யெகோவா, பட்சபாதமில்லாத “சர்வலோக நியாயாதிபதி”
“பிதா . . . பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறார்.” —1 பேதுரு 1:17, NW.
1, 2. (எ) யெகோவா மிகப் பெரிய நியாயாதிபதியாக இருப்பது குறித்து நாம் ஏன் பயமுள்ளவர்களாகவும் அதே சமயத்தில் ஆறுதலளிக்கப்பட்டவர்களாகவும் உணரவேண்டும்? (பி) தேசங்களுக்கு எதிரான யெகோவாவின் சட்டப்படியான வழக்கில் அவருடைய பூமிக்குரிய ஊழியர்கள் என்னப் பங்கை வகிக்கிறார்கள்?
யெகோவா பெரிய “சர்வலோக நியாயாதிபதி”யாக இருக்கிறார். (ஆதியாகமம் 18:25) பிரபஞ்சத்தின் உன்னத கடவுளாக, அவர் தம்முடைய சிருஷ்டிகளை நியாயந்தீர்க்க முழுமையாக தகுதிபெற்றவராக இருக்கிறார். இது அச்சத்தை தோற்றுவிக்கிறதும் அதே சமயத்தில் ஆறுதலளிக்கும் ஓர் எண்ணமாகவும் இருக்கிறது. முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றும் இந்தக் கூற்றை மோசே உருக்கமாக பின்வருமாறு வெளிப்படுத்தினார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார், அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன் மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.”—உபாகமம் 10:17, 18.
2 என்னே கருத்தைக் கவரும் ஒரு சமநிலை! மேன்மைப் பொருந்திய, வல்லமையுள்ள, அச்சத்தை தோற்றுவிக்கிற கடவுள், என்றாலும் பட்சபாதமில்லாதவராய் அன்பாக திக்கற்ற பிள்ளைகள், விதவைகள் மற்றும் அந்நியரின் அக்கறைகளைப் பாதுகாக்கிறார். யெகோவாவைக் காட்டிலும் அதிக அன்புள்ள நியாயாதிபதியை யார் விரும்ப முடியும்? சாத்தானுடைய உலகின் தேசங்களுக்கு எதிராக தமக்கு ஒரு சட்டப்படியான வழக்கு இருப்பதாக தம்மை வருணிப்பவராய், யெகோவா பூமியிலுள்ள தம்முடைய ஊழியர்களைத் தமக்குச் சாட்சிகளாக இருக்கும்படியாக அழைப்பு கொடுக்கிறார். (ஏசாயா 34:8; 43:9-12) தம்முடைய கர்த்தத்துவத்தையும் சட்டப்படியான அரசுரிமையையும் நிரூபிக்க அவர்களுடைய அத்தாட்சியின் மீது அவர் சார்ந்தில்லை. ஆனால் அவர்கள் அவருடைய உன்னதத்தன்மையை ஒப்புக்கொள்கிறார்கள் என்பதை எல்லா மனிதவர்க்கத்துக்கும் முன்னால் உறுதிப்படுத்தும் ஓர் அசாதாரணமான சிலாக்கியத்தை தம்முடைய சாட்சிகளுக்கு அவர் அருளிச்செய்கிறார். அவருடைய சாட்சிகள் தாங்களாகவே அவருடைய நீதியான பேரரசுரிமைக்குத் தங்களைக் கீழ்ப்படுத்துகிறார்கள், மற்றும் தங்களுடைய பொது ஊழியத்தின் மூலமாக உன்னத நியாயாதிபதியினுடைய அதிகாரத்தின் கீழ் தங்களை வைக்குமாறு மற்றவர்களை அவர்கள் தூண்டுகிறார்கள்.
யெகோவா நியாயம் விசாரிக்கும் முறை
3. யெகோவா நியாயம் விசாரிக்கும் முறை எவ்வாறு சுருக்கமாகச் சொல்லப்படலாம், ஆதாம் ஏவாள் விஷயத்தில் இது எவ்வாறு விளக்கப்பட்டது?
3 மனிதவர்க்கத்தின் ஆரம்ப கால வரலாற்றின் போது, யெகோவா தனிப்பட்டவிதமாக ஒரு சில குற்றவாளிகளை நியாயம் விசாரித்தார். நீதி விசாரணைக்குரிய காரியங்களை அவர் கையாண்ட விதத்தைப் பற்றிய உதாரணங்கள், பின்னால் அவருடைய மக்கள் மத்தியில் நீதி விசாரணைக்குரிய செயல்முறைகளை நடத்துவதற்கு பொறுப்புள்ளவர்களாயிருக்க போகிறவர்களுக்கு மாதிரியாக அமைந்தன. (சங்கீதம் 77:11, 12) அவர் நியாயம் விசாரிக்கும் முறை இவ்வாறு சுருக்கமாகச் சொல்லப்படலாம்: எங்கே தேவைப்படுகிறதோ அங்கே உறுதி, எங்கே சாத்தியமோ அங்கே இரக்கம். ஆதாம் ஏவாளின் விஷயத்தில், வேண்டுமென்றே கலகம் செய்த பரிபூரண மனித சிருஷ்டிகள் எந்த இரக்கத்தையும் பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்களாக இருக்கவில்லை. ஆகவே, யெகோவா அவர்களுக்கு மரண தீர்ப்பளித்தார். ஆனால் அவருடைய இரக்கம் அவர்களுடைய சந்ததியினிடமாக செயல்பட்டது. மரணத்தீர்ப்பை நிறைவேற்றுவதை யெகோவா தள்ளிவைத்து, இவ்விதமாக ஆதாமையும் ஏவாளையும் பிள்ளைகளைக் கொண்டிருக்க அனுமதித்தார். அவர் அவர்களுடைய சந்ததிக்கு பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படும் நம்பிக்கையை அளித்தார்.—ஆதியாகமம் 3:15; ரோமர் 8:20, 21.
4. யெகோவா காயீனை எவ்வாறு கையாண்டார், இந்தச் சம்பவம் ஏன் குறிப்பாய் அக்கறைக்குரியதாக இருக்கிறது?
4 யெகோவா காயீனை கையாண்ட முறை குறிப்பாக அக்கறைக்குரியதாக இருக்கிறது, ஏனென்றால் இது “பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்ட,” ஆதாம் ஏவாளின் சந்ததியாரில் ஒருவரை உட்படுத்திய பதிவுசெய்யப்பட்டுள்ள முதல் சம்பவமாக இருக்கிறது. (ரோமர் 7:14) யெகோவா இதை மனதில்கொண்டு அவர் காயீனுடைய பெற்றோரிலிருந்து வித்தியாசமான முறையில் காயீனைக் கையாண்டாரா? இது இன்று கிறிஸ்தவ கண்காணிகளுக்கு ஒரு பாடத்தை அளிக்கமுடியுமா? நாம் பார்க்கலாம். காயீனுடைய பலி சாதகமாக ஏற்றுக்கொள்ளப்படாத போது அவனுடைய தவறான பிரதிபலிப்பை உணர்ந்து, யெகோவா அவன் ஆபத்தில் இருப்பதைக் குறித்து அவனை அன்பாக எச்சரித்தார். பழங்கால பழமொழி ஒன்று ‘வருமுன் காப்போம்,’ என்று சொல்கிறது. பாவமுள்ள மனச்சாய்வு அவனை ஆட்கொண்டுவிட அனுமதியாதிருக்கும்படியாக எச்சரிப்பதன் மூலம் யெகோவா அவரால் இயன்ற வரை செய்தார். அவன் “நன்மை செய்ய திரும்பும்படி,” அவனுக்கு உதவி செய்ய அவர் முயற்சி செய்தார். (ஆதியாகமம் 4:5-7) பாவமுள்ள ஒரு மனிதனை மனந்திரும்பும்படியாக கடவுள் அழைத்த முதல் முறை இதுவே. காயீன் மனந்திரும்பாத ஒரு மனநிலையை வெளிப்படுத்தி கொடுங் குற்றத்தை இழைத்த போது, யெகோவா தண்டனையாக அவனை துரத்திவிட்டார், மற்ற மனிதர் அவனைக் கொலைசெய்வதை தடைசெய்த கட்டளையினால் அதன் கடுமையைக் குறைத்தார்.—ஆதியாகமம் 4:8-15.
5, 6. (எ) ஜலப்பிரளயத்துக்கு முற்பட்ட சந்ததியோடு யெகோவா எவ்விதமாக செயல்பட்டார்? (பி) சோதோம் கொமோரா மக்களுக்கு எதிராக நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு முன்பு யெகோவா என்ன செய்தார்?
5 ஜலப்பிரளயத்துக்கு முன்பு, ‘மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினதைக் கண்டபோது யெகோவா இருதயத்தில் விசனப்பட்டார்.’ (ஆதியாகமம் 6:5, 6) ஜலப்பிரளயத்துக்கு முற்பட்ட சந்ததியில் பெரும்பாலானோர் தங்கள் தெரிவு செய்யும் சுயாதீனத்தை தவறாக பயன்படுத்தியதாலும் தாம் அவர்கள் மீது நியாயத்தீர்ப்பு நிறைவேற்ற வேண்டியிருந்ததாலும் வருந்தியபோது அவர் “மனஸ்தாபப்பட்டார்.” என்றபோதிலும், அநேக வருடங்களாக, நோவாவை “நீதியை பிரசங்கி”ப்பவனாக பயன்படுத்தி, அவர்களுக்குப் போதிய அளவு எச்சரிப்பைக் கொடுத்தார். அதன் பின்பு, ‘அவபக்தி நிறைந்த உலகத்தை தண்டிப்பதிலிருந்து தயங்குவதற்கு’ அவருக்கு எந்தக் காரணமுமிருக்கவில்லை.—2 பேதுரு 2:5.
6 அதேவிதமாகவே, யெகோவா சோதோம் கொமோராவின் சீர்கெட்ட மக்களுக்கு எதிராக சட்டப்பூர்வமான ஒரு வழக்கைக் கையாள கடமைப்பட்டிருந்தார். ஆனால் அவர் எவ்விதமாக நடவடிக்கை எடுத்தார் என்பதை கவனியுங்கள். நீதிமானாகிய லோத்துவின் ஜெபங்களின் மூலமாக இந்த மக்களின் அதிர்ச்சியூட்டும் நடத்தையைப் பற்றிய “கூக்குரலை” கேட்டார். (ஆதியாகமம் 18:20; 2 பேதுரு 2:7, 8) ஆனால் செயல்படுவதற்கு முன்பு, அவர் உண்மைகளை உறுதிசெய்துகொள்ள தம்முடைய தூதர்கள் மூலமாக ‘இறங்கி வந்தார்.’ (ஆதியாகமம் 18:21, 22; 19:1) அவர் அநீதியாய் நடந்துகொள்ள மாட்டார் என்பதை ஆபிரகாமுக்கு மீண்டும் உறுதிசெய்வதற்கும்கூட நேரத்தை எடுத்துக்கொண்டார்.—ஆதியாகமம் 18:23-32.
7. நியாயம் விசாரிப்பதில் யெகோவாவின் முன்மாதிரிகளிலிருந்து நீதி விசாரணைக் குழுக்களில் சேவிக்கும் மூப்பர்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
7 இந்த முன்மாதிரிகளிலிருந்து மூப்பர்கள் இன்று எதைக் கற்றுக்கொள்ளலாம்? ஆதாம் ஏவாள் விஷயத்தில், குற்றமுள்ளவர்களுக்கு உறவினராக இருந்தபோதிலும் இந்த விஷயத்தில் குற்றமற்றவர்களாக இருந்தவர்களுக்கு யெகோவா அன்பையும் கரிசனையையும் காண்பித்தார். அவர் ஆதாம் ஏவாளின் சந்ததிக்கு இரக்கத்தைக் காண்பித்தார். காயீனுடைய விஷயத்தில், காயீன் என்ன ஆபத்தில் இருந்தான் என்பதை முன்உணர்ந்து யெகோவா அவனோடு தயவாக நியாயங்காட்டி பேசி பாவத்தை தடுக்க முயற்சி செய்தார். அவனைத் துரத்திவிட்ட பின்னரும்கூட அவனிடம் கரிசனையாக இருந்தார். மேலுமாக, அதிக பொறுமையான சகிப்புத்தன்மையைக் காண்பித்த பின்னர்தானே யெகோவா ஜலப்பிரளயத்துக்கு முற்பட்ட சந்ததி மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினார். பிடிவாதமான பொல்லாப்பை எதிர்ப்படுகையில் அது யெகோவாவின் “இருதயத்துக்கு விசனமாயிருந்தது.” மனிதர் தம்முடைய நீதியான ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ததற்காகவும் அவர்களுக்கு பாதகமான தீர்ப்பை கொடுக்க வேண்டிய கடமை தமக்கு இருந்ததாலும் அவர் மனஸ்தாபப்பட்டார். (ஆதியாகமம் 6:6; எசேக்கியேல் 18:31; 2 பேதுரு 3:9 ஒப்பிடவும்.) சோதோம் கொமோராவின் விஷயத்தில், யெகோவா உண்மைகளை உறுதிசெய்துகொண்ட பின்னர் மாத்திரமே செயல்பட்டார். இன்று சட்டம் சார்ந்த வழக்குகளைக் கையாள வேண்டியிருப்பவர்களுக்கு என்னே சிறந்த முன்மாதிரிகள்!
முற்பிதாக்களின் காலங்களில் மனித நியாயாதிபதிகள்
8. முற்பிதாக்களின் காலங்களில் யெகோவாவின் என்ன அடிப்படை சட்டங்கள் அறியப்பட்டிருந்தன?
8 எழுத்துருவில் சட்டத்தொகுப்பு எதுவும் இல்லாதபோதிலும், குடும்பத் தலைவரின் ஆட்சியைக் கொண்டிருந்த சமுதாயம் யெகோவாவின் அடிப்படை சட்டங்களை அறிந்ததாகவே இருந்தது, அவருடைய ஊழியர்கள் அவைகளைக் கைக்கொள்ள கடமைப்பட்டிருந்தார்கள். (ஆதியாகமம் 26:5 ஒப்பிடவும்.) ஏதேனில் நடந்த நிகழ்ச்சி, யெகோவாவின் அரசுரிமைக்குக் கீழ்ப்படிந்து கீழ்ப்பட்டிருப்பதனுடைய அவசியத்தை காண்பித்திருந்தது. காயீனுடைய விஷயம், யெகோவா கொலையை அங்கீகரிப்பதில்லை என்பதைக் காண்பித்தது. ஜலப்பிரளயத்துக்குப் பின் உடனடியாக, கடவுள் உயிரின் புனிதத்தன்மை, கொலை, மரண தண்டனை மற்றும் இரத்தம் புசிப்பது சம்பந்தமாக சட்டங்களை மனிதவர்க்கத்துக்கு கொடுத்தார். (ஆதியாகமம் 9:3-6) காதேசுவுக்கு அருகே ஆபிரகாம், சாராள் மற்றும் கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆகியோரை உட்படுத்திய சம்பவத்தின் போது யெகோவா வேசித்தனத்தை மிகப் பலமாக கண்டித்தார்.—ஆதியாகமம் 20:1-7.
9, 10. குடும்பத் தலைவரின் ஆட்சி இருந்த சமுதாயத்தில் நீதித்துறை அமைப்பு இருந்தது என்பதை என்ன முன்மாதிரிகள் காண்பிக்கின்றன?
9 அந்நாட்களில் குடும்பத் தலைவர்கள் நியாயாதிபதிகளாக சேவித்து சட்ட சம்பந்தமான பிரச்னைகளைக் கையாண்டார்கள். யெகோவா ஆபிரகாமைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்.” (ஆதியாகமம் 18:19) ஆபிரகாமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துவினுடைய மந்தைமேய்ப்பருக்கும் உண்டான வாக்குவாதத்தைத் தீர்த்து வைப்பதில் ஆபிரகாம் சுயநலமற்றத்தன்மையையும் பகுத்துணர்வையும் காண்பித்தார். (ஆதியாகமம் 13:7-11) குடும்பத் தலைவனாகவும் நியாயாதிபதியாகவும் செயல்படுகிறவனாய், யூதா தன்னுடைய மருமகளாகிய தாமாரை ஒரு வேசி என்று நம்பி அவள் கல்லெறிந்து கொல்லப்படவும் சுட்டெரிக்கப்படவும் தீர்ப்பளித்தான். (ஆதியாகமம் 38:11, 24; யோசுவா 7:25 ஒப்பிடவும்.) என்றபோதிலும் எல்லா உண்மைகளையும் அவன் அறிந்துகொண்டபோது, தன்னிலும் அவள் நீதியுள்ளவளென்று அவன் அறிவித்தான். (ஆதியாகமம் 38:25, 26) நீதி விசாரணை சம்பந்தமான தீர்மானத்தைச் செய்வதற்கு முன்பாக எல்லா உண்மைகளையும் அறிந்துகொள்வது எத்தனை முக்கியமாக இருக்கிறது!
10 யோபு புத்தகம் நீதி விசாரணை சம்பந்தப்பட்ட ஒரு முறைமையைக் குறிப்பிட்டு பட்சபாதமில்லா நியாயத்தீர்ப்பு விரும்பத்தக்கதாய் இருப்பதைக் காண்பிக்கிறது. (யோபு 13:8, 10; 31:11; 32:21) யோபுதானேயும் பட்டண வாசலில் உட்கார்ந்து நீதி வழங்கி விதவையையும் திக்கற்ற பிள்ளைகளையும் இரட்சித்த மதிப்புக்குரிய ஒரு நியாயாதிபதியாக இருந்த சமயத்தைப் பற்றி நினைவுபடுத்திப் பார்க்கிறார். (யோபு 29:7-16) இவ்விதமாக, குடும்பத் தலைவரின் ஆட்சியைக் கொண்டிருந்த சமுதாயத்தினுள், இஸ்ரவேல் தேசத்தாரின் புறப்பாட்டுக்கும் கடவுள் கொடுத்த அரசமைப்பு சட்டத்துக்கு முன்பே ஆபிரகாமின் சந்ததியாரின் மத்தியில் “மூப்பர்கள்,” நியாயாதிபதிகளாக செயல்பட்டார்கள் என்பதற்கு அத்தாட்சி இருக்கிறது. (யாத்திராகமம் 3:16, 18) உண்மையில், நியாயப்பிரமாண உடன்படிக்கையின் நிபந்தனைகள் மோசேயினால் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்த இஸ்ரவேலின் “மூப்பர்களிடம்,” சொல்லப்பட்டன.—யாத்திராகமம் 19:3-7.
இஸ்ரவேலின் நீதித்துறை அமைப்பு
11, 12. இரண்டு பைபிள் கல்விமான்களின் பிரகாரம், இஸ்ரவேலரின் நீதித்துறை அமைப்பை எது மற்ற தேசங்களினுடையதிலிருந்து வித்தியாசப்படுத்திக் காண்பித்தது?
11 இஸ்ரவேலில் நீதி வழங்குதல் சுற்றியிருந்த தேசங்களில் பின்பற்றப்பட்ட சட்ட சம்பந்தமான நடைமுறையிலிருந்து வெகுவாக வித்தியாசப்பட்டதாயிருந்தது. குடிமுறை சட்டத்துக்கும் குற்றத் தொடர்பான சட்டத்துக்கும் இடையே வித்தியாசம் இருக்கவில்லை. இரண்டுமே ஒழுக்க மற்றும் மதசம்பந்தமான சட்டங்களோடு பின்னி பிணைந்திருந்தன. அயலானுக்கு விரோதமான ஒரு குற்றம் யெகோவாவுக்கு விரோதமான ஒரு குற்றமாக இருந்தது. மக்களும் பைபிளில் விசுவாசமும் என்ற தன்னுடைய புத்தகத்தில் ஆசிரியர் ஆண்ரி ஷுராக்கி எழுதுகிறார்: “எபிரெயர்களுடைய சட்டம் பற்றிய மரபு, மீறுதல்களின் சொற்பொருள் விளக்கத்திலும் அபராதங்களிலும் மட்டுமல்லாமல் சட்டங்களின் உண்மையான கருத்திலேயே அதனைச் சுற்றியிருந்த தேசங்களினுடையதிலிருந்து வித்தியாசப்பட்டவையாக இருந்தன. . . . தோரா [நியாயப்பிரமாணம்] அன்றாட வாழ்க்கையிலிருந்து வித்தியாசப்பட்டதாக இல்லை; ஆசீர்வாதத்தையோ சாபத்தையோ வழங்குவதன் மூலம் அன்றாட வாழ்க்கையின் தன்மையையும் உட்பொருளையும் அது கட்டுப்படுத்துகிறது. . . . இஸ்ரவேலில் . . . நகரின் சட்டம் சார்ந்த நடவடிக்கைகளில் தெளிவான ஒரு வித்தியாசத்தை காண்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகும். அவை ஜீவனுள்ள தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதை முழுமையாக கருத்தில்கொண்டு வழிநடத்தப்பட்ட வாழ்க்கையில் மறைந்திருந்தன.”
12 இந்த ஈடிணையற்ற நிலையானது, இஸ்ரவேலின் நீதி நிர்வாகத்தை அதே காலத்திலிருந்த தேசங்களில் இருந்ததைக் காட்டிலும் மிகவும் உயர்மட்டத்தில் வைத்தது. பைபிள் கல்விமான் ரோலண்ட் டி வாக்ஸ் எழுதுகிறார்: “இஸ்ரவேலரின் சட்டம், முழுமையாக அதனுடைய உருவத்திலும் பொருளடக்கத்திலும் ஒத்திருந்தபோதிலும், கிழக்கத்திய ‘உடன்படிக்கை’யின் கூறுகளிலிருந்தும் அவர்களுடைய ‘சட்ட தொகுப்பு’ விதிகளிலிருந்தும் அடிப்படையில் வேறுபட்டதாய் இருக்கிறது. அது மதசம்பந்தமான ஒரு சட்டமாகும். . . . எந்தக் கிழக்கத்திய சட்டத்தொகுப்பும் கடவுளை தன் ஆசிரியராகக் கொண்டு முழுமையாக அவரிடமிருந்தே தோன்றியிருந்த இஸ்ரவேலின் சட்டத்தோடு ஒப்பிடப்பட முடியாது. அது நன்னெறி மற்றும் சடங்குமுறை விதிகளைக் கொண்டிருந்து, அடிக்கடி இவைகளைச் சேர்த்து ஒன்றாக்குமானால் அதற்கு காரணம் அது தெய்வீக உடன்படிக்கையின் முழு செயல் எல்லையையும் உள்ளடக்குவதாய் உள்ளது. மேலும் இந்த உடன்படிக்கை மனிதர்கள் ஒருவரோடொருவர் கொள்ளும் உறவுகளையும் கடவுளோடு அவர்களுடைய உறவுகளையும் கட்டுப்படுத்துவதாய் இருந்தது.” மோசே இவ்விதமாகச் சொன்னது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது?”—உபாகமம் 4:8.
இஸ்ரவேலில் நியாயாதிபதிகள்
13. என்ன விதங்களில் மோசே இன்றுள்ள மூப்பர்களுக்கு சிறந்த ஒரு முன்மாதிரியாக இருந்தார்?
13 இப்படிப்பட்ட உயர்த்தப்பட்ட நீதித்துறை அமைப்பு இருந்த காரணத்தால், நியாயாதிபதியாக செயல்பட எத்தகைய ஒரு மனிதன் தேவைப்பட்டான்? இஸ்ரவேலில் நியமிக்கப்பட்ட முதல் நியாயாதிபதியைக் குறித்து பைபிள் இவ்விதமாகச் சொல்கிறது: “மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.” (எண்ணாகமம் 12:3) அவர் தன்னைக் குறித்து அளவுக்கு அதிகமாக நம்பிக்கையுள்ளவராயிருக்கவில்லை. (யாத்திராகமம் 4:10) ஜனங்களை விசாரிக்க வேண்டியிருந்தபோதிலும், சில சமயங்களில் யெகோவாவுக்கு முன்பாக அவர்களுடைய வழக்குரைஞராக இருந்து அவர்களை மன்னிக்கும்படியாக அவரிடம் மன்றாடி அவர்களுக்காகத் தன்னையே தியாகம் செய்யவும்கூட அவர் முன்வந்தார். (யாத்திராகமம் 32:11, 30-32) அவர் கவிதை நடையில் சொன்னார்: “மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.” (உபாகமம் 32:2) தன் சொந்த ஞானத்தின் மேல் சார்ந்து ஜனங்களை நியாயம் விசாரிப்பதற்கு பதிலாக, அவர் அறிவித்தார்: “அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன்.” (யாத்திராகமம் 18:16) சந்தேகம் இருந்தபோது, அவர் வழக்கை யெகோவாவிடம் சமர்ப்பித்தார். (எண்ணாகமம் 9:6-8; 15:32-36; 27:1-11) இன்று ‘தேவனுடைய மந்தையை மேய்த்து’ நீதிவிசாரணை சம்பந்தமான தீர்மானங்களைச் செய்யும் மூப்பர்களுக்கு மோசே ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தார். (அப்போஸ்தலர் 20:28) அவர்களுடைய சகோதரர்களோடு அவர்களுடைய உறவு அதேவிதமாக “மழையானது இளம்பயிரின்மேல் பொழிவது போல” இருக்கட்டும்.
14. இஸ்ரவேலில் நியாயாதிபதிகளாக மோசேயினால் நியமிக்கப்பட்ட மனிதர்களின் ஆவிக்குரிய தகுதிகள் என்னவாயிருந்தன?
14 காலப்போக்கில் மோசேயினால் ஜனங்களுக்கு நீதி விசாரணை வழக்குகளை தானாகவே கையாள முடியாமற்போனது. (யாத்திராகமம் 18:13, 18) உதவிக்கு ஆள் சேர்த்துக்கொள்ளுமாறு அவருடைய மாமன் சொன்ன யோசனையை அவர் ஏற்றுக்கொண்டார். மறுபடியுமாக என்ன விதமான மனிதர்கள் தெரிந்துகொள்ளப்பட்டார்கள்? நாம் வாசிக்கிறோம்: “ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, . . . மோசே இஸ்ரவேலர் எல்லாரிலும் திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஜனங்கள் மேல் தலைவராக்கினான். அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.”—யாத்திராகமம் 18:21-26.
15. இஸ்ரவேலில் நியாயாதிபதிகளாக சேவித்தவர்களின் தகுதிகள் என்னவாக இருந்தன?
15 நியாயாதிபதிகளாக செயல்பட மனிதர்களைத் தெரிந்தெடுப்பதற்கு வயது ஒரே அளவுகோலாக இல்லை என்பதை காணமுடிகிறது. மோசே சொன்னார்: “நான் உங்களுக்கு அதிபதிகளை ஏற்படுத்தும்பொருட்டு, உங்கள் கோத்திரங்களில் ஞானமும் விவேகமும் அறிவும் [அனுபவமும், NW] உள்ளவர்கள் என்று பேர்பெற்ற மனிதரைத் தெரிந்துகொள்ளுங்கள்.” (உபாகமம் 1:13) எலிகூ பல வருடங்களுக்கு முன்பாகச் சொல்லியிருந்த காரியத்தை மோசே நன்றாக அறிந்திருந்தார்: “பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.” (யோபு 32:9) நிச்சயமாகவே நியமிக்கப்படுகிறவர்கள் “அனுபவமுள்ளவர்களாக” இருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் திறமையுள்ளவர்களும், தேவனுக்குப் பயந்தவர்களும், உண்மையுள்ளவர்களும், பொருளாசையை வெறுக்கிறவர்களும், ஞானமும் விவேகமுமுள்ளவர்களுமாயும் இருக்க வேண்டும். ஆகவே, யோசுவா 23:2 மற்றும் 24:1-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் “தலைவர்கள்” மற்றும் “நியாயாதிபதிகள்” அதே வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் “மூப்பரி”லிருந்து வேறுபட்டவர்களாக இல்லை, ஆனால் அவர்கள் மத்தியிலிருந்து தெரிந்துகொள்ளப்பட்டவர்களாயிருந்தார்கள் என்பது தெளிவாக இருக்கிறது.—வேதாகமத்தின் பேரில் உட்பார்வை, புத்தகம் 2, ஆங்கிலம், பக்கம் 549 பார்க்கவும்.
நீதி வழங்குதல்
16. புதிதாக நியமிக்கப்பட்ட நியாயாதிபதிகளுக்கு மோசே கொடுத்த போதனைகளைப் பற்றியதில் நாம் இன்று எதை கவனிக்க வேண்டும்?
16 நியமிக்கப்பட்ட இந்த நியாயாதிபதிகளுக்கு கொடுக்கப்பட்ட போதனைகளைக் குறித்து மோசே இவ்வாறு சொன்னார்: “அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரரின் வியாச்சியங்களைக் கேட்டு, இருபட்சத்தாராகிய உங்கள் சகோதரருக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச் செய்யுங்கள். நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பதுபோலச் சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படீர்களாக; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடத்தில் [மோசே] கொண்டு வாருங்கள்; நான் அதைக் கேட்பேன்.”—உபாகமம் 1:16, 17.
17. நியாயாதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் யார், யோசபாத் அரசன் என்ன எச்சரிக்கையை அவர்களுக்குக் கொடுத்தார்?
17 நிச்சயமாகவே, ஒரு வழக்கு மோசேயினிடமாக அவருடைய வாழ்நாட்காலத்தில் மாத்திரமே கொண்டுவரப்பட முடியும். ஆகவே கடினமான வழக்குகள் ஆசாரியர்களிடமும், லேவியர்களிடமும் விசேஷமாக நியமிக்கப்பட்ட நியாயாதிபதிகளிடமும் கொண்டுவரப்படுவதற்கு மேலுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. (உபாகமம் 17:8-12; 1 நாளாகமம் 23:1-4; 2 நாளாகமம் 19:5, 8) யூதேயா நகரங்களில் அவர் நியமித்திருந்த நியாயாதிபதிகளிடமாக யோசபாத் அரசன் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் செய்கிற காரியத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; . . . நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து செய்ய வேண்டியது என்னவென்றால், . . . வழக்குச் சங்கதிகளும் தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக தவறு செய்யாதபடிக்கும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் பழியை வருவித்துக்கொள்ளாதபடிக்கு இப்படியே செய்யக்கடவீர்கள்.”—2 நாளாகமம் 19:6-10.
18. (எ) இஸ்ரவேலில் நியாயாதிபதிகள் பின்பற்ற வேண்டியிருந்த சில நியமங்கள் யாவை? (பி) நியாயாதிபதிகள் எதை மனதில் கொண்டிருக்க வேண்டும், இதை அவர்கள் மறந்துவிடுவதால் வரும் விளைவுகளை என்ன வேதவசனங்கள் காண்பிக்கின்றன?
18 இஸ்ரவேலிலே நியாயாதிபதிகள் பின்பற்ற வேண்டிய நியமங்களில் பின்வருபவை இருந்தன: பணக்காரனுக்கும் ஏழைக்கும் சம நீதி (யாத்திராகமம் 23:3, 6; லேவியராகமம் 19:15); கண்டிப்பான பட்சபாதமின்மை (உபாகமம் 1:17); பரிதானம் வாங்குதல் கூடாது. (உபாகமம் 16:18-20) நியாயாதிபதிகள் அவர்கள் நியாயம் விசாரிப்பவர்கள் யெகோவாவின் ஆடுகள் என்பதை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும். (சங்கீதம் 100:3) உண்மையில், யெகோவா மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலை நிராகரித்ததற்கு ஒரு காரணம், அவர்களுடைய ஆசாரியர்களும் மேய்ப்பர்களும் நீதியாக நியாயம் விசாரிக்கத் தவறி, மக்களை கொடூரமாக நடத்தியதே ஆகும்.—எரேமியா 22:3, 5, 25; 23:1, 2; எசேக்கியேல் 34:1-4; மல்கியா 2:8, 9.
19. பொது சகாப்தத்துக்கு முன் யெகோவாவின் நீதியின் தராதரங்களைப் பற்றிய இந்த ஆய்வு நமக்கு என்ன மதிப்புள்ளதாக இருக்கிறது, பின்வரும் கட்டுரையில் என்ன சிந்திக்கப்படும்?
19 யெகோவா மாறுவதில்லை. (மல்கியா 3:6) இஸ்ரவேலில் நியாயம் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டிய முறையைப் பற்றிய இந்தச் சுருக்கமான விமர்சனமும், நீதி மறுக்கப்படுவதை யெகோவா எவ்விதமாக கருதுகிறார் என்பதும் இன்று நியாயவிசாரணை சம்பந்தப்பட்ட தீர்மானங்களை எடுக்க பொறுப்புள்ளவர்களாயிருக்கும் மூப்பர்களை நின்று சிந்திக்கும்படி செய்ய வேண்டும். நியாயாதிபதியாக யெகோவாவின் முன்மாதிரியும், அவர் இஸ்ரவேலில் நிறுவின நீதித்துறை அமைப்பும் கிறிஸ்தவ சபைக்குள்ளே நீதி வழங்குவதன் சம்பந்தமாக மாதிரியாக அமைந்த நியமங்களை நிலைநாட்டின. இதை நாம் பின்வரும் கட்டுரையில் காண்போம்.
விமர்சன கேள்விகள்
◻ யெகோவா நியாயம் விசாரிக்கும் முறை எவ்விதமாக சுருக்கமாகச் சொல்லப்படலாம்?
◻ யெகோவா காயீனோடும் ஜலப்பிரளயத்துக்கு முந்தின சந்ததியோடும் கொண்டிருந்த செயல்தொடர்புகளில் அவருடைய வழி எவ்விதமாக விளக்கப்பட்டது?
◻ முற்பிதாக்களின் காலங்களில் யார் நியாயாதிபதிகளாக செயல்பட்டனர், எவ்வாறு?
◻ இஸ்ரவேலில் இருந்த நீதித்துறை அமைப்பை மற்ற தேசங்களினுடையதிலிருந்து எது வித்தியாசப்படுத்திக் காட்டியது?
◻ இஸ்ரவேலில் என்ன விதமான மனிதர்கள் நியாயாதிபதிகளாக நியமிக்கப்பட்டார்கள், அவர்கள் என்ன நியமங்களைப் பின்பற்றியிருக்க வேண்டும்?
[பக்கம் 10-ன் படம்]
முற்பிதாக்களின் காலங்களிலும் இஸ்ரவேலிலும், நியமிக்கப்பட்ட மூப்பர்கள் பட்டணவாசலில் நீதிவழங்கினார்கள்