“ஆபத்துக் கால”த்தை யார் தப்பிப்பிழைப்பார்?
“அப்பொழுது யெகோவாவின் நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.”—யோவேல் 2:32, NW.
1. தானியேல் மற்றும் மல்கியாவின் பிரகாரம் வரும் “ஆபத்துக் கால”த்தின் போது இரட்சிப்புக்கான வாய்ப்புடையவர்களை தனிப்படுத்திக் காட்டுவது என்ன?
நம்முடைய நாளை முன்னோக்கிப் பார்த்து, தானியேல் தீர்க்கதரிசி எழுதினார்: “யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக் காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.” (தானியேல் 12:1) நிச்சயமாகவே ஆறுதலான வார்த்தைகள்! மல்கியா 3:16-ம் கூட அறிவிக்கும் வண்ணமாக, யெகோவாவின் அங்கீகரிக்கப்பட்ட ஜனம் அவரால் நினைவுகூரப்படுவர்: “அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் [யெகோவா, NW] கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.”
2. யெகோவாவின் நாமத்தை தியானிப்பதிலிருந்து என்ன விளைவடைகிறது?
2 யெகோவாவின் நாமத்தை தியானிப்பது, அவரையும் அவருடைய கிறிஸ்துவையும் அவருடைய எல்லா மகத்தான ராஜ்ய நோக்கங்களையும் பற்றிய திருத்தமான அறிவுக்கு வழிநடத்துகிறது. இவ்விதமாக, அவருடைய ஜனங்கள் அவரை பயபக்தியாக பற்றிக்கொள்ள அவரோடு நெருக்கமான ஒப்புக்கொடுக்கப்பட்ட ஓர் உறவுக்குள் பிரவேசிக்க, ‘முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும்’ அவரிடத்தில் அன்பு செலுத்த கற்றுக்கொள்கிறார்கள். (மாற்கு 12:33; வெளிப்படுத்துதல் 4:11) பூமியிலுள்ள சாந்த குணமுள்ளவர்கள் நித்திய ஜீவனைக் கண்டடைவதற்காக, யெகோவா இயேசு கிறிஸ்துவின் பலியின் மூலமாக, கிருபைபொருந்தின ஏற்பாட்டை செய்திருக்கிறார். ஆகவே, இவர்கள் இயேசுவின் பிறப்பின் சமயத்தில் கடவுளைத் துதித்த பரலோக சேனையின் வார்த்தைகளை நம்பிக்கையோடு எதிரொலிக்க முடியும்: “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் [நற்பிரியமுள்ள மனுஷர் மேல், NW] பிரியமும் உண்டாவதாக.”—லூக்கா 2:14.
3. இந்தப் பூமிக்குச் சமாதானம் வருவதற்கு முன்பாக யெகோவாவின் என்ன செயல் நடந்தேற வேண்டும்?
3 அந்தச் சமாதானம் அநேக ஆட்கள் நினைப்பதைவிட சமீபத்தில் இருக்கிறது. ஆனால் முதலாவதாக சீர்கெட்ட உலகின் மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும். அவருடைய தீர்க்கதரிசி செப்பனியா அறிவிக்கிறார்: “கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச் சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது.” அது எந்தவிதமான நாள்? தீர்க்கதரிசனம் தொடர்ந்து சொல்கிறது: “கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான். அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள். அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள். அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள். மனுஷர் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால் அவர்கள் குருடரைப் போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்.”—செப்பனியா 1:14-17; ஆபகூக் 2:3; 3:1-6, 16-19-கூட பார்க்கவும்.
4. யெகோவாவை அறிந்துகொண்டு அவரை சேவிப்பதற்கான அழைப்புக்கு யார் இன்று பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார்கள்?
4 சந்தோஷகரமாக, கடவுளை அறிந்துகொண்டு அவரை சேவிப்பதற்கான அழைப்புக்கு இன்று லட்சக்கணக்கானோர் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். புதிய உடன்படிக்கையினுள் எடுத்துக் கொள்ளப்படும் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களைக் குறித்து இவ்வாறு முன்னறிவிக்கப்பட்டது: “அவர்களில் சிறியவன் முதல் பெரியவன் மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் [யெகோவா, NW] சொல்லுகிறார்.” (எரேமியா 31:34) இவர்களே நவீன-நாளைய சாட்சி கொடுக்கும் வேலையில் முன்சென்று வழிநடத்தி வந்திருக்கிறார்கள். இப்பொழுது அதிகமதிகமான அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் தங்கள் பூமிக்குரிய வாழ்க்கையை முடித்துக்கொண்டிருக்கும் போது, “வேறே ஆடு”களின் “திரள் கூட்டத்தார்” அவருடைய ஆலயம் போன்ற ஏற்பாட்டில் அவரை ‘இரவும் பகலும் சேவிக்க’ முன்வந்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 15; யோவான் 10:16) மதிப்பிட முடியாத இந்தச் சிலாக்கியத்தை அனுபவித்துக் களிப்பவரில் நீங்கள் ஒருவரா?
“விரும்பப்பட்டவர்” எவ்விதமாக உள்ளே வருகின்றனர்
5, 6. சகல ஜாதிகளும் அழிவுக்காக அசைக்கப்படுவதற்கு முன்பாக, பாதுகாக்கும் என்ன வேலை நடந்தேறுகிறது?
5 நாம் இப்பொழுது யெகோவா அவருடைய வணக்கத்துக்குரிய ஆவிக்குரிய ஆலயத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்திருக்கும் ஆகாய் 2:7-க்கு கவனத்தைத் திருப்பலாம். அவர் சொல்கிறார்: “சகல ஜாதிகளையும் அசையப் பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார். இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப் பண்ணுவேன்.” ‘ஜாதிகளை அசையப்பண்ணுவது,’ தேசங்களின் மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படுவதை குறிக்கிறது என்பதை பைபிள் தீர்க்கதரிசனங்கள் காண்பிக்கின்றன. (நாகூம் 1:5, 6; வெளிப்படுத்துதல் 6:12-17) ஆகவே தேசங்கள் துடைத்து அழிக்கப்பட்டு, இல்லாமற் போகும்படி அசைவிக்கப்படுகையில், அது ஆகாய் 2:7-ல் முன்னுரைக்கப்பட்டுள்ள யெகோவாவின் நடவடிக்கையின் உச்சக்கட்டமாக இருக்கும். ஆனால் “சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்ட”வர்களைப் பற்றி என்ன? அவர்கள் உள்ளே வருவதற்கு, இறுதியான அந்த அழிவுக்குரிய அசைவித்தலுக்காக காத்திருக்க வேண்டுமா? இல்லை.
6 யோவேல் 2:32, [NW] சொல்கிறது: “யெகோவாவின் நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; யெகோவா சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் யெகோவா வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.” யெகோவா அவர்களை வெளியே வரவழைக்கிறார், அவர்கள் மகா உபத்திரவத்தின் உச்சக்கட்டமான அசைவித்தலுக்கு முன்பாக இயேசுவினுடைய பலியில் விசுவாசத்தோடு அவருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறார்கள். (யோவான் 6:44; அப்போஸ்தலர் 2:38, 39 ஒப்பிடவும்.) சந்தோஷகரமாக, இப்பொழுது நாற்பது லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையிலிருக்கும் விலையேறப்பெற்ற திரள் கூட்டத்தார், அர்மகெதோனில் “சகல ஜாதிகளும் [தேசங்களும், NW] அசைக்கப்பட”விருப்பதை எதிர்பார்த்தவர்களாய், யெகோவாவின் வணக்கத்துக்குரிய ஆலயத்திற்குள் ‘உள்ளே வருகிறார்கள்.’—வெளிப்படுத்துதல் 7:9, 10, 14.
7. ‘யெகோவாவின் நாமத்தை நோக்கிக் கூப்பிடுவதில்,’ என்ன உட்பட்டிருக்கிறது?
7 இந்தத் தப்பிப்பிழைப்பவர்கள் எவ்விதமாக யெகோவாவின் நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்? யாக்கோபு 4:8 இவ்விதமாகச் சொல்லி, ஒரு குறிப்பைத் தருகிறது: “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.” முன்நின்று வழிநடத்திச் செல்லும் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரைப் போன்றே, அர்மகெதோனில் தப்பிப்பிழைக்கும் திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாயிருக்கும் நம்பிக்கையுடையவர்கள் உறுதியாக செயல்பட வேண்டும். உங்களுக்குத் தப்பிப்பிழைக்கும் நம்பிக்கை இருக்குமானால், யெகோவாவின் பரிசுத்தமாக்கும் வார்த்தையிலிருந்து முழு ஈடுபாடுடன் உட்கொண்டு அவருடைய நீதியுள்ள தராதரங்களை உங்கள் வாழ்க்கையில் பொருத்த வேண்டும். உங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து இதைத் தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்துவதில் நீங்கள் உறுதியாக இருத்தல் வேண்டும். விசுவாசத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவது அவருக்காக சாட்சி கொடுப்பதையும்கூட உட்படுத்துகிறது. இதன் காரணமாக, ரோமர் அதிகாரம் 10, வசனங்கள் 9 மற்றும் 10-ல் பவுல் எழுதுகிறார்: “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்.” பின்னர் வசனம் 13-ல், அப்போஸ்தலன் யோவேலின் தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டி, “யெகோவாவுடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்,” (NW) என்பதை அழுத்திக் கூறுகிறார்.
‘தேடுங்கள், தேடுங்கள், தேடுங்கள்’
8. (எ) செப்பனியா தீர்க்கதரிசியின் பிரகாரம், இரட்சிப்படைவதற்கு யெகோவா என்ன தேவைப்படுத்துகிறார்? (பி) செப்பனியா 2:3-லுள்ள “ஒருவேளை” என்ற வார்த்தை நமக்கு என்ன எச்சரிக்கையை தெரிவிக்கிறது?
8 பைபிள் புத்தகமாகிய செப்பனியா, அதிகாரம் 2, வசனங்கள் 1 மற்றும் 3-க்கு திருப்புகையில், இரட்சிப்படைவதற்கு யெகோவா என்ன தேவைப்படுத்துகிறார் என்பதை நாம் வாசிக்கிறோம்: “கர்த்தருடைய உக்கிர கோபம் உங்கள் மேல் இறங்கு முன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள் மேல் வருமுன்னும் . . . தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள், நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” “ஒருவேளை” என்ற வார்த்தையை கவனியுங்கள். இது ஒரு முறை இரட்சிக்கப்பட்டுவிட்டால், எப்போதும் இரட்சிக்கப்பட்டவர்களாக இருப்பதாக இல்லை. அந்த நாளில் நாம் மறைக்கப்படுவது அந்த மூன்று காரியங்களை நாம் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதைச் சார்ந்திருக்கிறது. நாம் யெகோவாவைத் தேட வேண்டும், நீதியைத் தேட வேண்டும், மனத்தாழ்மையைத் தேட வேண்டும்.
9. மனத்தாழ்மையைத் தேடுகிறவர்கள் எவ்விதமாக வெகுமதியளிக்கப்படுகிறார்கள்?
9 மனத்தாழ்மையை தேடுவதற்கான வெகுமதி ஆச்சரியமளிப்பதாக இருக்கின்றது! சங்கீதம் 37, வசனங்கள் 9 முதல் 11 வரையாக நாம் வாசிக்கிறோம்: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். இன்னுங் கொஞ்ச நேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” நீதியைத் தேடுவதைப் பற்றி என்ன? வசனம் 29 சொல்கிறது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” யெகோவாவைத் தேடுவதைப் பற்றி வசனங்கள் 39 மற்றும் 40 நமக்குச் சொல்கிறது: “நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். கர்த்தர் அவர்களுக்கு உதவி செய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.”
10. யெகோவாவைத் தேடவும் மனத்தாழ்மையைத் தேடவும் மறுத்துவிட்டிருப்பதில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்திருப்பது யார்?
10 கிறிஸ்தவமண்டல மதப் பிரிவுகள் யெகோவாவைத் தேட தவறியிருக்கின்றனர். அவர்களுடைய மதகுருமார் அவருடைய விலையேறப் பெற்ற நாமத்தை நிராகரிக்கவும்கூட செய்து துணிச்சலாக அதை அவர்களுடைய பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து நீக்கிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் பெயரற்ற ஓர் ஆண்டவரை அல்லது கடவுளை வணங்கவும் ஒரு புறமத திரித்துவத்தை மேன்மைப்படுத்தவும் விரும்புகிறார்கள். மேலுமாக, கிறிஸ்தவமண்டலம் நீதியைத் தேடுவதில்லை. அவளை பின்பற்றுகிற அநேகர் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொண்டோ அல்லது ஆதரிக்கவோ செய்கின்றனர். இயேசு செய்தது போல மனத்தாழ்மையைத் தேடுவதற்குப் பதிலாக, அவர்கள் உதாரணமாக தொலைக்காட்சியில், சொகுசான மற்றும் அநேகமாக ஒழுக்கமற்ற வாழ்க்கையை ஆடம்பரமாக வெளிப்படுத்துகிறார்கள். அடிக்கடி திருச்சபை குருக்கள் தங்கள் மந்தையின் செலவில் தங்களைக் கொழுக்கச் செய்துகொள்கிறார்கள். யாக்கோபு 5:5-லுள்ள வார்த்தைகளில், அவர்கள், “பூமியிலே . . . சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழ”ன்றிருக்கிறார்கள். யெகோவாவின் நாள் நெருங்கி வருகையில், ஏவப்பட்ட வார்த்தைகள் தங்களுக்குப் பொருந்துவதை அவர்கள் நிச்சயமாக காண்பார்கள்: “கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது.”—நீதிமொழிகள் 11:4.
11. கேட்டின் மகன் யார்? அவன் எவ்விதமாக பேரளவான இரத்தப்பழியை குவித்திருக்கிறான்?
11 பொ.ச. முதல் நூற்றாண்டில், அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய தன் இரண்டாவது நிருபத்தில் எடுத்துரைப்பது போல, சில கிறிஸ்தவர்கள் யெகோவாவின் நாள் அவர்கள் மீது வந்துவிட்டது என்பதாக நினைத்து கிளர்ச்சியடைந்தவர்களானார்கள். ஆனால், முதலாவதாக, பெரும் விசுவாச துரோகம் ஏற்பட்டு, “கேட்டின் மகன்,” வெளிப்பட வேண்டும் என்று பவுல் எச்சரித்தார். (2 தெசலோனிக்கேயர் 2:1-3) இப்பொழுது, இந்த 20-ம் நூற்றாண்டில் அந்த விசுவாசதுரோகத்தின் விரிவான அளவையும் கிறிஸ்தவமண்டல குருமார் கடவுளுடைய பார்வையில் எத்தனை கேடுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் மதித்துணர முடியும். 1914 முதற்கொண்டு இந்தக் கடைசி நாட்களின் போது, மதகுருமார் ‘மண்வெட்டிகளை பட்டயங்களாக அடிப்பதை’ ஆதரிப்பதன் மூலம் பேரளவான இரத்தப்பழியை குவித்திருக்கின்றனர். (யோவேல் 3:10) அவர்கள் மனித ஆத்துமாவின் இயல்பான சாவாமை, உத்தரிக்கும் ஸ்தலம், நரக அக்கினி வாதனை, குழந்தை ஞானஸ்நானம், திரித்துவம் போன்ற பொய் கோட்பாடுகளை தொடர்ந்து கற்பித்து வந்திருக்கின்றனர். யெகோவா, தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் போது அவர்கள் எங்கே நிற்பார்கள்? நீதிமொழிகள் 19:5 சொல்கிறது: “பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்.”
12. (எ) விரைவில் அழிக்கப்பட இருக்கும் மனித “வானங்கள்,” மற்றும் “பூமி,” என்பது என்ன? (பி) வரவிருக்கும் இந்தப் பொல்லாத உலகின் அழிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
12 நாம் 2 பேதுரு 3:10-ல் இவ்விதமாக வாசிக்கிறோம்: “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப் போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.” மனிதகுலத்தின் மீது வானங்களைப் போல கூடாரமாக அமைந்துள்ள ஊழல் மிகுந்த ஆட்சி முறைகள் இன்றைய சீர்கெட்ட மனித சமுதாயத்தை உண்டுபண்ணும் எல்லா பூதங்களோடும்கூட கடவுளுடைய பூமியிலிருந்து துடைத்தகற்றப்படும். தீர்ப்பு நாள் ஆயுதங்களின் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் மோசடி செய்பவர்களும் மாய்மால மதப் பற்றுள்ளவர்களும் அவர்களுடைய மதகுருமாரும், ஒழுக்கச்சீர்கேடு, வன்முறை மற்றும் குற்றச் செயலை ஊக்குவிப்பவர்களும்—இவர்கள் அனைவரும் மறைந்து போவார்கள். அவர்கள் யெகோவாவின் கோபாக்கினையினால் உருகிப் போய்விடுவார்கள். ஆனால் வசனங்கள் 11 மற்றும் 12-ல் பேதுரு கிறிஸ்தவர்களுக்கு இந்த எச்சரிப்பை கூட்டுகிறார்: “இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்.”
மிகாவேல் செயலில் இறங்குகிறார்!
13, 14. யெகோவாவின் அரசுரிமையை நியாயநிரூபணம் செய்பவர் யார், 1914 முதற்கொண்டு அவர் எவ்விதமாக சுறுசுறுப்பாயிருந்திருக்கிறார்?
13 யெகோவாவின் “ஆபத்துக் கால”த்தின் போது எவரும் எவ்விதமாகத் தப்புவார்? “கடவுளைப் போல் இருப்பது யார்?” என்று பொருள்படும் பெயரையுடைய பிரதான தூதனாகிய மிகாவேலே தப்புவிப்பதற்காக யெகோவாவின் ஏஜென்டாக இருக்கிறார். அப்படியென்றால் பொருத்தமாகவே, யெகோவாவை ஒரே மெய்க் கடவுளாகவும் சர்வலோகத்தின் உரிமையுள்ள கர்த்தராகிய ஆண்டவராகவும் ஆதரித்து யெகோவாவின் அரசுரிமையை நியாயநிரூபணம் செய்பவர் அவரே.
14 வெளிப்படுத்துதல் அதிகாரம் 12, வசனங்கள் 7 முதல் 17, 1914 முதற்கொண்டு “கர்த்தருடைய நாளைப்” பற்றி என்னே குறிப்பிடத்தக்க சம்பவங்களை விவரிக்கிறது! (வெளிப்படுத்துதல் 1:10) பிரதான தூதனாகிய மிகாவேல் துரோகியான சாத்தானை பரலோகத்திலிருந்து பூமிக்குக் கீழே தள்ளுகிறார். பின்னர், வெளிப்படுத்துதல் அதிகாரம் 19, வசனங்கள் 11 முதல் 16-ல் வருணிக்கப்பட்டபடியே, “உண்மையும் சத்தியமுமுள்ளவர்,” எனப்பட்டவர் ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.’ இந்த வல்லமையுள்ள பரலோக போர்வீரர் “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர்” என்பதாக பெயரிடப்பட்டிருக்கிறார். கடைசியாக, வெளிப்படுத்துதல் அதிகாரம் 20, வசனங்கள் 1 மற்றும் 2, ஒரு பெரிய தூதன் சாத்தானை அபிஸிற்குள் தள்ளி அங்கே அவனை ஓராயிரம் வருஷமளவும் கட்டிப்போடுவதைப் பற்றி சொல்கிறது. தெளிவாகவே, இந்த எல்லா வேதவசனங்களும், யெகோவாவின் அரசுரிமையை நியாயநிரூபணம் செய்கிறவராக, யெகோவா அவருடைய மகிமையான பரலோக சிங்காசனத்தில் 1914-ல் அமர்த்திய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே சுட்டிக்காண்பிக்கின்றன.
15. விசேஷமான என்ன விதத்தில் மிகாவேல் விரைவில் “எழுந்து நிற்பார்”?
15 மிகாவேல், 1914-ல் அவர் ராஜாவாக ஏற்படுத்தப்பட்ட சமயம் முதற்கொண்டு யெகோவாவின் மக்களின் சார்பாக, தானியேல் 12:1-ல் [NW] குறிப்பிடப்பட்டுள்ளபடியே, “நின்று” கொண்டிருக்கிறார். ஆனால் மிகாவேல் விரைவில் மிக விசேஷமான கருத்தில்—பூமியிலிருந்து எல்லா பொல்லாப்பையும் அகற்றுவதில் யெகோவாவின் ஏஜென்டாகவும் கடவுளுடைய மக்களின் உலகளாவிய சமுதாயத்தின் மீட்பராகவும்—“எழுந்து நிற்பார்.” அந்த ஆபத்துக்காலம் எத்தனை பெரியதாக இருக்கும் என்பது மத்தேயு 24:21, 22-ல் இயேசுவின் வார்த்தைகளில் காண்பிக்கப்பட்டிருக்கிறது: “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப் போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.”
16. மிகுந்த உபத்திரவத்தின் போது எந்த சிலர் பாதுகாக்கப்படுவர்?
16 அந்தச் சமயத்தில் ஒரு சிலர் தப்பிப்பிழைப்பார்கள் என்பதில் நாம் எவ்வளவு சந்தோஷமாயிருக்கலாம்! இல்லை, பொ.ச. 70-ல் எருசலேமில் பிடிக்கப்பட்டு, அவர்களில் ஒரு சிலர் ரோமுக்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட கலகத்தனமான அந்த யூதர்களைப் போல் இல்லை. மாறாக, “முடிவு காலத்தில்,” தப்பி வருகிறவர்கள், கடைசி முற்றுகை ஆரம்பமான போது ஏற்கெனவே எருசலேமை விட்டு வந்துவிட்டிருந்த கிறிஸ்தவ சபையைப் போலிருப்பர். இலட்சக்கணக்கான திரள் கூட்டத்தாரோடுகூட இன்னும் பூமியில் மீந்திருக்கக்கூடிய அபிஷேகம் பண்ணப்பட்ட எவரும் சேர்ந்து அவர்கள் கடவுளுடைய சொந்த ஜனமாக இருப்பர். (தானியேல் 12:4) திரள் கூட்டத்தார் “மிகுந்த உபத்திரவத்திலிருந்து,” வருகிறார்கள். ஏன்? ஏனென்றால், “இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தி”ருக்கிறார்கள். சிந்தப்பட்ட இயேசுவினுடைய இரத்தத்தின் மீட்பின் வல்லமையில் விசுவாசத்தை அவர்கள் அப்பியாசித்து அந்த விசுவாசத்தை கடவுளை உண்மையுடன் சேவிப்பதன் மூலம் காண்பிக்கிறார்கள். இப்பொழுதேகூட, “சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற,” யெகோவா அவர்கள் மீது தம்முடைய பாதுகாப்பான கூடாரத்தை விரிக்கையில், ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்து அவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு வழிநடத்துகிறார்.—வெளிப்படுத்துதல் 7:14, 15.
17. வரவிருக்கும் ஆபத்து நாளின் போது மறைக்கப்படும் பொருட்டு எவ்விதமாக செயல்படும்படி குறிப்பாக திரள் கூட்டத்தார் உற்சாகப்படுத்தப்படுகின்றனர்?
17 யெகோவாவை, நீதியை, மனத்தாழ்மையை தேடுகையில், திரள் கூட்டத்தாரிலுள்ள லட்சக்கணக்கானோர், சத்தியத்திடமாக அவர்கள் முதலில் கொண்டிருந்த அன்பு தணிந்துபோக ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது! இந்தச் செம்மறியாடுகளைப் போன்ற ஆட்களில் நீங்கள் ஒருவராக இருந்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? கொலோசெயர் அதிகாரம் 3, வசனங்கள் 5 முதல் 14-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நீங்கள், “பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து” போட வேண்டும். தெய்வீக உதவியை நாடி, ‘திருத்தமான அறிவின் அடிப்படையில் புதிய ஆள்தன்மையினால் உங்களை உடுத்துவித்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மனத்தாழ்மையில், யெகோவாவை துதிப்பதிலும் அவருடைய மகத்தான நோக்கங்களை மற்றவர்களுக்கு அறிவிப்பதிலும் வைராக்கியத்தை வளர்த்துக் கொண்டு அதை காத்துக் கொள்ளுங்கள். இவ்விதமாக “ஆபத்துக் காலத்தில்,” “யெகோவாவின் பற்றியெறியும் கோபத்தின்” நாளில் நீங்கள் ஒருவேளை மறைக்கப்படக்கூடும்.
18, 19. என்ன வகையில் சகிப்புத்தன்மை இரட்சிப்புக்கு இன்றியமையாததாகிவிட்டிருக்கிறது?
18 அந்த நாள் அருகாமையில் இருக்கிறது! அது நம்மை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கிறது. திரள் கூட்டத்தைச் சேர்ந்த தனி ஆட்கள் கூட்டிச்சேர்க்கப்படுவது இப்பொழுது சுமார் 57 வருடங்களாக நடந்தேறி வருகிறது. இவர்களில் அநேகர் மரித்துவிட்டிருக்கிறார்கள், தங்கள் உயிர்த்தெழுதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், “ஒரு புதிய பூமி,” சமுதாயத்தின் மையப் பகுதியாக திரள் கூட்டத்தார் ஒரு தொகுதியாக மிகுந்த உபத்திரவத்திலிருந்து வெளியேறி வருவார்கள் என்பதாக வெளிப்படுத்துதல் தீர்க்கதரிசனத்தால் நாம் உறுதியளிக்கப்பட்டிருக்கிறோம். (வெளிப்படுத்துதல் 21:1) நீங்கள் அங்கே இருப்பீர்களா? அது கூடிய காரியம், ஏனென்றால் இயேசு மத்தேயு 24:13-ல் சொல்கிறார்: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.”
19 யெகோவாவின் மக்கள் இந்தப் பழைய ஒழுங்கில் அனுபவிக்கும் அழுத்தங்கள் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும். இக்கட்டான மிகுந்த உபத்திரவம் வரும் போது, நீங்கள் இன்னல்களை அனுபவிக்கக்கூடும். ஆனால் யெகோவாவோடும் அவருடைய அமைப்போடும் நெருங்கி இருங்கள். விழித்திருங்கள்! “நான் கொள்ளையாட எழும்பும் நாள் மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிரகோபத்தையெல்லாம் அவர்கள் மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்.”—செப்பனியா 3:8.
20 நம்முடைய பாதுகாப்புக்காகவும் ஊக்குவிப்புக்காகவும், யெகோவா “சுத்தமான பாஷையை” தமது ஜனத்துக்கு கிருபையோடு அருளிச்செய்திருக்கிறார். “ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு,” வரப்போகிற அவருடைய ராஜ்யத்தைப் பற்றிய மகத்தான செய்தியும் இதில் அடங்கும். (செப்பனியா 3:9) “ஆபத்துக் காலத்தின்” உச்சக்கட்டம் விரைவாக முன்னொரு போதும் இராத வகையில் விரைவாக நெருங்கி வருகையில், சாந்த குணமுள்ள மற்றவர்கள், இரட்சிக்கப்படும்படி, ‘யெகோவாவின் நாமத்தை நோக்கி கூப்பிடுவதற்கு’ உதவி செய்து வைராக்கியத்தோடு நாம் சேவிப்போமாக.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ பூமியில் சமாதானம் கொண்டுவரப்படுவதற்கு முன்பாக யெகோவாவின் என்ன செயல் நடந்தேறும்?
◻ யோவேலின் பிரகாரம், இரட்சிக்கப்படுவதற்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
◻ செப்பனியாவின் பிரகாரம், யெகோவாவின் பற்றியெறியும் கோபத்திலிருந்து சாந்தகுணமுள்ளவர்கள் எவ்வாறு பாதுகாப்பைக் கண்டடையலாம்?
◻ “கேட்டின் மகன்,” யார்? அவன் எவ்விதமாக இரத்தப்பழியை குவித்திருக்கிறான்?
◻ இரட்சிப்பு விஷயத்தில் சகிப்புத்தன்மை எவ்வளவு முக்கியமானது?
20. “ஆபத்துக் கால”த்தின் உச்சக்கட்டம் முன்னொரு போதும் இராதவகையில் நெருங்கி வருகையில் நாம் என்ன செய்ய வேண்டும்?