“திருமணம் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுவதாக”
“திருமணம் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுவதாக . . . [விவாக] மஞ்சம் மாசுறாது இருக்கட்டும்.”—எபிரேயர் 13:4, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்.
1. வெற்றிகரமான திருமண வாழ்க்கையைப்பற்றி அநேக மக்கள் என்ன கற்றறிந்திருக்கிறார்கள்?
சர்வசாதாரணமாக விவாகரத்துசெய்யும் இந்தக் காலத்திலும், லட்சக்கணக்கான மக்கள் நீடித்திருக்கும் திருமண வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். குணயியல்பிலும் பின்னணியிலும் பல வித்தியாசங்கள் இருந்தபோதிலும் வெற்றிதரும் ஒரு வழியை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட திருமண வாழ்க்கைகளை யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் காணலாம். இந்தத் தம்பதிகளில் பெரும்பாலோர், நல்ல சமயங்களையும் கஷ்டமான சமயங்களையும் அனுபவித்திருப்பதாக ஒத்துக்கொள்கின்றனர், இவற்றில் சில ஒருவரை மற்றொருவர் குற்றம்சாட்டும் அளவிற்கும் காரணமாக இருந்திருக்கிறது. ஆனாலும், அவர்கள் சிறிய புயல்கள் போன்ற பிரச்னைகளை மேற்கொள்வதன்மூலம், தங்களுடைய திருமணக் கப்பலை சரியான திசையில் செல்லும்படிக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்வதற்கு உதவி செய்திருக்கும் சில அம்சங்கள் யாவை?—கொலோசெயர் 3:13.
2. (எ) திருமண வாழ்க்கையை முறியாமல் பாதுகாக்கும் சில நல்ல அம்சங்கள் யாவை? (பி) திருமண வாழ்க்கையைக் கவிழ்த்துப்போடும் சில அம்சங்கள் யாவை? (பக்கம் 14-ல் உள்ள பெட்டியைப் பார்க்கவும்.)
2 சந்தோஷமான மற்றும் நிலையான கிறிஸ்தவத் திருமண வாழ்க்கைகளையுடைய சிலரால் கொடுக்கப்பட்ட கூற்றுகள் நன்றாகவே தெளிவுபடுத்துவதாய் இருக்கின்றன. திருமணம்செய்து 16 ஆண்டுகளாக கணவனாகவுள்ள ஒருவர் சொன்னார்: “ஒரு பிரச்னை வரும்போது, எங்களுடைய ஒவ்வொருவரின் கருத்து என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு உண்மையிலேயே நாங்கள் முயற்சிசெய்வோம்.” அநேகத் திருமண வாழ்க்கைகளிலுள்ள முக்கியமான அம்சங்களில் ஒன்றை இது குறிப்பாகச் சுட்டிக்காண்பிக்கிறது—மூடிமறைக்காத, வெளிப்படையான பேச்சுத்தொடர்பு. கடந்த 31 ஆண்டுகளாக திருமணவாழ்க்கை நடத்தும் ஒரு மனைவி சொன்னாள்: “காதலுணர்ச்சிகளை எங்களுக்குள் உயிரோடு வைத்திருப்பதற்காகக் கைகளைக் கோர்த்துக்கொண்டு, விளையாட்டாக காரியங்களைச் செய்வது எப்போதும் முதன்மையாக இருந்திருக்கிறது.” இது பேச்சுத்தொடர்பின் கூடுதல் அம்சமாக இருக்கிறது. ஏறக்குறைய 40 வருடங்களாக திருமண வாழ்க்கை வாழும் மற்றொரு தம்பதி, தங்களைக் குறித்தும், ஒருவருக்கொருவரும் கேலிசெய்துகொள்ளும் நகைச்சுவையுணர்வைக் காத்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினர். இது ஒவ்வொருவரிடமுள்ள நல்ல மற்றும் கெட்ட பக்கங்களைத் தெரிந்துகொண்டு, அதே சமயத்தில் பற்றுமாறா அன்பைக் காட்டுவதற்கு உதவிசெய்கிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். தவறுகளை ஒப்புக்கொண்டு, அதற்கு மன்னிப்பைக் கேட்பதற்கு விருப்பமுள்ளவராக இருக்கவேண்டுமென அந்தக் கணவர் குறிப்பிட்டார். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை எங்கு இருக்கிறதோ, அங்குத் திருமண வாழ்க்கை முறிவைக் காணாமல், வளைந்துகொடுக்கத் தயாரானதாக இருக்கும்.—பிலிப்பியர் 2:1-4; 4:5, கிங்டம் இன்டர்லீனியர்.
மாறிவரும் நிலைமை
3, 4. திருமண வாழ்க்கையில் பற்றுமாறாத உறுதித்தன்மை சம்பந்தமாக எண்ணங்கள் எவ்வாறு மாறியிருக்கின்றன? நீங்கள் உதாரணங்களைத் தரமுடியுமா?
3 கடந்த சில பத்தாண்டுகளாக, திருமண வாழ்க்கையில் பற்றுமாறாத உறுதி சம்பந்தமாக உள்ளத்தின் உணர்ச்சிகள், உலகமெங்கும் மாறியிருக்கின்றன. விசேஷமாகத் துணை இதைப் பற்றியறிந்திருந்து, அதை ஏற்றுக்கொண்டால், விபசாரத்தின் நவீன மாற்றுச்சொல்லாகிய, காதல் விவகாரத்தில் ஈடுபடுவதில் எந்தவிதமான தவறுமில்லையென திருமணமான சிலர் நினைக்கின்றனர்.
4 நிலைமையைப் பற்றி ஒரு கிறிஸ்தவக் கண்காணி இவ்வாறு சொன்னார்: “இந்த உலகம் ஒழுக்க தராதரத்தின் பிரகாரம் வாழவிரும்பும் எந்தவித முயற்சியையும் நடைமுறையிலிருந்து உதறித்தள்ளிவிட்டிருக்கிறது. கற்புள்ள நடத்தை, பழைய கால பாணியாகக் கருதப்படுகிறது.” அரசியல், போட்டிவிளையாட்டுகள், களியாட்டங்கள் ஆகியவற்றின் மிகப்பிரபலமான ஆட்கள் வெளிப்படையாகவே ஒழுக்கநெறி சம்பந்தமான பைபிளின் தராதரங்களை மீறுகின்றனர், மேலும் அப்படிப்பட்ட ஆட்கள்தான் இப்போது புகழப்படுகிறார்கள். எந்தவிதமான ஒழுக்கத் தவறுக்கும் அல்லது இழிவான பாலுணர்ச்சி ஈடுபாட்டுக்கும் நிஜமாகவே மானக்கேடான ஓர் உணர்வு கொடுக்கப்படுவதில்லை. உயர்-தர சமுதாயம் என்றழைக்கப்படுவதில் கற்பும் உண்மைத்தன்மையும் மிக அரிதாகவே மதிக்கப்படுகிறது. பிறகு, ‘ஒருவருக்குப் பொருந்துவதுதான் மற்றொருவருக்கும் பொருந்தும்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் பலர் அந்த மாதிரியைப் பின்பற்றி, கடவுள் கண்டனம்செய்வதைப் பொறுத்துக்கொள்கிறார்கள். இது பவுல் சொன்னப்பிரகாரமாக இருக்கிறது: “உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.”—எபேசியர் 4:19; நீதிமொழிகள் 17:15; ரோமர் 1:24-28; 1 கொரிந்தியர் 5:11.
5. (எ) விபசாரத்தைப் பற்றி கடவுளுடைய நிலைநிற்கை என்ன? (பி) “வேசித்தனம்” என்ற வார்த்தையைப் பைபிள் பயன்படுத்துவதிலிருந்து என்ன உட்படுத்தப்படுகிறது?
5 கடவுளுடைய தராதரங்கள் மாறவில்லை. திருமணத்தின் பலனில்லாமல் சேர்ந்து வாழ்வது வேசித்தனத்தில் வாழ்வதற்குச் சமம் என்பதே அவருடைய நிலைநிற்கை. திருமணத்தில் பற்றுறுதியில்லாத தன்மை இன்னும் விபசாரமே.a அப்போஸ்தலனாகிய பவுல் மிகத்தெளிவாகச் சொன்னார்: “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.”—1 கொரிந்தியர் 6:9-11.
6. என்ன உற்சாகத்தை நாம், 1 கொரிந்தியர் 6:9-11-ல் உள்ள பவுலின் வார்த்தைகளில் காண்கிறோம்?
6 “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் . . . கழுவப்பட்டீர்கள்,” என்று பவுல் சொன்னது அந்த வசனத்தின் உற்சாகமளிக்கும் குறிப்பாகும். ஆம், கடந்தகாலங்களில் உலகத்தின் ஒழுக்கங்கெட்ட “துன்மார்க்க உளையிலே” உருண்டோடிக்கொண்டிருந்தவர்கள், தங்கள் உணர்வுகளுக்குத் திரும்பவந்து, இயேசுவையும் அவருடைய பலியையும் ஏற்றுக்கொண்டு, கழுவப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒழுக்கமுள்ள வாழ்க்கை வாழ்வதன்மூலம் கடவுளைப் பிரியப்படுத்த தெரிவுசெய்து, அதன்விளைவாக மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.—1 பேதுரு 4:3, 4.
7. “ஒழுக்கக்கேடு,” இதைப் புரிந்துகொள்வதில் என்ன முரண்பாடு இருக்கிறது, பைபிளின் கருத்து என்ன?
7 மறுபட்சத்தில், ஒழுக்கக்கேட்டைப்பற்றிய நவீன உலகத்தின் விளக்கம் அவ்வளவு உறுதியற்றதாக இருப்பதனால், அது கடவுளுடைய கருத்திற்கு ஒத்ததாக இல்லை. ஓர் அகராதி “ஒழுக்கக்கேடு” என்பதை, “நிலைநாட்டப்பட்ட ஒழுக்கத்திற்கு முரணானது” என்று வரையறுக்கிறது. இன்றைய “நிலைநாட்டப்பட்ட ஒழுக்கம்,” திருமணத்திற்கு முன்பான மற்றும் திருமணத்திற்கு புறம்பான பாலுறவையும் ஓரினப்புணர்ச்சியையும் பொறுத்துக்கொள்கிறது, இதைத்தான் பைபிள் ஒழுக்கக்கேடு என்று கண்டனம் தெரிவிக்கிறது. ஆம், பைபிளின் கண்ணோட்டத்தில், ஒழுக்கக்கேடு, கடவுளுடைய ஒழுக்கநெறியின் படுமோசமான மீறுதலாகும்.—யாத்திராகமம் 20:14, 17; 1 கொரிந்தியர் 6:18.
கிறிஸ்தவச் சபை பாதிக்கப்படுகிறது
8. கிறிஸ்தவச் சபையிலுள்ளவர்களை ஒழுக்கக்கேடு எவ்வாறு பாதிக்கலாம்?
8 ஒழுக்கக்கேடு அவ்வளவு பரவியிருப்பதினால், கிறிஸ்தவச் சபையிலுள்ளவர்கள்மீதும் இது அழுத்தத்தைக் கொண்டுவரலாம். இது அவர்களை எங்கும் பரவியுள்ள, தரம்கெட்ட டிவி நிகழ்ச்சிகள், வீடியோக்கள், இழிவான புத்தகங்கள் போன்றவற்றினால் கவர்ந்திழுக்கலாம். கிறிஸ்தவர்களின் சிறு எண்ணிக்கையினரே பாதிக்கப்பட்டிருந்தாலும், கிறிஸ்தவமல்லாதவராக்கும் மனந்திரும்பாத நடத்தைக்காக, யெகோவாவின் சாட்சிகள் என்ற நிலையிலிருந்து சபைநீக்கம் செய்யப்படுபவர்களில் பெரும்பான்மையினரின் விஷயத்தில், ஏதோவொரு வகையான பாலின ஒழுக்கக்கேடு சம்பந்தப்பட்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. போற்றத்தக்க காரியமானது, சபைநீக்கம் செய்யப்பட்டவர்களில் அநேகர் இறுதியில் தங்களுடைய தவறுகளை உணர்ந்து, ஒரு சுத்தமான வாழ்க்கைப்பாதையை மீண்டும் தொடர்கின்றனர், இதன்பின்பு சரியான சமயத்தில் அவர்கள் சபைக்குள் மறுபடியும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.—லூக்கா 15:11-32-ஐ ஒப்பிட்டுப்பாருங்கள்.
9. ஜாக்கிரதையாய் இல்லாதவர்களைச் சாத்தான் எவ்வாறு திறமையாகக் கையாளுகிறான்?
9 ஜாக்கிரதையாய் இல்லாதவர்களை விழுங்குவதற்குத் தயாராக ஒரு கெர்ச்சிக்கிற சிங்கம்போல் சாத்தான் அலைந்துதிரிகிறான் என்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை. அவனுடைய சதி திட்டங்கள், அல்லது “தந்திரங்க[ள்]” ஒவ்வொரு வருடமும் ஜாக்கிரதையாக இல்லாத கிறிஸ்தவர்களைக் கண்ணியில் அகப்படச் செய்கிறது. அவனுடைய உலகத்தின் எப்போதும் இருக்கும் ஆவியானது, தன்னலம், இச்சை, காமவிகாரம். இது மாம்ச இச்சைகளை திருப்தி செய்கிறது. இது தன்னடக்கத்தை உதறித்தள்ளுகிறது.—எபேசியர் 2:1, 2; 6:11, 12, அடிக்குறிப்பு; 1 பேதுரு 5:8.
10. தூண்டுதலுக்கு யார் ஆளாகக்கூடும், ஏன்?
10 சபையில் ஒழுக்கக்கேடு செய்யும்படியான தூண்டுதல்களுக்கு யாரெல்லாம் ஆளாகக்கூடும்? அநேகக் கிறிஸ்தவர்கள், அவர்கள் ஒருவேளை உள்ளூர் சபையிலுள்ள மூப்பர்களாக, பிரயாணக் கண்காணிகளாக, பெத்தேல் ஊழியர்களாக, ஒவ்வொரு மாதமும் அநேக மணிநேரங்கள் பிரசங்கம்செய்யும் பயனியர்களாக, குடும்பத்தைக் கவனிக்கும் சுறுசுறுப்பான பெற்றோர்களாக, அல்லது ஒத்தவயதினர் அழுத்தத்தை எதிர்ப்படும் இளைஞராக இருக்கலாம். உடல் சார்ந்த உணர்ச்சித் தூண்டுதல் அனைவருக்கும் பொதுவானதுதான். நாம் கொஞ்சம்கூட எதிர்பாராத சமயத்தில் பால்சம்பந்தமான தூண்டுதல் வரலாம். எனவேதான் பவுல் எழுதினார்: “இப்படியிருக்க தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். மனுஷருக்கு [மற்றும் மனுஷிக்கு] நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை.” ஆனால் பொறுப்புள்ள ஸ்தானங்களிலுள்ள சில கிறிஸ்தவர்கள், இந்த ஒழுக்கக்கேட்டின் கவர்ச்சிக்கு பலியாகியிருக்கிறார்கள் என்பது ஒரு வருத்தந்தரும் விஷயம்.—1 கொரிந்தியர் 10:12, 13.
இழுக்கப்பட்டுச் சிக்கிக்கொள்ளுதல்
11-13. ஒழுக்கக்கேட்டிற்கு வழிநடத்தியுள்ள சில சூழ்நிலைமைகள் யாவை?
11 விபசாரம் மற்றும் வேசித்தனம் என்ற முட்டாள்தனமான நடத்தைக்குச் சிலரை வசீகரித்திருக்கும் தூண்டுதல்களும் சூழ்நிலைகளும் யாவை? இவை அநேகமாகவும், சிக்கலானதுமாக இருக்கின்றன, மேலும் வெவ்வேறு தேசத்திற்கும் அல்லது பண்பாட்டிற்கும் வேறுபட்டதாக இருக்கலாம். ஆனாலும், அநேக நாடுகளில் உருவாகிவரும் அடிப்படையான சில சூழ்நிலைகள் இருக்கின்றன. உதாரணமாக, மதுபானங்கள் தாராளமாகக் பரிமாறப்படும் விருந்துகளைச் சிலர் ஏற்பாடுசெய்திருக்கின்றனர் என்று அறிக்கை காட்டுகிறது. மற்றவர்கள் உலகப்பிரகாரமான கவர்ந்திழுக்கும் இசை, காம உணர்ச்சியைத் தூண்டும் ஆடல் போன்றவற்றால் வசீகரிக்கப்படுகிறார்கள். ஆப்பிரிக்காவின் சில இடங்களில், செல்வந்தர்கள்—அவிசுவாசிகள்—இருக்கிறார்கள், இவர்கள் வைப்பாட்டிகளை வைத்திருக்கிறார்கள்; இப்படிச்செய்வது ஒழுக்கக்கேடாக இருந்தாலும், இப்படி வாழ்வதன்மூலம் சில பெண்கள் பொருளாதார பாதுகாப்புணர்வைப் பெறுவதினால், அதைச் செய்யும்படி தூண்டப்படுகிறார்கள். மற்றசில இடங்களில், சில கிறிஸ்தவக் கணவர்கள் தங்களுடைய குடும்பங்களை விட்டுவிட்டு வாழ்வதற்குரிய சம்பாத்தியத்தைப் பெற சுரங்கங்களில் அல்லது வேறிடங்களில் வேலைசெய்ய போய்விடுகின்றனர். இதனால், அவர்களுடைய உண்மைத்தன்மையும் பற்றுமாறாத்தன்மையும், ஒருவேளை வீட்டிலிருந்தால் சோதிக்கப்பட்டிராத அளவிற்கு அல்லது வழிகளில் சோதிக்கப்படுகிறது.
12 முன்னேறிய நாடுகளில், ஒரு மூன்றாவது நபரும் இல்லாமல் சிலர், ஓர் எதிர்பாலரோடு தனிமையில்—உதாரணமாக கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும் பயிற்சிகளில் கற்றுக்கொடுப்பவரோடு தனிமையில்—அடிக்கடி இருப்பதினால் சாத்தானுடைய கண்ணியில் சிக்கியிருக்கின்றனர்.b மேய்ப்பர் சந்திப்புகளைச் செய்கிற மூப்பர்களும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், ஒரு சகோதரிக்கு ஆலோசனைக் கொடுக்கும்போது, அந்தச் சகோதரியோடு தனிமையாக இருக்கக்கூடாது. பேச்சுக்கள் உணர்ச்சிவசப்பட்டு, இரண்டுபேருக்கும் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கலாம்.—ஒப்பிடுக: மாற்கு 6:7; அப்போஸ்தலர் 15:40.
13 முன்குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலைமைகள், சில கிறிஸ்தவர்களை ஜாக்கிரதையில்லாமல் இருக்கும்படிச் செய்து, ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடும்படிச் செய்திருக்கிறது. முதல் நூற்றாண்டில் நடந்த பிரகாரமும்கூட, அவர்கள் ‘தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சோதிக்கப்பட’ தங்களைத்தாங்களே அனுமதித்திருக்கின்றனர், இது பாவத்திற்கு வழிநடத்தியிருக்கிறது.—யாக்கோபு 1:14, 15; 1 கொரிந்தியர் 5:1; கலாத்தியர் 5:19-21.
14. விபசாரக் காரியங்களில் தன்னலம் ஏன் முக்கிய அம்சமாக இருக்கிறது?
14 ஒழுக்கக்கேடான நடத்தைகளுக்கு ஒருசில முக்கியமான அம்சங்கள் பொதுவாக இருக்கவேண்டும் என்பதாக சபை நீக்கங்களைப்பற்றிய ஆழ்ந்த ஆராய்ச்சி காண்பிக்கிறது. இப்படிப்பட்ட சமயங்களில், அங்கு தன்னலம் ஏதோ ஒருவகையான காரணமாக இருக்கிறது. நாம் ஏன் அதைச் சொல்கிறோம்? ஏனென்றால், விபசாரக் காரியங்களில், அப்பாவி நபர் அல்லது நபர்கள் பாதிக்கப்படப் போகிறார்கள். இது ஒருவேளை சட்டப்பூர்வமான வாழ்க்கைத் துணையாக இருக்கலாம். குழந்தைகளும், ஒருவேளை இருந்தால், நிச்சயமாகவே பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் விபசாரம், விவாகரத்தில் முடிவடையும்போது, ஓர் ஐக்கியப்பட்ட குடும்பத்தின் பாதுகாப்பிற்காக ஏங்கும் குழந்தைகள், மிக அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். விபசாரம் செய்யும் நபர், அவனுடைய அல்லது அவளுடைய சொந்த இன்பத்தை அல்லது நலனை மட்டுமே மேலானதாக யோசிக்கிறார். அது தன்னலம்தானே.—பிலிப்பியர் 2:1-4.
15. விபசாரத்திற்கு வழிநடத்தும் சில காரணங்கள் யாவை?
15 பொதுவாக விபசாரம், திடீரென்று ஏற்படும் ஒரு குறைபாடல்ல. அங்கே ஒரு படிப்படியான, ஏன் அறியாத வகையிலும், மோசமாகுதல் திருமண வாழ்க்கையிலேயே இருந்திருக்கலாம். ஒருவேளை பேச்சுத்தொடர்பு ரசனையற்றதாக அல்லது சுவாரஸ்யமற்றதாக மாறியிருக்கலாம். ஒருவருக்கொருவர் உற்சாகமளிப்பது குறைந்திருக்கலாம். ஒருவருக்கொருவர் போற்றுதல் தெரிவிப்பதை அசட்டைசெய்திருக்கலாம். பாலுணர்வு சம்பந்தமாகக் கணவன்மனைவி இருவரும் சில காலமாகத் திருப்திப்படுத்தாமல் இருக்கலாம். விபசாரம் செய்யப்படும்போது, அங்கே கடவுளுடனுள்ள உறவு நிச்சயமாகவே குறைகிறது. யெகோவா நம் எண்ணங்களையும் செயல்களையும் அறிந்தவராயிருக்கும் ஒரு ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார் என்று இனிமேலும் உணரப்படுவதில்லை. ஏன், விபசாரரின் மனதில், “கடவுள்” என்பது வெறும் ஒரு சொல்லாக அல்லது அன்றாட வாழ்க்கையின் பாகமாயிருக்காத கற்பனை வஸ்துவாக மாறிவிடுகிறதே. அப்பொழுது, கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்வது மிகவும் எளிதானதாகிவிடுகிறது.—சங்கீதம் 51:3, 4; 1 கொரிந்தியர் 7:3-5; எபிரெயர் 4:13; 11:27.
எதிர்ப்பதற்கான திறவுகோல்
16. உண்மைத்தன்மையில்லாமல் செயல்படும்படித் தூண்டப்படும்போது ஒரு கிறிஸ்தவன் எப்படி அதை எதிர்க்கலாம்?
16 எந்தவொரு கிறிஸ்தவரும், அவனையோ அவளையோ, உண்மையற்றத் தன்மையின் வழியிலே தூண்டப்பட்டுப் போயிருப்பதாகத் தன்னைக் கண்டால், எந்த அம்சங்களைக் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்? முதன்முதலாக, பைபிள் நியமங்களை முழுவதுமாக அடிப்படையாகக் கொண்ட, கிறிஸ்தவ அன்பின் அர்த்தத்திற்குக் கொஞ்சம் கவனம் செலுத்தப்படவேண்டும். மற்றவர்களுக்குத் துன்பத்தைக் கொண்டுவந்து, தன்னலப்போக்கில் ஒருவரைக் கொண்டுபோய்விடும், உடல் சம்பந்தமான அல்லது காமவெறியான காதலுணர்ச்சி, ஒருவருடைய உணர்வுகளை மேற்கொள்ள எப்போதும் அனுமதிக்கப்படக் கூடாது. அதற்கு மாறாக, நிலைமை யெகோவாவின் பார்வையில் எவ்வாறு இருக்கும் என்பதன்பேரில் நிதானிக்கப்படவேண்டும். இந்தத் தவறான நடத்தை சபைக்கும் யெகோவாவின் பெயருக்கும் தூஷணத்தைக் கொண்டுவருமே என்று ஒரு பெரிய அளவில் இது யோசிக்கப்படவேண்டும். (சங்கீதம் 101:3) விஷயத்தின்பேரில் இயேசுவின் சிந்தையைக் கொண்டிருந்து, அதன்பிரகாரம் செயல்படுவது, பேரழிவைத் தவிர்க்கும். ஞாபகமிருக்கட்டும், கிறிஸ்துவினுடையதைப் போன்ற தன்னலமற்ற அன்பு, என்றும் அழியாது.—நீதிமொழிகள் 6:32, 33; மத்தேயு 22:37-40; 1 கொரிந்தியர் 13:5, 8.
17. உண்மைத்தன்மைக்கு என்ன உற்சாகமளிக்கும் உதாரணங்கள் நமக்கு இருக்கிறது?
17 எதிர்ப்பதற்கான திறவுகோல் என்னவென்றால், சீக்கிரத்தில் நிஜமாகப்போகும் ஒருவருடைய விசுவாசத்தையும், நம்பிக்கையெண்ணத்தையும் வளர்ப்பதேயாம். இயேசுவும், முற்காலத்தின் விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் வைத்துப்போன உண்மைத்தன்மையின் சிறந்த முன்மாதிரிகளுக்கு இருதயத்தில் முதலிடம் கொடுப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. பவுல் எழுதினார்: “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.” (எபிரெயர் 12:1-3) திருமணக் கப்பலை மூழ்கடிப்பதற்குப் பதிலாக, ஞானமுள்ள நபர் அதை எவ்வாறு பழுதுபார்த்துச் சரிப்படுத்தலாம் என்ற வழிகளைப்பற்றி யோசித்துக்கொண்டிருப்பார், இவ்வாறு செய்வதன்மூலம் நம்பிக்கைத்துரோகம், இரட்டை வாழ்க்கை போன்ற படுகுழிகளில் விழுவதைத் தவிர்க்கலாம்.—யோபு 24:15.
18. (எ) நம்பிக்கைத்துரோகம், ஏன் விபசாரத்தை விளக்கும் ஒரு கொடூரமான சொல் அல்ல? (பி) நேர்ந்துகொண்டவைகளைச் செய்வதைப்பற்றிக் கடவுள் எப்படிக் கருதுகிறார்?
18 சதியாக இருக்கும் நம்பிக்கைத்துரோகம் என்பது ஒழுக்கக்கேட்டைப் பற்றிய மிகவும் கொடூரமான சொல்லா? சதி என்பது ஒரு நம்பிக்கையை அல்லது பற்றுறுதியைக் கெடுப்பதைக் குறிக்கிறது. நிச்சயமாகவே, நல்ல நேரங்களிலும் கெட்ட நேரங்களிலும், எல்லா கஷ்டங்களுக்கு மத்தியிலும் அன்பு செலுத்தி பேணிப்போற்றும் வாக்குறுதியையும் நம்பிக்கையையும் உட்படுத்தியதாகத் திருமண உறுதிமொழி இருக்கிறது. இது, நாம் வாழும் இந்தக் காலத்தில், அதெல்லாம் பழைய பாணி என்று அநேகர் கருதுகிற—திருமண உறுதிமொழியில் வாய்விட்டு வாசிக்கப்படும், மரியாதை ஒருவருக்குக் கொடுக்கப்படும் என்ற உறுதித்தன்மையை உட்படுத்துகிறது. அந்த நம்பிக்கையைக் கெடுப்பது, ஒருவருடைய துணைக்கு எதிராக சதிசெய்வதைப் போன்ற ஒன்றைக் குறிக்கிறது. உறுதிமொழிகளைக் குறித்துக் கடவுளின் கருத்து, பைபிளில் மிகத்தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது: “நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய்.”—பிரசங்கி 5:4.
19 இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். ஒரு பாவி இரட்சிக்கப்படுவதைக் குறித்து பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருப்பதுபோல, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் அவனுடைய அல்லது அவளுடைய உத்தமத்தைக் காத்துக்கொள்ளத் தவறும்போது, சாத்தானுடைய காணக்கூடிய மற்றும் காணமுடியாத கும்பலுக்கு மிகுந்த சந்தோஷம் இருக்கும்.—லூக்கா 15:7; வெளிப்படுத்துதல் 12:12.
சோதனைகள் எல்லாருக்கும் வரக்கூடியதுதான்
20. சோதனையை நாம் எப்படி எதிர்க்கலாம்? (2 பேதுரு 2:9, 10)
20 சில சமயங்களில் ஒழுக்கக்கேடு தவிர்க்கப்படமுடியாத ஒன்றா? மாம்சமும், சாத்தானும் அவ்வளவு வல்லமைசெலுத்துவதினால், கிறிஸ்தவர்கள் அதை எதிர்த்துச்செயல்பட்டு, உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்ள முடியாதா? பவுல் பின்வரும் வார்த்தைகள்மூலம் உற்சாகமளிக்கிறார்: “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” இன்றைய உலகில், சோதனையை முழுவதுமாக நாம் தவிர்க்க முடியாது, ஆனால் ஜெபத்தின்மூலம் கடவுளிடம் திரும்புவதன்மூலம், நிச்சயமாகவே எந்தச் சோதனையையும் நாம் சகித்து, மேற்கொள்ளமுடியும்.—1 கொரிந்தியர் 10:13.
21. நமது அடுத்தப் படிப்பில் என்ன கேள்விகள் பதிலளிக்கப்படும்?
21 சோதனைகளைச் சகித்து வெற்றியடைவதற்கு, நமக்கு உதவிசெய்வதற்காகக் கடவுள் நமக்கு என்ன கொடுக்கிறார்? நமது திருமணங்களையும், நமது குடும்பங்களையும், யெகோவாவின் பெயரினுடைய மற்றும் சபையினுடைய நற்பெயரையும், காத்துக்கொள்வதற்கு நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டவிதமாக என்ன தேவையாக இருக்கிறது? நமது அடுத்தக் கட்டுரை இப்படிப்பட்டக் கேள்விகளுக்குக் கவனம்செலுத்தும்.
[அடிக்குறிப்புகள்]
a “‘வேசித்தனம்’ என்பது விரிவான அர்த்தத்திலும் மத்தேயு 5:32 மற்றும் 19:9-ல் பயன்படுத்தப்பட்டுள்ளபடியும் அது விவாகத்துக்குப் புறம்பாக அநேக முறைகேடான அல்லது கள்ளத்தனமான பாலுறவுகளைக் குறிப்பது தெளிவாக இருக்கிறது. போர்னியா [இந்த வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை] என்பது குறைந்த பட்சம் ஒரு மனித பிறப்புறுப்பை (உறுப்புகளை) படுமோசமாக முறைகேடாக பயன்படுத்துவதை உட்படுத்துகிறது (இயற்கையாகவோ அல்லது இயற்கைக்கு முரணான விதமாகவோ); மேலும் ஒழுக்கக்கேடான செயலை நடப்பிக்க மற்றொருவர் உடந்தையாக இருந்திருக்கவேண்டும். ஆணோ அல்லது பெண்ணோ அல்லது ஒரு மிருகமோ இதற்கு உடந்தையாக இருக்கவேண்டும்.” (காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1984, பக்கம் 27) விபசாரம்: “ஒரு திருமணமான நபரும் சட்டப்பூர்வ கணவனாகவோ மனைவியாகவோ இல்லாத மற்றொருவரும் விரும்பி ஈடுபடும் பாலுறவு.”—தி அமெரிக்கன் ஹெரிட்டேஜ் டிக்ஷ்னரி ஆஃப் தி இங்கிலிஷ் லேங்குவேஜ்.
b தெளிவாகவே, ஒரு சகோதரர், ஒரு சகோதரிக்குப் பிரயாணம்செய்ய உதவிசெய்வதற்கு சரியான சமயங்கள் இருக்கலாம், இப்படிப்பட்ட சமயங்கள், தவறாக புரிந்துகொள்ளப்படக் கூடாது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ ஒரு திருமண வாழ்க்கையைப் பலப்படுத்தத் தேவையான சில அம்சங்கள் யாவை?
◻ நல்லொழுக்கத்தைப்பற்றிய உலகத்தின் கருத்தை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?
◻ ஒழுக்கக்கேட்டிற்கு வழிநடத்தும் சில தூண்டுதல்களும் சூழ்நிலைமைகளும் யாவை?
◻ பாவத்தை எதிர்ப்பதற்கு முக்கியமான திறவுகோல் என்ன?
◻ சோதனையான காலங்களில் கடவுள் எவ்வாறு உதவிசெய்வார்?
19. ஒரு சாட்சி தவறும்போது, எதற்கு நேர்எதிராக சாத்தான் சந்தோஷப்படுகிறான்?
[பக்கம் 14-ன் பெட்டி]
நீடித்திருக்கும் திருமணங்களில் பொதுவான அம்சங்கள்
◻ பைபிளின் நியமங்களை உறுதியாகப் பின்பற்றுதல்
◻ இரு துணைகளும் யெகோவாவுடன் ஒரு பலமான உறவை வைத்திருத்தல்
◻ கணவன், தன்னுடைய மனைவியையும், அவளுடைய உணர்ச்சிகளையும், அவளுடைய கருத்துக்களையும் மதித்தல்
◻ அன்றாட அடிப்படையில் நல்ல பேச்சுத்தொடர்பு
◻ ஒருவரையொருவர் சந்தோஷப்படுத்த முயற்சிசெய்தல்
◻ நகைச்சுவை உணர்வு; தன்னைப்பற்றியும் சிரிக்க முயல்தல்
◻ தவறைத் தாராளமாக ஏற்றுக்கொள்ளுதல்; தாராளமாக மன்னித்தல்
◻ காதலுணர்ச்சிகளை உயிருள்ளதாக வைத்துக்கொள்ளுதல்
◻ குழந்தைகளை வளர்ப்பதிலும் சிட்சைகொடுப்பதிலும் ஐக்கியப்பட்டிருத்தல்
◻ யெகோவாவிடத்தில் ஒழுங்காக ஜெபத்தில் ஐக்கியப்பட்டிருத்தல்
திருமணத்தைச் சிதைத்தழிக்கும் எதிரிடையான அம்சங்கள்
◻ தன்னலம் மற்றும் பிடிவாதம்
◻ காரியங்களைச் சேர்ந்துசெய்யத் தவறுதல்
◻ குறைவான பேச்சுத்தொடர்பு
◻ வாழ்க்கைத் துணைகள் ஒருவரையொருவர் ஆலோசனைக்கேட்காமல் செயல்படுதல்
◻ மிகமோசமான வரவுசெலவு கவனிப்பு
◻ குழந்தைகளோடு மற்றும்/அல்லது ஒன்றுவிட்ட குழந்தைகளோடு பழகும் முறையில் வேறுபாடுகள்
◻ கணவர் பின்தங்கிய நேரங்களில் வேலைசெய்வது அல்லது இதர வேலைகளுக்காகக் குடும்பத்தைப் புறக்கணித்தல்
◻ குடும்பத்தின் ஆவிக்குரிய தேவைகளைக் கவனித்துக்கொள்ளத் தவறுதல்
[பக்கம் 15-ன் படம்]
திருமணத்தை மரியாதைக்குரியதாக வைத்திருப்பது நிரந்தரமான சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது