உருவ வழிபாடு ஒரு கருத்து வேறுபாடு
போலந்திலுள்ள ஏதோ ஓர் இடத்தில், ஒரு மனிதன் இப்போதுதான் பிரயாணத்துக்காக கிட்டதட்ட தயாராக இருக்கிறான். என்றாலும் இன்னும் ஒரு முக்கியமான காரியத்துக்கு அவன் கவனம் செலுத்தியாக வேண்டும். அவன் இயேசுவினுடைய ஓர் உருவத்துக்கு முன்னால் முழங்கால்படியிட்டு, காணிக்கைச் செலுத்தி, அவனுடைய பயணத்தின் போது பாதுகாப்புக்காக வேண்டிக்கொள்கிறான்.
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், தாய்லாந்திலுள்ள பாங்காக்கில், புத்தர்களுடைய வருடாந்தர சுழற்சியின் முதல் விழாவை மே மாதம் முழு நிலா சமயத்தில் நீங்கள் நேரில் பார்க்கலாம். விழாவின் போது புத்தருடைய உருவம் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
சற்று முன் வருணிக்கப்பட்ட விதமாக உருவ வழிபாடு மிகப் பரவலாயிருப்பதை சந்தேகமின்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். வெளிப்படையாகவே இலட்சக்கணக்கான ஆட்கள் உருவங்களுக்கு முன்பாக தலைவணங்குகிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே, கடவுளிடம் நெருங்கி வர உருவங்கள் முக்கியமான ஒரு வழியாக கருதப்பட்டு வந்திருக்கிறது.
வணக்கத்தில் உருவங்களின் உபயோகம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உருவ வழிபாடு சரியா அல்லது தவறா? கடவுள் அதைக் குறித்து எவ்விதமாக உணருகிறார்? இப்படிப்பட்ட வணக்கத்தை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதற்கு அத்தாட்சி ஏதாவது இருக்கிறதா? ஒருவேளை நீங்கள் தனிப்பட்ட விதமாக, இப்படிப்பட்ட கேள்விகளுக்கு ஒருபோதும் அதிகமாக சிந்தனைச் செலுத்தாமல் இருக்கலாம். என்றபோதிலும் கடவுளோடு ஓர் உறவை கொண்டிருப்பதை நீங்கள் உயர்வாக கருதுவீர்களேயானால், நீங்கள் அவைகளுக்குப் பதில்களைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
அநேகருக்கு இதை முடிவு செய்வது சுலபமான ஒரு விஷயமாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். உண்மையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இது சூடானதும் சில சமயங்களில் ஆவேசமுமான கருத்து வேறுபாடுகளின் பொருளாக இருந்திருக்கிறது. உதாரணமாக, பொ.ச.மு. 1513-ல் எபிரெய தலைவனான மோசே ஒரு பொன் கன்றுக்குட்டியின் உருவத்தை அழித்து, அதை வணங்கிக் கொண்டிருந்த சுமார் 3,000 பேர் கொல்லப்படும்படி செய்வித்தான்.—யாத்திராகமம், அதிகாரம் 32.
மத சம்பந்தமான உருவங்களை பயன்படுத்துவதற்கு பலமான எதிர்ப்பு யூதர்களுக்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. பண்டைய உலக சரித்திராசிரியர்கள், மோசேக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே, உருவ வழிபாட்டுக்கு எதிராக விரிவான அறப்போரை நிறைவேற்றியதாக கூறப்படும் ஒரு பெர்சிய அரசன் டேக்முரூப்பின் புராணக் கதையை பாதுகாத்து வைத்திருக்கின்றனர். சீனாவில், நீண்ட காலத்துக்கு முன்பாக வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் அரசர் ஒருவர் பல்வேறு கடவுட்களின் உருவச்சிலைகளுக்கு எதிராக இராணுவத் தாக்குதல் ஒன்றை நடத்தியதாகச் சொல்லப்படுகிறார். உருவங்கள் அழிக்கப்பட்ட பின்பு, அவர் களி மண்ணாலான கடவுட்களை வழிபடுதல் முட்டாள்தனம் என்பதாக வெளிப்படையாக கண்டனம் செய்தார். பின்னால், முகமது இன்னும் ஒரு சிறு பிள்ளையாக இருந்தபோதே வணக்கத்தில் உருவங்களை உபயோகிப்பதை எதிர்த்த அராபிய நாட்டவர் இருந்தனர். முகமதுவின் மீது இவர்களுடைய செல்வாக்கு பிற்பட்ட ஆண்டுகளில் விக்கிரகாராதனையின் பேரில் அவருடைய நிலைநிற்கைக்கு காரணமாயிருந்தது. விக்கிரகாராதனை மன்னிக்க முடியாத ஒரு பாவம் என்றும், விக்கிரகாராதனைக்காரர்களுக்காக வேண்டுதல் செய்யக்கூடாது என்றும் விக்கிரகாராதனைக்காரரோடு திருமணம் விலக்கப்பட்டிருக்கிறது என்றும் குரானில் முகமது கற்பிக்கிறார்.
கிறிஸ்தவமண்டலத்திலும்கூட, இரேனியஸ், ஆரிகன், சிசெரியாவின் யுசிபியஸ், எபிஃபேனியஸ் மற்றும் அகஸ்டின் போன்ற பொ.ச. இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டு சமய புள்ளிகள், வணக்கத்தில் உருவங்களின் உபயோகத்தை எதிர்த்தனர். பொ.ச. நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸ்பேனிலுள்ள எல்விராவில் மேற்றிராணியார்களின் ஒரு குழு, சர்ச்சுகளில் உருவங்களை தடை செய்து, உருவ வணக்கத்தாருக்கு எதிராக கடுமையான தண்டனைகளை நிர்ணயித்தது.
உருவங்களை உடைப்பவர்கள்
இந்தச் சம்பவங்கள், சரித்திரத்திலேயே மிகப் பெரிய கருத்து வேறுபாடுகளில் ஒன்றுக்கு வழிநடத்தியது: எட்டாவது மற்றும் ஒன்பதாவது நூற்றாண்டுகளின் உருவத்தகர்ப்பு கருத்து வேறுபாடு. இந்தக் “கசப்பான கருத்து வேறுபாடு ஒன்றரை நூற்றாண்டுகள் நீடித்தது, சொல்லமுடியாத துயரத்துக்குரிய ஒரு சமயமாக இருந்தது” என்றும் “கிழக்கு மற்றும் மேற்கு பேரரசுகளிடையே பிரிவினைக்கு நேரடியான காரணங்களில் ஒன்றாக இருந்தது” என்றும் ஒரு சரித்திராசிரியர் குறிப்பிடுகிறார்.
“உருவங்களை உடைப்பவர்” என்ற வார்த்தை “உருவம்” என்று பொருள்படும் ஈக்கோன் மற்றும் “உடைப்பவர்” என்று பொருள்படும் க்ளாஸ்டாஸ் என்ற கிரேக்க வார்த்தைகளிலிருந்து வருகிறது. அதன் பெயருக்கு ஏற்ப, செயல்படும் வகையில் உருவங்களுக்கு எதிரான இந்த இயக்கம், ஐரோப்பா முழுவதும் உருவங்களை அகற்றுவதையும் அழிப்பதையும் உட்படுத்தியது. வணக்கத்தில் உருவங்களின் உபயோகத்தை ஒழிப்பதற்காக பல்வேறு உருவ வழிபாட்டு எதிர்ப்பு சட்டங்களை அமல்படுத்தியது. உருவ வழிபாடு சூடான ஓர் அரசியல் பிரச்னையாக உருவாகி பேரரசர்களையும், போப்புகளையும் சமய முதல்வர்களையும் பிஷப்புகளையும் மெய்யாகவே ஓர் இறையியல் சார்ந்த யுத்தத்திற்குள் இழுத்துச் சென்றது.
இது வெறுமனே சொற்போரைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. மக்ளின்டாக் மற்றும் ஸ்ட்ராங்கின் பைபிள், இறையியல் மற்றும் மதகுரு இலக்கிய சைக்ளோப்பீடியா பேரரசர் மூன்றாம் லியோ, சர்ச்சுகளில் உருவங்களின் உபயோகத்துக்கு எதிராக ஆணை ஒன்றை பிறப்பித்தப் பிற்பாடு, மக்கள் “ஆணைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள், விசேஷமாக கான்ஸ்டான்டிநோபிலில் வன்முறையான கலகங்கள்” அன்றாட நிகழ்ச்சிகளாயின என்று சொல்கிறது. பேரரசு சக்திகளுக்கும் பொதுமக்களுக்குமிடையிலான மோதல்கள் தூக்குதண்டனைகளிலும் படுகொலைகளிலும் விளைவடைந்தது. துறவிகள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் 16-வது நூற்றாண்டில், சர்ச்சுகளில் உருவங்களை பற்றிய விவாதங்கள் பல சுவிட்ஸர்லாந்திலுள்ள சூரிச்சில் நடைபெற்றன. இதன் விளைவாக, சர்ச்சுகளிலிருந்து எல்லா உருவங்களும் நீக்கப்படுவதை வற்புறுத்துவதும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஒரு சில சீர்திருத்தவாதிகள், தீவிரமாகவும் உக்கிரமாகவும் உருவ வழிபாட்டை கண்டனம் செய்தமைக்காக பெயர்பெற்றவர்களாக இருந்தார்கள்.
இன்றும்கூட நவீன இறையியலர் மத்தியில் உருவங்களின் உபயோகம் பற்றி முழு அளவிலான கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. மனிதன் கடவுளிடம் நெருங்கி வருவதற்கு உருவங்கள் உண்மையில் உதவக்கூடுமா என்பதை மதிப்பிடுவதற்கு தொடர்ந்து வரும் கட்டுரை உங்களுக்கு உதவி செய்யும். (w92 2/15)