வேதனையில் இருக்கும் லத்தீன்-அமெரிக்க சர்ச்—ஏன் லட்சக்கணக்கானோர் விலகிச்செல்கிறார்கள்?
மெக்ஸிக்கோவின் வடக்கு எல்லைப்பகுதியிலிருந்து சிலியின் தெற்கு முனைவரை, ஒரு ரோம கத்தோலிக்க சர்ச்சையாவது தன்னுடைய பிரபலமான இடங்களில் கொண்டிருப்பதாக பெருமிதங்கொள்ளாத ஒரு லத்தீன்-அமெரிக்க நகரமோ கிராமமோ இருப்பது மிக அரிது. ஆனாலும், கத்தோலிக்க நடவடிக்கைகளைப் பரப்பிவரும் ஒரு நிறுவனத்தின் திட்ட மேலாளர், ஜோசஃப் E. டேவிஸ் என்பவர், “லத்தீன்-அமெரிக்காவில் பெரிய மாற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது,” என்று ஒப்புக்கொள்கிறார். லத்தீன்-அமெரிக்கா, ரோம கத்தோலிக்க சர்ச்சின் செல்வாக்கின்கீழ் மூன்றுக்கும் மேற்பட்ட நூற்றாண்டுகளாக இருந்தப் பகுதி, இப்போது ஒரு பெரிய மாற்றத்தைக் காணும் தருவாயில் இருக்கிறது என்று அவர் மேலுமாக ஒத்துக்கொண்டார்.
கத்தோலிக்க சர்ச்சின் ஆதிக்கம் விரைவாகக் குறைந்துவருகிறது என்பது இரகசியமான ஒன்றல்ல. சுறுசுறுப்பாய் ஈடுபடும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, லத்தீன்-அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் 15 சதவிகிதம் மட்டுமே என்று சமீபத்தில் கணக்கிடப்பட்டது. பிரிட்டானிக்கா புக் ஆஃப் தி இயர் 1991 அறிவித்தது: “ரோம கத்தோலிக்க பேராயர்களும் போப்பும்கூட, வரலாற்றுப் புகழ்பெற்ற கத்தோலிக்க லத்தீன்-அமெரிக்கா, பழைய விசுவாசத்திலிருந்து அபாயமான நிலையில் பின்வாங்குவதாகப் பய உணர்வை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.” ஏன் இது நடக்கிறது? ஏன் அத்தனை பேர் கத்தோலிக்க சபையைவிட்டு வெளியேறுகின்றனர்? சபையை விட்டு வெளியேறியவர்களுக்கு என்ன நேரிட்டது?
பதிலைத் தேடி
கத்தோலிக்க தலைவர்கள் புதுப்புது “பிரிவுகள்” உண்டாவதே அவர்களுடைய பிரச்னைகளென்று பழிசுமத்துகின்றனர். பொலிவியாவில் பணிசெய்யும் ஓர் ஐரோப்பிய மதகுரு முணுமுணுத்தார்: “சர்ச் ஒரு மரம் போல, அதனுடைய வலிமைமிக்க உயிர்ச்சாறு, களைகள் போன்ற சிறு பிரிவுகளால் உறிஞ்சப்படுகிறது.”
அர்ஜன்டினாவில், ஒவ்வொரு வருடமும் 140 புதிய மதங்கள் அறிவிக்கப்படுகின்றன, இது கத்தோலிக்க சர்ச் அங்கத்தினர்கள் எண்ணிக்கை 1970-களின் மத்திப காலங்களிலிருந்து, 90 சதவிகிதத்திலிருந்து 60 அல்லது 70 சதவிகிதத்திற்கு குறைவதைப் புரிந்துகொள்ள உதவக்கூடும். மெக்ஸிக்கோவின் டீவானாவில் வசிக்கும் 20 லட்சம்பேரில் 10 சதவிகிதத்தினர் 327 கத்தோலிக்கமற்ற மதங்களுக்கு மாறிப்போய்விட்டனர். டைம் பத்திரிகை அறிவித்தது: “வியப்பூட்டும்வகையில், ஞாயிற்றுக்கிழமைகளில் கத்தோலிக்கர்களைவிட அதிகமான பிரேஸிலியன் புராட்டஸ்டன்ட்டினர் சர்ச்சில் இருக்கிறார்கள்.” ஒரு செய்தித்தாள் சொன்னதுபோல, “லத்தீன்-அமெரிக்க திருச்சபைத்துணைவர்கள் வாடிகன் நகரத்தில், இன்றைய நிலையில் சர்ச்சின் மிக முக்கியமான இரண்டு தேவைகளைப்பற்றிப் பேசுவதற்கு போப்பைச் சந்தித்தப்போது,” அவற்றில் ஒன்று, “சிறு பிரிவுகளின் பிரச்னை” ஆக இருந்தது என்பது ஆச்சரியமல்ல.
மெக்ஸிகோவின் பேராயர்களோடு நடத்திய ஒரு கூட்டத்தில், போப் சொன்னார், புதிய மதங்களின் வெற்றிக்குக் “காரணம் சர்ச்சின் பிள்ளைகளினுடைய அரைகுறை ஆர்வமும் அசட்டை மனப்பான்மையும் ஆகும்.” லத்தீன்-அமெரிக்கர்களில் அநேகர் பைபிளை மதிக்கும்போது, அவர்களின் ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்திசெய்வதில் ஏன் “சர்ச்சின் பிள்ளைகள்” அசட்டை மனப்பான்மையோடு இருக்கின்றனர்? பொலிவியா, லா பாஸின் அல்ட்டீமா ஓரா-வில் ஒரு தலையங்கக் கட்டுரை இவ்வாறு விளக்குகிறது: “சர்ச் அவ்வளவு ஆழமாக உலகப்போக்கில் போவதானது, ஒவ்வொரு நாளும் அது அதிகமதிகமாகத் தன்னுடைய சொந்த செல்வாக்கு எல்லையை உதறித்தள்ளுவதுபோல் தோன்றுகிறது. இதைக் காண்பது நமக்கு ஆச்சரியமாக்க தேவையில்லை, உண்மையில் அது அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது, பாதிரிமார்கள் மதகுருக்களாயிருப்பதைவிட அவர்கள் அதிகமான சமூகவாதிகளாகவோ, பொருளியல் ஆய்வாளர்களாகவோ, பத்திரிகையாளர்களாகவோ அரசியல்வாதிகளாகவோ இருக்கிறார்கள்.”
பிரசங்கிகளைவிட அரசியல்வாதிகளே அதிகம்?
சந்தேகமில்லாமல், ’70-களிலும் ’80-களிலும் சர்ச்சின் அரசியல் தலையிடுதல், பல லத்தீன் அமெரிக்கர்களை இப்போது கத்தோலிக்க கொள்கையை அருவருக்கும்படிச் செய்வதற்கு காரணமாயிருந்திருக்கிறது. கேத்தலிக் ஃபாரின் மிஷன் சொஸையிட்டி ஆஃப் அமெரிக்கா, இதன் லத்தீன்-அமெரிக்க சமயப்பரப்புத்திட்டங்களுடன், மேரிநோலரைப்பற்றி 1985-ல் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆய்வு பின்வரும் கணிப்பைச் செய்தது: “மேரிநோலர், மார்க்சிஸ்ட்-லெனின்னிஸ்ட் வன்முறை புரட்சி சிந்தனையை வெற்றிகரமாகப் பொதுமக்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளும்படிப் புகுத்தியிருக்கிறார், ஏனென்றால் அது கத்தோலிக்க சர்ச்சின் கரமாகச் செயல்படும்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிந்தனை, வெறுமனே சர்ச்சுக்குப் போகிறவர்களுக்கு மட்டுமல்ல, மிகப்பிரபலமான அமெரிக்க திட்ட வடிவமைப்பாளர்களையும் இது எட்டியிருக்கிறது.”
மோசமான யுத்தம் என்று அழைக்கப்படுகிறதில், திகைப்பூட்டும்வகையில், 10,000-லிருந்து 30,000 அர்ஜன்டினியர்கள் ’70-களின் இறுதிக்கட்டத்தில் கடத்திச்செல்லப்பட்டு, விசாரிக்கப்படாமல் கொலைசெய்யப்பட்டனர். நேஷனல் கத்தோலிக் ரிப்போர்ட்டர்-ரில் தலையங்கம், “அர்ஜன்டினாவில் இரத்தம் சர்ச்சைக் கறைப்படுத்துகிறது” என்ற தலைப்பின்கீழ் சொன்னது: “நாசி ஜெர்மனியில் கத்தோலிக்க சர்ச் செய்ததை அர்ஜன்டினாவின் அனுபவம் மிக நெருக்கமாக ஒத்துப்போகிறது, இது மீண்டும், சர்ச்சுக்கு அதிக முக்கியமானது, அதிகாரமா அல்லது சுவிசேஷம் கட்டளையிடுகிறபிரகாரம் சத்தியத்திற்கு சாட்சிசொல்லுவதா என்ற கேள்வியை எழுப்புகிறது.”
உலகத்தின் அரசாங்கங்களில் அதிகாரத்தைப் பெறுவதற்கு சர்ச்சின் ஆசை, மிகத்தெளிவாக அதைக் கடவுளின் நண்பனல்ல என்று அடையாளங்காட்டுகிறது. பைபிள் சொல்கிறது: “உலகத்தோடு நட்பு கொள்வது, கடவுளைப் பகைப்பது என அறியீர்களா? உலகுக்கு நண்பனாக விரும்பும் எவனும், கடவுளுக்குப் பகைவனாகிறான்.” (யாக்கோபு 4:4, கத்தோலிக்க ஜெருசலம் பைபிள்) எனவேதான், அநேகர் கத்தோலிக்க சர்ச்சிடம் ஆவிக்குரிய வழிநடத்துதலை நாடுவதில்லை என்பது ஆச்சரியம் தருவதாயில்லை. ஆனால் கத்தோலிக்க சபையைவிட்டு வெளியே வந்த மக்களுக்கு என்ன நேரிட்டிருக்கிறது?
மேய்ப்பனில்லாத செம்மறியாடுகள்
கிட்டத்தட்ட, முதல் நூற்றாண்டு யூத மதத் தலைவர்கள் கவனியாமல் விட்டுவிட்ட மக்களைப்போலத்தான் இவர்களும் இருக்கிறார்கள். இயேசு, “அவர்கள் மேய்ப்பனில்லா ஆடுகள்போலத் தவித்துப்போயும், கைவிடப்பட்டும் இருந்தபடியால் அவர்கள்மேல் மனமிரங்கினார்,” என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 9:36, JB) அநேகர் கத்தோலிக்க சபையிலிருந்து விலகி, பைபிள் சார்ந்த (இவான்ஜெலிஸ்டிக்) மதங்கள் என்று அழைக்கப்படும் பிரிவுகளுக்கு மதம்மாறினர். இவை சபையை விட்டுப் பிரிந்துபோன ஆடுகளை ஏதும் சிறப்பாகக் கவனித்தனவா? இயேசு தம்முடைய உண்மையான பின்பற்றுபவர்களைப்பற்றி, “நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல,” என்று சொன்னதைப்போல் இருக்க அதிக வாஞ்சையுள்ளவர்களாகப் புராட்டஸ்டன்ட்டினர் இருக்கிறார்களா?—யோவான் 17:14.
அநேகக் கத்தோலிக்கமற்ற மதங்கள், மத பாரம்பரியங்களைக் காட்டிலும் பைபிளுக்கே கீழ்ப்படிகிறவர்கள் என்ற ஒரு மாய்மாலத் தோற்றத்தை வெளிக்காட்ட முயற்சிக்கின்றனர். பெரும்பாலும் இது ஒரு பகட்டுத்தான். புராட்டஸ்டன்ட் அமைப்புகளின் அடிப்படை போதகங்கள், கத்தோலிக்க சர்ச்சினுடையதைப் போல அவ்வளவு ஒத்துப்போவதால், அநேகப் பார்வையாளர்கள் ஆண்டியன் பழமொழியை உடனே பயன்படுத்தக்கூடும்: “எஸ் லா மீஸ்மா ஜொலீட்டா கான் அட்ரா போலியேரா” (அதே இந்தியப் பெண்தான் ஆனால் வித்தியாசமான ஆடையுடன்).
எடுத்துக்காட்டாக, ஏறக்குறைய எல்லா புராட்டஸ்டன்ட் பிரிவுகளும் கடவுள் ஒரு திரித்துவம் என்று கற்பிக்கின்றனர், ஆனாலும் இது பைபிள் போதிப்பது அல்ல. தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் ஒத்துக்கொள்கிறது: “இன்றைய பைபிள் ஆய்வாளர்களும் இறையியல் வல்லுநர்களும் எபிரெய பைபிள் திரித்துவக் கோட்பாட்டைக் கொண்டில்லையென ஒருமனதோடு ஒப்புக்கொள்கிறார்கள் . . . புதிய ஏற்பாட்டிலும் அவ்வாறு இருப்பதற்கான ஒரு தெளிவான திரித்துவக் கோட்பாடு இல்லை.”a
கத்தோலிக்கர்கள் போலவே, புராட்டஸ்டன்ட்டினர் இந்த உலகத்தோடும் அதன் அரசியலிலும் மிகத்தெளிவாகவே தொடர்புகொள்கின்றனர். என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் லத்தீன் அமெரிக்கா சொல்கிறது: “லத்தீன் அமெரிக்காவில் உள்ள புராட்டஸ்டன்ட் மதமும் தன்னை . . . பிரபலமான அரசியல் தேர்தல்களில் ஈடுபடுத்தியிருக்கிறது. சொந்த ஊர் பாதிரிகள் (பாஸ்டர்ஸ்) அரசியல்வாதிகளின் சிறப்பு வாடிக்கையாளர்களாகவும், அவர்கள் சர்ச்சுகளுக்குக் கொடுக்கும் அரசாங்கச் சலுகைகளுக்கு ஈடாக ஓட்டுக்களைப் போடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.” லத்தீன் அமெரிக்கன் ரிசர்ச் ரிவ்யூ சொல்கிறது: “புராட்டஸ்டன்ட் மதம், அது நாட்டிற்குள் முதன்முதலாக வந்ததிலிருந்து அரசியலோடு திருமணஞ்செய்திருக்கிறது,” இன்னும் கூடுதலாக இது, “அரசியல், சமூக போக்குகளை ஒரு மத வடிவில் திணிக்கும் ஒரு சாதனமாகவும்கூட இருக்கிறது.”
அரசியலில் புராட்டஸ்டன்ட்டினரின் பங்கு, அடிக்கடி யுத்தத்தில் புராட்டஸ்டன்ட்டினர் பங்கெடுக்கும்படிச் செய்திருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் மிகப் பிரபலமான புராட்டஸ்டன்ட் பாதிரிகளில் ஒருவராகக் கருதப்பட்ட அமரர் ஹாரி எமெர்சன் ஃபாஸ்டிக் பின்வருமாறு ஒப்புக்கொண்டார்: “நம்முடைய மேலைநாட்டு வரலாறு ஒன்றன்பின் மற்றொன்றான யுத்தத்தைக் கொண்டிருக்கிறது. யுத்தத்திற்காக மனிதர்களை நாம் ஊட்டிவளர்த்திருக்கிறோம், யுத்தத்திற்காக மனிதர்களைப் பயிற்றுவித்திருக்கிறோம்; யுத்தத்தை மகிமைப்படுத்தியிருக்கிறோம்; நம் போர்வீரர்களையெல்லாம் புகழுக்குரியவர்களாக நாம் மாற்றியிருக்கிறோம், நம்முடைய சர்ச்சுகளிலும்கூட நாம் போர்க் கொடிகளை வைத்தோம் . . . நம்முடைய வாயின் ஒரு முனையில் நாம் சமாதானப் பிரபுவைத் துதித்து மற்றொரு முனையில் நாம் போரைப் புகழ்ந்து போற்றியிருக்கிறோம்.”
நீங்கள் என்ன செய்யவேண்டும்?
பொய் மதத்தை, பூமியின் அரசாங்கங்களோடு விபசாரம்செய்யும் ஓர் அடையாள வேசியாக விளக்கிவிட்டு, பைபிளின் வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது: “என் மக்களே, நீங்கள் அவளுடைய பாவங்களில் பங்கு கொள்ளாதிருக்கவும், அவளுக்கு நேரும் வாதைகளில் அகப்படாதிருக்கவும், அவளைவிட்டு வெளியேறுங்கள்.”—வெளிப்படுத்துதல் 18:4, JB.
சர்ச்சில் அதிக ஊழல் நடக்கிறது என்று பலருக்குத் தெரிந்திருந்தும் ரோமன் சர்ச் அப்படிப்பட்ட பூர்வ வரலாற்றைக் கொண்டிருப்பதால், அவர்கள் சர்ச்சைவிட்டு வெளியேற தயங்குகின்றனர். ஆனாலும் யூத வணக்கமுறை அதிக பூர்வீக காலத்தைச் சேர்ந்தது; அவ்வாறு இருந்தும், அவர்கள் கடவுளுடைய மெய்யான போதனைகளை விலகி நடந்தபோது, கடவுள் அதைத் தம்முடைய தெரிந்தெடுக்கப்பட்ட மக்களாக இல்லாதபடி நிராகரித்தார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். கடவுளுடைய உண்மையான ஊழியர்கள், கடவுள் யூத மார்க்கத்திற்குப் பதிலாக இப்போது கிறிஸ்தவ சபையைப் பயன்படுத்துகிறார் என்று உணர்ந்தவுடன் யூத மதத்தை கைவிட்டனர். இன்று நீங்கள், உண்மையான கிறிஸ்தவச் சபையை அடையாளம் கண்டுகொள்வதெப்படி?
கடந்த இருபது ஆண்டுகளில், கிட்டத்தட்ட பத்து லட்சம் லத்தீன் அமெரிக்கர்கள் யெகோவாவின் சாட்சிகளாக ஆகியிருக்கிறார்கள். அவர்கள் இந்த மாற்றத்தை ஏன் செய்தார்கள்? மெக்ஸிகோ, வேராக்ரூஸின் மார்ட்டிநெஸ் டி லா டோரி என்ற இடத்தில் ஒரு செய்தித்தாள் இந்தக் கேள்வியை ஆராய்ந்துபார்த்தது. அது இவ்வாறு சொன்னது: “இந்தப் பைபிள் மாணாக்கர்கள் ஏறக்குறைய 100 சதவிகிதம், வேறுபட்ட மதங்களை முன்னாள் ஆதரித்தவர்கள், பெரும்பாலும் கத்தோலிக்கர்கள். இவர்கள், மதம் அரசியலிலும் பைபிள் சார்ந்திராத பழக்கங்களாகிய கலப்பு விசுவாசம், ஒழுக்கக்கேடு, வன்முறை போன்றவற்றை ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பதிலும் கவர்ந்திழுக்கப்படுவதை உணர்ந்திருக்கின்றனர். நம்பத்தகாத ஆரம்பத்தைக் கொண்ட விக்கிரக ஆராதனைக்கோ பாரம்பரியங்களுக்கோ மறுபடியும் அடிமையாகாமல், நடத்தையைப்பற்றிய வேதவசனங்களின் நியமங்களைப் பொருத்தி பிரயோகிப்பது அவர்களுக்குத் திருப்தியின் ஊற்றுமூலமாக இருந்திருக்கிறது. அவர்கள் எங்குக் காணப்பட்டாலும் அவர்களை வித்தியாசப்படுத்திக் காட்டும்வண்ணமாக இது அவர்களுக்கு ஒரு போற்றத்தக்க விசுவாச ஒற்றுமையுணர்வைத் தந்திருக்கிறது.”
மற்றொரு லத்தீன்-அமெரிக்க செய்தித்தாள் இதை இவ்வாறு சொன்னது: “யெகோவாவின் சாட்சிகள் கடினமாக உழைப்பவர்கள், நேர்மையானவர்கள், கடவுள் பயமுள்ள மக்கள். அவர்கள் நடுத்தர மக்கள், மரபை நேசிப்பவர்கள். அவர்களுடைய மதம், பைபிளின் போதனையை அடிப்படையாகக் கொண்டது.” நீங்கள் எங்கு வாழ்ந்தாலும்சரி, நீங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கும்படி உங்களை வரவேற்கிறோம். அவர்களுடைய நம்பிக்கை, அவர்களுடைய வாழ்க்கைமுறை முழுவதுங்கூட, பைபிளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ஆம், நீங்கள் கடவுளை எப்படி “ஆவியோடும் உண்மையோடும்” வணங்குவது என்பதைக் கற்றுக்கொள்வீர்கள்.—யோவான் 4:23, 24.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற சிற்றேடைப் பாருங்கள்.
[பக்கம் 21-ன் அட்டவணை]
சில லத்தீன்-அமெரிக்க தேசங்களில் யெகோவாவின் சாட்சிகள்
1971 1992
நாடு பிரஸ்தாபிகள் பிரஸ்தாபிகள்
அர்ஜன்டினா 20,750 96,780
பொலிவியா 1,276 8,868
பிரேஸில் 72,269 3,35,039
சிலி 8,231 44,067
கொலம்பியா 8,275 55,215
கோஸ்டா ரிகா 3,271 14,018
டோமினிகா கூட்டரசு 4,106 15,418
ஈக்வடார் 3,323 22,763
எல் சால்வடார் 2,181 20,374
குஆடலூப் 1,705 6,830
குவாதமாலா 2,604 13,479
ஹாண்டுராஸ் 1,432 6,583
மெக்ஸிகோ 54,384 3,54,023
பனாமா 2,013 7,732
பராகுவே 901 4,115
பெரு 5,384 43,429
பியூர்டோ ரிகோ 8,511 25,315
உருகுவே 3,370 8,683
வெனிசுவேலா 8,170 60,444
மொத்தம் 2,12,156 11,43,175