யெகோவா என்னை நன்றாக கவனித்து வந்திருக்கிறார்
குறைத்துச் சொன்னால், நான் அசாதாரணமான ஒரு முறையில் யெகோவாவை சேவிக்க ஆரம்பித்தேன். நியூசிலாந்தில் தூர வடக்கே, பெரும்பாலும் என்னைப் போன்ற பழுப்பு நிற இனத்தவர் குடியிருந்த ஓர் அழகிய நாட்டுப்புறப் பகுதியில் நான் வளர்ந்துவந்தேன். குதிரை மேல் ஏறி ஒரு நாள் நான் பயணப்பட்டுக்கொண்டிருந்தபோது, என் பெரியப்பாவின் மகன் சாலையில் என்னைச் சந்தித்தார். அது 1942-ல் (நிலவுலகின் தென் அரை கோளத்தில்) இலையுதிர்க் காலமாக இருந்தது, (வடஅரை கோளத்தில் வசந்தக்காலம்). அப்பொழுது எனக்கு வயது 27. இங்கிலாந்து சர்ச்சின் ஒரு சுறுசுறுப்பான அங்கத்தினனாக நான் இருந்துவந்தேன்.
பல ஆண்டுகளாக பென், அப்பொழுது உவாட்ச் டவர் சங்கத்தின் தலைவராக இருந்த நீதிபதி ரதர்போர்டின் புத்தகங்களைப் படித்துவந்தார், இப்பொழுது உவாட்ச் டவர் சங்கத்தின் நியூசிலாந்து தலைமை அலுவலகம், கர்த்தருடைய இராப்போஜனத்தை ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடக்கூடிய ஓரிடத்துக்கு உள்ளூர் மக்களை அழைக்குமாறு அவரைக் கேட்டுக்கொண்ட ஒரு கடிதத்தை வைத்திருந்தார். மேலுமாக ஆராதனை நடத்த எவராவது ஒருவரை பென் ஏற்பாடு செய்யவேண்டியவராக இருந்தார். என்னைப் பார்த்து பென் சொன்னார்: “நீர் தான் அதற்கு சரியான ஆள்.” தகுதியுள்ளவனாக கருதப்பட்டதற்காக பெருமிதத்தோடும்—மேலும் சர்ச்சில் தூய நற்கருணையில் பங்குகொள்பவனாக இருந்ததாலும்—நான் ஒப்புக்கொண்டேன்.
கர்த்தருடைய இராப்போஜனத்தன்று மாலையில், சுமார் 40 பேர் கர்த்தருடைய மரணத்தை ஆசரிப்பதற்காக பென்னின் வீட்டில் கூடிவந்தார்கள். யெகோவாவின் சாட்சிகள் ஒருவர்கூட அதில் இல்லை. நான் வந்துசேர்ந்தபோது என் பெரியப்பாவின் மகன் பேச்சு குறிப்புத் தாளை என்னிடம் தந்தார். அதில் கொடுக்கப்பட்டிருந்த பாடலை விட்டுவிட்டு ஜெபத்தோடு ஆரம்பிக்க பென்னின் மைத்துனரை அழைத்தேன். பின்னர் வரிசையாக கேள்விகளையும் அதோடு வேத ஆதாரமுள்ள பதில்களையும் கொண்டிருந்த குறிப்புத்தாளின் தகவலை அளிக்க ஆரம்பித்தேன். அங்கே ஆஜராயிருந்த ஓர் உள்ளூர் பாதிரியார் ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் குறுக்கிட்டார். ஆனால் இவை குறிப்புத்தாளில் இருந்த வசனங்களை வாசிப்பதன் மூலம் பதிலளிக்கப்பட்டன.
குறிப்புத்தாளில் ஒரு கேள்வி, இந்நிகழ்ச்சி வருடத்தின் எந்தச் சமயத்தில் ஆசரிக்கப்படவேண்டும் என்பதோடு சம்பந்தப்பட்டதாயிருந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. அங்கிருந்த அனைவரும் ஜன்னல் வழியாக பார்த்து முழு நிலாவைக் கண்டபோது எத்தனை திருப்தியாக இருந்தது. அது நிசான் 14-ம் தேதி என்பது தெளிவாக இருந்தது.
எப்பேர்ப்பட்ட ஓர் இரவாக அது இருந்தது! ஆசரிப்பு நான்கு மணிநேரங்கள் நீடித்தது. அநேக கேள்விகள் எழுப்பப்பட்டன, இவற்றிற்கு சங்கத்தின் குறிப்புத்தாளிலுள்ள வசனங்களிலிருந்து பதில்கள் அளிக்கப்பட்டன. பின்னோக்கிப் பார்க்கையில், அந்தச் சமயத்தில் நான் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு சாட்சியாக இல்லாவிட்டாலும் அவருடைய அன்புள்ள கவனிப்பில்லாமல் அந்த அனுபவத்தை நான் சமாளித்திருக்க முடியாது என்பது எனக்குத் தெரிகிறது. என்றபோதிலும் 1942-ல் அந்த ஞாபகார்த்த இரவின்போது, வாழ்க்கையில் என்னுடைய நோக்கத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன்.
ஆரம்ப கால வாழ்க்கை
நான் 1914-ல் பிறந்தேன். என்னுடைய தந்தை நான் பிறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன் மரித்துப்போனார். ஒரு சிறுபிள்ளையாக, தங்கள்மீது அன்புசெலுத்த தந்தைமார்களைக் கொண்டிருந்த மற்ற பிள்ளைகளைப் பார்த்து பொறாமைப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. அது எனக்கு கிடைக்கவில்லை. கணவனின்றி வாழ்க்கை என் அம்மாவுக்கு கடினமான போராட்டமாக இருந்தது, முதல் உலகப் போரின் நீண்டதூரம் சென்றெட்டும் பாதிப்புகளால் அது இன்னும் கடினமானது.
ஒரு வாலிபனாக, நான் ஆகனஸ் காப் என்ற இளவயது பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன். 58-க்கும் மேலான ஆண்டுகளாக அவள் என் வாழ்க்கைத் துணையாக இருந்து வருகிறாள். ஆரம்பத்தில் வாழ்க்கையில் வெற்றிபெற நாங்கள் சேர்ந்து போராடினோம். கடுமையான வறட்சி காரணமாக ஒரு விவசாயியாக நான் நொடித்துப் போனேன். விளையாட்டில் சற்று சோர்வுணர்ச்சி நீங்குவதை நான் கண்டேன். ஆனால் அந்த 1942 ஞாபகார்த்த அனுபவம் வரையில், வாழ்க்கையில் உண்மையான நோக்கமெதுவும் எனக்கு இருக்கவில்லை.
உறவினர்களுக்குச் சாட்சிகொடுத்தல்
அந்த ஞாபகார்த்தத்துக்குப் பின்பு, பைபிளை ஊக்கமாக படித்து, உவாட்ச் டவர் சங்கத்தால் வெளியிடப்பட்ட பைபிள் பிரசுரங்களை கொண்டு என்னுடைய சில உறவினர்களோடு கலந்துபேசிக்கொண்டிருந்தேன். 1943 செப்டம்பரில், வேறு ஒரு பிராந்தியத்திலிருந்த சில யெகோவாவின் சாட்சிகள் ஒதுக்கமாயிருந்த எங்கள் சமுதாயத்தைச் சந்திக்க வந்தார்கள். நாங்கள் நான்கு மணிநேரம் முனைப்பான கலந்தாலோசிப்பைக் கொண்டிருந்தோம். பின்னர் அடுத்தநாள் காலை அவர்கள் புறப்பட இருந்ததை அறிந்தபோது, “இப்பொழுது முழுக்காட்டப்படுவதிலிருந்து என்னை தடைசெய்வது என்ன?” என்பதாக நான் கேட்டேன். என்னுடைய உறவினர்களில் இருவரும் நானும் காலை ஒன்றரை மணிக்கு தண்ணீரில் முழுக்காட்டப்பட்டோம்.
அதற்குப் பின்னர், என்னுடைய உறவினர்களுக்கு சாட்சி கொடுக்க, நான் விரிவாக பிரயாணம் செய்தேன். சிலர் ஏற்றுக்கொண்டனர், இவர்களோடு மத்தேயு 24-ம் அதிகாரத்தின் அடிப்படையில் பேசினேன். மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்களிடம் மத்தேயு 23-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பரிசேயர்களிடமாக இயேசு சொன்ன வார்த்தைகளை நான் பயன்படுத்தினேன். ஆனால் காலப்போக்கில், அதிக சாதுரியமாக இருக்க, நம்முடைய தயவும் அன்புமுள்ள பரலோகத் தகப்பனைப் போல இருக்க நான் கற்றுக்கொண்டேன்.—மத்தேயு 5:43-45.
ஆரம்பத்தில் யெகோவாவை சேவிக்கும் என் விருப்பத்துக்கு என் மனைவி எதிர்ப்பு தெரிவித்தாள். என்றபோதிலும், விரைவில் என்னை சேர்ந்துகொண்டு, டிசம்பர் 1943-ல் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட ஒரு வாழ்க்கைத்துணையாக மாறினாள். மறக்க முடியாத அந்த நாளில் அவளோடு சேர்ந்து எங்களுடைய வைமா கிராமத்திலிருந்து வேறு ஐந்து பேரும் முழுக்காட்டப்பட்டார்கள். அந்த இடத்தில் மொத்த ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது.
எதிர்ப்பின் மத்தியிலும் ஆசீர்வாதங்கள்
வேறு ஒரு பகுதியிலிருந்த சகோதரர்கள் 1944-ன் போது எங்களைச் சந்தித்து, இம்முறை, முறைப்படியான வீட்டுக்கு வீடு ஊழியத்துக்கு தேவையான பயிற்றுவிப்பைக் கொடுத்தார்கள். அந்தச் சமயத்தில் நாங்கள் இருப்பது அதிக வெளிப்படையாகத் தெரியவந்தபோது, கிறிஸ்தவமண்டலத்தின் பிரதிநிதிகளிடமிருந்து எதிர்ப்பு குவிந்தது. (யோவான் 15:20) உள்ளூர் பாதிரிமார்களோடு அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன, கோட்பாடு சம்பந்தமான நீண்ட கலந்தாலோசிப்புகள் நடைபெற்றன. ஆனால் யெகோவா வெற்றியை கொடுத்தார். என் சகோதரி உட்பட, சமுதாயத்திலுள்ள மற்ற அங்கத்தினர்கள் யெகோவாவின் அன்புள்ள கவனிப்பின்கீழ் வந்தனர்.
வைமாவில் 1944 ஜூன் மாதம் ஒரு சபை ஏற்படுத்தப்பட்டது. மத துன்புறுத்தலும் பகைமையும் அதிகரித்தது. யெகோவாவின் சாட்சிகளுக்கு உள்ளூர் கல்லறையில் இடம் மறுக்கப்பட்டது. சில சமயங்களில் எதிர்ப்பு வன்முறையாக மாறியது. சரீர மோதல்கள் இருந்தன. என்னுடைய காரும் அது நிறுத்திவைக்கப்பட்டிருந்த கொட்டிலும் எரித்து தரைமட்டமாக்கப்பட்டது. இருப்பினும், யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு, மூன்று மாதங்களுக்குள்ளாகவே, எங்களால் ஒரு பார கட்டைவண்டியை வாங்க முடிந்தது. வளர்ந்துவந்த என்னுடைய குடும்பத்தைக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்ல ஒரு குதிரைவண்டியை நான் உபயோகித்தேன்.
கூட்டுறவுக் கொள்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது, விசாலமான கூடுமிடத்துக்கு அவசரமான ஒரு தேவை எங்களுக்கிருந்தது. ஆகவே நாங்கள் வைமாவில் ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்டத் தீர்மானித்தோம். இதுவே நியூசிலாந்தில் கட்டப்பட்ட முதல் ராஜ்ய மன்றமாக இருந்தது. முதல் முதலாக 1949, டிசம்பர் 1-ம் தேதி மரங்கள் வெட்டப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு, 260 இருக்கைகள் கொண்ட புதிய மன்றத்தில் மாநாடும் பிரதிஷ்டையும் ஒரே சமயத்தில் நடைபெற்றது. அந்த நாட்களில் யெகோவாவின் உதவியோடு முயன்று அடையப்பட்ட ஒரு பெரிய சாதனையாக அது இருந்தது.
யெகோவாவின் கவனிப்புக்கு கூடுதலான அத்தாட்சிகள்
நியூசிலாந்தின் தொலைதூர வடக்கில் ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த காரணத்தால், பிரயாண கண்காணிகள், தேவை அதிகமாக இருந்த இடத்தில் சேவிக்கும்படி உற்சாகப்படுத்தினர். இதற்குப் பிரதிபலித்து 1956-ல் நான் என் குடும்பத்தோடு ஆக்லாந்துக்கு தெற்கே புயுகோஹிக்கு இடம் மாறிச் சென்றேன். அங்கே நாங்கள் 13 ஆண்டுகள் சேவித்தோம்.—அப்போஸ்தலர் 16:9 ஒப்பிடவும்.
இந்தச் சமயத்தில் யெகோவாவின் கவனிப்புக்கு இரண்டு உதாரணங்கள் என் நினைவில் நீங்காது நிலைத்திருக்கின்றன. மாவட்ட மன்றத்தில் நான் வண்டி ஓட்டுநராகவும் இயந்திரம் இயக்குபவராகவும் வேலை பார்த்து வந்தபோது, ஆக்லாந்திலுள்ள உவாட்ச் டவர் சங்கத்தின் கிளைக்காரியாலயத்தில் நான்கு-வார ராஜ்ய ஊழியப் பள்ளிக்கு அழைக்கப்பட்டேன். இதற்காக நான் நான்கு வாரங்கள் விடுப்பு கோரினேன். தலைமைப் பொறியாளர் என்னிடம்: “தாராளமாகப் போகலாம். அநேகர் உன்னைப் போல இருந்தால் நன்றாக இருக்கும். நீ திரும்பி வந்தப்பின் என்னை அலுவலகத்தில் வந்துப் பார்,” என்றார். அதைத் தொடர்ந்து நான் அவருடைய அலுவலகம் சென்றிருந்தபோது, நான் அங்கு இல்லாத நான்கு வாரங்களுக்கு என் சம்பளப்பணத்தைப் பெற்றுக்கொண்டேன். இவ்விதமாக என் குடும்பத்தின் பொருளாதார தேவைகள் கவனித்துக்கொள்ளப்பட்டன.—மத்தேயு 6:33.
அது முதல் உதாரணம். இரண்டாவது, 1968-ல் என்னுடைய மனைவியும் நானும் ஒழுங்கான பயனியர் சேவையில் பிரவேசித்தப் பின்பு நிகழ்ந்தது. மறுபடியுமாக நாங்கள் உதவிக்காக யெகோவாவை நம்பியிருந்தோம், அவர் எங்களுக்குப் பலனளித்தார். ஒரு நாள் காலை உணவுக்குப்பின், என் மனைவி குளிர்ச்சாதனப் பெட்டியைத் திறந்து, அதில் அரை பவுண்ட் வெண்ணெயைத் தவிர வேறு எதுவும் இல்லாதிருப்பதைக் கண்டாள். “சார்ன், நமக்கு சாப்பிட எதுவுமில்லை, அப்படியும் இன்று நாம் ஊழியத்துக்குப் போகிறோமா?” என்று கேட்டாள். என்னுடைய பதில்? “ஆம்!”
முதல் வீட்டில் வீட்டுக்காரர் நாங்கள் அளித்த பிரசுரங்களை ஏற்றுக்கொண்டு தயவாக எங்களுக்கு ஒரு சில டஜன் முட்டைகளை நன்கொடையாக தந்தார். நாங்கள் சந்தித்த இரண்டாவது நபர், காய்கறிகளை அன்பளிப்பாகத் தந்தார்—குயுமர், (சர்க்கரை வள்ளிக்கிழங்கு), காலிப்ஃளவர், காரட்டுகள். நாங்கள் அன்று வீட்டுக்கு வரும்போது கொண்டுவந்த மற்ற உணவு பொருட்கள் இறைச்சியும் வெண்ணெயும். இயேசுவின் வார்த்தைகள் எங்களுடைய விஷயத்தில் எத்தனை உண்மையாக இருந்தது: “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?”—மத்தேயு 6:26.
அயல்நாட்டில் ஒரு நியமனம்
கூக் தீவுகளில் ராரோடோங்கா! இது 1970-ல் எங்களுடைய விசேஷித்தப் பயனியர் நியமனமாக இருந்தது. அடுத்த நான்காண்டுகள் இதுவே எங்கள் குடியிருப்பிடமாக இருக்கவிருந்தது. புதிய மொழியைக் கற்றுக்கொள்வது முதல் சவாலாக இருந்தது. என்றபோதிலும், நியூசிலாந்து மேயோரியும் கூக் தீவு மேயோரியும் ஒத்தாற்போலிருந்தபடியால் இங்கு வந்து ஐந்து வாரங்களானபின் நான் என்னுடைய முதல் பொது பேச்சை கொடுக்க முடிந்தது.
கூக் தீவுகளில் ஒரு சில ராஜ்ய பிரஸ்தாபிகளே இருந்தனர். கூடுவதற்கு எங்களுக்கு ஓரிடமிருக்கவில்லை. மறுபடியுமாக ஜெபத்துக்குப் பதிலளித்து, யெகோவா எங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்தார். சாதாரணமாக ஒரு கடைக்காரரிடம் கொண்டிருந்த சம்பாஷணை பொருத்தமான ஓர் இடத்தைக் குத்தகைக்கு எடுப்பதில் விளைவடைந்தது; ஒரே வருடத்திற்குள் நாங்கள் ஒரு சிறிய வீட்டையும் 140 பேர் அமரும் வசதிகொண்ட ஒரு ராஜ்ய மன்றத்தையும் உடையவர்களானோம். அது முதற்கொண்டு, யெகோவாவுக்குத் துதியுண்டாக ஒன்றன் பின் ஒன்றாக ஆசீர்வாதங்களை நாங்கள் பெற்றுக்கொண்டிருந்தோம்.
தீவு எங்களுக்கு அளித்த விருந்தோம்பல் குறிப்பாக போற்றப்பட்டது. அடிக்கடி, ஊழியத்தில் இருக்கையில்—உஷ்ணமான ஈரக்கசிவான தட்பவெப்ப நிலையில் மிகவும் வரவேற்கப்பட்ட—புத்துணர்ச்சியளிக்கும் பானங்கள் எங்களுக்கு அளிக்கப்பட்டன. அடிக்கடி வீட்டுக்கு வரும்போது, எங்கள் வாசற்படியில் பெயர் தெரியாதவர்கள் விட்டுச் சென்ற வாழைப்பழங்கள், பப்பாளிப்பழங்கள், மாம்பழங்கள் மற்றும் ஆரஞ்சுப்பழங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
என்னுடைய மனைவியும் நானும், 1971-ல் ராரோடோங்காவிலிருந்து வந்த மூன்று மற்ற பிரஸ்தாபிகளும் சேர்ந்து அதன் அழகிய கடற்கழிக்குப் பெயர்பெற்றிருந்த ஐட்டிடாக்கித் தீவுக்குப் பயணப்பட்டோம். விருந்தோம்பும் பண்புடைய மக்கள் மத்தியில் கடவுளுடைய வார்த்தையை நேசிப்பவர்களை நாங்கள் கண்டோம். நான்கு வீட்டு வேதபடிப்புகளை ஆரம்பித்து ராரோடோங்காவுக்குத் திரும்பிவந்தப் பின்பும் கடிதம் மூலம் அவைகளை நடத்தி வந்தோம். காலப்போக்கில் ஐட்டிடாக்கியிலிருந்த அந்த மாணாக்கர்களும்கூட முழுக்காட்டப்பட்டனர், சபை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1978-ல் கூக் தீவுகளில் இரண்டாவது ராஜ்ய மன்றம் கட்டப்பட்டது. நாங்கள் நட்டு, நீர்ப்பாய்ச்சியதற்கு பிரதிபலனாக யெகோவா காரியங்களை வளரச்செய்துகொண்டிருந்தார்.—1 கொரிந்தியர் 3:6, 7.
கூக் தீவுத் தொகுதியிலுள்ள பத்துத் தீவுகளை, அநேகமாக சோதனையான சூழ்நிலைமைகளின்கீழ் சந்திக்கும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. 180 கிலோமீட்டர் தொலைவிலிருந்த அட்டியுவுக்கு படகுப்பயணம் கடுமையான காற்று மற்றும் கொந்தளிப்பான கடல்களின் காரணமாக ஆறு நாட்களுக்கும் மேல் எடுத்தது. (2 கொரிந்தியர் 11:26 ஒப்பிடவும்.) உணவு குறைவாகவும், என்னைச் சுற்றி அநேகருக்கு கடல்குமட்டல் கோளாறு ஏற்பட்டபோதிலும் யெகோவாவின் கவனிப்புக்காக நான் நன்றியுள்ளவனாக இருந்தேன், இதனால் சென்று சேரவேண்டிய இடத்தில் பத்திரமாக வந்து இறங்கினேன்.
கூக் தீவுகளில் 1974-ல் தொடர்ந்து தங்கியிருக்க எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, ஆகவே நாங்கள் நியூசிலாந்துக்கு திரும்ப வேண்டியதாயிற்று. அந்தச் சமயத்திற்குள் தீவுகளில் மூன்று சபைகள் ஏற்பட்டுவிட்டிருந்தன.
கூடுதலான ஊழிய சிலாக்கியங்கள் —மற்றும் ஒரு சோதனை
நியூசிலாந்துக்குத் திரும்பியபோது புதிய சிலாக்கிய கதவுகள் திறந்தன. (1 கொரிந்தியர் 16:9) காவற்கோபுரம் இன்னும் மற்ற பைபிள் பிரசுரங்களை கூக் தீவு மேயோரிக்கு மொழிபெயர்க்க சங்கத்துக்கு ஒருவர் தேவைப்பட்டது. எனக்கு சிலாக்கியம் கொடுக்கப்பட்டது, இன்று வரையாகவும் அது எனக்குரியதாக இருந்துவருகிறது. பின்னர் முதலில் ஒரு வட்டார கண்காணியாகவும் பின்னர் உதவி மாவட்ட கண்காணியாகவும் கூக் தீவுகளிலுள்ள என்னுடைய சகோதரர்களைத் திரும்பச் சென்று சந்திக்கும் சிலாக்கியம் பெற்றேன்.
அந்தச் சந்திப்புகளின்போது ஒரு சமயம், ராரோடோங்காவிலிருந்து வந்த ஒரு விசேஷித்தப் பயனியரான அலெக்ஸ்நாப்பா, வட கூக்ஸிலுள்ள தீவுகளான மனஹிக்கி, ரக்கஹங்கா, பென்ரினுக்கு எங்களைக் கொண்டுசென்ற 23-நாள் கடற்பயணத்தில் என்னைச் சேர்ந்துகொண்டார். ஒவ்வொரு தீவிலும் விருந்தோம்பும் குணமுள்ள உள்ளூர்வாசிகள் எங்களுக்கு இடவசதி அளித்து பல பைபிள் பிரசுரங்களை ஏற்றுக்கொள்ளும்படி யெகோவா அவர்களுடைய இருதயங்களை ஏவினார். (அப்போஸ்தலர் 16:15 ஒப்பிடவும்.) இந்தத் தீவுகளில் முத்துச் சிப்பிகள் ஏராளமாக இருக்கின்றன. அநேக சமயங்களில் மக்கள் உலகளாவிய பிரசங்க வேலையின் செலவுக்கு நன்கொடையாக முத்துக்களை அளித்திருக்கிறார்கள். ஆக, நாங்கள் ஆவிக்குரிய முத்துக்களை அளித்தோம், சொல்லர்த்தமான சிலவற்றைப் பெற்றுக்கொண்டோம்.—மத்தேயு 13:45, 46 ஒப்பிடவும்.
உலகில் ஒதுக்கமாயுள்ள அந்தப் பகுதி எத்தனை அழகாக உள்ளது! கடற்கழியில் பெரிய வெள்ளை சுறாக்கள் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவதை கற்பனைச் செய்துப் பாருங்கள்! இரவு நேர ஆகாயம் எத்தனை மகத்தான காட்சியாகத் தோற்றமளிக்கிறது! சங்கீதக்காரனின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையாக இருக்கின்றன: “பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.”—சங்கீதம் 19:2.
பின்னர், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், உத்தமத்தின் உண்மையான ஒரு சோதனை வந்தது. என்னுடைய மனைவிக்கு, மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள். அறுவைசிகிச்சை தேவைப்பட்டது, ஆனால் மருத்துவர் இரத்தத்தை உபயோகிக்காமல் அதை செய்ய ஒப்புக்கொள்ள மறுத்தார். கடவுளுடைய சட்டத்தின் மீறுதலாக இருக்கும் ஒரு செயல்முறைக்கு என்னுடைய மனைவியும் நானும் மனச்சாட்சிப்படி ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அறுவை மருத்துவரின் மனச்சாட்சி, உயிரைப் பாதுகாக்க, இரத்தம் உட்பட சாத்தியமான அனைத்து முறைகளையும் பயன்படுத்தவேண்டும் என்று கட்டளையிட்டது.
என் மனைவியின் உடல்நிலை மோசமானது, அவள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டாள். கட்டுப்படுத்தப்பட்ட சந்திப்புகளே அனுமதிக்கப்பட்டது. காதுகுருத்தின்மீது அழுத்தத்தின் காரணமாக அவள் காது மந்தமானது. நிலைமை மிக மோசமானது. ஒரு சந்திப்புக்குப் பிறகு மருத்துவர் என்னுடைய கார் இருந்த இடம் வரையாக எனக்குப் பின்னால் வந்து என்னுடைய மனைவி உயிர்பிழைக்க ஒரே வாய்ப்பு இரத்தத்தோடு அறுவை சிகிச்சையே என்று வற்புறுத்தி அதற்கு ஒப்புதலளிக்க என்னிடம் வருந்திக் கேட்டுக்கொண்டார். இருப்பினும், என்னுடைய மனைவியும் நானும் யெகோவாவில் நம்பிக்கையாயிருந்தோம்—அவருடைய சட்டத்துக்குக் கீழ்ப்படிவது தற்போதைய இந்த வாழ்க்கையில் ஒரு சில வருடங்களை இழப்பதில் விளைவடைந்தாலும்கூட.
திடீரென்று, என்னுடைய மனைவியின் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரு நாள் நான் பார்க்கச் சென்றிருந்தபோது அவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்ததை நான் கண்டேன். தொடர்ந்து வந்த நாட்களில் அவள் நோயாளிகளுக்கும் செவிலியர்களுக்கும் சாட்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டாள். பின்னர் அறுவை மருத்துவரின் அலுவலகத்துக்கு நான் அழைக்கப்பட்டேன். “திருவாளர் வேராராவ், நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி! உங்கள் மனைவியின் வியாதி குணமாயிற்று என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார். எதிர்பாராத வகையில் அவளுடைய இரத்த அழுத்தம் ஒரு நிலைக்கு வந்துவிட்டது. ஒன்றாகச் சேர்ந்து என்னுடைய மனைவியும் நானும் யெகோவாவுக்கு நன்றி செலுத்திவிட்டு, அவருடைய சேவையில் எங்களால் இயன்றவரை செய்வதற்கு எங்கள் தீர்மானத்தை புதுப்பித்துக்கொண்டோம்.
நான் இப்பொழுது கூக் தீவுகளுக்கு மறுபடியும் நியமிப்பைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன்; மறுபடியுமாக ராரோடோங்காவில் சேவித்து வருகிறேன். என்னே ஓர் ஆசீர்வாதமான சிலாக்கியம்! பின்னோக்கிப் பார்க்கையில், யெகோவாவின் சேவையில் ஏறக்குறைய ஐந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக அனுபவித்த அவருடைய கவனிப்புக்காக என்னுடைய மனைவியும் நானும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பொருள் சம்பந்தமான விதத்தில், வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகள் ஒருபோதும் எங்களுக்கு இல்லாமல் போனதில்லை. ஆவிக்குரிய கருத்தில், ஆசீர்வாதங்கள் எண்ணிப்பார்க்க மிகவும் எண்ணற்றவையாக இருந்திருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று சத்தியத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் என்னுடைய மாம்சப்பிரகாரமான உறவினர்களின் எண்ணிக்கையாகும். நேரடியாக எங்கள் சந்ததியில் வந்த 65 பேர் உட்பட யெகோவாவுக்கு இப்பொழுது முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாக இருக்கும் 200-க்கும் அதிகமானவர்களை என்னால் எண்ண முடியும். ஒரு பேரன் நியூசிலாந்து பெத்தேல் குடும்பத்தில் ஓர் அங்கத்தினனாக இருக்கிறான், ஒரு மகள் அவளுடைய கணவனோடும் இரண்டு மகன்களோடும் கிளைக்காரியாலயங்களில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.—3 யோவான் 4.
முன்னோக்கிப் பார்க்கையில், முழு பூமியும் பரதீஸாக இருக்கையில் அதில் வாழும் எதிர்பார்ப்பை நான் எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அதன் அழகு நான் பிறந்த இடமாகிய அந்த அழகிய பசுமையான பள்ளத்தாக்கின் அழகையும் விஞ்சிவிடும். உயிர்த்தெழுதலில் என் அம்மாவையும் அப்பாவையும் திரும்ப வரவேற்று மீட்கும் பொருள், ராஜ்யம் இன்னும் யெகோவாவுடைய கவனிப்பின் மற்ற எல்லா அத்தாட்சிகளையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துவது எத்தனை சிலாக்கியமாக இருக்கும்.
கடவுள் என்னை விசாரிக்கிறவராக இருக்கிறார் என்று அறிந்திருப்பதால் உறுதிப்படும் என்னுடைய தீர்மானம், சங்கீதம் 104:33-ல் சங்கீதக்காரன் சொன்னவிதமாகவே இருக்கிறது: “நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.”—சார்ன் வேராராவ் சொன்னபடி.
[பக்கம் 26-ன் படம்]
[பக்கம் 28-ன் படம்]
நியூசிலாந்தில் 1950-ல் கட்டப்பட்ட முதல் ராஜ்ய மன்றம்