கடவுள் கொடுத்த சுயாதீனத்தில் பிரியப்படுவோருடன் ஒன்றுகூடுதல்
யெகோவாவின் சாட்சிகள் மிகப் பல வழிகளில் தனித்தன்மை வாய்ந்தவர்கள். அவர்கள் மாத்திரமே “சுத்தமான பாஷையைப்” பேசுகின்றனர். (செப்பனியா 3:9) அவர்கள் மாத்திரமே இயேசு கிறிஸ்து விவரித்த வேறுபடுத்திக்காட்டும் அன்பின் அடையாளத்தை உடையோராய், ஒற்றுமைப்பட்டிருக்கின்றனர். (யோவான் 13:35) “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்,” என்று யோவான் 8:32-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, இயேசு கிறிஸ்து சொன்ன சத்தியம் கொண்டுவரும் அந்தச் சுயாதீனத்தை அவர்கள் மாத்திரமே அனுபவித்து மகிழ்கின்றனர்.
கடவுளுடைய குமாரனான இயேசு கிறிஸ்து, தம்முடைய சீஷர்களை நோக்கிக் கூறின அந்த வார்த்தைகள் உண்மையாக நிரூபித்திருக்கின்றன. மேலும் அவை, “சுயாதீனப் பிரியர்” மாவட்ட மாநாடுகளுக்கு ஆஜரான யெகோவாவின் சாட்சிகள் எல்லாராலும் முன்னொருபோதும் உணர்ந்ததைவிட மிகுந்த அளவில் இப்பொழுது நன்றியோடு உணரப்படுகின்றன. இந்த மாநாட்டின் நிகழ்ச்சிநிரல் அவர்களுடைய சுயாதீனத்தின் பல்வேறு அம்சங்களையும், அதை அவர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பதையும், தங்கள் சுயாதீனத்தோடு செல்லும் உத்தரவாதத்தையும், ஒரு சுயாதீன ஜனமாக இருப்பதற்கு அவர்கள் எவ்வளவாய் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதையும் அவர்கள் மனதில் ஆழப் பதியச்செய்தது.
காலத்துக்குப் பொருத்தமான மற்றும் நடைமுறையான மாநாடுகள் வடகோளார்த்தத்தில் ஜூன் 7, 1991 அன்று, அமெரிக்க ஐக்கிய மாகாணத்தின், கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸில் தொடங்கின. அந்த நிகழ்ச்சிநிரல் காலை 10:20-ன்போது இசையளிப்புடனும் அதன்பின் ஒரு பாட்டு மற்றும் ஜெபத்துடனும் தொடங்கினது. தொடக்கப் பேச்சு யாக்கோபு 1:25-ல் அடிப்படைகொண்ட வல்லமைவாய்ந்த பேச்சாயிருந்தது. தி ஜெருசலெம் பைபிள் என்ற ஆங்கில பைபிளின்படி இந்த வசனம் வாசிப்பதாவது: “பரிபூரண சுயாதீனத்துக்குரிய இந்தப் பரிபூரண சட்டத்தில் நிலையாய் உற்றுநோக்கி அதைத் தன் பழக்கமாக்கிக்கொள்கிற மனிதன்—செவிகொடுத்துக் கேட்டு பின்பு மறந்துபோகாமல் செயலூக்கத்துடன் அதைப் பழக்கமாய்ச் செயல்படுத்துகிறவன்—தான் செய்யும் எல்லாவற்றிலும் மகிழ்ச்சியுள்ளவனாயிருப்பான்.”
நம்முடைய தோற்றத்தில் எங்கே நாம் முன்னேற்றங்கள் செய்யத் தேவைப்படுகிறதென்பதைக் காண நாம் ஒரு கண்ணாடியில் நம்மைக் காண்பதுபோல், நம்முடைய பண்பியல்பில் எங்கே மாற்றங்கள் செய்யும்படி தேவைப்படுகிறதென்பதை அறிந்துகொள்ள சுயாதீனத்துக்குரிய கடவுளுடைய பரிபூரண சட்டத்துக்குள் உற்றுநோக்குவதில் நாம் விடாது தொடரவேண்டும். மேலும் அந்தக் கண்ணாடிக்குள் நோக்குவதில் நாம் விடாது நிலைத்திருக்க வேண்டும்.
அடுத்தபடியாக அக்கிராசனரின் பேச்சு வந்தது, “சுயாதீனப் பிரியரே, உங்களனைவருக்கும் நல்வரவு.” யெகோவாவின் சாட்சிகள் சுயாதீனத்தை நேசிக்கிறார்கள், சுயாதீனமாய் நிலைத்திருக்க விரும்புகிறார்கள். சட்டம் இல்லாமல் சுயாதீனம் இருக்க முடியாதென்று காட்டின சட்டப்பூர்வ அதிகாரிகளைப் பேச்சாளர் மேற்கோளாக எடுத்துக் குறிப்பிட்டார். ஆம், கிறிஸ்தவர்கள் தங்கள் விருப்பம்போல் நடப்பதற்குச் சுயாதீனராய் இல்லை ஆனால் யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்குச் சுயாதீனராய் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் சுயாதீனத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவர் ஆனால் தவறான வகையிலல்ல. முக்கியமாய் 1919 முதற்கொண்டு யெகோவாவின் சாட்சிகள் அதிகரிக்கப்பட்ட சுயாதீனத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். மாநாட்டுப் பேச்சுப்பொருள்களிலும் கிறிஸ்தவ பிரசுரங்களிலும் அடைந்துள்ள சுயாதீனத்தின்பேரில் அழுத்தத்தை வைத்துப் படிப்படியாய்க் குறிப்பிட்டார். மாநாட்டுக்கு வந்திருப்போர் யாவரும் கடவுள்-கொடுத்த சுயாதீனத்தைப்பற்றியும் அதைப் பயன்படுத்தவேண்டிய முறையைப்பற்றியும் அதிகத்தைக் கற்பார்கள்.
சமயத்துக்கேற்ற இந்தக் குறிப்புரைகளுக்குப் பின், மாநாட்டில் அங்கேயிருப்பதில் களிகூர்ந்த சுயாதீனப் பிரியர்களைப் பேட்டிக் காண்பது நடந்தது. இத்தகைய மாநாடுகள், பூர்வ இஸ்ரவேலரின் வருடாந்தர பண்டிகைகள் மூன்றும் மிகுந்த சந்தோஷத்தால் குறிக்கப்பட்டதுபோலவே, மகிழ்ந்து களிகூருவதற்கான சமயங்கள். மாநாடுகள் ஆவிக்குரியபிரகாரமாய்க் கட்டியெழுப்பும் களிகூருவதற்கான சமயங்களென பேட்டிகள் பல நிரூபித்தன.
பின்பு முக்கிய பேச்சு வந்தது, “கடவுள் கொடுத்த நம்முடைய சுயாதீனத்தின் நோக்கமும் அதைப் பயன்படுத்துவதும்.” மாநாட்டுக்கு வந்தவர்கள் இந்தப் பேச்சிலிருந்து பின்வருபவற்றைக் கற்றுக்கொண்டனர்: யெகோவா ஒருவரே வரம்பற்ற சுயாதீனத்தை உடையவர், ஏனெனில் அவரே ஈடற்ற உன்னத அதிகாரி மற்றும் சர்வவல்லமையுள்ளவர். எனினும், தம்முடைய பெயரினிமித்தமும் தம்முடைய சிருஷ்டிகளின் நன்மைக்காகவும், அவர் கோபப்படுவதற்குத் தாமதமாக இருந்து தன்னடக்கத்தைப் பிரயோகிப்பதால் சில சமயங்களில் தம்முடைய சுயாதீனத்தைக் கட்டுப்படுத்துகிறார். அவருடைய அறிவுநுட்பமுள்ள சிருஷ்டிகள் யாவரும் சம்பந்தப்பட்ட சுயாதீனத்தை உடையவர்கள். ஏனெனில் அவர்கள் யெகோவாவுக்குக் கீழடங்கியவர்களும் அவருடைய இயற்கை மற்றும் ஒழுக்கச் சட்டங்களால் கட்டுப்படுத்தப்பட்டவர்களுமாய் இருக்கின்றனர். அவர்கள் மகிழ்ச்சியனுபவிப்பதற்காக யெகோவா அவர்களுக்கு சுயாதீனத்தைக் கொடுத்திருக்கிறார் ஆனால் முக்கியமாய் அவரை வணங்குவதன்மூலம் அவருக்கு கனத்தையும் சந்தோஷத்தையும் அவர்கள் கொண்டுவரும்படி அதைக் கொடுத்திருக்கிறார். யெகோவாவின் சாட்சிகள், தங்கள் சுயாதீனத்தை நல்லமுறையில் பயன்படுத்துவதால், நல்நடத்தைக்காகவும் தங்கள் ஊழியத்தில் காட்டும் ஆர்வத்துக்காகவும் உலகமெங்கும் நற்பெயர் பெற்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல்
“அதிக வேலையாக இருப்பது—செத்தக் கிரியைகளிலா அல்லது யெகோவாவின் சேவையிலா?” என்பது வெள்ளிக்கிழமை பிற்பகல் கூட்டத்தைத் தொடங்கின சிந்தனையைத் தூண்டும் பேச்சின் தலைப்பாகும். செத்தக் கிரியைகள் மாம்சத்துக்குரியவை மட்டுமல்ல ஆவிக்குரியப் பிரகாரம் செத்த, வீணான, மற்றும் பயனற்ற—பணம் சேகரிக்கும் சூழ்ச்சிமுறைகள் போன்ற மற்றவையும் உட்படுகின்றன. இந்தக் காரியத்தில், நாம் நம் வாழ்க்கையில் ராஜ்யத்தை முதலாவதாக வைக்கிறோமாவெனத் தீர்மானிக்க நேர்மையாய் நம்மைநாமே ஆராய்ந்து பார்ப்பது இன்றியமையாதது.
“கடவுளுடைய ஊழியர்களாக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளையை நிறைவேற்றுதல்,” என்ற இதைப் பின்தொடர்ந்த பேச்சு பெரும்பாலும் இதே நோக்கமுடையதாயிருந்தது, கிறிஸ்தவர்கள் வெறும் அறிகுறியான சேவையோடு அல்லது குறிக்கப்பட்ட மணிநேரத்தைப் பூர்த்திசெய்வதோடு மாத்திரமே தங்களைத் திருப்திசெய்துகொள்ளக்கூடாதென பேச்சாளர் காட்டினார். தங்கள் கிறிஸ்தவ ஊழியத்தின் எல்லா அம்சங்களிலும் பலன்தரத்தக்கவர்களாக இருக்க அவர்கள் விரும்பவேண்டும். இந்தக் குறிப்புகள், நடிப்பு மற்றும் பேட்டிகள் மூலம் மனதில் ஊன்றிப்பதியும்படி செய்யப்பட்டது. எல்லாரும் தங்கள் ஊழியத்தைக் கூடிய முழுதளவு வரையில் நிறைவேற்றும்படி அறிவுரை கூறப்பட்டனர்.
“சுயாதீனமுள்ள ஆனால் பொறுப்புவாய்ந்த ஒரு ஜனம்” என்ற பேச்சில், சத்தியம் தங்களுக்குக் கொண்டுவந்த சுயாதீனத்தை யெகோவாவின் ஜனங்கள் மனமார நேசித்தபோதிலும், அதனுடன் கணக்கொப்புவிக்கும் பொறுப்பும் செல்லுகிறதென அவர்கள் நினைவில் வைக்க வேண்டுமென பேச்சாளர் அறிவுறுத்தினார். அவர்கள் தங்கள் சுயாதீனத்தை, கெட்ட நடத்தைக்குச் சாக்குப்போக்காக அல்ல, யெகோவாவுக்குத் துதியுண்டாவதற்கேதுவாகவே பயன்படுத்த வேண்டும். கிறிஸ்தவர்களாக, அவர்கள் “மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு” கணக்கொப்புவிக்கும் பொறுப்புடையவர்கள் மற்றும் சபை மூப்பர்களுடனும் ஒத்துழைக்கவேண்டும். (ரோமர் 13:1) மேலும், தங்கள் உடை, தோற்றம், மற்றும் நடத்தைக்காகவும் கணக்கொப்புவிக்க வேண்டிய பொறுப்புடையவர்கள். “நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்,” என்பதை அவர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.—ரோமர் 14:12; 1 பேதுரு 2:16.
பின்பு “இவ்வுலகத்தின் முடிவு சமீபித்து வருகையில் பயமின்றி இருத்தல்” என்ற எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தேவைப்படும் பேச்சு பின்தொடர்ந்து. எதிர்காலம் கொண்டுவரவிருப்பதைப் பற்றி மனிதவர்க்கம் பயந்துகொண்டிருக்கையில், கிறிஸ்தவர்கள் தங்கள் ஊழியத்தை நிறைவேற்றுவதற்குப் பயமின்றி இருக்கவேண்டும். பயமின்மை யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்பதன் பலனாகும், எவ்வாறெனில், ஒரு கிறிஸ்தவன் கடவுளுக்கு வருத்தமுண்டாக்க எவ்வளவு அதிகமாய்ப் பயப்படுகிறானோ அவ்வளவு குறைவாக அவன் சிருஷ்டிகளுக்குப் பயப்படுவான். ஆறுதல்தரும் வேதவசனங்களைப் படித்து நினைவில் வைத்துக்கொள்வது பயமின்றி இருக்கும்படி ஒருவரைப் பலப்படுத்தும். ஆவிக்குரியபிரகாரம் உறுதியாயும் பயமின்றியும் இருக்க கடவுளுடைய ஊழியர்கள் உடன்-விசுவாசிகளோடு கூட்டுறவுகொள்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், பயமின்றி இருப்பதில் ஜெபம் வகிக்கும் பாகத்தையும் ஒவ்வொருவரும் நினைவில் வைக்க வேண்டும். பயமின்றி நிலைத்திருப்பதால், கிறிஸ்தவர்கள் யெகோவா தேவனுடன் நல்ல உறவைக் காத்து வருவார்கள்.
மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்கு விடுதலைசெய்யப்பட்டனர் என்ற இந்த முதல் நாளின் நிகழ்ச்சிநிரல் வெகுவாய் அறிவூட்டும் நாடகத்துடன் முடிந்தது. இது எவ்வாறு ஒரு தற்கால குடும்பம், எஸ்றா மற்றும் அவனோடு கூடிய 7,000 பேரும் எருசலேமுக்குச் செல்லும்படி தன்னலத்தியாகங்களைச் செய்ததிலிருந்து, ஒரு பாடத்தைக் கற்றார்கள் என்பதைக் காட்டினது. இது மாநாட்டுக்கு வந்த ஒவ்வொருவரும் தனக்கு முதன்மையாக முக்கியமாயிருப்பவற்றைச் சோதித்துப் பார்த்து தன் ஊழிய சிலாக்கியங்களைத் தான் அதிகரிக்கக்கூடிய வழிவகையைக் காணும்படி உதவிசெய்தது. இந்த நாடகம் முதியோருக்கும் இளைஞருக்கும் ஒன்றுபோல் பயனுடையதாயிருந்தது.
சனிக்கிழமை காலை
இசை நிகழ்ச்சி, பாட்டு, ஜெபம், மற்றும் தினவாக்கிய சிந்திப்புக்குப் பின், சனிக்கிழமை காலைக்குரிய நிகழ்ச்சிநிரல், “குடும்ப வட்டாரத்தில் சுயாதீனத்தோடுகூடிய பொறுப்புகள்” என்ற தலைப்பையுடைய தொடர்பேச்சை முக்கிய அம்சமாக அளித்தது. “தகப்பன்மார் எவ்வாறு யெகோவாவின் மாதிரியைப் பின்பற்றலாம்,” என்ற அதன் முதற் பகுதியில், தகப்பன்மார் நம்முடைய பரலோகத் தகப்பனின் மாதிரியைப் பின்பற்றக்கூடிய பல்வேறு வழிகளின்பேரில் அவர்களுக்கு அறிவுரை அளிக்கப்பட்டது. அவர்கள் பொருள்சம்பந்தமாய் மட்டுமல்லாமல் ஆவிக்குரியபிரகாரமும் தேவைப்படுபவற்றை அளிக்க வேண்டுமென ஒன்று தீமோத்தேயு 5:8 கட்டளையிடுகிறது. தங்கள் குடும்பத்துக்குக் கற்பிக்கும் நல்ல போதகர்களாக இருப்பதாலும் தேவைப்படுகையில் அன்புள்ள சிட்சையைக் கொடுப்பதாலும் அவர்கள் யெகோவாவின் மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். இந்தக் குறிப்புகள் பலரைப் பேட்டிக் காண்பதன்மூலம் விளக்கிக் காட்டப்பட்டன.
“மனைவியின் ஆதரவளிக்கும் பாகம்” இந்தத் தொடர்பேச்சின் அடுத்தப் பகுதியாயிருந்தது. கிறிஸ்தவ குடும்பத்தில் மனைவி, துணையாதரவளிப்பவளாக, மதிப்புவாய்ந்த ஓர் இடத்தை வகிக்கிறாள் என அறிவுறுத்துவதால் இது தொடங்கியது. இது அவளிடம் கேட்பதென்ன? அவள், தான் விரும்பும் ஒன்றையே செய்யும்படி தன் கணவனை ஒருபோதும் வற்புறுத்தாமல், தகுந்தபடி கீழடங்கியிருப்பதாகும். தன் கணவனுக்கும் தன் பிள்ளைகளுக்கும் கடமைப்பட்டிருப்பவற்றை அவள் நன்றாய்க் கவனித்து நிறைவேற்றவேண்டும், மேலும் தன் வீட்டைச் சுத்தமாயும் ஒழுங்காயும் வைப்பதிலிருந்து உண்மையான மனத்திருப்தியை அவள் அடைய முடியும். மேலும் கிறிஸ்தவ ஊழியம் செய்பவளாக, வெளி ஊழியத்தில் ஈடுபட அவளுக்குப் பல வாய்ப்புகள் இருக்கலாம். ஒரு குடும்பத்தைப் பேட்டிக் கண்டது இத்தகைய வேதப்பூர்வ அறிவுரையின் ஞானத்தை உறுதிப்படுத்தியது.
“செவிகொடுத்துக் கற்றுக்கொள்ளும் பிள்ளைகள்,” என்ற இந்தப் பகுதியில் இளைஞருக்குக் கவனம் செலுத்தப்பட்டது. செவிகொடுத்துக் கேட்டுக் கற்றுக்கொள்ளும்படி தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதன்மூலம், பெற்றோர் யெகோவாவுக்குக் கனத்தைக் கொண்டுவருகின்றனர் மற்றும் தங்கள் ஆவிக்குரிய சகோதரர்களுக்கும் தங்கள் சொந்த பிள்ளைகளுக்கும் அன்பு காட்டுகின்றனர். பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றாகப் பயனுள்ள நேரத்தைச் செலவிட்டால் அவர்களுக்கிடையில் உறுதியான அன்பிணைப்பு இருந்துவரும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஆயத்தமாயிருந்து அறிவுபெறும்படியான அவர்களுடைய ஆவலைத் தூண்டி ஊக்குவிக்க வேண்டும். மறுபடியும், பேட்டிகள் இதை எவ்வாறு செய்வதெனத் தெரிவித்தன.
அடுத்தபடியாக “யெகோவாவைச் சேவிப்பதற்கு சுயாதீனமுள்ளவர்களாய் உங்களை வைத்துக்கொள்ளுங்கள்,” என்ற நல்ல அறிவுரை வந்தது. இதை எவ்வாறு செய்வது? உலகப்பிரகாரமான வாழ்க்கை முன்னேற்றப்போக்குகள், நேரத்தை வீணாக்கும் பொழுதுபோக்கு வேலைகள், பொருள்பெருக்கும் இலக்குகள் ஆகியவற்றைப் பின்தொடருவதிலிருந்து நம்மை விடுவித்து வைத்துக்கொள்வதன் மூலமாகும். தன்னலத் தியாகஞ்செய்வோராய் இயேசுவும் அப்போஸ்தலன் பவுலும் நல்ல முன்மாதிரிகளை நமக்கு வைத்தார்கள். யெகோவாவின் ஜனங்கள் தங்கள் கண்ணை ராஜ்ய அக்கறைகளில் ஊன்றப்பட்டதாய்த் தெளிவாக வைத்துக்கொள்ள வேண்டும். பொருட்களை வாங்க நேரிடுகையில், இப்பொழுது உடனே வாங்கிவிட்டு பின்னால் பணம் செலுத்துவதைப் பார்க்கிலும் இப்பொழுது சேர்த்து வைத்துப் பின்னால் வாங்குவது ஞானமானது. வாலிபர்கள் பாலுறவு இன்பங்களையும் உலகப்பிரகாரமான முன்னேற்றப் போக்குகளையும் பற்றிக் கற்பனைசெய்து நாடுவதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். மணம்செய்யாத ஒரு பயனியரைப் பேட்டிக் கண்டது, ஒருவர் யெகோவாவைச் சேவிக்கத் தன்னைச் சுயாதீனராக வைத்துக்கொள்கையில் வரும் ஆசீர்வாதங்களைக் காட்டினது.
“ஒப்புக்கொடுத்தல் மற்றும் முழுக்காட்டுதல் மூலம் சுயாதீனத்திற்குள் பிரவேசியுங்கள்,” என்ற பேச்சோடு சனிக்கிழமை காலை நிகழ்ச்சிநிரல் முடிவடைந்தது. ஆதாமின் கலகத்தால் சிருஷ்டி அடிமைத்தனத்துக்குள் மூழ்க்கப்பட்டிருந்தபோதிலும், வல்லமையுள்ள விடுதலைசெய்பவரான, இயேசு கிறிஸ்து, தம்முடைய பலியால் சுயாதீனத்துக்கான வழியைத் திறந்தாரென முழுக்காட்டப்பட வந்தவர்களுக்கு நினைப்பூட்டப்பட்டன. கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்குத் தங்களை விடுதலையாக்கிக் கொள்வதில் உட்பட்டதைப் பேச்சாளர் காட்டி, முழுக்காட்டப்படுவோரின் கடமைகளையும் ஆசீர்வாதங்களையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.
சனிக்கிழமை பிற்பகல்
சனிக்கிழமை பிற்பகலின் நிகழ்ச்சிநிரல் “நீங்கள் யாருடைய நன்மையை நாடுகிறீர்கள்?” என்ற, ஆத்துமாவை ஊடுருவி ஆராயும் கேள்வியுடன் தொடங்கினது. இந்த உலகம் பிசாசின் சுயநலத்தை நாடும் ஆவியைப் பிரதிபலிக்கிறது. எனினும், கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சுயநலத்தியாக மனப்பான்மையைப் பின்பற்றவேண்டும். எத்தகைய முன்மாதிரியை அவர் வைத்தார்! நம்முடைய நன்மைக்காக அவர் பரலோக மகிமையை விட்டுவிட்டு பின்பு தம்முடைய மனித உயிரைப் பலியாகச் செலுத்தினார். வியாபார அல்லது பணசம்பந்தமான காரியங்களில் கிறிஸ்தவர்களுக்கிடையில் சச்சரவுகள் ஏற்படுகையில், சுபாவ முரண்பாடுகள் உண்டாகையில், இன்னும் இவைபோன்ற மற்றச் சந்தர்ப்பங்களில், யாருடைய நன்மையை நாம் நாடுகிறோம் என்பதைப்பற்றிய சவால்கள் மேலெழும்புகின்றன. ஆனால் மற்றவர்களின் நலனை நாடுவதால், ஒருவர் கொடுப்பதன் மேலான ஆசீர்வாதத்தை உணருவார், மேலும் யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவார்.
பின்பு இதோடு நெருங்க சம்பந்தப்பட்ட பேச்சுப் பொருளான “ஆவிக்குரிய பலவீனத்தைக் கண்டுணர்ந்து வென்றிடுதல்,” என்பது பின்தொடர்ந்தது. இந்தப் பேச்சு ஆவிக்குரிய பலவீனத்தின் அறிகுறிகளை அடையாளங்கண்டுகொண்டு பின்பு சாத்தானையும் அவனுடைய கண்ணிகளையும் வென்று மேற்கொள்வதற்கான போராட்டத்தில் உறுதித்தீர்மானத்துடன் செயல்படுவதன் தேவையை இந்தப் பேச்சு அறிவுறுத்தினது. யெகோவாவின் ஊழியர்கள் அவர்பேரில் ஆழ்ந்த அன்பையும் தீமையின்பேரில் கடும்வெறுப்பையும் தங்களில் வளர்க்க வேண்டும். இது தவறாத ஒழுங்கான, நோக்கமுள்ள தனிப்பட்ட மற்றும் குடும்ப பைபிள் படிப்பின் மூலம் அவர்கள் யெகோவாவை அறியவருவதைத் தேவைப்படுத்துகிறது. வன்முறையையும் பாலுறவு சம்பந்தப்பட்ட ஒழுக்கக்கேட்டையும் மேன்மைப்படுத்திக் காட்டும் எல்லா பொழுதுபோக்கு வகைகளையும் அவர்கள் தவிர்க்க வேண்டும். (எபேசியர் 5:3-5) தவறாமல் ஜெபம் செய்வதும் கூட்டங்களுக்கு வருவதும் ஆவிக்குரிய பலவீனங்களை வென்று மேற்கொள்வதில் வெற்றிப்பெறுவதற்கு இன்றியமையாதவை.
ஒருவேளை மாநாட்டில் கொடுக்கப்பட்ட வேறு எந்தப் பேச்சைப் பார்க்கிலும் அதிகக் கலந்துபேசுதலை உண்டுபண்ணினது “விவாகம் மகிழ்ச்சிக்குத் திறவுகோலா?” என்ற தலைப்பையுடைய பேச்சாயிருக்கலாம். இளைஞர் மிகப்பலர் அவ்வாறு நினைக்கின்றனர்! ஆனால் உண்மையுள்ள எண்ணற்ற ஆவி சிருஷ்டிகள் விவாகம் செய்யாவிடினும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர், அவ்வாறே ஒப்புக்கொடுத்தப் பல கிறிஸ்தவர்கள் விவாக நுகத்தில் இணைக்கப்படாதிருப்பினும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். மேலும், விவாகரத்து செய்வதன் உச்ச வீதம் காட்டுகிறபடி, விவாகஞ்செய்துள்ள பல தம்பதிகள் மகிழ்ச்சியுடன் இல்லை. விவாகம் ஓர் ஆசீர்வாதமாக இருக்கக்கூடுமெனினும், அது மகிழ்ச்சிக்குத் திறவுகோலல்ல என்பதைத் தெளிவாக உணருவதற்கு, ஒப்புக்கொடுத்தக் கிறிஸ்தவர்கள் யாவரும் அனுபவித்து மகிழும் பல ஆசீர்வாதங்களின்பேரில் ஒருவர் சிந்தித்துப் பார்ப்பதே தேவைப்படுகிறது.
“நம்முடைய நாளில் கிறிஸ்தவ சுயாதீனம்,” என்ற தொடர் பேச்சு இதைப் பின்தொடர்ந்தது. முதல் பேச்சாளர், “நம்முடைய கிறிஸ்தவ சுயாதீனத்தின் கூறுபாடுகளை மதிப்பிடுதல்” என்பதன்பேரில் பேசினார். இவற்றில், திரித்துவம், மனித ஆத்துமா அழியாமையுடையது, மற்றும் நித்தியமாய் வாதிக்கப்படுதல் போன்ற பொய் மதப் போதகங்களிலிருந்து விடுதலையாகியிருப்பதும் அடங்கியிருந்தது. பின்னும் பாவத்துக்கு உட்பட்டிருந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை. கிறிஸ்தவர்கள் அபூரணராயிருக்கிறபோதிலும், புகைப்பழக்கம், சூதாட்டம், குடிவெறி, மற்றும் தாறுமாறான பாலுறவு ஒழுக்கக்கேடு போன்ற இத்தகைய கெட்டப் பழக்கங்களிலிருந்தும் விடுதலையாகியுள்ளனர். மேலும் நம்பிக்கையில்லாமையிலிருந்தும் விடுதலையாகியுள்ளனர், எவ்வாறெனில் அவர்களுக்குப் பரதீஸுக்குரிய மகிழ்ச்சிமிகுந்த நம்பிக்கை இருக்கிறது இது அதைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்லும்படி அவர்களைத் தூண்டியியக்குகிறது.
அதன்பின் தொடர்ந்து பேசின பேச்சாளர், “அப்படிப்பட்ட சுயாதீனத்தை நீங்கள் தனிப்பட்டவிதமாய்ப் பேணிக் காத்துவருகிறீர்களா?” என்ற கேள்வியைக் கேட்டார். பேணுதல் என்பது அருமையாகப் பற்றிக்கொண்டிருத்தல், கவனத்துடன் காத்தல் என பொருள்படுகிறது, இதைச் செய்வதற்கு, கடவுளுடைய ஊழியன் கிறிஸ்தவ சுயாதீனத்தின் வரையறைகளை மீறிச் செல்லும்படியான சோதனைக்கு எதிராகத் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தின் சுயாதீனம் ஏமாற்றுதலான வெறும் பொய்யேயாகும், ஏனெனில் அது பாவத்துக்கும் நடைச் சீரழிவுக்கும் அடிமைத்தனத்துக்குள்ளாவதில் முடிவடைகிறது.
இந்தத் தொடர் பேச்சில் கடைசி பேச்சாளர் “சுயாதீனப் பிரியர் உறுதியாக நிற்கிறார்கள்,” என்ற பொருளின்பேரில் பேசினார். இதைச் செய்வதற்கு, கிறிஸ்தவர்கள் தங்கள் பரலோகப் பெற்றோராகிய யெகோவாவினிடமும் அவருடைய மனைவிபோன்ற அமைப்பினிடமும் விடாதுநெருங்கி நிலைத்திருக்க வேண்டும். பரப்பப்படும் விசுவாசத்துரோகக் கருத்துக்கள் தங்களை நேர்வழியிலிருந்து விலகிச் செல்லும்படி செய்ய யெகோவாவின் ஜனங்கள் அனுமதிக்க முடியாது; ஒழுக்கக்கேட்டு எண்ணங்களுடன் வருவோரை அவர்கள் ஏற்க மறுத்துவிட வேண்டும். தெய்வீகச் சுயாதீனத்தில் உறுதியாக நிலைத்துநிற்க, கிறிஸ்தவர்கள் “ஆவிக்கேற்றபடி நட”ந்துகொண்டிருக்க வேண்டும்.—கலாத்தியர் 5:25.
இந்த நாளின் முடிவான பேச்சு உண்மையான இன்பவிருந்தாக இருந்தது. அது “எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்,” என்ற தலைப்பை உடையது. இயேசு கிறிஸ்துவே அந்த மிகப் பெரிய மனிதர், ஏனெனில் எல்லா சேனைகளும், கப்பற்படைகளும், சட்ட மாமன்றங்களும், அரசர்களும் ஒன்றுசேர அவர்களெல்லாரையும் பார்க்கிலும் அதிக வல்லமைவாய்ந்த முறையில் அவர் மனிதவர்க்கத்தின் வாழ்க்கையை அவர் பாதித்தார். அவர் கடவுளுடைய குமாரன், இந்தப் பூமிக்கு வருவதற்கு முன்னால் பரலோகத்தில் வாழ்ந்தவர். இயேசு தாம் பேசினவற்றிலும் கற்பித்தவற்றிலும் வாழ்ந்த முறையிலும் தம்முடைய பரலோகத் தகப்பனின் மாதிரியை அவ்வளவு நன்றாய்ப் பின்பற்றினதால், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்,” என்று அவர் சொல்ல முடிந்தது. (யோவான் 14:9) “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” என்பதை இயேசு எவ்வளவு நன்றாய் மெய்ப்பித்துக் காட்டினார்! (1 யோவான் 4:8) இயேசுவின் பண்புகளைப் பற்றி நீடித்துப் பேசினபின்பு பேச்சாளர், ஏப்ரல் 1985 முதற்கொண்டு தி உவாட்ச்டவர் (காவற்கோபுரம்) பத்திரிகையில் “இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்,” என்ற தலைப்பில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். பலருடைய வேண்டுகோள்களைப் பூர்த்திசெய்வதாய், சங்கம், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற இந்தப் புதிய புத்தகத்தை இப்பொழுது வெளியிட்டது. இது 133 அதிகாரங்களை உடையது முழுமையான நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வந்தக் கட்டுரைகள் தொகுத்தமைக்கப்பட்டுள்ளன, அந்த முழுவதும் இந்தப் புத்தகத்தின் 448 பக்கங்களில் இணைத்து ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். நிச்சயமாகவே மாநாட்டின் இந்த நாள் முக்கியத் தனிச் சிறப்புடன் முடிவடைந்தது!
ஞாயிற்றுக்கிழமை முற்பகல்
ஞாயிற்றுக்கிழமைக் காலை கூட்டத்தின் தொடக்கத்தில் “மனிதரைப் பிடிப்பவர்களாகச் சேவித்தல்” என்ற தொடர்பேச்சு வந்தது. “மீன் பிடித்தல்—சொல்லர்த்தமும் அடையாள அர்த்தமும்” என்ற பேச்சு பின்தொடர்ந்த பேச்சுகளுக்கு ஆதாரத்தைப் போட்டது. இயேசு அற்புதமான மீன்பிடிப்பை ஏற்பட செய்தபின்பு, அதில் உட்பட்ட மீன்பிடிப்போரை மனிதரைப் பிடிப்போராகும்படி அழைத்தாரென பேச்சாளர் காட்டினார். இயேசு தம்முடைய சீஷர்களை, மனிதரைப் பிடிப்போராகும்படி சிறிது காலம் பயிற்றுவித்தார். பின்பு பொ.ச. 33 தொடங்கி, ஆண்களும் பெண்களுமான திரள் கூட்டங்களுக்குச் சீஷர்களாகும்படி உதவிசெய்வதில் அவர்கள் வெற்றிகண்டனர்.
அடுத்தப் பேச்சாளர் மத்தேயு 13:47-50-ல் பதிவுசெய்யப்பட்ட இழு-வலையைப்பற்றிய உவமையைக் குறித்துப் பேசினார். அடையாளக் குறிப்பான வலை அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களையும் கிறிஸ்தவமண்டலத்தையும் உள்ளடங்கலாகக் கொண்டிருந்தது, பின் குறிப்பிடப்பட்டவர்களின் முயற்சிகள் ஆகாத மிக ஏராளமான மீன்களை வாரிக் கொண்டுவந்தபோதிலும், பைபிளை மொழிபெயர்த்து, பிரசுரித்து, மற்றும் விநியோகித்தத் தங்கள் வேலையின் காரணமாக வலை அவர்களையும் உள்ளடங்கலாகக் கொண்டிருந்தது. முக்கியமாய் 1919 முதற்கொண்டு ஒரு பிரிக்கும் வேலை நடந்துகொண்டிருக்கிறது, ஆகாத மீன்கள் வெளியில் எறியப்பட்டு வந்திருக்கின்றன, தகுந்தவர்களோ, கூடைகளுக்கொப்பான சபைகளுக்குள் கூட்டிச்சேர்க்கப்பட்டு வந்திருக்கின்றனர் இவை உண்மையான கிறிஸ்தவர்களைத் தெய்வீகச் சேவைக்காகப் பாதுகாத்துப் பதப்படுத்த உதவிசெய்திருக்கின்றன.
“பூகோள அளவிலான தண்ணீர்களில் மனுஷரைப் பிடித்தல்” என்ற மூன்றாவது பேச்சு, ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் எல்லாரும் உலகளாவிய மீன்பிடித்தல் வேலையில் பங்குகொள்ள வேண்டிய அவர்களுடைய கடமையை அறிவுறுத்தியது. இப்பொழுது 40,00,000-த்துக்கு மேற்பட்டவர்கள் 212 நாடுகளில் இந்த வேலையில் பங்குகொள்கின்றனர், ஆண்டுதோறும் 2,00,000-க்கு மேற்பட்ட ஆட்கள் சமீப ஆண்டுகளில் முழுக்காட்டப்பட்டிருக்கின்றனர். யெகோவாவின் ஜனங்கள் எல்லாரும் மீன்பிடிக்கும் தங்கள் திறமைகளை முன்னேற்றுவிக்கும்படி ஊக்குவிக்கப்பட்டனர், பலரை முக்கியமாய் வெற்றிகரமான “மீன்பிடிப்போரைப்” பேட்டி காணுதல் நடந்தது.
“‘முடிவு காலத்தில்’ விழித்துக்கொண்டு இருத்தல்,” என்ற அடுத்தப் பேச்சில், கடவுளுடைய ஜனங்கள் நிலைத்து விழித்திருக்கும்படி உதவிசெய்வதற்கு பின்வரும் ஏழு உதவிகளைப் பேச்சாளர் குறிப்பிட்டு விவரித்தார்: கவனத்தைத் திருப்புபவற்றை எதிர்த்துப் போராடுதல், ஊக்கமாய் ஜெபித்தல், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைப்பற்றிய எச்சரிக்கையைத் தொனித்தல், தன்னைத்தான்-சோதனைசெய்தல், நிறைவேற்றமடைந்த தீர்க்கதரிசனங்களின்பேரில் ஆழ்ந்து சிந்தித்தல், தங்கள் மீட்பு தாங்கள் விசுவாசிகளான சமயத்திலிருந்ததைப் பார்க்கிலும் சமீபமாயுள்ளதென்பதை மனதில் வைத்திருத்தல்.
“‘ஆபத்துக் காலத்தைத்’ தப்புவது யார்?” என்ற பேச்சுடன் காலை நிகழ்ச்சிநிரல் முடிவடைந்தது. அப்போஸ்தலர் காலங்களில் ஓரளவு நிறைவேற்றமடைந்த யோவேலின் தீர்க்கதரிசனம் இப்பொழுது மேலுமான நிறைவேற்றத்தை அடைந்துகொண்டிருக்கிறது, மேலும் சமீப எதிர்காலத்தில் முழு நிறைவேற்றத்தை அடையும் என்று பேச்சாளர் காட்டினார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்
பிற்பகல் நிகழ்ச்சிநிரல் “கடவுளுடைய சுயாதீனப் புதிய உலகத்தை வாழ்த்தி வரவேற்றல்!” என்ற பொதுப்பேச்சுடன் தொடங்கினது. இந்தப் பேச்சு சுயாதீனம் என்ற மாநாட்டின் பொருளின்பேரில் தொடர்ந்தது. கடவுளுடைய வார்த்தை ஒரு புதிய உலகத்தைப் பற்றி முன்னறிவிக்கிறது அங்கே பொய்மதம், அரசியல், பொருளாதார மற்றும் ஜாதிபேத மூலாம்சங்களால் ஒடுக்கப்படுவதிலிருந்து விடுதலை உண்டாயிருக்குமென குறிப்பிட்டுக் காட்டப்பட்டது. பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்துங்கூட விடுதலை உண்டாயிருக்கும். ஜனங்கள் பரதீஸ் பூமியில் மகிழ்ச்சியுடன் என்றென்றும் வாழக்கூடியோராய் இருக்கும்படி பரிபூரண உடல்நலம் அவர்களுக்குத் திரும்ப அளிக்கப்பட்டிருக்கும். இவ்வாறு, நீதியை நேசிப்போர் அந்தப் புதிய உலகத்தை உண்டாக்குபவரைப் பின்வருமாறு கூறி போற்றிப்புகழ்வதற்கு எல்லா காரணமும் உண்டு: “கடைசியாக உண்மையான சுயாதீனத்துக்காக, யெகோவாவே, உமக்கு நன்றி!”
இந்தப் பொதுப்பேச்சைப் பின்தொடர்ந்து மாவட்ட மாநாடுகளில் பழக்கமாயிராத புதியதொன்று செய்யப்பட்டது—காவற்கோபுரத்தில் அந்த வாரத்துக்குரிய பாடம் சிந்திக்கப்பட்டது. பின்பு “சுயாதீனப் பிரியரே, தொடர்ந்து முன்னேறுங்கள்,” என்ற கிளர்ச்சியூட்டும் பேச்சுடனும் அறிவுரையுடனும் மாநாடு முடிவுக்கு வந்தது. சுயாதீனம் என்ற அந்த மாநாட்டின் பொருளின்பேரில் முக்கிய குறிப்புகளைப் பேச்சாளர் சுருக்கமாய்க் கையாண்டார். யெகோவாவின் ஜனங்கள் தங்கள் சுயாதீனத்தினிமித்தம் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கின்றனர் என்பதை அவர் அழுத்திக்கூறி, கிறிஸ்தவர்கள் படிப்படியாய் முன்னேறியுள்ள வழிகளை விவரித்துக்கூறி, மேலுமான ஆசீர்வாதங்களைப் பெறக்கூடும்படி விடாதுதொடர்ந்து முன்னேறும்படி அவர்களை ஊக்குவித்தார். பின்வரும் வார்த்தைகளுடன் அவர் முடித்தார்: “இதை நாம் செய்துவருகையில், சுயாதீனப் பிரியராக நாம் தொடர்ந்து முன்னேறும்படி யெகோவா உங்கள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக.”
“சிருஷ்டியுங்கூட அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டுக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளுமென்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டி சுய இஷ்டத்தினாலே அல்ல கீழ்ப்படுத்தினவரினிமித்தமே, நிலையில்லாமைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது.”—ரோமர் 8:20, 21, தி.மொ.
[பக்கம் 25-ன் படங்கள்]
செக்கோஸ்லோவாக்கியாவிலுள்ள ப்ராகில் நடந்த மாநாட்டுக்கு வந்த ஒரு சிறுவன்
[பக்கம் 26-ன் படங்கள்]
1. செக்கோஸ்லோவாக்கியாவிலுள்ள ப்ராகில் முழுக்காட்டப்படுவதற்கு முன்வந்தவர்கள் முழுக்காட்டும் இடத்திற்குச் செல்கின்றனர்
2. எஸ்டோனியாவிலுள்ள டாவினில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுக்காட்டுதலுக்கு உட்படுதல்
3. ஸைபீரியாவிலுள்ள, உசோலி-சிபிர்ஸ்கோயிலில் புதிய பிரசுரங்கள் மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்தன
4. ப்ராகில் நடந்த மாநாட்டில் “பரிசுத்த வேத எழுத்துக்களின் புதிய உலக மொழிபெயர்ப்பை” ஸெக் மற்றும் ஸ்லோவக் மொழிகளில் வெளியிடுதல்