யெகோவாவின் நாளை மனதில் நெருக்கமாகக் கொண்டிருங்கள்
“நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் [யெகோவாவின், NW] நாள் சமீபமாயிருக்கிறது.”—யோவேல் 3:14.
1. யெகோவா அறிவிக்கும் வரவிருக்கின்ற புனிதப் போர் மனிதகுலத்தின் “புனிதப்” போர்களிலிருந்து ஏன் வித்தியாசமாக இருக்கும்?
“இதைப் புறஜாதிகளுக்குள்ளே கூறுங்கள்; யுத்தத்துக்கு ஆயத்தம் பண்ணுங்கள்.” (யோவேல் 3:9) இது ஒரு புனிதப் போரை அர்த்தப்படுத்துகிறதா? கிறிஸ்தவமண்டலம் முதன்மையான பங்கை வகித்த சமயப் போர்களை, சிலுவைப் போர்களை, மற்றும் இரண்டு உலகப் போர்களை பின்னோக்கிப் பார்க்கையில், “புனிதப்” போர் பற்றி யோசிக்கும் பட்சத்தில் அது நம்மை பயத்தினால் நடுங்க வைக்கக்கூடும். என்றபோதிலும், யோவேல் தீர்க்கதரிசன புனிதப் போர், தேசங்களின் மத்தியில் நடைபெறும் ஒரு போர் அல்ல. இது மதத்தை சாக்காக பயன்படுத்திக் கொண்டு பிராந்தியத்துக்காக அல்லது உடைமைக்காகச் செய்யப்படும் பகைமை நிறைந்த ஒரு போராட்டம் அல்ல. அது ஒரு நீதியுள்ள போர். பூமியிலிருந்து பேராசை, சண்டை, ஊழல் மற்றும் ஒடுக்குதலை ஒழித்துவிடுவதற்கான கடவுளுடைய போராக இருக்கிறது. அது யெகோவாவின் சிருஷ்டிப்பு மண்டலம் முழுவதிலுமாக அவருடைய பேரரசுரிமையை நியாயநிரூபணஞ் செய்யும். அந்த யுத்தம் கிறிஸ்துவின் ராஜ்யம் மனிதகுலத்தை கடவுளுடைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த ஆயிர வருட கால சர்வலோக சமாதானம், செழுமை மற்றும் சந்தோஷத்திற்குள் கொண்டு செல்வதற்காக வழியை திறந்து வைக்கும்.—சங்கீதம் 37:9-11; ஏசாயா 65:17, 18; வெளிப்படுத்துதல் 20:6.
2, 3. (எ) யோவேல் 3:14-ல் முன்னுரைக்கப்பட்டிருக்கும் “யெகோவாவின் நாள்” என்பது என்ன? (பி) தேசங்கள் அந்த நாளில் எதிர்ப்படவிருப்பவற்றிக்கு ஏன் அவர்கள் பாத்திரமுள்ளவர்களாக இருக்கிறார்கள்?
2 அப்படியென்றால், யோவேல் 3:14-ல் முன்னுரைக்கப்பட்டிருக்கும் “யெகோவாவின் நாள்” என்பது என்ன? “அந்த நாளினிமித்தம் ஐயோ!” என்று யெகோவாதாமே உணர்ச்சி பொங்க கூறுகிறார். “யெகோவாவின் நாள் சமீபமாயிருக்கிறது; அது சங்காரம் போலச் சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது.” இது எப்படி சங்காரமாக இருக்கிறது? தீர்க்கதரிசி பின்னால் விளக்குகிறார்: “நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள் திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே யெகோவாவின் நாள் சமீபமாயிருக்கிறது.” (யோவேல் 1:15; 3:14, NW) வானத்தின் மீதும் பூமியின் மீதும் யெகோவாவின் பேரரசுரிமையை நிராகரித்துவிடும் தேவபயமற்ற திரளான ஜனத்தின் மீது யெகோவா தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் நாளாக இது இருக்கிறது. இத்தனை காலமாக மனித குலத்தை தன் பிடியில் வைத்திருக்கும் சாத்தானிய காரிய ஒழுங்கை சங்காரம் செய்வது யெகோவாவின் தீர்ப்பாக இருக்கிறது.—எரேமியா 17:5-7; 25:31-33.
3 பூமியின் மீதுள்ள சீர்கெட்ட அமைப்பு அந்தத் தீர்ப்பை எதிர்ப்பட்டாக வேண்டும். ஆனால் உலக அமைப்பு உண்மையில் அத்தனை மோசமாக இருக்கிறதா? அதன் பதிவை, ஒரு முறை பார்வையிடுவது போதுமானதாக இருக்க வேண்டும்! இயேசு மத்தேயு 7:16-ல் ஒரு நியமத்தைக் குறிப்பிட்டார்: “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” உலகின் மிகப் பெரிய நகரங்கள் போதை வஸ்துக்கள், குற்றச்செயல்கள், பயங்கரம், ஒழுக்கயீனம் மற்றும் தூய்மைக்கேட்டின் மையமாக மாறிவிட்டிருக்கவில்லையா? அநேக தேசங்களில், புதிதாக ஏற்பட்டிருக்கும் சுயாதீனங்களின் காரணமாக அவை அரசியல் குழப்பம், உணவு பற்றாக்குறை மற்றும் வறுமையினால் திணறிக்கொண்டிருக்கின்றன. ஒரு நூறு கோடிக்கும் அதிகமான ஆட்கள் வறுமை உணவுப்படியில் வாழ்கின்றனர். மேலுமாக போதை வஸ்துக்களாலும் ஒழுக்கமற்ற வாழ்க்கைப் பாணிகளாலும் ஊக்குவிக்கப்படும் எய்ட்ஸ் கொள்ளை நோய் பூமியின் பெரும் பகுதியின் மீது இருண்ட மேகத்தை விழச் செய்திருக்கிறது. குறிப்பாக 1914-ல் முதல் உலகப் போர் துவங்கினது முதற்கொண்டு, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உலகளாவிய அளவில் படுமோசமான நிலைமை இருந்து வருகிறது.—2 தீமோத்தேயு 3:1-5 ஒப்பிடவும்.
4. யெகோவா என்ன சவாலை தேசங்கள் மீது தூக்கி எறிகிறார்?
4 என்றபோதிலும், யெகோவா அவருடைய வழிகளைப் பற்றிய போதனைகளை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டு அவருடைய பாதைகளில் நடந்துவரும் ஒரு ஜனத்தை எல்லா ஜாதிகளிலிருந்தும் கூட்டிச்சேர்த்து வருகிறார். பூகோளம் முழுவதிலும் இருக்கும் இந்த ஜனங்கள் உலகின் வன்முறை வழிகளை நிராகரித்து பட்டயங்களை மண்வெட்டிகளாக அடித்துவிட்டிருக்கிறார்கள்! ஆம், பட்டயங்களை மண்வெட்டிகளாக! ஆனால் யெகோவா யோவேல் 3:9, 10-ல் அறிவிக்கும்படி செய்திருக்கும் முழக்கத்துக்கு இது தலைகீழாக இருக்கிறதல்லவா? நாம் அங்கே வாசிக்கிறோம்: “இதைப் புறஜாதிகளுக்குள்ளே கூறுங்கள்; யுத்தத்துக்கு ஆயத்தம் பண்ணுங்கள், பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; யுத்த வீரர் எல்லாரும் சேர்ந்து ஏறி வரக்கடவர்கள். உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்.” ஆ, இங்கே யெகோவா உலக அரசர்களிடம், அர்மகெதோனில் தமக்கு எதிராக அவர்களுடைய ஒருங்கிணைந்த படைபலத்தைக் கொண்டு வரும்படியாக சவால்விடுகிறார். ஆனால் அவர்கள் வெற்றிபெற முடியாது! அவர்கள் முழுமையான தோல்வியில் அமிழ்ந்து போக வேண்டும்.—வெளிப்படுத்துதல் 16:16.
5. “பூமியின் திராட்சப்பழங்கள்,” அறுவடைச் செய்யப்படுகையில் விளைவு என்னவாக இருக்கும்?
5 கர்த்தராகிய ஆண்டவர் யெகோவாவுக்கு எதிராக, வலிமைவாய்ந்த ஆட்சியாளர்கள் பயங்கரமான ஆயுதங்களின் படைக்கல கொட்டில்களை உருவாக்கியிருக்கின்றனர்—ஆனால் வீணாகவே! யெகோவா யோவேல் 3:13-ல் கட்டளையைக் கொடுக்கிறார்: “பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய பாதகம் பெரியது.” அந்த வார்த்தைகள் வெளிப்படுத்துதல் 14:18-20-ல் “பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, . . . அதின் குலைகளை அறுத்துவிடுங்கள்” என்ற கருக்குள்ள அரிவாளைக் கொண்டிருக்கும் தேவதூதனுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைக்கு இணையாக இருக்கிறது. அந்தத் தேவதூதன் கருக்குள்ள அரிவாளை நீட்டி எதிர்க்கின்ற அந்தத் தேசங்களை “தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையிலே போடு”கிறார். அடையாள அர்த்தத்தில், அந்த ஆலையிலிருந்து 1,600 பர்லாங்குகள் தூரத்துக்கு—சுமார் 300 கிலோமீட்டர் தூரத்துக்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள் மட்டும் பெருகி வருகிறது! யெகோவாவை அவமதிப்பு செய்யும் தேசங்களுக்கு என்னே ஒரு பயங்கரமான எதிர்பார்ப்பு!
சட்டத்துக்கு-இணங்க வாழும் குடிமக்கள்
6. யெகோவாவின் சாட்சிகள் தேசங்களையும் அவர்களுடைய ஆட்சியாளர்களையும் எவ்விதமாக கருதுகிறார்கள்?
6 யெகோவாவின் சாட்சிகள் தேசங்களுக்கும் அவைகளின் ஆட்சியாளர்களுக்கும் அவமதிப்பு காட்டுகிறவர்களாக இருக்கிறார்கள் என்பதை இது அர்த்தப்படுத்துமா? நிச்சயமாக இல்லை! அனைவராலும் தெளிவாக பார்க்க முடிகிற ஊழலைக் குறித்து அவர்கள் வருந்துகின்றனர், மேலும் யெகோவா அவருடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றப் போகிற அந்த நாள் வேகமாக வந்துகொண்டிருப்பதைக் குறித்து அவர்கள் எச்சரிக்கிறார்கள். அதே சமயத்தில், அவர்கள் ரோமர் 13:1-லுள்ள அப்போஸ்தலனாகிய பவுலின் கட்டளைக்கு மனத்தாழ்மையுடன் கீழ்ப்படிந்திருக்கிறார்கள்: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக் கடவன்.” இந்த மனித ஆட்சியாளர்களுக்கு அவர்கள் தகுந்த கனத்தைச் செலுத்துகிறார்கள், ஆனால் வணக்கத்தை அல்ல. சட்டத்துக்கு இணங்க வாழும் குடிமக்களாக அவர்கள் நேர்மை, உண்மைத்தன்மை மற்றும் சுத்தம் சம்பந்தமாக பைபிளின் தராதரங்களைப் பின்பற்றி தங்கள் சொந்த குடும்பத்திற்குள் நல்ல ஒழுக்கங்களை வளர்த்து வருகிறார்கள். மற்றவர்களும்கூட இதை எவ்விதமாகச் செய்யலாம் என்பதை கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். அவர்கள் எல்லா மனிதரோடும் சமாதானமாக வாழ்ந்து, ஆர்ப்பாட்டங்களில் அல்லது அரசியல் புரட்சிகளில் ஈடுபடாதிருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் உன்னத அதிகாரியான கர்த்தராகிய ஆண்டவர் யெகோவா இந்த பூமிக்குப் பரிபூரண சமாதானத்தையும் நீதியுள்ள அரசாங்கத்தையும் மீண்டும் கொண்டுவரும்படி அவருக்காக காத்திருக்கையில், அவர்கள் மேலான மனித அதிகாரங்களின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருப்பதில் முன்மாதிரிகளாக இருக்க நாடுகிறார்கள்.
அவருடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுதல்
7, 8. (எ) என்ன விதத்தில் தேசங்கள் அசைக்கப்பட்டு, இருள் அவற்றின் மீது வந்திறங்கும்? (பி) யோவேல் இன்று யாரை வருணிக்கிறார், பொதுவாக உலகத்துக்கு நேர் எதிர்மாறாக இவர்கள் எவ்விதமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்?
7 தெளிவான அடையாள மொழியில், யெகோவா மேலுமாக அவருடைய நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றத்தின் இந்த வருணனையை கொடுக்கிறார்: “சூரியனும் சந்திரனும் இருண்டு போகும், நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும். கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்.” (யோவேல் 3:15, 16) மனிதகுலத்தின் மேலீடான பிரகாசமான, செழுமையான நிலைமை, இருண்டதாகவும் தீமைக்கு முன்னறிகுறியாகவும் மாறும், உடைந்து சிதறிப் போன இந்த உலக அமைப்பு ஒரு மிகப் பெரிய பூமியதிர்ச்சியால் பாழாக்கப்பட்டது போல, இல்லாமற் போய்விடும்!—ஆகாய் 2:20-22.
8 யெகோவா அவருடைய ஜனத்துக்கு அடைக்கலமும் அரணான கோட்டையுமாயிருப்பார் என்ற சந்தோஷமான உறுதியை கவனியுங்கள்! ஏன் அப்படி? ஏனென்றால் அவர்கள் மாத்திரமே யெகோவாவின் பின்வரும் வார்த்தைகளுக்குப் பிரதிபலித்திருக்கும் ஒரே ஜனமாக, சர்வதேசீய ஜனமாக இருக்கின்றனர்: “நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.” (யோவேல் 3:17, NW) யோவேல் என்ற பெயரின் பொருள் “யெகோவாவே தேவன்,” என்பதாக இருப்பதன் காரணமாக, அவர் பொருத்தமாகவே, யெகோவாவின் அரசுரிமையை அறிவிப்பதில் தைரியமாக சேவை செய்யும் நவீன காலங்களிலுள்ள யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சாட்சிகளை வருணிக்கிறார். (மல்கியா 1:11-ஐ ஒப்பிடவும்.) யோவேல் தீர்க்கதரிசனத்தின் ஆரம்ப வார்த்தைகளுக்குத் திரும்புகையில் இன்று கடவுளுடைய மக்களின் செயல் நடவடிக்கையை அவர் எவ்வாறு தெளிவாக முன்னறிவிக்கிறார் என்பதை நாம் காண்போம்.
ஒரு வெட்டுக்கிளி கூட்டம்
9, 10. (எ) யோவேல் என்ன வாதையை முன்னுரைத்தார்? (பி) வெளிப்படுத்துதல் எவ்விதமாக வாதையைப் பற்றிய யோவேலின் தீர்க்கதரிசனத்தை எதிரொலிக்கிறது, இந்த வாதை கிறிஸ்தவமண்டலத்தின் மீது என்ன பாதிப்பை உடையதாயிருக்கிறது?
9 “யோவேலுக்கு உண்டான கர்த்தருடைய வசனத்தை,” இப்பொழுது கேளுங்கள்: “முதியோரே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, செவி கொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா? இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள். பச்சைப் புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப் பூச்சி தின்றது.”—யோவேல் 1:1-4.
10 இது எல்லா காலத்திலும் நினைவுகூரப்படப் போகிற அசாதாரணமான ஒரு நடவடிக்கையாக இருக்கிறது. அலை அலையாக பூச்சிகள், அதிக முக்கியமாக வெட்டுக்கிளிகள் தேசத்தைப் பாழாக்குகின்றன. இது எதை அர்த்தப்படுத்துகிறது? வெளிப்படுத்துதல் 9:1-12-ம் கூட “ஒரு ராஜன் . . . பாதாளத்தின் தூதனாகிய,” இயேசு கிறிஸ்துவின் கீழ் யெகோவா அனுப்பி வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஒரு வாதையைப் பற்றி பேசுகிறது. அபெத்தோன் (எபிரெயு) மற்றும் அப்பொல்லியோன் (கிரேக்கு) என்ற அவருடைய பெயர்களின் பொருள், “அழிவு,” மற்றும் “அழிப்பவர்,” ஆகும். இந்த வெட்டுக்கிளிகள், இப்பொழுது கர்த்தருடைய நாளிலே, பொய் மதத்தை முழுமையாக வெளிப்படுத்தி அதன் மீது யெகோவாவின் பழிவாங்குதலை அறிவித்து வருவதன் மூலம் கிறிஸ்தவமண்டலத்தின் மேய்ச்சல் நிலத்தைப் பாழாக்கியிருக்கும் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் மீதியானோருக்கு படமாக இருக்கின்றன.
11. நவீன நாளைய வெட்டுக்கிளிகளின் பலம் எவ்வாறு கூட்டப்படுகிறது, குறிப்பாக அவர்களுடைய தாக்குதலின் இலக்காயிருப்பது யார்?
11 வெளிப்படுத்துதல் 9:13-21-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வெட்டுக்கிளி வாதையை பின்தொடருவது குதிரை சேனையின் மிகப் பெரிய வாதையாகும். ஒரு சில ஆயிர அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் நாற்பது லட்சத்துக்கும் அதிகமான “வேறே ஆடு”களால் பலம் கூட்டப்பட்டு இவர்கள் சேர்ந்து எதிர்த்து வெல்லமுடியாத ஒரு குதிரை சேனையை உண்டுபண்ணுகையில் இது இன்று எவ்வளவு உண்மையாயிருக்கிறது! (யோவான் 10:16) கிறிஸ்தவமண்டல விக்கிரகாராதனைக்காரர் மீதும் ‘தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும் தங்கள் களவுகளையும்’ விட்டு மனந்திரும்பாதவர்கள் மீதும் யெகோவாவின் வேதனைக்கொடுக்கும் நியாயத்தீர்ப்புகளை அறிவிப்பதில் அவர்கள் ஒருங்கிணைந்திருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் கொடிய போர்களை சுறுசுறுப்பாக ஆதரித்திருக்கும் மதகுருமாருக்கும்—கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்டு மதகுருமாருக்கும்—நடத்தைக் கெட்ட பாதிரிகளுக்கும், நெறிதவறிய டிவி சுவிசேஷகர்களுக்கும் எதிராக இந்த நியாயத்தீர்ப்பு செய்திகள் உரைக்கப்படுகின்றன.
12. கிறிஸ்தவமண்டல தலைவர்கள் ஏன் நியாயத்தீர்ப்பு செய்திகளைப் பெற்றுக்கொள்ள பாத்திரமுள்ளவர்களாக இருக்கின்றனர், மகா பாபிலோனின் எல்லா உறுப்பினர்களோடும்கூட அவர்களுக்கு சீக்கிரத்தில் என்ன சம்பவிக்கும்?
12 இப்படிப்பட்ட மோசமான பாதிரிமார்களுக்கு யெகோவா ஆணையிடுகிறார்: “வெறியரே, விழித்து அழுங்கள்; திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள்; அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது.” (யோவேல் 1:5) இந்த 20-ம் நூற்றாண்டில், கிறிஸ்தவமண்டல மதம், கடவுளுடைய வார்த்தையின் சுத்தமான ஒழுக்க நியமங்களை உலகின் கட்டுப்பாடற்ற நடத்தையினால் மாற்றீடு செய்திருக்கின்றது. பொய் மதத்துக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் உலகத்தின் வழிகளை ஏற்று அமைத்துக்கொள்வது இன்பமாக இருந்திருக்கிறது, ஆனால் அவர்கள் என்னே ஆவிக்குரிய மற்றும் சரீரப்பிரகாரமான நோயை அறுவடை செய்திருக்கின்றனர்! விரைவில், வெளிப்படுத்துதல் 17:16, 17-ல் விளக்கப்பட்ட வண்ணமாகவே, அரசியல் வல்லரசுகள் முழு பொய் மத உலக பேரரசாகிய மகா பாபிலோன் மீது சடுதியான தாக்குதலைச் செய்து அவளை பாழாக்குவது கடவுளுடைய “யோசனை”யாக இருக்கும். அப்போது மட்டுமே, அவள் மீது யெகோவாவின் தீர்ப்பு நிறைவேற்றப்படுவதைக் காண்கையில், அவள் தன் வெறித்த நிலையிலிருந்து “விழித்து” எழுவாள்.
“ஏராளமான பலத்த ஒரு ஜாதி”
13. என்ன விதத்தில் வெட்டுக்கிளி கூட்டம் கிறிஸ்தவமண்டலத்துக்கு “ஏராளமான பலத்த ஒரு ஜாதி”யாக தெரிகிறது?
13 யெகோவாவின் தீர்க்கதரிசி தொடர்ந்து வெட்டுக்கிளி கூட்டத்தை “ஏராளமான பலத்த ஒரு ஜாதி,” என்று விவரிக்கிறார், மகா பாபிலோனுக்கு அது அப்படித்தான் தெரிகிறது. (யோவேல் 2:2) உதாரணமாக அதன் மதகுருமார், புத்த மத ஜப்பானில் மதம் மாறச் செய்வதில் கிறிஸ்தவமண்டல மதங்கள் தோல்வியுற்றிருக்கும் உண்மையைக் குறித்துப் புலம்புகின்றனர். என்றபோதிலும், இன்று, 1,60,000-க்கும் அதிகமான யெகோவாவின் ஜப்பானிய சாட்சிகள் தேசம் முழுவதும் திரண்டு 2,00,000-க்கும் அதிகமான ஆட்களின் வீடுகளில் தனிப்பட்ட பைபிள் படிப்புகளை நடத்தி வருகிறார்கள். இத்தாலியில், 1,80,000 யெகோவாவின் சாட்சிகள் இப்பொழுது கத்தோலிக்கருக்கு அடுத்ததாக எண்ணிக்கையில் இரண்டாவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் யெகோவாவின் சாட்சிகள் ‘குறைந்தபட்சம் 10,000 உண்மையுள்ள கத்தோலிக்கரை’ சர்ச்சிலிருந்து எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள் என்ற உண்மையைக் குறித்து ரோமன் கத்தோலிக்க பெருந்தகை ஒருவர் இத்தாலியில் வீணாகவே வருத்தப்பட்டுக்கொண்டார்.a இப்படிப்பட்டவர்களை வரவேற்க சாட்சிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.—ஏசாயா 60:8, 22.
14, 15. வெட்டுக்கிளி கூட்டத்தை யோவேல் எவ்வாறு விவரிக்கிறார்? இன்று இது எவ்விதத்தில் நிறைவேறியிருக்கிறது?
14 அபிஷேகம் பண்ணப்பட்ட சாட்சிகளின் வெட்டுக்கிளி கூட்டத்தை விவரிப்பதாய், யோவேல் 2:7-9 சொல்வதாவது: “அவைகள் பராக்கிரமசாலிகளைப் போல ஓடும்; யுத்தவீரரைப் போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன்தன் அணியிலே செல்லும். ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன்தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற் போகும் (அவைகளில் சில ஆயுதங்களுக்குள் விழுந்தாலும், மற்றவைகள் தங்கள் ஓட்டத்தை நிறுத்துவதில்லை NW). அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின் மேல் ஓடும், வீடுகளின் மேல் ஏறும்; பலகணி வழியாய்த் திருடனைப் போல உள்ளே நுழையும்.”
15 ஆம், வேறே ஆடுகளான நாற்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் இப்பொழுது சேர்ந்துகொண்டிருக்கும் இந்த அபிஷேகம் பண்ணப்பட்ட “வெட்டுக்கிளி” சேனையின் ஒரு தெளிவான வருணனை! மத சம்பந்தமான பகையின் எந்த “மதிலும்” இவர்களை தடுத்து நிறுத்த முடியாது. தைரியமாக அவர்கள் பகிரங்கமாக சாட்சி கொடுப்பதிலும் மற்ற கிறிஸ்தவ நடவடிக்கைகளிலும் “ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டி”ருக்கிறார்கள். (பிலிப்பியர் 3:16 ஒப்பிடவும்.) ஒத்திணங்கிப் போவதற்குப் பதிலாக, அவர்கள், நாசி ஜெர்மனியின் கத்தோலிக்க ஹிட்லரை வணங்கி வாழ்த்த மறுத்ததற்காக “ஆயுதங்களுக்குள் விழு”ந்த ஆயிரக்கணக்கான சாட்சிகளைப் போல அவர்கள் மரணத்தை எதிர்ப்பட மனமுள்ளவர்களாயிருந்திருக்கின்றனர். வெட்டுக்கிளிக் கூட்டம் எல்லா இடையூறுகள் மீதும் ஏறிச்சென்று, தங்கள் வீட்டுக்கு வீடு வேலையின் மூலமாக பைபிள் பிரசுரங்களை கோடிக்கணக்கில் விநியோகிக்கையில் வீடுகளுக்குள் ஒரு திருடனைப் போல நுழைந்து கிறிஸ்தவமண்டல “பட்டண”த்தில் முழுமையான ஒரு சாட்சியை கொடுத்திருக்கிறது. இந்தச் சாட்சி கொடுக்கப்பட வேண்டுமென்பது யெகோவாவின் சித்தமாக இருக்கிறது, பரலோகத்திலோ பூமியிலோ எந்தச் சக்தியாலும் அதை தடுத்து நிறுத்திட முடியாது.—ஏசாயா 55:11.
“பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு”
16, 17. (எ) யோவேல் 2:28, 29-லுள்ள வார்த்தைகள் எப்போது குறிப்பிடத்தக்க நிறைவேற்றத்தைக் கொண்டிருந்தன? (பி) யோவேலின் எந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் முதல் நூற்றாண்டில் முழுமையாக நிறைவேற்றமடையவில்லை?
16 யெகோவா தம்முடைய சாட்சிகளிடம் சொல்கிறார்: “நான் [ஆவிக்குரிய] இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW], வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்.” (யோவேல் 2:27) யெகோவா, யோவேல் 2:28, 29-லுள்ள தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்ற ஆரம்பித்த போது அவருடைய ஜனம் விலையேறப்பெற்ற இந்த உணர்வுக்குள் வந்தது: “நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.” இது பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவின் போது குழுமியிருந்த இயேசுவின் சீஷர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டு “அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்ட” சமயத்தில் நிகழ்ந்தது. பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே அவர்கள் பிரசங்கித்தார்கள், ஒரே நாளில், “ஏறக்குறைய மூவாயிரம் பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.”—அப்போஸ்தலர் 2:4, 16, 17, 41.
17 அந்த மகிழ்ச்சியான சமயத்தில், பேதுரு யோவேல் 2:30-32-ஐயும்கூட மேற்கோள் காண்பித்தார்: “வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். அப்பொழுது யெகோவாவின் நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.” அந்த வார்த்தைகள் பொ.ச. 70-ல் எருசலேம் அழிக்கப்பட்ட போது பகுதியளவான நிறைவேற்றத்தைக் கொண்டிருந்தன.
18. யோவேல் 2:28, 29-ன் பெரிய நிறைவேற்றம் எப்போது நடந்தேறத் தொடங்கினது?
18 என்றபோதிலும் யோவேல் 2:28-32 கூடுதலான பொருத்தத்தை உடையதாக இருக்கும். ஆம், இந்தத் தீர்க்கதரிசனம் 1919 செப்டம்பர் முதற்கொண்டு குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றமடைந்து வந்திருக்கிறது. அந்தச் சமயத்தில் அ.ஐ.மா. ஓஹையோவிலுள்ள சீடர் பாய்ன்டில் யெகோவாவின் மக்களுடைய மறக்கமுடியாத ஒரு மாநாடு நடத்தப்பட்டது. கடவுளுடைய ஆவி தெளிவாக காணப்பட்டது, அவருடைய அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியர்கள் இன்றைய நாள் வரையாகவும் நீடித்திருக்கும் உலகளாவிய சாட்சி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்க உந்துவிக்கப்பட்டார்கள். என்னே மகத்தான விஸ்தரிப்பு விளைவடைந்திருக்கிறது! சீடர் பாய்ன்ட் மாநாட்டில் ஆஜராயிருந்த 7,000-க்கும் அதிகமானவர்கள் 1991, மார்ச் 30-ம் தேதி இயேசுவின் மரண ஞாபகார்த்தத்துக்கு மொத்தமாக ஆஜராயிருந்த 1,06,50,158 எண்ணிக்கையாக வளர்ந்திருக்கின்றனர். இவர்களில் 8,850 பேர் மாத்திரமே அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களாக உரிமைப்பாராட்டினர். யெகோவாவின் ஆற்றல்வாய்ந்த ஆவியால் பிறப்பிக்கப்பட்ட உலகளாவிய பலனைக் காணும் போது இவர்கள் அனைவரின் சந்தோஷம் எத்தனை பெரியதாக இருக்கிறது!—ஏசாயா 40:29, 31.
19. யெகோவாவின் நாள் அருகாமையில் இருப்பதை முன்னிட்டுப் பார்க்கையில், நம் ஒவ்வொருவரின் மனநிலையும் என்னவாக இருக்க வேண்டும்?
19 நமக்கு எதிரில் முன்னே இருப்பது சாத்தானிய காரிய ஒழுங்கை நாசப்படுத்தப் போகிற “கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] பெரிதும் பயங்கரமுமான நாளாகும்.” (யோவேல் 2:31) சந்தோஷகரமாக, “யெகோவாவின் நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.” (அப்போஸ்தலர் 2:21, NW) எவ்விதமாக? அப்போஸ்தலனாகிய பேதுரு “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்,” என்று சொல்லி விட்டு, பின்னர், “இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்,” என்று சொல்கிறார். யெகோவாவின் நாள் சமீபத்திலிருக்கிறது என்பதை மனதில் வைத்திருக்கையில், நீதியுள்ள “புதிய வானமும் புதிய பூமியும்,” பற்றிய யெகோவாவின் வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றத்தைக் காணவும்கூட நாம் மகிழ்ச்சியடைவோம்.—2 பேதுரு 3:10-13.
[அடிக்குறிப்புகள்]
a லா ரிப்பப்ளிக்கா, ரோம், இத்தாலி, நவம்பர் 12, 1985, மற்றும் லா ரிவிஸ்டா டெல் க்ளெரோ இட்டாலியானோ, மே 1985.
உங்களால் விளக்கமுடியுமா?
◻ “யெகோவாவின் நாள்,” என்பது என்ன?
◻ ‘பூமியின் திராட்சப்பழங்களை’ இயேசு எவ்வாறு அறுவடை செய்கிறார்? ஏன்?
◻ வெட்டுக்கிளி வாதை 1919 முதற்கொண்டு எவ்விதமாக கிறிஸ்தவமண்டலத்தை அல்லல்படுத்தியிருக்கிறது?
◻ பொ.ச. 33-லும் மறுபடியுமாக 1919-லும் யெகோவாவின் ஆவி எவ்விதமாக அவருடைய ஜனத்தின் மீது ஊற்றப்பட்டிருக்கிறது?