விசுவாச சுகப்படுத்துதல் கடவுளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா?
“அதிசயமான காரியங்களை இன்று கண்டோம்!” ஆம், பார்வையாளர்கள் நெகிழ்ந்து போனார்கள். கடுமையான பக்கவாதமுடைய ஒரு மனிதன் அவர்கள் கண்களுக்கு முன்பாகவே சுகப்படுத்தப்பட்டிருந்தான். சுகப்படுத்தினவர் அந்த மனிதனிடம் சொன்னார்: “நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ.” அந்த மனிதன் அப்படியே செய்தான்! அவன் இனிமேலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டில்லை. அங்கே கூடியிருந்தவர்கள் “தேவனை மகிமைப்படுத்தி”யது ஆச்சரியமாயில்லை! (லூக்கா 5:18-26) ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக இயேசு கிறிஸ்து நடப்பித்த இந்தச் சுகப்படுத்துதல் மிகத் தெளிவாகவே கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது.
ஆனால் இன்று எப்படி? எந்த மருத்துவ நிவாரணத்தையும் பெற முடியாதவர்களுக்கு அற்புத சுகப்படுத்துதல் இன்னும் ஒரு நல்ல சாத்தியமாக இருக்கிறதா? இயேசு சுகப்படுத்தும் அற்புதங்களை நடப்பித்தார். விசுவாச சுகப்படுத்துவோர் இன்று அவரைப் பின்பற்றுவதாக உரிமைப்பாராட்டுகிறார்கள். அவர்களுடைய உரிமைப்பாராட்டல்களை நாம் எவ்வாறு நோக்க வேண்டும்?
விசுவாச சுகப்படுத்துதல் என்பதற்கு, “கடவுளிடம் ஜெபம் மற்றும் விசுவாசத்தை அப்பியாசிப்பதன் மூலமாக நோய்க்குச் சிகிச்சையளிக்கும் ஒரு முறை,” என்பதாக சொற்பொருள் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா உறுதிசெய்கிறது: “கிறிஸ்தவத்தில் விசுவாச சுகப்படுத்துதலின் வரலாறு, இயேசு மற்றும் அப்போஸ்தலர்களின் வியப்பூட்டும் தனிப்பட்ட ஊழியங்களோடு ஆரம்பமானது.” ஆம், இயேசு குறிப்பிடத்தக்க சுகப்படுத்துதல்களைச் செய்தார். இன்று விசுவாச சுகப்படுத்துவோர் அவர் செய்தது போல அற்புதங்களைச் செய்கிறார்களா?
விசுவாசம்—ஒரு தேவையா?
ப்ளாக்கின் பைபிள் அகாராதி-யின்படி, இயேசு, “அற்புத சுகப்படுத்துதலுக்கு ஒரு முன்நிபந்தனையாக [விசுவாசத்தைக்] குறிப்பிட்டார்.” ஆனால் அது அப்படி இருந்ததா? இயேசு ஒரு வியாதியஸ்தனை சுகப்படுத்துவதற்கு முன்பு அவன் விசுவாசமுள்ளவனாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினாரா? பதில் இல்லை என்பதாகும். சுகப்படுத்துவோரின் பங்கில் விசுவாசம் தேவைப்பட்டது ஆனால் வியாதியஸ்தனின் பங்கில் கட்டாயமாக விசுவாசம் தேவைப்படவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் இயேசுவின் சீஷர்களால் சந்திரரோகியாய் இருந்த ஒரு பையனை சுகப்படுத்த முடியாமல் போனது. இயேசு அந்தப் பையனை சுகப்படுத்திவிட்டு பின்னர் சீஷர்களிடம் ஏன் அவர்களால் அவனை சுகப்படுத்த முடியாமல் போனது என்பதை சொன்னார். “அதற்கு இயேசு: உங்கள் விசுவாசக் குறைவினால் தான்.”—மத்தேயு 17:14-20, NW.
மத்தேயு 8:16, 17-ன் பிரகாரம், இயேசு “பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்.” இந்த மக்களுக்கு இயேசுவிடம் அவர்களை அணுகி வரும்படிச் செய்த ஓரளவான விசுவாசம் இருந்தது உண்மையே. (மத்தேயு 8:13; 9:22, 29) பெரும்பாலானவர்களின் விஷயத்தில் அவர் அவர்களை சுகப்படுத்துவதற்கு முன்பு அவரிடம் வந்து கேட்கவேண்டியவர்களாக இருந்தனர். இருப்பினும் அற்புதம் நடப்பிக்கப்படுவதற்கு எந்த ஒரு விசுவாச அறிக்கையும் தேவைப்படவில்லை. ஒரு சமயம் இயேசு யார் என்பதையும்கூட அறியாதிருந்த ஒரு சப்பாணியை அவர் சுகப்படுத்தினார். (யோவான் 5:5-9, 13) அவர் கைதுசெய்யப்பட்ட இரவு, இயேசு துண்டிக்கப்பட்ட பிரதான ஆசாரியனின் வேலைக்காரனுடைய காதை சுகப்படுத்தினார், இந்த மனிதன் அவரை கைதுசெய்ய வந்திருந்த இயேசுவின் சத்துருக்களுடைய தொகுதியில் ஒருவனாக இருந்தபோதிலும் அவர் இதைச் செய்தார். (லூக்கா 22:50, 51) ஆம், சில சமயங்களில், இயேசு மரித்தோரையும்கூட உயிர்த்தெழுப்பினார்!—லூக்கா 8:54, 55; யோவான் 11:43, 44.
இப்படிப்பட்ட அற்புதங்களை இயேசு எப்படி நடப்பிக்க முடியும்? ஏனென்றால் அவர் கடவுளுடைய பரிசுத்த ஆவி அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தியின் மீது சார்ந்திருந்தார். இதுதானே சுகப்படுத்துதல்களைச் செய்தது, வியாதியாயிருந்த நபரின் விசுவாசம் அல்ல. சுவிசேஷங்களிலுள்ள பதிவுகளை நீங்கள் வாசித்தால், இயேசு குறைந்தபட்ச ஆரவாரத்தோடு அற்புதங்களை நடப்பித்ததையும்கூட கவனிப்பீர்கள். கவனத்தைக் கவர்ந்திழுத்தலோ அல்லது உணர்ச்சிகளை அநியாயமாக பயன்படுத்திக்கொள்வதோ அங்கு இருக்கவில்லை. மேலுமாக, வியாதி என்னவாயிருப்பினும், இயேசு ஒருபோதும் தவறவில்லை. எப்போதும் அவர் வெற்றியடைந்தார், எந்தக் கட்டணமும் அவர் ஒருபோதும் வசூல் செய்யவில்லை.—மத்தேயு 15:30, 31.
நவீன சுகப்படுத்துதல்கள் இயேசுவினுடையதைப் போன்றிருக்கிறதா?
வியாதி ஒரு பயங்கரமான பிரச்னையாகும். அது தாக்கும் போது, இயற்கையாகவே நாம் நிவாரணத்தை நாடுகிறோம். ஆனால், “மக்கள், விசேஷமாக வறுமையிலிருப்பவர்கள் தொழில் முறை சுகாதார பணியாளர்களால் மனிதர்களாக இல்லாமல் உயிரற்றப் பொருட்களைப் போல சிகிச்சையளிக்கப்படுகின்ற,” ஓரிடத்தில் நாம் வாழ்ந்துவந்தால் அப்போது என்ன? ஒரு லத்தீன்-அமெரிக்க தேசத்தில் ஒரு மருத்துவர் அந்த நிலையைத்தான் கண்டார். அதே தேசத்தில் இருப்பது போல ‘40 சதவீத மருத்துவர்கள் மாத்திரமே தங்கள் தொழிலை நடத்த தகுதியுள்ளவர்களாக’ இருக்கும் ஓரிடத்தில் நாம் வாழ்ந்து வந்தால் அப்போது என்ன?
வேறு எந்த வழியும் இல்லாதிருப்பதைக் காணும் அநேகர் விசுவாச சுகப்படுத்துதலை முயற்சி செய்து பார்ப்பதை தகுதியுள்ளதாக கருதுகிறார்கள். இருப்பினும், விசுவாச சுகப்படுத்துவோர் சுகப்படுத்தியதாக கூறும் எண்ணிக்கை விவாதத்துக்குரியதாகும். உதாரணமாக, பிரேஸிலில் உள்ள சாவ் பாலோவில் 70,000 பேர் கூடியிருந்ததாக மதிப்பிடப்படும் ஒரு கூட்டத்தில் இரண்டு சுகப்படுத்துவோர் ‘பார்வையாளர் பகுதியிலிருந்து வீசியெறியப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கண்களுக்கிடும் கண்ணாடிகளை காலின் கீழ் போட்டு மிதித்து சந்தேகிக்காத அதன் சொந்தக்காரர்களுக்கு கண்பார்வையை மீட்டுத்தருவதாக வாக்களித்தார்கள்.’ சுகப்படுத்துவோரில் ஒருவர் பேட்டி ஒன்றில் நேர்மையாக இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “நாங்கள் ஜெபிக்கின்ற எல்லா வியாதியஸ்தர்களும் குணமடைவார்கள் என்று என்னால் சொல்ல முடியாது. அது அவர்களுடைய விசுவாசத்தைச் சார்ந்திருக்கிறது. ஒரு நபர் விசுவாசிப்பாரேயானால், அவர் குணமடைவார்.” சுகப்படுத்தப்படுவதில் எந்த ஒரு தோல்விக்கும் வியாதியஸ்தரின் பங்கில் விசுவாசக் குறைவை அவர் காரணங்காட்டினார். ஆனால் சுகப்படுத்துவோரின் பங்கில் விசுவாசமில்லாமையே சுகப்படுத்தப்படுவதில் தோல்விக்கு காரணம் என்று இயேசு சொன்னதை, நாம் முன்னர் பார்த்ததை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்!
சுகப்படுத்துதல் செய்யும் மற்றொருவர் புற்றுநோயையும் முடக்குவாதத்தையும் குணப்படுத்துவதாக வாக்களித்தார். என்ன நடந்தது? வீஜா பத்திரிகையின்படி, “வாக்கு நிறைவேற்றப்படவில்லை.” அந்த மனிதன் நடந்துகொண்ட விதத்தைக் கவனியுங்கள்: “சுமார் இரண்டு மணிநேரங்களாக [விசுவாச சுகப்படுத்துதல் செய்பவர்] பிரசங்கங்கள், ஜெபங்கள், அலறல்கள், பாட்டுகள், உண்மையுள்ளவர்களின் சரீரங்களில் குடிகொண்டிருக்கும் பேய்களைத் துரத்துவதற்காக அடிகளைப் பயன்படுத்தியும்கூட பார்வையாளர்களை மகிழ்வித்துக்கொண்டிருந்தார். முடிவில், மெய் மறந்திருந்த பார்வையாளர்களிடமாக தன் கழுத்தில் அணிந்திருந்த டையையும் கைக்குட்டையையும் தூக்கியெறிந்து ‘மனமுவந்து கொடுக்கப்படும் காணிக்கைகளை’ வசூல் செய்ய ஒரு காணிக்கைத் தட்டை அனுப்பினார். இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் அற்புதமான சுகப்படுத்துதல்களுக்காக ஒருபோதும் பணம் கேட்கவில்லை, அவர்கள் இப்படிப்பட்ட நாடக பாணிகளில் ஒருபோதும் ஈடுபடவுமில்லை.
அப்படியென்றால், இப்படிப்பட்ட நவீன விசுவாச சுகப்படுத்துவோர் இயேசு செய்ததைச் செய்துகொண்டில்லை என்பது தெளிவாக இருக்கிறது. அவர்கள் செய்வதைக் கடவுள் அங்கீகரிப்பார் என்று நம்புவது கடினமாக இருக்கிறது. ஆனால் அவர் எந்த அற்புதமான சுகப்படுத்துதல்களையும் இன்று அங்கீகரிக்கிறாரா? அல்லது நாமோ அல்லது நமக்கு அன்பானவர்களோ நோயுற்றால் நம்முடைய விசுவாசம் நமக்கு ஏதாவது ஒரு வழியில் உதவக்கூடுமா?