மூப்பர்களே—சாந்தமுள்ள ஆவியோடே மற்றவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்
ஓர் உண்மையான கிறிஸ்தவனின் இருதயத்தை, நல்ல கனிகொடுக்கும் ஓர் ஆவிக்குரிய தோட்டத்திற்கு ஒப்பிடலாம். பொதுவாக அங்கு அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் மற்றும் இச்சையடக்கம் செழித்தோங்கும். ஏன்? மொத்தத்தில், இவை யெகோவா தேவனால் தம்முடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் கனிகளாகும். (கலாத்தியர் 5:22, 23) இருப்பினும், தன்னுடைய பரலோக தகப்பனுக்கு மகிழ்ச்சியளிக்கும் இடமாக தன்னுடைய இருதயமாகிய தோட்டத்தைப் பேணவிரும்பும் ஒவ்வொரு கிறிஸ்தவனும், சுதந்தரிக்கப்பட்ட பாவமாகிய களைகளுக்கு எதிராக ஒரு பலமான, தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தவேண்டும்.—ரோமர் 5:5, 12.
சிலநேரங்களில், விரும்பத்தகாத ஏதோவொன்று ஒரு தேவ பக்தியுள்ள ஆளின் அபூரண இருதயத்தில் வளர துவங்குகிறது. அவன் அல்லது அவள் ஒரு சிறந்த ஆவிக்குரிய பதிவைக் கொண்டிருக்கலாம். ஆனால் பின்னர் அங்கு ஏதோவொரு பிரச்னை எழும்புகிறது; இது ஒருவேளை ஆரோக்கியமற்ற கூட்டுறவுகள் அல்லது ஒரு ஞானமற்ற தீர்மானத்தில் வேரூன்றப்பட்டதாய் இருக்கலாம். அப்படிப்பட்ட ஓர் ஆளுக்கு சபை மூப்பர்கள் எப்படி ஆவிக்குரிய விதத்தில் உதவலாம்?
அப்போஸ்தல அறிவுரை
தவறிழைத்த ஒரு கிறிஸ்தவனுக்கு உதவிசெய்வதில், மூப்பர்கள் அப்போஸ்தலன் பவுலின் அறிவுரையைப் பின்பற்றவேண்டும்: “சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், [ஒரு தவறான அடியை எடுத்துவைத்து அவன் அதைக்குறித்து உணர்வதற்குள், NW] ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.” (கலாத்தியர் 6:1) ஓர் உடன் விசுவாசி ‘ஒரு தவறான அடியை எடுத்துவைத்திருந்தால், அவன் அதைக்குறித்து உணர்வதற்குள்,’ கூடிய விரைவில் அவனுக்கு உதவியளிக்கும் உத்தரவாதத்தை மூப்பர்கள் கொண்டிருக்கின்றனர்.
“ஓர் ஆண்” தவறான அடியை எடுத்துவைப்பது குறித்து பவுல் குறிப்பிடுகிறார். இருப்பினும், இங்கு பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தை (ஆன்த்ரோபாஸ்) ஓர் ஆணுக்கு அல்லது ஒரு பெண்ணுக்குப் பொருந்தக்கூடும். மேலும் ஓர் ஆளைச் “சீர்பொருந்தப்பண்ணு”தல் என்பதன் அர்த்தம் என்ன? இந்தக் கிரேக்க பதம் (கடார்டிஸோ) “சரியான ஒழுங்கிற்குக் கொண்டுவருதல்” என பொருள்படும். இதே வார்த்தை வலைகளைப் பழுதுபார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (மத்தேயு 4:21) ஓர் ஆளின் முறிந்த எலும்பை பொருத்துவதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு மருத்துவர் தன்னுடைய நோயாளிக்குத் தேவையற்ற வலியை உண்டுபண்ணுவதைத் தவிர்க்கும்படியாக இதை கவனமாகச் செய்கிறார். இதேவிதமாக, ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரியை சரியான ஆவிக்குரிய ஒழுங்கிற்குக் கொண்டுவரும்படி உதவுவதற்கு கவனம், சாதுரியம் மற்றும் பரிவிரக்கம் தேவைப்படுகிறது.
மூப்பர்கள் சாந்தமுள்ள ஆவியுடன் ஓர் ஆளை சீர்பொருந்தப்பண்ண முயற்சிசெய்யும்போது, அவர்கள் தங்களுடைய சொந்த ஆவிக்குரிய தன்மைக்குச் சான்றளிக்கின்றனர். நிச்சயமாக, சாந்தகுணமுள்ள இயேசு அப்படிப்பட்ட காரியங்களைச் சாந்தத்துடன் கையாளுவார். (மத்தேயு 11:29) ஒரு தவறான அடியை எடுத்துவைத்த யெகோவாவின் ஊழியனிடமாக மூப்பர்கள் இந்தப் பண்பை வெளிக்காட்டவேண்டியது அவசியம். ஏனென்றால், தங்களுடைய இருதயத்தின் உள்நோக்கங்களுக்கு மாறாக ஒரு பாவத்தால் மேற்கொள்ளப்படுவதிலிருந்து அவர்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல. ஏற்கெனவே, கடந்த காலத்தில் அவ்வாறு நிகழவில்லை என்றால் எதிர்காலத்தில் சம்பவிக்கக்கூடும்.
இந்த ஆவிக்குரிய தகுதிபெற்றவர்கள் அன்புடன் தங்களுடைய உடன் விசுவாசிகளின் ‘பாரங்களைச் சுமக்கவேண்டும்.’ உண்மையில், ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரிக்கு சாத்தானுக்கு, சோதனைகளுக்கு, மாம்ச பலவீனங்களுக்கு மற்றும் பாவத்தின் வேதனைகளுக்கு எதிராக போராடுவதில் உதவி செய்யவேண்டும் என்பதை மூப்பர்கள் தங்கள் இருதயத்தில் கொண்டிருக்கிறார்கள். இது கிறிஸ்தவ கண்காணிகள் “கிறிஸ்துவின் ஊழியத்தை நிறைவேற்று”வதற்கு நிச்சயமாகவே ஒரு வழியாக இருக்கிறது.—கலாத்தியர் 6:2.
உண்மையான ஆவிக்குரிய தகுதிகளைக் கொண்டிருப்பவர்கள், “ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்,” என்பதை உணர்ந்தவர்களாய் மனத்தாழ்மையுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (கலாத்தியர் 6:3) சரியானதாகவும் உதவியாகவும் இருப்பவற்றைச் செய்வதற்காக மூப்பர்கள் எவ்வளவுதான் கடினமாக முயற்சிசெய்தாலும், பரிபூரணமான அன்பான பரிவிரக்கமுள்ள கடவுளின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிலிருந்து எப்படியும் குறைவுபடுவர். ஆனால் அவர்களுடைய மிகச் சிறந்ததைச் செய்யாமலிருப்பதற்கு அது எந்தக் காரணமும் இல்லை.
ஓர் உடன் விசுவாசியை அகந்தையுடன், உன்னைவிட நான் பரிசுத்தவான் என்ற முறையில் பழித்துரைப்பது தவறாக இருக்கும் என்பதை மூப்பர்கள் அறிந்திருக்கின்றனர்! இயேசு நிச்சயமாக அவ்வாறு செய்யமாட்டார். ஏன், அவர் தம்முடைய நண்பர்களுக்கு மட்டுமல்ல ஆனால் தம்முடைய பகைவர்களுக்குங்கூட தம்முடைய உயிரைக் கொடுத்தார்! சகோதர சகோதரிகளைக் கஷ்டங்களிலிருந்து விடுவித்து தங்கள் பரலோகத் தந்தையிடமும் அவருடைய நீதியான தராதரங்களுக்கும் நெருக்கமாகக் கொண்டுவர உதவவும் முயற்சிசெய்யும்போது, அதேவிதமான அன்பை வெளிக்காட்டவே மூப்பர்கள் பிரயாசப்படுகிறார்கள். உடன் வணக்கத்தாரை சீர்பொருந்தப்பண்ணுவதற்கு மூப்பர்களுக்கு உதவும் சில படிகள் யாவை?
சில உதவும் படிகள்
ஒரு சாந்தமான முறையில் பேசுகையிலும் செயல்படுகையிலும் ஜெபத்தோடே யெகோவாவின் மீது சார்ந்திருங்கள். இயேசு சாந்தமுள்ளவராக, வழிநடத்தலுக்காக தம் பரலோக தந்தையிடம் ஊக்கமாக ஜெபிப்பவராக, எப்போதும் அவருக்கு பிரியமான காரியங்களைச் செய்பவராக இருந்தார். (மத்தேயு 21:5; யோவான் 8:29) ஒரு தவறான அடியை எடுத்துவைத்த ஒருவரை சீர்பொருந்தப்பண்ண முயற்சிசெய்கையில் மூப்பர்களும் அவ்வாறே செய்யவேண்டும். ஒரு சாந்தமுள்ள உதவிமேய்ப்பராக ஒரு மூப்பர் தன்னுடைய பேச்சில் மிரட்டுபவராக இல்லாமல், உற்சாகப்படுத்துபவராகவும் கட்டியெழுப்புபவராகவும் இருப்பார். கலந்தாலோசிப்பின்போது, அவர் உதவி தேவைப்படும் கிறிஸ்தவன் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காக கூடியளவு செளகரியமாக உணரும்படி, அப்படிப்பட்ட ஒரு சூழலை உருவாக்க முயற்சி செய்வார். அதை அடைவதற்கு இருதயப்பூர்வமான துவக்க ஜெபம் பெரிதும் உதவியாக இருக்கும். அறிவுரையைக் கொடுப்பவர் இயேசுவைப்போலவே கடவுளுக்குப் பிரியமான காரியங்களைச் செய்ய விரும்புகிறார் என்பதை அறிந்திருந்தால், சாந்தத்துடன் கொடுக்கப்பட்ட அறிவுரையைப் பெறுபவர் இன்னும் அதிக விரைவில் தன் இருதயத்தை அதற்குச் செலுத்துவார். அவ்வளவு அன்பான, சாந்தமான முறையில் அவருக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரையைப் பொருத்தி பிரயோகிப்பதன் அவசியத்தைப் பெரும்பாலும் முடிவான ஜெபம் அந்த நபருக்கு அழுத்திக்காண்பிக்கும்.
ஜெபத்திற்குப்பின் உண்மையாகப் பாராட்டுங்கள். இது அந்தத் தனிநபரின் தயவு, நம்பத்தக்கத்தன்மை அல்லது ஊக்கந்தளராமை போன்ற நல்ல பண்புகளோடு தொடர்புடையதாய் இருக்கக்கூடும். ஒருவேளை பல ஆண்டு காலமாக, அவன் அல்லது அவள் உண்மையாய் யெகோவாவைச் சேவிப்பதில் கொண்டிருந்த பதிவைப்பற்றி குறிப்பிடலாம். இந்தவிதத்தில், நாம் அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறோம் என்றும் அவரிடம் கிறிஸ்துவைப்போன்ற மதிப்பைக் கொண்டிருக்கிறோம் என்றும் காண்பிக்கிறோம். இயேசு தியத்தீரா சபைக்கான செய்தியை, இவ்வாறு சொல்வதன்மூலம் ஒரு பாராட்டுடன் துவங்கினார்: “உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.” (வெளிப்படுத்துதல் 2:19) அவர்கள் செய்துவரும் நல்ல வேலையை இயேசு அறிந்திருந்தார் என்று அந்த வார்த்தைகள் அந்தச் சபை அங்கத்தினருக்கு உறுதியளித்தன. அந்தச் சபையில் குறைகள் இருந்தாலும்—ஒரு “யேசபேல்” செல்வாக்கு அங்கு பொறுத்துக்கொள்ளப்பட்டது—மற்ற அம்சங்களில் அது நல்லபடியாக செயல்பட்டது; அவர்களுடைய வைராக்கியமான நடவடிக்கை கவனிக்கப்படாமல் போய்விடவில்லை என்பதை அந்தச் சகோதர சகோதரிகள் அறிந்துகொள்ளவேண்டும் என்று இயேசு விரும்பினார். (வெளிப்படுத்துதல் 2:20) இதேவிதமாகவே, மூப்பர்கள் தகுந்த இடத்தில் பாராட்ட வேண்டும்.
ஒரு தவறான அடி எடுத்துவைத்தலைச் சூழ்நிலைகள் தேவைப்படுத்துவதைவிட வினைமையானதாகக் கையாளாதீர்கள். மூப்பர்கள் கடவுளுடைய மந்தையைப் பாதுகாத்து அவருடைய அமைப்பைச் சுத்தமாக வைக்கவேண்டும். ஆனால் பலமான அறிவுரை தேவைப்படும் சில ஆவிக்குரிய தவறான அடி எடுத்துவைத்தல்கள், நியாய விசாரணையின்றி ஒன்று அல்லது இரண்டு மூப்பர்களால் விவேகமாக கையாளப்படலாம். அநேகருடைய விஷயத்தில், வேண்டுமென்று பொல்லாப்பு செய்வதைவிட மனித பலவீனங்களே ஒரு கிறிஸ்தவனின் தவறான அடியெடுப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. மூப்பர்கள் மந்தையை மென்மையாக நடத்தி இதை நினைவில் கொள்ளவேண்டும்: “இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.” (யாக்கோபு 2:13; அப்போஸ்தலர் 20:28-30) அப்படியென்றால், காரியங்களைப் பெரிதுபடுத்துவதற்கு மாறாக, மனம்வருந்தும் உடன்விசுவாசிகளிடம், நம்முடைய பரிவும் இரக்கமுமுள்ள கடவுளாகிய யெகோவாவைப்போலவே மூப்பர்கள் ஒரு சாந்தமான முறையில் நடந்துகொள்ளவேண்டும்.—எபேசியர் 4:32.
அந்தத் தவறான அடியை எடுப்பதற்கு வழிநடத்தியிருக்கக்கூடிய காரணங்களுக்குப் புரிந்துகொள்ளுதலைக் காண்பியுங்கள். தங்களுடைய உடன்விசுவாசி மனம்விட்டுப் பேசும்போது மூப்பர்கள் கவனமாக செவிகொடுக்கவேண்டும். ‘கடவுள் நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான ஆவியைப் புறக்கணிப்பதில்லை,’ என்பதால் அவர்களும் அவ்வாறு செய்யக்கூடாது. (சங்கீதம் 51:17) ஒருவேளை ஒரு விவாகத்துணையின் உணர்ச்சிப்பூர்வ ஆதரவு கிடைக்காததுதானே பிரச்னையின் மூலகாரணமாக இருக்கலாம். கடுமையான, நீண்டகால மனச்சோர்வு, அந்த ஆளுடைய பொதுவாக உறுதியாகவிருக்கும் உணர்ச்சிபலத்தை அரித்திருக்கக்கூடும் அல்லது ஞானமான தீர்மானங்கள் எடுப்பதை மிகவும் கடினமானதாக்கியிருக்கக்கூடும். அன்பான மூப்பர்கள் அத்தகைய காரணங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்வார்கள், ஏனென்றால் பவுல் அவருடைய சகோதரர்களுக்கு “ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள்,” என்று அறிவுறுத்தியிருந்தாலும், “திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்,” என்றும் உந்துவித்தார். (1 தெசலோனிக்கேயர் 5:14) கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களின் வலிமையை மூப்பர்கள் குறைத்துவிடக்கூடாது; அதேநேரத்தில், கடவுளைப்போல கடுமையைக்குறைக்கும் காரணங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும்.—சங்கீதம் 103:10-14; 130:3.
உங்களுடைய உடன்கிறிஸ்தவனின் தன்மதிப்பை அழிப்பதைத் தவிர்க்கவேண்டும். எந்த ஒரு சகோதரன் அல்லது சகோதரியின் மதிப்பை நாம் களவாட ஒருபோதும் விரும்பமாட்டோம் அல்லது அவன் அல்லது அவள் தகுதியற்றவள் என்ற உணர்ச்சியைக் கொடுக்கமாட்டோம். மாறாக, அவரது கிறிஸ்தவ பண்புகளிலும் கடவுளுக்கான அன்பிலுமான நம்முடைய நம்பிக்கையைப்பற்றி உறுதியளித்தல்களைக் கொடுப்பது ஒரு தவறைச் சரிசெய்து கொள்வதற்கு உற்சாகமாக அமையும். பவுல் கொரிந்தியர்களின் “மனவிருப்பத்தை” மற்றும் “ஜாக்கிரதை, [வைராக்கியத்தை, NW]” குறித்து மற்றவர்களிடம் புகழ்ந்ததாகச் சொன்னபோது அவர்கள் தாராளகுணமுள்ளவர்களாய் இருக்கும்படி உற்சாகமூட்டப்பட்டிருக்கவேண்டும்.—2 கொரிந்தியர் 9:1-3.
யெகோவாவை நம்புவதன்மூலம் அந்தப் பிரச்னையை மேற்கொள்ள முடியும் என்று காண்பியுங்கள். ஆம், கடவுளை நம்புவதும் அவருடைய வார்த்தையிலுள்ள அறிவுரையைப் பொருத்திப்பிரயோகிப்பதும் தேவையான சீர்பொருந்துதலைக் கொண்டுவர உதவிச்செய்யும் என்பதை அந்த நபர் காண ஆர்வத்துடன் உதவ முயற்சி செய்யுங்கள். அந்தச் சீர்பொருந்துதலைக் கொண்டுவர, நம்முடைய கூற்றுகள் வேதவார்த்தைகள் மற்றும் பைபிள் அடிப்படையான பிரசுரங்கள்மேல் நிலைநாட்டப்பட்டதாய் இருக்க வேண்டும். நம்முடைய இலக்கில் இரண்டு காரியங்கள் அடங்கும்: (1) உதவி தேவைப்படுபவர் யெகோவாவின் நோக்குநிலையைக் காணவும் புரிந்துகொள்ளவும் உதவுவதும், (2) அவர் எவ்வாறு இந்தத் தெய்வீக வழிமுறைகளை ஓரளவிற்கு புறக்கணித்திருக்கிறார் அல்லது பின்பற்ற தவறியிருக்கிறார் என்பதைக் காண்பிப்பதுமாகும்.
வேதப்பூர்வ அறிவுரையுடன் தயவான ஆனால் பொருத்தமான கேள்விகளையும் இணையுங்கள். இது இருதயத்தைச் சென்றெட்டுவதில் மிகவும் பயனுள்ளதாய் இருக்கக்கூடும். தீர்க்கதரிசியாகிய மல்கியா மூலமாக, அவருடைய ஜனங்கள் எப்படி வழிவிலகிச் சென்றிருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படியாக யெகோவா ஒரு கேள்வியைப் பயன்படுத்தினார். “மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா?” என்று கேட்டார்; அதை தொடர்ந்து: “நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள்,” என்றார். (மல்கியா 3:8) மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, இஸ்ரவேலர் அவர்களுடைய விளைச்சல்களில் பத்தில் ஒரு பங்கை நன்கொடையாகச் செலுத்தாதது யெகோவாவுடையதைத் திருடியதற்குச் சமமாக இருந்தது. இந்தச் சூழ்நிலையைச் சரிப்படுத்துவதற்கு, கடவுள் அவர்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார் என்ற விசுவாசத்துடன், உண்மை வணக்கம் சம்பந்தமான அவர்களுடைய கடமைகளை இஸ்ரவேலர் நிறைவேற்றவேண்டியது அவசியமாக இருந்தது. சிந்தனையைத்தூண்டும் மற்றும் கரிசனையான கேள்விகள் மூலமாக, இன்று சரியான காரியத்தைச் செய்வது, நம் பரலோக தந்தையை நம்புவதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் உட்படுத்தும் என்பதையும் மூப்பர்கள் அழுத்திக் கூறலாம். (மல்கியா 3:10) இந்த எண்ணம் இருதயத்தை எட்டச்செய்வது, நம்முடைய சகோதரன் அவருடைய ‘பாதங்களுக்கு நேரான பாதைகளை’ உருவாக்க உதவுவதில் பெரும்பங்குவகிக்கும்.—எபிரெயர் 12:13.
அறிவுரையை ஏற்றுக்கொள்வதின் பயன்களை அழுத்திக் காண்பியுங்கள். ஒரு தவறான போக்கைத் தொடர்வதன் விளைவுகளைக்குறித்து எச்சரித்தல் மற்றும் காரியங்களை சரிசெய்துகொள்வதால் கிடைக்கப்பெறும் பலன்களைப்பற்றிய நினைப்பூட்டுதல்கள் ஆகிய இரண்டையும் திறம்பட்ட அறிவுரை உட்படுத்துகிறது. ஒரு சமயோசிதமான எச்சரிப்பிற்குப்பின், அவர்கள் தங்கள் பழைய வழியைக்குறித்து மனம்வருந்தி வைராக்கியமான சீஷர்களானால், அவரோடுகூட பரலோகத்தில் ஆட்சிசெய்வது உட்பட சிறந்த சிலாக்கியங்களை அனுபவிப்பார்கள் என்று ஆவிக்குரியவிதத்தில் உணர்ச்சியற்றிருந்த லவோதிக்கேயா சபைக்கு இயேசு உறுதியளித்தார்.—வெளிப்படுத்துதல் 3:14-21.
அறிவுரைக்குக் கவனம் செலுத்தப்படுகிறதா என்பதைக்குறித்து அக்கறை காண்பியுங்கள். தான் பொருத்திவைத்த எலும்பு இன்னும் சரியாக பொருந்தியிருக்கிறதா என்பதாக அவ்வப்போது சோதித்துப்பார்க்கும் ஒரு நல்ல மருத்துவரைப்போல, மூப்பர்களும் வேதப்பூர்வ அறிவுரை பொருத்தி பிரயோகிக்கப்படுகிறதா என்பதைத் தீர்மானிக்க முயற்சி செய்யவேண்டும். அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளலாம்: மேலுமான உதவி தேவைப்படுகிறதா? அந்த அறிவுரை, ஒருவேளை வேறுவிதமாக திரும்பவும் கொடுக்கப்பட வேண்டுமா? இயேசு அவருடைய சீஷர்களுக்குத் திரும்பவும் திரும்பவுமாக மனத்தாழ்மையைப்பற்றி அறிவுரை கொடுக்கவேண்டியதாய் இருந்தது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கும் மேலாகவே, அறிவுரை, உவமைகள் மற்றும் பொருட்பாடங்கள் வாயிலாக அவர்களுடைய சிந்தனையைச் சீர்பொருந்தப்பண்ணுவதற்காக அவர் பொறுமையுடன் முயற்சிசெய்தார். (மத்தேயு 20:20-28; மாற்கு 9:33-37; லூக்கா 22:24-27; யோவான் 13:5-17) இதற்கு ஒத்ததாகவே, ஒருவருடைய முழுநிறைவான ஆவிக்குரிய ஆரோக்கியத்தின் முன்னேற்றத்தை மேம்படச் செய்வதற்காக திட்டமிடப்பட்ட தொடரும் வேதப்பூர்வ கலந்தாலோசிப்புகளுக்காக ஏற்பாடு செய்வதன்மூலம், ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரியின் முழுமையான சீர்பொருந்துதலை உறுதிசெய்துகொள்ள மூப்பர்கள் உதவலாம்.
செய்யப்பட்டிருக்கும் எந்த முன்னேற்றத்திற்கும் பாராட்டைக் கொடுங்கள். ஒரு தவறான அடியை எடுத்தவர் உண்மையாக வேதப்பூர்வ அறிவுரையைப் பொருத்தி பிரயோகிக்க முயற்சிசெய்கிறார் என்றால், அவரை மனமார பாராட்டுங்கள். இது முன்பு கொடுக்கப்பட்ட அறிவுரையை பலப்படுத்தும்; மேலுமான முன்னேற்றத்திற்கும் உற்சாகம் அளிக்கும். பவுல் கொரிந்தியருக்கு எழுதின முதல் கடிதத்தில், அவர்களுக்கு பல காரியங்களில் உறுதியான அறிவுரை கொடுக்க கடமைப்பட்டிருந்தார். சிறிது காலத்திற்குப்பின், தீத்து, அவருடைய கடிதத்திற்கான சிறந்த பிரதிபலிப்பைக்குறித்து அப்போஸ்தலனுக்குத் தெரிவித்ததும், பவுல் அவர்களைப் பாராட்டுவதற்காக எழுதினார். “இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்,” என்று அவர் சொன்னார், “நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; . . . தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.”—2 கொரிந்தியர் 7:9.
களிகூருவதற்கான ஒரு காரணம்
ஆம், அவருடைய அறிவுரை கொரிந்தியருக்கு உதவியது என்பதைக் கேட்டு பவுல் களிகூர்ந்தார். அதேவிதமாக, இன்றைய மூப்பர்கள், அவர்களுடைய அன்பான உதவிக்குச் சாதகமாக பிரதிபலித்ததால் ஓர் உடன் விசுவாசி தான் எடுத்த ஒரு தவறான அடியிலிருந்து திரும்பிவரும்போது மிகுந்த சந்தோஷம் அடைகின்றனர். ஒரு மனம்வருந்தும் கிறிஸ்தவனின் இருதயத்திலிருந்து பாவத்தின் முட்களை வேரோடுபிடுங்கி, அங்கு தெய்வீக கனிகள் அபரிமிதமாக செழித்தோங்கும்படிச் செய்ய உதவுவதில் அவர்கள் உண்மையிலேயே சந்தோஷமடையலாம்.
ஒரு தவறான அடி எடுத்த ஒருவரை சீர்பொருந்தப்பண்ணுவதில் மூப்பர்கள் வெற்றியடைந்தால், ஆவிக்குரிய விதத்தில் முழுமையாக கேடுவிளைவிக்கும் ஒரு போக்கிலிருந்து அவன் அல்லது அவள் திருப்பப்பட்டிருக்கக்கூடும். (யாக்கோபு 5:19, 20-ஐ ஒப்பிடவும்.) அப்படிப்பட்ட உதவிக்கு, அந்த உதவியைப் பெற்றவர் யெகோவா தேவனுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும். மூப்பர்களுடைய அன்பான உதவி, பரிவிரக்கம் மற்றும் புரிந்துகொள்ளுதலுக்கு உண்மையான போற்றுதலைக் காண்பிக்கும் வார்த்தைகளும் பொருத்தமானதாக இருக்கும். மேலுமாக, ஆவிக்குரிய நலத்திற்குத் திரும்பிய நிலை முழுமையானதும், சம்பந்தப்பட்ட அனைவரும், சாந்தமுள்ள ஆவியுடன் கொண்டுவரப்பட்ட சீர்பொருந்துதலைக்குறித்துக் களிகூரலாம்.