‘நீங்கள் அவர் நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தைக்’ கடவுள் மறக்கமாட்டார்
“உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.” (எபிரெயர் 6:10) பவுல் அப்போஸ்தலனின் இந்த வார்த்தைகள் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு உண்மையாய் இருக்கின்றன. சோவியத்-கட்டுப்பாட்டுக்குள் முன்பிருந்த அரசாங்கங்கள் அமுல்படுத்தியிருந்த தடைகளின்கீழ், இவர்கள் பல பத்தாண்டுகளாக கடவுளின் பெயர் சம்பந்தப்பட்ட அக்கறைகளில் நீண்ட காலமாகவும் கடினமாகவும் உண்மையோடு ஊழியம்செய்து வந்திருக்கிறார்கள். யெகோவா இவர்களின் நல்ல செயல்களை நினைவிற்குக் கொண்டுவந்து, இவர்களுக்கு ராஜ்ய ஆசீர்வாதங்களைப் பொழிகிறார். எடுத்துக்காட்டாக, அப்படிப்பட்ட இடங்களிலிருந்து வெறும் மூன்று பகுதிகளின் முந்திய ஊழிய ஆண்டு அறிக்கையை நாம் ஆராய்ந்துபார்க்கலாம்.
முன்னாள் சோவியத் யூனியனின் பிராந்தியங்கள்
இராஜ்ய பிரஸ்தாபிகளின் உச்சநிலை எண்ணிக்கை, 1992-ம் ஊழிய ஆண்டில் 35 சதவீதமாக—49,171-லிருந்து 66,211 வரையாக—அதிகரித்திருப்பதாக முன்னாள் சோவியத் யூனியனின் பிராந்தியங்கள் அறிக்கை செய்கின்றன! ஆனால் இது மட்டுமல்ல. ஏனென்றால் அந்தப் பிரஸ்தாபிகள் மிகவும் சுறுசுறுப்பாகவும் இருந்திருக்கிறார்கள். இது பத்திரிகைகளையும் உள்ளடக்கும் பைபிள் பிரசுரங்களுடைய விநியோகிப்புகளின் அதிகரிப்பிலிருந்து மிகத்தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் சிறு புத்தகங்கள், சிற்றேடுகள் ஆகியவற்றையும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள், 16,54,559 எண்ணிக்கைகளுக்கு விநியோகம் செய்திருக்கிறார்கள். இது கடந்த வருடத்தின் எண்ணிக்கையான 4,77,235-ஐ விட இரண்டு மடங்குக்கும் மேலாகும்! இந்த எல்லா அளிப்புகளுக்கும் பிரதிபலிப்பு என்னவாக இருந்திருக்கிறது? பைபிள் படிப்புகளின் எண்ணிக்கையில் இரண்டு மடங்கு அதிகரிப்பே அது. இப்பொழுது 38,484 பைபிள் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
மேலும், துணைப்பயனியர் சேவையில் பங்கெடுத்தல், 94 சதவீதமாக அதிகரித்தது. இது கடந்த வருடத்தின் புதிதாக முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கையான 6,570-ஐ ஒப்பிடுகையில் ஆச்சரியமூட்டும் 311 சதவீத அதிகரிப்பாகிய 26,986 என்ற மேலோங்கிநிற்கும் ஒரு புதிய முழுக்காட்டப்பட்ட சீஷர்களின் எண்ணிக்கைக்கு வழிநடத்தியது!
புதிதாக முழுக்காட்டுதல் எடுத்தவர்களில் சிலர் முதன்முதலாக எப்படி நற்செய்தியில் அக்கறை காண்பிப்பவர்களாக ஆனார்கள்? சில சமயங்களில், பைபிள் படிப்பு நடத்துபவரின் ஆழ்ந்த அக்கறையே இதற்குக் காரணம். மால்டோவா பகுதியிலிருந்து ஒரு நடத்தும் கண்காணி இவ்வாறு சொன்னார்:
“பைபிள் சத்தியத்தில் முன்பு ஆர்வம் காட்டின ஒரு பெண்ணை, நானும் என் மனைவியும் சந்திக்கப் போனோம். இந்தப் பெண்ணோடு ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், இவளுடைய கணவன் கொஞ்சங்கூட ஆர்வம் காட்டவில்லை. ஒரு நாள், படிப்பைத் தொடர இவளைச் சந்திப்பதற்காக நாங்கள் போய்க்கொண்டிருந்தபோது, சீதோஷணநிலை கடுங்குளிராகவும் பனிபெய்வதாகவும் இருந்தது. தெருக்களில் யாருமே காணப்படவில்லை, ஆனால் எப்படியோ சரியான நேரத்திற்கு, அவளுடைய வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தோம். அவள் அவளுடைய கணவனிடம் இவ்வாறு சொன்னாள்: ‘பார்த்தீர்களா, இவர்கள் நம்மீது எவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள்? பனிபெய்தாலும், இவர்கள் சரியான நேரத்திற்கு வந்துவிட்டார்களே.’ இந்தச் சம்பவம் அவளுடைய கணவனைச் சிந்திக்கத் தூண்டியது. அவர் தன் மனதை மாற்றிக்கொண்டு, படிப்பில் கலந்துகொண்டார் ஆரம்பித்தார். இப்பொழுது அவரும் அவருடைய மனைவியும், முழுக்காட்டப்பட்ட சாட்சிகள்.”
மற்றச் சமயங்களில், சாட்சியின் மரியாதையான நடத்தை, நற்செய்தியில் ஆர்வத்தைக் காட்டத் தூண்டலாம். மால்டோவா என்ற அதே இடத்திலிருந்து, ஒரு மூப்பர் பின்வரும் இந்த அனுபவத்தைப் பெற்றார்:
“நான் பிரசங்கம் செய்துகொண்டிருந்தப் பிராந்தியத்தில் இருந்த ஒரு மனிதர் யெகோவாவின் சாட்சிகள்மீது பிரியம் இல்லாதவராக இருந்தார். அவர் அவருடைய அப்பாவும் தாத்தாவும் இருப்பதுபோல ஓர் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் அங்கத்தினராக தான் இருப்பதாக சொன்னார். எனவே என்னை அந்த இடத்தைவிட்டுப் போகும்படிச் சொன்னார். எனினும், நான் அவ்விடம்விட்டுப் போவதற்கு முன்பு, சந்திக்க வந்த நோக்கத்தைச் சொல்ல என்னை அவர் அனுமதித்தார். நான் மத்தேயு 28:19-ஐக் குறிப்பிட்டேன். அது இவ்வாறு வாசிக்கிறது: ‘ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடு’ங்கள். பின்பு எங்களுடைய கூட்டம் நடக்கும் இடத்தின் முகவரியைக் கொடுத்துவிட்டுத் திரும்பினேன். ஒரு வாரம் கடந்தப் பின்பு, எங்கள் கூட்டத்திற்கு இந்த மனிதர் வந்திருந்தது எனக்கு எவ்வளவு ஆச்சரியமாக இருந்தது! கூட்டம் முடியும்வரை அவர் இருந்தார். அவர் என்னை அவ்வளவு விரோதமாக நடத்தினதால், இந்த வாரம் முழுவதும் அந்தச் செயல் அவர் மனதை உறுத்திக்கொண்டே இருந்ததாக அவர் சொன்னார். உடனே ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுதோ அவர் நம் சகோதரரில் ஒருவராகிவிட்டார்.”
இந்த ஊழிய ஆண்டின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமானது, அந்தப் பிராந்தியத்தில் உள்ள நம் சகோதரர்களுக்கு உதவிசெய்ய முன்வந்த ஏராளமானவர்களின் சமாளிக்கமுடியாத பெரிய பிரதிபலிப்பு ஆகும். தேவைப்பட்டவர்களாக இருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்காக, 1991/92-ன் குளிர்காலத்தில், சுமார் 400 டன்கள் உணவுப் பண்டங்களும், அதிகமான அளவில் ஆடைகளும் அனுப்பிவைக்கப்பட்டன. முன்னாள் சோவியத் யூனியனின் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் இந்த உதவிப்பொருட்களெல்லாம் பகிர்ந்தளிக்கப்பட்டன, சைபீரியாவில் உள்ள இர்குட்ஸ்க் வரையாகவும், ஜப்பானிற்கு அருகில் உள்ள கபரோவஸ்க் வரையாகவும்கூட அவை அனுப்பப்பட்டன. உண்மையில் தம்முடைய நாமத்திற்காக நம் சகோதரர்கள் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை யெகோவா மறந்துவிடவில்லை என்பதை மனதில் பதியவைக்கும் சம்பவம்! யெகோவாவின் ஆவியினால் தூண்டப்பட்ட இந்தச் சகோதர அன்பின் அத்தாட்சி, இவர்களைத் தங்களுடைய உலகளாவிய குடும்பத்தோடு ஐக்கியப்படும்படிச் செய்தது. உதாரணமாக, உக்ரேனில் உள்ள ஒரு சகோதரி கிளை அலுவலகத்திற்கு இவ்வாறு எழுதினார்:
“எங்களுக்கு நீங்கள் செய்த உதவி, எங்கள் இருதயங்களை நெகிழ வைத்தது. எங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வர ஆரம்பித்தது, எங்களை மறக்காது ஞாபகத்தில் வைத்திருந்ததற்காக, நாங்கள் யெகோவா தேவனுக்கு நன்றி செலுத்தினோம். நாங்கள் இப்பொழுது பொருள்சம்பந்தமாக கஷ்டத்தில் இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், மேல்நாட்டுப்பகுதிகளில் உள்ள நம் சகோதரர்களிடமிருந்து வந்த உதவிக்கு நன்றி. நாங்கள் பொருள்சம்பந்தமாக, எங்களுடைய சொந்தக் கால்களிலே நிற்பதற்கு இது உதவியது. உங்களுடைய உதவியிருந்ததினால், இப்பொழுது எங்கள் குடும்பம் யெகோவாவின் சேவையில் அதிக நேரத்தை அர்ப்பணிக்க முடியும். யெகோவாவிற்குச் சித்தமானால், நானும் என் மகளும் கோடை மாதங்களில் துணைப்பயனியர் ஊழியம் செய்வோம்.”
அதோடு, சாட்சிகளாக இல்லாதவர்களுக்கு, இந்த உதவி ஏற்பாடு ஒரு சாட்சிகொடுத்தலாக இருந்தது, ஏனென்றால் சாட்சிகள் அன்பைத் தங்களுடைய செயல்கள்மூலம் வெளிப்படுத்தினார்கள் என்பதை பார்வையாளர்கள் உணர முடிந்தது. மற்றொரு சபையிலிருந்த ஒரு குடும்பம் இவ்வாறு எழுதியது: “உணவு மற்றும் உடைகள் அடங்கிய பொருள்சம்பந்தமான உதவியை நாங்கள் பெற்றோம். அது அவ்வளவு அதிகமாக இருந்தது! உங்களுடைய ஆதரவும் உற்சாகப்படுத்துதலும், நாங்கள் மற்றவர்களுக்கு நல்லதைச் செய்யவேண்டும் என்ற ஒரு பாடமாக எங்களுக்கு இருந்தது. இந்த அன்பான செயல், அக்கறை காட்டுபவர்களாலும் அவர்களுடைய குடும்பங்களாலும், மேலும் அவிசுவாசிகளாலும் கவனிக்கப்படாமல் போகவில்லை; இது மெய்யான சகோதரத்துவத்திற்கு ஒரு மகத்தான சாட்சியாக இருந்தது.”
இந்தக் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில், “ஒளி கொண்டுச்செல்வோர்” என்ற தலைப்பில் ஐந்து மாவட்ட மாநாடுகளும், ஒரு சர்வதேச மாநாடும் நடந்தன. இவை, தம்முடைய சாட்சிகளின் கடின உழைப்பிற்காகவும் தம்முடைய பெயரை அறிவிப்பதில் அவர்கள் காட்டின அன்பிற்காகவும் யெகோவா பொழிந்த ஆசீர்வாதத்திற்கு மற்றொரு சான்றாக இருந்தது. இந்த மாநாடுகளுக்கு 91,673 நபர்கள் வந்திருந்தனர், 8,562 பேர் முழுக்காட்டப்பட்டனர். சர்வதேச மாநாடு நடந்த இடமான செ. பீட்டர்ஸ்பர்க்-ல் அதிகமான எண்ணிக்கையில் ஆஜராயிருந்தனர். அங்கு உலகமுழுவதுமிருந்து ஏறக்குறைய 30 நாடுகளிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் உட்பட 46,214 பேர் கிரோவ் விளையாட்டரங்கில் கூடிவந்திருந்தனர்.
சைபீரியாவில் சுமார் 60 வயதுடைய ஒரு மனிதர், இர்குட்ஸ்க் மாநாட்டு விளையாட்டரங்கிற்குச் சும்மா பார்ப்பதற்காக வந்திருந்தார். அவர் சொன்னார்: “இங்கு வந்திருக்கிறவர்கள் அனைவரும் புன்சிரிப்புள்ள முகங்களை உடையவர்களாக கண்ணியமாக உடை உடுத்தியிருக்கிறார்கள், ஒருவருக்கொருவர் கனிவோடு நடந்துகொள்கிறார்கள். இந்த ஜனங்களெல்லாரும் ஐக்கியப்பட்ட ஒரு குடும்பம்போல் இருக்கிறார்கள். இவர்கள் நண்பர்களாக இருப்பது, இந்த விளையாட்டரங்கில் மட்டும் அல்ல, தங்களுடைய அன்றாட செயல்களிலும் அவ்வாறு இருக்கிறார்கள் என்பதை ஒருவர் உணர முடிகிறது. மிகச்சிறந்த பைபிள் பிரசுரங்களை நான் பெற்றேன், மேலும் இது எப்பேர்பட்ட ஒரு சிறந்த அமைப்பு என்பதை இன்னும் சிறப்பாக அறிந்துகொண்டேன். நான் யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புவைத்துக்கொண்டு, அவர்களோடு சேர்ந்து பைபிளைப் படிக்க விரும்புகிறேன்.”
இர்குட்ஸ்க்-ல் நடந்த, 5,051 பேர் வந்திருந்த, இதே மாநாட்டில் சைபீரியாவின் யாகுட் குடியரசிலிருந்து அக்கறைகாண்பித்த ஒரு பெண் இவ்வாறு குறிப்பிட்டார்: “நான் இந்த ஜனங்களைப் பார்க்கையில், சந்தோஷத்தினாலே கூக்குரலிட விரும்புகிறேன். இப்படிப்பட்ட ஜனங்களை அறியும்படிச் செய்ய உதவிசெய்ததற்காக நான் யெகோவாவிற்கு மிக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இந்த மாநாட்டில் நான் பிரசுரங்களைப் பெற்றேன், மேலும் இதைப் பற்றி மற்றவர்களோடு நான் பேச விரும்புகிறேன். யெகோவாவை வணங்குபவராக நான் இருப்பதற்கு அதிகமாக விரும்புகிறேன்.”
கஸக்கிஸ்தான்-ல் உள்ள அல்மா ஆடா என்ற இடத்தில் உள்ள சென்ட்ரல் விளையாட்டரங்கத்தில் நடந்த மாநாட்டிற்கு 6,605 பேர் வந்திருந்தனர். இந்த அரங்கத்தின் மேலாளர் பின்வருமாறு சொன்னார்: “உங்களுடைய மனநிலையைக் கண்டு நான் திகைப்படைந்தேன். நீங்கள் அனைவரும், இளைஞரும் முதிர்வயதினரும் மரியாதைக்குரியவர்கள் என்பதை இப்பொழுது நான் நிச்சயமாக நம்புகிறேன். கடவுள் இருக்கிறார் என நான் நம்புவதாகச் சொல்ல முடியாது, ஆனால் ஆவிக்குரிய மற்றும் மாம்சப்பிரகாரமான மதிப்பீடுகளிடமாக உங்கள் மனநிலையில் உங்கள் சகோதரத்துவத்தால் தெரிவிக்கப்படும் பரிசுத்தக் காரியங்களை நான் நம்புகிறேன்.”
அல்மா ஆடா மாநாட்டில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி இவ்வாறு குறிப்பிட்டார்: “உங்களோடு இதுவரை இரண்டு முறை தொடர்புகொண்டிருக்கிறேன், இரண்டு முறையும் மாநாட்டின் பொழுதுதான். யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து வேலைசெய்வது ஒப்பற்றவகையில் பூரிப்படையச் செய்கிறது.”
ருமானியா
ருமானியாவில் உள்ள சகோதரர்கள் யெகோவாவின் நாமத்திற்குக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் யெகோவா மறக்கவில்லை. கடந்த ஊழிய ஆண்டு, சாட்சிகளுக்கு அநேக சந்தோஷகரமான நிகழ்ச்சிகளைக் கண்டிருக்கிறது. முதலில், புகாரெஸ்ட்-ல் மறுபடியுமாக ஒரு கிளை அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது. இறுதியான சட்டப்பூர்வமான நடவடிக்கை 1949-ல் நீக்கப்பட்டது. இந்த அலுவலகம், புதிய விஸ்தரிப்புகளில் வேலைசெய்யும் சுமார் 20 சகோதரசகோதரிகளை உடையதாக இருக்கிறது. இந்தக் கிளை அலுவலகம் 24,752—ஏப்ரல் மாதத்தில் அடைந்த இதுவரை இல்லாத ஒரு புதிய உச்சநிலை—பிரஸ்தாபிகளுக்குச் சேவைசெய்கிறது. இது, கடந்த வருடத்தின் சராசரியைவிட 21 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
வருஷக்கணக்காக ரகசியமாக பிரசங்கம் செய்தப் பின்பு, இப்போது பிரஸ்தாபிகள் வெளியரங்கமாகப் பேசும் வீட்டுக்கு-வீடு சாட்சிகொடுக்கும் வேலையில் திறம்பட்ட விதத்தில் ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்கள். சில சாட்சிகள் தாங்கள் பிரயாணம்செய்யும்போதும்கூட கிடைக்கும் எந்தச் சந்தர்ப்பத்தையும் எவ்வாறு மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதற்கு நன்றாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை மூரெஷ் மாவட்டத்திலிருந்து வந்த இந்த அனுபவம் காண்பிக்கிறது. கிளை அலுவலகம் இவ்வாறு எழுதுகிறது:
“ஒரு பிரஸ்தாபி, ரயிலின் ஒரு பெட்டியிலிருந்து மற்றொன்றிற்கு பிரசங்கம்செய்ய தீர்மானித்தார். மக்களின் பிரதிபலிப்பு, பொதுவாக சாதகமானதாக இருந்தது, ஆனால் கடைசிப் பெட்டியில், சில கஷ்டங்கள் எழும்பின. அங்குப் பிரயாணம்செய்தவர்களில் ஒருவரும் நம் பத்திரிகைகளின் ஒரு பிரதியையும்கூட ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. இறுதியில், மிகவும் நிலைகுலைந்தவராக ஒரு மனிதர், எழுந்து நின்று இவ்வாறு கத்தினார்: ‘உன்னுடைய எல்லாப் பத்திரிகைகளையும் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறியப்போகிறேன்! ஏன் எங்களை இவ்வளவு தூரத்திற்கு உன் மதத்தைக்கொண்டு நச்சரிக்கிறாய்?’ பிரஸ்தாபியோ, இவர் பத்திரிகைகளை வெளியே எறிந்தால், இவர் செய்த செயலினால் வேறொருவர் பயனடைவார்—அந்தப் பத்திரிகைகளை எடுத்துக்கொள்பவர்கள்—என்று அன்போடு சொன்னார். இந்தப் பிரஸ்தாபியின் அமைதலானப் போக்கை உணர்ந்தபோது, அந்த மனிதர் அவ்வளவு கவர்ந்திழுக்கப்பட்டதினால், தானாகவே முன்வந்து பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு அந்த ரயில்பெட்டியில் பிரயாணம்செய்யும் மற்றவர்களிடம் விநியோகிக்க ஆரம்பித்தார். ஆச்சரியப்படுத்தும்வகையில், அவர்களெல்லாரும் குறைந்தது ஒரு பத்திரிகையை எடுத்துக்கொண்டனர். விநியோகித்தப் பிறகு, அந்த மனிதருக்கென்று ஒரு பிரதியும் பாக்கியில்லை. எனவே பிரஸ்தாபி அவரிடம் கேட்டார்: ‘ஐயா, உங்களுக்கென்று ஒரு பிரதி வேண்டாங்களா?’ அப்பொழுது, அந்த மனிதர் இரண்டு பிரதிகளைக் கொண்டிருந்த ஒரு பிரயாணியிடமிருந்து ஒரு பத்திரிகையை லபக்-என்று பிடுங்கிக்கொண்டுச் சொன்னார்: ‘இப்போது எனக்கும் ஒரு பிரதி கிடைத்துவிட்டதே!’”
சில சமயங்களில் யெகோவாவின் சாட்சிகளின் பிரசங்க வேலை, கிறிஸ்தவமண்டலத்தினுடைய குருவர்க்கத்தின் எதிர்ப்பை அநேக நாடுகளில் தூண்டிவிட்டிருக்கிறது. ருமானியாவில் சாட்சிகளோடு, ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் பாதிரிகள் ஓயாமல் பெரும்பாலும் எரிச்சலடைகிறார்கள். ஆனால் இது தம்முடைய நாமத்திற்காக அவர்கள் காண்பிக்கும் அன்பான பிரயாசத்திற்கு யெகோவா தம் ஜனத்தை ஆசீர்வதிப்பதை நிறுத்திவைக்கமுடியாது. ஒரு வட்டார கண்காணி எழுதுகிறார்:
“உள்ளூர் சபையோடு நாங்கள் நகர்ப்புறங்களுக்கு ஊழியத்திற்காகச் சென்றோம். நூறு சகோதரர்கள் இருந்தார்கள். ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்தோம். அது நகர்ப்பக்கமாக ஏறக்குறைய 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு சிறிய பட்டணத்திற்கு எங்களை எடுத்துச்சென்றது. கலை மன்றத்தில் கொடுக்கப்படப்போகும் பொதுப்பேச்சுக்காக நாங்கள் அநேகரை அழைத்தோம். கூட்டம் ஆரம்பித்தவுடனே, ஆர்த்தடாக்ஸ் பாதிரி எங்கள் கூட்டத்தைக் கலைக்க வந்தார். காவல்துறை அதிகாரிகள், அந்தப் பாதிரியைத் தடுக்க முயற்சித்தார்கள். அவ்வாறு செய்தும், அவர் தன்னை அமைதலாக்கிக்கொள்ள மறுத்தார். முக்கிய நுழைவாசல் கதவிலுள்ள கண்ணாடியை உடைத்தபோது, கூட்டத்தை நிறுத்துவதில் அவர் வெற்றிபெற முடிந்தது. ஆனாலும், உள்ளூர்வாசிகளில் அநேகர் இந்தப் பாதிரியின் நடத்தையை ஒத்துக்கொள்ளவே இல்லை. வந்திருந்த அனைவருக்கும் முழுமையாக சாட்சிகொடுக்கப்பட்டது. அதிகமான அளவில் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.”
நல்வாய்ப்பு கிடைக்காததால், நாட்டின் சில பகுதிகளில், சாட்சிகள் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். ஆல்ட் மாவட்டத்திற்கு ஒரு விசேஷித்தப் பயனியர் வந்தபோது, முழு மாவட்டத்திற்கும் ஒன்பதே சகோதரர்கள்தான் இருந்தார்கள். பிரசங்கிக்க வேண்டிய பிராந்தியமும் மிகப்பெரியதாக இருந்தது. ஒரு வருடத்திற்குப் பின்பு சாட்சிகளின் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்தது. இவர்களில் ஐந்துபேர் செயலற்றநிலையிலிருந்து மறுபடியும் செயல்படும்படி உற்சாகப்படுத்தப்பட்ட பிரஸ்தாபிகள். ஒரு சாட்சியும் இல்லாத இடமாகிய கரபியா நகரத்தில், இந்தப் பயனியர் தனக்கு ஒரு குடியிருப்பைக் கண்டுபிடித்தார். சாட்சிகள் அங்கு வந்து வெறும் 45 நாட்களே கடந்திருந்தபோது, உள்ளூர் பங்கு பாதிரி ஒருவர், கிரயோவா வானொலியில் அவர்களுக்கு எதிராக எதிர்ப்புத்தெரிவித்தார். அவர்கள் தங்களுடைய போதனைகளால் கரபியா நகரில் “படையெடுத்திருக்கிறார்கள்,” ஜனங்களை அவர்களுடைய மதத்திற்கு மாற்ற முயற்சி செய்கிறார்கள், என்று அவர் சொன்னார். அந்த வட்டாரத்தில், சாட்சிகளின் நற்பெயரை கெடுப்பதற்கும் பிரசங்கவேலையை நிறுத்துவதற்கும் நோக்கங்கொண்ட எதிர்ப்புகள் தொடர்ந்தன. சகோதரர்கள் மாவட்ட மாநாட்டிற்காக புகாரெஸ்ட்டில் இருந்தபோது இவையெல்லாம் உச்சக்கட்டத்தை எட்டின. கரபியாவின் ஆர்த்தடாக்ஸ் பங்கு பாதிரி தன்னுடைய சர்ச் நிகழ்ச்சிகள் முடிந்தபிறகு கடுமையான ஓர் அறிவிப்பைச் செய்தார்: “தங்களுடைய பிரசுரங்களால் முழு வட்டாரத்தையும் நிரப்பி, ஜனங்களை விஷப்படுத்திவரும் சாட்சிகளுக்கு விரோதமாக காவல்துறையைத் தூண்டிவிடுவதற்காக நாம் அனைவரும் சேர்ந்து ஒரு தெரு ஊர்வலம் நடத்தவேண்டும்.” ஆனால் கூட்டம் நடக்கப்போகும் அதே இரவில், எதிர்பார்த்தேயிராதவொன்று நடந்தது. கலகக்காரர்களின் ஒரு தொகுதி, மாவட்டத் தலைமைச் சர்ச்சையும் நகர கலை மன்றத்தையும் அழித்துப்போட்டது. ஆகையால், அந்த எதிர்ப்பு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட அந்தக் கூட்டம் ஒருபோதும் நடக்க முடியவில்லை!
முன்னாள் யுகோஸ்லாவியாவின் பிராந்தியங்கள்
யுகோஸ்லாவியா பிராந்தியத்தில் இருந்த சகோதரர்களுக்கு இந்த 1992 ஊழிய ஆண்டு, மிகவும் கடினமான ஓர் ஆண்டாக இருந்திருக்கிறது. இருந்தபோதிலும் அவர்கள் சில சந்தோஷமான அனுபவங்களையும் பெற்றனர். நன்றியுள்ளவராக யெகோவா, தம்முடைய நாமத்திற்காக அவர்கள் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் கடின உழைப்பையும் மறப்பதில்லை.
முதன்முதலில் ஸ்லோவினியா என்ற இடத்தில் யுத்தம் ஆரம்பித்தது. பின்பு, குரோயஷ்யாவில், அதற்குப் பின்பு பாஸ்னீயா, ஹெர்ட்ஸ்கோவினா போன்ற இடங்களில் யுத்தம் நடந்தது. ஒரு வருடத்திற்குள் ஒரு குடியரசிலிருந்து ஐந்து புதிய மாநிலங்கள் உருவாகின. இவை தங்களுக்குத்தாங்களே சொந்த எல்லைகளையும், சட்டதிட்டங்களையும், நாணயங்களையும் நிலைநாட்ட முயற்சி செய்துகொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான சாட்சிகள் தங்களுடைய வீட்டைவிட்டு வெளியேறி, மற்ற இடங்களிலுள்ள தங்களுடைய சகோதரர்களின் வீடுகளில் தஞ்சம்புக வேண்டியதிருந்தது. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகளைப்போலவே, பெரிய நகரங்களில் அவசரஉதவி குழுக்கள் நியமிக்கப்பட்டன. இவை உதவிதேவைப்படும் சகோதரருக்கு குடியிருப்புவசதி, உணவு மற்றும் துணிமணிகள் போன்ற தேவைகளைக் கவனித்துக்கொண்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள சபைகளில் உள்ள சகோதரர்களுக்கு, இந்த ஊழிய ஆண்டின்போது சுமார் 55 டன்கள் உணவு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. பாராட்டுதல் கடிதங்கள் அநேகம் வந்திருக்கின்றன.
டுப்ரோவ்னிக்-ல் உள்ள சகோதரர்கள், கொடுக்கப்பட்ட உதவிக்காக எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள் என்பதை விவரித்துக் கூறினார்கள். ஒரு சகோதரி தன்னுடைய உணவுப் பொட்டலத்தோடு வீட்டிற்குப் போனபோது, இவர் எங்கிருந்து அந்த முட்டைகளை வாங்கினார் என்று ஓர் அண்டைவீட்டார் கேட்டார். இந்தச் சகோதரியோ பதிலாக, மற்றொரு இடத்திலுள்ள தன்னுடைய ஆவிக்குரிய சகோதரர்கள் இதை அனுப்பினார்கள் என்று சொன்னாள். அந்த அண்டைவீட்டார் ஆச்சரியப்பட்டார். மற்றொரு சம்பவத்தில், ஸ்லோவினியாவிலிருந்து வந்த ஒரு புதிய மனிதன் ஒரு மூப்பரைச் சென்றுபார்த்து, இவ்வாறு சொன்னார்: “யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய சகோதரர்களிடமிருந்து பெற்ற உணவை மிகச் சரியான வழியில் பகிர்ந்துகொடுப்பதாக கேள்விப்பட்டேன். அநேக பொட்டலங்களை நான் ஜனங்களுக்காக அனுப்பினேன்; ஆனாலும், அவை ஒருபோதும் போகவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரவில்லை. இப்படிப்பட்ட உதவிப்பொருட்களை நீங்கள் பகிர்ந்துகொடுப்பதற்காக உங்களிடத்தில் நான் அனுப்பிவைக்கலாமா?” மேலுமாக, செய்தித்தாள்களும் வானொலியும் எங்களுடைய மீட்புப்பணி பற்றி சாதகமாக அறிக்கைச்செய்தது.
ஜாக்ரெப்-ல் 1991-ல் நடந்த சர்வதேச மாநாட்டில் முழுக்காட்டுதல் எடுத்த ஒரு சகோதரர், வந்துகொண்டிருக்கும் நெருக்கடிநிலையை உணர்ந்தவராய் ஒரு முழு உணவுத் தயாரிக்கும் கடையையே விலைக்கு வாங்கியிருந்தார். யுத்த இடத்திற்கு அருகில் உள்ள தன் வீட்டிற்கு இந்த உணவை எடுத்துச்சென்றார். உணவுப்பஞ்சம் இன்னும் அதிகரிக்க ஆரம்பித்தப்போது, இந்தப் பகிர்ந்தளிப்பு சகோதரர்களுக்கு உண்மையில் அதிக ஆசீர்வாதமாக இருந்தது.
சரஜெவோ-ல் உள்ள முற்றுகைபோடப்பட்ட சகோதரர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொண்டுப்போவதற்காக, ஒரு பெரிய பாரவண்டிக்கு (ட்ரக்) அனுமதிவாங்க முடிந்தது. இது எடுத்துச்செல்லப்பட்டு வெற்றிகரமாக அங்குப்போய்ச் சேர்ந்தது என்பதைச் சொல்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
சண்டை, பொதுமக்களின் உயிர்ச்சேதத்தை உண்டாக்கியது. கவலைக்குரியதாக, ஊழிய ஆண்டின் முடிவுக்குள் நம்முடைய சகோதரசகோதரிகளில் ஆறுபேரும், அக்கறைக்காண்பித்த இரண்டுபேரும் தங்களுடைய உயிர்களை இழந்தனர், சிலர் காயமுற்றனர்.
எனினும் அநேக அனுபவங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருப்பது பொதுவாக ஒரு பாதுகாப்பாக இருந்தது என்பதைக் காண்பிக்கின்றன. ஒரு சம்பவத்தில், சகோதரர்கள் பெல்கிரேட்-ல் நடக்கும் மாவட்ட மாநாட்டிற்குப் போய்க் கொண்டிருந்தார்கள்; அப்போது அந்தப் பேருந்து படைவீரர்களால் நிறுத்தப்பட்டது; குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்த அங்கத்தினர்கள் இருக்கிறார்களா என்று கேட்டார்கள். சகோதரர்களோ, யாரும் இல்லை என்று பதிலளித்தார்கள். அவர்கள் தங்களுடைய அடையாள அட்டைகளைக் காண்பிக்க வேண்டியதிருந்தது; அவர்களில் சிலருடைய பெயர்கள் ஒருவித மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை குறிப்பதுபோல் இருந்தது. படைவீரர்கள், இவர்கள் பொய்ச் சொல்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்கள். ஆனால் சகோதரர்களோ, அவர்கள் சர்ச்சிலிருந்து விலகின அந்த விலகல் அறிவிப்பு கடிதங்களை வைத்திருந்தனர்; அந்தக் குறிப்பிட்ட மதத்தில் ஒருவேளை அவர்கள் பிறந்திருந்தாலும், இப்பொழுது தாங்கள் யெகோவாவின் சாட்சிகள், தங்களுடைய மாநாட்டிற்குப் போய்க்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். எனவே, படைவீரர்கள் அவர்களைத் தொடர்ந்து பிரயாணம்செய்ய அனுமதித்தார்கள்.
பயனியர்கள், தணிக்கப்படமுடியாத ஆர்வத்தோடு தங்களுடைய ஊழியத்தைத் தொடர்ந்தனர். வேலைசெய்வதற்கு உண்மையான ஓர் உந்துசக்தியாக இது நிரூபித்தது. முழுவர்ணத்தில் உற்சாகமளிக்கும் அதனுடைய அட்டைப்பகுதிகளோடு தி உவாட்ச்டவர் பத்திரிகை, இந்தத் தேசத்தின் எல்லா முக்கிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. இது சத்தியத்தையும் நீதியையும் நேசிப்பவர்களுக்குத் தொடர்ச்சியாக ‘ஏற்றவேளையின் [ஆவிக்குரிய] உணவைக்’ கொடுத்துவருகிறது. (லூக்கா 12:42) இந்த 1992 ஊழிய ஆண்டில் 674 புதிய சகோதரசகோதரிகள் முழுக்காட்டுதல் எடுத்தனர்.
நிச்சயமாகவே, கிழக்கு ஐரோப்பாவில் சகோதரர்கள் செய்த வேலையையும் தம்முடைய நாமத்திற்காக அவர்கள் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் கடவுள் மறந்துவிடவில்லை. மேலுமாக, தம்முடைய வணக்கத்தார் எங்கு வாழ்ந்தாலும் பவுல் அடுத்ததாக எபிரேயர் 6:11-ல் [தமிழ்க் கத்தோலிக்க பைபிள்] சொன்ன பின்வரும் புத்திமதியைப் பின்பற்றும்படி அவர் விரும்புகிறார். இது இவ்வாறு வாசிக்கிறது: “நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை முற்றும் உறுதிபெறும்படி உங்களுள் ஒவ்வொருவனும் இறுதிவரை அதே ஆர்வம் காட்டவேண்டுமென்று விரும்புகிறோம்.”