உலகத்தைக் குறித்ததில் ஞானமாக நடத்தல்
“புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக [தொடர்ந்து, NW] ஞானமாய் நடந்து . . . கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 4:5.
1. பூர்வ கிறிஸ்தவர்கள் எவற்றை எதிர்ப்பட்டனர், கொலோசே சபைக்கு பவுல் என்ன அறிவுரை கொடுத்தார்?
ரோம உலகின் நகரங்களில் வாழ்ந்த பூர்வ கிறிஸ்தவர்கள் விக்கிரகாராதனை, ஒழுக்கங்கெட்ட இன்பந்தேடுதல், மற்றும் புறமத சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் தொடர்ந்து எதிர்ப்பட வேண்டியவர்களாய் இருந்தனர். சந்தேகமின்றி, மேல்மத்திய சிறிய ஆசியாவின் ஒரு நகரமாகிய கொலோசேயில் வாழ்ந்தவர்கள், அந்தப் பிரிகிய குடிமக்களின் தெய்வத்தாய் வணக்கம் மற்றும் ஆவியுலகப் பழக்கங்களையும், கிரேக்க குடியிருப்பாளர்களின் புறமதத் தத்துவங்களையும், யூத குடியுருப்புகளின் யூதமதத்தையும் எதிர்ப்பட்டனர். அப்படிப்பட்ட ‘புறம்பேயிருப்பவர்களிடம்’ ‘தொடர்ந்து ஞானமாய் நடந்துகொள்ளும்படி’ அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவ சபைக்கு அறிவுரை கூறினார்.—கொலோசெயர் 4:5.
2. புறம்பேயிருப்பவர்களிடம் ஏன் இன்று யெகோவாவின் சாட்சிகள் ஞானமாக நடந்துகொள்ள வேண்டியதாய் இருக்கிறது?
2 இன்று, யெகோவாவின் சாட்சிகள் அதேவிதமான, இன்னும் அதைவிட அதிகமான தவறான பழக்கங்களை எதிர்ப்படுகின்றனர். ஆகவே, அவர்களும் உண்மையான கிறிஸ்தவ சபைக்கு வெளியே இருப்பவர்களிடமான தங்களுடைய தொடர்பில் ஞானமாக இருக்கவேண்டியது அவசியம். மத மற்றும் அரசியல் நிறுவனங்களிலும் மக்கள் தொடர்புவழித்துறைகளிலும் உள்ள அநேக மக்கள் அவர்களுக்கு விரோதமாகவே இருக்கின்றனர். இந்த எதிராளிகளில் சிலர், நேரடியான தாக்குதல் மூலமாக அல்லது, பெரும்பாலும் மறைமுகமான பேச்சுகள்மூலம் யெகோவாவின் சாட்சிகளுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும், அவர்களுக்கு விரோதமாக தப்பெண்ணங்களை எழுப்பவும் முயற்சி செய்கின்றனர். ஒரு வெறித்தனமான, ஆபத்தானதுமான “மதபேதம்” என்று பூர்வ கிறிஸ்தவர்கள் அநியாயமாகக் கருதப்பட்டதுபோலவே இன்று யெகோவாவின் சாட்சிகள் அடிக்கடி, தப்பெண்ணங்கள் மற்றும் தவறான அபிப்பிராயங்களின் இலக்காக இருக்கின்றனர்.—அப்போஸ்தலர் 24:14; 1 பேதுரு 4:4.
தப்பெண்ணங்களை மேற்கொள்ளுதல்
3, 4. (அ) உண்மை கிறிஸ்தவர்கள் ஏன் உலகத்தால் நேசிக்கப்பட மாட்டார்கள், ஆனால் நாம் என்ன செய்ய முயல வேண்டும்? (ஆ) ஒரு நாசி சித்திரவதை முகாமில் சிறைப்படுத்தப்பட்ட நூலாசிரியை ஒருவர் யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி என்ன எழுதினார்?
3 அப்போஸ்தலன் யோவானின்படி, “பொல்லாங்கனுக்குள் கிடக்கிற” உலகத்தால் நேசிக்கப்பட வேண்டுமென உண்மை கிறிஸ்தவர்கள் எதிர்பார்ப்பதில்லை. (1 யோவான் 5:19) இருப்பினும், யெகோவாவிடமும் அவருடைய தூய வணக்கத்திடமும் தனிநபர்களை ஆதாயப்படுத்துவதற்கு கிறிஸ்தவர்கள் முயலும்படி பைபிள் உற்சாகப்படுத்துகிறது. இதை நம்முடைய நேரடியான சாட்சிபகருதல் மற்றும் நல்நடத்தையின் மூலமாகவும் நாம் செய்கிறோம். அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்: “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.”—1 பேதுரு 2:12.
4 மன்னியுங்கள்—ஆனால் மறக்காதீர்கள் (Forgive—But Do Not Forget) என்ற தன்னுடைய புத்தகத்தில், நூலாசிரியை சில்வியா சால்வெஸன், நாசி சித்திரவதை முகாமில் தன்னுடன் தங்கியிருந்த பெண் சாட்சிகளைப்பற்றி கூறினாள்: “அந்த இருவர், காற்றே மற்றும் மார்க்ரேற்றேயும் இன்னும் பலரும், தங்கள் விசுவாசத்தால் மட்டுமல்லாமல் நடைமுறையான காரியங்களில் எனக்கு மிகவும் உதவி செய்தனர். எங்களுடைய புண்களை ஆற்றுவதற்காக முதல் சுத்தமான கந்தைத் துணிகளை பெற்றுத் தந்தனர் . . . சுருங்கச்சொன்னால், எங்களுடைய நலன் கருதிய, மேலும் தங்களுடைய சிநேகப்பான்மையான உணர்ச்சிகளை செயல்களில் காட்டிய மக்கள் மத்தியில் நாங்கள் இருந்தோம்.” ‘புறம்பேயிருக்கிறவர்களிடமிருந்து’ என்னே ஒரு நல்ல சான்றளிப்பு!
5, 6. (அ) தற்காலத்தில் கிறிஸ்து என்ன வேலையை நிறைவேற்றுகிறார், நாம் எதை மறந்துவிடக்கூடாது? (ஆ) உலக மக்களிடமாக நம்முடைய மனநிலை எப்படி இருக்கவேண்டும், ஏன்?
5 வெளியே இருப்பவர்களிடம் நம்மை ஞானமான முறையில் நடத்திக்கொள்வதன்மூலம் தப்பெண்ணங்களை அகற்ற நாம் அதிகத்தைச் செய்யலாம். “மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல” தேசத்து மக்களை நம்முடைய ஆட்சிபுரியும் அரசர் இயேசு கிறிஸ்து பிரித்துக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது உண்மைதான். (மத்தேயு 25:32) ஆனால், கிறிஸ்துதான் நியாயாதிபதி என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்; “செம்மறியாடுகள்” யார் என்றும் “வெள்ளாடுகள்” யார் என்றும் அவரே தீர்மானிக்கிறவர்.—யோவான் 5:22.
6 யெகோவாவின் அமைப்பின் பாகமாக இல்லாதவர்களிடமான நம்முடைய மனநிலையில் இது செல்வாக்குச் செலுத்தவேண்டும். அவர்கள் உலகப்பிரகாரமான மக்கள் என்று நாம் நினைக்கக்கூடும்; ஆனால், “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் . . . அன்புகூர்ந்த” மனிதவர்க்க உலகத்தின் பாகமாகவே அவர்கள் இருக்கின்றனர். (யோவான் 3:16) மக்களை வெள்ளாடுகள் என்று மேட்டிமையாகத் தீர்மானிப்பதைவிட, அவர்களை வருங்கால செம்மறியாடுகளாகக் கருதுவது எவ்வளவோ மேலானது. ஒரு காலத்தில் சத்தியத்தைக் கடுமையாக எதிர்த்த சிலர் இப்போது ஒப்புக்கொடுக்கப்பட்ட சாட்சிகளாக இருக்கின்றனர். இவர்களில் அநேகர் எந்த நேரடியான சாட்சிபகருதலுக்கும் பிரதிபலிக்கும் முன்னர், முதலில் தயவான செயல்களால் ஆதாயப்படுத்தப்பட்டவர்கள் ஆவர். உதாரணத்திற்கு, பக்கம் 18-லுள்ள படத்தைப் பாருங்கள்.
வைராக்கியமாக, ஆனால் பலவந்தப்படுத்துவதாக இல்லை
7. போப் என்ன குறைகூறுதலை வெளிப்படுத்தினார், ஆனால் நாம் என்ன கேள்வி கேட்கலாம்?
7 “வீட்டுக்கு வீடு செல்வதால், அல்லது தெரு முனைகளில் வழிபோக்கர்களை நிறுத்துவதால், சிலர் தங்களுக்குப் புதிய ஆதரவாளர்களைத் தேடும் கட்டாயப்படுத்தும் வைராக்கியம், மதபேதத்திற்குரிய அப்போஸ்தல மற்றும் மிஷனரி ஆர்வத்தின் ஒரு போலித்தனம்,” என்று குறிப்பிட்டதில், போப் ஜான் பால் II, பொதுவில் மதப்பிரிவுகளையும், குறிப்பாக யெகோவாவின் சாட்சிகளையும் குறைகூறினார். நம்முடையது “அப்போஸ்தல மற்றும் மிஷனரி ஆர்வத்தின் ஒரு போலித்தனம்” என்றால் உண்மையான பிரசங்கிக்கும் வைராக்கியத்தை எங்கே காணலாம்? நிச்சயமாக கத்தோலிக்கர் மத்தியில் அல்ல, சொல்லப்போனால் புராட்டஸ்டன்டினர் அல்லது ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளின் அங்கத்தினர் மத்தியிலும் அல்ல.
8. வீட்டுக்கு வீடு ஊழியத்தை நாம் எப்படிச் செய்யவேண்டும், நம்பிக்கையுடன் என்ன விளைவோடு?
8 இருந்தாலும், நம்முடைய சாட்சி கொடுத்தலில் கட்டாயப்படுத்தலின் எந்தக் குற்றச்சாட்டையும் பொய்யாக நிரூபிக்கும் விதத்தில், நாம் மக்களை அணுகும்போது எப்போதும் தயவாக, மரியாதையுடன், பண்பட்டவர்களாக நடந்துகொள்ளவேண்டும். சீஷனாகிய யாக்கோபு எழுதினார்: “உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.” (யாக்கோபு 3:13) அப்போஸ்தலன் பவுல் “சண்டைபண்ணாமலும்” இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். (தீத்து 3:2) உதாரணமாக, நாம் சாட்சி கொடுத்துக்கொண்டிருக்கும் நபரின் நம்பிக்கைகளை நேரடியாக கண்டனம் செய்வதற்கு மாறாக, அவர் அல்லது அவளுடைய கருத்துக்களுக்கு ஏன் உண்மையான அக்கறையைக் காண்பிக்கக்கூடாது? பின்னர், பைபிளிலுள்ள நற்செய்தியை அந்த நபருக்குச் சொல்லுங்கள். ஒரு நம்பிக்கையான அணுகுமுறையைக் கொண்டிருந்து, மற்ற நம்பிக்கைகளை உடைய மக்களுக்குத் தகுந்த மரியாதையைக் காண்பிப்பதன்மூலம், செவிசாய்ப்பதற்கு, வேண்டிய ஒரு நல்ல மனநிலையை அவர்கள் கொண்டிருக்க நாம் உதவி செய்வோம்; ஒருவேளை பைபிள் செய்தியின் மதிப்பை அவர்கள் பகுத்துணருவார்கள். சிலர் “தேவனை மகிமைப்படுத்தும்படி” வருவது அதன் விளைவாக இருக்கக்கூடும்.—1 பேதுரு 2:12.
9. பவுல் (அ) கொலோசெயர் 4:5-ல், (ஆ) கொலோசெயர் 4:6-ல் கொடுத்த என்ன அறிவுரையை நாம் பொருத்திப் பிரயோகிக்கலாம்?
9 அப்போஸ்தலன் பவுல் ஆலோசனை கூறினார்: “புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக [தொடர்ந்து, NW] ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.” (கொலோசெயர் 4:5) இந்தப் பிற்பகுதியிலுள்ள கூற்றை விவரிப்பதாய், J. B. லைட்ஃபுட் எழுதினார்: “கடவுளுடைய நோக்கத்தை மேம்படுத்தக்கூடியதைச் சொல்வதற்கும் மற்றும் செய்வதற்கும் இருக்கும் எந்த வாய்ப்பையும் உங்களைவிட்டு நழுவவிடாதீர்கள்.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.) ஆம், தகுந்த நேரத்தில் வார்த்தைகள் மற்றும் செயல்களுடன் நாம் தயாராக இருக்கவேண்டும். சந்திப்புகளைச் செய்வதற்கு, ஒரு நாளின் பொருத்தமான நேரத்தைத் தேர்ந்தெடுப்பதையும் அத்தகைய ஞானம் உட்படுத்துகிறது. நம்முடைய செய்தி மறுக்கப்பட்டது என்றால், அது மக்கள் அதை போற்றாததன் காரணமாகவா அல்லது ஓரளவிற்குத் தகுதியற்ற நேரத்தில் நாம் சந்திப்பைச் செய்ததன் காரணமாகவா? “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக,” என்றும் பவுல் எழுதினார். (கொலோசெயர் 4:6) இது முன்யோசனையையும் அயலாருக்கான உண்மையான அன்பையும் கேட்கிறது. நாம் எப்போதும் ராஜ்ய செய்தியைக் கிருபை பொருந்தியதாக அளிப்போமாக.
மரியாதையாகவும் “சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாகவும்”
10. (அ) கிரேத்தாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் என்ன அறிவுரையைக் கொடுத்தார்? (ஆ) பவுலின் அறிவுரையைப் பின்பற்றுவதில் எவ்வாறு யெகோவாவின் சாட்சிகள் மாதிரிகளாக இருக்கின்றனர்?
10 நாம் பைபிள் நியமங்களில் விட்டுக்கொடுக்க முடியாது. மறுபட்சத்தில், கிறிஸ்தவ உத்தமத்தை உட்படுத்தாத கேள்விகளைக்குறித்து தேவையற்ற வாக்குவாதங்களைச் செய்யக்கூடாது. அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு [கிரேத்தாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு] நினைப்பூட்டு.” (தீத்து 3:1, 2) பைபிள் அறிஞர் E. F. ஸ்காட் இந்தப் பகுதியைப்பற்றி பின்வருமாறு எழுதினார்: “கிறிஸ்தவர்கள் அதிகாரங்களுக்குக் கீழ்ப்படியவேண்டியது மட்டுமல்லாமல், அவர்கள் சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். இது . . . எதை அர்த்தப்படுத்துகிறது என்றால், சந்தர்ப்ப சூழ்நிலைகள் தேவைப்படுத்தும்போது, பொது நலனுக்கான உணர்வைக் காண்பிப்பதில் கிறிஸ்தவர்கள் முதன்மையானவர்களில் இருக்கவேண்டும். அடிக்கடி, திடீர் தீ விபத்துக்கள், கொள்ளைநோய்கள், வெவ்வேறு வகையான துன்பங்கள் ஏற்படும்; அப்போது எல்லா நல்ல குடிமக்களும் தங்கள் அயலாருக்கு உதவ விரும்புவர்.” உலகெங்கும், பேரழிவுகள் தாக்கும் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன; இடருதவிகளைச் செய்பவர்களில் யெகோவாவின் சாட்சிகள் முதன்மையானவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய சகோதரர்களுக்கு மட்டுமல்ல வெளி ஆட்களுக்கும் உதவி செய்திருக்கின்றனர்.
11, 12. (அ) கிறிஸ்தவர்கள் அதிகாரிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? (ஆ) ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதன் தொடர்பாக அதிகாரிகளுக்குக் கீழ்ப்பட்டிருத்தல் எதை உட்படுத்துகிறது?
11 பவுல் தீத்துவுக்கு எழுதிய கடிதத்திலுள்ள இந்தப் பகுதிதானே, அதிகாரிகளிடம் கொண்டிருக்கவேண்டிய மரியாதையான மனநிலையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காண்பிக்கிறது. தங்களுடைய நடுநிலைமை வகிக்கும் நிலைநிற்கையின் காரணமாக நீதிபதிகளின் முன் நிற்கவேண்டிய இளம் கிறிஸ்தவர்கள், புறம்பேயிருப்பவர்களிடம் ஞானமாக நடந்துகொள்வதைக் குறிப்பாகக் கவனத்தில் கொள்ளவேண்டும். தங்களுடைய தோற்றம், நடந்துகொள்ளும்விதம், மற்றும் அத்தகைய அதிகாரிகளிடம் பேசும் முறை ஆகியவற்றால் யெகோவாவின் மக்களுக்கு நற்பெயரை உண்டுபண்ணவோ களங்கப்படுத்தவோ அவர்கள் அதிகத்தைச் செய்ய முடியும். அவர்கள் “எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணி,” ஆழ்ந்த மரியாதையுடன் தங்கள் எதிர்வாதத்தை அளிக்கவேண்டும்.—ரோமர் 13:1-7; 1 பேதுரு 2:17; 3:15.
12 “அதிகாரங்கள்” உள்ளூர் அரசாங்க அதிகாரிகளையும் உட்படுத்துகிறது. இப்போது, அதிகமதிகமான ராஜ்ய மன்றங்கள் கட்டப்படுவதால், உள்ளூர் அதிகாரிகளிடமான தொடர்புகள் தவிர்க்கமுடியாதவை. அடிக்கடி, மூப்பர்கள் தப்பெண்ணங்களை எதிர்ப்படுகின்றனர். ஆனால், சபை பிரதிநிதிகள் அதிகாரிகளுடன் ஒரு நல்ல உறவை ஏற்படுத்தி, நகரமைப்பு ஆணையத்துடன் ஒத்துழைக்கையில், இந்தத் தப்பெண்ணங்கள் தகர்க்கப்பட முடியும். யெகோவாவின் சாட்சிகளைப்பற்றியும் அவர்களுடைய செய்தியைப்பற்றியும் முன்பு கொஞ்சத்தை அல்லது ஒன்றுமே அறியாதிருந்த மக்களுக்கு அடிக்கடி ஒரு நல்ல சாட்சி கொடுக்கப்படுகிறது.
‘கூடுமானால், எல்லாருடனும் சமாதானமாய் இருங்கள்’
13, 14. ரோமிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் என்ன அறிவுரை கொடுத்தார், புறம்பேயிருப்பவர்களிடமான நம்முடைய தொடர்பில் நாம் அதை எப்படிப் பொருத்திப் பிரயோகிக்கலாம்?
13 புறமத ரோமில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு பவுல் பின்வரும் அறிவுரையைக் கொடுத்தார்: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.”—ரோமர் 12:17-21.
14 புறம்பேயிருப்பவர்களிடம் கொள்ளும் நம்முடைய தொடர்பில், உண்மை கிறிஸ்தவர்களாக நாம் தவிர்க்கமுடியாதவிதத்தில் எதிராளிகளை எதிர்ப்படுகிறோம். மேற்கண்ட பகுதியில், எதிர்ப்புகளைத் தயவான செயல்களைக் கொண்டு மேற்கொள்ள முயலுவதே ஞானமான வழி என்பதாக பவுல் காண்பிக்கிறார். அக்கினித்தழலைப்போல, இந்தத் தயவான செயல்கள் பகையைத் தணித்து, யெகோவாவின் மக்களிடமாக ஒரு தயவான மனநிலையை கொண்டிருக்க ஆதாயப்படுத்தி, ஒருவேளை நற்செய்தியிடம் அக்கறையைக்கூட எழுப்பலாம். இது சம்பவிக்கும்போது, தீமை நன்மையால் வெல்லப்படுகிறது.
15. புறம்பேயிருப்பவர்களிடம் ஞானமாக நடப்பதில், கிறிஸ்தவர்கள் குறிப்பாக எப்போது கவனமாக இருக்கவேண்டும்?
15 குறிப்பாக, திருமணத்துணைகளில் ஒருவர் இதுவரை சத்தியத்தை ஏற்காதவராய் இருக்கும் வீடுகளில், புறம்பேயிருப்பவர்களிடம் ஞானமாக நடந்துகொள்வது முக்கியமாக இருக்கிறது. பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பது நல்ல கணவன்கள், நல்ல மனைவிகள், நல்ல தகப்பன்கள், நல்ல தாய்கள், மற்றும் அதிக கீழ்ப்படிதலுள்ள, பள்ளியில் கடினமாகப் படிக்கும் பிள்ளைகள் ஆகியோரை உண்டுபண்ணுகிறது. ஒரு விசுவாசியின்மீது பைபிள் நியமங்கள் கொண்டிருக்கும் ஆரோக்கியமான பாதிப்பை அவிசுவாசியால் நன்கு பார்க்கமுடிய வேண்டும். இப்படியாக, சிலர், ஒப்புக்கொடுக்கப்பட்ட குடும்ப அங்கத்தினரின் நடக்கையை அவர்கள் பார்த்து “போதனையின்றி . . . ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.”—1 பேதுரு 3:1, 2.
‘எல்லாருக்கும் நன்மையானவற்றைச் செய்தல்’
16, 17. (அ) கடவுள் என்ன பலிகளின்மேல் பிரியமாய் இருக்கிறார்? (ஆ) நாம் எப்படி நம் சகோதரரிடமும் புறம்பேயிருப்பவர்களிடமும் “நன்மை செய்ய” வேண்டும்?
16 நாம் நம்முடைய அயலாருக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அவருக்கு ஜீவனைப்பற்றிய செய்தியைக் கொண்டுச்சென்று, இயேசு கிறிஸ்துவின் மூலமாக யெகோவாவிடம் ஒப்புரவாகுதலைப்பற்றி போதிப்பதாகும். (ரோமர் 5:8-11) ஆகவே அப்போஸ்தலன் பவுல் நமக்குச் சொல்லுகிறார்: “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் [கிறிஸ்து] எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.” (எபிரெயர் 13:15) பவுல் தொடர்ந்து சொல்லுகிறார்: “அன்றியும், நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (எபிரெயர் 13:16) நம்முடைய பொதுப்படையான சாட்சி கொடுத்தலுடன்கூட, நாம் “நன்மை செய்ய” மறந்துவிடக்கூடாது. கடவுளை நன்கு பிரியப்படுத்தும் பலிகளில், அது முக்கிய பங்கை வகிக்கிறது.
17 இயல்பாகவே, உணர்ச்சிப்பூர்வமாக, ஆவிக்குரிய, சரீரத்திற்குரிய, அல்லது பொருள்சம்பந்தமான தேவையிலிருக்கும் நம்முடைய ஆவிக்குரிய சகோதரர்களுக்கு நாம் நன்மை செய்கிறோம். பவுல் பின்வருமாறு எழுதியபோது இதைக் குறிப்பிட்டார்: “நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும் விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:10; யாக்கோபு 2:15, 16) இருந்தாலும், நாம் இந்த வார்த்தைகளை மறந்துவிடக்கூடாது, “யாவருக்கும் . . . நன்மைசெய்யக்கடவோம்.” ஓர் உறவினருக்கு, ஓர் அயலகத்தாருக்கு, அல்லது உடன் பணிபுரியும் ஒருவருக்குச் செய்யும் ஒரு தயவான செயல், நம்மீதுள்ள தப்பெண்ணங்களைத் தகர்ப்பதற்கு எவ்வளவோ செய்யக்கூடும்; அந்த ஆளின் இருதயத்தைச் சத்தியத்திடமாகத் திறக்கவுங்கூடும்.
18. (அ) நாம் என்ன ஆபத்துக்களைத் தவிர்க்க வேண்டும்? (ஆ) நம்முடைய பொதுப்படையான சாட்சிபகரும் வேலையின் ஆதரவாக நம்முடைய கிறிஸ்தவ நற்குணத்தை எப்படி பயன்படுத்த முடியும்?
18 இதைச் செய்வதற்கு, புறம்பேயிருப்பவர்களிடமிருந்து நெருங்கிய நண்பர்களைக் கொண்டிருக்கத் தேவையில்லை. அத்தகைய கூட்டுறவுகள் ஆபத்தான விளைவுடையவையாக இருக்கும். (1 கொரிந்தியர் 15:33) உலகத்துடன் சிநேகிதராக இருப்பதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. (யாக்கோபு 4:4) ஆனால் நம்முடைய கிறிஸ்தவ நற்குணம் நம்முடைய பிரசங்கத்தை ஆதரிக்கலாம். சில தேசங்களில், மக்களிடம் அவர்களுடைய வீடுகளில் பேசுவது அதிக கடினமாகிக்கொண்டே வருகிறது. சில அடுக்கக கட்டடங்கள், நாம் அங்கு குடியிருப்பவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தடுக்கும்வண்ணம் பல சாதனங்களால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளில் தொலைபேசி, பிரசங்கத்திற்கு ஒரு வழியாக அமைகிறது. பெரும்பான்மையான நாடுகளில் தெருவில் சாட்சிபகர முடிகிறது. இருப்பினும், மனதிற்கு உகந்தவர்களாக, பண்பட்டவர்களாக, தயவாக, உதவுகிறவர்களாக இருப்பது தப்பெண்ணங்களைத் தகர்த்து, ஒரு நல்ல சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்புகளைத் திறந்து வைக்கிறது.
எதிர்ப்பவர்களை அமைதியடையச் செய்தல்
19. (அ) நாம் மனிதரைப் பிரியப்படுத்த முயலாமல் இருப்பதால் எதை எதிர்பார்க்கலாம்? (ஆ) தானியேலின் உதாரணத்தைப் பின்பற்றவும் பேதுருவின் அறிவுரையைப் பொருத்திப் பிரயோகிக்கவும் நாம் எப்படி முயற்சி செய்யலாம்?
19 யெகோவாவின் சாட்சிகள் மனிதரைப் பிரியப்படுத்துகிறவர்களுமல்ல, மனிதருக்காகப் பயப்படுகிறவர்களும் அல்ல. (நீதிமொழிகள் 29:25; எபேசியர் 6:6) வரிசெலுத்துபவர்களில் முன்மாதிரிகளாகவும் நல்ல குடிமக்களாகவும் இருப்பதற்கான தங்களுடைய எல்லா முயற்சிகளின் மத்தியிலும், எதிர்ப்பவர்கள் கேடுவிளைவிக்கும் பொய்களைப் பரப்பி, தங்களைப்பற்றி ஏளனமாக பேசுவார்கள் என்பதை அவர்கள் முழுமையாக உணருகின்றனர். (1 பேதுரு 3:16) இதை அறிந்தவர்களாய், அவர்கள் தானியேலின் மாதிரியைப் பின்பற்ற முயலுகின்றனர்; அவரைப்பற்றி அவருடைய பகைவர் கூறினர்: “நாம் இந்தத் தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடிக்கக்கூடாது.” (தானியேல் 6:5) நாம் மனிதரைப் பிரியப்படுத்துவதற்காக ஒருபோதும் பைபிள் நியமங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம். மறுபட்சத்தில், நாம் உயிர்த்தியாகம் செய்ய தேடுவதில்லை. நாம் சமாதானமாக வாழவும், பின்வரும் அப்போஸ்தல அறிவுரைக்கு இசைந்து செல்லவும் முயற்சி செய்கிறோம்: “நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.”—1 பேதுரு 2:15.
20. (அ) நாம் எதைக்குறித்து உறுதியாக நம்புகிறோம், இயேசு நமக்கு என்ன உற்சாகத்தை அளிக்கிறார்? (ஆ) புறம்பேயிருப்பவர்களிடமாக நாம் எப்படித் தொடர்ந்து ஞானமாக நடந்துகொள்ள முடியும்?
20 உலகத்திலிருந்து பிரிந்திருக்கும் நம்முடைய நிலைநிற்கை பைபிளுக்கு முழு ஒத்திசைவாக இருக்கிறது என்று நாம் உறுதியாக நம்புகிறோம். அது முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் சரித்திரத்தால் ஆதரிக்கப்பட்டதாய் இருக்கிறது. இயேசுவின் வார்த்தைகளால் நாம் ஊக்கமளிக்கப்படுகிறோம்: “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.” (யோவான் 16:33) நாம் பயப்படுவதில்லை. “நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்? நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து; கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” (1 பேதுரு 3:13-15) இந்த வழியில் நாம் செயல்படும்போது, புறம்பேயிருப்பவர்களைப் பொருத்தவரை தொடர்ந்து ஞானமாக நடந்துகொண்டிருப்போம்.
இடப்பக்கத்தில்: ஒரு வெள்ளப்பெருக்கிற்குப்பின், பிரான்ஸில் தங்கள் அயலாருக்கு உதவும் உண்மை கிறிஸ்தவர்கள்
தயவான கிறிஸ்தவ செயல்கள் தப்பெண்ணங்களைத் தகர்க்க அதிகத்தைச் செய்ய முடியும்
விமர்சனத்திற்கு
◻ யெகோவாவின் சாட்சிகள் ஏன் புறம்பேயிருப்பவர்களிடம் ஞானமாக நடந்துகொள்வது அவசியம்?
◻ உண்மை கிறிஸ்தவர்கள் உலகத்தால் நேசிக்கப்படுவார்கள் என்று ஏன் ஒருபோதும் நம்பக்கூடாது, ஆனால் அவர்கள் என்ன செய்ய முயலவேண்டும்?
◻ உலக மக்களிடம் நம்முடைய மனநிலை என்னவாக இருக்கவேண்டும், ஏன்?
◻ நம்முடைய சகோதரர்களுக்கு மட்டுமல்லாமல் புறம்பேயிருப்பவர்களுக்கும் நாம் ஏன் “நன்மை செய்ய” வேண்டும்?
◻ புறம்பேயிருப்பவர்களிடம் நாம் ஞானமாய் நடந்துகொள்வது நம்முடைய வெளிப்படையான சாட்சிகொடுக்கும் வேலையில் எப்படி உதவ முடியும்?
கிறிஸ்தவர்கள் “சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்க” வேண்டும்