உண்மை கிறிஸ்தவத்துக்குத் திறவுகோல் என்ன?
வேறு எந்த மதத் தொகுதியைக் காட்டிலும், இன்று அநேக ஆட்கள் கிறிஸ்தவத்தையே சேர்ந்தவர்களாக உரிமைப் பாராட்டிக் கொள்கின்றனர். ஆனால் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் இவர்களின் நம்பிக்கைகள் முரணாக இருக்கின்றன, அவர்களிடம் ஐக்கியம் இல்லை. சில சமயங்களில் அவர்கள் ஒருவரையொருவர் கொல்லவும் செய்கின்றனர். அநேகர் உண்மை கிறிஸ்தவர்கள் இல்லை என்பது தெளிவாக இருக்கிறது. இயேசு, நம்முடைய நாளில் அநேகர் அவரிடம், “கர்த்தாவே, கர்த்தாவே,” என்று சொல்வார்கள், வேறு வார்த்தைகளில் சொன்னால் கிறிஸ்தவர்களாக உரிமைப்பாராட்டிக் கொள்வார்கள், என்றபோதிலும் அவர் அவர்களிடம் “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்வேன்,” என்று சொன்னார். (மத்தேயு 7:21, 23) நிச்சயமாகவே, நம்மில் எவருமே இவர்களில் ஒருவராக இருக்க விரும்ப மாட்டோம். நாம் உண்மை கிறிஸ்தவர்களா என்று எப்படி நாம் சொல்லமுடியும்?
உண்மை என்னவெனில், உண்மையான கிறிஸ்தவனாக இருப்பதற்கு மிக பல காரியங்கள் தேவைப்படுகின்றன. உண்மையான கிறிஸ்தவன் பலமான விசுவாசத்தையுடையவனாக இருக்க வேண்டும், ஏனென்றால், “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்.” (எபிரெயர் 11:6) அந்தப் பலமான விசுவாசத்தோடு பொருத்தமான கிரியைகளும் இருக்க வேண்டும். சீஷனாகிய யாக்கோபு, “கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது” என்பதாக நம்மை எச்சரித்திருக்கிறார். (யாக்கோபு 2:26) மேலுமாக ஒரு கிறிஸ்தவன், “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனின்” அதிகாரத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். (மத்தேயு 24:45–47) ஆனால் உண்மை கிறிஸ்தவத்துக்கு திறவுகோல் இந்தக் காரியங்களுக்கு புறம்பான ஒன்றாக இருக்கிறது.
திறவுகோல் என்ன? அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதின முதலாம் நிருபத்தில் இதை விளக்குகிறார்: “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.”—1 கொரிந்தியர் 13:1–3.
ஆகவே அன்பே உண்மை கிறிஸ்தவத்துக்கு திறவுகோலாகும். விசுவாசம், கிரியை மற்றும் சரியான கூட்டுறவு அத்தியாவசியமாக, இன்றியமையாததாக இருக்கிறது. ஆனால் அன்பில்லாவிட்டால், அவைகளின் மதிப்பு உணரப்படுவதில்லை. ஏன் அப்படி?
அடிப்படையில் நாம் வணங்கும் கடவுளுடைய தன்மையின் காரணமாக அப்படி இருக்கிறது. அப்போஸ்தலனாகிய யோவான், மெய் கிறிஸ்தவத்தின் கடவுளாகிய யெகோவாவை இந்த வார்த்தைகளில் விவரித்தார்: “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) யெகோவா தேவன் வல்லமை, நீதி, ஞானம் போன்ற அநேக மற்ற குணாதிசயங்களை உடையவராக இருக்கிறார், ஆனால் ஒப்புயர்வற்றவராக, அவர் அன்பின் கடவுளாக இருப்பதன் காரணமாக, தம்முடைய வணக்கத்தார் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புவார்? நிச்சயமாகவே அவரைப் பின்பற்றி அன்பை வளர்த்துக்கொள்ளும் ஆட்களாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்.—மத்தேயு 5:44, 45; 22:37–39.
சரியான உள்நோக்கம்
ஆம், அன்பு கிறிஸ்தவர்களை அவர்கள் வணங்கும் கடவுளைப் போல் இருக்கச் செய்கிறது. அவர்களுடைய உள்நோக்கங்கள் கடவுளுடைய உள்நோக்கங்களைப் போன்றே இருப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பளிப்பதற்காக இயேசுவை பூமிக்கு அனுப்ப யெகோவா தேவனை தூண்டிய உள்நோக்கம் என்னவாக இருந்தது? அன்பு. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) அப்படியென்றால் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் நம்முடைய உள்நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? மறுபடியும் அது அன்பே. “நான் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்பு கூருவதாம்.”—1 யோவான் 5:3.
தவறான உள்நோக்கத்தோடு கடவுளை சேவிப்பது கூடிய காரியமா? ஆம், தன்னுடைய நாளில் சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும் சேவித்ததாக பவுல் குறிப்பிட்டார். (பிலிப்பியர் 1:15–17) அது நமக்கு சம்பவிக்கக்கூடும். இந்த உலகம் அதிகமதிகமாக போட்டிமனப்பான்மையுள்ளதாகும், அந்த ஆவி நம்மை பாதிக்கக்கூடும். நாம் மேம்பட்ட ஒரு பேச்சாளர் என்றோ அல்லது மற்றவர்களைவிட அதிகமான பிரசுரங்களை அளிக்கும் திறமையுள்ளவரென்றோ நினைக்கும் அளவு நாம் பெருமையுள்ளவராக இருக்கக்கூடும். நம்முடைய ஊழிய சிலாக்கியங்களை வேறு ஒருவர் அனுபவித்துக் களிப்பவற்றோடு ஒப்பிட்டு நாம் சுய-முக்கியத்துவம் தேடுகிற நபராக அல்லது பொறாமைப்படுகிறவராக ஆகக்கூடும். மூப்பர் ஒருவர் திறமையுள்ள ஓர் இளம் மனிதன் முன்னேறுவதை தடைசெய்யும் அளவுக்கும்கூட தன்னுடைய அதிகார அந்தஸ்தைக் காத்துக்கொள்பவராக இருக்கக்கூடும். தனிப்பட்ட ஆதாயத்தை அடைய நாடுவதற்கான ஆசை, ஏழ்மையிலுள்ள கிறிஸ்தவர்களை அசட்டை செய்து செல்வந்தராக இருப்பவர்களோடு நட்பை வளர்த்துக்கொள்ள நம்மைத் தூண்டக்கூடும்.
நாம் அபூரணராக இருப்பதன் காரணமாக இந்தக் காரியங்கள் சம்பவிக்கக்கூடும். என்றபோதிலும்,—யெகோவாவைப் போலவே—அன்பையே நம்முடைய முக்கிய உள்நோக்கமாக நாம் ஆக்கிக்கொள்வோமானால் இப்படிப்பட்ட மனச்சாய்வுகளை நாம் எதிர்த்துப் போராடுவோம். சுயநலம், நம்மைநாமே மகிமைப்படுத்திக் கொள்ள ஆசை அல்லது மேட்டிமையான பெருமை அன்பை நெருக்கிவிடக்கூடும். அப்போது நமக்கு “பிரயோஜனம் ஒன்றுமில்லை.”—நீதிமொழிகள் 11:2; 1 கொரிந்தியர் 13:3.
சுயநலமான ஓர் உலகில் அன்பு
இயேசு, தம்மைப் பின்பற்றுகிறவர்கள் “உலகத்தாரல்ல” என்பதாக சொன்னார். (யோவான் 17:14) நாம் எவ்விதமாக நம்மைச் சுற்றியுள்ள உலகின் செல்வாக்கில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்கலாம்? அன்பு உதவி செய்யும். உதாரணமாக, இன்று மனிதர்கள் “தேவபிரியராயிராமல் சுகபோகப் பிரியராக” இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:4) நாம் அவ்விதமாக இருக்கக்கூடாது என்பதாக யோவான் நம்மை எச்சரித்தார். அவர் சொன்னார்: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.”—1 யோவான் 2:15, 16.
என்றபோதிலும், “மாம்சத்தின் இச்சை”களையும் “கண்களின் இச்சை”களையும் கைவிடுவது எளிதல்ல. இந்தக் காரியங்கள் நம்முடைய மாம்சத்துக்கு அத்தனை கவர்ச்சியூட்டுவதன் காரணமாகவே அவை நேசிக்கப்படுகின்றன. மேலுமாக, யோவானின் நாளில் இருந்ததைக் காட்டிலும் இன்று அதிகமாகவும் பல்வகைப்பட்டதுமான இன்பங்கள் கிடைக்கக்கூடியதாய் இருக்கிறது, கண்களின் இச்சை அப்போது ஒரு பிரச்னையாக இருந்ததென்றால், இன்று விசேஷமாக அவ்விதமாக இருக்கிறது.
உலகம் அளிக்கின்ற அநேக நவீன இன்பங்கள் தன்னில்தானே தவறாக இல்லாதிருப்பதுதானே அக்கறையூட்டுவதாக இருக்கிறது. ஒரு பெரிய வீடு, நேர்த்தியான ஒரு கார், தொலைக்காட்சிப் பெட்டி அல்லது ஸ்டீரியோ ஆகியவற்றைக் கொண்டிருப்பதில் எந்தத் தவறும் இல்லை. நீண்ட, அக்கறையூட்டும் பயணங்களை மேற்கொண்டு கிளர்ச்சியூட்டும் விடுமுறைகளை கொண்டிருப்பது எந்த பைபிள் சட்டத்தையும் மீறுவதாக இருக்காது. அப்படியென்றால், யோவானுடைய எச்சரிப்பின் குறிப்பு என்னவாக இருக்கிறது? ஒரு காரியமானது, இப்படிப்பட்ட காரியங்கள் நமக்கு அளவுக்கு அதிகமாக முக்கியமுள்ளவையாக ஆகிவிட்டால், அவை நம்மில் சுயநலம், பொருளாசை மற்றும் பெருமையான ஆவியை நமக்குள் வளர்க்கிறது. அவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பணம் சம்பாதிக்கும் முயற்சி, யெகோவாவுக்கு நம்முடைய சேவையில் நம்மை தடைசெய்யக்கூடும். இப்படிப்பட்ட காரியங்களை அனுபவிப்பதும்கூட நேரத்தை எடுத்துக் கொள்கிறது. நியாயமான பொழுதுபோக்கு புத்துயிரளிப்பதாக இருந்தாலும், பைபிள் படிப்பது, வணக்கத்துக்காக உடன் கிறிஸ்தவர்களோடு கூடிவருவது, ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பது போன்ற நம்முடைய கடமைகளை முன்னிட்டுப் பார்க்கையில் நம்முடைய நேரம் வரையறுக்கப்பட்டதாக இருக்கிறது.—சங்கீதம் 1:1–3; மத்தேயு 24:14; 28:19, 20; எபிரெயர் 10:24, 25.
பொருள்பற்று மிகுந்துள்ள இந்தச் சகாப்தத்தில், ‘கடவுளுடைய ராஜ்யத்தை முதலிடத்தில் வைத்து’ ‘இந்த உலகத்தை முழுமையாக அனுபவிப்பதை’ தவிர்ப்பதற்கு திடதீர்மானம் தேவைப்படுகிறது. (மத்தேயு 6:33; 1 கொரிந்தியர் 7:31) பலமான விசுவாசம் உதவி செய்யும். ஆனால் விசேஷமாக, தன்னில்தானே தவறாக இல்லாதிருக்கும், ஆனாலும் ‘நம்முடைய ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுவதிலிருந்து’ நம்மை தடைசெய்யக்கூடியதுமான கவர்ச்சிகளை எதிர்த்து நிற்பதற்கு யெகோவாவின் பேரிலும் நம்முடைய அயலான் பேரிலுமுள்ள உண்மையான அன்பு நம்மை பலப்படுத்துவதாக இருக்கும். (2 தீமோத்தேயு 4:5) இப்படிப்பட்ட அன்பில்லாமல், நம்முடைய ஊழியம், வெறுமென ஓர் அடையாள முயற்சியாக எளிதில் தரங்குறைந்துவிடக்கூடும்.
சபையில் அன்பு
இயேசு பின்வருமாறு சொன்னபோது அன்பின் முக்கியத்துவத்தை உயர்த்திக் காண்பித்தார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.” (யோவான் 13:35) மூப்பர்கள் உடன்கிறிஸ்தவர்களை நேசிக்கவில்லையென்றால் அவர்களை மேய்ப்பதிலும் அவர்களுக்கு உதவிசெய்வதிலும் ஏன் அவ்வளவு நேரத்தைச் செலவிடப்போகிறார்கள்? மூப்பர்கள் உட்பட உடன்விசுவாசிகளின் பலவீனங்களை அன்பின் காரணமாக இல்லாவிட்டால் சபை ஏன் சகித்துக்கொள்ளப் போகிறது? மற்றவர்கள் தேவையில் இருப்பதை கேள்விப்படும் போது அன்பு ஒருவருக்கொருவர் சரீரபிரகாரமாக உதவி செய்துகொள்ள கிறிஸ்தவர்களைத் தூண்டுகிறது. (அப்போஸ்தலர் 2:44, 45) துன்புறுத்தலின் போது கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் பாதுகாக்கின்றனர், ஒருவருக்காக ஒருவர் மரிக்கவும் செய்கின்றனர். ஏன், அன்பின் காரணமாகவே.—யோவான் 15:13.
சில சமயங்களில் அன்புக்கிருக்கும் மிகப் பெரிய அத்தாட்சிகள் சிறிய காரியங்களில் வருகிறது. பாரமான வேலை பளுவினால் ஏற்கெனவே அழுத்தத்தின் கீழிருக்கும் ஒரு மூப்பரிடம், உடன் கிறிஸ்தவர் ஒருவர் மூப்பருக்கு முக்கியமில்லாததாக தோன்றும் ஒரு குறையை திரும்பவுமாக கொண்டுவரக்கூடும். மூப்பர் கோபப்பட வேண்டுமா? பிரிவினைக்கு இது ஒரு காரணமாகிவிட அனுமதிப்பதற்கு பதிலாக அவர் சகோதரரோடு பொறுமையாகவும் தயவாகவும் நடந்துகொள்கிறார். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கலந்துபேசுகிறார்கள், இது அவர்களுடைய நட்பையும்கூட பலப்படுத்துகிறது. (மத்தேயு 5:23, 24; 18:15–17) ஒவ்வொருவரும் தன்தன் உரிமைகளை வற்புறுத்துவதற்குப் பதிலாக இயேசு சிபாரிசு செய்த பெருந்தன்மையை அனைவரும் வளர்த்துக்கொள்ள முற்பட வேண்டும். தங்கள் சகோதரர்களை, “ஏழெழுபதுதரம்” மன்னிக்கத் தயாராய் இருக்கவேண்டும். (மத்தேயு 18:21, 22) இவ்விதமாக, கிறிஸ்தவர்கள் அன்பினால் தங்களை உடுத்துவித்துக்கொள்ள கடினமாக முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால், அன்பு “பூரண சற்குணத்தின் கட்டாக” இருக்கிறது.—கொலோசெயர் 3:14.
ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அன்பைப் பலப்படுத்திக்கொள்ளுதல்
ஆம், யெகோவாவை சேவிப்பதற்கு சரியான உள்நோக்கம் அன்பாகவே இருக்கிறது. அன்பு, உலகிலிருந்து பிரிந்திருக்க நம்மை பலப்படுத்தும், சபை உண்மையாகவே கிறிஸ்தவமாக நிலைத்திருப்பதை உறுதிசெய்யும். தேவைக்குப் போதுமான தகுதியைக் குறைவுபடுத்தாமல், மற்றவர்களோடு செயல் தொடர்புக் கொள்கையில் தயவையும் சாந்தத்தையும் மறந்துவிடும் அளவுக்கு, அதிகாரத்திலுள்ளவர்கள் அவ்வளவு அதிகமாக தகுதி–மனதுள்ளவர்களாகிவிடாதபடிக்கு அவர்களுக்கு உதவி செய்யும். அன்பு “நடத்துகிறவர்களுக்கு . . . கீழ்ப்படிந்து அடங்கி“யிருக்க நம் அனைவருக்கும் உதவி செய்கிறது.—எபிரெயர் 13:17.
அப்போஸ்தலனாகிய பேதுரு, “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்,” ஏனென்றால் “அன்பு திரளான பாவங்களை மூடும்” என்பதாக துரிதப்படுத்தினார். (1 பேதுரு 4:8) நாம் எவ்விதமாக இதைச் செய்யலாம்? மனிதன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருப்பதால் அன்புசெலுத்த இயல்பான திறமையுள்ளவனாக இருக்கிறான். ஆனால் நாம் இங்கே பேசிக்கொண்டிருக்கும் வகையான அன்பு கூடுதலான எதையோ தேவைப்படுத்துகிறது. உண்மையில் அதுவே கடவுளுடைய ஆவியின் முக்கியமான கனியாகும். (கலாத்தியர் 5:22) ஆகவே, அன்பை வளர்த்துக்கொள்ள, கடவுளுடைய ஆவியின் செல்வாக்குக்கு நம்மை உட்படுத்த வேண்டும். எவ்விதமாக? யெகோவாவின் அவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிளைப் படிப்பதன் மூலம். (2 தீமோத்தேயு 3:16) யெகோவாவிடமும் நம்முடைய சகோதரர்களிடமும் நம்முடைய அன்பை கட்டியெழுப்ப யெகோவாவின் ஆவிக்காக ஜெபிப்பதன் மூலம். மேலும் ஆவி தாராளமாக பெருக்கெடுத்துவரும் கிறிஸ்தவ சபையோடு கூட்டுறவுக் கொள்வதன் மூலம்.
எந்த அன்பற்ற செயல்களும் அல்லது எண்ணங்களும் இருக்கின்றனதா என்பதை கண்டுணருவதற்கு நம்மைநாமே ஆராய்ந்து பார்ப்பதும்கூட அவசியமாகும். அன்பு இருதயத்தின் ஒரு குணம் என்பதையும் “இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். (எரேமியா 17:9) யெகோவா அளித்துவரும் எல்லா உதவியின் மத்தியிலும், நாம் சில சமயங்களில் அன்பற்ற விதத்தில் நடந்துகொள்கிறோம். ஓர் உடன் கிறிஸ்தவனிடம் அனாவசியமாக குத்தலாக நாம் பேசக்கூடும் அல்லது சொல்லப்பட்ட ஏதோவொன்றைக் குறித்து சிலிர்த்தெழுந்து கோபப்படலாம். ஆகவே தாவீதின் ஜெபத்தை நாம் எதிரொலிப்பது சிறந்ததாக இருக்கும்: “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.”—சங்கீதம் 139:23, 24.
பைபிள் சொல்லும் வண்ணமாக, “அன்பு ஒருக்காலும் ஒழியாது.” (1 கொரிந்தியர் 13:8) ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த நாம் பழகிகொண்டால், சோதனையான காலங்களில் நாம் ஒருபோதும் தகுதியில் குறைபட்டவர்களாக காணப்பட மாட்டோம். கடவுளுடைய மக்கள் மத்தியில் நிலவி வரும் அன்பு இன்று நிலவிவரும் ஆவிக்குரிய பரதீஸுக்கு வெகுவாக உதவிசெய்கிறது. ஒருவரிலொருவர் இருதயத்திலிருந்து ஊக்கமாக அன்புகூருகிறவர்கள் மட்டுமே புதிய உலகில் வாழ்வதில் இன்பம் காண்பர். ஆகவே இப்படிப்பட்ட அன்பை வெளிக்காட்டுவதில் யெகோவாவை பின்பற்றி, இவ்விதமாக ஐக்கியத்தின் கட்டை பலப்படுத்திக் கொள்ளுங்கள். அன்பை வளர்த்துக் கொண்டு, உண்மையான கிறிஸ்தவத்துக்குரிய திறவுகோலை உடையவராகுங்கள். (w91 10/1)