“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்”
இரண்டாவது கொரிந்தியரிலிருந்து முக்கிய குறிப்புகள்
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களைப் பற்றி கவலையுள்ளவனாக இருந்தான். அவர்களுக்கு அவன் எழுதிய முதலாம் கடிதத்தில் கொடுத்திருந்த புத்திமதியை அவர்கள் எவ்விதமாகக் ஏற்றுக்கொள்வார்கள்? அந்தக் கடிதம் கொரிந்தியர்களை மனந்திரும்புவதற்கேதுவாகத் துக்கப்படுத்தியது என்ற சாதகமான அறிக்கையை தீத்து கொண்டுவந்த போது அவன் மக்கெதோனியா நாட்டிலிருந்தான். அது பவுலை எவ்விதமாகக் களிகூரும்படிச் செய்தது!—2 கொரிந்தியர் 7:8–13.
பவுல் இரண்டு கொரிந்தியரை மக்கெதோனியாவிலிருந்து ஒருவேளை பொ.ச. 55-ம் ஆண்டின் நடுவில் எழுதியிருக்க வேண்டும். இந்தக் கடிதத்தில் சபையைச் சுத்தமாக வைத்திருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் குறித்துப் பேசினான், யூதேயாவில் தேவையிலிருக்கும் விசுவாசிகளுக்கு உதவி செய்ய ஆசையை எழுப்பினான், தன்னுடைய அப்போஸ்தல ஊழியத்துக்கு விளக்கமளித்து வாதாடினான். பவுல் சொன்ன அநேக விஷயங்கள், ‘நாம் விசுவாசமுள்ளவர்களோவென்று நம்மைச் சோதித்துப் பார்ர்க’ நமக்கு உதவி செய்யக்கூடும். (13:5) ஆகவே இந்தக் கடிதத்திலிருந்து நாம் என்ன தகவல்களைத் திரட்டிக் கொள்ளலாம்?
ஆறுதலின் தேவனுக்கு ஊழியன்
நம்முடைய எல்லா உபத்திரவங்களிலும் தேவன் நமக்கு ஆறுதல் செய்கிறவிதமாக, நாம் மற்றவர்களுக்கு ஆறுதலளித்து அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று அப்போஸ்தலன் காண்பித்தான். (1:1–2:11) பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் அளவுக்கு மிஞ்சிய அழுத்தத்தின் கீழிருந்தபோதிலும் தேவன் அவர்களைக் காப்பாற்றினார். என்றபோதிலும் மெய் விசுவாசத்தை ஏற்றுக்கொள்கிற மற்றவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டியிருப்பது போலவே கொரிந்தியர்கள் அவர்களின் சார்பாக ஜெபிப்பதன் மூலம் உதவிசெய்யலாம். ஆனால் 1 கொரிந்தியர் 5-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுக்கங்கெட்ட மனிதனைப் பற்றி என்ன? அவன் சபைநீக்கம் செய்யப்பட்டு, ஆனால் மனந்திரும்பி இருக்க வேண்டும். கொரிந்தியர்கள் தங்கள் மன்னிப்பை அளித்து அன்போடு தங்கள் மத்தியில் அவனுக்கு மீண்டும் பழைய சலுகைகளைக் கொடுத்த போது அவன் எப்படி ஆறுதலடைந்திருக்க வேண்டும்.
பவுலின் வார்த்தைகள், கிறிஸ்தவ ஊழியத்துக்கு நம்முடைய போற்றுதலை அதிகரித்து மெய் விசுவாசத்துக்காக நம்முடைய நிலைநிற்கையைப் பலப்படுத்தக்கூடும். (2:12–6:10) ஏன், புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர், தேவன் முன்நின்று வழிநடத்திச் செல்லும் “வெற்றிசிறக்கும் பேரணியில்” இருக்க சிலாக்கியம் பெற்றிருக்கின்றனர்! பவுலும் அவனுடைய உடன் வேலையாட்களும் அவர்களுக்குக் காண்பிக்கப்பட்ட இரக்கத்தின் காரணமாகவே பொக்கிஷமாக ஊழியத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் போலவே, நவீன-நாளைய அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் ஒப்புரவாக்குதலின் ஊழியத்தைக் கொண்டிருக்கிறார்கள். என்றபோதிலும் யெகோவாவின் சாட்சிகள் அனைவருமே தங்கள் ஊழியத்தின் மூலமாக மற்றவர்களை ஐசுவரியவான்களாக்குகிறார்கள்.
பரிசுத்தமாகுதலைப் பூரணப்படுத்தி உதாரகுணமுள்ளவர்களாயிருங்கள்
கிறிஸ்தவ ஊழியர்கள் யெகோவாவுக்குப் பயப்படும் பயத்தில் பரிசுத்தமாகுதலைப் பூரணப்படுத்த வேண்டும் என்று பவுல் நமக்குக் காண்பிக்கிறான். (6:11–7:16) விசுவாசத்தில் நாம் உறுதியாக நிலைநிற்க வேண்டுமாயின், நாம் அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளோடு பிணைக்கப்படுவதைத் தவிர்த்து, நாம் மாம்சப் பிரகாரமாயும் ஆவிக்குரிய பிரகாரமாயும் அசுசி நீங்க சுத்திகரிக்கப்பட்டவர்களாய் இருப்பது அவசியமாகும். தவறு செய்த ஒழுக்கங் கெட்ட மனிதனை சபைநீக்கம் செய்வதன் மூலம் கொரிந்தியர்கள் சுத்திகரிக்கும் நடவடிக்கை எடுத்தனர். பவுல் அவனுடைய முதல் கடிதம், இரட்சிப்பு உண்டாக, மனந்திரும்புதலுக்கேதுவாக அவர்களை மனஸ்தாபப்படச் செய்ததைக் குறித்து களிகூர்ந்தான்.
கடவுள் பயமுடைய ஊழியர்கள், அவர்களுடைய உதார குணத்துக்காக வெகுமதியளிக்கப்படுகிறார்கள் என்பதையும்கூட நாம் கற்றறிகிறோம். (8:1–9:15) தேவையிலிருக்கும் “பரிசுத்தவான்களுக்கு” நன்கொடைகளைப் பற்றியதில், பவுல் மக்கெதோனியர்களின் சிறந்த முன்மாதிரியை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டான். அவர்கள் தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுத்திருந்தார்கள். அதேவிதமான உதாரகுணத்தை கொரிந்தியர்களின் பங்கில் காண அவன் நம்பிக்கையாயிருந்தான். அவர்களுடைய கொடுத்தல்—நம்முடையதும்—இருதயத்திலிருந்து வருவதாக இருக்க வேண்டும், ஏனென்றால், “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” மேலும் அது எல்லாவித உதாரகுணத்துக்கும் அவருடைய மக்களைச் சம்பூரணமுள்ளவர்களாக்குகிறது.
பவுல்—அக்கறையுள்ள ஓர் அப்போஸ்தலன்
ஊழியர்களாக நாம் யெகோவாவின் சேவையில் எதையாவது சாதிக்கையில் நம்மில் அல்ல, ஆனால் அவரில் மேன்மை பாராட்டுவோமாக. (10:1–12:13) எப்படியிருந்தாலும், “தேவபலமுள்ளவைகளாயிருக்கும்” ஆவிக்குரிய ஆயுதங்களைக் கொண்டு மாத்திரம் தானே நாம் தர்க்கங்களை நிர்மூலமாக்க முடியும். கொரிந்தியர்கள் மத்தியிலிருந்த தற்பெருமையுள்ள “மகா பிரதான அப்போஸ்தலர்”, கிறிஸ்துவின் ஊழியனாக, பவுலினுடைய பொறுமையின் பதிவுக்கு ஒருபோதும் நிகராயிருக்க முடியாது. என்றபோதிலும் அவன் அளவுக்கு மிஞ்சி உயர்த்தப்படாதிருக்கும்படியாக தேவன் அவன் “மாம்சத்திலே ஒரு முள்ளை”—ஒருவேளை மோசமான கண் பார்வை அல்லது அந்தப் பொய் அப்போஸ்தலர்களை—நீக்காமலிருந்தார். மாறாக, பவுல், “கிறிஸ்துவின் வல்லமை” அவனுக்கு மேல் ஒரு கூடாரமாகத் தங்கி இருக்கும்படிக்கு அவன் தன் பலவீனங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவான். விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருந்த மனிதனாக, அவன் மகா பிரதான அப்போஸ்தலரிலும் ஒன்றிலும் குறைவுள்ளவனாகத் தன்னை நிரூபித்திருக்கவில்லை. “எல்லாவித பொறுமையினாலும், அதிசயங்களினாலும், அற்புதங்களினாலும், வல்லமையினாலும்” கொரிந்தியர் மத்தியில் அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்களைப் பவுல் நடப்பித்ததைக் கொரிந்தியர்கள் பார்த்திருந்தார்கள்.
ஓர் ஊழியனாகவும், அப்போஸ்தலனாகவும் பவுல் உடன்விசுவாசிகளின் ஆவிக்குரிய அக்கறைகளைத் தன் இருதயத்தில் கொண்டவனாயிருந்தான். நாமும்கூட அதேவிதமாகவே இருக்க வேண்டும். (12:14–13:14) மிகவும் சந்தோஷமாய் ‘அவர்களுடைய ஆத்துமாவுக்காக முழுமையாக செலவுபண்ணப்பட’ அவன் விரும்பினான். ஆனால் கொரிந்துவுக்கு வருகையில், மாம்சத்தின் கிரியைகளிலிருந்து மனந்திரும்பாத சிலரைக் காண வேண்டியிருக்குமோ என பயந்திருந்தான். ஆகவே, அவர்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று தங்களைச் சோதித்து அறியும்படியாக அவன் அனைவருக்கும் புத்திசொல்லி அவர்கள் “ஒரு பொல்லாங்கும் செய்யாதிருக்கும்படியாக” அவர்களுக்காக விண்ணப்பித்தான். முடிவாக, சந்தோஷமாயிருக்கவும், நற்சீர் பொருந்தவும், ஆறுதலடையவும், ஏக சிந்தையாயிருக்கவும், சமாதானமாய் வாழவும் அவர்களைத் துரிதப்படுத்தினான். நமக்கும்கூட என்னே நேர்த்தியான புத்திமதி!
சோதித்துக்கொண்டே இருங்கள்!
கொரிந்திய கிறிஸ்தவர்களுக்குப் பவுலினுடைய இரண்டாவது கடிதம், இவ்விதமாக நாம் விசுவாசமுள்ளவர்களோவென்று நம்மை நாமே சோதித்து அறிய பல்வேறு வழிகளைக் குறித்து தெரிவிக்கிறது. தேவன் நம்முடைய எல்லா உபத்திரவங்களிலும் நமக்கு ஆறுதல் செய்வது போலவே, அவனுடைய வார்த்தைகள் நிச்சயமாகவே நம்மை மற்றவர்களுக்கு ஆறுதல் செய்ய தூண்ட வேண்டும். கிறிஸ்தவ ஊழியத்தைப் பற்றி அப்போஸ்தலன் சொன்னவை, யெகோவாவுக்குப் பயப்படும் பயத்தில் பரிசுத்தமாகுதலை நாம் பூரணப்படுத்துகையில், ஊழியத்தை உண்மையுடன் நிறைவேற்ற நம்மைத் தூண்ட வேண்டும்.
பவுலின் புத்திமதியைப் பின்பற்றுவது நம்மை அதிக உதாரகுணமுள்ளவர்களாகவும் பிரயோஜனமுள்ளவர்களாகவும் ஆக்கும். என்றபோதிலும், அவனுடைய வார்த்தைகள் நம்மில் அல்ல, யெகோவாவில் மேன்மை பாராட்ட நமக்கு நினைப்பூட்ட வேண்டும். உடன் விசுவாசிகளுக்கு நம்முடைய அன்புள்ள அக்கறையை அவை அதிகரிக்க வேண்டும். நிச்சயமாகவே இரண்டாம் கொரிந்தியரிலுள்ள இவைகளும் இன்னும் மற்றக் குறிப்புகளும் ‘நாம் விசுவாசமுள்ளவர்களோவென்று நம்மை நாமே சோதித்து அறிய’ நமக்கு உதவக்கூடும். (w90 9/15)
[பக்கம் 30-ன் பெட்டி/படம்]
யெகோவாவின் மகிமையைப் பிரதிபலியுங்கள்: மோசே சாட்சிப் பலகைகளோடு, சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தபோது, தேவன் அவனோடு பேசியிருந்தபடியினால் அவன் முகம் பிரகாசித்தது. (யாத்திராகமம் 34:29, 30) பவுல் இதைக் குறிப்பிட்டு சொன்னதாவது: “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய (யெகோவாவுடைய, NW) மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறது போலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் (யெகோவாவால், NW) அந்தச் சாயலாகத்தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.” (2 கொரிந்தியர் 3:7–18) பூர்வ காலங்களில் கண்ணாடிகள், வெண்கலம் அல்லது செம்பு போன்ற உலோகத் தாதுவால் செய்யப்பட்டு, நன்கு பிரதிபலிக்கும் பரப்பைக் கொண்டிருப்பதற்காக தேய்த்துப் பளபளப்பாக்கப்பட்டது. கண்ணாடிகளைப் போல, அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் இயேசு கிறிஸ்துவிலிருந்து அவர்களுக்குப் பிரகாசிக்கும் கடவுளுடைய மகிமையைப் பிரதிபலித்து படிப்படியாக யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்கும் குமாரன் மூலமாக அளிக்கப்படும் ‘அந்தச் சாயலாக அவர்களை மறுரூபமாக்குகிறது.’ (2 கொரிந்தியர் 4:6; எபேசியர் 5:1) பரிசுத்த ஆவியின் மூலமாகவும் வேதாகமத்தின் மூலமாகவும் தேவன் தம்முடைய சொந்த குணாதிசயங்களைப் பிரதிபலிக்கின்ற “புதிய மனுஷனை” அவர்களில் சிருஷ்டிக்கிறார். (எபேசியர் 4:24; கொலோசெயர் 3:10) நம்முடைய நம்பிக்கை பரலோகத்துக்குரியதானாலும், அது பூமிக்குரியதானாலும் அந்தப் புதிய மனுஷனை வெளிப்படுத்தி நம்முடைய ஊழியத்தில் தேவனுடைய மகிமையைப் பிரதிபலிக்கும் சிலாக்கியத்தைப் போற்றி வளர்ப்போமாக.
[பக்கம் 31-ன் பெட்டி/படம்]
“நீதியாகிய ஆயுதங்கள்”: பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் தேவ ஊழியக்காரராகத் தங்களை விளங்கப்பண்ணின ஒரு வழி, “நீதியாகிய வடதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதன்” மூலமாகும். (2 கொரிந்தியர் 6:3–7) வலது கை பட்டயத்தைக் கையாளவும் இடது கை கேடயத்தைப் பிடித்திருக்கவும் பயன்படுத்தப்பட்டது. அவர்கள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் தாக்கப்பட்டபோதிலும், பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் ஆவிக்குரிய போருக்கு ஆயுதந்தரித்தவர்களாக இருந்தார்கள். கொரிந்திய சபை கிறிஸ்துவின் பக்தியிலிருந்து விலகிவிடாதபடி அது பொய் போதகர்களுக்கும் “மகா பிரதான அப்போஸ்தலருக்கும்” எதிராகத் தொடுக்கப்பட்ட போராகும். பாவமுள்ள மாம்சப்பிரகாரமான ஆயுதங்களின்—தந்திரம், சூது அல்லது மோசடி—உதவியை பவுல் நாடவில்லை. (2 கொரிந்தியர் 10:8–10; 11:3, 12–14; 12:11, 16) மாறாகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் நீதி அல்லது நியாயமாக, எல்லாத் தாக்குதலுக்கும் எதிராக மெய் வணக்கத்தை மேம்படுத்தும் ஒரு வழிமுறையாக இருந்தது. யெகோவாவின் சாட்சிகள் இப்பொழுது, இதே நோக்கத்துக்காக இப்படிப்பட்ட “நீதியாகிய ஆயுதங்களைப்” பயன்படுத்துகிறார்கள்.