யெகோவாவைச் சேவிப்பதில் மெய்யான மகிழ்ச்சி
“யாக்கோபின் கடவுளைத் தன் உதவியாகக் கொண்டிருந்து தன் கடவுளாகிய யெகோவாவில் தன் நம்பிக்கையை வைத்திருக்கிறவன் மகிழ்ச்சியுள்ளவன்.”—சங்கீதம் 146:5, NW.
1, 2. மகிழ்ச்சி என்பதன் பொருள் விளக்கத்தைப்பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது, மேலும் இன்று பலருக்கு மகிழ்ச்சி எதைக் குறிக்கிறது?
மகிழ்ச்சி என்பது என்ன? சொற்களஞ்சிய ஆசிரியர்கள், தத்துவ ஞானிகள், மற்றும் இறைமையியல் வல்லுநர்கள் இதற்குப் பொருள் விளக்கமளிக்க பல நூற்றாண்டுகளாக முயற்சி செய்கின்றனர். ஆனால் யாவரும் ஒருமனதாக அங்கீகரிக்கும் ஒரு பொருள் விளக்கத்தை அவர்கள் அளித்தில்லை. தி என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (The Encyclopoedia Britannica) பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “‘மகிழ்ச்சி’ விளக்குவதற்கு மிகக் கடினமான சொற்களில் ஒன்றாகும்.” மகிழ்ச்சி, வாழ்க்கையில் அவரவர் கொண்டுள்ள நோக்குநிலையின்பேரில் சார்ந்து, வெவ்வேறு ஆட்களுக்கு வெவ்வேறுபட்ட காரியங்களைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.
2 மகிழ்ச்சி, பலருக்கு நல்ல உடல்நலம், பொருளுடைமைகள், மற்றும் இன்பமான துணையைச் சுற்றிச் சுழலுகிறது. எனினும், இந்த எல்லாவற்றையும் உடைய ஆட்கள் இருக்கின்றனர் ஆனால் அவர்கள் மகிழ்ச்சியற்றிருக்கின்றனர். யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்த ஆண்களுக்கும் பெண்களுக்கும், பொதுநோக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மகிழ்ச்சிக்குரிய எண்ணத்தை பைபிள் கொடுக்கிறது.
மகிழ்ச்சியைப்பற்றிய வேறுபட்ட நோக்கு
3, 4. (எ) இயேசு யாரை மகிழ்ச்சியுள்ளவர்களென அறிவித்தார்? (பி) இயேசு குறிப்பிட்ட மகிழ்ச்சிக்குரிய காரணங்களைக் குறித்து என்ன கவனிக்கலாம்?
3 தம்முடைய மலைப் பிரசங்கத்தில், இயேசு கிறிஸ்து, மகிழ்ச்சி நல்ல உடல் நலத்தில், பொருளுடைமைகளில், மற்றும் இவற்றைப் போன்றவற்றில் சார்ந்திருக்கிறதெனக் கூறவில்லை. “தங்கள் ஆவிக்குரிய தேவையில் உணர்வுள்ளவர்கள்” மற்றும் “நீதிக்காகப் பசிதாகமுள்ளவர்கள்,” ஆகியோரே உண்மையில் மகிழ்ச்சியுடையோரென அவர் அறிவித்தார். தோற்றத்துக்கு முரண்படுவதுபோல் தோன்றும் இயேசுவின் மெய்ம்மையானக் கூற்றில் மெய்யான மகிழ்ச்சிக்குத் தேவைப்படும் இந்த இரண்டு உண்மைகளோடு பின்வருவது சம்பந்தப்பட்டுள்ளது: “துக்கிப்போர் மகிழ்ச்சியுடையோர், ஏனெனில் அவர்கள் ஆறுதல்படுத்தப்படுவர்.” (மத்தேயு 5:3-6, NW) தங்களுக்கு நேசமான ஒருவரை இழந்துவிடுகையில் ஆட்கள் தாங்களாக மகிழ்ச்சியுடையோராயிருப்பரென இயேசு சொல்லவில்லை. அதற்கு மாறாக, தங்கள் பாவ நிலையையும் அதன் விளைவுகளையும் எண்ணி வருந்துவோரைக் குறித்து அவர் பேசினார் என்பது தெளிவாயுள்ளது.
4 மனித சிருஷ்டி “அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்ப”டும் என்ற நம்பிக்கையின் ஆதாரத்தின்பேரில் பாவத்தின்கீழ் தவித்து வேதனைப்படுகிறதைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் பேசினார். (ரோமர் 8:21, 22) கிறிஸ்துவின் மீட்பின் கிரய பலியின்மூலம் பாவ-ஈடுசெய்யும் யெகோவாவின் ஏற்பாட்டை ஏற்று கடவுளுயை சித்தத்தைச் செய்யும் மனிதர்கள் உண்மையில் ஆறுதல்படுத்தி மகிழ்ச்சியடைய செய்யப்படுகின்றனர். (ரோமர் 4:6-8) அந்த மலைப்பிரசங்கத்தில் இயேசு, “சாந்த குணமுடையோரை”யும், “இரக்கமுடையோரை”யும், “இருதயத்தில் சுத்தமுடையோரை”யும், “சமாதானம்பண்ணுவோரை”யுங்கூட மகிழ்ச்சியுடையோராக அறிவித்தார். (மத்தேயு 5:5-11) மேன்மைப்படுத்தப்பட்ட இந்த மகிழ்ச்சிக்குரிய காரணங்கள் செல்வந்தரையும் ஏழைகளையும் ஒரே நிலையில் வைப்பதைக் கவனிப்பது ஊக்கமூட்டுவதாயுள்ளது.
மெய்யான மகிழ்ச்சிக்கு ஆதாரம்
5. கடவுளுடைய ஒப்புக்கொடுத்த ஊழியர்களின் மகிழ்ச்சிக்கு ஆதாரம் என்ன?
5 உண்மையான மகிழ்ச்சிக்கு மூலகாரணம் பொருள்சம்பந்த செல்வத்தில் காணப்படுகிறதில்லை. ஞானமுள்ள அரசன் சாலொமோன் பின்வருமாறு கூறினார்: “கர்த்தரின் [யெகோவாவின், தி.மொ.] ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.” (நீதிமொழிகள் 10:22) யெகோவாவின் சர்வலோக உன்னத அரசாட்சியை ஏற்றுக்கொள்ளும் சிருஷ்டிகளுக்கு மகிழ்ச்சி கடவுளுடைய ஆசீர்வாதத்தோடு பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டுள்ளது. யெகோவாவின் ஆசீர்வாதத்தைத் தன்மீது கொண்டிருக்கிற மற்றும் உணருகிற ஒப்புக்கொடுத்த ஆண் அல்லது பெண் மெய்யாகவே மகிழ்ச்சியுள்ளவன்[வள்]. பைபிளின் பிரகாரம் கருதினால், மகிழ்ச்சியானது போதுமென்ற மனநிறைவு, மனத்திருப்தி, மற்றும் யெகோவாவின் சேவையில் நிறைவேற்றம் ஆகியவற்றுக்குரிய ஓர் உணர்வை உட்படுத்துகிறது.
6. யெகோவாவின் ஜனங்கள் மெய்யாக மகிழ்ச்சியுடனிருக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
6 மெய்யான மகிழ்ச்சி யெகோவாவுடன் இருக்கும் சரியான உறவின்பேரில் சார்ந்துள்ளது. கடவுளை நேசிப்பதன்பேரிலும் அவருக்கு உண்மையாயிருப்பதன்பேரிலும் அது ஆதாரங்கொண்டுள்ளது. யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஊழியர்கள் பவுலின் பின்வரும் வார்த்தைகளுக்கு முழு இருதயத்துடன் ஒப்புதல் தெரிவிக்கின்றனர்: “உண்மையில், நம்மில் ஒருவரும் தனக்கென்று மாத்திரமே வாழ்கிறதில்லை . . . நாம் யெகோவாவுக்கென்றே வாழ்கிறோம் . . . நாம் யெகோவாவுக்கே உரியவர்கள்.” (ரோமர் 14:7, 8, NW) ஆகையால், மெய்யான மகிழ்ச்சியை, யெகோவாவுக்குக் கீழ்ப்படிதலும் அவருடைய சித்தத்துக்குச் சந்தோஷமாய் ஒப்படைப்பதுமான இவற்றிற்குப் புறம்பாக அடைய முடியாது. இயேசு பின்வருமாறு கூறினார்: “கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே பாக்கியவான்கள் [மகிழ்ச்சியுள்ளோர், NW]”!—லூக்கா 11:28.
மாறுபடும் மகிழ்ச்சிக்குரிய காரணங்கள்
7, 8. (எ) மகிழ்ச்சிக்குரிய காரணங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்? (பி) திருமணத்தையும் பிள்ளைகளைப் பெறுவதையும் குறித்து என்ன சொல்லப்படலாம்?
7 முன்கூறப்பட்ட மகிழ்ச்சிக்குரிய காரணங்கள் “அடிப்படைகள்” அல்லது “நிலையானவைகள்” என குறிப்பிடப்படலாம், ஏனெனில் அவை யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஊழியர்களுக்கு எல்லா காலங்களுக்கும் உறுதியாக அமைந்தவை. கூடுதலாக, மாறுபடுபவையென அழைக்கக்கூடியவையும் இருக்கின்றன, இந்தக் காரணங்கள் ஒரு சமயம் மகிழ்ச்சியில் பலன்தரலாம், ஆனால் மற்றொரு சமயத்தில் சிறிதே அல்லது மகிழ்ச்சி அறவே இல்லாது போகலாம். கோத்திரப் பிதாக்களின் காலங்களிலும் கிறிஸ்தவத்துக்கு முந்தின காலங்களிலும், திருமணமும் பிள்ளைகளைப் பெறுவதும் மகிழ்ச்சிக்கு இன்றியமையாதவையென கருதப்பட்டது. இது ராகேல் யாக்கோபினிடம் பின்வருமாறு மனவேதனையோடு கேட்டதில் காட்டப்படுகிறது: “எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்.” (ஆதியாகமம் 30:1) பிள்ளை பெறுவதன் சம்பந்தமான இந்த மனப்பான்மை அந்தக் காலப்பகுதிக்குரிய யெகோவாவின் நோக்கத்துக்கு ஒத்திருந்தது.—ஆதியாகமம் 13:14-16; 22:17.
8 யெகோவாவின் பூர்வ கால ஜனங்களுக்குள் திருமணமும் பிள்ளைபேறும் கடவுள்-கொடுத்த ஆசீர்வாதங்கள் என கருதப்பட்டன. எனினும், அவர்களுடைய சரித்திரத்தில் நேரிட்ட இக்கட்டான காலங்களின்போது இவற்றோடும் மற்ற சூழ்நிலைமைகளோடும் துயரமும் சேர்ந்திருந்தது. (சங்கீதம் 127, 128-ஐ எரேமியா 6:12; 11:22; புலம்பல் 2:19; 4:4, 5 ஆகியவற்றுடன் ஒத்துப்பாருங்கள்.) ஆகையால், திருமணமும் பிள்ளைகளைப் பெறுவதும் நிலையான மகிழ்ச்சிக்குரிய காரணங்கள் அல்லவெனத் தெரிகிறது.
கடந்த காலங்களில் திருமணம் இல்லாமல் மகிழ்ச்சியுடனிருந்தது
9. யெப்தாவின் மகள் ஏன் ஆண்டுதோறும் போற்றுதலைப் பெற்றாள்?
9 கடவுளுடைய ஊழியர்களில் பலர், திருமணம் இல்லாமலே மகிழ்ச்சியைக் கண்டடைந்தனர். யெப்தாவின் மகள், தன் தகப்பனின் பொருத்தனைக்கு மதிப்பு கொடுத்து, மணம் செய்யாமல் கன்னிகையாக நிலைத்திருந்தாள். சிறிது காலம் அவளும் அவளுடைய தோழிமார்களும் அவளுடைய கன்னிமையின்பேரில் துக்கங்கொண்டாடினர். ஆனால் யெகோவாவின் வீட்டில் முழு-நேர சேவை செய்துகொண்டிருந்ததில் அவளுக்கு எத்தகைய சந்தோஷம் இருந்தது, ஒருவேளை “தரிசனக்கூடார வாசலில் பணிவிடை செய்துவந்த ஸ்திரீக”ளோடு சேவித்திருக்கலாம்! (யாத்திராகமம் 38:8, தி.மொ.) இதற்காக, அவள் ஆண்டுதோறும் போற்றுதலைப் பெற்றாள்.—நியாயாதிபதிகள் 11:37-40, தி.மொ.
10. யெகோவா எரேமியாவுக்கு என்ன கட்டளையிட்டார், இதன் விளைவாக அவன் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை நடத்தினானெனத் தோன்றுகிறதா?
10 தீர்க்கதரிசி எரேமியா வாழ்ந்த திடீர்த் திருப்பங்கள் ஏற்படவிருந்த காலங்களின் காரணமாக, அவர் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதைத் தவிர்த்திருக்கும்படி கடவுள் அவருக்குக் கூறினார். (எரேமியா 16:1-4) எனினும் எரேமியா கடவுளுடைய பின்வரும் வார்த்தையின் உண்மையை அனுபவித்தார்: “யெகோவாவில் நம்பிக்கைவைத்து, யெகோவாவையே தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷனோ பாக்கியவான் [ஆசீர்வதிக்கப்பட்டவன், NW].” (எரேமியா 17:7, தி.மொ.) தீர்க்கதரிசன சேவை செய்த 40-க்கு மேற்பட்ட ஆண்டுகள் முழுவதிலும் எரேமியா மணமாகாதவராக இருந்து கடவுளை உண்மையுடன் சேவித்தார். நமக்குத் தெரிந்த வரையில், அவர் ஒருபோதும் மணம் செய்து பிள்ளைகளைப் பெறவில்லை. எனினும், ‘யெகோவா அருளின நன்மைகளின்பேரில் கெம்பீரித்த’ அந்த உண்மையுள்ள யூத மீதிபேரைப்போல், எரேமியா மகிழ்ச்சியுடன் இருந்தாரென்பதை யார் சந்தேகிக்க முடியும்?—எரேமியா 31:12.
11. மணத்துணை தங்களுக்கு இராதபோதிலும் மகிழ்ச்சியோடு இருந்த, யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களைப்பற்றி வேதவார்த்தைகளில் கொடுத்துள்ள முன்மாதிரிகள் சில யாவை?
11 வேறு பலரும் மணத்துணை இல்லாமல் யெகோவாவைச் சந்தோஷமாய்ச் சேவித்திருக்கின்றனர். அவர்கள் மணமாகாதவர்களாக, விதவைகளாக, அல்லது மனைவியை இழந்தோராக இருந்திருக்கின்றனர். இத்தகையோருக்குள் தீர்க்கதரிசினி அன்னாள்; ஒருவேளை தொற்காள், அல்லது தபீத்தாள்; அப்போஸ்தலன் பவுல்; மற்றும், எல்லாரிலும் மிகச் சிறந்த முன்மாதிரியான—இயேசு கிறிஸ்துவும்—அடங்கியுள்ளனர்.
இன்று, மணமாகாதோர் ஆனால் மகிழ்ச்சியுள்ளோர்
12. இன்று, யெகோவாவின் மகிழ்ச்சியுள்ள, ஒப்புக்கொடுத்த ஊழியர்கள் சிலர் எதற்கு இடமளித்திருக்கின்றனர், ஏன்?
12 இன்று யெகோவாவின் சாட்சிகளில் ஆயிரக்கணக்கானோர் மணத்துணையில்லாமல் கடவுளை உண்மையுடன் சேவித்துக்கொண்டிருக்கின்றனர். “இதை [மணமாகாத நிலையை] ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன்,” என்ற இயேசுவின் அழைப்பைச் சிலர் ஏற்றுக்கொள்ளக்கூடியோராய் இருந்திருக்கின்றனர், இதை அவர்கள் “பரலோக ராஜ்யத்தினிமித்தம்” செய்திருக்கின்றனர். (மத்தேயு 19:11, 12) அதாவது, ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்க மேலுமதிக நேரத்தையும் சக்தியையும் முழுமையாய் ஈடுபடுத்துவதன்மூலம் கடவுள்-கொடுத்த தங்கள் சுயாதீனத்தை நல்ல முறையில் பயன்படுத்துகின்றனர். இவர்களில் பலர் பயனியர்களாக, மிஷனரிகளாக, அல்லது உவாட்ச் டவர் சொஸையிட்டியின் உலகத் தலைமை அலுவலகத்தில் அல்லது அதன் கிளைகளில் ஒன்றில் பெத்தேல் குடும்பத்தின் உறுப்பினர்களாகச் சேவித்துக்கொண்டிருக்கின்றனர்.
13 அருமையான ஒரு முதிய சகோதரி தன் வாழ்க்கை சரிதைக்கு, “பயனியராக மணமாகாமலும் மகிழ்ச்சியுடனும்” என்ற உள்ள நிலையை வெளியிடும் தலைப்பைக் கொடுத்தாள். (The Watchtower, மே 1, 1985, பக்கங்கள் 23-6) பெத்தேலில் சேவிப்பதில் 50-க்கு மேற்பட்ட ஆண்டுகள் செலவிட்ட மணமாகாத மற்றொரு சகோதரி பின்வருமாறு கூறினாள்: “என் வாழ்க்கையிலும் என் வேலையிலும் நான் முழுமையாக மனத்திருப்தியடைந்திருக்கிறேன். நான் மிகவும் நேசிக்கிற என் வேலையில் முன் ஒருபோதும் இருந்ததைவிட இப்பொழுது அதிக சுறுசுறுப்பாய் இருக்கிறேன். எனக்கு எந்த வருத்த உணர்ச்சிகளும் இல்லை. இதே தீர்மானத்தையே நான் மறுபடியும் செய்வேன்.”—The Watchtower, ஜூன் 15, 1982, பக்கம் 15.
14, 15. (எ) அப்போஸ்தலன் பவுல் சொல்லுகிறபடி, மணமாகாத நிலையில் தொடர்ந்திருக்க என்ன தேவைப்படுகிறது? (பி) மணமாகாத ஆள் ஏன் “மேம்பட்டதைச்” செய்கிறான் மற்றும் “அதிக மகிழ்ச்சியுள்ளவன்” என பவுல் கூறுகிறார்?
14 “தீர்மானம்” என்ற அந்தச் சொல்லைக் கவனியுங்கள். பவுல் பின்வருமாறு எழுதினான்: “எவனாவது தேவையைக் கொண்டிராமல், தன் இருதயத்தில் திடமாய் முடிவுசெய்து, தன் சொந்த சித்தத்தின்பேரில் அதிகாரமுள்ளவனாயிருந்து, தன் சொந்த கன்னிமையைக் காத்துவைத்துக்கொள்ளும்படி, தன் சொந்த இருதயத்தில் இந்தத் தீர்மானத்தைச் செய்திருந்தால், அவன் நல்லதைச் செய்பவனாக இருப்பான். இவ்வாறே தன் கன்னிமையைத் திருமணத்தில் கொடுத்துவிடுபவனும் நல்லதைச் செய்கிறான், ஆனால் அவ்வாறு திருமணத்தில் கொடாதிருப்பவன் மேம்பட்டிருப்பான்.” (1 கொரிந்தியர் 7:37, 38, NW) ஏன் “மேம்பட்டிருப்பான்”? பவுல் விளக்குகிறார்: “நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் ஆண்டவருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று ஆண்டவருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். . . . புருஷனில்லாத ஸ்திரீயும் கன்னிகையும் . . . ஆண்டவருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறார்கள். . . . இதை உங்கள் நன்மைக்கென்றே சொல்லுகிறேன். . . . இது தகுதியென்றும் நீங்கள் கருத்துச் சிதறாமல் ஆண்டவரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றுஞ் சொல்லுகிறேன்.”—1 கொரிந்தியர் 7:32-35, தி.மொ.
15 ‘ஆண்டவருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்ற’ நோக்கத்துடன் ‘கருத்துச் சிதறாமல் ஆண்டவரைப் பற்றிக்கொண்டிருப்ப’தோடு மகிழ்ச்சி சம்பந்தப்பட்டுள்ளதா? பவுல் அவ்வாறு நினைத்ததாகத் தெரிகிறது. கிறிஸ்தவ விதவையைக் குறித்து அவர் பேசி, பின்வருமாறு கூறுகிறார்: “தனக்கிஷ்டமான எவனையாகிலும் விவாகஞ் செய்துகொள்ள விடுதலையாயிருக்கிறாள். அதை ஆண்டவருக்குள்ளேயே செய்ய வேண்டும். ஆனாலும், அவள் அப்படியே இருந்துவிட்டால் அதிகப் பாக்கியவதியாவாள் [மகிழ்ச்சியுள்ளவள், NW] இது என் அபிப்பிராயம். நானோ கடவுளின் ஆவியுடையவனென்று எண்ணுகிறேன்.”—1 கொரிந்தியர் 7:39, 40, தி.மொ.
திருமணமாகாத நிலையின் நன்மைகள்
16. யெகோவாவின் மணமாகாத சாட்சிகள் அனுபவித்து மகிழும் சில நன்மைகள் யாவை?
16 ஒரு கிறிஸ்தவன் தன் சொந்தத் தீர்மானத்தினாலாயினும் அல்லது சந்தர்ப்பநிலைமைகளின் வற்புறுத்தலினாலாயினும் மணமாகாத நிலையில் இருந்தால், அந்த மணமாகாத நிலை அதோடு பல தனிப்பட்ட நன்மைகளைக் கொண்டுவருகிறது. பைபிளைப் படித்து அதன்பேரில் ஆழ்ந்து சிந்திப்பதற்கு மணமாகாத ஆட்களுக்குப் பொதுவாய் அதிக நேரம் உள்ளது. அவர்கள் இந்தச் சந்தர்ப்ப நிலைமையை அனுகூலப்படுத்திக் கொண்டால், அவர்களுடைய ஆவிக்குரிய தன்மை மேலும் ஆழமாகிறது. தங்கள் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்ள மணத்துணை ஒருவர் இல்லாததால், யெகோவாவின்மீது மேலுமதிக உறுதியாய்ச் சார்ந்திருக்கவும், எல்லா காரியங்களிலும் அவருடைய வழிநடத்துதலைத் தேடவும் பலர் கற்றுக் கொள்கின்றனர். (சங்கீதம் 37:5, தி.மொ.) இது யெகோவாவுடன் மேலும் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ள உதவிசெய்கிறது.
17, 18. (எ) மணமாகாதிருக்கும் யெகோவாவின் ஊழியர்களுக்கு விரிவான ஊழிய நிலைகளில் சேவிப்பதற்கு என்ன வாய்ப்புகள் கிடைக்கக்கூடியவையாக இருக்கின்றன? (பி) யெகோவாவின் மணம் செய்யாத ஊழியர் சிலர் தங்கள் மகிழ்ச்சியை எவ்வாறு விவரித்திருக்கின்றனர்?
17 யெகோவாவுக்குத் துதியுண்டாக விரிவான ஊழிய துறைகளில் சேவிப்பதற்கான வாய்ப்புகள் மணமாகாதக் கிறிஸ்தவர்களுக்கு உண்டு. உதவி ஊழியர் பயிற்றுவிப்பு பள்ளியில் இப்பொழுது கொடுக்கப்படுகிற இந்த விசேஷித்தப் பயிற்றுவிப்பு மணமாகாத சகோதரர்களுக்கும் மனைவியை இழந்தவர்களுக்குமேயென மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மணமாகாத சகோதரிகளுங்கூட கடவுளுடைய சேவையில் சிலாக்கியங்களை அடையும்படி தகுதிபெற முயற்சி செய்வதற்கு விடுதலையாயிருக்கின்றனர். முன்னால் எடுத்துக் குறிப்பிட்ட அந்த முதிர்வயதான சகோதரி, தான் சொல்லுகிறபடி, தான் “50-க்கு மேற்பட்ட வயதான ஓரளவு வலுவற்ற பெண்ணாக” இருந்தபோது, ஆப்பிரிக்க நாடு ஒன்றில் சேவிக்க தன்னை முன்வந்து அளித்தாள். அங்கே, தடையுத்தரவு போட்டு, எல்லா மிஷனரிகளும் வெளியேற்றப்பட்ட காலத்தின்போதும் அவள் அங்கே தங்கியிருந்தாள். அவள் இப்பொழுது 80-க்கு மேற்பட்ட வயதாகியிருந்தும், இன்னும் அங்கே பயனியராகச் சேவிக்கிறாள். அவள் மகிழ்ச்சியுடன் இருக்கிறாளா? தன்னுடைய வாழ்க்கை சரிதையில் அவள் பின்வருமாறு எழுதினாள்: “மணமாகாத நிலை அளிக்கிற மிகைப்படியான சுயாதீனத்தையும் நடமாட்டத்தையும், ஊழியத்தில் முழுதும் ஈடுபட்டிருப்பதற்கு நான் பயன்படுத்த முடிந்தது, இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறது. . . . ஆண்டுகளினூடே யெகோவாவுடன் என் உறவு ஆழமாகியுள்ளது. மணமாகாத பெண்ணாக ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் நான், அவரை ஒரு பாதுகாப்பாளராகக் கண்டிருக்கிறேன்.”
18 பல பத்தாண்டுகளாக உவாட்ச் டவர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் சேவித்த ஒரு சகோதரனின் வார்த்தைகளும் கவனிக்கத்தக்கவை. அவர் ஒருபோதும் மணம் செய்யாதபோதிலும் மற்றும் அவர் மணம்செய்யும் எதிர்பார்ப்பு இல்லாத பரலோக நம்பிக்கையுடையோராக இருந்தபோதிலும், அவர் மகிழ்ச்சியுடனிருந்தார். அவர் 79-ம் வயதில் பின்வருமாறு எழுதினார்: “அவருடைய பரிசுத்த சித்தத்தை நான் விடாது தொடர்ந்து செய்துகொண்டிருக்கும்படி என்னை ஆவிக்குரியபிரகாரமும் அதோடு சரீரப்பிரகாரமும் சுகத்துடனும் பலத்துடனும் வைத்துக்கொள்வதற்கு உதவியும் ஞானமும் அருளும்படி, நம்முடைய அருமையான பரலோகத் தகப்பனை நான் ஒவ்வொரு நாளும் ஜெபத்தில் கேட்கிறேன். யெகோவாவின் சேவையில் கடந்த இந்த நாற்பத்தொன்பது ஆண்டுளின்போது நிச்சயமாகவே நான் மகிழ்ச்சியுள்ள, பலன்தரும் மற்றும் ஆசீர்வாதமான வாழ்க்கை முறையை அனுபவித்திருக்கிறேன். மேலும் யெகோவாவின் தகுதியற்றத் தயவினால், நாம் அவருக்கு கனமும் மகிமையும் உண்டாகவும் அவருடைய ஜனத்துக்கு ஆசீர்வாதமாகவும் தொடர்ந்து சேவிக்கும்படி எதிர்பார்க்கிறேன். . . . யெகோவாவின் சத்துருக்கள் இனிமேலும் இராது ஒழிந்து, பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிரம்பியிருக்கப்போகும் அந்தக் காலத்தை எதிர்நோக்கி, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தில் தளராது தொடர்ந்துகொண்டிருப்பதற்கு, யெகோவாவினால் வரும் மகிழ்ச்சியே எனக்கு உதவிசெய்கிறது.”—எண்ணாகமம் 14:21; நெகேமியா 8:10, தி.மொ.; The Watchtower, நவம்பர் 15, 1968, பக்கங்கள் 699-702.
மெய்யான மகிழ்ச்சி எதன்பேரில் சார்ந்திருக்கிறது?
19. எதன்பேரில் நம்முடைய மகிழ்ச்சி எப்போதும் சார்ந்திருக்கும்?
19 யெகோவாவுடன் நம்முடைய விலைமதியா உறவு, அவருடைய அங்கீகாரம், மற்றும் அவருடைய ஆசீர்வாதம்—ஆகிய இவையே நித்திய காலமெல்லாம் மெய்யான மகிழ்ச்சியை நமக்குக் கொண்டுவரும் மூலகாரணங்கள். உண்மையான மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதன்பேரில் இந்தச் சரியான மனப்பான்மையுடன், யெகோவாவின் மணம் செய்துள்ள ஊழியர்களுங்கூட திருமணமே தங்கள் வாழ்க்கையில் மிக அதிக முக்கியமான காரியம் அல்லவென உணருகின்றனர். அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் அறிவுரைக்கு அவர்கள் செவிகொடுக்கின்றனர்: “சகோதரரே, நான் சொல்லுகிறதாவது: [மீந்துள்ள, NW] காலம் குறுகினது, இனி மனைவியுள்ளவர்கள் இல்லாதவர்கள்போலவும் . . . இருக்கவேண்டும்.” (1 கொரிந்தியர் 7:29, தி.மொ.) இது அவர்களுடைய மனைவிகளைக் கவனியாதிருப்பதைக் குறிக்கிறதில்லை. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ கணவர்கள் யெகோவாவின் சேவையை முதல் வைக்கின்றனர், அவ்வாறே அவர்களுடைய தெய்வபக்தியுள்ள, அன்புள்ள, மற்றும் உதவியாயுள்ள மனைவிகளும் செய்கின்றனர், சிலர் தங்கள் கணவர்களின் தோழர்களாக முழுநேரமும் சேவிக்கின்றனர்.—நீதிமொழிகள் 31:10-12, 28; மத்தேயு 6:33.
20. தங்கள் மணவாழ்க்கை சிலாக்கியங்களிடம் என்ன சரியான மனப்பான்மையைக் கிறிஸ்தவர்கள் பலர் கொண்டுள்ளனர்?
20 பயணக் கண்காணிகள், பெத்தேல் சேவைக்கு முன்வந்தவர்கள், சபை மூப்பர்கள் ஆகியோராக இருக்கும் மணம் செய்துள்ள சகோதரர்கள்—நிச்சயமாகவே, ராஜ்ய அக்கறைகளை முதல் வைக்கும் மணம் செய்துள்ள எல்லா சகோதரர்களும்—‘இவ்வுலகத்தை முழுவதுமாய் அனுபவிப்பதில்லை’; அவர்கள் தங்கள் திருமண சிலாக்கியங்களை யெகோவாவுக்குச் செய்யும் சேவைக்குரிய தங்கள் ஒப்புக்கொடுத்த வாழ்க்கைக்குள் பொருந்த வைக்கும்படி உழைக்கின்றனர். (1 கொரிந்தியர் 7:31) எனினும், அவர்கள் மகிழ்ச்சியுடனிருக்கின்றனர். ஏன்? ஏனெனில் அவர்களுடைய மகிழ்ச்சிக்கு முதன்மையான காரணம் அவர்களுடைய மணமான நிலை அல்ல, யெகோவாவுக்குச் செய்யும் அவர்களுடைய சேவையேயாகும். உண்மையுள்ள கணவர்களும் மனைவிகளுமான பலர்—ஆம், அவர்களுடைய பிள்ளைகளுங்கூட—அவ்வாறிருப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர்.
21, 22. (எ) எரேமியா 9:23, 24-ன் அடிப்படையில், எது நம்மை மகிழ்ச்சியால் நிரப்ப வேண்டும்? (பி) நீதிமொழிகள் 3:13-18-ல் மகிழ்ச்சிக்குரிய என்ன காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன?
21 தீர்க்கதரிசி எரேமியா பின்வருமாறு எழுதினார்: “யெகோவா சொல்வதைக் கேளுங்கள்: ஞானி தன் ஞானத்தைப்பற்றிப் பெருமை பாராட்டவேண்டாம்; பராக்கிரமவீரன் தன் பராக்கிரமத்தைப்பற்றிப் பெருமை பாராட்டவேண்டாம்; செல்வன் தன் செல்வத்தைப்பற்றிப் பெருமை பாராட்டவேண்டாம். பெருமைபாராட்டுகிறவன், யெகோவாவாகிய நான் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிறேன் என்று என்னை அறிந்துகொள்ளும் புத்தி தனக்கு இருக்கிறதைப்பற்றியே பெருமை பாராட்டவேண்டும். இவைகளே எனக்குப் பிரியம், இது யெகோவாவின் திருவாக்கு.”—எரேமியா 9:23, 24, தி.மொ.
22 நாம் மணமாகாதவர்களாயினும் அல்லது மணம் செய்தவர்களாயினும், நம்முடைய மகிழ்ச்சியின் மிகப் பெரிய மூலகாரணம் யெகோவாவைப் பற்றிய நம் அறிவும் நாம் அவருடைய சித்தத்தைச் செய்வதால் அவருடைய ஆசீர்வாதத்தை உடையோராக இருக்கிறோம் என்ற உறுதியான நம்பிக்கையுமேயாக இருக்க வேண்டும். உண்மையான மதிப்புகள் அமைந்ததற்குள், யெகோவா பிரியங்கொள்ளும் காரியங்களுக்குள் ஊடுருவிக்காணும் அறிவை கொண்டிருப்பதற்காகவும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். பல மனைவியரை மணந்த அரசன் சாலொமோன் திருமணத்தை மகிழ்ச்சிக்கு ஒரே திறவுகோலாகக் கருதவில்லை. அவர் சொன்னதாவது: “ஞானத்தைப் பெற்ற மனுஷன், உணர்வை அடைந்துகொண்டவனே, பாக்கியன் [மகிழ்ச்சியுள்ளவன், NW]; ஞானம் சம்பாதித்தல் வெள்ளியினும் மேலாம், ஞானலாபம் பசும்பொன்னிலும் உத்தமம். முத்துக்களிலும் அது விலையேறியது, ஆசிப்பதொன்றும் அதற்கு நிகராவதில்லை; தீர்க்காயுள் அதன் வலக்கையிலுள்ளது, செல்வம், மேன்மை அதன் இடக்கையில் உளவாம். அதன் வழிகள் இன்ப வழிகளாம், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். தனையடைந்தோர்க்கு அது ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளும் எவனும் பாக்கியன் [மகிழ்ச்சியுள்ளவன், NW].”—நீதிமொழிகள் 3:13-18, தி.மொ.
23, 24. யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் யாவரும் புதிய காரிய ஒழுங்குமுறையில் மகிழ்ச்சியுடனிருப்பார்கள் என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?
23 நம்மில் மணம் செய்திருக்கிறவர்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் நித்திய சந்தோஷத்தைக் கண்டடைவோமாக. தாங்களே தெரிந்துகொண்டதால் அல்லது சந்தர்ப்பநிலைமைகளின் வற்புறுத்தலால் மணமாகாத நிலையிலுள்ள நம் அருமையான சகோதரர்களும் சகோதரிகளும் தங்கள் எல்லா சோதனைகளையும் சகித்து நிலைத்திருந்து இப்பொழுதும் என்றென்றும் யெகோவாவைச் சேவிப்பதில் மகிழ்ச்சியையும் மனத்திருப்தியையும் கண்டடைவார்களாக. (லூக்கா 18:29, 30; 2 பேதுரு 3:11-13) கடவுளுடைய வரவிருக்கும் காரிய ஒழுங்குமுறையில், “புத்தகச் சுருள்கள்” திறக்கப்படும். (வெளிப்படுத்துதல் 20:12, NW) இவை, கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தின் மகிழ்ச்சிக்கு உதவியாயிருக்கும் கிளர்ச்சியூட்டும் புதிய கட்டளைகளும் சட்டங்களும் அடங்கியிருக்கும்.
24 நிச்சயமாகவே, நம்முடைய “நித்தியானந்த தேவன்” நம்முடைய முழுமையான மகிழ்ச்சியில் பலன்தரும் அதிசயமான நல்ல காரியங்களை நமக்காக முன் வைத்திருக்கிறாரென நாம் திடநம்பிக்கையுள்ள உணர்ச்சியுடன் இருக்கலாம். (1 தீமோத்தேயு 1:11) கடவுள் தொடர்ந்து ‘தம்முடைய கரத்தைத் திறந்து உயிருள்ள ஒவ்வொன்றின் ஆசையையும் திருப்தியாக்குவார்.’ (சங்கீதம் 145:16, NW) யெகோவாவைச் சேவிப்பதில் மெய்யான மகிழ்ச்சி இப்போதும் இருக்கிறது, எப்போதும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஊழியர்களின் மகிழ்ச்சிக்கு ஆதாரம் என்ன?
◻ பைபிள் காலங்களில், யெகோவாவின் மகிழ்ச்சியுள்ள மணமாகாத ஊழியர்களாக இருந்த சிலர் யாவர்?
◻ பவுல் ஏன் மணமாகாதிருப்பதை சிபாரிசு செய்தார், எவ்வாறு கிறிஸ்தவர்கள் சிலர் இதை மகிழ்ச்சியுள்ள வாழ்க்கையெனக் கண்டிருக்கின்றனர்?
◻ எதன்பேரில் நம்முடைய மகிழ்ச்சி எப்போதும் சார்ந்திருக்கும்?
◻ உண்மையுள்ளோர் யாவரும் புதிய காரிய ஒழுங்குமுறையில் மகிழ்ச்சியுடனிருப்பார்கள் என்று நாம் ஏன் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்?
13. கிறிஸ்தவர் ஒருவர் மணமாகாமலும் மகிழ்ச்சியுடனும் இருக்க முடியுமென என்ன முன்மாதிரிகள் காட்டுகின்றன?
[பக்கம் 16-ன் படம்]
மணமாகாத சகோதரிகள் பலர் முழுநேர ஊழியர்களாக மகிழ்ச்சியுடன் யெகோவாவைச் சேவிக்கின்றனர்
[பக்கம் 18-ன் படம்]
யெகோவாவின் அக்கறைகளைச் சேவிப்பதே மகிழ்ச்சிக்கு முதன்மையான மூலகாரணம்