உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w92 11/1 பக். 8-12
  • ‘உன் முன்னேற்றத்தை விளங்கச்செய்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘உன் முன்னேற்றத்தை விளங்கச்செய்’
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சுய-பரிசோதனைக்கான காலம்
  • “குழந்தைக்கேற்ற பண்புகள்”
  • முன்னேற்றம் எவ்வாறு வெளிப்படையாக ஆகிறது
  • நீங்கள் “முதிர்ச்சி வாய்ந்த” கிறிஸ்தவரா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • உங்கள் முன்னேற்றத்தை வெளிக்காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • முன்னேற விரும்புங்கள்—வளர்ச்சி அடையுங்கள்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • உங்கள் முன்னேற்றம் வெளிப்படுவதாக
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
w92 11/1 பக். 8-12

‘உன் முன்னேற்றத்தை விளங்கச்செய்’

“நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.” —1 கொரிந்தியர் 13:11.

1. சிருஷ்டிப்பின் அதிசயத்துக்கு எவ்வாறு வளர்ச்சி ஒரு சான்றாக இருக்கிறது?

பூதக்கண்ணாடியின் கீழ் மட்டுமே காணக்கூடிய அளவுக்குச் சிறியதாக இருக்கும் ஒரு முட்டையிலிருந்து, ஒரு திமிங்கலம் 30 மீட்டருக்கும் மேல் நீளமாகவும் 80 டன்களுக்கு மேல் எடையுள்ளதாகவும் வளரக்கூடும். அதே போன்று, மிகச்சிறிய விதைகள் ஒன்றிலிருந்து இராட்சத செக்கோயா மரம் 90 மீட்டருக்கும் மேல் வளரக்கூடும். வளர்ச்சி உண்மையிலேயே வாழ்க்கையின் அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் அதை சொன்னபடி, நாம் நடலாம், நீர்ப்பாய்ச்சலாம், ஆனால் “விளையச்செய்கிறவர் தேவன்.”—1 கொரிந்தியர் 3:7.

2. என்ன வகையான வளர்ச்சி பைபிளில் முன்னறிவிக்கப்பட்டிருந்தது?

2 ஆனால் அதே போன்று வியப்படையச் செய்யும் மற்றொரு வகையான வளர்ச்சியும் இருக்கிறது. அது ஏசாயா தீர்க்கதரிசியால் முன்னறிவிக்கப்பட்டது: “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்ற காலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.” (ஏசாயா 60:22) இத்தீர்க்கதரிசனம் கடவுளுடைய ஜனங்களின் வளர்ச்சியைக் குறித்தது. இது நம்முடைய நாளில் ஒரு பெரும் நிறைவேற்றமடைந்து வருகிறது.

3. யெகோவா தம்முடைய ஜனங்களின் வேலையை விரைவுபடுத்துகிறார் என்பதை 1991 ஊழிய-ஆண்டு அறிக்கை எவ்வாறு காண்பித்தது?

3 ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 42,78,820 என்ற புதிய உச்சநிலையை அடைந்தது என்றும், அந்த வருடத்தின் போது 3,00,945 நபர்கள் முழுக்காட்டப்பட்டனர் என்றும் யெகோவாவின் சாட்சிகளின் உலகளாவிய வேலையைப் பற்றிய 1991-ஆம் ஊழிய-ஆண்டு அறிக்கைக் காண்பிக்கிறது. இத்தனை அநேக புதியவர்கள் உள்ளே வந்து கொண்டிருப்பதால், 3,191 புதிய சபைகளும் அதோடு அதற்குத் தேவையான புதிய வட்டாரங்களும், மாவட்டங்களும் ஸ்தாபிக்கப்பட்டன. அப்படியானால் ஒரு நாளுக்கு எட்டுக்கும் அதிகமான புதிய சபைகள், இரண்டு நாட்களுக்கு ஒரு புதிய வட்டாரம். எப்படிப்பட்ட மகத்தான வளர்ச்சி! யெகோவா காரியங்களை வேகமாக்கிக்கொண்டு வருகிறார், அவருடைய ஜனங்களின் முயற்சிகளின் மீது அவருடைய ஆசீர்வாதம் இருக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது.—சங்கீதம் 127:1.

சுய-பரிசோதனைக்கான காலம்

4. எதிர்காலத்தை நாம் நோக்கியிருக்கையில் என்ன கேள்விகள் சிந்திக்கப்பட வேண்டும்?

4 இவையனைத்தையும் காண்பது இருதயத்தை மகிழ்விப்பதாயிருந்தாலும், இந்த ஆசீர்வாதம் அதோடு சில உத்தரவாதங்களையும் கொண்டுவருகிறது. இப்படிப்பட்ட புதியவர்களின் ஆவிக்குரிய தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கு மனமுவந்து வேலைசெய்யும் முதிர்ச்சி வாய்ந்த நபர்கள் போதுமான அளவில் இருப்பார்களா? எதிர்காலத்தை நோக்கிப் பார்க்கையில் வளர்ச்சியையும் விரிவாக்கத்தையும் கவனித்துக்கொள்வதற்கு தேவையாயிருக்கும் பயனியர்கள், உதவி ஊழியர்கள், மூப்பர்கள், பயணக்கண்காணிகள், அதோடு அந்த வேலையை ஆதரிப்பதற்கு உலகமுழுவதிலுமுள்ள கிளைக் காரியாலயங்கள், பெத்தேல் வீடுகள் ஆகிவற்றுக்குத் தேவைப்படும் வாலண்டியர் வேலையாட்கள் ஆகியோரின் எண்ணிக்கையைப் பற்றி எண்ணிப்பார்ப்பது திகைப்படையச்செய்கிறது. இப்பெரும் எண்ணிக்கையான ஆட்கள் எங்கேயிருந்து வருவர்? அறுப்பு மிகுதியாயிருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் அந்த அறுவடையை அறுப்பதற்கு தேவையான எல்லா வேலையாட்களையும் கவனித்துக்கொள்ளும் நிலையில் இன்று யார் உள்ளனர்?—மத்தேயு 9:37, 38.

5. விரைவான வளர்ச்சி இருப்பதால் என்ன சூழ்நிலைமைகள் சில இடங்களில் நிலவுகின்றன?

5 உதாரணமாக, உலகத்தின் சில பாகங்களில் நூறு ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு சேவை செய்ய ஒரு மூப்பரும், அவரோடுகூட ஒன்று அல்லது இரண்டு உதவி ஊழியர்கள் மட்டுமே கொண்ட சபைகள் இருக்கின்றன என்று அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் ஒரு மூப்பர் இரண்டு சபைகளில் சேவை செய்ய வேண்டியிருக்கிறது. மற்ற இடங்களில் வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துவதற்கு தகுதிவாய்ந்த கிறிஸ்தவ ஊழியர்களுக்கான தேவை அவ்வளவு மிகுதியாயிருப்பதால், தங்களோடு யாராவது ஒருவர் படிப்பதற்கு புதியவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இன்னும் சில இடங்களில், புதிய சபைகள் அவ்வளவு விரைவாக ஏற்படுத்தப்படுவதால் ஒரு ராஜ்ய மன்றத்தை மூன்று, நான்கு அல்லது ஐந்து சபைகளும்கூட பகிர்ந்துகொள்ள வேண்டியதாய் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் உங்களுடைய சொந்த இடத்திலேயே இப்படிப்பட்ட வளர்ச்சியைப் பார்த்திருப்பீர்கள்.

6. நம்முடைய பங்கில் சுய-பரிசோதனை ஏன் காலத்துக்குப் பொருத்தமானதாய் இருக்கிறது?

6 முன்னால் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயம் நமக்கு எதைச் சொல்கிறது? காலங்கள் இப்படியிருப்பதால், தேவைக்கு பிரதிபலிப்பதற்காக நம்முடைய நேரத்தையும் சொத்துக்களையும் சிறந்த விதத்தில் உபயோகிக்கிறோமா என்பதைக் காண நம்முடைய சூழ்நிலைமைகளை நாம் ஆராயவேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது. (எபேசியர் 5:15-17) முதல் நூற்றாண்டு எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்க வேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.” (எபிரெயர் 5:12) இந்த வார்த்தைகள் குறிப்பிடுகிறபடி, தனிப்பட்ட கிறிஸ்தவர்களும்கூட வளரவேண்டிய தேவை இருக்கிறது. கிறிஸ்தவ முதிர்ச்சிக்கு வளருவதற்கு பதிலாக ஒருவர் ஆவிக்குரிய குழந்தைப்பருவத்திலேயே நீடித்திருக்கக்கூடிய உண்மையான அபாயம் இருக்கிறது. இதற்கிசைவாக, பவுல் நம்மை இவ்வாறு ஊக்குவிக்கிறார்: “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்.” (2 கொரிந்தியர் 13:5) நீங்கள் முழுக்காட்டுதல் எடுத்த நேரத்திலிருந்து ஆவிக்குரிய விதத்தில் வளர்ந்து வருகிறீர்களா என்பதைக் காண நீங்கள் உங்களையே ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்களா? அல்லது நீங்கள் அசையாமல் நின்று கொண்டிருந்திருக்கிறீர்களா? அதை ஒருவர் எவ்வாறு சொல்லமுடியும்?

“குழந்தைக்கேற்ற பண்புகள்”

7. ஆவிக்குரிய முன்னேற்றம் வெளிப்படையாக காண்பிக்கப்பட வேண்டுமென்றால், நாம் என்ன செய்ய வேண்டும்?

7 “நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப் போலப் பேசினேன், குழந்தையைப் போல சிந்தித்தேன், குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார். (1 கொரிந்தியர் 13:11) ஆவிக்குரிய வளர்ச்சியில் ஒரு சமயம் நாம் அனைவருமே நம்முடைய சிந்தனையிலும் செயல்களிலும் பிள்ளைகளைப் போல் இருந்தோம். என்றபோதிலும், முன்னேற்றம் வெளிப்படையாக காட்டப்பட வேண்டுமென்றால், பவுல் சொன்னபடி “குழந்தைக்கேற்ற பண்புகளை” நாம் ஒழித்துவிட வேண்டும். இப்படிப்பட்ட பண்புகளில் சில யாவை?

8. எபிரெயர் 5:13, 14-ல் இருக்கும் பவுலின் வார்த்தைகளின்படி, ஆவிக்குரிய குழந்தையின் ஒரு பண்பு என்ன?

8 முதலில் எபிரெயர் 5:13, 14-ல் பவுலின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாக பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.” நீங்கள் ‘நீதியின் வசனத்தில் பழக்கமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?’ “நன்மை தீமையின்னதென்று பகுத்தறிவதற்கு” கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை உபயோகிப்பதற்கு தகுதியுடையவர்களாயிருக்க நீங்கள் போதுமான அளவு அதை நன்கு அறிந்திருக்கிறீர்களா? முதிர்ச்சி வாய்ந்தவர்கள் அவ்வாறு செய்ய முடிகிறது, ஏனென்றால் அவர்கள் “பலமான ஆகாரத்தை” ஒழுங்காக எடுத்துக்கொள்கிறார்கள் என்று பவுல் சொல்லுகிறார். ஆக, ஒருவர் ஆவிக்குரிய விதத்தில் வளர்ந்திருக்கிறாரா அல்லது இன்னும் ஆவிக்குரிய விதத்தில் குழந்தையாக இருக்கிறாரா என்பதை பலமான ஆவிக்குரிய உணவுக்கான ஒருவருடைய வாஞ்சை அல்லது பசி சுட்டிக்காட்டுகிறது.

9. ஒருவருடைய ஆவிக்குரிய பசி எவ்வாறு அவருடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது?

9 அப்படியென்றால் உங்களுடைய ஆவிக்குரிய பசி எப்படி இருக்கிறது? பைபிளை-அடிப்படையாகக் கொண்ட பிரசுரங்கள், கிறிஸ்தவ கூட்டங்கள், அசெம்பிளிகள் ஆகியவற்றின் மூலம் யெகோவா ஒழுங்காக கொடுத்துவரும் மிகுதியான ஆவிக்குரிய உணவை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்? (ஏசாயா 65:13) வருடாந்தர மாவட்ட மாநாடுகளில் புதிய பிரசுரங்கள் வெளியிடப்பட்டால் நீங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வீட்டுக்குச் சென்ற பின்பு அவைகளை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகையின் ஒரு புதிய இதழ் வந்தால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இப்பிரசுரங்களை வாசிப்பதற்கு நீங்கள் நேரம் எடுத்துக்கொள்கிறீர்களா, அல்லது சிறப்பு அம்சங்களை பார்ப்பதற்கு அவைகளின் பக்கங்களை வெறுமென திருப்பி பார்த்துவிட்டு, உங்களுடைய புத்தக அடுக்கில் மற்ற புத்தகங்களோடு சேர்த்து வைத்துவிடுகிறீர்களா? இதுபோன்ற கேள்விகள் கிறிஸ்தவக் கூட்டங்களைக் குறித்தும் கேட்கப்படலாம். எல்லாக் கூட்டங்களுக்கும் நீங்கள் ஒழுங்காக ஆஜராகிறீர்களா? அதற்காக நீங்கள் தயார் செய்கிறீர்களா? அதில் பங்குகொள்கிறீர்களா? ஆவிக்குரிய உணவு உட்கொள்வதில் சிலர் மேலோட்டமாகவும் அவசர அவசரமாகவும் படிக்கும் மோசமான பழக்கங்களுக்கு உட்பட்டிருக்கின்றனர். சங்கீதக்காரனைக் குறித்ததில் அது எவ்வளவு வித்தியாசமானதாய் இருந்தது, அவர் சொன்னார்: “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.” கூடுதலாக தாவீது ராஜா சொன்னார்: “மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்; திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்.” (சங்கீதம் 35:18; 119:97) தெளிவாகவே, ஆவிக்குரிய ஏற்பாடுகளை நாம் எந்த அளவு போற்றுகிறோம் என்பது நம்முடைய ஆவிக்குரிய முன்னேற்றதைச் சுட்டிக்காட்டும்.

10. எபேசியர் 4:14-ல் ஆவிக்குரிய குழந்தையின் எந்தப் பண்பு குறிப்பிடப்பட்டிருக்கிறது?

10 ஆவிக்குரிய குழந்தையின் மற்றொரு பண்பை குறிப்பிட்ட போது பவுல் எச்சரித்தார்: “நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்.” (எபேசியர் 4:14) பிள்ளைகள் எல்லாக் காரியங்களையும் குறித்து அறிய ஆர்வமுள்ளவர்களாய் இருக்கின்றனர் என்பதை பெற்றோர் நன்கு அறிந்திருக்கின்றனர். ஒருவிதத்தில் இது உடன்பாடான பண்பாயிருக்கிறது ஏனென்றால் இது அவர்கள் ஆராய்ச்சி செய்வதற்கும், கற்பதற்கும் முதிர்ச்சி வாய்ந்த நபர்களாக படிப்படியாக வளருவதற்கும் அவர்களுக்கு உதவி செய்கிறது. ஒரு காரியத்தை விட்டு மறு காரியத்தினால் அவர்கள் சீக்கிரத்தில் கவனத்தை வெவ்வேறு திசையில் திருப்பிவிடுவதற்கான அபாயம் இருக்கிறது. மிக மோசமான காரியமானது, அனுபவம் இல்லாமையின் காரணமாக, அறியவேண்டும் என்ற இந்த ஆவல் வினைமையான தொல்லைக்குள் அவர்களை வழிநடத்துகிறது. இதனால் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடர் உண்டாக்குகின்றனர். ஆவிக்குரிய குழந்தைகளின் விஷயத்தில்கூட இது உண்மையாயிருக்கிறது.

11. (எ) “போதகமாகிய பலவித காற்றினாலே” என்ற சொற்றொடரை பயன்படுத்துவதில் பவுல் எதை மனதில் கொண்டிருந்தார்? (பி) என்ன ‘காற்றுகளை’ இன்று நாம் எதிர்ப்படுகிறோம்?

11 “போதகமாகிய பலவித காற்றினாலே” ஆவிக்குரிய குழந்தைகள் அலைகளைப் போல அடிபட்டு அலைகிறார்கள் என்று சொன்னபோது பவுல் எதை மனதில் கொண்டிருந்தார்? இங்கே “காற்று” என்ற சொல் அனிமாஸ் (aʹne·mos) என்ற கிரேக்க சொல்லிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதைக் குறித்து இன்டெர்நேஷனல் கிரிட்டிக்கல் காமென்ட்டரி இவ்வாறு சொல்கிறது: “மாறுபடக்கூடிய நிலையில்லாத்தன்மை என்ற கருத்துக்கு பொருத்தமானதாயிருப்பதால் அந்தச் சொல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.” “மனுஷருடைய வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரத்தினாலே” என்று பவுல் அடுத்ததாக கூறிய சொற்களில் இது நன்கு விளக்கப்பட்டிருக்கிறது. மூலமொழியில் “தந்திரம்” என்ற சொல் “பகடை” அல்லது “பகடை வைத்தாடுவது” என்று அடிப்படையாக பொருள்படுகிறது, அதாவது சூதாட்டம். தீங்கற்றதாகவும், கவர்ச்சியூட்டுவதாகவும், பயனுடையதாகவும்கூட தோன்றும் புதிய கருத்துக்களையும் நாட்டங்களையும் நாம் எப்போதுமே எதிர்ப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நம்முடைய விசுவாசம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பவுலின் வார்த்தைகள் முக்கியமாக பொருந்துகின்றன—சர்ச்சுகளிடையே உலகளாவிய ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், சமூக மற்றும் அரசியல் காரணங்கள் போன்றவை. (1 யோவான் 4:1-ஐ ஒப்பிடுக.) எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கும் இவ்வுலக புதுநாட்டம், காலத்துக்கேற்ற பாணிகள்—நாகரிகப் பாங்குகள், பொழுதுபோக்குகள், உணவுகள், உடற்பயிற்சி ஆகியவற்றைக் குறித்தும் இந்த நியமம் உண்மையாயிருக்கிறது. அனுபவமும், நன்கு சீர்தூக்கிப்பார்க்கும் திறமையும் இல்லாததன் காரணமாக ஆவிக்குரிய குழந்தை இப்படிப்பட்ட காரியங்களினால் அளவுக்குமேல் திசைதிருப்பப்படலாம். இவ்வாறு ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதிலிருந்தும், தன்னுடைய அதிமுக்கியமான கிறிஸ்தவக் கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்தும் அவன் தடைசெய்யப்படலாம்.—மத்தேயு 6:22-25.

12. உத்தரவாதத்தைக் குறித்த விஷயத்தில் இளம் பிள்ளைகள் எவ்வாறு பெரியவர்களிலிருந்து வித்தியாசப்படுகின்றனர்?

12 உதவியும் கவனிப்பும் எப்போதும் தேவைப்படுவது இளம்பிள்ளைகளின் மற்றொரு பண்பாகும். உத்தரவாதங்களைக் குறித்து அவர்கள் அறிந்திருப்பதுமில்லை, கவலைப்படுவதுமில்லை; வாழ்க்கையில் பிள்ளைப்பருவம் என்பது ஏறக்குறைய எல்லாக் காரியங்களுமே வெறும் வேடிக்கை விளையாட்டு காலமாகத் தான் இருக்கிறது. பவுல் சொன்னபடி, அவர்கள் ‘குழந்தையைப் போல பேசுகிறார்கள், குழந்தையைப் போல சிந்திக்கிறார்கள், குழந்தையைப் போல யோசிக்கிறார்கள்.’ மற்றவர்கள் அவர்களைக் கவனித்துக் கொள்வார்கள் என்று இருந்துவிடுகின்றனர். இதே காரியம் ஆவிக்குரிய குழந்தையின் விஷயத்தில் சொல்லப்படலாம். புதியவர் ஒருவர் தன் முதல் பைபிள் பேச்சைக் கொடுக்கையில் அல்லது முதல் முறையாக வெளி ஊழியத்துக்கு வருகையில், ஆவிக்குரிய பெற்றோர் உதவிசெய்வதற்கு எல்லாவற்றையும் செய்ய சந்தோஷப்படுகிறார். அப்படிப்பட்ட உதவியின் மீது புதியவர் தொடர்ந்து சார்ந்திருந்து, தன்னையே கவனித்துக்கொள்ளும் உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றால் என்ன நடக்கிறது? அது அவருடைய ஈடுபாடு குறைவுபடுவதை சுட்டிக்காட்டும் என்பது தெளிவாக இருக்கிறது.

13. ஒவ்வொருவரும் தன் சொந்த பாரத்தைச் சுமக்க ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?

13 நாம் “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க” வேண்டியிருந்தாலும் “அவனவன் தன் தன் சுமையையும்” சுமக்கவேண்டும் என்று இவ்விஷயத்தைக்குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் கொடுத்த புத்திமதியை நினைவுபடுத்திப் பாருங்கள். (கலாத்தியர் 6:2, 5) ஒருவர் தன் கிறிஸ்தவ உத்தரவாதங்களை தாங்குவதற்கு கற்றுக்கொள்ள நேரமும் முயற்சியும் எடுக்கிறது. சில அம்சங்களில் தியாகங்கள் செய்வதையும் அது அர்த்தப்படுத்தலாம். ஒருவர் சீஷரை-உண்டுபண்ணும் வேலையில் தன் பங்கை அதிகரிப்பதில் விருப்பம் இல்லாமல் அல்லது ஆவிக்குரிய முன்னேற்றம், உத்தரவாதம் ஆகிவற்றை அடைவதில் விருப்பம் இல்லாமல் வெறுமென காரியங்களை நின்று கவனித்துக்கொண்டிருப்பது போல் இருந்துவிட்டு வாழ்க்கையின் வேடிக்கை விளையாட்டுக்களில் தன்னை அதிகமாக உட்படுத்திவிட அனுமதித்தால் அது ஒரு வினைமையான தவறாகும். இதில் பொழுதுபோக்கு, உல்லாசப் பயணங்கள், சாதனங்கள் அல்லது அவசியமின்றி உலகப்பிரகாரமான வேலையை தொடருவதும்கூட உட்படலாம். “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்,” என்று சீஷனாகிய யாக்கோபு ஊக்குவித்தார்.—யாக்கோபு 1:22; 1 கொரிந்தியர் 16:13.

14. ஆவிக்குரிய குழந்தையின் பண்புகளை வெளிக்காட்டுவதோடு நாம் ஏன் திருப்தியடைந்துவிடக்கூடாது?

14 ஆம், ஒரு பிள்ளையை ஒரு பெரியவரிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் எளிதாக தெளிவாக காணக்கூடிய பண்புகள் அநேகம் இருக்கின்றன. பவுல் சொன்னபடி முக்கியமான காரியம் என்னவெனில், நாம் குழந்தைக்குரிய பண்புகளை படிப்படியாக ஒழித்துவிட்டு வளரவேண்டும். (1 கொரிந்தியர் 13:11; 14:20) அப்படி செய்யவில்லையென்றால், ஆவிக்குரிய கருத்தில் நாம் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்போம். ஆனால் ஒருவர் எவ்வாறு முன்னேற்றம் செய்யலாம்? முதிர்ச்சிக்கு வழிநடத்தும் ஆவிக்குரிய வளர்ச்சியை காத்துக்கொள்வதில் எது உட்பட்டிருக்கிறது?

முன்னேற்றம் எவ்வாறு வெளிப்படையாக ஆகிறது

15. வளர்ச்சியின் வழிமுறையில் அடிப்படையான படிகள் என்ன?

15 இயற்கையான உலகில் வளர்ச்சி எவ்வாறு நடைபெறுகிறது? “ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் ஓர் ஒற்றை உயிரணுவாக வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். அது மூலப்பொருள்களை எடுத்துக் கொண்டு வளருவதற்குத் தேவையான துணுக்குகளாக அவைகளை மாற்றுகிறது. ஆக, அந்த ஒற்றை உயிரணு உள்ளேயிருந்து வளருகிறது. இது மற்ற உயிரணுக்களாக உருவாவதற்கு பன்மடங்காகப் பெருகி பிரியலாம். கட்டுவது, பெருகுவது, பிரிவது ஆகியவற்றின் வழிமுறை தான் வளர்ச்சி,” என்று தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா விளக்குகிறது. இங்கு கவனிக்கத்தக்க குறிப்பு என்னவெனில், உள்ளேயிருந்து வளர்ச்சி ஏற்படுகிறது. சரியான ஊட்டம் உள்ளே எடுத்துக்கொள்ளப்பட்டு ஜீரணிக்கப்பட்டு, அது பயன்படுத்தப்படும் போது வளர்ச்சி ஏற்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தையின் விஷயத்தில் இது தெளிவாக காணப்படுகிறது. நாம் அறிந்திருக்கிறபடி, புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பும், புரதப் பொருளும் நிறைந்திருக்கும் விசேஷமாக தயாரிக்கப்பட்ட உணவு, பால் ஆகியவற்றை ஒழுங்காக உண்கிறது. அதன் விளைவு? ஒரு குழந்தையின் முதல் வருடத்தில் எடை, உயரம் ஆகியவற்றில் ஏற்படும் வளர்ச்சியின் அளவு அதனுடைய வாழ்க்கையின் மீதமுள்ள இயல்பான வளர்ச்சிக்குரிய எந்த வருடத்தில் ஏற்படும் வளர்ச்சிக்கும் ஒருபோதும் நிகராயிராது.

16. பெரும்பாலான புதிய பைபிள் மாணாக்கர்களில் என்ன வகையான வளர்ச்சி காணப்படுகிறது, அது எவ்வாறு சாத்தியமாகிறது?

16 வளர்ச்சி என்ற இயற்கையான வழிமுறையிலிருந்து நாம் அதிகத்தைக் கற்றுக்கொள்கிறோம். அதை நாம் அடிப்படையிலிருந்து முதிர்ச்சிக்கு செல்லும் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பொருத்தலாம். முதலாவது, ஒரே சீராக உணவு உண்ணும் திட்டம் இன்றியமையாததாய் இருக்கிறது. நீங்கள் முதலாவது பைபிளைப் படிக்க ஆரம்பித்த காலத்தை மறுபடியும் நினைவுபடுத்திப் பாருங்கள். மற்ற அநேகரைப் போல் நீங்களும் இருக்கிறீர்களென்றால், கடவுளுடைய வார்த்தையைக் குறித்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்திருப்பீர்கள். ஆனால் ஒவ்வொரு வாரமும் நீங்கள் உங்களுடைய பாடங்களை தயாரித்து உங்களுடைய பைபிள் படிப்பை கொண்டிருந்தீர்கள். சிறிது காலத்துக்குள்ளாக நீங்கள் வேதாகமத்தின் எல்லா அடிப்படை போதனைகளையும் அறிந்து கொண்டீர்கள். அது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக இருந்தது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். கடவுளுடைய வார்த்தையை ஒழுங்காக உட்கொண்டதன் விளைவாக இவையனைத்தும் ஏற்பட்டன!

17. ஒழுங்காக ஆவிக்குரிய உணவை உட்கொள்ளும் ஒரு திட்டம் ஏன் இன்றியமையாதது?

17 ஆனால் இப்போது எப்படி? உணவை உட்கொள்ள ஓர் ஒழுங்கான திட்டத்தை நீங்கள் இன்னும் பின்பற்றுகிறீர்களா? ஒருவர் முழுக்காட்டுதல் பெற்றுவிட்டதன் காரணமாக, திட்டமிட்டு ஒழுங்காக போஷாப்பான ஆவிக்குரிய உணவை எடுத்துக்கொள்வதற்கு இனிமேலும் எந்தத் தேவையுமில்லை என்று ஒருவர் ஒருபோதும் எண்ணக்கூடாது. தீமோத்தேயு ஒரு முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவ கண்காணியாக இருந்தபோதிலும், பவுல் அவரை இவ்வாறு ஊக்குவித்தார்: “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.” (1 தீமோத்தேயு 4:15) அப்படியென்றால், நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு அதிகம் அப்படி செய்ய வேண்டும்! உங்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தை விளங்கப்பண்ணுவதில் நீங்கள் அக்கறையுள்ளவர்களாய் இருந்தால், அப்படிப்பட்ட முயற்சிகள் இன்றியமையாததாய் இருக்கின்றன.

18. ஒருவருடைய ஆவிக்குரிய முன்னேற்றம் எவ்வாறு வெளிப்படையாக ஆகிறது?

18 ஒருவருடைய முன்னேற்றத்தை விளங்கப்பண்ணுவது என்பது, ஒருவர் அறிந்திருப்பவற்றை முனைப்பாகக் காட்டிக்கொள்வதற்கு விசேஷ முயற்சி எடுப்பது அல்லது மற்றவர்களை கவர்ச்சி செய்வதற்கு முயற்சி செய்வது என்பதை அர்த்தப்படுத்தாது. “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது,” என்றும் “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்,” என்றும் இயேசு சொன்னார். (மத்தேயு 5:14; 12:34) நம்முடைய இருதயங்களும், மனங்களும் கடவுளுடைய வார்த்தையின் நல்ல காரியங்களினால் நிறைந்திருக்கும் போது, நாம் சொல்லும், செய்யும் காரியங்களில் இதை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.

19. நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைக் குறித்து நாம் என்ன செய்ய தீர்மானமாயிருக்க வேண்டும், என்ன பலனை முன்னிட்டு?

19 எனவே, கேள்வி என்னவெனில்: உங்களுடைய உள்ளான, ஆவிக்குரிய வளர்ச்சியை தூண்டக்கூடிய போஷாக்கான உணவை உட்கொள்வதற்கு நீங்கள் ஒழுங்காக பைபிள் படித்து, கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஆஜராகிறீர்களா? ஆவிக்குரிய வளர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு வரும் போது, சுறுசுறுப்பில்லாமல் மந்தமாக கவனித்துக்கொண்டிருக்கும் ஒருவராக இருப்பதில் திருப்தியடைந்துவிடாதீர்கள். யெகோவா அளிக்கும் ஏராளமான ஆவிக்குரிய உணவை நீங்கள் முழுவதுமாக பயன்படுத்துகிறீர்கள் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள உடன்பாடான படிகளை எடுங்கள். ‘கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற’ ஒருவராக நீங்கள் இருந்தால், உங்களைக் குறித்து இதுவும்கூட சொல்லப்படலாம்: “அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” (சங்கீதம் 1:2, 3) நீங்கள் தொடர்ந்து ஆவிக்குரிய முன்னேற்றம் செய்துகொண்டே இருப்பீர்கள் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள என்ன செய்யப்படலாம்? இதை நாம் அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிக்கலாம்.

நீங்கள் பதிலளிக்க முடியுமா?

◻ நம்முடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தை சரிபார்த்துக்கொள்வது ஏன் காலத்திற்கேற்றதாக இருக்கிறது?

◻ ஆவிக்குரிய வளர்ச்சி எவ்வாறு ஆவிக்குரிய பசியோடு சம்பந்தப்பட்டிருக்கிறது?

◻ “போதகமாகிய பலவித காற்றினாலே” என்பதன் அர்த்தம் என்ன?

◻ ஒவ்வொருவரும் தன் சொந்த பாரத்தை ஏன் சுமக்க வேண்டும்?

◻ ஆவிக்குரிய முன்னேற்றம் எவ்வாறு முயன்று அடையப்படுகிறது?

[பக்கம் 10-ன் படம்]

பைபிளை அடிப்படையாகக் கொண்ட பிரசுரங்களை வாசிக்க நீங்கள் நேரம் எடுத்துக்கொள்கிறீர்களா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்