யெகோவாவின் இரட்சிக்கும் கரத்தில் நம்பிக்கையாயிருங்கள்
“யெகோவாவே, . . . தேவரீர் ஒவ்வொரு காலையும் எங்கள் புயமும் இக்கட்டுக் காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்.”—ஏசாயா 33:2, NW.
1. என்ன அர்த்தத்தில் யெகோவா வல்லமையான கரத்தைக் கொண்டிருக்கிறார்?
யெகோவா வல்லமையான கரத்தைக் கொண்டிருக்கிறார். நிச்சயமாகவே “தேவன் ஆவியாயிருக்கி”றபடியால் அது மாம்சத்தினால் ஆன கரம் இல்லை. (யோவான் 4:24) பைபிளில், அடையாள அர்த்தமுள்ள கரம், வல்லமையை பயன்படுத்துவதற்குரிய திறமையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. இவ்விதமாக, கடவுள் தம்முடைய கரத்தினால்தானே தம் மக்களை விடுவிக்கிறார். ஆம், ‘மேய்ப்பனைப் போல தேவன் தமது மந்தையை மேய்க்கிறார். ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து தமது மடியிலே சுமந்து செல்கிறார்.’ (ஏசாயா 40:11; சங்கீதம் 23:1–4) அவருடைய அன்புள்ள கரத்தில் யெகோவாவின் மக்கள் எவ்வளவு பாதுகாப்பாக உணருகிறார்கள்!—உபாகமம் 3:24 ஒப்பிடவும்.
2. இங்கே என்ன கேள்விகள் சிந்திப்பதற்கு தகுதியானவையாக இருக்கின்றன?
2 யெகோவாவின் கரம் எவ்விதமாக கடந்தக் காலங்களிலும் தற்காலத்திலும் அவருடைய மக்களை இரட்சித்திருக்கிறது? ஒரு சபையாக அவர்களுக்கு என்ன உதவியை அளிக்கிறார்? மக்கள் அவர்களுடைய எல்லா இக்கட்டுகளிலும் ஏன் அவருடைய இரட்சிக்கும் கரத்தில் நம்பிக்கையாயிருக்கலாம்?
கடவுளுடைய இரட்சிக்கும் கரம் செயலிலே
3. எகிப்திலிருந்து இஸ்ரவேலர் விடுவிக்கப்பட்டதற்கு வேதாகமம் யாரை காரணமாக காட்டுகிறது?
3 3,500 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்ரவேலரை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்கு முன்பாக கடவுள் தம்முடைய தீர்க்கதரிசியாகிய மோசேயிடம் இவ்வாறு சொன்னார்: “இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நானே கர்த்தர் [யெகோவா, NW]; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி, நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்பேன்.” (யாத்திராகமம் 6:6) அப்போஸ்தலனாகிய பவுலின் பிரகாரம், கடவுள் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து “தமது புய பலத்தினாலே” கொண்டுவந்தார். (அப்போஸ்தலர் 13:17) கோராவின் புத்திரர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அவர்கள் கைப்பற்றியதற்கு கடவுளையே காரணமாகக் காட்டி இவ்விதமாகச் சொன்னார்கள்: “அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள் மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலது கரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.”—சங்கீதம் 44:3.
4. அசீரியர்கள் வலிய வந்து தாக்கிய நாட்களில், யெகோவாவின் இரட்சிக்கும் கரத்தில் நம்பிக்கை வைத்தது எவ்விதமாக பலனளிக்கப்பட்டது?
4 அசீரியர்கள் வலிய வந்து தாக்கிய நாட்களிலும்கூட யெகோவாவின் கரம் அவருடைய மக்களின் உதவிக்கு வந்தது. அந்தச் சமயத்தில் ஏசாயா தீர்க்கதரிசி இவ்விதமாக ஜெபித்தான்: “யெகோவாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவனே காலையில் எங்கள் புயமும் இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்.” (ஏசாயா 33:2, NW) கடவுளுடைய தூதன் அசீரியருடைய பாளத்திலிருந்த 1,85,000 பேரை அழித்து எருசலேமிலிருந்து சனகெரிப் ராஜாவைச் “செத்த முகமாய்த்” திரும்பி அனுப்பிய போது அந்த ஜெபத்துக்கு பதில் கிடைத்தது. (2 நாளாகமம் 33:21; ஏசாயா 37:33–37) யெகோவாவின் இரட்சிக்கும் கரத்தில் நம்பிக்கை வைப்பது எப்போதும் பலனளிக்கிறது.
5. துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு முதல் உலகப்போரின் முடிவில் கடவுளுடைய வல்லமையான கரம் என்ன செய்தது?
5 கடவுளுடைய வல்லமையான கரம், முதல் உலகப் போரின் முடிவின் போது துன்புறுத்தப்பட்ட அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களை இரட்சித்தது. 1918-ல் ஆளும் குழுவின் தலைமைக்காரியாலயம் அவர்களுடைய விரோதிகளால் தாக்கப்பட்டது, நன்றாக அறியப்பட்ட சகோதரர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். உலக அரசாங்கங்களுக்குப் பயந்து, அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் உண்மையாகவே சாட்சி கொடுக்கும் தங்கள் வேலையை நிறுத்திவிட்டார்கள். ஆனால் அது மீண்டும் செய்யப்படுவதற்காகவும், செயலற்ற தன்மையின் பாவத்திலிருந்தும் பயத்தின் அசுத்தத்திலிருந்தும் சுத்திகரிக்கப்படுவதற்காகவும் அவர்கள் ஜெபித்தனர். அதைத் தொடர்ந்து விரைவில் சிறையிலடைக்கப்பட்ட சகோதரர்கள் குற்றமற்றவர்களென அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்படும்படியாகச் செய்வதன் மூலம் கடவுள் பதிலளித்தார். 1919-ல் அவர்களுடைய மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களின் விளைவாகவும், கடவுளுடைய கிரியை நடப்பிக்கும் சக்தி ஊற்றப்பட்டதாலும், கடைசியாக யோவேல் 2:28–32-ன் நிறைவேற்றமாக யெகோவாவுக்கு தைரியமாக ஊழியம் செய்வதற்காக அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் புத்தூக்கம் அளிக்கப்பட்டனர்.—வெளிப்படுத்துதல் 11:7–12.
சபையில் உதவி
6. சபையில் சோதனையான ஒரு நிலைமையைச் சகித்துக்கொள்ள முடியும் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
6 கடவுள் பொதுவாக தம்முடைய அமைப்புக்கு ஆதரவளித்து வருகையில், அவருடைய கரம் அதிலுள்ள தனிநபர்களையும் தாங்குகிறது. நிச்சயமாகவே எல்லா மனிதர்களுமே அபூரணராக இருப்பதன் காரணமாக எந்தச் சபையிலுமே நிலைமைகள் பரிபூரணமாக இருப்பதில்லை. (ரோமர் 5:12) ஆகவே யெகோவாவின் சில ஊழியர்கள் சில சமயங்களில் ஒரு சபையில் சோதனையான நிலைமையை அனுபவிக்கக்கூடும். உதாரணமாக, காயு சந்திக்க வந்த சகோதரர்களை உபசரிப்போடு ஏற்றுக்கொள்வதில் “உண்மையாய்” இருக்கையில், தியோத்திரேப்பு அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை, உபசரித்தவர்களை சபையிலிருந்து புறம்பே தள்ளவும்கூட அவன் முயற்சி செய்தான். (3 யோவான் 5:9, 10) என்றபோதிலும், ராஜ்ய–பிரசங்கிப்பு வேலைக்கு ஆதரவாக தொடர்ந்து உபசரிப்பைக் காண்பிப்பதற்கு யெகோவா காயுவுக்கும் மற்றவர்களுக்கும் உதவி செய்தார். நம்முடைய விசுவாசத்தை சோதிக்கக்கூடிய ஒரு நிலைமையை சரி செய்வதற்காக நாம் அவருக்குக் காத்திருக்கையில் ஜெபசிந்தையோடு கடவுள் மீது சார்ந்திருத்தல் உண்மையான கிரியைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்க நமக்கு உதவி செய்ய வேண்டும்.
7. கொரிந்து சபையில் என்ன நிலைமைகள் இருந்தபோதிலும், அங்கிருந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு அவர்கள் செய்திருந்த ஒப்புக்கொடுத்தலை நிறைவேற்றினார்கள்?
7 நீங்கள் முதல் நூற்றாண்டு கொரிந்து சபையோடு கூட்டுறவு கொண்டிருந்ததாக வைத்துக்கொள்வோம். ஒரு சமயம் பிரிவினைவாதங்கள் அதன் ஐக்கியத்தையும், ஒழுக்கமற்ற நடத்தையை பொறுத்துக்கொண்டது அதன் ஆவியையும் அச்சுறுத்தியது. (1 கொரிந்தியர் 1:10, 11; 5:1–5) விசுவாசிகள் ஒருவரையொருவர் உலகப் பிரகாரமான நீதிமன்றங்களிடம் கொண்டுசென்றார்கள், பல்வேறு விஷயங்களைக் குறித்தும் சிலர் வாதாடிக் கொண்டிருந்தார்கள். (1 கொரிந்தியர் 6:1–8; 8:1–13) சண்டை, பொறாமை, கோபம், மற்றும் ஒழுங்கின்மை வாழ்க்கையை கடினமாக்கியது. சிலர் பவுலின் அதிகாரத்தை குறித்தும்கூட சந்தேகமெழுப்பி, அவருடைய பேச்சுத்திறமையை இகழ்ந்தனர். (2 கொரிந்தியர் 10:10) என்றபோதிலும் அந்த சபையோடு கூட்டுறவுக் கொண்டிருந்த உண்மையுள்ளவர்கள் சோதனையான அந்தக் காலத்தின் போது கடவுளுக்கு அவர்கள் செய்திருந்த ஒப்புக்கொடுத்தலை நிறைவேற்றிவந்தார்கள்.
8, 9. ஒரு சபையில் கடுஞ்சோதனையான நிலைமையை நாம் எதிர்ப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
8 கடுஞ்சோதனையான நிலைமை எழும்போது நாம் கடவுளுடைய ஜனங்களை விடாது பற்றிக்கொண்டிருப்பது அவசியமாகும். (யோவான் 6:66–69 ஒப்பிடவும்.) ஒரு சில ஆட்களுக்கு “புதிய ஆள்தன்மையை” தரித்துக்கொண்டு, இரக்கம், தயவு, மனத்தாழ்மை, சாந்தம் மற்றும் நீடிய பொறுமையை தரித்துக்கொள்வதற்கு கொஞ்சம் காலம் எடுக்கிறது என்பதை அறிந்தவர்களாய் ஒருவருக்கொருவர் பொறுமையாய் இருப்போமாக. கடவுளுடைய ஊழியர்கள் பின்னணியிலும்கூட வித்தியாசப்படுவதன் காரணமாக நாம் அனைவருமே அன்பு காண்பித்து மன்னிக்கிறவர்களாயிருப்பது அவசியமாகும்.—கொலோசெயர் 3:10–14.
9 பல ஆண்டுகளாக யெகோவாவுக்குச் சேவை செய்த பின்பு, ஒரு சகோதரர் சொன்னார்: “எனக்கு அதிமுக்கியமான காரியம் ஒன்று இருந்திருக்குமேயானால், அது யெகோவாவின் காணக்கூடிய அமைப்பிடமாக நெருக்கமாக இருக்கும் விஷயமாகவே இருந்திருக்கிறது. என்னுடைய ஆரம்பக்கால அனுபவம் மனித நியாயத்தின் மீது சார்ந்திருப்பது எத்தனை தவறானதாக இருக்கும் என்பதை எனக்கு கற்பித்தது. அந்த விஷயத்தைப் பற்றி என்னுடைய மனதில் தெளிவு ஏற்பட்டவுடன், நான் உண்மையுள்ள அமைப்பில் நிலைத்திருக்க தீர்மானித்துவிட்டேன். வேறு எவ்விதமாக ஒருவர் யெகோவாவின் தயவையும் ஆசீர்வாதத்தையும் பெறமுடியும்?” அதேப் போன்று நீங்கள் யெகோவாவை அவருடைய மகிழ்ச்சியுள்ள ஜனத்தோடு சேவிக்கும் சிலாக்கியத்தை அருமையாகக் கருதுகிறீர்களா? (சங்கீதம் 100:2) அப்படியானால், எதுவுமே கடவுளுடைய அமைப்பிலிருந்து உங்களை விலகச் செய்யவோ அல்லது தம்மை நேசிக்கிற அனைவரையும் இரட்சிக்கின்ற கரத்தையுடையவரோடு நம்முடைய உறவை அழித்துவிடவோ அனுமதிக்கமாட்டீர்கள்.
சோதனைகள் நம்மைத் தாக்கும்போது உதவி
10. (எ)கடவுளுடைய ஜனங்களுக்குச் சோதனையை எதிர்ப்பட ஜெபம் எவ்வாறு உதவி செய்கிறது? (பி) 1 கொரிந்தியர் 10:13-ல் பவுல் என்ன உறுதியைக் கொடுக்கிறார்?
10 கடவுளுடைய அமைப்போடு கூட்டுறவுக் கொண்டிருக்கும் உண்மையுள்ள தனிப்பட்ட ஆட்களாக, சோதனையான சமயத்தில் நமக்கு அவருடைய உதவி இருக்கிறது. உதாரணமாக, நாம் சோதனையால் தாக்கப்படுகையில் அவருக்கு நம்முடைய உத்தமத்தைக் காத்துக்கொள்ள அவர் நமக்கு உதவி செய்கிறார். நாம் நிச்சயமாகவே இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாக ஜெபிக்க வேண்டும்: “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீயவனிடமிருந்து [பிசாசாகிய சாத்தான்] எங்களை மீட்டருளும்.” (மத்தேயு 6:9–13, NW) அவருக்குக் கீழ்ப்படியாமற் போகும்படியாக நாம் சோதிக்கப்படுகையில், நாம் தவறிவிட நம்மை அனுமதிக்கக்கூடாது என்று உண்மையில் நாம் கடவுளை கேட்கிறோம். சோதனையை மேற்கொள்வதற்கு ஞானத்துக்காக நாம் ஜெபிக்கையிலும்கூட அவர் பதிலளிக்கிறார். (யாக்கோபு 1:5–8) மேலும் யெகோவாவின் ஊழியர்கள் அவருடைய உதவியைக் குறித்து நிச்சயமாக இருக்கலாம், ஏனென்றால் பவுல் சொன்னார்: “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிப்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” (1 கொரிந்தியர் 10:13) இப்படிப்பட்ட சோதனைகளின் ஊற்றுமூலம் எது? தப்பித்துக்கொள்ளும் போக்கை கடவுள் எவ்விதமாக உண்டாக்குகிறார்?
11, 12. இஸ்ரவேலர் என்ன சோதனைகளுக்கு விட்டுக்கொடுத்தனர்? அவர்களுடைய அனுபவங்களிலிருந்து நாம் எவ்வாறு நன்மையடையலாம்?
11 கடவுளுக்கு உண்மையற்றவர்களாக இருப்பதற்கு நம்மைத் தூண்டக்கூடிய சூழ்நிலைமைகளிலிலிருந்து சோதனை வருகிறது. பவுல் சொன்னார்: “அவர்கள் [இஸ்ரவேலர்] இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாகயிருக்கிறது. ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனது போல நீங்களும் ஆகாதிருங்கள். அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக. அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக. அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்.”—1 கொரிந்தியர் 10:6–10.
12 இஸ்ரவேலர், கடவுள் அற்புதமாக அருளிச்செய்திருந்த காடைகளைச் சேர்ப்பதிலும் புசிப்பதிலும் பேராசைக்கொண்டவர்களாய் இருப்பதற்கான சோதனைக்கு இடங்கொடுத்த போது பொல்லாங்கானவைகளை இச்சித்தார்கள். (எண்ணகமம் 11:19, 20, 31-35) இதற்கு முன்னதாக, மோசே இல்லாதபோது கன்றுக்குட்டி வணக்கத்தில் ஈடுபடுவதற்கான சோதனை ஏற்பட்டபோது அவர்கள் விக்கிரகாராதனைக்காரர் ஆனார்கள். (யாத்திராகமம் 32:1–6) அவர்கள் சோதனைக்கு இடங்கொடுத்து மோவாபிய பெண்களோடு வேசித்தனம் செய்ததன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் அழிந்தனர். (எண்ணாகமம் 25:1–9) இஸ்ரவேலர் சோதனைக்கு இடங்கொடுத்து கோராகு, தாத்தான், அபிராம் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகள் அழிக்கப்பட்டதைக் குறித்து முறுமுறுத்தபோது, கடவுள் அனுப்பி வைத்த ஒரு வாதையினால் 14,700 பேர் அழிந்துபோயினர். (எண்ணாகமம் 16:41–49) இந்தச் சோதனைகளில் ஒன்றுகூட இஸ்ரவேலரால் எதிர்க்க முடியாத அளவுக்குப் பெரியதாக இல்லை என்பதை நாம் உணருவோமேயானால், நாம் இப்படிப்பட்ட அனுபவங்களிலிருந்து நன்மை பெறுவோம். அவர்கள் விசுவாசத்தை அப்பியாசித்திருந்தால், கடவுளுடைய அன்புள்ள கவனிப்புக்காக நன்றியுள்ளவர்களாக இருந்திருந்தால், அவருடைய சட்டத்தின் நியாயத்தை மதித்துணர்ந்திருந்தால், அவர்கள் அவ்விதமாகச் செய்திருக்கலாம். யெகோவாவின் கரம் நம்மை இரட்சிக்க முடிவது போலவே அவர்களை அப்பொழுது அது இரட்சித்திருக்கக்கூடும்.
13, 14. தம்முடைய ஊழியர்கள் சோதனையை எதிர்படுகையில், தப்பித்துக்கொள்ளும் வழியை யெகோவா எவ்வாறு உண்டுபண்ணுகிறார்?
13 கிறிஸ்தவர்களாக, மனிதவர்க்கத்துக்கு பொதுவாயிருக்கும் சோதனைகளை நாம் எதிர்ப்படுகின்றோம். என்றபோதிலும், அவருடைய உதவிக்காக ஜெபித்து சோதனையை எதிர்க்க உழைப்பதன் மூலம் நாம் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாயிருக்கலாம். கடவுள் உண்மையுள்ளவராக இருக்கிறார், நாம் தாங்கிக்கொள்ள முடிகிறதற்கும் மேலாக நாம் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்க மாட்டார். நாம் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாயிருந்தால், அவருடைய சித்தத்தைச் செய்வதைக் கூடாத காரியமாக நாம் ஒருபோதும் காணமாட்டோம். சோதனையை எதிர்ப்பதற்கு நம்மைப் பலப்படுத்துவதன் மூலம் அவர் தப்பிக்கொள்ளும்படியான போக்கை உண்டாக்குகிறார். உதாரணமாக, துன்புறுத்தப்படுகையில், வேதனையை அல்லது மரணத்தைத் தப்பிக்கொள்வதற்காக ஒத்திணங்கிப் போய் விடும்படி நாம் தூண்டப்படலாம். ஆனால் நாம் யெகோவாவின் வல்லமையான கரத்தில் நம்பிக்கையாயிருக்கிறோமென்றால் அவர் நம்முடைய விசுவாசத்தை உறுதிபடுத்தி உத்தமத்தைக் காத்துக்கொள்ள நமக்குப் போதிய பெலத்தைக் கொடுக்க முடியாத ஒரு கட்டத்தைச் சோதனை ஒருபோதும் அடைவது கிடையாது. அப்போஸ்தலனாகிய பவுல் சொன்ன வண்ணமாகவே: “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.”—2 கொரிந்தியர் 4:8, 9.
14 யெகோவா, தம்முடைய ஆவியை நினைப்பூட்டுபவராகவும் போதகராகவும் பயன்படுத்துவதன் மூலமும்கூட தம்முடைய மக்களைக் காத்துவருகிறார். வேதப்பூர்வமான குறிப்புகளை மனதுக்குக் கொண்டு வந்து சோதனையை எதிர்க்கும் பொருட்டு அவைகளை எவ்விதமாக பொருத்துவது என்பதை பகுத்துணர இது நமக்கு உதவி செய்கிறது. (யோவான் 14:26) யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் ஒரு சோதனையில் உட்பட்டிருக்கும் பிரச்னைகளைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். தவறான போக்கைப் பின்பற்றும்படியாக அவர்கள் வஞ்சிக்கப்படுவதில்லை. மரணம் வரையாகவும்கூட சோதனைக்கு விட்டுக்கொடுக்காமல் சகித்திருப்பதற்கு அவர்களுக்கு உதவுவதன் மூலம் கடவுள் தப்பித்துக்கொள்ள வழியை உண்டுபண்ணியிருக்கிறார். (வெளிப்படுத்துதல் 2:10) தம்முடைய ஆவியின் மூலமாக தம்முடைய ஊழியர்களுக்கு உதவுவதைத் தவிர, யெகோவா தம்முடைய அமைப்பின் சார்பாக தேவதூதர்களைப் பயன்படுத்திவருகிறார்.—எபிரெயர் 1:14.
தனிப்பட்ட விஷயங்களில் உதவி
15. உன்னதப்பாட்டில் என்ன தனிப்பட்ட உதவியை நாம் காணக்கூடும்?
15 யெகோவாவின் அமைப்போடு கூட்டுறவு கொண்டிருப்பவர்கள் தனிப்பட்ட விஷயங்களில் அவருடைய உதவியை உடையவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, சிலர் ஒருவேளை ஒரு கிறிஸ்தவ விவாகத் துணையைத் தேடிக்கொண்டிருக்கக்கூடும். (1 கொரிந்தியர் 7:39) இதில் ஏமாற்றமடைந்தால், இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலமோனைப் பற்றி சிந்திப்பது பிரயோஜனமாக இருக்கக்கூடும். அவன் விவாகத்தில் சூலேமித்திய பெண்ணின் ஒப்புதலை அடையத் தவறினான், ஏனென்றால் அவள் ஒரு தாழ்மையான மேய்ப்பனை விரும்பினாள். இந்த விஷயத்தைப் பற்றிய ராஜாவின் பதிவு, காதல் தோல்வியின் உன்னதப்பாட்டு என்பதாக அழைக்கப்படலாம். குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் நம்முடைய சொந்த காதல் முயற்சிகள் பயனற்றதாக இருக்குமேயானால் நாம் கண்ணீர் வடிக்கக்கூடும், ஆனால் சாலமோன் தன் தோல்வியைக் கடந்து வாழ்ந்தான், நாமும்கூட அவ்விதமாகச் செய்ய முடியும். கடவுளுடைய ஆவி இச்சையடக்கத்தையும் மற்ற தெய்வீக குணாதிசயங்களையும் காண்பிக்க நமக்கு உதவக்கூடும். எவராயினும் ஒருவருடன் நாம் காதல் கொள்ள முடியாது என்ற துயரமான உண்மையை ஏற்றுக்கொள்ள அவருடைய வார்த்தை நமக்கு உதவிசெய்கிறது. (உன்னதப்பாட்டு 2:7; 3:5) என்றபோதிலும், நம்மை அருமையாக நேசிக்கும் ஓர் உடன்விசுவாசியைக் கண்டுபிடிப்பது கூடிய காரியமாயிருக்கும் என்பதை உன்னதப்பாட்டு காண்பிக்கிறது. அதிமுக்கியமாக, இந்த “உச்சஉயர்தரமான பாடல்” நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றுகிற அபிஷேகம் பண்ணப்பட்ட 1,44,000 பேராலான தம்முடைய “மணவாட்டி”யின் பேரில் கொண்டிருக்கும் அன்பில் நிறைவேறுகிறது.—உன்னதப்பாட்டு 1:1; வெளிப்படுத்துதல் 14:1–4; 21:2, 9; யோவான் 10:14.
16. விவாகமான கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் “சரீரத்திலே உபத்திரவம்” எதை உட்படுத்தக்கூடும்?
16 விசுவாசியை விவாகம் பண்ணிக்கொள்கிறவர்களும்கூட, “சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்.” (1 கொரிந்தியர் 7:28) கணவனையும் மனைவியையும் அவர்களுடைய பிள்ளைகளையும் உட்படுத்தும் கவலைகளும், வருத்தங்களும் இருக்கும். (1 கொரிந்தியர் 7:32–35) உடல்நலக்கேடு சுமைகளையும் அழுத்தங்களையும் கொண்டுவரக்கூடும். துன்புறுத்தல் அல்லது பொருளாதார இன்னல் ஒரு கிறிஸ்தவ தகப்பன் தன் குடும்பத்துக்கு வாழ்க்கையின் அத்தியாவசியங்களை அளிப்பதைக் கடினமாக்கிவிடக்கூடும். பெற்றோர்களும் பிள்ளைகளும், காவலில் அடைத்து வைக்கப்படுகையில் பிரிக்கப்படலாம், சிலர் சித்திரவதை செய்யப்படலாம், கொல்லவும்படலாம். ஆனால் இப்பேர்ப்பட்ட எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாம் யெகோவாவின் இரட்சிக்கும் கரத்தில் உண்மையில் நம்பிக்கை வைப்போமானால், விசுவாசத்தை மறுதலிக்கும்படியான சோதனைகளை நாம் எதிர்க்க முடியும்.—சங்கீதம் 145:14.
17. என்ன குடும்ப பிரச்னையை சகித்துக்கொள்ள கடவுள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் உதவி செய்தார்?
17 நாம் ஒருசில சோதனைகளை நீண்டகாலம் சகித்திருக்க வேண்டியிருக்கலாம். உதாரணமாக, ஒரு மகன் அவிசுவாசியை விவாகம் செய்து கொள்வதன் மூலம் தேவபக்தியுள்ள பெற்றோருக்குக் வேதனையை உண்டாக்கக்கூடும். முற்பிதாவாகிய ஈசாக்கு மற்றும் அவனுடைய மனைவி ரெபெக்காளின் குடும்பத்தில் இது சம்பவித்தது. 40 வயதுள்ளவனாயிருந்த ஏசா, “ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்த” இரண்டு ஏத்திய ஸ்திரீகளை விவாகம் பண்ணினான். உண்மையில், “ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.” (ஆதியாகமம் 26:34, 35; 27:46) நீடித்திருந்த இந்தப் பிரச்னையினால் ரெபெக்காளின் நீதியுள்ள ஆத்துமா வாதிக்கப்பட்டது. (2 பேதுரு 2:7, 8 ஒப்பிடவும்.) என்றபோதிலும் ஈசாக்கையும் ரெபெக்காளையும் யெகோவாவின் இரட்சிக்கும் கரம் தாங்கியது, அவரோடு பலமான ஓர் உறவைக் காத்துக்கொள்கையில், இந்தச் சோதனையைச் சகித்துக்கொள்ள அவர் அவர்களுக்கு உதவிசெய்தார்.
18. C. T. ரஸல் என்ன தனிப்பட்ட சோதனையை கடவுளுடைய உதவியோடு சகித்தார்?
18 முழுக்காட்டப்பட்ட குடும்ப அங்கத்தினர் ஒருவர் கடவுளுடைய சேவையில் செயலற்றவராகிவிடுகையில் அது வேதனையாக இருக்கிறது. (2 தீமோத்தேயு 2:15 ஒப்பிடவும்.) என்றபோதிலும், காவற்கோபுரம் சங்கத்தின் முதல் தலைவரான சார்லஸ் T. ரஸலுக்கு ஏற்பட்டது போல, சிலர் துணைவரின் ஆவிக்குரிய இழப்பையும்கூட அனுபவித்திருக்கிறார்கள். அவருடைய மனைவி சுமார் 18 ஆண்டுகால விவாகத்துக்குப்பின் சங்கத்திலிருந்து தன் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு அவரை கைவிட்டுவிட்டாள். 1903-ல் சட்டப்படி பிரிந்து செல்ல அவள் வழக்கு பதிவு செய்தாள், அது 1908-ல் அவளுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக அவர் அவளுக்கு எழுதிய கடிதத்தில் அவருடைய வேதனை தெளிவாக வெளிப்பட்டிருந்தது: “ஊக்கமாக கர்த்தரிடத்தில் நான் உனக்காக வேண்டுதல் செய்திருக்கிறேன். . . . என் துயரக் கதை சொல்லி உனக்கு சுமையேற்றமாட்டேன். என் உணர்ச்சிகளை விவரமாக விளக்குவதன் மூலம் உணர்ச்சிபூர்வமான பிரதிபலிப்பை தூண்டுவதற்கு முயற்சி செய்ய மாட்டேன். உன் உடைகளையும் மற்ற பொருட்களையும் காண்கையில் அது—கிறிஸ்துவின் ஆவியை பிரதிபலிக்கும்விதமாக அன்பும் இரக்கமும் உதவி செய்யும் தன்மையும் நிறைந்தவளாய் நீ ஒரு சமயம் இருந்ததை என் நினைவுக்கு கொண்டு வருகிறது. ஓ, நான் சொல்ல இருப்பதை ஜெபத்தோடு சிந்தித்துப் பார். எனக்கு அதிக வேதனையாக இருப்பது அதன் ஆழமான உணர்ச்சிபூர்வமான பாதிப்பு, வாழ்க்கை பயணத்தில் என்னுடைய சொந்த தனிமையுணர்ச்சியாக இல்லாமல், ஆனால் என்னால் காணமுடிகிறபடி நீ வீழ்ந்து போனதுதானே, உன் நித்திய இழப்புதானே என் அன்பே.” இப்பேர்ப்பட்ட மனவேதனையின் மத்தியிலும் ரஸல் அவருடைய பூமிக்குரிய வாழ்வின் முடிவுமட்டும் கடவுளின் ஆதரவைக் கொண்டிருந்தார். (சங்கீதம் 116:12–15) யெகோவா எப்போதுமே தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களைத் தாங்குபவராக இருக்கிறார்.
எல்லா இக்கட்டுகளிலிருந்தும் நீங்கலாக
19. இக்கட்டான பிரச்னைகள் தொடர்ந்திருக்குமானால் நாம் எதை நினைவில் வைக்க வேண்டும்?
19 யெகோவாவின் மக்கள், அவரை “இரட்சிப்பை அருளும் தேவனாகவும்” “நமக்காக அநுதினமும் பாரஞ்சுமக்கிறவராகவும்” அறிவார்கள். (சங்கீதம் 68:19, 20) ஆகவே அவருடைய பூமிக்குரிய அமைப்போடு கூட்டுறவு கொண்டுள்ள ஒப்புக்கொடுத்த தனி ஆட்களாக, இக்கட்டான பிரச்னைகள் தொடர்ந்திருக்குமேயானால், நாம் ஒருபோதும் மனமுறிந்துவிடாதிருப்போமாக. “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” என்பதை நினைவில் வையுங்கள். (சங்கீதம் 46:1) அவரில் நம்முடைய நம்பிக்கை எப்போதும் பலனளிப்பதாயிருக்கிறது. “நான் கர்த்தரைத் [யெகோவாவை, NW] தேடினேன்” என்றான் தாவீது. “அவர் எனக்குச் செவிகொடுத்து என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். . . . இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் [யெகோவா, NW] கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.”—சங்கீதம் 34:4–6.
20. என்ன கேள்விகள் இன்னும் சிந்திக்கப்பட வேண்டும்?
20 ஆம், நம்முடைய பரம தகப்பன், தம்முடைய மக்களை எல்லா இக்கட்டுகளிலிருந்தும் நீங்கலாக்கிவிடுகிறார். சபை விஷயங்களிலும் தனிப்பட்ட சொந்த விவகாரங்களிலும் உதவியளிப்பதன் மூலம் யெகோவா தம்முடைய பூமிக்குரிய அமைப்பை ஆதரித்து வருகிறார். ஆம், “கர்த்தர், [யெகோவா, NW] தம்முடைய ஜனத்தை கைவிடாமலும் இருப்பார்.” (சங்கீதம் 94:14) ஆனால் யெகோவா அவருடைய மக்களுக்குத் தனிப்பட்டவிதமாக உதவியளிக்கும் மற்ற வழிகளை நாம் அடுத்து சிந்திப்போம். நம்முடைய பரம தகப்பன், தம்முடைய ஊழியர்கள் நோயுற்றோ, மனச்சோர்வுற்றோ, இழப்பின் காரணமாக துக்கித்துக்கொண்டோ அல்லது தங்களுடைய சொந்த தவறுகளினால் மனவேதனை அடைந்தோ இருக்கையில், எவ்விதமாக அவர்களை காத்துவருகிறார்? நாம் காணப்போகும் விதமாக, இந்த விஷயங்களிலும்கூட யெகோவாவின் இரட்சிக்கும் கரத்தின் மீது சார்ந்திருப்பதற்கு நமக்கு காரணமிருக்கிறது. (w91 10/1)
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻யெகோவாவின் கரம் எவ்விதமாக கடந்த காலங்களில் இரட்சிப்பைக் கொண்டுவந்திருக்கிறது?
◻யெகோவா எவ்விதமாக தம்முடைய மக்களுக்கு சபையில் உதவி செய்கிறார்?
◻தனிப்பட்ட விவகாரங்களில் என்ன உதவியை கடவுள் அளிக்கிறார்?
◻இக்கட்டான பிரச்னைகள் தொடர்ந்திருக்குமேயானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
[பக்கம் 8 , 9-ன் படம்]
கடவுள் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து “ஓங்கிய கையினால்” மீட்டுக்கொண்டு வந்தார்