விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு
முதல் தீமோத்தேயுவிலிருந்து முக்கிய குறிப்புகள்
சுமார் பொ.ச. 56-ல், அப்போஸ்தலனாகிய பவுல், எபேசு சபையிலிருந்த மூப்பர்களிடம், அவர்கள் மத்தியிலிருந்து, “கொடிதான ஓநாய்கள்” எழும்பி “சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள்” என்று எச்சரித்தான். (அப்போஸ்தலர் 20:29, 30) ஒரு சில ஆண்டுகளில், விசுவாச துரோகப் போதனை அத்தனை வினைமையான காரியமாகிவிட்டதன் காரணமாக, சபையின் தூய்மையைப் பாதுகாப்பதற்காக சபைக்குள்ளாக ஆவிக்குரிய போராட்டத்தைச் செய்யவும் உடன்விசுவாசிகள் விசுவாசத்தில் நிலைத்திருக்க அவர்களுக்கு உதவி செய்யவும் பவுல் தீமோத்தேயுவை துரிதப்படுத்தினான். சுமார் பொ.ச. 61–64-ல் மக்கெதோனியாவிலிருந்து பவுல் தீமோத்தேயுவுக்குத் தன்னுடைய முதல் கடிதத்தை எழுதியதற்கு அதுவே முக்கிய காரணமாக இருந்தது.
ஒரு மூப்பனின் கடமைகள், ஸ்திரீகளுக்குக் கடவுள் நியமித்திருக்கும் ஸ்தானம், மூப்பர்கள் மற்றும் உதவிஊழியர்களின் தகுதிகள், இன்னும் மற்றக் காரியங்களைக் குறித்து தீமோத்தேயு போதிக்கப்பட்டான். இப்படிப்பட்ட போதனைகள் இன்றும்கூட பயனுள்ளதாக இருக்கின்றது.
விசுவாசத்துக்குப் புத்திமதிகள்
விசுவாசத்தையும் நல்மனச்சாட்சியையும் உடையவனாயிருக்கும்படியான புத்திமதியோடு பவுல் ஆரம்பித்தான். (1:1–20) “வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்குச் . . . சிலருக்குக் கட்டளையிடும்” பொருட்டு, எபேசுவில் தங்கியிருக்கும்படியாக அவன் தீமோத்தேயுவை உற்சாகப்படுத்தினான். பவுல் தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட ஊழியத்துக்காக நன்றியுள்ளவனாக இருந்து, இயேசுவை பின்பற்றுகிறவர்களை அவன் துன்புறுத்திய போது அறியாமையிலும் விசுவாசக் குறைவிலும் செயல்பட்டதை ஒப்புக்கொள்கிறான். ‘தங்கள் விசுவாசத்தைக் குறித்து கப்பற்சேதத்தை அனுபவித்தி’ருப்பவர்களைப் போல மாறிவிடாமல், “விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிருந்து” தொடர்ந்து ஆவிக்குரிய போராட்டம் பண்ணும்படி, அப்போஸ்தலன் தீமோத்தேயுவுக்குக் கட்டளையிட்டான்.
வணக்கத்தின் பேரில் புத்திமதி
அடுத்து “புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாக” அவனுக்குப் புத்திமதி கொடுத்தான். (2:1–15) கிறிஸ்தவர்கள் அமைதலாக ஜீவனம் பண்ணும் பொருட்டு, அதிகாரமுள்ளவர்களுக்காக ஜெபம் செய்யப்பட வேண்டியதாக இருந்தது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது கடவுளுடைய சித்தமாயிருக்கிறது. கிறிஸ்து “எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்தது” ஒரு முக்கிய போதனையாகும். ஒரு ஸ்திரீ அடக்கத்தினால் தன்னை அலங்கரித்துக்கொண்டு புருஷர் மேல் அதிகாரம் செலுத்தக்கூடாது என்பதை பவுல் காண்பித்தான்.
சபை நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும். (3:1–16) ஆகவே பவுல் மூப்பர்கள் மற்றும் உதவி ஊழியர்களுக்குரிய தகுதிகளை எழுதத் தீர்மானித்தான். அப்போஸ்தலன் எழுதிய காரியங்களிலிருந்து, “சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாக” சபையில் தன்னை எவ்வாறு நடத்திக்கொள்ள வேண்டும் என்பதை தீமோத்தேயு அறிந்துகொள்வான்.
பொய்ப் போதகங்களுக்கு எதிராக எச்சரிப்பாயிருப்பதற்கு தீமோத்தேயுவுக்கு உதவி செய்ய பவுல் தனிப்பட்ட புத்திமதியை அவனுக்குக் கொடுத்தான். (4:1–16) பிற்காலங்களில் சிலர் விசுவாசத்திலிருந்து விழுந்துவிடுவார்கள். ஆனால் அவனுக்கும் அவனுடைய உபதேசத்துக்கும் இடைவிடாமல் கவனம் செலுத்துவதன் மூலம் தீமோத்தேயு ‘தன்னையும் தன் உபதேசத்தைக் கேட்கிறவர்களையும் இரட்சித்துக் கொள்வான்.’
இளைஞரும் முதியோருமான தனிப்பட்டவர்களோடு செயல்தொடர்பு கொள்வதன் பேரிலும்கூட தீமோத்தேயு புத்திமதியைப் பெற்றுக்கொண்டான். (5:1–25) உதாரணமாக, நற்சாட்சிப் பெற்ற வயதான நல்ல கிறிஸ்தவ விதவைகளுக்கு தகுதியான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியிருந்தது. புறங்கூறிக்கொண்டிருப்பதற்கு பதிலாக, இளவயதுள்ள விதவைகள் விவாகம் பண்ணி பிள்ளைகளைப் பெறவும் வேண்டும். நன்றாய் விசாரணை செய்கிற மூப்பர்கள் இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணப்பட வேண்டும்.
போதுமென்கிற மனதுடனேகூடிய தேவபக்தி
தேவபக்தியின் பேரில் புத்திமதியோடு பவுலின் கடிதம் முடிவடைகிறது. (6:1–21) “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே” மிகுந்த ஆதாயம், ஆனால் ஐசுவரியவான்களாக தீர்மானமாயிருப்பது அழிவுக்கும் கேட்டுக்கும் வழி நடத்துகிறது. பவுல் விசுவாசத்தின் நல்லப் போராட்டத்தைப் போராடி ‘நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படியாக’ தீமோத்தேயுவை துரிதப்படுத்தினான். அந்த மெய்யான வாழ்க்கையைப் பற்றிக் கொள்வதற்கு செல்வந்தர்கள் “நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமல் . . . தேவன்மேல் நம்பிக்கை வைக்க” வேண்டியவர்களாக இருந்தனர். (w91 1/15)
[பக்கம் 27-ன் பெட்டி/படம்]
பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுதல்: பவுல் பின்வருமாறு எழுதியபோது நித்திய ஜீவனுக்கு இரட்சிக்கப்படுவதைக் குறித்து அல்ல, ஆனால் தேவபக்தியுள்ள ஒரு பெண்ணின் தகுதியான ஸ்தானத்தைக் குறித்தே பேசிக்கொண்டிருந்தான்: “தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப் பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.” (1 தீமோத்தேயு 2:11–15) பிள்ளைப்பேறு, பிள்ளைகளைக் கவனித்தல், ஒரு வீட்டை நிர்வகித்தல் போன்ற இவற்றின் மூலமாக ஒரு ஸ்திரீ, வேலையில்லாமல் புறங்கூறி திரிவதிலிருந்தும் மற்ற ஆட்களின் விவகாரங்களில் தலையிடுகிறவளாக இருப்பதிலிருந்தும் “இரட்சிக்கப்படுவாள்.” (பாதுகாத்துவைக்கப்படுவாள், NW) (1 தீமோத்தேயு 5:11–15) அவளுடைய வீட்டு வேலைகள் யெகோவாவுக்கு அவளுடைய சேவையை முழுமையாக்குவதாக இருக்கும். நிச்சயமாகவே, எல்லாக் கிறிஸ்தவர்களும் தங்களுடைய நடத்தையைக் காத்துக் கொண்டு தங்களுடைய நேரத்தை ஞானமாகப் பயன்படுத்த வேண்டும்.—எபேசியர் 5:15, 16.