கடவுள் செய்திருப்பவற்றை நீங்கள் மதித்துணருகிறீர்களா?
“ஒருவன் என்னைப் பின்தொடர விரும்பினால் அவன் தன்னையே சொந்தம் துறந்து, தன் வாதனையின் கழுமரத்தை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைத் தொடர்ந்து பின்பற்றக்கடவன்.”—லூக்கா 9:23, NW.
1. கடவுள் ஏற்பாடு செய்திருக்கும் சில அதிசயமான வெகுமதிகள் யாவை?
நாம் நம்முடைய உயிருக்காக கடவுளுக்குக் கடன்பட்டிருக்கிறோம். அவர் மனிதவர்க்கத்தைச் சிருஷ்டித்திராவிட்டால், நாம் பிறந்தே இருக்க மாட்டோம். ஆனால் கடவுள் உயிரைவிட அதிகத்தை சிருஷ்டித்தார். நாம் அநேக காரியங்களை அனுபவித்து மகிழும்படியாக அவர் நம்மை உண்டாக்கினார். உணவின் நறுமணச் சுவை, சூரிய ஒளியின் வெப்பம், இசையின் ஒலி, ஓர் இளவேனிற் கால நாளின் புது மலர்ச்சி, அன்பின் மென்மை. இதற்கும் மேலாக, கடவுள் தம்மைப் பற்றி கற்றறிவதற்கான ஒரு மனதையும் விருப்பத்தையும் நமக்கு கொடுத்தார். அவர் பைபிளை ஆவியினால் எழுதும்படி ஏவினார், அது நமக்கு முழுமையான வழிநடத்துதலைக் கொடுக்கிறது, சந்தோஷமான வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது என்பதை நமக்குக் காண்பிக்கிறது, மேலும் அவருடைய நீதியான புதிய உலகில் என்றென்றுமாக வாழும் நம்பிக்கையைக் கொடுக்கிறது. தம்முடைய பரிசுத்த ஆவி, உள்ளூர் சபையின் ஆதரவு, தம்முடைய சேவையில் உறுதியாக நிலைத்திருப்பதற்கு நமக்கு உதவி செய்ய முதிர்வயதுள்ள அன்பான ஆண்கள், பெண்கள் ஆகிய எல்லாவற்றையுங்கூட கடவுள் நமக்கு கொடுக்கிறார்.—ஆதியாகமம் 1:1, 26–28; 2 தீமோத்தேயு 3:15–17; எபிரெயர் 10:24, 25; யாக்கோபு 5:14, 15.
2. (எ) கடவுள் நமக்காகச் செய்திருக்கும் தலைசிறந்த காரியம் என்ன? (பி) செயல்களின் மூலமாக நாம் இரட்சிப்பை சம்பாதிக்க முடியுமா?
2 இவையெல்லாவற்றோடும்கூட, பிதா நம்மிடம் எதிர்பார்க்கும் காரியங்களைப் பற்றி அதிகமாக நம்மிடம் சொல்வதற்கும், ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் “பாவ மன்னிப்பாகிய மீட்பை” ஏற்பாடு செய்வதற்கும் கடவுள் தம் சொந்த முதற்பேறான குமாரனை அனுப்பினார். (எபேசியர் 1:7; ரோமர் 5:18) அந்தக் குமாரனாகிய இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) அந்த மீட்கும் பொருளால் சாத்தியமாக்கப்பட்ட இரட்சிப்பு மிகவுயர்ந்த மதிப்புள்ளதாயிருப்பதால், எவராவது வேலைகள் செய்து அதை சம்பாதிப்பதற்கு எந்த வழியும் இல்லை, முற்காலங்களில் மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட வேலைகள் மூலமும் நிச்சயமாகவே முடியாது. ஆகையால், பவுல் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின் மேல் விசுவாசிகளானோம். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.”—கலாத்தியர் 2:15, 16; ரோமர் 3:20–24.
விசுவாசமும் செயல்களும்
3. விசுவாசத்தைப் பற்றியும் செயல்களைப் பற்றியும் யாக்கோபு என்ன சொன்னார்?
3 இரட்சிப்பு விசுவாசத்தினால் வருகிறது, ஆனால் விசுவாசமும், கடவுள் நமக்காக செய்திருக்கும் எல்லாக் காரியங்களுக்குமான மதித்துணர்வும் நம்மை செயல்படுவதற்கு தூண்ட வேண்டும். நம்முடைய விசுவாசத்தைக் காண்பிக்கும் காரியங்களைச் செய்ய அது நம்மைத் தூண்ட வேண்டும். இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னில்தானே செத்ததாயிருக்கும்.” அவர் கூடுதலாகச் சொன்னார்: “கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன்.” பிசாசுகளும் கூட “விசுவாசித்து, நடுங்குகின்றன” என்று யாக்கோபு குறிப்பிட்டுக் காட்டினார். ஆனால் பிசாசுகள் தெய்வீக செயல்களை செய்கிறதில்லை. மறுபட்சத்தில் ஆபிரகாம் விசுவாசத்தையும் செயல்களையும் கொண்டிருந்தான். “விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டது.” யாக்கோபு மறுபடியும் இவ்வாறு சொன்னார்: ‘கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது.’—யாக்கோபு 2:17–26.
4. தம்மைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னார்?
4 சரியான செயல்களின் முக்கியத்துவத்தையும் இயேசு காண்பித்தார்: “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” “ஒருவன் என்னைப் பின்தொடர விரும்பினால் அவன் தன்னையே சொந்தம் துறந்து, தன் வாதனையின் கழுமரத்தை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைத் தொடர்ந்து பின்பற்றக்கடவன்.”a நாம் நமக்குச் சொந்தமானவர்கள் என்பதைத் “துறந்தால்” நாம் நம்முடைய தனிப்பட்ட விருப்பங்களில் அதிகத்தை விட்டுக் கொடுப்போம். நாம் எல்லாக் காரியங்களுக்காகவும் கடவுளுக்கு கடன்பட்டிருக்கிறோம் என்பதை நாம் கண்டுணர்கிறோம், ஆகையால் நாம் அவருடைய அடிமைகளாக நம்மையே அவருக்கு அளிக்கிறோம், இயேசு செய்தது போலவே அவரைப் பற்றி கற்றறிவதற்கும், அவருடைய சித்தத்தை செய்வதற்கும் நாடுவோம்.—மத்தேயு 5:16; லூக்கா 9:23, NW; யோவான் 6:38.
ஜீவன்கள் பாதிக்கப்படுகின்றன
5. (எ) நம்முடைய முழு வாழ்க்கை முறையையும் எது பாதிக்க வேண்டும் என்று பேதுரு சொன்னார்? (பி) என்ன சிறந்த கிரியைகளை அவர் சிபாரிசு செய்தார்?
5 நம்முடைய சார்பாக கொடுக்கப்பட்ட கிறிஸ்துவின் “விலையேறப்பெற்ற இரத்தம்” அவ்வளவு மேம்பட்ட மதிப்புள்ளதாயிருப்பதால் அதற்கான நம்முடைய மதித்துணர்வு நம்முடைய முழு வாழ்க்கை முறையிலும் தெளிவாக இருக்க வேண்டும் என்று பேதுரு காட்டினார். நம்மைத் தூண்டி செய்விக்க வேண்டிய அநேக காரியங்களை அப்போஸ்தலன் வரிசைப்படுத்தினார். ‘சகல துர்க்குணத்தையும் ஒழித்து விடுங்கள்’ என்று அவர் அறிவுரை கூறினார். “திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்.” “உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவியுங்கள்.” “பொல்லாப்பை விட்டு நீங்கி, நன்மை செய்யுங்கள்.” “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் . . . உத்தரவு சொல்லுங்கள்.” “மாம்சத்திலிருக்கும் காலம் வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படி பிழைத்திருங்கள்.”—1 பேதுரு 1:19; 2:1, 2, 9; 3:11, 15; 4:2.
6 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை வாழ்ந்து காட்டினார்கள். அது அவர்களுடைய மனநிலைகளையும் ஆள்தன்மைகளையும் மாற்றியது, அவர்களுடைய வாழ்க்கையைக் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக கொண்டு வரும்படி அவர்களைத் தூண்டியது. தங்கள் விசுவாசத்தை மீறுவதைக் காட்டிலும் அவர்கள் நாடுகடத்தப்பட்டு, கல்லெறியப்பட்டு, அடிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, மரணத்தையும்கூட அனுபவிப்பதை மேலாக தெரிந்து கொண்டனர். (அப்போஸ்தலர் 7:58–60; 8:1; 14:19; 16:22; 1 கொரிந்தியர் 6:9–11; எபேசியர் 4:22–24; கொலோசெயர் 4:3; பிலேமோன் 9, 10) ஏறக்குறைய பொ.ச. 56-ல் பிறந்த பிரபல ரோம சரித்திர ஆசிரியன் டாசிட்டஸ் இவ்வாறு சொல்கிறார்: “பகல்நேர வெளிச்சம் மறைந்த போது இரவு நேரத்தில் ஒளி கொடுப்பதற்குக் கிறிஸ்தவர்கள் தீயினால் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டனர்.” என்றபோதிலும் அவர்கள் மனம்மாறி போகவில்லை!—தி ஆனல்ஸ், புத்தகம் 15, பாரா 44.
7. சில ஜனங்கள் தங்களை எந்த நிலையில் காணக்கூடும்?
7 சில சபைகளில் பல வருடங்களாக கூட்டங்களுக்கு வந்துகொண்டிருக்கும் ஆட்களை நீங்கள் ஒருவேளை காண்பீர்கள். அவர்கள் யெகோவாவின் அமைப்பை நேசிக்கின்றனர், தாங்கள் சந்தித்திருக்கும் மக்களிலேயே அவருடைய மக்கள்தான் மிகச் சிறந்தவர்கள் என்று நினைக்கின்றனர், சத்தியத்தைப் பற்றி சிறந்த குறிப்புகளை சொல்கின்றனர், வெளி ஆட்களிடம் சத்தியத்தை ஆதரித்துப் பேசுகின்றனர். ஆனால் ஏதோவொன்று அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது, ஏதோவொன்று அவர்களைப் பின்வாங்கச் செய்கிறது. பெந்தெகொஸ்தே நாளன்று 3,000 பேரும் செய்ததை, விசுவாசித்த எத்தியோப்பியன் கேட்ட காரியத்தை, ஒரு சமயம் துன்புறுத்துபவனாக இருந்த சவுல் இயேசு உண்மையிலேயே மேசியாவாக இருக்கிறார் என்பதை உணர்ந்தவுடனேயே செய்யும்படி அனனியா சொன்ன சிறந்த படியை அவர்கள் எடுக்கவில்லை. (அப்போஸ்தலர் 2:41; 8:36; 22:16) இன்று இப்படிப்பட்டவர்களில் என்ன குறைவுபடுகிறது? “நல்மனச்சாட்சிக்காக கடவுளிடம் செய்யும் வேண்டுகோள்” என்று பைபிள் அழைக்கும் அந்தப் படியை அவர்கள் ஏன் எடுக்கவில்லை? (1 பேதுரு 3:21, NW) நீங்கள் உங்களை இந்நிலையில் காண்பீர்களானால்—சத்தியத்தை அறிந்தும் அதைக் குறித்து ஏதோவொன்றைச் செய்வதற்கு தயங்கினால்—இந்தக் கட்டுரை உங்கள் பேரில் உள்ள விசேஷ அன்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கருதுங்கள்.
முழுக்காட்டுதலுக்குத் தடைகளை மேற்கொள்ளுதல்
8. நீங்கள் ஒருபோதும் ஒரு நல்ல மாணாக்கனாக இருந்திராவிட்டால், இப்போது எடுக்க வேண்டிய ஞானமான போக்கு என்னவாயிருக்கும்?
8 எது உங்களுக்குத் தடையாயிருக்கலாம்? தனிப்பட்ட படிப்பு ஒரு பிரச்னையாக இருப்பதாக சிலர் காணலாம் என்று சென்ற இதழின் கட்டுரை காண்பித்தது. கடவுள் நமக்கு அதிசயமான மனங்களைக் கொடுத்தார், அவரைச் சேவிப்பதற்கு அவைகளை நாம் உபயோகிக்க வேண்டும் என்று அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார். வாசிப்பதற்குக் கற்றுக்கொள்ளாத சில ஜனங்களும்கூட கடவுளைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் இன்னுமதிகமாக கற்றறிவதற்குத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். உங்களைப் பற்றியென்ன? எவ்வாறு வாசிப்பது என்பதை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருந்தால் “காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்த” பெரோயா பட்டணத்தாரைப் போல நீங்கள் உண்மையிலேயே படிக்கிறீர்களா? சத்தியத்தின் அகலம், நீளம், ஆழம், உயரம் ஆகியவற்றை நீங்கள் ஆய்வு செய்திருக்கிறீர்களா? நீங்கள் கடவுளுடைய வார்த்தைக்குள் போதுமான அளவு ஆழமாக தோண்டிப் பார்த்திருக்கிறீர்களா? அது உண்மையிலேயே எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாயிருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்திருக்கிறீர்களா? கடவுளுடைய சித்தத்தை அறிவதற்கு ஓர் உண்மையான விருப்பத்தை நீங்கள் வளர்த்திருக்கிறீர்களா? சத்தியத்துக்காக உண்மையான பசி உங்களுக்கு இருக்கிறதா?—அப்போஸ்தலர் 17:10, 11; எபேசியர் 3:18.
9. சபையில் இருக்கும் ஒருவரோடு உங்களுக்கு ஒரு பிரச்னை இருந்தால் செய்ய வேண்டிய சரியான காரியம் என்ன?
9 சபையில் இருக்கும் ஒருவரோடு அவர்களுக்கிருந்த உண்மையான அல்லது கற்பனை செய்து கொண்ட பிரச்னையின் காரணமாக சிலர் சில சமயங்களில் தயங்கி விடலாம். யாராவது உங்கள் உணர்ச்சிகளை வினைமையாகப் புண்படுத்தினார்களா? அப்படியென்றால் இயேசுவின் வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள்: “அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து.” (மத்தேயு 18:15) நீங்கள் புண்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்பதைக்கூட அந்த நபர் அறியாமல் இருப்பதை நீங்கள் காண்பதற்கு ஆச்சரியப்படுவீர்கள். அவர் அறிந்திருந்தாலும்கூட, இயேசு சொன்னது போல நீங்கள் உங்கள் சகோதரனை “ஆதாயப்படுத்திக்” கொள்ளலாம். அவர் மற்றொருவரை இடறலடையச் செய்வதைத் தவிர்ப்பதற்கும் நீங்கள் அவருக்கு உதவக்கூடும். மேலும், அதைக் குறித்து நீங்கள் சிந்தித்துப் பார்த்தால், நீங்கள் உண்மையிலேயே யாரைச் சேவிக்கிறீர்கள்—அந்த நபரையா அல்லது கடவுளையா? அபூரண மானிடனின் எந்த ஒரு தவறும் நீங்கள் கடவுள் மீது கொண்டுள்ள அன்பில் குறுக்கிட அனுமதிக்குமளவுக்கு அவர் பேரிருள்ள உங்களுடைய அன்பு மட்டுப்பட்டதாக இருக்கிறதா?
10, 11. ஏதோ இரகசிய பாவம் உங்களைப் பின்வாங்கச் செய்து கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
10 ஓர் இரகசிய பாவம் ஒருவேளை ஒரு நபரை முழுக்காட்டுதல் பெறுவதிலிருந்து பின்வாங்கச் செய்யலாம். இது கடந்த காலத்தில் நடந்த ஏதோவொன்றாக இருக்கக்கூடும். அல்லது இது தொடர்ந்து வரும் தவறான பழக்கமாயிருக்கலாம். இது உங்களுக்கு ஒரு பிரச்னையாக இருந்தால், இந்த விஷயத்தைச் சரி செய்வதற்கான நேரம் இதுவல்லவா? (1 கொரிந்தியர் 7:29–31) யெகோவாவின் மக்களில் அநேகர் தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. பைபிள் இவ்வாறு சொல்கிறது: “ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், . . . உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.”—அப்போஸ்தலர் 3:19, 20.
11 கடந்த காலங்களில் நீங்கள் எதைச் செய்திருந்தாலும், நீங்கள் மனந்திரும்பி மாற்றம் செய்து கொண்டு கடவுளிடம் மன்னிப்புக் கேட்கலாம். “ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள். . . . பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே.” நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை அவருடைய வழிகளுக்கு இசைவாக கொண்டு வரலாம், ஒரு சுத்தமான மனச்சாட்சியை அனுபவிக்கலாம், மேலும் அவருடைய நீதியான புதிய உலகில் நித்திய ஜீவன் என்ற நம்பிக்கையையும் கொண்டிருக்கலாம். அதற்காக என்ன முயற்சி எடுத்தாலும் அது தகுதியானதல்லவா?—கொலோசெயர் 3:5–10; ஏசாயா 1:16, 18; 1 கொரிந்தியர் 6:9–11; எபிரெயர் 9:14.
12. புகையிலை, மதுபான துர்ப்பிரயோகம் அல்லது அடிமையாக்கும் போதைப் பொருட்கள் உங்களுக்கும் ஒரு சுத்தமான மனச்சாட்சிக்கும் இடையே இருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
12 புகையிலை உபயோகிப்பது, மதுபான துர்ப்பிரயோகம் அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் போன்றவை உங்களுக்கும் சுத்தமான மனச்சாட்சிக்கும் இடையே நிற்கிறதா? அப்படிப்பட்ட உயிரை அச்சுறுத்தும் பழக்கங்கள் கடவுளுடைய மகத்தான பரிசாகிய ஜீவனுக்கு அவமரியாதையை காண்பிப்பதாய் இருக்காதா? அப்படிப்பட்ட பழக்கங்கள் உங்களுக்கு தடையாக இருந்தால், நிச்சயமாகவே அவைகளைத் திருத்துவதற்கு இதுவே நேரமாயிருக்கிறது. இந்தப் பழக்கங்கள் உங்கள் ஜீவனுக்கு ஈடாகுமா? பவுல் இவ்வாறு சொன்னார்: “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக் கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” அதைச் செய்வதற்கு நீங்கள் போதிய அளவு கடவுளின் சுத்தமான, நீதியான வழிகளைப் போற்றுகிறீர்களா?b—2 கொரிந்தியர் 7:1.
பொருள் உடைமைகள்
13, 14. (எ) பொருள் சம்பந்தமான இலக்குகளைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? (பி) பரலோக காரியங்களை முதலில் வைக்க வேண்டியது ஏன் முக்கியமாயிருக்கிறது?
13 இன்றைய உலகம் வெற்றியையும், “ஜீவனத்தின் பெருமையையும்” மற்ற எல்லாக் காரியங்களுக்கும் முன்பாக வைக்கிறது. ஆனால் இயேசு “உலகக் கவலைகளையும், ஐசுவரியத்தின் மயக்கத்தையும்” கடவுளுடைய வார்த்தையை நெருக்கிப் போடும் “முட்களுக்கு” ஒப்பிட்டார். அவர் கூடுதலாக கேட்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?”—1 யோவான் 2:16; மாற்கு 4:2–8, 18, 19; மத்தேயு 16:26.
14 பறவைகள் உணவைக் கண்டுபிடிப்பதற்கும், லில்லிப் பூக்கள் பிரகாசமாக மலர்வதற்கும் கடவுள் ஏற்பாடு செய்தார் என்று இயேசு குறிப்பிட்டுக் காட்டினார். பின்பு அவர் கேட்டார்: “பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள் . . . தேவன் . . . உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” பொருள் உடைமைகளைப் பற்றி “கவலைப்படாதிருங்கள்” என்று ஞானமாக இயேசு நமக்குச் சொன்னார். அவர் சொன்னார்: “தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” நாம் பரலோக காரியங்களை முதலில் வைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுக் காட்டினார். ஏனென்றால் ‘நம்முடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே நம்முடைய இருதயமும் இருக்கும்.’—லூக்கா 12:22–31; மத்தேயு 6:20, 21.
கடவுளின் உதவியோடு தெய்வீக சேவை
15. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் முன்மாதிரி என்ன சிறந்த உற்சாகத்தை நமக்குக் கொடுக்கிறது?
15 மற்றவர்களுக்கு சாட்சி கொடுப்பது உங்களுக்கு ஒரு பிரச்னையாய் தோன்றுகிறதா? வெட்கம் உங்களை பின்வாங்கச் செய்கிறதா? அப்படியென்றால், இன்று நமக்கிருப்பதைப் போன்ற அதே விதமான உணர்ச்சிகள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கும் இருந்தது என்பதை ஞாபகத்தில் வைப்பது முக்கியமாயிருக்கிறது. கடவுள் அநேக ஞானிகளையும், வல்லமை வாய்ந்தவர்களையும் தேர்ந்தெடுக்காமல், “பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார்.” (1 கொரிந்தியர் 1:26–29) வல்லமை வாய்ந்த மதத் தலைவர்கள் இந்தச் “சாதாரண” ஆட்களை எதிர்த்து, பிரசங்கம் செய்வதை நிறுத்தும்படி கட்டளையிட்டனர். அந்தக் கிறிஸ்தவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஜெபித்தனர். அவர்கள் தைரியத்துக்காக கடவுளிடம் கேட்டனர், அவர் அவர்களுக்கு அதை கொடுத்தார். அதன் விளைவாக, அவர்களுடைய செய்தி எருசலேமை நிரப்பிற்று, பின்னர் முழு உலகத்தையும் குலுக்கியது!—அப்போஸ்தலர் 4:1–4, 13, 17, 23, 24, 29–31; 5:28, 29; கொலோசெயர் 1:23.
16. எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் ‘மேகம் போன்ற திரளான சாட்சிகளிலிருந்து’ நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
16 ஆக, மனிதருக்கான பயம் நமக்கும் கடவுளுடைய சேவைக்கும் இடையே ஒருபோதும் வரக்கூடாது. எபிரெயர் 11-ம் அதிகாரம், மனிதருக்கு அல்ல, கடவுளுக்குப் பயந்த ஒரு பெரிய ‘மேகம் போன்ற திரளான சாட்சிகளைப்’ பற்றி சொல்கிறது. அதே போன்ற விசுவாசத்தை நாமும் காண்பிக்க வேண்டும். அப்போஸ்தலன் இவ்வாறு எழுதினார்: “மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, . . . நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.”—எபிரெயர் 12:1.
17. ஏசாயாவின் மூலம் கடவுள் என்ன உற்சாகத்தைக் கொடுத்தார்?
17 கடவுள் தம் ஊழியர்களுக்கு மிகப் பெரிய உதவியைத் தர முடியும். பிரபஞ்சத்தை சிருஷ்டித்தவர், ஏசாயாவிடம் இவ்வாறு சொன்னார்: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்.”—ஏசாயா 40:31.
18. ராஜ்ய பிரசங்கிப்பில் பகிர்ந்து கொள்வதற்கு வெட்கப்படுவதை நீங்கள் எவ்வாறு மேற்கொள்ளலாம்?
18 உள்ளூர் சபையில் நீங்கள் காணும் தைரியமும் சந்தோஷமுமுள்ள சாட்சிகள் பூமி முழுவதிலுமுள்ள 40 லட்சத்திற்கும் மேலான வைராக்கியமுள்ள ஊழியர்களின் ஒரு சிறு பாகமேயாகும். இயேசு கிறிஸ்துதாமே இப்படிப்பட்ட வார்த்தைகளில் முன்னறிவித்த வேலையில் ஒரு பங்கை கொண்டிருக்க அவர்கள் சந்தோஷப்படுகின்றனர்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” ராஜ்ய பிரசங்கிப்பில் பங்கு கொள்வதற்கு நீங்கள் தகுதியானவர்களாயிருந்தாலும் அதை செய்வது உங்களுக்கு ஒரு பிரச்னையாக இருந்தால், ஊழியத்தில் நன்றாக செய்யும் ஒரு சாட்சியுடன் சேர்ந்து பிரசங்க வேலையில் பங்கு கொள்வதற்கு நீங்கள் ஏன் அவர்களைக் கேட்கக்கூடாது? கடவுள் உண்மையிலேயே “அசாதாரணமான வல்லமையை” கொடுக்கிறார், இந்தத் தெய்வீக சேவை உண்மையிலேயே எவ்வளவு சந்தோஷமானது என்பதைக் கண்டு நீங்கள் ஒருவேளை ஆச்சரியப்படுவீர்கள்.—மத்தேயு 24:14; 2 கொரிந்தியர் 4:7; சங்கீதம் 56:11-ஐயும் பாருங்கள்; மத்தேயு 5:11, 12; பிலிப்பியர் 4:13, NW.
19. என்ன கற்பிக்கும் வேலையை இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் செய்யும்படி கட்டளையிட்டார்?
19 ராஜ்ய செய்தியை மதித்துணருபவர்கள் அதன் பேரில் செயல்பட வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார். அவர் இவ்வாறு சொன்னார்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.”—மத்தேயு 28:19, 20.
20. நீங்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், என்ன கேள்வி விரைவில் பொருத்தமானதாயிருக்கும்?
20 கடவுளின் ஆசீவாதங்கள், இயேசுவின் “விலையேறப் பெற்ற இரத்தம்,” நித்திய ஜீவன் என்ற மகத்தான நம்பிக்கை ஆகியவற்றுக்கான உங்களுடைய மதித்துணர்வு செயல்படுவதற்கு உங்களைத் தூண்டுகிறதா? (1 பேதுரு 1:19) நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை கடவுளின் நீதியான தேவைகளுக்கு இசைய கொண்டு வந்திருக்கிறீர்களா? சீஷர்களை உண்டுபண்ணுவதில் நீங்கள் ஒழுங்காக பங்குகொள்கிறீர்களா? நீங்கள் உங்களைத் தானே சொந்தம் துறந்து கடவுளுக்கு உங்கள் ஜீவனை ஒப்புக்கொடுத்திருக்கிறீர்களா? இந்த எல்லாக் கேள்விகளுக்கும் விடை ஒரு நிச்சயமான ஆம் என்றிருந்தால், நீங்கள் ஆஜராகும் சபையின் மூப்பர்களில் ஒருவரை, விசுவாசித்த எத்தியோப்பியன் பிலிப்புவை “நான் ஞானஸ்நானம் பெறுகிறதவற்குத் தடையென்ன?” என்று கேட்ட அதே கேள்வியைக் கேட்பதற்கு இது ஒருவேளை நேரமாயிருக்கலாம்.—அப்போஸ்தலர் 8:36. (w90 8/1)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்பதற்கு என்ன விசேஷ காரணங்கள் நமக்கு இருக்கின்றன?
◻ விசுவாசமும் போற்றுதலும் நம்மை என்ன செய்யும்படி தூண்ட வேண்டும்?
◻ நமக்கும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருப்பதற்கும் இடையே என்ன பிரச்னைகள் இருக்கக்கூடும்? அவைகளைக் குறித்து நாம் என்ன செய்யலாம்?
◻ இன்னும் முழுக்காட்டப்படாத நபர்கள் என்ன கேள்விகளை தங்களையே கேட்டுக் கொள்ளலாம்?
[அடிக்குறிப்புகள்]
a தி ஜெருசலேம் பைபிள் (The Jerusalem Bible) இதைத் “தன்னையே துறந்து” என்று வழங்குகிறது. J.B. பிலிப்ஸ் “தனக்குரிய எல்லா உரிமைகளையும் விட்டுக்கொடுத்து” என்று மொழிபெயர்க்கிறது. தி நியு இங்லிஷ் பைபிள் (The New English Bible) சொல்லுவதாவது: “தன்னையே பின்னே விட்டுவிடுவது.”
b இப்படிப்பட்ட பழக்கங்களிலிருந்து விடுபடுவதன் பேரில் தகவலுக்கு ஆங்கில காவற்கோபுரம், பிப்ரவரி 1, 1981, பக்கங்கள் 3–12; ஜூன் 1, 1973, பக்கங்கள் 336–43; மற்றும் ஆங்கில விழித்தெழு! ஜூலை 8, 1982, பக்கங்கள் 3–12; மே 22, 1981, பக்கங்கள் 3–11 பார்க்கவும். இவை யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் ராஜ்ய மன்றங்களின் நூலகத்தில் கிடைக்கக்கூடும்.
6. (எ) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை எவ்வாறு வெளிக்காட்டினார்கள்? (பி) இது நமக்கு என்ன முன்மாதிரியை வைக்க வேண்டும்?
[பக்கம் 13-ன் பெட்டி]
‘நான் என்ன வகையான “நிலமாக” இருக்கிறேன்?’
இயேசு விதைக்கிறதற்குப் புறப்பட்டுச் சென்ற ஒரு மனிதனைப் பற்றிய ஓர் உவமையைக் கொடுத்தார். சில விதைகள் வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப் போட்டது. மற்றவை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தன; இவை முளைத்தன, ஆனால் வெயில் ஏறினபோது அவை உலர்ந்து போனது. இன்னும் மற்ற விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன, அவை நெருக்கிப் போடப்பட்டன. இந்த மூன்று தொகுதிகளும் பிரதிநிதித்துவம் செய்ததாக இயேசு சொன்னது: முதலாவது, “ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்” நபர். இரண்டாவது, வசனத்தை ஏற்றுக்கொள்கிறவர், ஆனால் “உபத்திரவமும் துன்பமும்” உண்டானவுடனே விலகிவிடுகிறவர்; மூன்றாவது நபருக்கு “உலகக் கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறது.”
ஆனால் நல்ல நிலத்தில் விழுந்த மற்ற விதையைப் பற்றியும்கூட இயேசு கூறினார். அவர் சொன்னார்: ‘வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, பலன் தருகிறவன்.’—மத்தேயு 13:3–8, 18–23.
‘நான் என்ன வகையான “நிலமாக” இருக்கிறேன்?’ என்று நம்மைநாமே கேட்டுக் கொள்வது சிறந்ததாகும்.
[பக்கம் 14-ன் பெட்டி]
அவர்கள் தங்கள் விசுவாசத்துக்காக மரித்தார்கள்
தன்னுடைய விசுவாசத்தை மீறுவதைக் காட்டிலும் மரிக்கத் தெரிந்து கொள்ளும் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா? ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் அதைச் செய்திருக்கிறார்கள், நாசி அரசும் புதிய மதங்களும்: ஒத்திணங்கிப் போகாத ஐந்து உதாரணங்கள் (The Nazi State and the New Religions: Five Case Studies in Non-Conformity)-ல் டாக்டர் கிறிஸ்டீன் E. கிங் எழுதினார்: “ஒவ்வொரு இரண்டு ஜெர்மன் சாட்சிகளில் ஒருவர் சிறையிலடைக்கப்பட்டார், நான்கில் ஒருவர் உயிரிழந்தார்.”
முகாம்களின் பயங்கரம் கடைசியாக 1945-ல் முடிவுக்கு வந்தபோது, “சாட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டிருந்தது, ஒத்திணங்கிப் போதல் எதுவும் இருக்கவில்லை.” சர்ச்சுகளின் நாசி துன்புறுத்தல் (The Nazi Persecution of the Churches)-ல் J. S. கான்வே சாட்சிகளைக் குறித்து எழுதினார்: “ஜெர்மன் ஒற்றுக்காவல் படையினுடைய பயங்கரவாதத்தின் முழு வலிமையை எதிர்த்து வேறு எந்தப் பிரிவும் இவர்களைப் போன்ற ஒரு மனஉறுதியைக் காண்பிக்கவில்லை.”
யெகோவாவின் சாட்சிகள் அரசியல் அல்லது இனம் காரணமாக துன்புறுத்தப்படவில்லை. மாறாக, கடவுளிடமாக அவர்களுடைய அன்பின் காரணமாகவும் பைபிளால்–பயிற்றுவிக்கப்பட்ட தங்கள் மனச்சாட்சியை மீறுவதற்கு அவர்கள் மறுத்ததற்காகவுமே துன்பமனுபவித்தார்கள்.