ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
நைஜீரிய பள்ளிப்பிள்ளைகள் உண்மைத்தன்மைக்காக ஆசீர்வதிக்கப்பட்டனர்
அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.” (ரோமர் 12:18) நைஜீரியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் பள்ளிப்பிள்ளைகள் இந்த ஆலோசனையைத் துன்புறுத்தப்பட்ட போதிலும் பொருத்துகிறார்கள். அதன் பலனாக யெகோவா அவர்களை ஆசீர்வதிக்கிறார்.
◻ யெகோவாவின் சாட்சிகளை ஓர் ஆசிரியர் அதிகமாக வெறுத்தார். ஒரு காலை அசெம்பிளியின் போது, எல்லா யெகோவாவின் சாட்சிகளையும் முன்பகுதிக்கு வரும்படியாக அழைத்து தேசீய கீதத்தைப் பாடும்படி கட்டளையிட்டார். அவர்கள் கடவுளுக்கு தனிப்பட்ட பக்தியைக் கொடுக்க விரும்புவதாக கூறி அதை மறுத்தார்கள். ஆசிரியர் அவர்கள் அனைவரையும் வெளியே அழைத்துச் சென்று புல்லை வெட்டும்படியாகச் சொன்னார். இதற்கிடையில், மற்ற மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்குச் சென்றுவிட்டார்கள்.
வயது வந்த ஒரு சாட்சி பள்ளியும் யெகோவாவின் சாட்சிகளும் என்ற புரொஷூரை ஆசிரியரிடம் எடுத்துச்சென்று, யெகோவாவின் சாட்சிகள் வகிக்கும் நடுநிலைமையைப் பற்றி விளக்கினார். என்றபோதிலும், ஆசிரியர் விஷயத்தைக் கலந்து பேசவோ அல்லது புரொஷூரை ஏற்றுக்கொள்ளவோ மறுத்துவிட்டார். உண்மையில், அவர் உடனடியாக பிள்ளைகளுக்குத் தண்டனையை அதிகமாக்கினார்.
இளம் சாட்சிகள் இந்தத் தண்டனையை தொடர்ந்து சகித்துக்கொண்டும் ஆசிரியர் அங்கு இல்லாதபோதும்கூட புற்களை வெட்டிக்கொண்டுமிருந்தனர். ஒரு நாள் அவர்கள் தொடர்ந்து வேலைசெய்துகொண்டும் ராஜ்ய பாடல்களைப் பாடிக்கொண்டுமிருக்கையில் அவர்களுக்குத் தெரியாமல் ஆசிரியர் மறைந்துகொண்டு அவர்களை கவனித்தார். அவருடைய மனம் அவ்வளவாக கவரப்பட்டதால், அவர்களுடைய மனநிலையைக் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தி அவர்களை அவர்களுடைய வகுப்புக்கு அனுப்பிவிட்டார். பலன் என்னவாக இருந்தது? ஆசிரியர் இப்பொழுது யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிப்பைக் கொண்டிருக்கிறார்!
நிச்சயமாகவே இந்தப் பள்ளிப்பிள்ளைகள் யெகோவாவுக்கும் அவருடைய நியமங்களுக்கும் உண்மையுள்ளவர்களாக இருந்தமைக்காக ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.—நீதிமொழிகள் 10:22.
◻ ரூத்தும் அவளுடைய நண்பர்களும்கூட, “உலகத்தின் பாகமாக இல்லா”திருக்கும்படியான யெகோவாவின் கட்டளைக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தமைக்காக ஆசீர்வதிக்கப்பட்டார்கள். (யோவான் 17:16, NW) 18 வயதினளாக இருக்கும் ரூத், 12 வயதாக இருக்கும்போது பயனியர் செய்ய ஆரம்பித்தாள். தேசீய கீதத்தைப் பாட மறுத்ததற்காக அவளும் மற்ற சாட்சிகளும் பள்ளி ஆசிரியர்களிடமிருந்து எதிர்ப்பை பெற்றுக்கொண்டார்கள். ஓர் ஆசிரியர் பெண்களின் பெற்றோரை பார்க்க வேண்டும் என்று கேட்டார். பள்ளி புரொஷூரை பயன்படுத்தி அவர்கள் ஒரு விளக்கத்தை கொடுத்த பின்பு, ஆசிரியர் திருப்தியடைந்தார், மாணவர்களுக்கு இனிமேலும் தொந்தரவு கொடுக்காமல் இருந்தார்.
என்றபோதிலும், ஒரு நாள், தேசீய கீதத்தைப் பாடாத போது, இந்தியாவிலிருந்து வந்த ஓர் ஆசிரியர் அந்தப் பெண்களில் ஒருத்தியை வகுப்புக்கு முன்பாக அவமதித்து தண்டித்தார். அந்தப் பெண் தன் விசுவாசத்தை தைரியமாக எடுத்துரைத்தாள், ஆசிரியர் அவளைப் பள்ளி முதல்வரைப் பார்க்க அழைத்துச் சென்றார். அவர்கள் அங்கே சென்றபோது, இளம் சாட்சி பள்ளி உதவி முதல்வரும் அங்கிருப்பதைக் கண்டாள். பள்ளி முதல்வரும் உதவி முதல்வரும் சிரிக்க ஆரம்பித்த போது அவளுக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. ஆசிரியரைப் பார்த்து முதல்வர் சொன்னார்: “அம்மையாரே, இந்தப் பெண்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் இவர்களை கொலைசெய்வதாக இருந்தாலும்கூட, இவர்கள் கீதத்தைப் பாடுவதைவிட மரித்துப்போவார்கள். இவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?” அவர்களும் அவர்களுடைய உதவியாளரும் பின்னர் யெகோவாவின் சாட்சிகளுடைய விசுவாசத்தையும் தைரியத்தையும் பற்றி பேசினார்கள். அந்தப் பெண்ணிடமாக, முதல்வர் அவளுக்கேற்பட்ட சங்கடத்துக்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டார். பின்னர் அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “உங்கள் விசுவாச செயல்களை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் மதத்தையும் வெளியிலேயும் இங்கே பள்ளியிலும் உங்கள் தைரியமான நிலைநிற்கையையும் நான் மெச்சுகிறேன்.” பின்னர், எதிர்ப்பு காண்பித்த ஆசிரியர், சாட்சிகள் எடுக்கும் நடுநிலைமையை இப்பொழுது தான் புரிந்துகொண்டிருப்பதாக கூறி சாட்சியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
ஒரு சிலையை வணங்குவதன் மூலம் கடவுளுக்குத் தங்கள் உத்தமத்தை முறித்துக்கொள்ள விரும்பாத மூன்று எபிரெயர்கள் மற்றும் யெகோவாவிடம் ஜெபிப்பதை நிறுத்திட மறுத்த தானியேல் ஆகியவர்களின் முன்மாதிரியை இந்தப் பிள்ளைகள் பின்பற்றினார்கள். கடவுளுடைய நீதியுள்ள சட்டங்களுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தமைக்காக இந்த மனிதர்கள் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.—தானியேல், அதிகாரம் 3 மற்றும் 6.