குடும்பத்தில் இன்னல்—நம்முடைய காலங்களின் ஓர் அடையாளம்
குடும்ப இன்னல்—இது திருமணம், பிள்ளைகளைப் பெற்று வளர்த்தல் ஆகியவற்றின் பரம்பரை விதிகள் பழமைப்பட்டுப் போயின என்பதற்கு ஓர் அடையாளம் என அநேகர் கருதுகின்றனர். மற்றவர்கள் இது அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தின் விளைவு என்று கருதுகின்றனர். வேறு சிலர் நவீனகால தொழில்நுட்பத்திற்கு பலியான அநேக காரியங்களில் இதுவும் ஒன்று என்பதாக நினைக்கின்றனர். உண்மையில் இன்று குடும்பங்கள் எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் பிரச்னைகள் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஏதோவொன்றைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. 2 தீமோத்தேயு 3:1-4-ல் உள்ள பைபிளின் வார்த்தைகளை கவனியுங்கள்:
“கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் இருப்பார்கள்.”
இப்படிப்பட்ட வார்த்தைகள் இன்றைய பிரச்னைகளின் அடிவேருக்குச் செல்கின்றன அல்லவா? இன்றைய குடும்ப இன்னல் இவ்வுலகத்தின் கடைசிநாட்களின்போது நடைபெறும் என்று தீர்க்கதரிசனமாக முன்னுரைக்கப்பட்ட நிலைமைகளின் தெளிவான நேரடியான விளைவாயிருக்கிறது. இந்த இன்னல் மிகுந்த காலப்பகுதி 1914-ம் ஆண்டில் ஆரம்பமானது என்பதற்கு நிரூபிக்கவல்ல அத்தாட்சி இருக்கிறது.a அச்சமயத்திலிருந்து பிசாசாகிய சாத்தான் என்றழைக்கப்பட்ட மீமானிட ஆவி சிருஷ்டியின் செல்வாக்கு குறிப்பாக நச்சுத்தன்மையுடையதாய் இருக்கிறது.—மத்தேயு 4:8-10; 1 யோவான் 5:19.
ஆண்டு 1914 முதற்கொண்டு பூமியின் எல்லைக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் சாத்தான் “தனக்குக் கொஞ்சங்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டிருக்கிறான்.” (வெளிப்படுத்துதல் 12:7-12) “பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய” கடவுளுக்குச் சாத்தான் தீவிரமான எதிரியாக இருப்பதனால், குடும்பங்களுக்கு இப்பூமி இடர் நிறைந்த இடமாக ஆகியிருப்பது ஆச்சரியமாயிருக்கிறதா? (எபேசியர் 3:15) எல்லா மனிதவர்க்கத்தையும் கடவுளிடமிருந்து விலக்கிவிடவேண்டுமென்று சாத்தான் தீர்மானமாய் இருக்கிறான். குடும்பங்களை தாக்குவதற்கு பிரச்னைகளை உபயோகிப்பதன் மூலமாக அல்லாமல் வேறு எந்த மேலான வழியில் அவன் இதைச் சாதிக்கமுடியும்?
இப்படிப்பட்ட மீமானிட தாக்குதலிலிருந்து குடும்பங்களை பாதுகாக்க மேட்டிமையுள்ள வல்லுநர்களின் பேச்சளவுள்ள கோட்பாடுகளை விட அதிகம் தேவைப்படுகிறது. எனினும், சாத்தானைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.” (2 கொரிந்தியர் 2:11) சாத்தான் தாக்குதல் செய்யும் திட்டவட்டமான வழிகளில் சிலவற்றை அறிந்திருப்பது ஓரளவு பாதுகாப்பு தரும்.
பணமும் வேலையும்
சாத்தானின் அதிக ஆற்றல்வாய்ந்த தாக்குதல் கருவிகளில் ஒன்று பொருளாதார அழுத்தம் ஆகும். இவைகள் “கொடிய காலங்களாக” இருக்கின்றன. அல்லது “நெருக்கடியான காலங்கள்” என்று ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வெர்ஷன் 2 தீமோத்தேயு 3:1-ஐ மொழிபெயர்க்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் வேலையின்மை, குறைவான ஊதியம், அடிப்படையான தேவைகள் குறைவுபடுவது போன்ற பிரச்னைகள் குடும்பங்களுக்கு அதிக துயரத்தை ஏற்படுத்துகின்றன. எனினும், செல்வமிக்க ஐக்கிய மாகாணங்களிலும்கூட பொருளாதார அழுத்தங்கள் வினைமையான பாதிப்பையுடையதாய் இருக்கின்றன. குடும்ப சச்சரவுகளின் முக்கியமான காரணங்களில் ஒன்று பணம் என்று ஐ. மா.-வின் ஆய்வு ஒன்று வெளிக்காட்டியது. உலகப்பிரகாரமான வேலை எடுத்துக்கொள்ளும் “நேரம், கவனம், ஊக்கம்” ஆகியவைகூட திருமண பொறுப்புகளைப் படிப்படியாக அழிக்கும் “தந்திரமான விரோதியாக” இருக்கலாம் என்று சீக்ரட்ஸ் ஆப் ஸ்ட்ராங் பாமிலீஸ் என்ற புத்தகம் விளக்குகிறது.
பெரும் எண்ணிக்கையான பெண்கள் வேலை தேடும்படி சூழ்நிலைகள் வற்புறுத்தியிருக்கின்றன. எழுத்தாளர் வான்ஸ் பாக்கர்ட் அறிக்கை செய்கிறார்: “மூன்று வயதுக்குக் கீழ் இருக்கும் அமெரிக்காவின் கால் பகுதி குழந்தைகளும், தத்துநடை போட்டு செல்லும் சிறுவர்களும் வீட்டை விட்டு வெளியே சென்று வேலைசெய்யும் தாய்மார்களைக் கொண்டிருக்கின்றனர்.” திருப்தியே செய்யமுடியாத சிறுபிள்ளைகளின் தேவைகளையும், வெளியே சென்று வேலையையும் கவனித்துக்கொள்வது முற்றிலும் சோர்வூட்டுவதாகவும் ஊக்கமிழக்கச்செய்வதாகவும் இருக்கலாம்—இது பெற்றோர் மீதும் பிள்ளைகள் மீதும் எதிர்மறையான விளைவுகளை—கொண்டிருக்கக்கூடும். போதுமான அளவு பிள்ளை-கவனிப்பு ஏற்பாடுகள் ஐக்கிய மாகாணங்களில் குறைவுபடுவதால், “இன்று அநேக இலட்சம் பிள்ளைகள் தங்கள் ஆரம்ப வயதுகளில் நல்ல கவனிப்பு போதுமான அளவு பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றனர்,” என்று பாக்கர்ட் கூடுதலாக சொல்கிறார்.—அவர் என்டேன்ஜர்ட் சில்ட்ரன்.
வேலை செய்யும் இடமே குடும்ப ஒற்றுமையை அழித்துவிடுகிறது. அநேக வேலையாட்கள் தங்கள் உடன்வேலையாட்களோடு பாலுறவு சம்பந்தமான தவறான விவகாரங்களுக்குள் இழுக்கப்பட்டிருக்கின்றனர். வெற்றிக்காக வீணாக நாடிச்செல்வதில் இன்னும் மற்றவர்கள் தங்களை உட்படுத்தியிருக்கின்றனர். வாழ்க்கைப்பணியில் முன்னேறுவதற்காக தங்கள் குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்கின்றனர். (பிரசங்கி 4:4 ஒப்பிடவும்.) ஒரு மனிதன் வியாபாரப் பிரதிநிதியாக தன் வேலையில் அவ்வளவு முழுவதுமாக கவனத்தைச் செலுத்தியதால், அவருடைய மனைவி தன்னை “மெய்ந்நடப்பில் ஒற்றை பெற்றோர்” என்று விவரித்தாள்.
பலவீனப்படுத்தப்பட்ட திருமண பிணைப்புகள்
திருமண ஏற்பாடும்கூட தாக்குதலின் கீழ் வந்துள்ளது. தி இன்டிமெட் என்வைரன்மென்ட் என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “வாழ்க்கைத் துணைகளில் ஒருவர் திருமணத்துக்கு எதிராக வேசித்தனம், கொடுமை, படுமோசமான அக்கறையின்மை போன்ற படுமோசமான குற்றம் செய்தாலொழிய ஒரு தம்பதி திருமணமான நிலையில் இருப்பர் என்று கடந்த காலங்களில் எதிர்பார்க்கப்பட்டது—இன்று பெரும்பான்மையர் தனிப்பட்ட திருப்தியே திருமணத்தின் நோக்கம் என்பதாக காண்கின்றனர்.” சந்தோஷமின்மை, சலிப்பு அல்லது தனிமை ஆகியவற்றுக்கு மாற்றுமருந்தாக திருமணம் கருதப்படுகிறது—வாழ்நாட்காலம் முழுவதும் மற்றொரு நபருடன் உறுதியாக ஈடுபட்டிருக்க வேண்டியதாக அல்ல. திருமணத்திலிருந்து நீங்கள் எதை பெற்றுக்கொள்ளலாம் என்பது தான் இப்போது முக்கியமாக இருக்கிறது, திருமணத்துக்கு நீங்கள் என்ன உதவியளிக்கிறீர்கள் என்பதன் பேரில் அல்ல. (அப்போஸ்தலர் 20:35-ஐ வேறுபடுத்திப் பாருங்கள்.) “திருமணத்தைச் சுற்றியிருக்கும் மதிப்பீடுகளில் இப்பெரிய மாற்றம்,” திருமண பிணைப்புகளை அதிக பலவீனப்படுத்தியிருக்கிறது. தனிப்பட்ட திருப்தி தங்கள் பிடியிலிருந்து நழுவிவிட்டால், தம்பதிகள் விவாகரத்து செய்வதை உடனடியான தீர்வாக நாடுகின்றனர்.
“தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்,” என்று “கடைசி நாட்களில்,” இருக்கும் ஜனங்கள் பைபிளில் தீர்க்கதரிசனமாக விவரிக்கப்பட்டிருக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:4, 5) மதத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி திருமணத்தை அழிப்பதில் ஒரு பங்கை வகித்திருக்கிறது என்று அநேக வல்லுநர்கள் நினைக்கின்றனர். தி கேஸ் அகெய்ன்ஸ்ட் டிவோர்ஸ் என்ற தன் புத்தகத்தில் டாக்டர் டயன் மெட்வெட் எழுதினார்: “அநேக மதங்களின்படி, திருமணம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று கடவுள் சொன்னார். நீங்கள் கடவுளைக் குறித்து நிச்சயமில்லாதவராக இருந்தால் அல்லது அவர் மீது நம்பிக்கையில்லையென்றால், நீங்கள் உங்களுக்கு விருப்பமானதைச் செய்கிறீர்கள்.” அதன் விளைவாக ஒரு திருமணத்துக்கு பிரச்னைகள் இருந்தால், தம்பதிகள் சரியான தீர்வுகளை நாடுவதில்லை. “அவர்கள் அவசரமாக பதற்றத்துடன் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருகின்றனர்.”
இளைஞர் தாக்குதலின் கீழ் உள்ளனர்
இன்றைய அழுத்தங்களினால் பிள்ளைகள் துன்பங்களை அனுபவிக்கின்றனர். வேதனை தரும் வகையில் பெரும் எண்ணிக்கையான பிள்ளைகள் வன்முறையாக அடிக்கப்படுகின்றனர். சொற்களால் அல்லது பால்சம்பந்தமான விதத்தில் தங்கள் சொந்த பெற்றோரால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றனர். விவாகரத்தின் மூலம் இலட்சக்கணக்கான பிள்ளைகள் இரண்டு பெற்றோரின் அன்பான ஆதரவை கொண்டில்லாமல் அதை இழந்துவிட்டிருக்கின்றனர். பெற்றோரின் விவாகரத்து வேதனை வாழ்நாட்காலம் முழுவதும் நீடித்திருக்கிறது.
சக்திவாய்ந்த செல்வாக்குகளினால் இளைஞர் தாக்கப்படுகின்றனர். ஒரு சராசரி அமெரிக்க இளைஞன் 14 வயது ஆவதற்குள், 18,000 கொலைகள், எண்ணற்ற பலவகையான வன்முறைகள், தவறான பாலுறவு, கொடுமையில் விருப்பம் கொள்ளுதல், குற்றச்செயல் ஆகியவற்றை வெறுமென தொலைக்காட்சியின் மூலம் அவன் பார்த்திருப்பான். இசையும்கூட இளைஞர் மீது அதிக செல்வாக்கு செலுத்துகிறது. அவற்றில் அதிகம் அதிர்ச்சிதரும் வகையில் இழிவானதாகவும், பால்சம்பந்தமான விஷயங்களை வெளிப்படையாக கூறுவதாகவும் அல்லது பேய்களைப் பற்றியதாகவும்கூட இருக்கிறது. கடவுளிலும் பைபிளிலும் விசுவாசத்தைத் தகர்க்கும் இயல்புடைய பரிணாமம் போன்ற கோட்பாடுகளைப் பள்ளிகள் இளைஞருக்குக் கற்பிக்கின்றன. திருமணமாவதற்கு முன்பு பாலுறவு, மதுபானம் அல்லது போதைப்பொருள் துர்ப்பிரயோகம் ஆகியவற்றில் பங்குகொள்ள சகாக்களின் அழுத்தம் அநேகரைத் தூண்டுகிறது.
குடும்ப இன்னல்களின் வேர்கள்
ஆகையால் குடும்பங்களின் மீது தாக்குதல் அதிக பரவலாகவும் பாழாக்குவதாகவும் இருக்கக்கூடும். குடும்பங்கள் தப்பிப்பிழைக்க எது உதவி செய்யும்? குடும்ப ஆலோசகர் ஜான் ப்ராட்ஷா ஆலோசனை கூறுகிறார்: “பிள்ளை வளர்ப்பு பற்றிய நம்முடைய விதிகள் 150 வருடங்களாக காலத்துக்கு ஒத்தாற்போல் புதுநிலைக்கு கொண்டுவரப்படவில்லை . . . பழைய விதிகளை இனிமேலும் செயல்படுத்தமுடியவில்லை, என்பதே எனது நம்பிக்கை.” எனினும், மனிதன் ஏற்படுத்தும் கூடுதலான விதிகள் இதற்குப் பரிகாரமாக இல்லை. யெகோவா தேவன் தான் குடும்பத்தை ஆரம்பித்து வைத்தவர். நம்முடைய தனிப்பட்ட சந்தோஷத்தில் குடும்ப வாழ்க்கை எவ்வளவு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதையும், ஒரு குடும்பத்தை சந்தோஷமானதாகவும் பலமுள்ளதாகவும் ஆக்குவதற்கு தேவையானது என்ன என்பதையும் மற்ற எவரைக்காட்டிலும் அவருக்கு நன்றாகத் தெரியும். குடும்ப இன்னல்களுக்கு அவருடைய வார்த்தையாகிய பைபிள் தீர்வைக் கொடுக்கிறது என்பது நம்மை ஆச்சரியப்படுத்த வேண்டுமா?
குடும்ப வாழ்க்கை எவ்வாறு உருக்குலைந்து போனது என்று பைபிள் விளக்குகிறது. முதல் மானிட தம்பதி, ஆதாமும் ஏவாளும் ஓர் அழகிய பூங்கா சூழலில் வைக்கப்பட்டனர். பூமியை ஒரு பூகோள பரதீஸாக மாற்றியமைக்க வேண்டும் என்ற பலன்தரும் சவால்மிகுந்த வேலை அவர்களுக்கு அளிக்கப்பட்டது. ஆதாம் குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டார். ஏவாள் ஆதாமின் “உதவியாளாக,” அல்லது “இணைந்து முழுமையாக்குகிறவளாக” அவனுடைய தலைமைத்துவத்தோடு ஒத்துழைக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் ஏவாள் இந்த ஏற்பாட்டுக்கு விரோதமாக கலகம் செய்தாள். அவள் தன் கணவனின் தலைமைஸ்தானத்தில் தலையிட்டு, அவர்கள் மீது கடவுள் வைத்திருந்த ஒரே தடையுத்தரவை மீறினாள். பிறகு ஆதாம் தன் தலைமைஸ்தானத்தை துறந்துவிட்டு அவளோடு இக்கலகத்தில் சேர்ந்துகொண்டான்.—ஆதியாகமம் 1:26–3:6.
கடவுளுடைய ஏற்பாட்டிலிருந்து விலகிச் சென்றதால் ஏற்பட்ட அழிவுக்குரிய பாதிப்புகள் உடனடியாக வெளிப்படையாக ஆயின. இனிமேலும் மாசற்றவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் இல்லாமல் ஆதாமும் ஏவாளும் வெட்கம், குற்ற உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தினர். இதற்கு முன்பு ஆதாம் தன் மனைவியை உணர்ச்சி பொங்கும் ஆர்வத்தோடு கவிதை வடிவில் விவரித்தான். ஆனால் இப்போது உணர்ச்சியற்ற தன்மையில் பாசமின்றி ‘நீர் தந்த ஸ்திரீ’ என்று அவளைப்பற்றி குறிப்பிட்டான். அந்த எதிர்மறையான குறிப்பு திருமணம் சம்பந்தமான அவலநிலையின் வெறும் ஆரம்பமாக இருந்தது. தன் தலைமைஸ்தானத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு ஆதாம் எடுத்த வீணான முயற்சிகள் அவன் ‘அவளை ஆண்டுகொள்வதில்’ விளைவடையும். ஏவாள் தன் கணவனுக்காக “மிகுந்த விருப்பம்” கொண்டிருப்பாள், அளவுக்குமீறி அல்லது சமநிலையற்ற விதத்தில் கொண்டிருப்பாள்.—ஆதியாகமம் 2:23; 3:7-16.
ஆதாம், ஏவாளின் திருமணம் சம்பந்தமான சச்சரவு அவர்களுடைய பிள்ளைகளின் மீது தீங்கு உண்டாக்கும் விளைவைக் கொண்டிருந்தது ஆச்சரியந்தருவதாய் இல்லை. அவர்களுடைய முதல் மகனாகிய காயீன் மனமாரத்துணிந்து செயல்பட்ட கொலைக்காரனாக ஆனான். (ஆதியாகமம் 4:8) காயீனின் வழித்தோன்றிய லாமேக்கு பதிவின்படி முதல் பன்மனைவிகளையுடையவனாக ஆவதன் மூலம், குடும்ப வாழ்க்கையின் தரம் குறைந்து போவதற்கு மேலும் கூட்டினான். (ஆதியாகமம் 4:19) இவ்வாறு ஆதாமும் ஏவாளும் பாவத்தையும் மரணத்தையும் மட்டுமல்லாமல், ஒரு நோயுற்ற குடும்ப படிவத்தையும் விட்டுச் சென்றிருக்கின்றனர். அச்சமயத்திலிருந்து மனித இனத்தின் நிலைமை அவ்வாறே இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட கடைசிநாட்களின் போது, குடும்ப பூசல் எப்போதும் இல்லாத அளவு உச்சநிலையை அடைந்திருக்கிறது.
செழித்தோங்கும் குடும்பங்கள்
எனினும், இன்றைய அழுத்தங்களின் கீழ் எல்லா குடும்பங்களுமே நலிந்து வீழ்ந்து விடுவதில்லை. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில் ஒரு கணவன் தன் மனைவி, இரண்டு மகள்களோடு ஒரு சிறு சமுதாயத்தில் வாழ்ந்து வருகின்றார். அவர்களுடைய அயலாரில் அநேகர், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் சந்ததிப் பிளவைக் கொண்டிருந்தாலும், இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இது இல்லை, போதைப்பொருட்கள், பாலுறவு போன்ற காரியங்களில் தங்கள் மகள்கள் ஒருவேளை ஈடுபடுவார்கள் என்ற கவலையும் அவர்களுக்கு இல்லை. திங்கட்கிழமை மாலைகளில் மற்ற இளைஞர் டிவியை உற்றுநோக்கிக்கொண்டிருந்தாலும், இவர்களுடைய முழு குடும்பமும் பைபிள் கலந்தாலோசிப்புக்காக உணவருந்தும் மேஜையைச் சுற்றி ஒன்றுகூடுகிறார்கள். “ஒன்றாக இருப்பதற்கும் பேசுவதற்கும் திங்கட்கிழமை இரவு எங்களுடைய விசேஷ இரவாக இருக்கிறது,” என்று அவர் விளக்குகிறார். “எங்களுடைய மகள்கள் தங்களுடைய பிரச்னைகளை எங்களோடு தாராளமாகப் பேசுகிறார்கள்.”
மறுபட்சத்தில், நியூ யார்க் பட்டணத்தில் ஓர் ஒற்றை பெற்றோர் இருக்கிறார். அவரும்கூட தன்னுடைய இரண்டு மகள்களோடு அசாதாரணமான குடும்ப ஐக்கியத்தை அனுபவித்து வருகிறாள். அவளுடைய இரகசியம்? “வார இறுதிநாட்கள் முடியும்வரை நாங்கள் டிவியை மூடி வைத்துவிடுவோம்” என்று அவள் விளக்குகிறாள். “ஒரு பைபிள் வசனத்தின் பேரில் தினமும் நாங்கள் கலந்தாலோசிக்கிறோம். குடும்ப பைபிள் கலந்தாலோசிப்புக்காக ஒரு மாலையை நாங்கள் ஒதுக்கி வைக்கிறோம்.”
இரண்டு குடும்பங்களுமே யெகோவாவின் சாட்சிகள். பைபிளில் குடும்பங்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் புத்திமதியை அவர்கள் பின்பற்றுகின்றனர். பைபிளின் புத்திமதியை பின்பற்றுவது விரும்பத்தக்க விளைவுகளை கொடுக்கிறது. என்றாலும், அவர்கள் அசாதாரணமானவர்கள் அல்லர். அப்புத்தகத்தில் இருக்கும் குடும்ப வாழ்க்கைக்கான விதிகளை பொருத்துவதன் மூலம் நல்ல விளைவுகளை அவர்களைப் போன்றே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பெற்றுக்கொண்டிருக்கின்றன.b அந்த விதிகள் என்ன? உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்துக்கும் அவை எவ்வாறு பயனளிக்கலாம்? இதற்கு பதிலை அறிய, அடுத்த பக்கத்தின் ஆரம்பத்தில் இருக்கும் கட்டுரைகளை நீங்கள் சிந்திக்கும்படி நாங்கள் அழைக்கிறோம்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் சொஸையிட்டி வெளியிட்டிருக்கும் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றென்றும் வாழலாம் என்ற புத்தகத்தில் அதிகாரம் 18-ல், கடைசி நாட்கள் 1914-ல் ஆரம்பமானது என்பதற்கு கூடுதலான அத்தாட்சியை பாருங்கள்.
b ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பின் மூலம், குடும்பத்தில் பைபிள் நியமங்களைப் பொருத்துவதற்கு யெகோவாவின் சாட்சிகள் தனிப்பட்ட உதவியளிக்கின்றனர். இப்பத்திரிகையை பிரசுரிப்பவர்களுக்கு எழுதுவதன் மூலம் நீங்கள் அவர்களோடு தொடர்புகொள்ளலாம்.
[பக்கம் 4-ன் படம்]
ஏழ்மையான பொருளாதார நிலைமைகள், வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கும் குடும்பங்களுக்கு அதிக இன்னல்களை ஏற்படுத்துகின்றன
[பக்கம் 7-ன் படம்]
பைபிள் நியமங்களைப் பொருத்துவதன் மூலம் அநேக குடும்பங்கள் இன்றைய அழுத்தங்களை எதிர்த்து நிற்கின்றன