‘சகித்திருப்பவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்’
1. 1914 முதற்கொண்டு பூமியில் என்ன நிலைமை மத்தேயு 24:3-8-ஐ நிறைவேற்றியிருக்கிறது? மேலும் சர்வதேச சங்கத்தையும் ஐக்கிய நாட்டு சங்கத்தையும் குறித்த எந்த எதிர்பார்ப்புகள் தோல்வியடைந்திருக்கின்றன?
தற்கால சகாப்தம் என்னும் தன் புத்தகத்தில் ராபர்ட் நிஸ்பட் “1914 முதற்கொண்டு தொடர்ந்து நடைபெற்றிருக்கும் எழுபத்தைந்து வருட யுத்தத்தைப்” பற்றி பேசுகிறார். ஆம், உலக யுத்தங்கள் உட்பட “யுத்தங்களும், யுத்தங்களைப் பற்றிய செய்திகளும்”—அதை தான் இயேசு கிறிஸ்து இந்த முடிவின் காலத்திற்கு முன்னறிவித்தார். (மத்தேயு 24:3-8) “யுத்தத்தை என்றென்றுமாக தவிர்ப்பதற்கு” 1920-ல் சர்வதேச சங்கம் கொண்டுவரப்பட்டது. எவ்வளவு பரிதாபகரமாக அது தோல்வியடைந்தது! “தொடர்ந்து வரும் தலைமுறைகளை யுத்த பீடிப்பிலிருந்து பாதுகாக்க” ஐக்கிய நாட்டு சங்கம் 1945-ல் அமைக்கப்பட்டது. ஆனால் மாக்ஸ் ஆரல்சன் எழுதிய, அடிவானத்தைச் சுற்றிலும் தீ என்ற புத்தகம் விவரிக்கிறது: “இரண்டாம் உலக யுத்த முடிவிலிருந்து ஏதோ ஓர் இடத்தில் சண்டை இல்லாமல் ஒரு நாளும் இருந்ததில்லை.”
2. உலக நிலைமைகளைக் குறித்து சில ஆட்கள் என்ன கேட்கிறார்கள்? ஆனால் என்ன கேள்விகளை நாம் கேட்க வேண்டும்?
2 குற்றச் செயல், வன்முறை, ஊழல், வறுமை, போதை மருந்துகள், கொள்ளை நோய்கள்—இவை அனைத்தும் வருந்தத்தக்க நிலைக்குக் கூட்டுகின்றன. சில ஆட்கள் கேட்கலாம்: ‘இவ்வாறான அமைதியை குலைக்கும் நிலைமைகளை மனிதவர்க்கம் எவ்வாறு தொடர்ந்து சகிக்க முடியும்?’ அதிமுக்கியமாக நாம் கேட்க வேண்டியது: ‘கடவுள் எவ்வாறு தம்முடைய பூமிக்குரிய சிருஷ்டிப்புகள் நசித்துப் போவதை சகிக்கிறார்? துன்மார்க்க மனிதர்கள் பூமியை கெடுப்பதற்கும், அவருடைய நாமத்தின் மேல் நிந்தையை குவிப்பதற்கும் இன்னும் எவ்வளவு காலம் அவர் அனுமதிப்பார்?’
3. (எ) ஏசாயா தீர்க்கதரிசி என்ன கேள்வி கேட்டார், ஏன்? (பி) யெகோவா என்ன பதில் தந்தார்? மேலும் இது நம் நாளைக் குறித்து எதைக் காட்டுகிறது?
3 ஏசாயா தீர்க்கதரிசி அதே போன்ற ஒரு கேள்வியை எழுப்பினார். யெகோவாவிடமிருந்து ஒரு செய்தியை தன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அறிவிக்குமாறு நியமிக்கப்பட்டார். அவருக்கோ அல்லது அவரை அனுப்பிய கடவுளுக்கோ அவர்கள் செவி கொடுக்க மாட்டார்கள் என்று அவர் முன்னெச்சரிக்கப்பட்டார். ஆகையால் ஏசாயா கேட்டார்: “எவ்வளவு காலம் ஆ, யெகோவாவே? (NW)” ஆம், எவ்வளவு காலம் ஏசாயா இந்தக் கடினமான ஜனங்களிடம் பிரசங்கிக்க வேண்டும்? மேலும் எவ்வளவு காலம் யெகோவா அவருடைய செய்தியை அவர்கள் வெறுத்துத் தள்ளுவதை பொறுத்துக் கொண்டிருப்பார்? யெகோவா பதிலளித்தார்: “பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தர வெளியாகும் வரைக்குமே.” (ஏசாயா 6:8-11) அதே போன்று இன்றும் கடவுள் தன்னை முக்கியமாய் மனம் புண்படுத்தும் விசுவாசமற்ற கிறிஸ்தவ மண்டலம் உட்பட உலகத்தின் மீது நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படும் தன் குறிக்கப்பட்டுள்ள காலம் வரை அப்பேர்ப்பட்ட நிந்தனைகளை சகிக்கிறார்.
4. யோபின் சகிப்புத் தன்மையினால் ஏற்பட்ட விளைவு என்ன? இது நமக்கு இன்று என்ன உறுதியைக் கொடுக்கிறது?
4 யெகோவா நீண்ட காலமாக சாத்தானின் நிந்தைகளை சகித்திருக்கிறார். 3,600 வருடங்களுக்கு முன்பு உண்மையுள்ள யோபும் சகித்திருக்கிறார், பரீட்சையின் கீழ் தன் உத்தமத் தன்மையை காத்துக்கொள்ள முடியாது என்ற சாத்தானின் சவாலை யோபு பொய்யாக்கினார். இது யெகோவாவின் இருதயத்தை எவ்வாறு மகிழ்வித்தது! (யோபு 2:6-10; 27:5; நீதிமொழிகள் 27:11) இயேசுவின் பாதி சகோதரனாகிய யாக்கோபு பின்னர் சொன்னபடி: “இதோ! சகித்திருப்பவர்களை சந்தோஷமுள்ளவர்களென்கிறோமே. யோபுன் சகிப்புத்தன்மையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். யெகோவாவுடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; யெகோவா மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.”அதே போன்று இன்று யெகோவாவோடு சேர்ந்து சகிக்கிறவர்கள் ஒரு சந்தோஷமான பலனைப் பெறும் உறுதியளிக்கப்படுகிறார்கள்.—யாக்கோபு 5:11, NW.
5 கடவுளுடைய ஜனங்களுக்கு நம் நாளில் சகிப்புத்தன்மை தேவைப்படும் என்று இயேசு தெளிவாக காண்பித்தார். இந்தக் “காரிய ஒழுங்கு முறையின் முடிவைக்” குறித்த அடையாளத்தை முன்னறிவிக்கையில் அவர் சொன்னார்: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.” எதைச் செய்யும்போது சகிக்க வேண்டும்? இயேசுவின் அடுத்தபடியான வார்த்தைகள் பதிலளிக்கிறது: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்.” (மத்தேயு 24:3, 13, 14) அதற்கு பிறகு தான் ‘முடிவு வரும்.’—மாற்கு 13:10, 13; லூக்கா 21: 17-19-யும் பார்க்கவும்.
யெகோவா ஏன் சகிக்கிறார்
6. சகிப்புத்தன்மைக்கு யெகோவா ஏன் ஓர் எடுத்துக்காட்டான முன்மாதிரி? அவர் சகித்திருப்பதற்கு ஒரு காரணம் என்ன?
6 அப்போஸ்தலனாகிய பவுல் விளக்கினார்: “தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும் தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபா பாத்திரங்கள் மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள் மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தார்.” (ரோமர் 9:22, 23) இந்தக் கோபாக்கினை பாத்திரங்கள், துன்மார்க்கர் தொடர்ந்து ஜீவிக்கும்படியாக யெகோவா ஏன் சகித்திருக்கிறார்? ஒரு காரணம்: மனித சிருஷ்டிகரை சார்ந்திராத தனித்த மனித ஆட்சி நிச்சயமாக தோல்வியடையும் என்பதை நிரூபிக்க. (எரேமியா 10:23) விரைவில், கடவுளுடைய பேரரசாட்சி மகிமைப்படுத்தப்படும். அவர் மட்டுமே சமாதானம், ஒற்றுமை, மனித குடும்பத்திற்கு சந்தோஷம் இவற்றை இயேசுவின் ராஜ்ய ஆட்சியின் மூலம் கொண்டுவர முடியும் என்பதை நிரூபிப்பார்.—சங்கீதம் 37:9-11; 45:1, 6, 7.
7. வேறு என்ன காரணத்திற்காக யெகோவா சகித்திருக்கிறார்? மேலும் 1930-லிருந்து இலட்சக்கணக்கானோருக்கு என்ன நன்மைகளை இது கொண்டு வந்திருக்கிறது?
7 மேலும், யெகோவா “தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபா பாத்திரங்கள் மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தை தெரியப்படுத்த” சகித்து வந்திருக்கிறார். (ரோமர் 9:23) இந்தக் கிருபா பாத்திரங்கள், “பூமியிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டு” இயேசு கிறிஸ்துவோடு பரலோக ராஜ்யத்தில் ஆட்சி செய்வதற்கு உத்தமத் தன்மையைக் காக்கும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், இந்த 1,44,000 பேர் முத்திரை போடப்படுவது அப்போஸ்தலர்கள் காலத்திலிருந்து தொடர்ந்து வந்திருக்கிறது. அது இப்பொழுது முடிவடையும் தருவாயில் இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:3; 14:1, 4) மேலும் பாருங்கள்! 1930-லிருந்து யெகோவா தொடர்ந்து சகித்திருப்பதானது இலட்சக்கணக்கான மற்றவர்களைக் கூட்டிச் சேர்ப்பதற்கு அனுமதித்திருக்கிறது. “சகல ஜாதிகளிலும் . . . திரள் கூட்டமாகிய ஜனங்கள்” பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை சுதந்தரிப்பதற்கு, கடைசி உபத்திரவத்தைத் தப்பிக்கும் நம்பிக்கையுடன் சந்தோஷப்படுகின்றனர். (வெளிப்படுத்துதல் 7:4, 9, 10, 13-17) இந்தத் திரள் கூட்டமான ஜனங்களில் நீங்கள் ஒருவரா? அப்படியிருந்தால், யெகோவா கோபாக்கினைப் பாத்திரங்களை இன்றுவரை சகித்திருப்பதைக் குறித்து நீங்கள் சந்தோஷப்படவில்லையா? என்றபோதிலும், யெகோவா சகித்திருப்பதுபோல நீங்கள் தொடர்ந்து சகித்திருக்க வேண்டும்.
சகிப்புத்தன்மை பலனளிக்கப்படுகிறது
8. நம் அனைவருக்கும் சகிப்புத்தன்மை ஏன் தேவைப்படுகிறது? சகிப்புத் தன்மையின் என்ன முன்மாதிரியை நாம் உற்று கவனிக்க வேண்டும்?
8 வாக்களிக்கப்பட்டவைகளைப் பெற வேண்டுமானால் நம் அனைவருக்கும் சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. எபிரெயர் 10:36-ல் இந்த அடிப்படை சத்தியத்தைக் கூறிய பின்பு அப்போஸ்தலனாகிய பவுல், பண்டைய காலத்து “மேகம் போன்ற திரளான சாட்சிகளின்” பொன் போன்ற விசுவாசத்தையும் சகிப்புத் தன்மையையும் விரிவாக விவரிக்கிறார். பிறகு “விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு,” இயேசு இருதயப்பூர்வமான சேவையில் சகித்திருந்தார், பலனிலிருந்து கவனத்தை இழக்காமல் இருந்தார். அவருடைய முன்மாதிரி நாமும் சகித்திருப்பதற்கு நம்மை எவ்வாறு பலப்படுத்துகிறது!—எபிரெயர் 12:1, 2.
9. சகிப்புத்தன்மையின் நவீனகால உதாரணங்களிலிருந்து என்ன விளைவடைந்திருக்கிறது?
9 சகிப்புத் தன்மைக்கு நவீன கால உதாரணங்கள் அநேகம் உண்டு. சகிப்புத்தன்மை மேலோங்கி இருந்த அல்லது இருக்கும் சகோதரர்களையும் சகோதரிகளையும் நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். அவர்களுடைய உண்மைத் தவறாமை நம்மை எவ்வாறு கிளர்ச்சியூட்டியிருக்கிறது! ஒவ்வொரு வருடமும் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் உலகளாவிய வேலையை காவற்கோபுர சங்கத்திற்கு அறிக்கை செய்யும்போது சகிப்புத் தன்மையையும் உத்தமத்தையும் காத்துக்கொள்வதைப் பற்றிய மேலுமதிகமான கிளர்ச்சியூட்டும் அறிக்கைகள் வந்து சேருகின்றன. ஆங்கில காவற்கோபுரம் ஜனவரி 1, 1990 பக்கங்கள் 20-23-ல் உள்ள அட்டவணை ‘விசுவாசத்தோடே சகிப்புத் தன்மையையும் கூட்டியிருக்கும்’ இந்தச் சாட்சிகள் 1989-ல் சாதித்திருக்கும் மகத்தான வேலையின் சுருக்கமாகும்.—2 பேதுரு 1:5, 6.
நம்முடைய மகத்தான வருடம்
10. (எ) எத்தனை தேசங்களும், தீவுத் தொகுதிகளும் 1989-ல் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கிப்பதில் பங்கு கொண்டன? இந்த வேலையில் எத்தனை பேர் பங்கு கொண்டனர்? (பி) உச்சநிலை அடைந்த மாதத்தில் எத்தனை பயனியர்கள் அறிக்கை செய்தனர்? வெளி ஊழியத்தில் செலவழித்த மொத்த மணிநேரங்கள் எவ்வளவாக இருந்தது?
10 அந்த அட்டவணை காண்பிக்கிறபடி, யெகோவாவின் வரப்போகும் ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிப்பதில் 212 தேசங்களும், தீவு தொகுதிகளும் பகிர்ந்து கொண்டன. அன்பான காவற்கோபுர வாசகரே, இந்தச் சிறந்த வேலையில் பங்குகொண்ட 37,87,188 ஆட்களில் ஒருவராக இருக்கும் சிலாக்கியம் உங்களுக்கு இருந்ததா? அந்த ஊழியத்தின் உச்சநிலை மாதத்தில் பயனியர்களாக அறிக்கை செய்த 8,08,184 பேரில் ஒருவராக நீங்கள் இருந்தீர்களா? 1989-ல் பூகோள முழுவதும் வெளி ஊழியத்தில் செலவழிக்கப்பட்ட 83,54,26,538 மணி நேரங்களில் உங்களுடைய பங்கு எவ்வளவாக இருப்பினும் நீங்கள் சந்தோஷப்படுவதற்கு காரணம் இருக்கிறது.—சங்கீதம் 104:33, 34; பிலிப்பியர் 4:4.
11. (எ) கடந்த ஆண்டு மார்ச் 22 ஞாபகார்த்த நாளன்று எத்தனை பேர் ஆஜராயிருந்தது சந்தோஷத்திற்குரிய காரணமாயிருந்தது, ஏன்? (பி) எத்தனை பேர் முழுக்காட்டப்பட்டனர், இந்த விஷயத்தில் அட்டவணையில் உள்ள எந்தத் தேசங்கள் முதன்மையாக இருந்தன?
11 இயேசுவின் மரணத்தின் உலகளாவிய ஞாபகார்த்த ஆசரிப்புக்கு கடந்த மார்ச் 22-ல் 94,79,064 பேர் ஆஜராயிருந்தனர் என்ற அந்த எண்ணிக்கையிலும் சந்தோஷப்படுங்கள்! இந்த அக்கறை காட்டும் செம்மறியாட்டைப் போன்ற ஆட்கள் யெகோவாவை சேவிப்பதில் ஓர் ஒழுங்கான பாகத்தை உடையவர்களாயிருக்க அன்பாக மந்தைக்குள் மேய்த்துச் செல்லப்பட்டால் இன்னும் கூடுதலாக 56,91,876 ராஜ்ய பிரஸ்தாபிகள் உருவாக உள்ள வாய்ப்பை இது காட்டுகிறது. இதில் நாம் அவர்களுக்கு உதவி செய்யலாமா? (யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:9, 15) 1989 ஊழிய ஆண்டில் முழுக்காட்டப்பட்ட 2,63,855 புதிய சாட்சிகளின் எண்ணிக்கை காட்டுகிறபடி, அநேகர் ஏற்கெனவே பிரதிபலித்திருக்கின்றனர்.
12. அட்டவணை வெளிக்காட்டாத சில அம்சங்கள் யாவை (எ) காவற்கோபுர சங்கத்தின் அச்சாலைகளைப் பற்றி? (பி) பத்திரிகை அளிப்புகள், சந்தாக்களைப் பற்றி?
12 அட்டவணை வெளிக்காட்டாத சில அம்சங்கள் இருக்கின்றன. பைபிள்கள், புத்தகங்கள், சிற்றேடுகள், பத்திரிகைகள் ஆகிய பிரசுரங்களுக்கான தாகம்—மனநிறைவடையாததாயிருந்தது. அதன் விளைவாக, நியு யார்க்கில் உள்ள காவற்கோபுர அச்சாலைகள் 25,999 டன்கள் காகிதத்தை உபயோகித்து 3,58,11,000 பைபிள்கள், புத்தகங்கள், சிற்றேடுகள் ஆகியவற்றை அச்சடித்தார்கள். இது 1988-ஐவிட 101 சதவிகித அதிகரிப்பு. காவற்கோபுர சங்கத்தின் மற்றும் பெரிய அச்சாலைகள் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய இடங்களில் “உண்மையும் விவேகமுமுள்ள ஊழிய வகுப்பார்” ஆவிக்குரிய “ஆகாரம் ஏற்ற வேளையில்” கொடுப்பதற்கு ஒத்தாசையாக கூடுதலான நேரம் வேலை செய்தனர். (மத்தேயு 24:45) ஏப்ரல், மே மாதங்களில் பத்திரிகைகளும் சந்தாக்களும் அதிகமாக அளிக்கப்பட்டன என்று அநேக தேசங்கள் அறிக்கை செய்தன, மகா பாபிலோனைப் பற்றிய காவற்கோபுர இதழ்களை விநியோகிப்பதற்கு விசேஷ அழுத்தம் கொடுக்கப்பட்டது. (வெளிப்படுத்துதல் 17:5) சந்தேகமில்லாமல், இந்த ஏப்ரலில் துணைப் பயனியர்களும், மற்ற சாட்சிகளும் உலக பிராந்தியத்தில் 1990 ஊழிய ஆண்டின் மிகச் சிறந்த சாட்சி கொடுக்கும் வேலையை சாதித்திருப்பார்கள்.—ஏசாயா 40:31 ஒப்பிடுக; ரோமர் 12:11, 12.
13. கடந்த வருடத்தில் பெயரிடப்படாத எந்தத் தேசங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன? விளக்கவும்.
13 மறுபடியும் அட்டவணையைப் பாருங்கள். கடந்த வருடத்தில் பெயரால் வரிசைப்படுத்தாத சில தேசங்களை நீங்கள் காணமுடிகிறதா? ஆம்! ஹங்கேரியிலும், போலந்திலும் நம்முடைய வேலை சமீபத்தில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேசங்களில் இருக்கும் அதிகாரிகளுக்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம், ஏனென்றால் யெகோவாவின் சாட்சிகளுக்கு இப்பொழுது அவர்கள் கரிசனை காட்டுகிறார்கள். இந்த விஷயத்தில் “நாம் எல்லாப் பக்தியோடும், நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு” ஏறெடுக்கப்பட்ட உலகளாவிய சகோதரத்துவத்தின் ஜெபங்கள் பதிலளிக்கப்பட்டிருக்கிறது.—1 தீமோத்தேயு 2:1, 2.
14. போலந்தில் நடந்த “தேவ பக்தி” மாவட்ட மாநாடுகளின் சிறப்பு அம்சங்கள் சிவற்றை கூறுக.
14 “தேவ பக்தி”! ஏன், போலந்தில் கூட மூன்று இடங்களில் ஆகஸ்ட் மாதத்தில் “தேவ பக்தி” மாவட்ட மாநாடுகள் நடத்த முடிந்தது! நம்முடைய 91,024 போலந்து சகோதரர்கள் என்னே மகத்தான உபசரிப்பாளர்களாக நிரூபித்தனர்! (எபிரெயர் 13:1, 2, 16) ஓர் அற்புதத்தைப் போன்று ஆயிரக்கணக்கான சகோதரர்கள்—செக்ஸ், ஜெர்மானியர், ரஷ்யர் மேலும் மற்றவர்கள்—அயல்நாட்டு நுழைவுரிமை சீட்டு பெற்று பேருந்து, இரயில் மூலமும் மற்றும் நடந்தும் வந்தனர். மற்றும் ஆயிரக்கணக்கானோர், அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, வெகு தொலைவில் இருக்கும் பசிபிக் தீவுகள், ஜப்பான் ஆகியவற்றிலிருந்து விமானத்தில் பறந்து வந்தனர். நம்முடைய சகோதரர்களால் ஒரு கறையுமின்றி சுத்தம் செய்யப்பட்ட மிகப் பெரிய அரங்குகள் சோர்ஸோவில் 65,710 பேர், போஸ்னனில் 40,442 பேர், வார்சாவில் 60,366—ஆஜரானவர்களின் மொத்த எண்ணிக்கையான 1,66,518 பேரையும் அடக்க போதுமானதாக இல்லை! ஒவ்வொரு மையத்திலும் முழுக்காட்டப்பட்டவர்களின் காட்சி உணர்ச்சி மிகுந்த ஆனந்தக் கண்ணீரை வரச்செய்தது. போஸ்னனில் 9 வயதுள்ளவரும் 90 வயதுள்ளவரும் முழுக்காட்டப்பட்டனர், மூன்று மாநாடுகளிலும் மொத்தமாக 6,093 பேர் முழுக்காட்டப்பட்டனர், இதில் அநேக பருவ வயதினர் உட்பட்டிருந்தனர், வயது சென்றவர்களோடு மதம் அழிந்துவிடும் என்று சொல்லும் தேசங்களிலிருந்து வந்தவர்கள் இவர்களில் அநேகர். கடவுளுடைய வார்த்தையை அடிப்படையாக கொண்ட உண்மை மதம் அப்படி அழிந்துவிடுவதல்ல. (சங்கீதம் 148:12, 13 ஒப்பிடுக; அப்போஸ்தலர் 2:41; 4:4) கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நம் சகோதரர்களின் சகிப்புத் தன்மை எவ்வளவு அற்புதகரமாக பலனளிக்கப்பட்டிருக்கிறது!
சோதனையின் கீழ் தொடர்ந்து உண்மையுள்ளவர்களாய் இருத்தல்
15. லெபனனில் சாட்சிகள் எவ்வாறு சகிப்புத் தன்மையையும் நிலையானத் தன்மையையும் காட்டியிருக்கின்றனர்? என்ன நல்ல விளைவுகளுடன்?
15 பலதரப்பட்ட சூழ்நிலைமைகளின் கீழ் சகிப்புத் தன்மையைக் காட்ட அப்போஸ்தலனாகிய பவுலைப் போல யெகோவாவின் சாட்சிகள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். (2 கொரிந்தியர் 11:24-27) லெபனனில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. நம் சகோரர்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்? நிலையானத் தன்மையுடனும், உறுதியுடனும். 1989-ம் வருடம் மிக அதிகமான குண்டுவீச்சைக் கண்டது, ஆனால் எங்கு அது மிக அதிகமாக இருந்ததோ அங்கும்கூட சகோதரர்கள் தளராமல் இருக்க தீர்மானமாயிருந்தனர். பெய்ரூட்டில் உள்ள ஒரு சபை அறிவிக்கிறது: “வாரத்தில் எல்லா மாலைகளிலும் வெளி ஊழியத்திற்காக ஒழுங்கான தொகுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. கடினமாக பாதுகாப்பு கட்டளைகள் இருந்தபோதிலும் சகோதரர்கள் சோர்ந்துவிடவில்லை. எப்பொழுதையும்விட அதிகமான பிராந்தியங்கள் செய்து முடித்தோம். பயனியர்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் உச்சநிலையில் இருந்தது. புதிய பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன, அதிகமான பத்திரிகைகளும் புத்தகங்களும் அளிக்கப்பட்டன.”
16 போதை மருந்து கடத்தல், வன்முறை ஆகியவற்றின் காரணமாக கொலம்பியா செய்திகளில் காணப்பட்டது. ஆனால் அங்கிருக்கும் கிறிஸ்தவர்களின் உண்மையான சகிப்புத்தன்மையும் செய்தியாக இருக்கிறது. சமீபத்தில், தற்காலிகமான விசேஷ பயனியர்கள், சாட்சிகளே இல்லாத பத்தாயிரம் அல்லது அதற்குமதிகமான குடிமக்கள் இருக்கும் 31 பட்டணங்களுக்கு அனுப்பப்பட்டனர். ஒரு பட்டணத்தில், புதிதாக அக்கறை காட்டும் ஆட்கள், பயனியர்கள் அங்கு ஒரு சில மாதங்களே இருப்பார்கள் என்பதை அறிந்ததும் பயனியர்களை தங்குமாறு கேட்டுக் கொண்டனர். மற்றொரு இடத்தில், அக்கறை காட்டும் 18 ஆட்கள் பயனியர்கள் மூன்று மாதங்கள் தங்கி ஆவிக்குரிய உதவி கொடுத்ததற்காக ஒரு போற்றுதல் கடிதத்தில் கையொப்பமிட்டனர். மேலும் கூடுதலான உதவிக்காக கேட்டுக் கொண்டனர். “இது ஆழ்ந்த முக்கியத்துவமுள்ள வேலை” என்று அவர்கள் சொன்னார்கள். சொல்வதற்கு தேவையின்றி, இந்த இரண்டு இடங்களிலும் அக்கறையை தொடர்ந்து வளர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொலைவிலுள்ள பிராந்தியங்களை வளரச் செய்வதற்கு சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது, ஆனால் அவ்வாறு செய்யும் பயனியர்களின் கடினமான வேலை ஆசீர்வதிக்கப்படுகிறது.
17, 18. (எ) என்ன சூழ்நிலைமைகளின் கீழ் யெகோவாவின் சாட்சிகள் இத்தாலியில் சகித்திருக்கிறார்கள்? (பி) அவர்களைக் குறித்து பொய்கள் பரப்பப்பட்ட போதிலும் சாட்சிகள் என்ன செய்திருக்கின்றனர்?
17 இத்தாலியில் குருமாரின் கடினமான எதிர்ப்பை யெகோவாவின் சாட்சிகள் எதிர்ப்படுகிறார்கள், ஆனால் யெகோவாவின் பலத்தால் அவர்கள் சகித்திருக்கிறார்கள். பல்வேறு கோயில்களில் குருமார், யெகோவாவின் சாட்சிகள் கதவுமணியை அடிக்க வேண்டாம் என்று அறிவிக்கும் ஒட்டுத்தாள்களை விநியோகம் செய்து, தங்கள் சபையார் வீடுகளின் கதவுகளில் அதை ஒட்டுமாறு செய்திருக்கின்றனர். அநேக குருமார் வாலிப பையன்களை தேர்ந்தெடுத்து இந்த ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் எல்லாக் கதவுகளிலும், சாட்சிகளின் குடும்பங்களின் வீடுகளிலும்கூட ஒட்டுத்தாள்களை ஒட்டுமாறு அமர்த்தினர்! என்றபோதிலும், சாட்சிகள் எளிதில் அச்சமடைவதில்லை. சம்பாஷணையை ஆரம்பிப்பதற்கு அடிக்கடி அந்த அறிவிப்புகளையே பயன்படுத்தினார்கள். மேலும் செய்தித் துறையும், தேசிய தொலைக்காட்சியும் இவ்விஷயத்தை விரிவாக கையாண்டன, மதங்களை பொறுக்க இயலாத் தன்மையை கண்டித்து சர்ச்சின் பாகத்தில் இந்தத் தந்திரங்கள் உண்மையில் பலவீனத்தின் அடையாளமாக இருக்கின்றன என்பதை வலியுறுத்தின. ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் சாட்சிகளுக்கு விரோதமாக ஒட்டப்பட்ட தாள்களினால் அவ்வளவாக புண்படுத்தப்பட்டதனால் காவற்கோபுரம், விழித்தெழு பத்திரிகைகளுக்குச் சந்தா செய்தார்.
18 இத்தாலியில் உள்ள கத்தோலிக்க சர்ச் யெகோவாவின் ஜனங்களைப் பற்றி பொய்களைப் பரப்ப விசுவாச துரோகிகளையும் உபயோகிக்கிறது, ஆனால் இதுவும் செயல்படுவதில்லை. ஏனென்றால் 1,72,382 பிரஸ்தாபிகளும் நன்றாக அறியப்பட்டும் மதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். முன்பு யெகோவாவின் சாட்சிகளாக இருந்தவர்கள் எழுதிய பிரசுரங்களில் நம்மைப் பற்றி கெட்ட காரியங்களை படித்ததாக ஓர் ஆள் சாட்சிகள் சந்திக்க வந்தபோது சொன்னார். ஆகையால், அவருடைய சகோதரர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான ஆனபோது அவர் அதிகமாக எதிர்த்தார். அதற்கு பிறகு அவர் அவருடைய சகோதரர் மதம் மாறினது என்ன ஒரு நல்ல பாதிப்பை அவரில் உண்டாக்கியது என்பதை கவனித்தார். அவர் ஆச்சரியப்பட்டார்: ‘அதிக மோசமாக இருக்கும் காரியம் எவ்வாறு இப்பேர்ப்பட்ட நல்ல விளைவுகளை உண்டாக்க முடியும்?’ ஆகையால், சந்திக்க வந்த சாட்சிகளை பைபிள் படிப்பு நடத்துமாறு கேட்டுக் கொண்டார்.—கொலோசெயர் 3:8-10 ஒப்பிடுக.
அசட்டை மனப்பான்மையை மேற்கொள்ளுதல்
19, 20. (எ) பின்லாந்தில் உள்ள சாட்சிகளின் பாகத்தில் என்ன நிலைமை சகிப்புத் தன்மையை தேவைப்படுத்தியது? ஒரு சர்ச் கணக்கெடுப்பில் எது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க விஷயம்? (பி) நற்செய்தியை பிரசங்கிப்பதில் சகிப்புத் தன்மையின் முக்கியத்துவத்தை எந்த அனுபவம் காட்டுகிறது?
19 சாட்சிகள் அடிக்கடி சந்திக்கும் தேசங்களில் நற்செய்திக்குப் பரவலான அசட்டை மனப்பான்மை இருக்கிறது. பின்லாந்தில் நிச்சயமாய் இவ்விதம் இருக்கிறது. அந்தத் தேசத்தில் உள்ள சர்ச் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. ஜனத்தொகையில் 70 சதவிகிதமானோர் சாட்சிகள் தங்கள் வீட்டிற்கு வருவதை விரும்பவில்லை என்று கண்டுபிடித்தது. இருந்தபோதிலும், 30 சதவிகிதமானோர் கடினமாக எதிர்ப்பதில்லை, மேலும் இதில் 4 சதவிகிதமானோர் யெகோவாவின் சாட்சிகளை விரும்புகிறோம் என்று சொன்னார்கள். இது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை பின்லாந்து ஜனத்தொகையில் 4 சதவிகிதம் 2,00,000 ஆட்களை பிரதிநிதித்துவம் செய்கிறது. அதை இப்பொழுது உள்ள பிரஸ்தாபிகள் எண்ணிக்கையான 17,303 உடன் ஒப்பிடுங்கள்!
20 ஒரு பிரஸ்தாபி வெளி ஊழியத்தில் இருக்கும்போது அவரிடம் இந்தக் கணக்கெடுப்பைக் குறித்து இவ்வாறு கேட்கப்பட்டது: “எங்களைப் போன்று 70 சதவிகிதமான ஆட்கள் உங்களைப் போன்ற ஆட்களை விரும்பத்தகாதவர்கள் என்று கருதுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏன் தொடர்ந்து எங்கள் கதவண்டைக்கு வருகிறீர்கள்?” பிரஸ்தாபி பதிலளித்தார்: “ஆம், ஆனால் அதே கணக்கெடுப்பு நான்கு சதவிகிதமானோர் எங்களை விரும்புகிறார்கள் என்று காட்டியது. நாங்கள் அந்த ஆட்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம். அவர்கள் ஒரு சதவிகிதத்தினராக இருந்தாலும், நாங்கள் வீடுவீடாக சென்று அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வோம்.” வீட்டுக்காரர் ஒரு கணம் யோசித்துவிட்டு, சொன்னார்: “உங்களுடைய செய்தி அவர்களுக்கு அவ்வளவு முக்கியமானதா?” பிரஸ்தாபி பதிலளிக்கும் வண்ணம் கேட்டார்: “அதை நீங்கள் கேட்க விரும்புகிறீர்களா?” சீக்கிரத்தில் இந்த வீட்டுக்காரர் நற்செய்தியில் அக்கறை காண்பித்தார்.
எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது
21. (எ) இந்த ஒழுங்குமுறையில் என்ன விதமான போரட்டத்தை நாம் போராட வேண்டும்? ஏன்? (பி) எதை நாம் ஒருவேளை சகிக்க வேண்டும், மேலும் ஆபகூக் தீர்க்கதரிசனம் நமக்கு எதை உறுதியளிக்கிறது?
21 இன்று நம் அனைவரையும் குறித்து என்ன? இறுதிவரை யெகோவாவோடும் இயேசு கிறிஸ்துவோடும் சகித்திருக்க நாம் உறுதி கொண்டிருக்கிறோமா? இது நீண்ட காலமாக இருக்காது, ஆனாலும் நாம் கட்டாயம் சகிக்க வேண்டும்! சாத்தானின் ஒழுங்குமுறையில், விசுவாசத்திற்காக கடினமாக போராட வேண்டும், உலகத்தின் ஒழுக்கயீனம், ஊழல், பகைமை எல்லாப் பக்கங்களிலும் நம்மை சூழ்ந்திருப்பதன் காரணமாக. (யூதா 3, 20, 21) ஏதோ ஒரு விதத்தில் துன்புறுத்தலை நாம் சகிக்க வேண்டியவர்களாக இருக்கலாம். இப்பொழுதும்கூட ஆயிரக்கணக்கான நம் சகோதரர்கள் சிறைகளில் துன்பம் அனுபவிக்கின்றனர், மேலும் சிலர் கொடூரமாக அடிக்கப்படுகிறார்கள். நம்முடைய ஜெபங்களுக்காக இவர்கள் நன்றி உள்ளவர்களாய் இருக்கின்றனர். (2 தெசலோனிக்கேயர் 3:1, 2) வெகு சீக்கிரத்தில் தற்போதைய ஒழுங்குமுறை இல்லாமல் போகும்! ஆபகூக் சொல்லுகிறபடி: “குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.”—ஆபகூக் 2:3.
22. தீர்க்கதரிசிகளின் பொறுமையையும், யோபின் சகிப்புத் தன்மையையும் நாம் காண்பித்தால் என்ன விளைவுகளை நாம் நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம்?
22 சீஷனாகிய யாக்கோபு அன்பாக நமக்குச் சொல்கிறார்: “என் சகோதரரே, யெகோவாவுடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.” யெகோவாவின் நாமத்தில் பேசுகிற நாம் இன்று கசப்பான சோதனைகளின் போது ஏசாயா, எரேமியா, தானியேல் இன்னும் மற்றவர்களைப் போன்று உத்தமத் தன்மையை காப்பவர்களாக இருப்போம். யோபுவைப் போல நாமும் சகிக்கலாம். அவருடைய சகிப்புத் தன்மைக்காக அவர் எவ்வளவு அற்புதமாக பலனளிக்கப்பட்டார்! யெகோவாவில் இரக்கமும் அன்பான தயவும் இறுதிவரை நாம் சகித்திருந்தால் ஒப்பிடமுடியாத பலன்களை நமக்குக் கொண்டுவரும். மேலும், யாக்கோபின் வார்த்தைகள் நம் ஒவ்வொருவரிடமாகவும் நிறைவேற்றப்படுவதாக: “இதோ! பொறுமையாயிருக்கிறவர்களை சந்தோஷம் உள்ளவர்கள் என்கிறோமே.”—யாக்கோபு 5:10, 11; யோபு 42:10-13. (w90 1/1)
5. இன்று கடவுளுடைய ஜனங்களுக்குச் சகிப்புத்தன்மை தேவைப்படும் என்பதை இயேசு எவ்வாறு காண்பித்தார்? மேலும் என்ன வேலையை செய்யும்போது அவர்கள் சகிக்க அவசியம் இருக்கும்?
16. கொலம்பியாவில் இருக்கும் நம் சகோதரர்கள் சாட்சிகள் இல்லாத பட்டணங்களுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்வதன் மூலம் சகிப்புத் தன்மையை எவ்வாறு காட்டியிருக்கின்றனர்?
எப்படி நீங்கள் பதிலளிப்பீர்கள்?
◻ சகிப்புத் தன்மைக்கான என்ன தேவையை இயேசு அழுத்தியுரைத்தார்?
◻ என்ன காரணங்களுக்காக யெகோவா சகித்திருக்கிறார்?
◻ 1989-ல் சாதிக்கப்பட்ட மகத்தான வேலையின் சில சிறப்பு அம்சங்கள் யாவை?
◻ போலந்தில் உள்ள நம் சகோதரர்களின் சகிப்புத் தன்மை எவ்வாறு பலனளிக்கப்பட்டது?
◻ லெபனன், கொலம்பியா, மற்றும் இத்தாலியில் உள்ள சாட்சிகள் சோதனைகளின் கீழ் எவ்வாறு உண்மையுள்ளவர்களாய் காண்பித்தனர்?