பைபிளின் துல்லியத்தன்மையை ஏன் சோதிக்கவேண்டும்?
பைபிளை நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்? சிலர், இது கடவுளின் வெளிப்பாடு என நிச்சயமாக நம்புகிறார்கள். மற்றவர்களோ, இது வெறும் ஒரு சாதாரணப் புத்தகம் என நம்புகிறார்கள். இன்னும் மற்றவர்களோ, நிர்ணயிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். பைபிளின் ஊற்றுமூலத்தைப்பற்றி ஏதேனும் சந்தேகம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் ஏன் பைபிளை ஆராய்ந்துபார்த்து, பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு இன்றியமையாத காரணங்கள் இருக்கின்றன.
கிறிஸ்தவமண்டல நாடுகளில், 18-ம் நூற்றாண்டு வரை, பைபிள் கடவுளுடைய வார்த்தை என்று பரவலாக மதிக்கப்பட்டது. ஆனால் 19-ம் நூற்றாண்டிலிருந்து, ஓர் அதிகரிக்கும் எண்ணிக்கையான கல்வியாளர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், ஏன் இறையியல் வல்லுநர்களும் சர்ச் தலைவர்களும், பைபிளின் துல்லியத்தன்மையைப் பற்றிய சந்தேகங்களை வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
இதன் காரணமாக, பைபிள் திறனாய்வு அவ்வளவு பரவியதால், பைபிளில் என்ன இருக்கிறதென்றே தெரியாமலே அநேகர் அதைப்பற்றிக் தீர்ப்புக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். பைபிளிற்கு பதிலாக, இப்போது கிறிஸ்தவ மண்டலத்திலுள்ள மக்கள் பலர், மனிதர்களின் தத்துவங்களை நம்புகிறார்கள். ஆனாலும், நவீன தத்துவம், பாதுகாப்பான அல்லது சந்தோஷமான உலகத்தை இன்னும் உருவாக்கவில்லை. அது, பைபிளை ஆராய்ந்துபார்த்து, அதன் போதனை சந்தோஷத்திற்கும் வெற்றிக்கும் வழிநடத்துகிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு ஒரு நல்ல காரணமாக இருக்கிறது.
பைபிளின் துல்லியத்தன்மையைச் சோதிப்பதற்கு மற்றொரு காரணம், மனிதகுலத்துக்கு இது கொடுக்கும் ஆச்சரியமான எதிர்கால நம்பிக்கையாகும். உதாரணமாக, சங்கீதம் 37:29 சொல்கிறது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (வெளிப்படுத்துதல் 21:3-5) இப்படிப்பட்ட வாக்குறுதிகள், உங்கள்மீது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கின்றன? நிச்சயமாகவே, இவை பைபிளை ஆராய்ந்துபார்த்து அது நம்பத்தக்கதா என்று சோதித்துப்பார்க்க போதுமான காரணங்களாக இருக்கின்றன.
இந்தப் பத்திரிகை, பைபிளின் உண்மைத்தன்மையை எப்போதும் ஆதரித்துப் பேசி, அதன் துல்லியத்தன்மைக்குச் சான்றுகளையும் அடிக்கடி எடுத்துக் காண்பிக்கிறது. அநேக அம்சங்களில் பைபிளின் துல்லியத்தன்மை சோதிக்கப்படலாம். பல காவற்கோபுரம் இதழ்கள் இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் கொடுக்க உங்களுக்கு உதவிசெய்யும்: பூர்வீக வரலாற்றின் அறியப்பட்ட உண்மைகள் பைபிளோடு ஒத்துப்போகின்றனவா? இதன் கணிப்புகள் சரியானவையா? இதன் ஆலோசனைகள் நடைமுறையில் பின்பற்றக்கூடியதா, அல்லது இன்றைய கல்வியாளர்களும் தத்துவ ஞானிகளும் பைபிளைக் காலத்திற்கொவ்வாததாக நிரூபித்திருக்கிறார்களா?
பைபிளின் துல்லியத்தன்மையை நீங்கள் சோதிக்க முடிகிற மற்றொரு துறை புவியியல் ஆகும். புறமத கட்டுக்கதைகள் பெரும்பாலும் புவியியல் உண்மைகளுக்கு முரண்படுகின்றன. உதாரணமாக, அநேக பழங்குடி மக்கள், இறந்தவர்களின் உலகம் என்றழைக்கப்படுகிற இடத்துக்குப் பயணம்செய்வதைப்பற்றி கதைகளைச் சொல்லியிருக்கின்றனர். பூர்வீக கிரேக்கரைப்பற்றி, கடவுட்களிடம் வழிகாட்டி (A Guide to the Gods) என்ற புத்தகம் விளக்குகிறது: “சமுத்திரம் என்றழைக்கப்படும் திரளான நீர்ப்பகுதியால் சூழப்பட்டிருக்கும் ஒரு தட்டையான நிலப்பகுதிதான் பூமி என்று கருதப்பட்டது. இதற்கு அப்பால், கறுப்பான பலனற்ற தாவரங்களை உடைய ஓர் இருண்ட பாழாய்ப்போன நிலப்பகுதி, இறந்தவர்கள் உலகம்.” இது கட்டுக்கதை என நிரூபிக்கப்பட்டபோது, புறமத தத்தவஞானிகள் அவர்களுடைய இறந்தவர்களின் உலகம் என்றழைக்கப்படுவதை இடமாற்றவேண்டியதிருந்தது. ரிச்சர்டு கார்ல்யான் என்ற ஆசிரியர், “வேறுபட்ட குகைகளினால் இணைக்கப்பட்ட ஒரு பொருத்தமான இடம் இந்தப் பூமிக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று விளக்குகிறார். இதுவும் ஒரு கட்டுக்கதையென்று இன்று நமக்குத் தெரியும். அப்படிப்பட்ட ஒரு பாதாள உலகமோ மார்க்கமோ இல்லை.
பழங்குடி மக்களின் கட்டுக்கதைகளைப்போல் இல்லாமல், பைபிள், பூமி தட்டையானது என்ற தவறான கருத்தைச் சொல்வதில்லை. பதிலாக, இது அறிவியல் பூர்வமான உண்மையையே, பூமி ஓர் உருண்டையானது, அந்தரத்திலே தொங்குகிறது என்று கூறுகிறது. (யோபு 26:7; ஏசாயா 40:22) பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள புவியியல் சார்ந்த மற்ற விளக்கங்களைப்பற்றி என்ன? அவை கற்பனையா, அல்லது சினாய் தீபகற்பத்தை உட்படுத்தும் இன்றைய எகிப்தையும், நவீனகால இஸ்ரேலையும் விஜயம்செய்யும்போது பைபிள் சம்பவங்களை மனதில் துல்லியமாகக் காட்சிப்படுத்த முடிகிறதா?
[பக்கம் 3-ன் படம்]
“அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்.” —ஏசாயா 40:22
“பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.” —யோபு 26:7