எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்
“நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.”—மத்தேயு 16:16.
1, 2. (எ) ஒரு மனிதனின் மேன்மை எவ்விதமாக தீர்மானிக்கப்படலாம்? (பி) சரித்திரத்தில் எந்த மனிதர்கள் மகா என்றழைக்கப்பட்டிருக்கின்றனர்? ஏன்?
எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒரு மனிதனின் மேன்மையை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்? அவருடைய இராணுவ திறமையைக் கொண்டா? அவருடைய மேலான மனதின் திறமைகளைக் கொண்டா? அவருடைய சரீர பலத்தைக் கொண்டா?
2 பல்வேறு அரசர்கள் மகா என்பதாக அழைக்கப்பட்டிருக்கின்றனர், மகா கோரேசு, மகா அலெக்சாந்தர் மற்றும் தன்னுடைய வாழ்நாட் காலத்திலேயே “மகா” என்றழைக்கப்பட்ட சார்லிமேன். தங்களுடைய வெல்லமுடியாத பிரசன்னத்தின் மூலம் இவர்களைப் போன்ற மனிதர்கள் தாங்கள் ஆட்சி செய்தவர்கள் மீது மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்தினர்.
3. (எ) ஒரு மனிதனின் மேன்மையை அளவிடுவதற்குரிய பரீட்சை என்ன? (பி) இப்படிப்பட்ட ஒரு பரீட்சையை பயன்படுத்துகையில், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் யார்?
3 சரித்திராசிரியர் H. G. வெல்ஸ், ஒரு மனிதனின் மேன்மையை அளவிடுவதற்கு ஒரு பரீட்சையை விளக்கினார். 50-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக அவர் எழுதினார்: “ஒரு நபரின் மேன்மைக்கு சரித்திராசிரியரின் பரீட்சை, ‘பிற்காலத்தில் வளருவதற்காக அவர் என்ன விட்டுச்சென்றிருக்கிறார்? மனிதர்கள் புதிய ரீதியில், அவருக்குப் பிறகும்கூட தொடர்ந்து இருக்கக்கூடிய வீரியத்தோடு சிந்தனை செய்வதற்கு அவர் ஆரம்பித்து வைத்தாரா?’ இப்பரீட்சையில் இயேசு முதலாவது நிற்கிறார்,” என்று வெல்ஸ் முடிவுக்கு வந்தார். நெப்போலியன் போனபார்ட்டும்கூட இவ்விதமாகச் சொன்னார்: “காணக்கூடிய சரீர பிரசன்னம் இல்லாமலே இயேசு கிறிஸ்து தம் அடியார்கள் மீது செல்வாக்கு செலுத்தி கட்டுப்படுத்தியிருக்கிறார்.”
4. (எ) இயேசுவைக் குறித்து என்ன மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன? (பி) கிறிஸ்தவரல்லாத ஒரு சரித்திராசிரியர் இயேசுவுக்கு சரித்திரத்தில் என்ன இடத்தைக் கொடுக்கிறார்?
4 என்றபோதிலும், இயேசு சரித்திரப்பூர்வமான ஒரு நபர் இல்லை ஆனால் ஒரு கட்டுக்கதையே என்று சிலர் ஆட்சேபித்திருக்கிறார்கள். மற்றொரு பக்கத்தில் அநேகர் கடவுளே பூமிக்கு இயேசுவாக வந்தார் என்று சொல்லி அவரை கடவுளாக வழிபட்டிருக்கிறார்கள். என்றபோதிலும், ஒரு மனிதனாக இயேசு வாழ்ந்ததன் சம்பந்தமாக சரித்திரப்பூர்வ அத்தாட்சியையே முழுவதுமாக ஆதாரமாகக் கொண்டு செய்த முடிவில் வெல்ஸ் எழுதினார்: “எந்த ஒரு இறையியல் தப்பெண்ணமுமில்லாத ஒரு சரித்திராசிரியன் நாசரேத்திலிருந்து வந்த ஏழ்மையான போதகருக்கு பிரதானமான ஓரிடத்தைத் தராமல் மனிதகுலத்தின் முன்னேற்றத்தை அவன் வருணிக்க முடியாது என்பதை காண்பது அக்கறையூட்டுவதாகவும் குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது. . . . தன்னை ஒரு கிறிஸ்தவன் என்றும்கூட அழைத்துக் கொள்ளாத என்னைப் போன்ற ஒரு சரித்திராசிரியன், தவிர்க்கமுடியாத வகையில் மிகவும் முக்கியமான இந்த மனிதனின் வாழ்க்கையையும் நடத்தையையும் சுற்றியே மனித குலத்தின் முன்னேற்றத்தை விளக்கமுடிவதைக் காண்கிறான்.”
இயேசு உண்மையில் வாழ்ந்தாரா?
5, 6. இயேசுவின் வரலாற்று வாய்மையைப் பற்றி சரித்திராசிரியர்கள் H. G. வெல்ஸ் மற்றும் வில் டூரன்ட் என்ன சொல்லுகிறார்கள்?
5 ஆனால் இயேசு ஒருபோதும் உண்மையில் வாழ்ந்திருக்கவில்லை, அவர் உண்மையில் ஒரு கட்டுக்கதையே, ஒரு சில முதல் நூற்றாண்டு மனிதர்களின் கண்டுபிடிப்பே என்பதாக எவராவது உங்களிடம் சொன்னால் எப்படி? இந்தக் குற்றச்சாட்டுக்கு நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்? “நாம் அறிய விரும்புகிற அளவுக்கு அவரைப் [இயேசுவைப்] பற்றி நாம் அறியாதவர்களாய் இருக்கிறோம்,” என்பதை வெல்ஸ் ஒப்புக்கொண்டபோதிலும் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நான்கு சுவிசேஷங்களும் . . . மிகவும் திட்டவட்டமான ஓர் ஆள்தன்மையை விவரிப்பதில் ஒத்திருக்கின்றன; அவை மெய்மையின் நம்பிக்கையை உடையனவாய் இருக்கின்றன. அவர் ஒருபோதும் வாழ்ந்திருக்கவில்லை, அவருடைய வாழ்க்கைப் பதிவுகள் கண்டுபிடிப்புகளே என ஊகிப்பது, அதிக கடினமானதாகவும், சுவிசேஷ கதைகளின் இன்றியமையாத அம்சங்களை உண்மையென சரித்திராசிரியன் நம்புவதைக் காட்டிலும் மிக அதிகமான பிரச்னைகளை எழுப்புவதாயும் உள்ளது.”
6 மதிப்புக்குரிய சரித்திராரிசியர் வில் டூரன்ட் அதேவிதமாக விவாதித்து, இவ்விதமாக விளக்கினார்: “ஒரு சில சாதாரண மனிதர்கள் [தங்களை கிறிஸ்தவர்களென அழைத்துக் கொண்டவர்கள்] ஒரு சந்ததிக்குள் அத்தனை வல்லமையும் கவர்ச்சியும் வாய்ந்த ஒரு நபரையும், அத்தனை உயர்ந்த ஒரு நன்னெறியையும், மானிட சகோதரத்துவத்தின் அத்தனை ஊக்கமூட்டும் ஒரு காட்சியையும் உருவாக்கிட முடியும் என்பது சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்த அற்புதத்தைக் காட்டிலும் அதிக நம்ப முடியாததாய் இருக்கும்.”
7, 8. இயேசு எவ்வளவு அதிகமாக மனித சரித்திரத்தைப் பாதித்திருக்கிறார்?
7 இப்படிப்பட்ட ஒரு சந்தேகவாதியிடம் நீங்கள் இவ்விதமாக விவாதிக்கலாம்: ஒரு கற்பனை பாத்திரம்—எப்பொழுதுமே உண்மையில் வாழ்ந்திராத ஒரு நபர்—மானிட சரித்திரத்தை இவ்வாறு குறிப்பிடத்தக்க வகையில் பாதித்திருக்க முடியுமா? சரித்திர ஆசிரியர்களின் உலக சரித்திரம் என்ற ஆராய்ச்சி நூல் குறிப்பிட்டது: “உலகியல் சார்ந்த கண்டிப்பான நோக்குநிலையிலிருந்தும்கூட சரித்திரத்தில் இருந்த மற்ற எந்த ஆளின் வேலைகளைவிட, இயேசுவின் வேலைகளின் சரித்திரப்பூர்வமான விளைவுகள் பெருஞ்சிறப்பு வாய்ந்தவையாக இருந்தன. உலகின் முக்கிய நாகரீகங்களால் அங்கீகரிக்கப்படும் ஒரு புதிய சகாப்தம் அவருடைய பிறப்பிலிருந்து கணக்கிடப்படுகிறது.” இதைக்குறித்து சிந்தித்துப் பாருங்கள். இன்றுள்ள சில நாட்காட்டிகளும்கூட இயேசு பிறந்த வருடமாக கருதப்படுகின்ற அந்த வருடத்தைச் சார்ந்து இருக்கின்றன. “அந்த வருடத்துக்கு முன்னால் இருக்கும் தேதிகள் கி.மு. அல்லது கிறிஸ்துவுக்கு முன் என்றும் அந்த வருடத்துக்குப் பின்னால் இருக்கும் தேதிகள் ஏ.டி. [கி.பி] அல்லது அன்னோ டோமினி (நம் கர்த்தரின் வருடத்தில்) என்றும் பட்டியலிடப்படுகின்றன,” என்று உவர்ல்டு புக் என்சைக்ளோப்பீடியா விளக்குகிறது.
8 தமது ஆற்றல்வாய்ந்த போதகங்களின் மூலமாகவும், தாம் அதற்கு இசைவாக வாழ்ந்த விதத்தின் மூலமாகவும் சொல்லமுடியாத திரளான மக்களின் வாழ்க்கையை இயேசு ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களாக பலமாக பாதித்திருக்கிறார். ஓர் எழுத்தாளர் பொருத்தமாகவே அதை பின்வருமாறு வெளிப்படுத்தியிருக்கிறார்: “அணிவகுத்துச் சென்ற எந்த படையும், கட்டப்பட்ட எந்த கப்பற்படையும், அமர்த்தப்பட்ட எந்த சட்ட மாமன்றமும், ஆட்சி செய்த எந்த அரசனும் இந்த பூமியில் உள்ள மனிதரின் வாழ்க்கையை இந்த அளவு பலமாக பாதிக்கவில்லை.” அப்படியிருந்தாலும் குறைகாண்பவர்கள் இவ்விதமாகச் சொல்கிறார்கள்: “இயேசுவைப் பற்றி உண்மையிலேயே நாம் அறிந்திருக்கும் எல்லாமே பைபிளில் தான் காணப்படுகிறது. அவரைப் பற்றிய அதே காலத்துக்குரிய பதிவுகள் இல்லை.” ஆனால் இது உண்மையா?
9 இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஆரம்ப கால உலகியல் சார்ந்த சரித்திராசிரியர்களின் மேற்கோள்கள் மிகக் குறைவாக இருந்தாலும், அப்பேர்ப்பட்ட மேற்கோள்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு மதிப்புக்குரிய முதல் நூற்றாண்டு ரோம சரித்திராசிரியன் கொர்நேலியஸ் டாசிட்டஸ், பேரரசன் நீரோ ரோம் நகரம் எரிந்ததற்கு குற்றத்தை கிறிஸ்தவர்கள் மீது சாட்டினான் என்று எழுதிவிட்டு பின்னர் டாசிட்டஸ் இவ்வாறு விளக்கினார்: “கிறிஸ்தவன் என்ற பெயர் கிறிஸ்துவிலிருந்து வருகிறது, இவரை திபேரியு ராயன் அரசாண்ட காலத்தில் ரோம பேரரசின் மாகாண அதிகாரி பொந்தியு பிலாத்து தூக்கிலிட்டான்.” சுட்டோனியஸ், பிளைனி என்ற இளையவன் போன்ற அக்காலத்து மற்ற ரோம எழுத்தாளர்களும்கூட கிறிஸ்துவைப் பற்றி குறிப்பிட்டனர். கூடுதலாக முதல் நூற்றாண்டு யூத சரித்திராசிரியன் பிளேவியஸ் ஜோஸிபஸ், யூதர்களின் பழமைச் சின்னங்கள்-ல் கிறிஸ்தவ சீஷன் யாக்கோபின் மரணத்தைக் குறித்து எழுதினார். யாக்கோபு, “கிறிஸ்து என்றழைக்கப்பட்ட இயேசுவின் சகோதரன்” என்பதாக ஜோஸிபஸ் விளக்கத்தில் சொல்லியிருக்கிறார்.
9, 10. (எ)பண்டைய உலகியல் சார்ந்த சரித்திராசிரியர்களும் எழுத்தாளர்களும் இயேசுவைப் பற்றி என்ன சொன்னார்கள்? (பி) பண்டைய சரித்திராசிரியர்களின் அத்தாட்சிகளின் அடிப்படையில் மதிப்புக்குரிய ஓர் என்சைக்ளோபீடியா என்ன முடிவுக்கு வருகிறது?
10 புதிய என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா இவ்வாறாக முடிக்கிறது: “இந்தத் தனிப்பட்ட நபர்களின் அறிக்கைகள், பண்டைய காலத்தில் கிறிஸ்தவத்தின் எதிரிகள் கூட, இயேசு சரித்திரப்பூர்வமான நபர் என்பதை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை என்பதை நிரூபிக்கிறது, இது முதல் தடவையாக போதாத ஆதாரங்களின் அடிப்படையில், 18-ம் நூற்றாண்டின் இறுதியில், 19-ம் நூற்றாண்டின் போது, 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்டது.”
உண்மையில் இயேசு யார்?
11. (எ) அடிப்படையில், இயேசுவைப் பற்றிய சரித்திரப்பூர்வமான தகவலின் ஒரே ஊற்றுமூலம் என்ன? (பி) இயேசு யார் என்பதைக் குறித்து அவரை பின்பற்றியவர்கள்தாமே என்ன கேள்வியை உடையவர்களாய் இருந்தனர்?
11 ஆனால் அடிப்படையில் இயேசுவைப் பற்றி தற்போது அறியப்பட்டிருக்கும் அனைத்துமே முதல் நூற்றாண்டில் அவரைப் பின்பற்றியவர்களால் எழுதப்பட்டது. அவர்களுடைய அறிக்கைகள் சுவிசேஷங்களில்—மத்தேயு மற்றும் யோவான் ஆகிய அவருடைய இரண்டு அப்போஸ்தலர்களும், மாற்கு மற்றும் லூக்கா ஆகிய அவருடைய இரண்டு சீஷர்களும் எழுதிய பைபிள் புத்தகங்களில்—பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இயேசு யார் என்பதைக்குறித்து இந்த மனிதர்களின் பதிவுகள் வெளிப்படுத்துவது என்ன? அவர் உண்மையில் யார்? இயேசுவின் முதல் நூற்றாண்டு கூட்டாளிகள் அந்தக் கேள்வியை தீர எண்ணிப் பார்த்தனர். இயேசு பலத்த காற்றினால் கொந்தளித்த கடலை அதட்டி, அற்புதகரமாய் அமைதிப்படுத்தினதைப் பார்த்த போது, அவர்கள் வியப்பால் அதிசயப்பட்டனர்: “இவர் யாரோ?” பின்னர், மற்றொரு சமயத்தில் இயேசு தம் அப்போஸ்தலர்களைக் கேட்டார்: “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?”—மாற்கு 4:41; மத்தேயு 16:15.
12. இயேசு கடவுள் அல்ல என்பது நமக்கு எப்படித் தெரியும்?
12 அந்தக் கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால், நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? இயேசு உண்மையில் யார்? நிச்சயமாகவே கிறிஸ்தவமண்டலத்திலுள்ள அநேகர் அவர் மனித உருவில் இருந்த சர்வ வல்லமையுள்ள கடவுள், கடவுள் அவதாரமாக இருந்தார் என்று சொல்வார்கள். என்றபோதிலும், அவருடைய தனிப்பட்ட கூட்டாளிகள் இயேசு கடவுள் என்பதாக ஒருபோதும் நம்பவில்லை. அப்போஸ்தலனாகிய பேதுரு அவரை “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றழைத்தார். (மத்தேயு 16:16) நீங்கள் எங்கு தேடிபார்த்தாலும், இயேசு தம்மை கடவுளாக உரிமை பாராட்டியதை ஒருபோதும் வாசிக்க மாட்டீர்கள். மாறாக அவர் யூதர்களிடம் தாம் கடவுள் என்றல்ல, “தேவனுடைய குமாரன்” என்றே சொன்னார்.—யோவான் 10:36.
13 கொந்தளித்துக் கொண்டிருந்த ஒரு கடலின் மீது இயேசு நடந்து வந்த போது சீஷர்கள், அவர் மற்ற மனிதர்களைப் போன்ற ஒரு மனிதன் அல்ல என்ற உண்மையினால் கவரப்பட்டார்கள். (யோவான் 6:18-21) அவர் மிகவும் விசேஷித்த ஒரு நபராக இருந்தார். இது ஏனென்றால் அவர் ஏற்கனவே கடவுளோடு பரலோகத்தில் ஓர் ஆவி ஆளாக வாழ்ந்திருக்கிறார். ஆம், பைபிளில் பிரதான தூதன் என்று அடையாளங் காட்டப்படும் ஒரு தூதனாக இருந்திருக்கிறார். (1 தெசலோனிக்கேயர் 4:16; யூதா 9) கடவுள் மற்ற எல்லா காரியங்களுக்கும் முன்பாக அவரை சிருஷ்டித்திருந்தார். (கொலோசெயர் 1:15) இவ்விதமாக, எண்ணற்ற கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்தச் சடப்பொருளாலான பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே, இயேசு மகத்தான சிருஷ்டிகராகிய தம்முடைய தகப்பன் யெகோவா தேவனோடு பரலோகத்தில் நெருக்கமான ஒரு தோழமையை அனுபவித்து களித்திருக்கிறார்.—நீதிமொழிகள் 8:22, 27-31; பிரசங்கி 12:1.
14. இயேசு எவ்விதமாக ஒரு மனிதரானார்?
14 பின்பு, ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, கடவுள் குமாரனின் ஜீவனை ஒரு பெண்ணின் கருப்பைக்கு மாற்றினார். அவர் இவ்விதமாக கடவுளின் ஒரு மானிட குமாரனாக ஆனார், ஒரு பெண்ணின் மூலமாக இயல்பான முறையில் பிறந்தார். (கலாத்தியர் 4:4) இயேசு தம்முடைய தாயாகிய மரியாளின் கருப்பையில் உருவாகும் போதும் பின்னால் ஒரு பையனாக வளரும் போதும், தம்முடைய பூமிக்குரிய பெற்றோர்களாக இருக்க கடவுள் தேர்ந்தெடுத்தவர்களின் பேரில் சார்ந்திருந்தார். இறுதியில் இயேசு முழு வளர்ச்சிப் பருவம் அடைந்தார், பின்னர் பரலோகத்தில் கடவுளோடு தமக்கு முன்பிருந்த கூட்டுறவின் முழு நினைவாற்றல் அவருக்கு அளிக்கப்பட்டது. அவருடைய முழுக்காட்டுதலின் போது ‘வானம் அவருக்குத் திறக்கப்பட்ட போது’ இது சம்பவித்தது.—மத்தேயு 3:16; யோவான் 8:23; 17:5.
15. இயேசு பூமியில் வாழ்ந்த போது, அவர் முழுவதுமாக ஒரு மனிதனாக இருந்தார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
15 உண்மையாகவே இயேசு ஓர் ஈடிணையற்ற நபராவார். இருந்தபோதிலும், அவர் ஆரம்பத்தில் கடவுள் சிருஷ்டித்து ஏதேன் தோட்டத்தில் வைத்த ஆதாமுக்கு சமமான ஒரு மனிதனாக இருந்தார். அப்போஸ்தலனாகிய பவுல் விளக்கினார்: “முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான். பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.” இயேசு “பிந்தின ஆதாம்” [“கடைசி ஆதாம்,” NW] என்றழைக்கப்படுகிறார், ஏனென்றால் முதலாவதான ஆதாமைப் போன்றே இயேசு ஒரு பரிபூரண மனிதனாக இருந்தார். ஆனால் இயேசு மரித்த பிற்பாடு, அவர் உயிர்த்தெழுப்பப்பட்டார், ஆவி ஆளாக பரலோகத்தில் தம் தகப்பனை மீண்டும் சேர்ந்து கொண்டார்.—1 கொரிந்தியர் 15:45.
கடவுளைப் பற்றி எவ்வாறு மிக நன்றாக கற்றுக்கொள்வது
16. (எ) இயேசுவோடு கூட்டுறவுக்கொள்வதை அப்பேர்ப்பட்ட ஒரு சிலாக்கியமாக்கியது எது? (பி) இயேசுவைக் காண்பது கடவுளைக் காண்பதே என்று ஏன் சொல்லப்படலாம்?
16 இயேசு பூமியில் இருந்தபோது, அவருடைய தனிப்பட்ட கூட்டாளிகளாக சிலர் அனுபவித்த மகத்தான சிலாக்கியத்தை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்! பரலோகத்தில் யெகோவா தேவனின் நெருங்கிய கூட்டாளியாக ஒருவேளை கோடிக்கணக்கான ஆண்டுகள் செலவிட்டிருக்கும் ஒருவர் பேசுவதைக் கேட்பதையும், அவரிடம் பேசுவதையும், அவரை கவனிப்பதையும், அவரோடுகூட வேலை செய்வதையும்கூட கற்பனைச் செய்துப் பாருங்கள்! ஓர் உண்மையுள்ள குமாரனாக, இயேசு அவர் செய்த அனைத்து காரியத்திலும் தம்முடைய பரலோக தகப்பனைப் பின்பற்றினார். உண்மையில், இயேசு தம் தகப்பனை அவ்வளவு மிக நுட்பமாக பார்த்துப் பின்பற்றியதால் தம்மைப் பின்பற்றினவர்களிடம் அவர் கொல்லப்படுவதற்கு சற்று முன்பாக பின்வருமாறு சொல்ல முடிந்தது: “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.” (யோவான் 14:9, 10) ஆம், இயேசு இங்கே பூமியில் எதிர்பட்ட ஒவ்வொரு சூழ்நிலைமையிலும் தம் தகப்பனாகிய சர்வ வல்லமையுள்ள கடவுள் என்ன செய்திருப்பாரோ அதையே அவர் செய்தார். இதன் காரணமாக நாம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் படிக்கையில், உண்மையில் நாம் கடவுள் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி கற்றுக்கொள்கிறோம்.
17. “இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்” என்ற காவற்கோபுரம் தொடரினால் என்ன நேர்த்தியான நோக்கம் நிறைவேற்றப்பட்டது?
17 ஆகவே ஏப்ரல் 1985 முதல் ஜூன் 1991 வரை தொடர்ச்சியாக காவற்கோபுரம் பத்திரிகையில் வெளியான “இயேசுவின் வாழ்கையும் ஊழியமும்” தொடர் மனிதனாக இயேசுவைப் பற்றி நேர்த்தியான ஒரு வருணனையை அளித்தது மட்டுமின்றி அவருடைய பரம பிதாவாகிய யெகோவா தேவனைப் பற்றியும் அதிகத்தைக் கற்பித்தது. அதன் முதல் இரண்டு பகுதிகள் வந்தபின், ஒரு பயனியர் ஊழியர் போற்றுதல் தெரிவிக்கும் வகையில் உவாட்ச் டவர் சங்கத்துக்கு இவ்வாறு எழுதி சொன்னார்: “குமாரனை நன்கு அறிந்துகொள்வதைவிட தகப்பனிடமாக நெருங்கி வர வேறு என்ன மேம்பட்ட வழி இருக்கமுடியும்!” மக்களைப் பற்றிய தகப்பனின் மென்மையான அக்கறையும் அவருடைய பெரிய மனதும் குமாரனின் வாழ்க்கையில் பெரிதாக்கிக் காட்டப்படுகின்றன.
18. ராஜ்ய செய்தி யாரிடமிருந்து வந்தது? இயேசு எவ்விதமாக இதை ஒப்புக்கொண்டார்?
18 தம்முடைய தகப்பனின் சித்தத்துக்கு முழுமையாக கீழ்ப்பட்டிருப்பதன் மூலமாக தம்முடைய தகப்பனிடமாக தமக்கிருந்த அன்பை வெளிப்படுத்திய இயேசுவின் அன்பு கவனிப்பதற்கு உண்மையிலேயே அழகானதாகும். இயேசு தம்மை கொலை செய்ய வகைத் தேடிக்கொண்டிருந்த யூதர்களிடம், “நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே, இவைகளைச் சொன்னேன்,” என்பதாகச் சொன்னார். (யோவான் 8:28) அப்படியென்றால், இயேசு பிரசங்கித்த ராஜ்ய செய்தி அவரிடமிருந்து வரவில்லை. யெகோவா தேவனிடமிருந்தே வந்தது. இயேசு மறுபடியும் மறுபடியுமாக தம்முடைய தகப்பனுக்கே சிறப்பை அளித்தார்: “நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். . . . ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்.”—யோவான் 12:49, 50.
19. (எ) யெகோவா கற்பிக்கும் விதமாகவே இயேசு கற்பித்தார் என்பது நமக்கு எப்படித் தெரியும்? (பி) இயேசு ஏன் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதராக இருந்தார்?
19 என்றபோதிலும், இயேசு பிதா அவரிடம் சொன்னதை வெறுமனே பேசவோ அல்லது உபதேசிக்கவோ இல்லை. அவர் அதிகத்தைச் செய்தார். பிதா அதை பேசியிருந்தால் அல்லது உபதேசித்திருந்தால் அவர் செய்திருக்கக்கூடிய வகையில் அவர் பேசினார், உபதேசித்தார். மேலுமாக, அவருடைய எல்லா நடவடிக்கைகளிலும் செயல்தொடர்புகளிலும் அதே சூழ்நிலைமைகளின் கீழ், தகப்பன் எப்படி நடந்திருப்பாரோ அதேவிதமாகவே அவர் நடந்து கொண்டு செயல்பட்டார். “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்,” என்பதாக இயேசு விளக்கினார். (யோவான் 5:19) எல்லா வகையிலும், இயேசு தம்முடைய தகப்பனாகிய யெகோவா தேவனின் பரிபூரணமான பிரதிபலிப்பாக இருந்தார். ஆகவே இயேசு எக்காலத்திலும் வாழ்ந்தவருள்ளும் மிகப் பெரிய மனிதராக இருந்தது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை! அப்படியென்றால் நிச்சயமாகவே இந்த அதி முக்கியமான மனிதரைப் பற்றி நாம் நெருக்கமாக சிந்திப்பது இன்றியமையாத முக்கியத்துவமுள்ளதாகும்!
கடவுளின் அன்பு இயேசுவில் காணப்படுகிறது
20. “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்பது அப்போஸ்தலனாகிய யோவானுக்கு எப்படித் தெரிந்திருக்கக்கூடும்?
20 இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய ஆழமான கவனமான படிப்பின் மூலமாக நாம் விசேஷமாக கற்றுக்கொள்வது என்ன? ஆம், அப்போஸ்தலனாகிய யோவான், “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை,” என்று ஒப்புக்கொண்டார். (யோவான் 1:18) இருந்தபோதிலும் யோவான் முழுமையான நம்பிக்கையோடு 1 யோவான் 4:8-ல், “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” என்று எழுதினார். யோவான் இதைச் சொல்ல முடியும், ஏனென்றால் இயேசுவில் தான் கண்டவற்றின் மூலமாக கடவுளின் அன்பை அவர் அறிந்து கொண்டிருந்தார்.
21. இயேசுவைப் பற்றியதில் எது அவரை எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதராக்கிற்று?
21 தகப்பனைப் போன்றே இயேசு, இரக்கமுள்ளவராகவும், தயவுள்ளவராகவும், தாழ்மையானவராகவும், எல்லோரும் அணுகக்கூடியவராகவும் இருந்தார். பலவீனரும், ஒடுக்கப்பட்டவர்களும், எல்லாவிதமான ஜனங்களும்—ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், பணக்காரர், ஏழைகள், வல்லமை வாய்ந்தவர்கள், பேர் போன பாவிகளும்கூட—அவரோடு கூட இருப்பதில் எவ்வித தயக்கத்தையும் உணரவில்லை. ஆம், தம்முடைய தகப்பனைப் போன்றே, இயேசுவின் மிக மேம்பட்ட அன்பான முன்மாதிரிதான் அவரை எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதராக்கியது. நெப்போலியன் போனபார்ட்டும் கூட பின்வருமாறு சொன்னதாகச் சொல்லப்படுகிறது: “அலெக்சாந்தரும், சீசரும், சார்லிமேனும், நானும் சாம்ராஜ்யங்களை உண்டுபண்ணினோம், ஆனால் எங்களுடைய திறமையான படைப்புகளுக்கு நாங்கள் எதை நம்பியிருந்தோம்? பலாத்காரம். இயேசு மட்டுமே அன்பின் அடிப்படையில் தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபித்தார், இன்று அவருக்காக இலட்சக்கணக்கான மனிதர்கள் உயிரைக் கொடுப்பார்கள்.”
22. இயேசுவின் போதனைகளைப் பற்றியதில் வித்தியாசமாக இருந்தது என்ன?
22 இயேசுவின் போதனைகள் அடிப்படையில் வித்தியாசமாக இருந்தன. “தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்,” என்று இயேசு துரிதப்படுத்தினார். “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.” “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.” “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 5:39, 44; 7:12) அனைவரும் மேலான இந்தப் போதகங்களைப் பின்பற்றினால் உலகம் எத்தனை வித்தியாசமாக இருக்கும்!
23 இயேசுவின் உவமைகள் அல்லது உதாரணங்கள் மக்களின் இருதயங்களைத் தொட்டு நன்மையைச் செய்யவும் தீமையை தவிர்க்கவும் அவர்களைத் தூண்டியது. வேறொரு இனத்தைச் சேர்ந்தவனாக இருந்த காயமுற்ற மனிதனுக்கு அதே இனத்தைச் சேர்ந்த பக்தியுள்ளவர்களாக கருதப்பட்ட மனிதர்கள் உதவி செய்யாத போது, இழிவாக கருதப்பட்ட ஒரு சமாரியன் அவனுக்கு உதவியதைப் பற்றிய அவருடைய நன்கு அறியப்பட்ட கதை உங்களுக்கு நினைவிருக்கலாம். அல்லது இரக்கமுள்ள மன்னிக்கிற தகப்பனையும் அவருடைய கெட்ட குமாரனையும் பற்றிய கதை. மேலும் ஒரு ராஜா பதினாயிரம் தாலந்து கடன்பட்டிருந்த ஓர் அடிமைக்கு அதை மன்னித்தும், அந்த அடிமை நூறு வெள்ளிப்பணம் மட்டுமே தனக்கு கடன்பட்டிருந்து அதை செலுத்த இயலாதவனாக இருந்த ஓர் உடன் அடிமையை அவன் சிறையில் போடும்படி செய்வித்ததையும் பற்றியது என்ன? எளிய உதாரணங்கள் மூலமாக, இயேசு தன்னலமும் பேராசையுமுள்ள செயல்களை வெறுக்கும்படியும் அன்பும் இரக்கமுமான செயல்களை அத்தனை கவர்ச்சியானதுமாகச் செய்தார்!—மத்தேயு 18:23-35; லூக்கா 10:30-37; 15:11-32.
24. மறுக்கமுடியாத வகையில், இயேசு எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்று நாம் ஏன் சொல்லமுடியும்?
24 என்றபோதிலும் அவருடைய சொந்த வாழ்க்கை, அவர் கற்பித்தக் காரியங்களோடு துல்லியமாக இசைந்திருந்தது தானே இயேசுவிடமாக மக்களை விசேஷமாக கவர்ந்திழுத்து, நல்லவிதமாக அவர்களைப் பாதிக்கும்படி செய்வித்தக் காரியமாகும். அவர் பிரசங்கித்ததை கடைபிடித்தார். மற்றவர்களுடைய குறைகளை அவர் பொறுமையாக தாங்கிக் கொண்டார். அவருடைய சீஷர்கள் யார் பெரியவர் என்பதைக் குறித்து சண்டைப் போட்டுக்கொண்ட போது, கடுமையாக அவர்களை அதட்டுவதற்குப் பதிலாக அவர் தயவாக அவர்களைத் திருத்தினார். அவர் அவர்களுடைய தேவைகளுக்கு மனத்தாழ்மையோடு ஊழியஞ் செய்து அவர்களுடைய கால்களையும்கூட கழுவினார். (மாற்கு 9:30-37; 10:35-45; லூக்கா 22:24-27; யோவான் 13:5) கடைசியாக அவர்களுக்காக மட்டுமல்ல, எல்லா மனிதகுலத்துக்குமாக அவர் வேதனையுள்ள ஒரு மரணத்தைச் சகித்தார்! சந்தேகமின்றி, இயேசு எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதராக இருந்தார். (w92 2/15)
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ இயேசு சரித்திரத்தில் உண்மையான ஒரு நபராக இருந்தார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
◻ இயேசு ஒரு மனிதனாக இருந்தார் என்பது நமக்கு எப்படித் தெரியும்? என்றாலும் அவர் எவ்விதமாக மற்ற எல்லா மனிதரிலிருந்தும் வித்தியாசமாக இருந்தார்?
◻ இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி படிப்பதே ஏன் கடவுளைப் பற்றி கற்றறிவதற்கு மிகச் சிறந்த வழியாக இருக்கிறது?
◻ இயேசுவைப் பற்றி படிப்பதன் மூலம் கடவுளுடைய அன்பைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
13. மற்ற எல்லா மனிதர்களிலிருந்து இயேசு எவ்விதமாக வித்தியாசமாக இருந்தார்?
23. இருதயங்களைத் தொட்டு நன்மைச் செய்யும்படி ஜனங்களை தூண்டுவிப்பதற்கு இயேசு என்ன செய்தார்?
[பக்கம் 10-ன் படம்]
இயேசுவின் அப்போஸ்தலர்கள் வியந்து ஆச்சரியப்பட்டனர்: “இவர் யாரோ?”