பண ஆசையில்—என்ன தவறு இருக்கிறது?
ஏழ்மையான ஓர் ஆப்பிரிக்க சமுதாயத்தில் ஒரு பேரங்காடியை (சூப்பர்மார்க்கெட்டை) நடத்திவந்தார்கள் பாலும் மேரியும்.a இரவும் பகலும் மிகக் கடினமாக உழைப்பதன்மூலம், அவர்கள் ஏராளமான பணத்தை சம்பாதித்தனர். காலப்போக்கில், மேரி ஆடம்பரமான தட்டுமுட்டுப் பொருள்களால் நிறைந்திருக்கும் ஒரு பெரிய வீட்டைச் சொந்தமாகக் கொண்டிருப்பதில் பெருமிதம் கொண்டாள். பாலோ, ஒரு சொகுசுக் காரை ஓட்டித்திரிய முடிந்தது.
ஒரு நாள், அரசாங்கத்தை எதிர்க்கும் ஒரு கும்பலினால் பால் அணுகப்பட்டார். அவர்கள் வற்புறுத்திக் கேட்டனர்: “எங்கள் செலவைச் சமாளிப்பதற்காக உங்களுடைய நிர்வாகம் ஒவ்வொரு மாதமும் [$ 100] நன்கொடை கொடுக்கவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.” அரசியல் போராட்டத்தில் எந்தப் பக்கத்திற்கும் ஆதரவுதர விரும்பாதவர்களாக, பாலும் மேரியும் தைரியமாக மறுப்புத் தெரிவித்தனர். அவர்களுடைய நடுநிலையின் காரணமாக, அவர்கள் அரசாங்கத்திடமிருந்து பொருளாதார உதவிப்பெறுவதாகச் சந்தேகிக்கப்பட்டனர். ஒரு வார இறுதியில் பாலும் மேரியும் வெளியூருக்குச் சென்றிருந்தபோது, அவர்களுடைய கடை சூறையாடப்பட்டது, அவர்களுடைய காரும் அழகான வீடும் தீக்கொளுத்தப்பட்டன.
உண்மையில், ஒரு சோகமான சம்பவம்தான். ஆனால் இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியுமா? பணக்காரர்களாவதற்குக் கடினமாக உழைத்த அநேகர், தங்களுடைய ஆஸ்திகளைப் பறிகொடுக்கும் ஆபத்தினால் பாதிக்கப்பட்டிருக்காமல் ஒருவேளை இருக்கலாம், எனினும் எதிர்காலத்தைப் பற்றியென்ன? பைபிள், “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்” என்று ஏன் சொல்கிறது?—1 தீமோத்தேயு 6:9.
பணத்தைப் பற்றிய ஒரு சமநிலையான நோக்கு
பைபிளின் பிரகாரம், ஓர் உண்மை கிறிஸ்தவர், அவனுடைய அல்லது அவளுடைய ஆதரவிலுள்ள குடும்ப அங்கத்தினர்களுக்குப் பொருள் சம்பந்தமான தேவைகளைக் கொடுக்கவேண்டும். சில சமயங்களில், வேலையில்லாமை அல்லது உடல்நலப் பிரச்னைகள் போன்ற சூழ்நிலைமைகள் இதைக் கடினமாக்கும். மறுபட்சத்தில், தன்னுடைய குடும்பத் தேவையை வேண்டுமென்றே அசட்டை செய்கிற ஒரு கிறிஸ்தவன், “விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.”—1 தீமோத்தேயு 5:8.
சில கிராமப்பகுதிகளில், மக்கள் தங்களுடைய சொந்த உணவை பயிர்செய்து, கால்நடைகளை வளர்ப்பதன்மூலம் தங்களுடைய விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். சிலர் வாழ்க்கையின் அத்தியாவசியமானவற்றைப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்குப் பண்டமாற்றாக பெறுவதினால், பணத்தை மிகச்சிறிதளவே பயன்படுத்துகின்றனர். ஆனாலும், தங்களுடைய குடும்பங்களுக்காக சம்பாத்தியம்செய்கிறவர்கள், பெரும்பாலும், சம்பளத்திற்காக ஏதோவொரு வகையான வேலைசெய்கிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய குடும்ப நலத்திற்கு உதவிசெய்யும் உணவு மற்றும் மற்றப் பொருள்களை வாங்குவதற்கு சம்பாதித்தப் பணத்தைப் பயன்படுத்துகின்றனர். மேலும் ஞானமாகச் சேர்த்துவைக்கப்பட்ட பணம் கஷ்டமான அல்லது ஆபத்தான காலங்களில் ஓரளவான பாதுகாப்பைத் தரும். உதாரணமாக, மருத்துவ செலவிற்கோ அல்லது ஒருவருடைய வீட்டில் மிக முக்கியமான பழுதுபார்த்தல் வேலைசெய்வதற்கோ அது உதவியாக இருக்கலாம். எனவே தான், பைபிள் “பணமும் கேடயம் [வேலி, தி.மொ.]” என்றும் “எல்லாவற்றையும் படியச் செய்யும்” என்றும் மிகச்சரியாக சொல்கிறது.—சங்கத் திருவுரை ஆகமம் 7:13; 10:19, கத்.பை.
பணம் அவ்வளவு சாதிக்கிறதினால், அதனுடைய வலிமையைப்பற்றிய பொய்யான நோக்குநிலையை வளர்ப்பதில் ஆபத்து இருக்கிறது. ஒரு கிறிஸ்தவர், மற்ற அதிமுக்கியமான காரியங்களோடு ஒப்பிட, அதனுடைய வரம்பெல்லைகளை அறிந்தவனாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, பைபிள் பணத்தின் மதிப்பைத் தெய்வீக ஞானத்தோடு ஒப்பிட்டுச் சொல்கிறது: “செல்வமேபோல ஞானமும் வேலியாம், ஞானமோ தன்னை உடையவர்க்கு உயிர் தரும்; இதுவே அறிவின் சிறப்பாகும்மே.” (பிரசங்கி 7:12, தி.மொ.) எந்த வழியில் தெய்வீக ஞானம் பணத்தைவிட இந்தச் சிறப்பு அம்சத்தையுடையதாக இருக்கிறது?
கடந்தகாலத்திலிருந்து ஒரு பாடம்
பணத்தின்மீதான தெய்வீக ஞானத்தின் சிறப்பை, பொ.ச. 66-ஆம் ஆண்டு எருசலேமில் நடந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. உட்புக முயற்சிசெய்த ரோம படைகளை எதிர்த்தப்பின்பு, எருசலேமில் இருந்த யூதர்கள், வர்த்தக வாய்ப்புகள் இப்பொழுது முறை நன்றாக இருந்ததாக உறுதியாக நம்பினர். உண்மையில், புதிதாகக் கண்டுணர்ந்த தங்களுடைய சுதந்திரத்தின் கொண்டாட்டமாக, அவர்கள் தங்களுடைய சொந்த நாணயத்தை உண்டாக்க ஆரம்பித்தனர். அவர்களுடைய நாணயங்கள் “சீயோனின் விடுதலைக்காக,” “பரிசுத்த எருசலேம்” போன்ற வாக்கியங்களினால் எபிரெயுவில் முத்திரையிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு புதிய ஆண்டும், “ஆண்டு இரண்டு,” “ஆண்டு மூன்று,” “ஆண்டு நான்கு” என எழுத்துக்களினால் பொறிக்கப்பட்டு அவர்களை அடையாளப்படுத்தின புதிய நாணயங்களை உண்டாக்கினர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், “ஆண்டு ஐந்து” என்று பொறிக்கப்பட்ட பொ.ச. 70-ஆம் ஆண்டிற்குரிய இன்னும் சில அரிதான நாணயங்களைத் தோண்டியெடுத்திருக்கின்றனர். இந்தப் புதிய யூத நாட்டுப் பணத்தை, நிரந்தரமான சுதந்திரத்தின் உண்மையான சின்னமாக, யூத கிறிஸ்தவர்கள் கருதினார்களா?
இல்லை. ஏனென்றால் அவர்களுடைய எஜமானரின் ஞானமான வார்த்தைகளை அவர்கள் மனதில் வைத்திருந்தனர். இயேசு, பொ.ச. 66-ல் நடந்த ரோம படையெடுப்பைப்பற்றி முன்பே கூறியிருந்தார். இது நடந்தேறும்போது, ‘எருசலேமின் மத்தியிலிருந்து வெளியேற’ வேண்டுமென அவர் தம்மைப் பின்பற்றினவர்களுக்கு ஆலோசனை கொடுத்திருந்தார். (லூக்கா 21:20-22) யூத கிறிஸ்தவர்கள் அவ்வாறே செய்தனர் என்று வரலாறு சாட்சிக்கொடுக்கிறது. அவர்கள் எருசலேமைவிட்டுப் போகவேண்டியதிருந்ததால், தெளிவாகவே, சொத்துக்கள், பொருள்வளங்கள், வர்த்தக வாய்ப்புகள் போன்றவற்றை இழக்க தயாராகயிருந்தனர். நான்கு வருடங்களுக்குப் பின்பு, ரோமப் படைகள் திரும்பிவந்து, நகரத்தை முற்றுகையிட்டன.
கண்கண்ட சாட்சியாகிய சரித்திராசிரியர் ஜொஸீஃபஸ் சொல்கிறபிரகாரம், “நகரத்தில் ஏராளமாகத் தங்கம் மிகப்பெரியளவில் இருந்தது.” ஆனால், பேரளவான பணம், எருசலேமைப் பஞ்சத்திலிருந்து பாதுகாக்கவில்லை, இது ஒரேசீராக “மோசமாகியது,” மேலும் “வீட்டுச்சாமான்களையும் குடும்பங்களையும் கொள்ளையிட்டது.” சில நகரவாசிகள் தங்க நாணயங்களை விழுங்கிவிட்டு, நகரத்தைவிட்டு ஓடிப்போக முயற்சிசெய்தனர். ஆனால், அவர்களை எதிரிகள் கொன்றனர்; பணத்தைச் சூறையாடுவதற்காக அவர்களுடைய வயிறுகளைக் கிழித்தனர். ஜொஸீஃபஸ் விளக்குகிறார், “செல்வந்தர்களுக்கு நகரத்தைவிட்டு வெளியேபோவது அதில் வெறுமனே தங்கியிருப்பதைப்போலவே அதிக ஆபத்தானதாக இருந்தது; ஓடிப்போகிறவர்கள் சாக்குப்போக்குச் சொல்கிறார்கள் என்ற அடிப்படையில், அநேக மனிதர்கள் அவர்களுடைய பணத்திற்காகக் கொலைசெய்யப்பட்டனர்.”
முற்றுகையின் ஆரம்பத்திலிருந்து ஆறு மாதங்களுக்குள், எருசலேம் அழிக்கப்பட்டது; இதனுடைய பத்து லட்சத்திற்கும் மேலான குடிமக்கள், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும், பட்டயத்தினாலும் மாண்டனர். பண ஆசை அநேகரை வஞ்சித்து அவர்களை அழிவுக்கும் வீழ்ச்சிக்கும் உட்படுத்தியிருந்தது, ஆனால், ஞானமுள்ள வார்த்தைகளைப் பொருத்திப் பிரயோகித்தது யூத கிறிஸ்தவர்களுக்குத் தப்பித்துக்கொள்ள உதவிசெய்திருந்தது.
ஆபத்துக் காலத்தில் பணம் உதவிசெய்யத் தவறியது வரலாற்றில் அந்த ஒரு சமயத்தில் மட்டுமல்ல. பண ஆசை எவ்வளவு கொடிய எஜமானாக இருக்க முடியும்! (மத்தேயு 6:24) மேலுமதிகமாக, தற்கால சந்தோஷத்தையும் அது பறித்துவிடக்கூடும்.
பணம் வாங்கமுடியாத இன்பங்கள்
பணக்காரனாகவேண்டும் என்ற வெறி, அதிக பணம் தேவைப்படுத்தாத அநேக இன்பங்களுக்கு ஒருவரை மூடிமறைக்கலாம். உதாரணமாக, சந்தோஷமான குடும்ப உறவுகள், உண்மை நண்பர்கள், இயற்கையின் அதிசயங்கள், கண்ணைக்கவரும் சூரிய மறைவு, கவர்ச்சியூட்டும் இடிமின்னல்புயல், நட்சத்திரங்களடங்கிய வானங்கள், விலங்குகளின் கேளிக்கை விளையாட்டுகள், அல்லது ஒரு தூய காட்டிலுள்ள பூக்கள், மரங்கள் ஆகியவற்றைச் சிந்தித்துப் பாருங்கள்.
சில பணக்காரர்கள் மேற்கூறப்பட்ட இன்பங்களை அனுபவிப்பதற்கு அதிகமான நேரத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான், ஆனால் அவர்களில் அநேகர், தங்களுடைய செல்வத்தைப் பாதுகாக்கும் அல்லது அதிகரிக்கும் முயற்சியில் மிகவும் சுறுசுறுப்பாயிருக்கிறார்கள். விநோதமாக இருப்பதுபோல் தோன்றினாலும், நிதானமாக வாழ்பவர்களுக்கும் சந்தோஷம் பெரும்பாலும் ஏய்ப்பதாக இருக்கிறது. இது நவீன கால ஆராய்ச்சியாளர்களைத் திகைப்படையச் செய்கிறது. “எத்தனையோ ஜனங்கள் மிகவும் ஏங்கிக்கொண்டிருந்த ஒன்று, எல்லாவற்றிற்கும் இதுவே மருந்து என்று நம்பப்பட்டிருந்த ஒன்று, அடையப்படும்போது, ஏமாற்றத்திலிருந்து அதிர்ச்சிவரை விளைவைத்தரும் உண்மைநிலையை நாம் எப்படி விளக்குவது?” என்று தாமஸ் ஒய்ஸ்மேன், பண உள்ளெண்ணம்—ஒரு வெறியின் ஆய்வு என்ற தன்னுடைய புத்தகத்தில் கேட்கிறார்.
பணக்காரர் ஒருவரின் சந்தோஷத்தை அபகரிக்கிற ஒரு காரியமானது, அவருடைய உண்மையான நண்பர்கள் யார் என்பதை அவர் அறிவது கடினமாக இருப்பதாகும். பணக்கார ராஜா சாலொமோன், “பொருள் [செல்வம், கத்.பை.] பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்” என்பதை அனுபவத்தில் அறிந்தார். (பிரசங்கி 5:11) பணக்காரர்கள் அநேகர், தங்களுடைய செல்வத்தைத் தற்காத்துக்கொள்ள அல்லது அதிகரிக்க முயற்சிசெய்யும் ஏக்கத்தினால் வாதிக்கப்படுகிறார்கள். இது அடிக்கடி அவர்களிடத்திலிருந்து நிம்மதியான தூக்கத்தை எடுத்துவிடுகிறது. பைபிள் விளக்குகிறது: “வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.”—பிரசங்கி 5:12.
பண ஆசை, குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் இடையேயுள்ள உறவுகளை முறிக்கலாம்; ஏனென்றால் இது ஒருவரை நேர்மையற்ற மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும்படித் தூண்டலாம். பணப்பிரியர்கள், பெரும்பாலும் சூதாட்டத்தை நாடுகிறார்கள். கவலைக்குரியவிதத்தில், மற்றுமொரு சூதாட்ட அனுபவத்தைப் பெறுவதற்கான வெறி, பலரைக் கடனாளிகளாக்கிவிடுகிறது. “அவர்கள் என்னிடத்தில் வரும் சமயத்தில்,” தென் ஆப்பிரிக்காவின் ஒரு மனநோய் மருத்துவர் சொன்னார், “[சூதாட்ட வெறியர்கள்] தங்களை மறுபடியும் மாற்றமுடியாத நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள், அவர்கள் வேலைகள், வர்த்தகங்கள், வீடுகள் ஆகியவற்றை இழந்துவிடுகின்றனர், அவர்களுடைய குடும்பங்களும் அவர்களைக் கைவிட்டுவிடுகின்றன.” பைபிளின் எச்சரிப்பு எவ்வளவு உண்மையாக இருக்கிறது: “உண்மையுள்ளவன் மிகவும் புகழப்படுவான் [பேராசீர்வாதத்தைப் பெறுவான், தி.மொ.]. செல்வம் சேர்க்கும் பேராசையால் பீடிக்கப்பட்டவன் மாசற்றவனாய் இரான்.”—பழமொழி ஆகமம் 28:20, கத்.பை.
“அது . . . சிறகுகளை . . . உண்டுபண்ணிக்கொண்டு . . . பறந்துபோம்”
பண ஆசை அவ்வளவு ஆபத்தானதாக இருப்பதற்கு மற்றொரு காரணம் மனித அரசாங்கங்கள் முழுவதுமாக ஒத்துழைக்க அல்லது ஒரு சர்வதேச அளவில் நிலையான மதிப்புடையதாகப் பணத்தைக் காத்துக்கொள்ள முடியாத நிலையாகும்; அவற்றால் பின்வாங்குதல்கள், பொருளாதார நெருக்கடிகள், பங்கு-சந்தை வீழ்ச்சிகள் ஆகியவற்றையும் அவர்கள் தவிர்க்கமுடியவில்லை. மோசடி, திருடு, பணவீக்கம் ஆகியவையும் ஆவியினால் ஏவப்பட்ட வார்த்தைகளை உண்மையென அழுத்திக்காண்பிக்கின்றன: “ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே. இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.”—நீதிமொழிகள் 23:4, 5.
பணவீக்கம். இந்தப் பிரச்னை ஏழை நாடுகளுக்குமட்டும் உரியதல்ல. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், அதிவேகத்தில் வளர்ந்துவரும் பணவீக்கம் மத்திய ஐரோப்பாவின் தொழில்வளமாக்கப்பட்ட நாடுகளைப் பாதித்தது. உதாரணமாக, முதல் உலகப் போருக்கு முன்பு ஒரு ஜெர்மன் மார்க் [ஜெர்மானியர்களின் பணம்] ஏறக்குறைய ஒரு பிரிட்டிஷ் ஷில்லிங், பிரான்க், அல்லது ஓர் இத்தாலிய லிராவுக்குச் சமமாக இருந்தது. பத்தாண்டுகளுக்குப் பின்பு, இந்த ஷில்லிங், பிரெஞ்சு பிரான்க், மற்றும் லிரா, சுமார் 1,00,000,00,00,000 மார்க்குகளுக்குச் சமமாக இருந்தது. பணக்கார சமுதாயங்களிலுள்ள மக்கள்மீது, வானளவிற்கு உயரும் பணவீக்கம் என்ன பாதிப்பைக் கொண்டிருக்கிறது? “முதல் உலகப்போரில் தோற்கடிக்கப்பட்ட ஜெர்மன் மற்றும் ஆஸ்ட்ரோ-ஹங்கேரியன் கூட்டுப்பேரரசுகளுக்கு, 1920-களில் என்ன நடந்தது என்பதை வைத்து நிதானிக்கவேண்டியிருந்தால், “பின்பு [பணத்தின் வீழ்ச்சி] உண்டாக்கும், பெரும்பாலும் பயத்தினால் வரும் பேராசை, வன்முறை, சந்தோஷமற்றத்தன்மை, வெறுப்பு, போன்றவற்றால் பாதிக்கப்படாமல் அல்லது மாற்றப்படாமல் எந்தச் சமுதாயமும் தப்பிக்கப்போவதில்லை” என்று ஆடம் ஃபெர்கெசன், பணம் மரிக்கும்போது (When Money Dies) என்ற தன் புத்தகத்தில் சொல்கிறார்.
ஜெர்மனி, 1923-ல், 1,00,000,00,00,000 பழைய மார்க்குகளைத் திடீரென்று ஒரு புதிய மார்க்குக்குச் சமமாக ஆகும்படி 12 பூஜ்யங்களை நீக்கி, தன்னுடைய நடப்பு நாணயத்தை மறுமதிப்பீடு செய்தது. இந்த நடவடிக்கை, பணவீக்கத்தைச் சற்று நிறுத்திவைத்தது, ஆனால் மற்ற பேரழிவான விளைவுகளை இது கொண்டுவந்தது. ஃபெர்கெசன் விளக்குகிறார்: “பணத்தின் நிரந்தரத்தன்மையை மறுபடியும் நிலைநாட்டுவது, ஆயிரக்கணக்கானவர்களைக் கொள்ளையடித்து, அவர்களுடைய வாழ்க்கைத் தேவைகளில் லட்சக்கணக்கானவற்றைத் திருடி, லட்சக்கணக்கானவரின் எதிர்கால நம்பிக்கையை வெறுமையாக்கியது, உலகமுழுவதுமே கொடுக்கவேண்டிய இன்னுமதிகப் பேரளவான விலையை மறைமுகமாக அபகரித்தது.” ஒருவேளை, இந்த ஆசிரியர் “பேரளவான விலை” என்று சொல்லும்போது, நாசிஸம், இரண்டாம் உலக யுத்தம் ஆகியவற்றின் எழுச்சியை மனதில் கொண்டிருந்திருக்கக்கூடும்.
கடந்த காலத்தில் அத்தனை பெரிய வங்கி கணக்குகள் அநேகரை கைவிட்டிருப்பது, இந்த உலகளாவிய பொருளாதாரத்தின் நிலையற்ற காலங்களில் ஒரு தெளிவான எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பணம் கைவிட்டுவிடும் என்று கடவுளுடைய குமாரன் எச்சரித்தார், அது அவ்வாறே பல தடவைகள் செய்திருக்கிறது. (லூக்கா 16:9) ஆனால் யெகோவா இந்தப் பொல்லாத உலகத்தின்மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டுவரும்போது, மிகப்பெரியதும் அதிகமாக பரவினதுமான பண வீழ்ச்சி வரும். “கோபாக்கினைநாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.”—நீதிமொழிகள் 11:4.
எனவே, நாம் ஒவ்வொருவரும், நம்முடைய உண்மையான நண்பர்களாகிய யெகோவா தேவனோடும் இயேசு கிறிஸ்துவோடும் ஒரு நீதியான நிலைநிற்கையைக் காத்துக்கொள்ள கடுமையாக முயற்சிசெய்வது எவ்வளவு முக்கியம்!
நிரந்தரமான சந்தோஷத்தின் ஊற்றுமூலம்
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலும் மேரியும் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தார்கள். அநேக வருடங்களாக முழுநேர சுவிசேஷ சேவையில் ஈடுபட்டுவந்தனர். ஆனாலும், ஐசுவரியத்தின்மீதான அவர்களுடைய ஆசை அவர்களைக் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வரவிடாமல் தடுத்தது, மேலுமாக அவர்கள் தங்களுடைய விசுவாசத்தை வெளி ஊழியத்தில் பகிர்ந்துகொள்வதை நிறுத்தினர். ஆனால் அவர்கள் ஆவிக்குரிய வகையில் விழித்தெழுந்தனர். கொள்ளையடிக்கப்பட்டு அவளுடைய வீடும் நாசமாக்கப்பட்டபின்பு, “சில நிமிஷங்களில் ஒழிந்துபோகும் ஒன்றுக்காக என்னுடைய எல்லா நேரத்தையும் பலத்தையும் செலவிட்டது எவ்வளவு அறிவற்றதாக இருக்கிறதென்பது இப்பொழுது எனக்குப் புரிகிறது,” என்று மேரி சொன்னாள். சந்தோஷகரமாகவே, இந்தத் தம்பதி நிலைமை மோசமாவதற்கு முன்பாகவே ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டனர். ஆம், யெகோவா தேவனோடும், இயேசு கிறிஸ்துவோடும் ஒருவர் வைத்திருக்கிற ஓர் அங்கீகரிக்கப்பட்ட உறவைக் கொள்ளையடிப்பதே பண ஆசை கொண்டுவரும் ஒரு மிகப்பெரிய தீங்காகும். இந்த நண்பர்களில்லாமல், இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவில் தப்பிப்பிழைத்து, வாக்களிக்கப்பட்ட நீதியான புதிய உலகிற்குள் போவோம் என்ற என்ன நம்பிக்கை நமக்கு இருக்கமுடியும்?—மத்தேயு 6:19-21, 31-34; 2 பேதுரு 3:13.
எனவே, நீங்கள் உங்களை ஏழையாகவோ அல்லது பணக்காரராகவோ கருதினாலும், பண ஆசையை வளர்த்துக் கொள்வதற்கு எதிராக எச்சரிக்கையாயிருங்கள். மிகப்பெரிய பொக்கிஷமாகிய யெகோவா தேவனோடுள்ள ஓர் அங்கீகரிக்கப்பட்ட நிலைநிற்கையைப் பெறுவதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கும் உழையுங்கள். மிக அவசரமான அழைப்பிற்குத் தொடர்ந்து கவனம்செலுத்துவதன்மூலம் நீங்கள் இதைச் செய்யலாம்: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.”—வெளிப்படுத்துதல் 22:17.
[அடிக்குறிப்புகள்]
a அவர்களுடைய உண்மைப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டில்லை.
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
யூத எழுச்சியின்போது “ஆண்டு இரண்டு” என்று பொறிக்கப்பட்டுச் செய்யப்பட்ட நாணயத்தின் இரு பக்கங்கள்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.