நம்பிக்கை மனமுறிவை வெல்லுகிறது!
மனமுறிவு, வெப்ஸ்டர்ஸ் நைன்த் நியு காலேஜியேட் அகராதியில் “நம்பிக்கையை முழுவதுமாக இழந்து விடுதல்,” என்று விளக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், மனமுறிவை வெல்ல நம்பிக்கை நமக்குத் தேவை என்பது தெளிவாக இருக்கிறது!
வருந்தத்தக்க நபர் ஒருவர் தவிர்க்க முடியாத சூழ்நிலையின் காரணமாக நடைபாதை ஓரமாக வாழ நேரிடும்போது அவருக்கு நம்பிக்கை இருந்தால் முழுவதுமாக அவர் மனமுறிவடையமாட்டார். மனச்சோர்வின் வேதனைகளினால் அவதியுறுபவர்களுக்கு சகித்திருப்பதற்கான தைரியத்தையும், பலத்தையும்கூட நம்பிக்கை கொடுக்கலாம். ஆனால் அந்த நம்பிக்கை நம்பத்தகுந்ததாக இருக்க வேண்டும்! இது எதை அர்த்தப்படுத்துகிறது?
நம்பிக்கைக்கு அடிப்படை
முற்பிதாவாகிய ஆபிரகாமின் மனைவி சாராளுக்கு என்ன ஏற்பட்டது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். 90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கையில், அவள் இன்னும் மலடியாய் இருந்தாள். ஒரு பிள்ளையை பெற முடியவில்லையே என வெகு காலமாக மனமுறிந்து போயிருந்தாள். என்றபோதிலும், அவளுடைய கணவன் 99 வயதாயிருக்கையில், பல ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்திருந்த வாக்கு ஒன்றை யெகோவா மறுபடியும் கூறினார்—ஆபிரகாம் உண்மையிலேயே ஒரு “வித்தை” அல்லது மைந்தனை கொண்டிருப்பார். இது ஒரு நம்பத்தகுந்த வாக்கு என்பதை ஆபிரகாம் அறிந்திருந்தார். ஈசாக்கை பெற்றெடுத்த அந்த மகிழ்ச்சிகரமான சம்பவம் அற்புதமாக நடந்த போது சாராள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பாள் என்பதைக் கற்பனைச் செய்து பாருங்கள்! (ஆதியாகமம் 12:2, 3; 17:1-4, 19; 21:2) அப்போஸ்தலனாகிய பவுல் விளக்கியபடி ஆபிரகாமுக்கு யெகோவாவின் பேரில் இருந்த நம்பிக்கை தவறிவிடவில்லை: “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் [ஆபிரகாம்] அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், . . . தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.”—ரோமர் 4:20, 21.
தன்னுடைய நாளில் கிறிஸ்தவர்களாக ஆன யூதர்களுக்கு எழுதுகையில், இயேசுவின் மூலம் இரட்சிப்பைப் பற்றிய கடவுளுடைய வாக்கின் பேரில் இரண்டு பிழையில்லாத காரணங்களுக்காக அவர்கள் அதன் பேரில் நம்பிக்கை வைக்கலாம் என்று பவுல் நியாயங்காட்டிப் பேசினார். ஆபிரகாமுக்கு கடவுளின் வாக்கையும், அதோடு கூட அவருடைய தெய்வீக ஆணையையும் மேற்கோளாக எடுத்துக்கூறி அப்போஸ்தலன் இவ்வாறு விவாதித்தார்: “மனுஷர் தங்களிலும் பெரியவர் பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு. அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார். நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.” (எபிரெயர் 6:16-18) ஆம், கடவுளுடைய வாக்குகள் உண்மையாயும் நம்பத்தகுந்தவையாயும் இருக்கின்றன. யெகோவா சர்வவல்லமையுள்ளவராக இருக்கிறார். தம்முடைய சொந்த வார்த்தை நிறைவேறும் என்று உத்தரவாதமளிப்பதில் தனித்தன்மை வாய்ந்தவராக இருக்கிறார்.
“நிலையும் உறுதியுமான” நம்பிக்கை
கிறிஸ்தவ நம்பிக்கை “நிலையும் உறுதியுமாய்” இருக்கிறது என்று பவுல் எழுதினார். (எபிரெயர் 6:19) தன்னுடைய நம்பிக்கை எங்கே ஆதாரத்தைக் கொண்டிருந்தது என்பதை பவுல் அறிந்திருந்தார். அவர் விளக்குகிறார்: “அது [அந்த நம்பிக்கை] திரைக்குள்ளாகப் போகிறது.” இது எதை அர்த்தப்படுத்துகிறது? எருசலேமில் இருந்த பண்டைய ஆலயத்தைக் குறித்து பவுல் வெளிப்படையாக பேசிக்கொண்டிருந்தார். இதில் மகா பரிசுத்த ஸ்தலம் ஒன்று இருந்தது. அது ஒரு திரைச்சீலையின் மூலம் கட்டிடத்தின் மீதி பகுதியிலிருந்து பிரிந்து இருந்தது. (யாத்திராகமம் 26:31, 33; மத்தேயு 27:51) எருசலேமிலிருந்த சொல்லர்த்தமான ஆலயம் அழிக்கப்பட்டு நீண்ட காலம் ஆகிறது. ஆகையால், இன்று இந்த மகா பரிசுத்த ஸ்தலம் எதற்கு ஒப்பாய் இருக்கிறது?
கடவுள் தாமே சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் பரலோகத்துக்கு தானே இது ஒப்பாயிருக்கிறது! இயேசு பரலோகத்துக்கு ஏறின பின்பு, “மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே [எருசலேமிலிருந்த ஆலயத்திலே] கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்,” என்று பவுல் சொன்னபோது இதை விளக்கினார். (எபிரெயர் 9:24) ஆகையால், மனமுறிவுக்கு எதிராக போராட நமக்கு உதவிசெய்யும் கிறிஸ்தவ நம்பிக்கை, மனித அரசியல்வாதிகளின் பேரில் சார்ந்தில்லை. ஆனால் ஒரு பரலோக ஏற்பாட்டின் பேரில் சார்ந்திருக்கிறது. அது கடவுள் நியமித்திருந்த இயேசு கிறிஸ்துவின் பேரில் சார்ந்திருக்கிறது. அவர் நம்முடைய பாவங்களுக்காக தம் ஜீவனை மீட்கும்பொருளாகக் கொடுத்தார். இப்போது நம்முடைய சார்பாக கடவுளுக்கு முன் நிற்கிறார். (1 யோவான் 2:1, 2) கூடுதலாக, இப்பத்திரிகையின் பகுதிகளில் அடிக்கடி காண்பிக்கப்பட்டபடி, கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக ஆட்சி செய்யும்படி இதே இயேசுதான் தேவனால் நியமிக்கப்பட்டார். அவர் 1914 முதற்கொண்டு அவ்வாறு ஆண்டுவருகிறார். அநேகரை மனமுறிவுக்கு நடத்தும் காரியங்களை இந்தப் பரலோக ராஜ்யம் விரைவில் நீக்கிவிடும்.
நம்பிக்கை—“ஆத்தும நங்கூரமாயிருக்கிறது”
இயேசுவின் மூலம் அவர்களுடைய இரட்சிப்பின் நம்பிக்கை நன்கு-அஸ்திபாரமிடப்பட்டிருக்கிறது என்று தன் வாசகர்களை நம்ப வைப்பதற்கு பவுல் ஓர் ஒத்த சொல்லை உபயோகித்தார். “இந்த நம்பிக்கை ஆத்தும நங்கூரமாயிருக்கிறது,” என்று அவர் விளக்கினார்.—எபிரெயர் 6:19.
பவுலைப் போன்ற பயணிகள் நங்கூரங்களைப்பற்றி நன்கு அறிந்திருந்தனர். பழங்கால நங்கூரங்கள் நவீன நாளைய நங்கூரங்களைப் போன்று இருந்தன. கடலடியை இறுகப் பிடிப்பதற்கு, இரண்டு பற்களைப் போன்ற இறுதி முனைகளையுடையதாய் அவைகள் இரும்பால் செய்யப்பட்டிருந்தன. ரோமுக்கு செல்லும் வழியில் பொ.ச. 58-ல் பவுலின் கப்பல் கடலடியில் மூழ்கிப்போகும் அபாயத்தில் இருந்தது. ஆனால் கப்பல் ஆழமற்ற இடத்துக்கு நகர்ந்து சென்றபோது, கப்பலோட்டிகள் “பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப் போட்டனர்.” அந்த நங்கூரங்களுக்கு நன்றி, கப்பல் பாதுகாப்பாக புயலைத் தப்பித்தது.—அப்போஸ்தலர் 27:29, 39, 40, 44.
பொருளாதார இன்னல்கள், சரீர சம்பந்தமான அல்லது உணர்ச்சி சம்பந்தமான நோய் அல்லது வேறு எந்தப் “புயல்கள்” உங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்டாலும், அவற்றைச் சமாளித்துக் கடப்பதற்காக உங்களுடைய நம்பிக்கையை ஒரு நங்கூரம் போன்று உறுதியாக ஆக்குவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பைபிளின் வாக்குகள் நம்பத்தகுந்தவை என்று முதலில் நீங்கள் உங்களுக்கு நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். “எல்லா காரியங்களையும் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:21) உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகள் அடுத்த முறை உங்களிடம் பேசும் போது, அவர்கள் சொல்வதைச் செவிகொடுத்துக் கேளுங்கள். நீங்கள் வசிக்கும் இடத்துக்கு அவர்கள் அடிக்கடி வருவதில்லையென்றால், அருகாமையில் இருக்கும் ராஜ்ய மன்றத்தில் அவர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அவர்களோடு சேர்ந்து கொள்ள நீங்கள் வற்புறுத்தப்படமாட்டீர்கள். ஆனால் ஓர் இலவசமான பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளும்படி நீங்கள் அழைக்கப்படுவீர்கள். உங்களுக்கு எப்போது, எங்கு வசதியோ அங்கு அதை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
அப்படிப்பட்ட பைபிள் படிப்பு கடவுள் “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்று” உங்களுக்கு உறுதிப்படுத்தும். (எபிரெயர் 11:6) இன்று அநேகரை மனமுறிவடையச் செய்யும் ஊழலையும், ஏற்றத் தாழ்வுகளையும் கடவுளுடைய ராஜ்யம் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் கீழ் விரைவில் நீக்கிவிடும் என்பதை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். அந்த ராஜ்யத்தின் கீழ், இந்தப் பூமி மீண்டும் ஒரு பரதீஸான நிலைமைக்கு கொண்டுவரப்படும். கடவுள் அவரை நேசிப்பவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார். (சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:4) எப்படிப்பட்ட ஒரு மகத்தான நம்பிக்கை!
இந்த நம்பிக்கை மெய்யானது என்பதைக் காண பைபிளை கவனமாக வாசியுங்கள். பிறகு கடவுளோடு ஒரு நெருக்கமான தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்வதற்கு உழையுங்கள். ஆபிரகாமைப் போன்று கடவுளுடைய நண்பராக ஆகுங்கள். (யாக்கோபு 2:23) யெகோவா “ஜெபத்தைக் கேட்கிறவராக” இருப்பதனால் உங்களுடைய கவலைகளை அவரிடம் சொல்லுங்கள். உங்களுடைய அணுகுமுறை உண்மை மனதோடு இருந்தால், உங்களுடைய பாரங்களை அகற்றிவிடவும், உங்களுடைய மனமுறிவை வெல்லவும் உங்களுடைய ஜெபம் உங்களுக்கு உதவி செய்யும். உங்களுடைய வேதனை தரும் சூழ்நிலையை மாற்றுவதற்கு கடவுளுடைய ஆவி ஒரு வழியை கூட திறந்து வைக்கலாம்.—சங்கீதம் 55:22; 65:2; 1 யோவான் 5:14, 15.
இறுகப் “பிடித்துக் கொள்ளுங்கள்”!
“எல்லா காரியங்களையும் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்,” என்று தன் உடன் சீஷர்களுக்கு சிபாரிசு செய்த பிறகு, “நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்,” என்று பவுல் கூடுதலாக சொல்கிறார். (1 தெசலோனிக்கேயர் 5:21) கிறிஸ்தவ நம்பிக்கையை இறுகப்பிடித்துக் கொண்டிருக்கும் ஜனங்களோடு கூட்டுறவுக் கொள்வது இதை செய்வதற்கு ஒரு வழியாகும். ஞானவானாகிய சாலொமோன் ராஜா எச்சரித்தார்: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) தப்பெண்ணங்களோ அல்லது தடுமாற்றமான உணர்ச்சிகளோ நல்ல கூட்டுறவை நாடுவதிலிருந்து உங்களைத் தடைசெய்ய அனுமதிக்காதீர்கள். உதாரணமாக, கடந்த காலங்களில் நம்பிக்கையின்றி இருந்த ஜனங்கள் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் பைபிளைப் படிப்பதும், உடன் விசுவாசிகளோடு சந்தோஷமான கூட்டுறவை அனுபவிப்பதும் யெகோவாவோடு அவர்களுடைய உறவை வலுப்படுத்துகிறது. அது நம்பத்தகுந்த, நங்கூரம் போன்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்கிறது. இது உண்மையிலேயே மனமுறிவை வெல்லுகிறதா? நிச்சயமாகவே வெல்லுகிறது.
கணவன் தன்னை கொடுமையாக நடத்தினதன் காரணமாக மனமுறிவுற்று அவதிப்பட்ட அன்மரி என்ற பெண்ணின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். “நான் என்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்தேன். ஆனால் ஏதோவொரு காரணத்துக்காக முதலாவது கடவுளிடம் ஜெபிக்க நான் தீர்மானித்தேன்,” என்று அவள் விளக்குகிறாள். “‘நீர் ஏன் எனக்கு உதவி செய்யக்கூடாது? இவ்வளவு காலமாக நான் உம் பேரில் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் எந்தப் பயனும் இல்லை,’ என்று அவரிடம் சொன்னது எனக்கு ஞாபகமிருக்கிறது. வாழ்க்கைக்கு எந்த நோக்கமுமில்லை. ஆதலால் மரித்துப் போவதே நல்லது என்று எண்ணிக்கொண்டு நான் என் ஜெபத்தை முடித்தேன். அந்தக் கணம் யாரோ என் கதவைத் தட்டினார்கள். அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட நான் தீர்மானித்தேன். அங்கு இருந்தவர்கள் யாராக இருந்தாலும் இறுதியில் போய்விடுவார்கள் என்று நான் எண்ணினேன்.
“கதவைத் தட்டுவது தொடர்ந்தது. என் மனம் குழம்பியது. நான் என் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, கதவருகே யார் இருந்தனர் என்பதைக் காணச் சென்றேன். நான் திட்டமிட்டிருந்ததைச் செய்வதற்கு நான் என்னையே சீக்கிரமாக விடுவித்துக் கொள்ள எண்ணினேன். ஆனால் யெகோவாவுக்கு நன்றி. அந்த விதமாக நடக்கவில்லை. ஏனென்றால் நான் கதவை திறந்த போது, இரண்டு பெண்கள் அங்கு நின்று கொண்டிருப்பதை நான் பார்த்தேன். நான் அதிக குழம்பிய நிலையில் இருந்தேன். அவர்கள் என்ன சொல்லிக் கொண்டிருந்தனர் என்பதை நான் உண்மையில் புரிந்துகொள்ளவில்லை. வாழ்க்கைக்கு ஒரு நோக்கமுண்டு என்பதை விளக்கும் ஒரு புத்தகத்தை அவர்கள் எனக்கு கொடுத்தார்கள். வாழ்க்கையில் என்னுடைய ஆர்வத்தை மறுபடியும் தூண்டுவதற்கு அது தான் எனக்கு தேவையாயிருந்தது,” என்று அன்மரி சொல்கிறாள். அவளைச் சந்தித்தவர்கள் அவளோடு ஓர் ஒழுங்கான பைபிள் படிப்பை ஏற்பாடு செய்தனர். கடவுளுடைய சிநேகிதியாக ஆவதற்கு அன்மரி கற்றுக்கொண்டாள். இது அவளுக்கு வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைக் கொடுத்தது. மற்றவர்கள் கடவுள் மீது நம்பிக்கையை வளர்ப்பதற்கு இப்போது அவள் உதவி செய்கிறாள்.
உட்பட்டிருக்கும் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளாமலே மனமுறிவுக்கு ஒரு முடிவு வரவேண்டும் என்று நீங்கள் ஒருவேளை எண்ணியிருக்கலாம். ஆனால் “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக,” என்று நீங்கள் எப்போதாவது ஜெபித்திருந்தீர்களானால், இயேசு கிறிஸ்துவின் கீழ் கடவுளுடைய ராஜ்யம் வரவேண்டும் என்று நீங்கள் ஜெபித்திருக்கிறீர்கள். அது நேர்மை இருதயமுள்ள ஜனங்களை மனமுறிவடையச் செய்யும் காரியங்களை ஒழித்துவிடும். (மத்தேயு 6:10) தனிப்பட்ட விதமாக பைபிளைப் படிப்பதும், அதே நம்பிக்கையை உடைய மற்றவர்களோடு ஒழுங்காகக் கூட்டுறவுக் கொள்வதும், யெகோவாவின் ராஜ்யம் வந்து நம்முடைய பூமிக்கு பரதீஸைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையின் பேரில் உங்களுடைய பிடியை பலப்படுத்தும். (1 தீமோத்தேயு 6:12, 19) இந்த மகத்தான நம்பிக்கையை இப்பத்திரிகை அதன் ஒவ்வொரு இதழிலும் அறிவிக்கிறது. மனமுறிவை எதிர்த்துப் போராட இந்த நம்பிக்கையை மனமார தழுவிக்கொள்ளுங்கள். உண்மையில் அந்த நம்பிக்கை “நம்மை வெட்கப்படுத்தாது.”—ரோமர் 5:5.
[பக்கம் 7-ன் படம்]
பைபிளைப் படிப்பது நமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது, அது “ஆத்தும நங்கூரமாக” செயல்படுகிறது