நம்முடைய மகத்தான சிருஷ்டிகரும் அவருடைய கிரியைகளும்
எத்தனை கம்பீரம்! இக்குவாக்கு அல்லது நயகராவின் இடிமுழக்கம் செய்கிற நீர்வீழ்ச்சிகள், அரிஜோனா அல்லது ஹவாயின் பெரிய செங்குத்தான பள்ளத்தாக்குகள், நார்வே அல்லது நியூஜீலாந்தின் நேர்த்தியான கடற்கூம்புகள்—உரத்தக் குரலில் என்னே பாராட்டுகளை இந்த இயற்கை அதிசயங்கள் வெளிகொணர்ந்திருக்கின்றன! ஆனால் அவை இயற்கை அன்னை என்றழைக்கப்படுவதனுடைய தற்செயலான விளைபொருட்கள் மாத்திரம் தானா? இல்லை, அவை அதைவிட மிக அதிகமாக இருக்கின்றன! அவை மகத்தான சிருஷ்டிகரான அன்புள்ள பரலோகத் தகப்பனின் பிரமிப்பூட்டும் கிரியைகளாகும். அவரைக் குறித்து சாலொமோன் ராஜா எழுதினார்: “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் [நித்திய கால நினைவையும், NW] அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.” (பிரசங்கி 3:11) நம்முடைய சிருஷ்டிகர் மகிமையான கிரியைகளினால் பிரபஞ்சத்தை நிரப்பியிருக்கிறார், மனிதருக்கு இவை அனைத்தையும் தேடிகண்டுபிடிக்க உண்மையிலேயே நித்திய காலமெடுக்கும்.
என்னே மகத்தான ஒரு சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார்! மேலும் இந்த எல்லாம்-வல்ல கடவுள் ‘சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்து, உலகங்களையும் இவரைக்கொண்டு உண்டாக்கி, அந்தக் குமாரன் மூலமாய் இந்தக் கடைசி நாட்களில் நம்மிடம் பேசியிருப்பதற்காக,’ நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம். (எபிரெயர் 1:2, NW) இந்தக் குமாரன், இயேசு கிறிஸ்து, தம்முடைய தகப்பனுடைய சிருஷ்டிப்பின் அழகான காரியங்களைப் போற்றினார். அவருடைய தகப்பனின் நோக்கங்களை விளக்கும்போதும் அவருக்குச் செவிசாய்த்துக் கொண்டிருப்பவர்களிடம் உற்சாகமான வார்த்தைகளைப் பேசும்போதும் அடிக்கடி இவற்றை அவர் குறிப்பிட்டுப் பேசினார். (மத்தேயு 6:28-30; யோவான் 4:35, 36) இயற்கையின் அதிசயங்கள் “தேவனுடைய வார்த்தையினால் சீராக அமைக்கப்பட்டிருக்கின்றன,” என்பதை அநேகர் “விசுவாசத்தினாலே” உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். (எபிரெயர் 11:3, NW) நம்முடைய அன்றாடக வாழ்க்கை இப்படிப்பட்ட விசுவாசத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.—யாக்கோபு 2:14, 26.
நிச்சயமாகவே நம்முடைய கடவுளின் சிருஷ்டிப்புகள் மகத்தானவையாக இருக்கின்றன. அவை அவருடைய ஞானத்தை, அவருடைய வல்லமையை, அவருடைய நீதியை, அவருடைய அன்பை வியப்பூட்டும் வகையில் பிரதிபலிக்கின்றன. உதாரணமாக அவர் தம்முடைய எதிர்கால சிருஷ்டியாகிய மனிதன், மகிழ்ச்சிதரும் பருவகாலங்களை வரிசையாக அனுபவிக்கும் பொருட்டு நம்முடைய பூமியைச் சாய்த்து, அது சூரியனைச் சுழன்று வரும்படி செய்திருக்கிறார். கடவுள் சொன்னார்: “பூமியுள்ள நாளளவும் விதைப்பும், அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடை காலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை.” (ஆதியாகமம் 8:22) மேலுமாக கடவுள் நம்முடைய பூமியில் விலைமதிப்புள்ள தாது பொருட்களைத் தாராளமாக சேகரித்து வைத்திருக்கிறார். விசேஷமாக, பின்னால் நிலவுலகின் எல்லா உயிரினத்திற்கும் இன்றியமையா உள்அடங்கியப் பகுதியாகவும் ஆதாரமாகவும் ஆக இருக்கும் ஏராளமான தண்ணீரை அளித்திருக்கிறார்.
ஒழுங்கான வரிசைமுறையில், ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீண்டதாக இருந்த ஆறு ‘சிருஷ்டிப்பு நாட்களில்,’ “கடவுளுடைய கிரியை நடப்பிக்கும் சக்தி” மனித குடியிருப்புக்காக பூமியை ஆயத்தஞ்செய்தது. நாம் பார்க்க உதவும் வெளிச்சம், நாம் சுவாசிக்கும் காற்று, நாம் வாழும் வெட்டாந்தரை, தாவரங்கள், பகல் மற்றும் இரவு வரிசை முறை, மீன்கள், பறவைகள், மிருகங்கள்—அனைத்துமே வரிசையாக மனிதன் உபயோகித்துக்கொள்வதற்காகவும் அனுபவிப்பதற்காகவும் நம்முடைய மகத்தான சிருஷ்டிகரால் உண்டாக்கப்பட்டன. (ஆதியாகமம் 1:2-25) நிச்சயமாகவே, பின்வருமாறு குரலெழுப்புவதில் நாம் சங்கீதக்காரனைச் சேர்ந்துகொள்ளலாம்: “கர்த்தாவே [யெகோவாவே, NW] உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.”—சங்கீதம் 104:24.
கடவுளின் தலைச்சிறந்த படைப்பு
ஆறாவது சிருஷ்டிப்பு “நாள்” முடிவுக்கு வந்துகொண்டிருந்த போது, கடவுள் மனிதனையும் பின்னர் அவன் துணையாகிய மனுஷியையும் உண்டாக்கினார். பூமிக்குரிய சிருஷ்டிப்புகளுக்கு என்னே சிறந்த ஓர் உச்சக்கட்டம்! இதற்கு முன்னால் நிகழ்ந்த சடப்பொருள் சார்ந்த எல்லா சிருஷ்டிப்புக்களையும்விட மிக அதிக அதிசயமான ஒன்று! சங்கீதம் 115:16 நமக்குத் தெரிவிக்கிறது: “வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.” இதற்கிசைவாக, பூமியில் முன்நிகழ்ந்த சிருஷ்டிப்புகளில் களிகூரவும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவும் மனித ஆத்துமாக்களாகிய நம்மை யெகோவா வடிவமைத்தார். நம்மைச் சுற்றியுள்ள வண்ண உலகை நாம் கண்டுணரும்பொருட்டு உதவும் மிக நேர்த்தியான காமிராவைவிட கடுஞ்சிக்கலானதாக இருக்கும் நம்முடைய கண்களுக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும்! உரையாடலையும் இசையையும் பறவைகளின் இன்னிசையையும் அனுபவித்து மகிழ நமக்கு உதவிசெய்கிற, மனிதன் உண்டுபண்ணியிருக்கும் எந்த ஒலி அமைப்பையும்விட மேம்பட்ட நம்முடைய காதுகள் நமக்கு இருக்கின்றன. தடையில்லாமல் இயங்கும் நாவு உட்பட பேசுவதற்குப் பயன்படுகிற உள்ளிணைக்கப்பட்ட ஓர் அமைவு நமக்கு இருக்கிறது. நாவின் சுவையுணர்வு முகர் உணர்வோடு சேர்ந்து முடிவில்லா உணவு வகைகளைச் சுவைப்பதில் மகிழ்ச்சி காண உதவுகிறது. அன்பான ஒரு கையின் ஸ்பரிஸத்தை நாம் எவ்வளவாக போற்றுகிறோம்! நிச்சயமாகவே, சங்கீதக்காரனைப் போலவே நாம் நம்முடைய சிருஷ்டிகருக்கு நன்றிசெலுத்தலாம். அவர் சொன்னார்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.”—சங்கீதம் 139:14.
நமது சிருஷ்டிகரின் கிருபை
சங்கீதக்காரன் எழுதினார்: “கர்த்தரைத் [யெகோவாவை, NW] துதியுங்கள்; அவர் நல்லவர், . . . ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.” (சங்கீதம் 136:1-4) நாம் இப்பொழுது விவரித்திருக்கும் எல்லா சிருஷ்டிப்புக்களையும்விட அதிக நேர்த்தியான அதிசயமான காரியங்களைச் செய்வதற்கு இப்பொழுது அந்தக் கிருபை அவரைத் தூண்டிக்கொண்டிருக்கிறது. ஆம், சடப்பொருள் சார்ந்த காரியங்களைச் சிருஷ்டிப்பதிலிருந்து ஓய்ந்திருக்கையிலும்கூட, அவர் ஆவிக்குரிய அளவில் சிருஷ்டித்துக்கொண்டிருக்கிறார். வெகு தெளிவாகவே அவரிடமாக தூக்கியெறியப்பட்ட ஒரு பொல்லாத சவாலுக்குப் பதிலளிக்கும் வகையில் இதை அவர் செய்துகொண்டிருக்கிறார். எவ்விதமாக?
முதல் மனிதனும் மனுஷியும் மகிமையான ஒரு பரதீஸில், ஏதேனில் வைக்கப்பட்டார்கள். இருப்பினும், துரோகியாக மாறின ஒரு தேவதூதன், சாத்தான், தன்னையே கடவுளாக ஆக்கிக்கொண்டு அந்த மனித ஜோடியை யெகோவாவுக்கு எதிராக கலகம் செய்ய வழிநடத்தினான். சரியாகவே, கடவுள் அவனுக்கு மரணத்தீர்ப்பளித்தார். இதன் விளைவாக அவர்களுடைய பிள்ளைகள், முழு மனிதகுலமும் பாவமுள்ள, மரித்த நிலையில் உருவாக்கப்பட்டுள்ளார்கள். (சங்கீதம் 51:5) எந்த மனிதனும் சோதனையின் கீழ் கடவுளுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்ள முடியாது என்பதாக சாத்தான் கடவுளிடம் சவால்விட்டதை யோபுவைப் பற்றிய பைபிள் பதிவு காண்பிக்கிறது. ஆனால் சாத்தான் படுமோசமான பொய்யன் என்பதை யோபு நிரூபித்தான். பைபிள் காலங்களிலும் நம்முடைய நாள் வரையாகவும் கடவுளின் மற்ற அநேக உண்மையுள்ள ஊழியர்களும் இதையே நிரூபித்திருக்கிறார்கள். (யோபு 1:7-12; 2:2-5, 9, 10; 27:5) பரிபூரண மனிதனாக இயேசு உத்தமத்தைக் காத்துக்கொள்வதில் ஒப்பற்ற முன்மாதிரியாக இருந்தார்.—1 பேதுரு 2:21-23.
இதன் காரணமாக “இந்த உலகத்தின் அதிபதிக்கு [சாத்தான்] என்னிடத்தில் ஒன்றுமில்லை,” என்று இயேசுவால் சொல்ல முடிந்தது. (யோவான் 14:30) என்றபோதிலும், இன்று வரையாக, “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.” (1 யோவான் 5:19) யெகோவாவின் அரசுரிமையைக் குறித்துக் கேள்வி எழுப்பியதன் காரணமாக, மனிதவர்க்கத்தின் மீது சாத்தானுடைய ஆட்சி வெற்றிபெறுமா என்பதைக் காண்பிக்க அவன் சுமார் 6,000 ஆண்டுகள் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறான். படுமோசமாகிக்கொண்டு வரும் உலக நிலைமைகள் தொடர்ந்து நிரூபித்துவரும் விதமாகவே எத்தனை மோசமாக அவன் தோல்வியடைந்திருக்கிறான்! நம்முடைய அன்புள்ள கடவுளாகிய யெகோவா வெகு சீக்கிரத்தில் சீர்கெட்ட இந்த உலக சமுதாயத்தை அகற்றி, பூமியின் மீது தம்முடைய அரசுரிமையை உறுதியாக நிலைநிறுத்துவார். சமாதானமுள்ள, நீதியான ஆட்சிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு அது என்னே மகிழ்ச்சியான நிம்மதியைக் கொண்டுவரும்!—சங்கீதம் 37:9-11; 83:17, 18.
இருப்பினும், அது மாத்திரமே இல்லை! யோவான் 3:16-லுள்ள இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் கடவுளுடைய கிருபை மேலுமாக வெளிப்படுத்தப்படும்: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” பூமியின் மீது நித்திய ஜீவனோடு வாழும் எதிர்பார்ப்பை மனிதவர்க்கத்துக்குத் திரும்பக் கொடுப்பது, புதிய காரியங்களைச் சிருஷ்டிப்பதை உட்படுத்துகிறது. இவை யாவை? தவித்துக்கொண்டிருக்கும் மனிதகுலத்துக்கு அவை எவ்விதமாக நன்மையளிக்கின்றன? எமது அடுத்தக் கட்டுரை சொல்லும்.