வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஒரு மனிதன் ஒரு கன்னிகையை தந்திரமாக கற்பிழக்கச் செய்யும் விதம் “மிகவும் ஆச்சரியமான”தாக இருப்பதாக நீதிமொழிகள் 30:19-ன் எழுத்தாளர் உண்மையிலேயே கருதினாரா?
இது புரிந்துகொள்வதற்கு எளிதாயிராத வசனமாக ஒப்புக்கொள்ளப்படும் நீதிமொழிகள் 30:19-ன் சாத்தியமான ஓர் அர்த்தமாகும்.
இந்த வசனத்தின் கருத்தைக் கண்டுபிடிக்க முற்படுகையில், சந்தர்ப்பச் சூழலை நாம் அசட்டை செய்துவிடக்கூடாது. இந்தப் பகுதிக்குச் சற்றே முன்னால், ஏதோ ஒரு வகையில் திருப்தியடையாத நான்கு காரியங்களை ஏவப்பட்ட எழுத்தாளர் வரிசைப்படுத்தியிருக்கிறார். (நீதிமொழிகள் 30:15, 16) பின்னர் அவர் இந்தப் பட்டியலைத் தருகிறார்: “எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் நான்குமுண்டு. அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின் மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே.”—நீதிமொழிகள் 30:18, 19.
இந்த நான்கு காரியங்களில் “ஆச்சரியமானதாக” எது இருக்கக்கூடும்?
“ஆச்சரியமானது” என்பது உடன்பாடானதை அல்லது நன்மையானதைக் குறிப்பிட வேண்டும் என்று ஒருவேளை நினைத்து, ஒரு சில கல்விமான்கள், நான்கு காரியங்களில் ஒவ்வொன்றும் கடவுளுடைய படைப்பின் ஞானத்தை வெளிப்படுத்துகிறது என்பதாக விளக்கமளித்திருக்கிறார்கள்: மிகப் பெரிய பறவை எவ்விதமாக பறக்கக்கூடும், கால்கள் இல்லாத பாம்பு எவ்விதமாக ஒரு கன்மலையின் மேல் செல்ல முடியும், பாரமான ஒரு கப்பல் எவ்விதமாக கொந்தளிப்பான கடலில் மிதந்து கொண்டிருக்கக்கூடும், திடகாத்திரமுள்ள ஓர் இளைஞன் ஓர் அழகான கன்னிகையின்மீது தீராத காதல்கொண்டு, திருமணம் புரிந்து, அதன் பின்னர் அவர்கள் ஓர் அதிசயமான மனித குழந்தையைப் பிறப்பிக்கிறார்கள் என்பவற்றைப் பற்றிய வியப்பு. பேராசிரியர் ஒருவர் நான்கு காரியங்களில் மற்றொரு ஒற்றுமையைக் கண்டார்—ஒவ்வொன்றும் எப்போதும் புதிதாக இருக்கும் மார்க்கத்தில் பயணம் செய்கின்றன—பாதையில்லாத இடங்களில் கழுகு, பாம்பு, மற்றும் கப்பல் செல்வதும், ஒரு தம்பதியின் வளர்கின்ற காதலின் புதுமையும்.
என்றபோதிலும், அவை பொதுவில் கொண்டிருப்பவை ஏதோ உடன்பாடானதாக இருப்பதுபோல், நான்கு காரியங்களும் நல்ல ஒரு கருத்தில் “ஆச்சரியமானதாக” இருக்கவேண்டியதில்லை. நீதிமொழிகள் 6:16-19, “யெகோவா வெறுக்கும் காரியங்களை” வரிசைப்படுத்துகிறது. மேலும் கவனித்தவண்ணமாகவே, விவாதத்திலிருக்கும் வசனங்களுக்குச் சற்று முன்பாக, நீதிமொழிகள் 30:15, 16 “போதும்” என்று சொல்லாத காரியங்களை (ஷியோல், பிள்ளையில்லா கர்ப்பம், வறண்டுபோன நிலம், கட்டுக்கடங்காத அக்கினி) வரிசைப்படுத்துகிறது. நிச்சயமாகவே இவை ஆச்சரியமுண்டாக்கும் நல்ல காரியங்கள் அல்ல.
நீதிமொழிகள் 30:18-ல் “ஆச்சரியமான” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை, “பிரித்து வைக்க, மேம்படுத்திக் காட்ட; மேன்மை வாய்ந்ததாக்க, தனிச்சிறப்புடைய, வியக்கத்தக்க” என்று பொருள்படுகிறது. ஒரு காரியம் நல்லதாக இல்லாமலே மேன்மை வாய்ந்ததாக, தனிச்சிறப்புடையதாக அல்லது வியக்கத்தக்கதாக இருக்கக்கூடும். தானியேல் 8:23, 24 “அதிசயமான விதமாக” அழிவுண்டாக்கி, பரிசுத்தவான்கள் உட்பட “பலவான்களையும் அழிக்கும்,” ஒரு மூர்க்கமான ராஜாவைப் பற்றி முன்னுரைத்தது.—உபாகமம் 17:8; 28:59; சகரியா 8:6 ஒப்பிடவும்.
நீதிமொழிகள் 30:18, 19-ஐ தொடர்ந்துவரும் வசனம், எழுத்தாளர் எதைப் புரிந்துகொள்வதைக் கடினமாகக் கண்டார் என்பதைப்பற்றிய ஒரு குறிப்பை அளிக்கக்கூடும். வசனம் 20, “தின்று, தன் வாயைத் துடைத்து: நான் ஒரு பாவமும் செய்யவில்லை,” என்று சொல்லும் ஒரு விபசாரஸ்திரீயைப் பற்றி குறிப்பிடுகிறது. ஒருவேளை அவள் இரகசியமாகவும் தந்திரமாகவும் பாவம் செய்துவிட்டிருக்கலாம், ஆனால் அவளின் குற்றத்திற்கு எந்தத் தடயமும் இல்லாதபடியால், அவள் தான் குற்றமற்றவள் என்று சொல்லிக்கொள்ளலாம்.
இதற்கு முன்புள்ள பட்டியலோடு ஓர் ஒற்றுமை இருக்கிறது. ஒரு கழுகு ஆகாயத்தினூடே மிதந்து செல்கிறது, ஒரு பாம்பு கன்மலையைக் கடக்கிறது, ஒரு கப்பல் அலைகளினூடாக குறுக்கே செல்கிறது—எதுவுமே ஒரு தடம் விட்டுச்செல்வதில்லை. இந்த மூன்றில் எதனுடைய பாதையையும் தேடிக்கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். மூன்றுக்கும் பொதுவாக இருப்பது இது என்றால், “ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழி”யாக இருக்கும் நான்காவதைப் பற்றியதென்ன?
இதுவும்கூட ஒருவேளை தேடிக் கண்டுபிடிக்கப்பட முடியாததாக இருக்கக்கூடும். ஒரு வாலிபன், சூழ்ச்சி, நயம் மற்றும் தந்திரமான வழிகளைப் பயன்படுத்தி, ஒன்றுமறியாத ஒரு கன்னிகையின் பாசத்தை திருட்டுத்தனமாக அடைந்துவிடக்கூடும். அனுபவம் இல்லாதிருப்பதன் காரணமாக, அவள் அவனுடைய சூதான நடத்தையை அறியமாட்டாள். கற்பிழக்கும்படி செய்யப்பட்ட பின்பும்கூட, அவன் அவளை எவ்வாறு அடைந்தான் என்பதை அவளால் விளக்க முடியாது; பார்வையாளர்களும்கூட விளக்கமளிப்பதைக் கடினமாகக் காண்பார்கள். இருந்தபோதிலும், அநேக இளம் பெண்கள், தந்திரமாக கற்பழிப்பவர்களிடம் தங்கள் கற்பை பறிகொடுத்துவிட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட தந்திரமுள்ள மனிதர்களின் பாதையைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. என்றபோதிலும் பறந்துகொண்டிருக்கும் கழுகு, ஊர்ந்துசெல்லும் பாம்பு அல்லது சமுத்திரத்திலுள்ள ஒரு கப்பலுக்கு இருப்பதைப் போன்றே அவர்களுக்கும் இலக்கு உண்டு. கற்பழிப்பவர்களின் இலக்கு பாலுறவுக்காகப் பிறரைப் பயன்படுத்திக்கொள்வதாகும்.
இந்த வெளிச்சத்தில் பார்க்கையில், நீதிமொழிகள் 30:18, 19-லுள்ள குறிப்பு படைப்பிலுள்ள அறிவியல் அல்லது இயந்திரத்தன்மையுள்ள காரியங்களைப் பற்றியதல்ல. மாறாக, நீதிமொழிகள் 7:1-27 இணங்கவைக்கும் ஒரு வேசியின் அபாயங்களைத் தவிர்ப்பது பற்றி எச்சரிப்பது போலவே, இந்தப் பகுதி ஒழுக்க சம்பந்தமாக ஓர் எச்சரிப்பை நமக்குத் தருகிறது. நீதிமொழிகள் 30:18, 19-லுள்ள எச்சரிப்புக்குக் கிறிஸ்தவ சகோதரிகள் கவனமாக செவிகொடுப்பதற்கு ஒரு வழி, பைபிளைக் கற்றுக்கொள்வதில் அக்கறை இருப்பதாக வஞ்சகமாக சொல்லும் ஆண்களின் சம்பந்தமாக இருக்கும். சிநேகப்பான்மையுள்ள ஒரு மனிதன், உடன் வேலைசெய்பவராக இருந்தாலும்கூட, இப்படிப்பட்ட அக்கறை காண்பிப்பதாகத் தெரிந்தால், ஒரு சகோதரி அவரை சபையிலுள்ள ஒரு சகோதரனிடம் வழிநடத்த வேண்டும். அந்தச் சகோதரன், “கன்னிகையை நாடிய மனுஷனுடைய” ஆபத்துக்கள் இல்லாமல் ஏதாவது உண்மையான அக்கறையை திருப்திசெய்யக்கூடும்.