை அறிவிக்கிறான்: “இன்னும் நாற்பது நாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்.” காரியங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில் திருப்பம் காண, நினிவே பட்டணத்தார் மனந்திரும்பி அழிவைத் தவிர்த்துக்கொள்கிறார்கள்.—3:1–10.
மனிதன் கடவுள் இரக்கம் காட்டுவதைக் கட்டுப்படுத்த முடியாது. நினிவே அழிக்கப்படாததால் யோனா எரிச்சலடைகிறான். ஆனால் யெகோவா தம்முடைய நல்விருப்பத்தின்படியே தாம் இரக்கம் காண்பிப்பார் என்பதை யோனாவுக்குப் ஒரு செடியைக் கொண்டு போதிக்கிறார்.—4:1–11.
இன்றைக்குரிய பாடம்: தெய்வீக தீர்க்கதரிசனத்துக்குச் செவிகொடுப்பதன் மூலம் அழிவைத் தவிர்க்கலாம்! நினிவே பட்டணத்தாரைப் பின்பற்றுங்கள். யோனாவைவிட பெரிய தீர்க்கதரிசியாகிய இயேசு கிறிஸ்துவுக்கு மனத்தாழ்மையுடன் செவிகொடுங்கள்.—லூக்கா 11:32. (w89 4⁄15)
[பக்கம் 29-ன் படம்]
வேத வசனங்களை ஆராய்தல்
●7—பைபிள் காலங்களில் ஒருவரோடு ஒன்றுசேர்ந்து “அப்பத்தைச் சாப்பிடுவது” நட்பின் உடன்படிக்கையாக இருந்தது. இதில் என்னே ஒரு முரண்பட்ட கருத்து! பாபிலோனியர், “உடன்படிக்கை செய்த மனுஷர்,” ஏதோமியருடன் சேர்ந்து அவர்களை அழிப்பவர்களாக இருப்பார்கள். உண்மைதான், எருசலேம் பாழ்க்கடிப்பைத் தொடர்ந்து அதைக் கொள்ளையடிக்க நேபுகாத்நேச்சாரின் நாளிலிருந்த பாபிலோனியர் ஏதோமியரை அனுமதித்தனர். ஆனால் பின்னால் வந்த பாபிலோனிய அரசனாகிய நேபோனிடஸ் ஏதோமியரின் எல்லா வர்த்தக வியாபார நேக்கங்களையும் முழுவதுமாகக் கட்டுப்படுத்திவிட்டான்.
●10—தன்னுடைய சகோதர தேசமாகிய “யூதா புத்திர”ரிடம் இயல்பான சகோதர சிநேகத்துடன் நடந்துகொள்ளாததாலும் வன்மையான விரோதம் கொண்டதாலும் ஏதோம் “முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப்போவதற்கு” நியமிக்கப்பட்டது. (வசனம் 12) அப்படிப்பட்ட தேசிய அழிவு, ஓர் அரசாங்கத்தையும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தையும் கொண்டிருந்த ஏதோம், பூமியில் இல்லாமற்போம் என்பதைக் குறித்தது. இன்று, ஏதோமிய தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அடையாளம் காட்டுவதற்கு எவரும் இல்லை, அவர்கள் “இராதவர்கள்போல்” ஆனார்கள்.—வசனம் 16.
[பக்கம் 30-ன் படம்]
வேத வசனங்களை ஆராய்தல்
●1:17—பெரிய தலையும் பெரிய உணவுக் குழாயும் உள்ள மாவிழைக் கொழுப்பினை தலையில் உடைய திமிங்கில வகை ஒரு மனிதனை விழுங்க முடியும். மத்தியதரைக் கடலில் திமிங்கிலங்கள் காணப்படுவது அரிது என்றாலும், திமிங்கில வேட்டைக்குச் சென்றவர்கள் ஒரு முறை யோப்பாவுக்குச் சென்றார்கள். மத்தியதரைக் கடலில் கப்பல்களைப் பின்தொடர்ந்து, எறியப்படும் எதையும் உண்ணும் ஒரு மீன்தான் வெள்ளைச் சுறா. அதுவுங்கூட ஒரு மனிதனை முழுமையாக விழுங்கும் திறமை கொண்டது. என்றாலும் யோனாவின் விஷயத்தில், கடவுள் “ஒரு பெரிய மீனை,” ஒருவேளை நவீன விஞ்ஞான உலகத்துக்கு அறியப்படாதிருக்கும் ஒரு மீனைப் பயன்படுத்தினார்.
●2:1, 2—யோனா “மீனின் வயிற்றிலிருந்த” போது, நிச்சயமாகவே ஒரு கவிதை இயற்றுவதற்குரிய சூழ்நிலை இருக்கவில்லை. ஆனால் பின்னால் அவன் தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்தான். தன்னுடைய உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் சங்கீதங்களின் வார்த்தைகளை எதிரொலிக்கும் வார்த்தைகள் அவன் இருதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்தன.—2:2-ஐ சங்கீதம் 120:1 மற்றும் 130:1-உடனும்; 2:5-ஐ சங்கீதம் 69:1 உடனும் ஒப்பிடுங்கள்.
●3:3—நினிவே நகரத்தின் அளவு மிகைப்படுத்தப்படவில்லை. அதைச் சூழ இருந்த மதில்கள் சுற்றளவில் 8 மைல்கள் மட்டுமே என்றாலும், அந்த நகரின் பெயர் அதன் புறநகர்ப் பகுதிகளையும் உட்படுத்தியிருக்க வேண்டும், ஏனென்றால் அது 26 மைல் பரப்பைக் கொண்டதாயிருக்கக்கூடும்.
●3:10—“மனஸ்தாபப்பட்டு” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை, “கடந்த கால (அல்லது திட்டமிடப்பட்ட) செயல் சம்பந்தமாக ஒருவருடைய மனம் மாறுதுல்” என்பதை அர்த்தப்படுத்துகிறது. எனவே, தவறிழைக்கும் மனிதர் உண்மையிலேயே மனந்திரும்பும்போது, அவர்களைத் தண்டிப்பதன் சம்பந்தமாக யெகோவா ‘மனஸ்தாபப்படக்கூடும்’ அல்லது தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ளக்கூடும்.