யெகோவா—உண்மையான, உயிருள்ள கடவுள்
“யெகோவா யார்?” என்று எகிப்தின் பார்வோன் கேட்டபோது, அவன் அகந்தையாகவும் ஏளனமாகவும் பேசினான். (யாத்திராகமம் 5:2) முன் கட்டுரையில் காண்பிக்கப்பட்ட பிரகாரம், அந்த மனநிலை, பார்வோனுக்கும் அவனுடைய சேனைகளுக்கும் தண்ணீர்க் கல்லறையையும் உட்பட, எகிப்தியர்கள்மீது வாதைகளையும் மரணத்தையும் கொண்டுவந்தது.
யெகோவா தேவன், பொய்க் கடவுட்களைவிட தம்முடைய உன்னத தன்மையைப் பூர்வீக எகிப்தில் நிரூபித்தார். ஆனால் அவரைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய காரியங்கள் அநேகம் இருக்கின்றன. அவருடைய ஆளுமையின் சில அம்சங்கள் யாவை? நம்மிடமிருந்து அவர் எதைக் கேட்கிறார்?
அவருடைய பெயரும் புகழும்
எகிப்தின் பார்வோனிடம் மோசே உரிமைகோரிக்கைகளைக் கேட்டுக்கொண்டிருந்தபோது: ‘கர்த்தர் இன்னின்னதைச் சொல்கிறார்’ என்று மட்டும் அவர் சொல்லவில்லை. தங்களுடைய அநேகப் பொய்க் கடவுட்களும் கர்த்தாக்கள் என்று பார்வோனும் மற்ற எகிப்தியர்களும் நினைத்தனர். அப்படியல்ல, யெகோவா என்ற தெய்வீகப் பெயரை மோசே பயன்படுத்தினார். அவர் மீதியான் தேசத்தில் அக்கினி ஜுவாலையாய் எரிந்த முட்செடியில், மேலிருந்து பேசப்பட்டபோதும் அவர்தாமே இதைக் காதில் கேட்டிருந்தார். ஆவியில் தூண்டப்பட்டு எழுதப்பட்ட பதிவு சொல்கிறது:
“தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா, . . . எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன். ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே, கர்த்தர்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு, உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள். [உங்கள் முற்பிதாக்கள்] ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட [கானான்] தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர்.”—யாத்திராகமம் 6:1-8.
இதையேத்தான் யெகோவா செய்தார். இஸ்ரவேலரை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, அவர்கள் கானான் தேசத்தைச் சுதந்தரிக்கும்படிச் செய்தார். வாக்குப்பண்ணியதுபோல, கடவுள் இவையெல்லாம் நிறைவேறும்படிச் செய்தார். எவ்வளவு பொருத்தம்! அவருடைய பெயர், யெகோவா என்பதற்கு, “செய்துமுடிப்பவர்,” என்று அர்த்தம். பைபிள் யெகோவாவை, “தேவன்,” “சர்வலோகப் பேரரசர்,” “சிருஷ்டிகர்,” “பிதா,” “சர்வ வல்லமையுள்ளவர்,” மேலும் “உன்னதமானவர்,” போன்ற இப்படிப்பட்ட பட்டப்பெயர்களால் குறிப்பிடுகிறது. எனினும், அவருடைய மகத்தான நோக்கங்களைப் படிப்படியாக நிறைவேறும்படிச் செய்யும் உண்மையுள்ள கடவுளாக அவரை, யெகோவா என்ற அவருடைய பெயர் குறிப்பிடுகிறது.—ஏசாயா 42:8.
பைபிளை அதனுடைய மூல மொழிகளிலே நாம் படிக்கவேண்டியதிருந்தால், கடவுளுடைய பெயரை ஆயிரக்கணக்கான இடங்களில் காண முடியும். எபிரெயுவில் இது, ய்யாட் ஹ்ஹி வ்வவ் ஹ்ஹி (יהוה) என்ற நான்கு மெய்யெழுத்துக்களால் குறிப்பிடப்படுகிறது; இது திருநான்கெழுத்து என்றழைக்கப்படுகிறது, வலமிருந்து இடமாக வாசிக்கப்படுகிறது. எபிரெய மொழியைப் பேசுபவர்கள் உயிரெழுத்து சப்தங்களைச் சேர்த்துக்கொண்டனர், ஆனால், இன்றுள்ள மக்கள், அவ்வெழுத்துக்கள் எவை என உறுதியாய் அறியாதிருக்கிறார்கள். சிலர் யாவே என்ற எழுத்துக்கூட்டைச் சிபாரிசு செய்தாலும், யெகோவா என்ற எழுத்துவடிவம் பொதுவானதாகவும், நம்முடைய சிருஷ்டிகரை மிகப்பொருத்தமாக அடையாளப்படுத்துவதாகவும் இருக்கிறது.
யெகோவா என்ற பெயரைப் பயன்படுத்துவது, சங்கீதம் 110:1-ல் “என் ஆண்டவனே” என்றழைக்கப்படுகிறவரிலிருந்து கடவுளை வித்தியாசப்படுத்தியும் காட்டும். அந்த வசனத்தை ஒரு மொழிபெயர்ப்பு இவ்வாறு சொல்கிறது: “கர்த்தர் [எபிரெயுவில், יהוה] என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.” (கிங் ஜேம்ஸ் வெர்ஷன்) இங்கு எபிரெய பதிவில் கடவுளுடைய பெயர் வரும் இடத்தைப் பயன்படுத்துவதாக, புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation) இவ்வாறு வாசிக்கிறது: “யெகோவா, என்னுடைய ஆண்டவரிடம் இவ்வாறு சொன்னார்: ‘நான் உன் எதிரிகளை உன் பாதங்களுக்குப் பாதபடியாக்கும்வரை என் வலது பாரிசத்தில் உட்காரும்.’” யெகோவா தேவனின் அந்த வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது, இவரை அந்த எழுத்தாளர் “என் ஆண்டவனே,” என்று கூப்பிட்டார்.
பார்வோனின் நாளில் யெகோவா அவருக்கே உரிய நாமத்தை நிலைநாட்டினார். அந்தக் கடின இருதயமுள்ள அரசனிடம், மோசேயின் மூலமாகக் கடவுள் சொன்னார்: “பூமியெங்கும் என்னைப்போல வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர்மேலும் உன் ஜனங்கள்மேலும் அனுப்புவேன். நீ பூமியில் இராமல் நாசமாய்ப் போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளைநோயினால் வாதிப்பேன். என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.”—யாத்திராகமம் 9:14-16.
எகிப்திலிருந்து இஸ்ரவேலின் புறப்பாட்டையும் சில கானானிய ராஜாக்கள் தோற்கடிக்கப்பட்டதையும் குறித்து, எரிகோவின் பெண் ராகாப் இரண்டு எபிரெய உளவாளிகளிடம் இவ்வாறு சொன்னாள்: “கர்த்தர் உங்களுக்கு [இஸ்ரவேலருக்கு] தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில்பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன். நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது; கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம்பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்.” (யோசுவா 2:9-11) ஆம், யெகோவாவின் புகழ் பரவியிருந்தது.
யெகோவாவும் அவருடைய குணங்களும்
சங்கீதக்காரர் பின்வரும் இந்த இருதயப்பூர்வமான விருப்பத்தை வெளிப்படுத்தினார்: ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரவேண்டும்.’ (சங்கீதம் 83:17) யெகோவாவின் பேரரசு சர்வலோகத்துக்குரியதாக இருப்பதால், இயேசுவின் துன்புறுத்தப்படும் பின்பற்றுபவர்கள் இவ்வாறு ஜெபிக்கமுடியும்: “கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.” (அப்போஸ்தலர் 4:24) மேலும் யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவராக’ இருப்பது எவ்வளவு ஆறுதல் தருவதாய் இருக்கிறது!—சங்கீதம் 65:2.
யெகோவாவின் முக்கிய பண்பு அன்பு. உண்மையில், “கடவுள் அன்பாகவே இருக்கிறார்”—இந்தக் குணத்தின் உருவாகவே இருக்கிறார். (1 யோவான் 4:8) மேலும், ‘அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் இருக்கின்றன.’ யெகோவாவே, சகல-ஞானமும், சகல-வல்லமையும் உடையவராக இருக்கிறார், ஆனால் அவர் தம் வல்லமையை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்துவதில்லை. (யோபு 12:13; 37:23) ‘நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரமாக’ இருப்பதால் யெகோவா எப்போதும் நம்மிடத்தில் நியாயமாகவே நடந்துகொள்வார் என்றும் நாம் நிச்சயமாயிருக்கலாம். (சங்கீதம் 97:2) நாம் தவறுசெய்து, ஆனால் மனந்திரும்பினால், யெகோவா “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” என்ற அறிவில் நாம் ஆறுதலைப் பெறலாம். (யாத்திராகமம் 34:6) யெகோவாவைச் சேவிப்பதில் சந்தோஷத்தை நாம் காணமுடியும் என்பதில் சந்தேகமில்லை!—சங்கீதம் 100:1-5.
ஒப்பிடப்பட முடியாத பரலோக ராஜா
யெகோவாவினுடைய மகன் இயேசு கிறிஸ்து சொன்னார்: “தேவன் ஆவியாயிருக்கிறார்.” (யோவான் 4:24) எனவே, யெகோவா மனித கண்களுக்குத் தென்படாதவர். உண்மையில், யெகோவா மோசேயிடம் இவ்வாறு சொன்னார்: “நீ என் முகத்தைக் காண மாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது.” (யாத்திராகமம் 33:20) இந்தப் பரலோக ராஜா அவ்வளவு பிரகாசத்தில் இருப்பதால், மனிதர்களால் அவரைப் பார்க்கும் அனுபவத்தைப் பொறுக்கமுடியாது.
நம் கண்களுக்குக் காணப்படாதவராக யெகோவா இருந்தாலும், சர்வ வல்லமையுள்ள தேவனாக அவர் இருப்பதற்கு சான்றுகள் ஏராளம். உண்மையில், “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.” (ரோமர் 1:20) பூமி—அதன் புல்கள், மரங்கள், பழங்கள், காய்கறிகள், பூக்கள் ஆகியவற்றோடு—யெகோவாவின் தேவத்துவத்தை நிரூபிக்கிறது. மதிப்பற்ற விக்கிரக-கடவுட்கள் போல் இல்லாமல், யெகோவா மழையையும், பலன்தரும் பருவகாலங்களையும் தருகிறார். (அப்போஸ்தலர் 14:16, 17) இரவு வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் பாருங்கள். யெகோவாவின் தேவத்துவத்துக்கும் ஒழுங்கமைக்கும் திறமைக்கும் என்னே ஒரு மகத்தான சாட்சி!
யெகோவா, தம்முடைய பரிசுத்தமான, அறிவுக்கூர்மைமிக்க ஆவி சிருஷ்டிகளைப் பரலோகத்திலும் ஒழுங்கமைத்திருக்கிறார். சங்கீதக்காரன் பின்வருமாறு சொல்கிறதுபோல, ஓர் ஒன்றுபட்ட அமைப்பாக, அவர்கள் கடவுளின் சித்தத்தைச் செய்கிறார்கள்: “கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள். கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.” (சங்கீதம் 103:20, 21) மேலும் யெகோவா தம்முடைய ஜனங்களைப் பூமியிலும் ஒழுங்கமைத்திருக்கிறார். இஸ்ரவேல் தேசம் மிக நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது, தேவனுடைய குமாரனை ஆதியில் பின்பற்றினவர்களும் அவ்வாறே இருந்தனர். அதைப்போலவே இன்று, அவருடைய ராஜ்யம் சமீபத்தில் இருக்கிறது என்ற நற்செய்தியைப் பிரஸ்தாபப்படுத்திவரும் வைராக்கியமுள்ள சாட்சிகளின் உலகளாவிய அமைப்பை யெகோவா கொண்டிருக்கிறார்.—மத்தேயு 24:14.
யெகோவா உண்மையான, உயிருள்ள கடவுளாக இருக்கிறார்
யெகோவாவின் தேவத்துவம் பல வழிகளில் வெளிக்காட்டப்பட்டிருக்கிறது! அவர் எகிப்திய பொய்த் தெய்வங்களை அவமானப்படுத்தி, இஸ்ரவேலரைப் பத்திரமாக வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டுவந்தார். படைப்பு, யெகோவாவின் தேவத்துவத்திற்கு பிரமாண்டமான சாட்சிகொடுக்கிறது. மேலும் பொய் மதத்தின் பிரயோஜனமற்ற விக்கிரகக் கடவுட்களுக்கும் அவருக்கும் இடையே வெறுமனே எந்தவித பொருத்தமும் இல்லை.
தீர்க்கதரிசி எரேமியா, உயிருள்ள கடவுளாகிய யெகோவாவிற்கும், உயிரற்ற மனிதன் உண்டாக்கிய விக்கிரகங்களுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசத்தை எடுத்துக்காண்பித்தார். எரேமியா அதிகாரம் 10-ல் இந்த வேறுபாடு மிகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவையோடு, எரேமியா எழுதினார்: “கர்த்தரோ மெய்யான தேவன்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா.” (எரேமியா 10:10) ஜீவனுள்ள மற்றும் மெய்யான கடவுள், யெகோவா, சகலத்தையும் படைத்தார். எகிப்திய அடிமைத்தனத்திலே கஷ்டப்பட்டுவந்த இஸ்ரவேலரை அவர் விடுவித்தார். அவருக்கு முடியாதக் காரியம் ஒன்றுமில்லை.
யெகோவா, “நித்திய ராஜா,” இந்த ஜெபத்திற்கு பதிலளிப்பார்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (1 தீமோத்தேயு 1:17; மத்தேயு 6:9, 10) இயேசுவின் கைகளில் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுள்ள பரலோக மேசியானிய ராஜ்யம், பொல்லாதவர்களின்மீது சீக்கிரத்தில் நடவடிக்கை எடுத்து, யெகோவாவின் எதிரிகள் அனைவரையும் அழிக்கும். (தானியேல் 7:13, 14) அந்த ராஜ்யம் கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு முடிவில்லா ஆசீர்வாதங்களைக் கொடுக்கும் ஒரு புதிய உலகத்திற்கும் வழிநடத்தும்.—2 பேதுரு 3:13.
யெகோவாவைப்பற்றியும் அவருடைய நோக்கங்களைப்பற்றியும் அதிகம் கற்றுக்கொள்ளப்பட வேண்டியதிருக்கிறது. நீங்கள் ஏன் அப்படிப்பட்ட அறிவைப் பெறுவதை உங்கள் தீர்மானமாக எடுத்துக்கொண்டு, அதற்கு இசைவாகச் செயல்படக்கூடாது? நீங்கள் அதைச் செய்தீர்கள் என்றால், ராஜ்ய ஆட்சியின்கீழ் உள்ள பூமிக்குரிய பரதீஸில் நித்திய ஜீவனை அனுபவிக்கும் சிலாக்கியத்தைப் பெறுவீர்கள். துன்பம், வலி, மரணமுங்கூட நீக்கப்பட்டு, யெகோவாவைப்பற்றிய அறிவு பூமியெங்கும் நிரம்பியிருக்கும் காலத்தில் நீங்கள் வாழ்வீர்கள். (ஏசாயா 11:9; வெளிப்படுத்துதல் 21:1-4) “யெகோவா யார்?” என்ற கேள்விக்குப் பைபிள் அடிப்படையிலான பதில்களை நீங்கள் தேடி, கண்டு, அதற்கு இசைவாக செயல்பட்டால், அது உங்கள் எதிர்காலமாக இருக்கக்கூடும்.