வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
சமாரியா—வடக்குத் தேசங்களின் தலைநகர்களில் குறிப்பிடத்தக்க தலைநகரம்
பாபிலோன், நினிவே, ரோம். பைபிள் காலங்களில் அவை தலைநகர்களாக இருந்தன. என்றபோதிலும், பைபிள் பிரகாரமாய்ச் சொன்னால், எருசலேமைத் தவிர மிகவும் குறிப்பிடத்தக்க தலைநகரங்களாக அவைகளில் ஒன்றும் இருக்கவில்லை, மாறாக சமாரியா அப்படி இருந்தது. ஏறக்குறைய 200 ஆண்டுகளாக அது இஸ்ரவேலின் பத்துக்கோத்திர ராஜ்யத்தின் தலைநகராக இருந்தது, மற்றும் அநேக தீர்க்கதரிசன செய்திகள் சமாரியாவைக் குறித்ததாய் இருந்தன. ஆனால் உங்களுக்குச் சமாரியாவைப்பற்றி என்ன தெரியும்? வடக்குத் தேசங்களின் தலைநகர்களில் அது குறிப்பிடத்தக்க தலைநகராக விளங்கியது ஏன்?
நில வரைப்படத்தைப் பார்க்கையில், யெகோவாவின் ராஜாவினிடமிருந்தும் எருசலேம் ஆலயத்திலிருந்தும் தன்னை முறித்துக்கொண்ட பத்துக் கோத்திரத்தின் சரித்திரத்தைச் சற்று நினைவிற்குக் கொண்டுவாருங்கள். வடக்கு ராஜ்யத்தை ஏற்படுத்துவதில் முன்நின்ற யெரொபெயாம் வடக்குத் தெற்கு மலைப் பாதையில் அமைந்த சீகேமிலிருந்து ஒரு குறுகிய காலத்திற்கு ஆட்சிசெய்தான். யெரொபெயாம் பின்னர் அதன் தலைநகரை வடக்கே திர்சாவுக்கு மாற்றிக்கொண்டான். இது உவாடி ஃபாராவின் முன் பகுதியில் இருந்தது. யோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து வந்த ஒரு பாதை திர்சாவைக் கடந்து மலைப்பாதையோடு இணைந்தது. நாதாப், பாஷா, ஏலா, சிம்ரி, மற்றும் உம்ரி ஆகியவர்களுடைய ஆட்சியின்போது திர்சா பத்துக்கோத்திர ராஜ்யத்தின் தலைநகராக இருந்தது உங்களுக்குத் தெரியுமா?—ஆதியாகமம் 12:5–9; 33:17, 18. 1 இராஜாக்கள் 12:20, 25, 27; 14:17; 16:6, 15, 22.
என்றபோதிலும், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் உம்ரி ஒரு புதிய தலைநகரைப் படைத்தான். எங்கே? நீங்கள் இடதில் காணும் மலையை, சமாரியாவை அவன் கிரயத்திற்குக் கொண்டான். (1 இராஜாக்கள் 16:23–28) அது இப்பொழுது அடுக்குநிலச் சாகுபடி செய்வதற்கு ஏராளமான படிவரிசைகளைக் கொண்டிருந்தாலும், சமவெளியில் மேல் புடைப்பாய்த் தட்டைத் தளத்தைக் கொண்ட குன்று தற்காப்புக்கு வசதியாக இருந்தது. அவனுடைய மகன் ஆகாப் சமாரியாவைக் கட்டுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தினான். அதன் அரணைத் தடித்த சுவர்களால் விஸ்தரித்தான். அவன் பாகாலுக்கு ஓர் ஆலயத்தையும் தனக்கும் தன் பினிசிய மனைவி யேசபேலுக்கும் ஓர் அரண்மனையையும் கட்டினான். அகழ்வாய்வுகள் ஆகாப் அரண்மனையின் இடிபாடுகளைக் காண்பிக்கின்றன, இது அடுத்த பக்கத்தில் காட்டப்படுகிறது. அந்த அரண்மனை உயரின்ப வாழ்வுக்கும் அளவுகடந்த அக்கிரமத்துக்கும் பேர் போனதாயிருந்தது. (1 இராஜாக்கள் 16:29–33) தீர்க்கதரிசியாகிய எலியா, பாகாலை மையமாகக் கொண்டிருக்கும் ஆகாபின் பொல்லாத செயலைக் கண்டனம் செய்ய இந்த நகரத்தினிடமாக ஏறிவருவதையும், அரண்மனைக்குச் செல்லும் அகன்ற சாலை வழியே நடந்து செல்வதையும் கற்பனை செய்து பாருங்கள்.—1 இராஜாக்கள் 17:1.
1910-ம் ஆண்டு தொல்பொருளாராய்ச்சியாளர்கள் மட்கல உடைசல்களைக் கண்டனர். திரட்சரசமும் ஒலிவ எண்ணையும் அனுப்பப்பட்ட விவரங்கள் மற்றும் வரி கட்டப்பட்ட விவரப்பதிவுகளையும் கொண்ட எழுத்துக்கள் அவற்றில் காணப்பட்டன. ஆனால் அவர்களுடைய தனிப்பட்ட பெயர்களில் பல பாகால் பெயரை உள்ளடக்கியதாக இருந்தன. தொல்பொருளாராய்ச்சியாளர் இங்கு காண்பிக்கப்பட்டிருப்பது போன்ற தந்தம் இணைத்துக் செய்யப்பட்ட பொருட்களின் சிதைவுகளையும் கண்டுபிடித்திருப்பது உங்களுக்கு அக்கறைக்குரிய ஒன்றாயிருக்கலாம். ஆகாப் “தந்த அரமனை” ஒன்றைக் கட்டினான் என்று வெகு காலத்திற்கு முன்பே 1 இராஜாக்கள் 22:39 குறிப்பிட்டிருப்பதை நினைவிற்குக் கொண்டுவாருங்கள். இது ஒருவேளை ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் ஆமோஸ் குறிப்பிட்ட சித்திர வேலைபாடுடைய “தந்தக் கட்டில்கள்” போன்ற தந்தம் பதிக்கப்பட்ட மேசை நாற்காலிகளையும் உட்படுத்தியிருக்கலாம். (ஆமோஸ் 3:12, 15; 6:1, 4) அவற்றில் பொருத்தப்பட்டிருந்த கலைப்பொருட்களில் எகிப்திய கற்பனைக் கதைகளிலிருந்து எடுக்கப்பட்ட இறக்கைகளுடைய சூரரிமா உருவங்களும் மற்ற சின்னங்களும் இருந்தன. ஆகாப் மற்றும் யேசபேல் பற்றி குறிப்பிடுகையில், அவர்கள் எவ்விதம் மரித்தார்கள் என்பது உங்கள் ஞாபகத்திற்கு வரக்கூடும். ஆகாப் முட்டாள்தனமாக சீரியாவுடன் தொடுத்தப் போரில் தன் உயிரை இழந்தான். எலியாவின் வார்த்தையின்படி, அவனுடைய இரதத்தைச் “சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது . . . நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கின.” (1 இராஜாக்கள் 21:19; 22:34–38) யேசபேல் ராணி சமாரியாவிலுள்ள அரண்மனையின் ஒரு சன்னல்வழியாய்க் கீழே எறியப்பட்டாள். அது சமாரியாவிலுள்ள இந்த அரண்மனையில் சம்பவித்ததா? இல்லை. ஆகாப் அந்தப் பள்ளத்தாக்குக்கு வடக்கே யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும்கூட ஓர் அரண்மனையைக் கொண்டிருந்தான். அதற்குப் பக்கத்திலிருந்த நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை அவன் இச்சித்தான். அந்த அரண்மனையின் உயரத்திலிருந்து கிழக்கே பார்த்துக்கொண்டிருந்த காவற்காரர்கள் யெகூ மிகவும் கோபத்தோடே அந்தப் பள்ளத்தாக்கில் தன்னுடைய இரதத்தை மேல்நோக்கி ஓட்டிவருவதைக் கண்டார்கள். அங்குதான் சமாரியவின் முன்னாள் ராணி தன் பயங்கரமான, ஆனால் நியாயமான முடிவைக் கண்டாள்.—1 இராஜாக்கள் 21:1–16; 2 இராஜாக்கள் 9:14–37.
சமாரியா ஒரு தலைநகராகத் தொடர்ந்திருந்தபோதிலும், அது கடவுளுடைய அங்கீகாரத்தையும் ஆசீர்வாதத்தையும் கொண்டிருக்கவில்லை. மாறாக, அதற்குத் தெற்கே அமைந்த தலைநகராகிய எருசலேமிடமாக போட்டிப் பொறாமையையும் வெறுப்பையும் வெளிப்படுத்தியது. அவர்களுடைய விக்கிரகாராதனை, ஒழுக்கக்கேடான நடத்தை, மற்றும் தம்முடைய சட்டத்தை மதியாதிருந்தது குறித்து சமாரியாவின் அரசர்களையும் அதன் மக்களையும் எச்சரிப்பதற்காக யெகோவா பல தீர்க்கதரிசிகளை அனுப்பியது வீணே. (ஏசாயா 9:9; 10:11; எசேக்கியேல் 23:4–10; ஓசியா 7:1; 10:5; ஆமோஸ் 3:9; 8:14; மீகா 1:1, 6) எனவே பொ.ச.மு. 740-ல் சமாரியா கணக்குத்தீர்க்க வேண்டியதாயிருந்தது, அசீரியரால் அழிக்கப்பட்டது. அதன் பெரும்பாலான மக்கள் கைதிகளாகச் சிறைகொண்டுபோகப்பட்டனர், அவர்களுடைய இடத்தில் அந்நியர் வந்தனர்.—2 இராஜாக்கள் 17:1–6, 22–24.
பின்பு, விசேஷமாக மகா ஏரோதின் காலத்தில்தான் கிரேக்கரும் ரோமரும் சமாரியாவின் மேன்மையை அதற்குத் திருப்பிக் கொடுத்தனர். எனவே இயேசுவும் அவருடைய அப்போஸ்தலருங்கூட வடக்குத் தேசங்களின் தலைநகர்களில் குறிப்பிடத்தக்க இந்தத் தலைநகரம் குறித்து அறிந்திருந்தனர்.—லூக்கா 17:11; யோவான் 4:4. (w90 11/1)
[பக்கம் 10-ன் வரைப்படம்]
(For fully formatted text, see publication)
யெஸ்ரயேல்
திர்சா
சமாரியா
சீகேம்
எருசலேம்
யோர்தான் நதி