மோவாபிய கல்—அழிக்கப்பட்டது, ஆனால் இழக்கப்படவில்லை
மோவாபிய அல்லது மேசா கல் 1868-ல் கண்டுபிடிக்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள் வேண்டுமென்றே உடைக்கப்பட்டது. அது ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. மெருகிடப்பட்ட ஓர் எரிமலைக் கல், மேல் பக்கத்தில் நல்லவிதத்தில் வட்டமாக வெட்டப்பட்டு, ஏறக்குறைய நான்கு அடி உயரமும், இரண்டு அடிக்குச் சற்றே கூடுதல் அகலமும், கிட்டதட்ட இரண்டு அடி கனமும் கொண்ட ஒரு கல்வெட்டு. அது உடைக்கப்பட்டு சில காலத்திற்குப் பின்பு, 2 பெரிய துண்டுகளும் 18 சிறிய துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் அந்தக் கல்லின் மூன்றில் ஒரு பகுதி கிடைக்கக்கூடாத வகையில் இழக்கப்பட்டது.
இப்படிப்பட்ட அசாதாரணமான நினைவுச் சின்னம் எவ்விதம் ஏறக்குறைய என்றுமாய் இழக்கப்படும் நிலைக்குள்ளானது? இது பைபிள் மாணாக்கர்களுக்கு எந்தளவு மதிப்புடையதாய் இருக்கிறது?
உட்சூழ்ச்சியும் அவநம்பிக்கையும்
அந்தக் கல்லை உடையாத நிலையில் முதலும் கடைசியுமாகப் பார்த்தது F.A. கீலீன் என்ற ஐரோப்பியர். சவக் கடலுக்கு வட கிழக்கில் டைபான் இடிபாடுகளிடையே இது கிடந்தது. ஓரத்தில் எழும்பியவிதத்தில் செதுக்கப்பட்டிருக்கும் கரைப் பகுதிக்குள் பொறிக்கப்பட்டிருந்த 35 வரிகளின் சில பகுதிகளை மேலோட்டமாக எழுத்தில் வடித்துக்கொண்டு, இவர் எருசலேமுக்குத் திரும்பியதும் தன்னுடைய அணியின் பிரஷிய தலைவரிடம் தன் கண்டுபிடிப்பைக் குறித்து அறிக்கை செய்தார். அந்த எழுத்துக்கள் பினீசியர் எழுத்துக்கள் என்று உடனடியாக அடையாளங்காணப்பட்டு, அதன் முக்கியத்துவமும் உணரப்பட்டது. பெர்லின் ராயல் மியூசியம் அந்தக் கல்லை வாங்குவதற்கான தொகையைக் கொடுக்க முன்வந்தது, ஆனால் விரையில் அதில் அக்கறையாயிருந்த மற்றவர்களும் அதை வாங்குவதற்குப் போட்டிப் போட்டனர். தங்களுடைய அந்தப் பரிசின் மதிப்பை உணர ஆரம்பித்த அந்தப் பிராந்திய ஷேக்குகள் அதை மறைத்து, அதன் விலையை மிகவும் அதிகமாக உயர்த்திவிட்டார்கள்.
ஒரு ஃபிரெஞ்சு அகழ்வாய்வாளர் பொறிக்கப்பட்ட அந்த எழுத்துக்களை ஓர் ஈரக் காகிதத்தில் அவற்றின் தடம் பதிய எடுத்தார், ஆனால் அது உலருவதற்கு முன்பு எடுக்கப்படவேண்டியதாய் இருந்ததால், எழுத்துக்களின் தடங்கள் தெளிவாக இல்லை. இதற்குள்ளாக, தங்கள் கைவசமிருந்த அந்தக் கல்லை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்படி தமஸ்குவிலிருந்து அராபிய நாடோடிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கு இணங்கிப் போவதற்கு பதிலாக, அந்த அராபிய நாடோடிகள் அதை அழிக்க தீர்மானித்தனர். எனவே அந்த விலையுயர்ந்த நினைவுச் சின்னத்தைச் சுற்றி தீ வைத்து, திரும்பத் திரும்பத் தண்ணீரால் நனைத்தனர். கல் பிளந்தபோது, அவற்றின் துண்டுகள் அந்தப் பிராந்தியத்தில் வாழ்ந்த குடும்பங்களின் தாவரங்கள் செழிப்பாய் வளரும் ஆசியைக் கொண்டிருப்பதற்காக அவர்களுடைய தானியக் களஞ்சியங்களில் வைத்திருக்க அவர்களிடம் கொடுக்கப்பட்டது. இந்தத் துண்டுகளைத் தனிப்பட்டவர்களாக விற்பனை செய்வதற்கு ஒரு சிறந்த வழியாகவும் இது அமைந்தது.
பைபிள் சரித்திரம் உயிர் பெறுகிறது
களிக்கல் பசை மற்றும் ஈரக் காகிதம் கொண்டு வாங்கப்பட்ட அந்தத் துண்டுகளை இணைத்து, கல்லில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் கடைசியில் கிடைக்கப்பெற்றது. எழுதப்பட்டிருந்த முழு வாசகமும் வெளிப்படுத்தப்பட்ட போது, அறிஞர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அந்தப் பூர்வீகக் கல்வெட்டு “இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருப்பவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒற்றைப்பாளக்கல்” என்று அந்தச் சமயத்தில் விவரிக்கப்பட்டது.
மோவாபின் அரசன் மேசா இஸ்ரவேலின் ஆதிக்கத்தை முறியடித்ததன் நினைவாக தன்னுடைய கடவுள் கேமோஷுக்கு அந்தக் கல்வெட்டை உண்டாக்கினான். அந்த ஆதிக்கம் 40 ஆண்டுகள் தொடர்ந்தது என்றும், கேமோஷ் “தன்னுடைய தேசத்தின் மீது கோபமாய் இருந்ததால்” இந்தத் தெய்வம் அதை அனுமதித்தது என்றும் அவன் சொல்லுகிறான். மோவாபின் கலகம் 2 இராஜாக்கள் மூன்றாம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவங்களுக்குச் சம்பந்தப்பட்டிருப்பதாகப் பொதுவாய் நம்பப்படுகிறது. அந்த நினைவுச் சின்னத்திலே, மேசா, தான் அதிக தேவபக்தியுள்ளவன் என்றும் பட்டணங்களும் நெடுஞ்சாலைகளும் அமைத்ததாகவும், இஸ்ரவேலின் மீது வெற்றி கண்டதாகவும் பெருமைப்பட்டுக்கொள்கிறான். இதில் அவன் சகல மகிமையையும் தன்னுடைய கேமோஷ் தெய்வத்துக்குக் கொடுக்கிறான். பைபிள் அறிக்கை செய்யும் மேசாவின் தோல்வியும், தன்னுடைய சொந்த மகனைப் பலிகொடுத்ததும், ஒருவர் எதிர்பார்ப்பதுபோல், இந்தத் தற்புகழ்ச்சிக் கல்வெட்டில் இடம்பெறவில்லை.
மேசா வெற்றிகொண்டதாகக் குறிப்பிடும் அநேக இடங்கள் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் மெதெபா, அதரோத், நேபோ மற்றும் யாகாசு ஆகியவை இடம்பெறுகின்றன. இப்படியாக அந்தக் கல்வெட்டு பைபிள் பதிவுகளின் திருத்தமான தன்மைக்கு சான்றளிக்கிறது. என்றபோதிலும், இவற்றில் குறிப்பிடத்தக்க அம்சம், இஸ்ரவேலின் கடவுளுடைய பெயரின் ய்ஹ்வ்ஹ் [YHWH] என்ற நான்கு எழுத்தை அந்தப் பதிவின் 18-வது வரியில் மேசா பயன்படுத்தியிருக்கிறான். அதில் மேசா பெருமையோடு குறிப்பிடுவது: “நான் அங்கிருந்து [நேபோ] யாவேயின் [பாத்திரங்களை] எடுத்து அவற்றை கேமோஷின் முன்னிலையில் இழுத்துவந்தேன்.” பைபிளுக்குப் புறம்பாக, தெய்வீகப் பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதில் இதுதான் அநேகமாகப் மிகப் பூர்வீகப் பதிவாகும்.
1873-ல் அந்த மோவாபிய கல் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. இல்லாத பகுதிகள் களிக்கல் பசை கொண்டு சேர்க்கப்பட்டு, பாரீசில் லூவர் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது முதல் அங்கு இருந்துவந்திருக்கிறது. அதன் உருவநேர்படி ஒன்றை லண்டன் பிரிட்டிஷ் மீயூசியத்தில் காணலாம். (w90 4/15)
[பக்கம் 31-ன் படம்]
(மேலே) மோவாப் பிரதேசம்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
(இடது) புதுப்பிக்கப்பட்ட மோவாபிய கல்வெட்டு
[படத்திற்கான நன்றி]
Musée du Louvre, Paris
[படத்திற்கான நன்றி]
The Bible in the British Museum
(வலது) நினைவுச் சின்னத்தில் தோன்றும் தெய்வீகப் பெயரின் நான்கு எழுத்துக்கள்