உங்களுடைய பயனுள்ள பழக்கங்களை ஒருவரும் கெடுக்க அனுமதியாதீர்கள்
“மோசம்போகாதிருங்கள்; கெட்ட கூட்டுறவுகள் பயனுள்ள பழக்கங்களைக் கெடுக்கும்.”—1 கொரிந்தியர் 15:33, NW.
1, 2. (அ) கொரிந்திய கிறிஸ்தவர்களிடம் பவுல் எவ்வாறு உணர்ந்தார், ஏன்? (ஆ) நாம் என்ன குறிப்பான ஆலோசனையை கவனிப்போம்?
பெற்றோரின் அன்பு என்னே ஒரு சக்திவாய்ந்த உணர்ச்சியாக இருக்கிறது! தங்களுடைய பிள்ளைகளுக்காக, அவர்களுக்குப் போதிப்பதற்கும் ஆலோசனை கொடுப்பதற்கும் தங்களையே தியாகம் செய்யும்படி அது பெற்றோரைத் தூண்டுகிறது. அப்போஸ்தலன் பவுல் ஓர் இயற்கையான தகப்பனாக இல்லாதிருக்கலாம், ஆனால் அவர் கொரிந்துவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதினார்: “கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்.”—1 கொரிந்தியர் 4:15.
2 அதற்கு முன்னர், பவுல் கொரிந்துவுக்குப் பயணம் செய்திருந்தார்; அங்கே அவர் யூதருக்கும் கிரேக்கருக்கும் பிரசங்கித்தார். அவர் கொரிந்துவிலுள்ள சபையை உருவாக்க உதவி செய்தார். மற்றொரு கடிதத்தில், பவுல் தன்னுடைய கவனிப்பைப் பால்கொடுக்கும் தாயின் கவனிப்பிற்கு ஒப்பிட்டார், ஆனால் கொரிந்தியர்களுக்கு அவர் ஒரு தகப்பனைப்போல் இருந்தார். (1 தெசலோனிக்கேயர் 2:7) ஓர் அன்புள்ள இயற்கையான தகப்பன் செய்வதைப்போல், பவுல் தன்னுடைய ஆவிக்குரிய பிள்ளைகளுக்கு அறிவுரை கூறினார். கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அவருடைய தகப்பனைப்போன்ற ஆலோசனையிலிருந்து நீங்கள் பயனடையலாம்: “மோசம்போகாதிருங்கள்; கெட்ட கூட்டுறவுகள் பயனுள்ள பழக்கங்களைக் கெடுக்கும்.” (1 கொரிந்தியர் 15:33, NW) பவுல் ஏன் அதைக் கொரிந்தியர்களுக்கு எழுதினார்? நாம் அந்த ஆலோசனையை எப்படிப் பொருத்திப் பிரயோகிக்கலாம்?
அவர்களுக்கும் நமக்கும் அறிவுரை
3, 4. முதல் நூற்றாண்டு கொரிந்துவைப்பற்றியும் அதன் மக்கள் தொகையைப்பற்றியும் நமக்கு என்ன தெரியும்?
3 முதல் நூற்றாண்டில், கிரேக்க புவியியலாளர் ஸ்ட்ராபோ எழுதினார்: “கொரிந்து, அதன் வணிகத்தின் காரணமாக ‘செல்வச்சிறப்புடையது’ என்று அழைக்கப்படுகிறது; ஏனென்றால், அது பூசந்தியில் அமைந்திருந்து, ஒன்று நேராக ஆசியாவுக்கும் மற்றொன்று இத்தாலிக்கும் வழிநடத்தக்கூடிய இரண்டு துறைமுகங்கள்மேல் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கிறது; மேலும் இரு நாடுகளிலிருந்தும் வாணிகச்சரக்குப் பரிமாற்றத்தை அது எளிதாக்குகிறது.” இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பேர்பெற்ற இஸ்த்மியன் விளையாட்டுகள் திரளான கூட்டங்களைக் கொரிந்துவுக்குக் கொண்டுவந்தன.
4 அரசுப்பூர்வ அதிகாரத்திற்கும் புலன்களைப் பாதிக்கும் அஃப்ரடைட் வழிபாட்டிற்கும் மையமாக இருந்த இந்த நகரிலுள்ள மக்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தனர்? பேராசிரியர் T. S. இவான்ஸ் விளக்குகிறார்: “மக்கள் தொகை சுமார் 4,00,000-ஆக [இருந்திருக்க] வேண்டும். சமுதாயம், உயர்ந்த கலாச்சாரத்தைக் [கொண்டிருந்தது], ஆனால் ஒழுக்கத்தில் தளர்வானதாக, படுமோசமானதாகக்கூட இருந்தது. . . . அகாயாவில் உள்ள கிரேக்க குடிமக்கள் அறிவுத்திறன் சார்ந்த அமைதியற்ற நிலைக்கும், புதுமைகளுக்காகப் பேரவாவுடன் ஏங்கித்துடிப்பதற்கும் குறிப்பிடத்தக்கவர்களாய் இருந்தனர். . . . அவர்களுடைய தன்னலக் கோட்பாடு உட்கட்சிப்பிரிவுகளாகிய தீப்பந்தத்திற்குத் தயாராக இடப்பட்ட எரிபொருளாக இருந்தது.”
5. கொரிந்திய சகோதரர்கள் என்ன ஆபத்தை எதிர்ப்பட்டனர்?
5 காலப்போக்கில், இன்னும் பெருமையான ஊகத்திடமாக மனச்சாய்வைக் கொண்டிருந்த சிலரால் சபையுங்கூட பிரிவடைந்தது. (1 கொரிந்தியர் 1:10-31; 3:2-9) ஒரு பெரிய பிரச்னை என்னவென்றால், சிலர், “மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று” சொல்லிக்கொண்டிருந்தனர். (1 கொரிந்தியர் 15:12; 2 தீமோத்தேயு 2:16-18) அவர்களுடைய சரியான நம்பிக்கை (அல்லது தவறான நம்பிக்கை) என்னவாயிருந்தாலும், கிறிஸ்து “மரித்தோரிலிருந்தெழு”ப்பப்பட்டார் என்று தெளிவான நிரூபணத்துடன் பவுல் அவர்களைச் சரிசெய்ய வேண்டியிருந்தது. இவ்வாறு, கடவுள் “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடு”ப்பார் என்று கிறிஸ்தவர்களால் நம்ப முடிந்தது. (1 கொரிந்தியர் 15:20, 51-57) நீங்கள் அங்கு இருந்திருந்தால், ஆபத்தில் இருந்திருப்பீர்களா?
6. பவுலின் 1 கொரிந்தியர் 15:33-லுள்ள அறிவுரை குறிப்பாக யாருக்குப் பொருந்துவதாய் இருந்தது?
6 இறந்துபோனவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதற்கு உறுதியான சான்றளித்துக் கொண்டிருக்கையில், பவுல் அவர்களிடம் சொன்னார்: “மோசம்போகாதிருங்கள்; கெட்ட கூட்டுறவுகள் பயனுள்ள பழக்கங்களைக் கெடுக்கும்.” சபையோடு தொடர்புகொண்டுள்ள, உயிர்த்தெழுதல் கோட்பாட்டில் ஒத்துப்போகாத சிலருக்கு இந்த அறிவுரையின் குறிப்பு பொருந்துவதாய் இருந்தது. அவர்கள் புரிந்துகொள்ளாத ஒரு குறிப்பைப்பற்றி வெறுமனே நிச்சயமற்றவர்களாய் இருந்தார்களா? (லூக்கா 24:38-ஐ ஒத்துப்பாருங்கள்.) இல்லை. ‘உங்களில் சிலர் மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று சொல்கிறீர்கள்’ என்று பவுல் எழுதினார்; ஆகவே உட்பட்டிருந்தவர்கள் கருத்துவேறுபாட்டை வெளிப்படுத்திக்கொண்டு, விசுவாசத்துரோகத்திடமாக மனச்சாய்வைக் கொண்டிருந்தனர். அவர்கள் மற்றவர்களுடைய நல்ல பழக்கங்களையும் சிந்தனைகளையும் கெடுக்க முடியும் என்று பவுல் நன்கு அறிந்திருந்தார்.—அப்போஸ்தலர் 20:30; 2 பேதுரு 2:1.
7. நாம் 1 கொரிந்தியர் 15:33-ஐ பொருத்திப்பிரயோகிக்கக்கூடிய ஒரு சூழமைப்பு என்ன?
7 கூட்டுறவுகளைப்பற்றிய பவுலின் எச்சரிக்கையை நாம் எப்படிப் பொருத்திப்பிரயோகிக்க முடியும்? ஒரு பைபிள் வசனத்தை அல்லது போதனையைப் புரிந்துகொள்வதைக் கடினமானதாகக் காணும் சபையிலுள்ள ஒருவருக்கு உதவிசெய்ய நாம் மறுக்கவேண்டும் என்று அவர் அர்த்தப்படுத்தவில்லை. உண்மையில், அத்தகைய சந்தேகங்களை உடைய உண்மை மனமுள்ளவர்களுக்கு இரக்கமான உதவிசெய்யும்படி யூதா 22, 23 நம்மைத் தூண்டுகிறது. (யாக்கோபு 5:19, 20) இருந்தாலும், யாராவது ஒருவர், பைபிள் சத்தியம் என்று நமக்குத் தெரிந்த ஒன்றிற்கு விதிவிலக்கான ஒன்றைக் கூறினால் அல்லது சந்தேகமான அல்லது எதிரிடையான இயல்புடைய குறிப்புக்களைச் சொல்லிக்கொண்டிருந்தால், பவுல் கொடுத்த தகப்பனைப்போன்ற அறிவுரை பொருந்தும். அந்த வகையான மனிதனுடன் கூட்டுறவு கொள்வதற்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். சந்தேகமின்றி, ஒருவர் கண்டிப்பாகவே விசுவாச துரோகியாகிவிட்டார் என்றால், ஆவிக்குரிய மேய்ப்பர்கள் மந்தையைப் பாதுகாப்பதற்காக செயல்பட வேண்டும்.—2 தீமோத்தேயு 2:16-18; தீத்து 3:10, 11.
8. ஒரு பைபிள் போதனையில் யாராவது ஒருவர் ஒத்துப்போகவில்லை என்றால், நாம் எவ்வாறு பகுத்துணர்வுடன் செயல்படலாம்?
8 சபைக்குப் புறம்பேயிருந்து பொய் போதனைகளை முன்னேற்றுவிப்பவர்களைக் குறித்ததிலும் 1 கொரிந்தியர் 15:33-லுள்ள பவுலின் தகப்பனைப்போன்ற அறிவுரையை நாம் பொருத்திப் பிரயோகிக்கலாம். அவர்களுடன் கூட்டுறவு கொள்வதற்கு நாம் எவ்வாறு இழுக்கப்பட முடியும்? சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு உதவப்படக்கூடியவர்களையும் ஒரு பொய் போதனையை முன்னேற்றுவிப்பதற்காக வெறுமனே ஒரு சவாலை எழுப்பக்கூடியவர்களையும் நாம் வேறுபடுத்திக் காணாவிட்டால், இது நிகழக்கூடும். உதாரணமாக, நம்முடைய சாட்சிகொடுக்கும் வேலையில், ஏதாவது ஒரு குறிப்பை ஒத்துக்கொள்ளாத ஆனால் மேலுமாகக் கலந்தாலோசிக்க மனமுள்ளவராய் இருக்கும் ஒருவரை நாம் எதிர்ப்படக்கூடும். (அப்போஸ்தலர் 17:32-34) அதுதானே ஒரு பிரச்னையை அளிக்கவேண்டியதில்லை, ஏனென்றால், உண்மையில் பைபிள் சத்தியத்தை அறிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் நாம் மகிழ்ச்சியாக அதை விளக்குகிறோம்; நம்பத்தக்க அத்தாட்சியை அளிப்பதற்கு திரும்பவுங்கூட வருகிறோம். (1 பேதுரு 3:15) இருந்தாலும், பைபிள் சத்தியத்தைக் கண்டுபிடிப்பதற்குச் சிலர் நிஜமாகவே அக்கறையுள்ளவர்களாய் இல்லாமல் இருக்கக்கூடும்.
9. நம்முடைய நம்பிக்கைகளைப்பற்றிய சவால்களுக்கு நாம் எவ்விதமாகப் பிரதிபலிக்க வேண்டும்?
9 அநேக மக்கள் ஒவ்வொரு வாரமும், மணிக்கணக்கில் தர்க்கித்துக் கொண்டிருப்பர்; ஆனால் அவர்கள் சத்தியத்தைத் தேடுவதன் காரணமாக அல்ல. அவர்கள் வெறுமனே, எபிரெயு, கிரேக்கு அல்லது பரிணாம அறிவியலைக்குறித்துக் கொண்டிருப்பதாக எண்ணப்பட்ட தங்கள் சொந்த கல்வியைக் குறித்து வீண்பெருமை பாராட்டி மற்றொருவரின் விசுவாசத்தைத் தகர்க்க விரும்புகின்றனர். அவர்களை எதிர்ப்படும்போது, சில சாட்சிகள் சவால்விடப்பட்டதாக உணர்ந்து, அதன் விளைவாகப் பொய் மத நம்பிக்கை, தத்துவ அறிவு, அல்லது அறிவியல்பூர்வ தவறு ஆகியவற்றோடு விரிவான கூட்டுறவு கொண்டிருக்கின்றனர். இயேசு, எபிரெயு அல்லது கிரேக்கைக் கற்றிருந்த மதத் தலைவர்களுடன் வாதிட்டு வெற்றி பெற்றிருக்க முடியும் என்றாலும், அது தனக்கு நேரிடாமல் பார்த்துக்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். சவாலிடப்பட்டபோது, இயேசு சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு, பின்னர் உண்மையான செம்மறியாடுகளான மனத்தாழ்மை உள்ளவர்களிடம் தம் கவனத்தைத் திருப்பினார்.—மத்தேயு 22:41-46; 1 கொரிந்தியர் 1:23–2:2.
10. கம்ப்யூட்டர்களைக் கொண்டிருந்து மின்னணு அறிவிப்புப் பலகைகளை அணுக வாய்ப்பிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு ஏன் எச்சரிக்கை பொருத்தமானது?
10 கெட்ட கூட்டுறவுக்கு நவீன கம்ப்யூட்டர்கள் வேறு வழிகளைத் திறந்திருக்கின்றன. சில வியாபார நிறுவனங்கள், சந்தாதாரர்கள் ஒரு கம்ப்யூட்டரையும் ஒரு தொலைபேசியையும் பயன்படுத்தி மின்னணு அறிவிப்புப் பலகைகளுக்கு ஒரு செய்தியை அனுப்ப உதவியிருக்கின்றன; இவ்வாறாக ஓர் ஆள், அறிவிப்புப் பலகையில் எல்லா சந்தாதாரர்களுக்கும் பார்க்கக்கூடியவிதத்தில் ஒரு செய்தியைக் குறிப்பிட்டு வைக்க முடியும். இது மதச்சம்பந்தமான காரியங்களில் மின்னணு தர்க்கங்கள் எனப்பட்டவற்றிற்கு வழிநடத்தியிருக்கிறது. ஒரு கிறிஸ்தவன் அத்தகைய தர்க்கங்களுக்கு இழுக்கப்பட்டு, ஒரு விசுவாச துரோக சிந்தனை செய்யும் சபைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் ஒருவருடன் பல மணி நேரங்கள் செலவிடக்கூடும். கெட்ட கூட்டுறவுகளைத் தவிர்ப்பதைக்குறித்த பவுலின் தகப்பனைப்போன்ற அறிவுரை, 2 யோவான் 9-11-ல் கொடுக்கப்பட்ட கட்டளையை அழுத்திக் காட்டுகிறது.a
தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிருங்கள்
11. கொரிந்துவிலுள்ள வாணிக நிலைமை என்ன வாய்ப்பை அளித்தது?
11 நாம் கவனித்தபடி, எண்ணற்ற கடைகள் மற்றும் வியாபாரங்களுடன் கொரிந்து ஒரு வாணிக மையமாக இருந்தது. (1 கொரிந்தியர் 10:25) இஸ்த்மியன் விளையாட்டுகளுக்கு வந்தவர்கள் கூடாரங்களில் வசிப்பர்; அந்த நிகழ்ச்சியின்போது கையில் தூக்கிச்செல்லக்கூடிய பந்தல்கள் அல்லது மூடப்பட்ட சாவடிகளிலிருந்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள். (அப்போஸ்தலர் 18:1-3-ஐ ஒத்துப்பாருங்கள்.) கூடாரங்களைச் செய்வதன்மூலம் பவுல் வேலையைக் கண்டடைவதை இது சாத்தியமாக்கிற்று. மேலும் அவர் வேலை இடத்தை நற்செய்தியை முன்னேற்றுவிப்பதற்காகப் பயன்படுத்த முடியும். பேராசிரியர் J. மர்ஃபி ஒகானர் எழுதுகிறார்: “ஒரு சுறுசுறுப்பான சந்தையிலுள்ள ஒரு கடையிலிருந்து . . . ஒரு நெருக்கடியான தெரு வரையாக, உடன் வேலையாட்களிடமும் வாடிக்கையாளரிடமும் மட்டுமல்லாமல், வெளியே இருக்கும் கூட்டத்தோடும் தொடர்புகொள்ளும் வாய்ப்பு பவுலுக்கு இருந்தது. மந்தமான காலங்களில்கூட கதவருகில் நின்றுகொண்டு, கேட்பார்கள் என்று அவர் நினைப்பவர்களிடம் பிடித்துநிறுத்திப் பேசலாம் . . . அவருடைய ஊக்கமான ஆளுமையும் முழுமையான திடநம்பிக்கையும், அவரை அந்தச் சுற்றுவட்டாரத்தில் ‘ஒரு குறிப்பிடத்தக்க சிறப்புடையவராக’ சீக்கிரத்தில் ஆக்காமல் இருந்திருக்கும் என எண்ணிப்பார்ப்பது கடினமாக இருக்கிறது; இது அறிய ஆர்வமுள்ளவர்களை, வெறும் சோம்பேறிகளை மட்டுமல்ல, ஆனால் உண்மையிலே தகவல்களைத் தேடுபவர்களையும் கவர்ந்திழுத்திருக்கும். . . . அவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்த திருமணமான பெண்கள் தங்களுடைய வேலையாட்களுடன், பொருட்களை வாங்குவதற்கு வரும் சாக்கில் அவரைச் சந்திக்கலாம். நெருக்கடியான சமயங்களில், துன்புறுத்தல் அல்லது சிறிய தொல்லைகள் அச்சுறுத்தியபோது, அவருடைய வாடிக்கையாளர்கள் என்ற முறையில் விசுவாசிகள் அவரைச் சந்திக்கலாம். அந்தத் தொழிற்கூடம், அவர் நகராட்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளும்படியும் செய்தது.”
12, 13. வேலைசெய்யுமிடத்தில் 1 கொரிந்தியர் 15:33 எவ்வாறு சரியாகப் பொருந்தலாம்?
12 எப்படியும், வேலைசெய்யுமிடத்தில் ‘கெட்ட கூட்டுறவுகளுக்கான’ சாத்தியத்தைப் பவுல் உணர்ந்திருப்பார். நாமும் உணரவேண்டும். குறிப்பிடத்தக்க வகையில், சிலர் மத்தியில் இருந்த ஒரு மனப்போக்கை பவுல் மேற்கோள் காட்டினார்: “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்.” (1 கொரிந்தியர் 15:32) உடனடியாக அதைத் தொடர்ந்து அவருடைய தகப்பனைப்போன்ற அறிவுரையைக் கொடுத்தார்: “மோசம்போகாதிருங்கள்; கெட்ட கூட்டுறவுகள் பயனுள்ள பழக்கங்களைக் கெடுக்கும்.” வேலைசெய்யுமிடமும் மகிழ்ந்தனுபவித்தலை நாடுவதும் ஓர் அபாயத்தின் சாத்தியத்தை உருவாக்குவதுடன் எவ்வாறு தொடர்புபடுத்தப்படக்கூடும்?
13 கிறிஸ்தவர்கள் தங்களுடன் வேலைசெய்பவர்களுடன் சிநேகபான்மை உள்ளவர்களாய் இருக்க விரும்புகின்றனர்; இது ஒரு சாட்சி கொடுக்கப்படுவதற்கு வழியைத் திறந்துவைப்பதில் எவ்வளவு திறம்பட்டதாய் இருக்கிறது என்று பல அனுபவங்கள் காட்டுகின்றன. இருப்பினும், ஓர் உடன்வேலையாள், சிநேகபான்மையை, சேர்ந்து நல்ல நேரத்தைக் கொண்டிருக்கும்படி கூட்டுறவிற்கான அழைப்பென தவறாகப் புரிந்துகொள்ளலாம். அவர் அல்லது அவள் மதிய உணவிற்கு, அல்லது வேலைக்குப்பின் மதுபானம் அருந்துவதற்காக சற்றுநேரம் செலவிட, அல்லது வார இறுதியில் ஏதாவது ஒரு பொழுதுபோக்கிற்கு ஒரு தற்செயலான அழைப்பை விடுக்கலாம். இந்த ஆள் தயவானவராகவும் தூய்மையானவராகவும் தோன்றக்கூடும்; அந்த அழைப்பு களங்கமற்றதாகத் தோன்றக்கூடும். இருப்பினும், பவுல் நமக்கு ஆலோசனை கூறுகிறார்: “மோசம்போகாதிருங்கள்.”
14. கூட்டுறவுகளின்மூலம் எவ்வாறு சில கிறிஸ்தவர்கள் மோசம்போக்கப்பட்டிருக்கிறார்கள்?
14 சில கிறிஸ்தவர்கள் மோசம்போக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் உடன்வேலையாட்களிடம் கொள்ளும் கூட்டுறவினிடமாக அவர்கள் படிப்படியாக ஒரு தளர்வான மனநிலையை வளர்த்தனர். ஒரு விளையாட்டிற்கு அல்லது ஒரு விருப்பவேலைக்கான பொது அக்கறை காரணமாக அது வளர்ந்திருக்கக்கூடும். அல்லது வேலையிடத்திலுள்ள கிறிஸ்தவரல்லாத ஒருவர் அளவுக்கதிகமான தயவுள்ளவராகவும் அன்பாதரவுள்ளவராகவும் இருக்கக்கூடும்; இது அவரோடு அதிகப்படியான நேரங்களைச் செலவிடுவதற்கும், சபையிலுள்ள ஒருசிலரின் கூட்டுறவைவிட அத்தகைய கூட்டுறவை விரும்புவதற்கும்கூட வழிநடத்தியிருக்கும். பின்னர் அந்தக் கூட்டுறவு வெறும் ஒரு கூட்டத்தைத் தவறுவதற்கு வழிநடத்தக்கூடும். ஒரு மாலை, நேரஞ்சென்று வெளியே இருந்துவிட்டு, காலையில் வெளி ஊழியத்திற்குச் செல்வதற்கான பழக்கத்தை மீறுவதை அர்த்தப்படுத்தக்கூடும். ஒரு கிறிஸ்தவன் பொதுவாக மறுக்கக்கூடிய வகையான ஒரு திரைப்படத்தை அல்லது வீடியோவைப் பார்ப்பதில் அது விளைவடையலாம். ‘ஓ, அது ஒருபோதும் எனக்கு நேரிடாது,’ என்று நாம் நினைக்கக்கூடும். ஆனால் மோசம்போக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் முதலில் அவ்விதமாகவே பிரதிபலித்திருக்கக்கூடும். நம்மைநாமே கேட்டுக்கொள்ளவேண்டும், ‘பவுலின் அறிவுரையைப் பொருத்திப்பிரயோகிப்பதற்கு நான் எவ்வளவு தீர்மானமாக இருக்கிறேன்?’
15. அயலாரிடம் நாம் என்ன சமநிலையான மனப்போக்கைக் கொண்டிருக்கவேண்டும்?
15 நம்முடைய வேலைசெய்யுமிடத்தைப்பற்றி இப்போது நாம் கவனித்தவை நம்முடைய அயலாருடன் கொள்ளும் கூட்டுறவிற்கும் பொருந்துகிறது. நிச்சயமாக, பண்டைய கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்கள் அயலாரைக் கொண்டிருந்தனர். சில சமுதாயங்களில், அயலாரிடம் மிக சிநேகபான்மையாகவும் ஆதரவாகவும் இருப்பது சாதாரணமானதாக இருக்கிறது. நாட்டுப்புற பகுதிகளில், வெளித்தொடர்பின்றி தனியாக இருப்பதால் அயலார் ஒருவரையொருவர் சார்ந்து இருக்கக்கூடும். சில கலாச்சாரங்களில் குடும்ப உறவுகள் குறிப்பாக பலமானதாக இருந்து, விருந்துக்கான அதிக அழைப்புகளுக்கு இடமளிக்கின்றன. தெளிவாகவே, இயேசு வெளிக்காட்டியதைப் போன்ற ஒரு சமநிலையான நோக்கு முக்கியமானதாய் இருக்கிறது. (லூக்கா 8:20, 21; யோவான் 2:12) நம்முடைய அயலாருடன் மற்றும் உறவினரிடம் நம்முடைய செயல்தொடர்புகளில், நாம் கிறிஸ்தவர்களாவதற்கு முன்னர் இருந்தவிதமாகவே தொடர்ந்து செயல்படும் மனச்சாய்வைக் கொண்டிருக்கிறோமா? மாறாக, அத்தகைய செயல்தொடர்புகளை மறுபரிசீலனை செய்து, என்ன வரையறைகள் பொருத்தமாக இருக்கும் என்று நாம் மனப்பூர்வமாகத் தீர்மானிக்கவேண்டாமா?
16. மத்தேயு 13:3, 4-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் எவ்வாறு புரிந்துகொள்ளப்படவேண்டும்?
16 இயேசு ஒருமுறை ராஜ்யத்தைப்பற்றிய வசனத்தை, ‘வழியருகே விழுந்து, பறவைகள் வந்து அவற்றைப் பட்சித்துப்போட்ட’ விதைகளுக்கு ஒப்பிட்டார். (மத்தேயு 13:3, 4, 19) அந்தச் சமயத்தில், சாலையருகே உள்ள மண், அதில் பலர் போவதும் வருவதுமாக இருப்பதால் கடினமாக ஆனது. அநேக மக்களிடம் அந்த விதத்திலேயே இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கைகள், அயலார், உறவினர், மேலும் மற்றவர்கள் வந்தும் போயும், அவர்களைச் சுறுசுறுப்பாக வைப்பதால் நிரப்பப்பட்டிருக்கின்றன. இது, அப்படியே, அவர்களுடைய இருதயங்களின் மண்ணை மிதித்து, சத்தியத்தின் விதைகள் வேர்கொள்ளாதபடி அதைக் கடினமாக்குகிறது. ஏற்கெனவே கிறிஸ்தவராக இருக்கும் ஒருவரிடமும் அதே விதமான பிரதிபலிக்காத தன்மை வளரலாம்.
17. அயலாருடனும் மற்றவர்களுடனும் கொள்ளும் கூட்டுறவு நம்மை எப்படி பாதிக்கக்கூடும்?
17 சில உலகப்பிரகாரமான அயலாரும் உறவினரும் ஆவிக்குரிய காரியங்களில் அக்கறையையோ நீதிக்கான அன்பையோ நிலையாகக் காண்பிக்காத போதிலும் சிநேகபான்மை உள்ளவர்களாயும் உதவிசெய்பவர்களாயும் இருக்கக்கூடும். (மாற்கு 10:21, 22; 2 கொரிந்தியர் 6:14) நாம் கிறிஸ்தவர்களாவது, சிநேகபான்மையற்றவர்களாக, அயலாருக்கான தன்மையற்றவர்களாக ஆவதை அர்த்தப்படுத்தக்கூடாது. மற்றவர்கள்மீது உண்மையான அக்கறையை வெளிக்காட்டும்படி இயேசு நமக்கு அறிவுரை கூறினார். (லூக்கா 10:29-37) ஆனால் நம்முடைய கூட்டுறவுகளைக்குறித்துக் கவனமாக இருக்கும்படியான பவுலின் அறிவுரையும் அதைப்போன்றே ஏவப்பட்டதும் தேவையானதுமாய் இருக்கிறது. நாம் முந்தின அறிவுரையைப் பொருத்திப்பிரயோகிக்கையில், பிந்தின அறிவுரையை மறந்துவிடக்கூடாது. நாம் இரு நியமங்களையும் நம் மனதில் வைக்காவிட்டால், நம்முடைய பழக்கங்கள் பாதிக்கப்படலாம். நேர்மை அல்லது இராயனுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிவதைக்குறித்ததில் உங்கள் அயலார் அல்லது உறவினருடைய பழக்கங்கள் உங்களுடையதுடன் எந்தளவிற்கு ஒத்திருக்கின்றன? உதாரணமாக, வரிசெலுத்தும் சமயத்தில், வரவை அல்லது வியாபார லாபங்களைக் குறைத்து அறிக்கை செய்வது நியாயமானது, பிழைத்திருப்பதற்குத் தேவையானதுங்கூட என்று அவர்கள் உணரக்கூடும். தற்செயலாக காப்பி அருந்துவதற்கு கூடியிருக்கையில் அல்லது ஒரு சிறிய சந்திப்பில் அவர்கள் தங்களுடைய நோக்குநிலைகளைப்பற்றி, உங்களிடம் தூண்டுதலளிக்கும் விதத்தில் பேசக்கூடும். அது எவ்வாறு உங்கள் சிந்தனைகளையும் நேர்மையான பழக்கங்களையும் பாதிக்க முடியும்? (மாற்கு 12:17; ரோமர் 12:2) “மோசம்போகாதிருங்கள்; கெட்ட கூட்டுறவுகள் பயனுள்ள பழக்கங்களைக் கெடுக்கும்.”
இளமையின் பழக்கங்கள்கூட
18. ஏன் 1 கொரிந்தியர் 15:33 இளைஞருக்கும் பொருந்தும்?
18 இளைஞர், குறிப்பாகத் தாங்கள் காண்கிற அல்லது கேட்கிறவற்றால் பாதிக்கப்படுகின்றனர். பிள்ளைகளுடைய சைகைகள் அல்லது தனிப்பழக்கங்கள் தங்களுடைய பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களுடையவற்றை மிகவும் ஒத்திருப்பதை நீங்கள் கவனித்ததில்லையா? அப்படியென்றால், தங்களோடு சேர்ந்து விளையாடுபவர்கள் அல்லது பள்ளி சகாக்களால் பிள்ளைகள் பெரிதும் செல்வாக்குச் செலுத்தப்படுவர் என்பதைக்குறித்து நாம் ஆச்சரியப்படக்கூடாது. (மத்தேயு 11:16, 17-ஐ ஒத்துப்பாருங்கள்.) உங்கள் மகன் அல்லது மகள் தங்களுடைய பெற்றோரைக்குறித்து அவமரியாதையாகப் பேசும் இளைஞர் மத்தியில் இருந்தால், இது உங்கள் பிள்ளைகளையும் பாதிக்காது என்று நீங்கள் ஏன் நினைக்க வேண்டும்? மற்ற இளைஞர் கீழ்த்தரமான மொழிநடையை பயன்படுத்துவதை அவர்கள் அடிக்கடி கேட்டால் என்ன செய்வது? பள்ளியில் அல்லது சுற்றுவட்டாரத்திலுள்ள சகாக்கள் ஒரு புது பாணியான ஷூ அல்லது நகை பாணியைக்குறித்து கிளர்ச்சியடைந்தால் என்ன செய்வது? இளம் கிறிஸ்தவர்கள் அத்தகைய செல்வாக்கு நுழைவதற்கு இடங்கொடுக்கமாட்டார்கள் என்று நாம் நினைக்க வேண்டுமா? பவுல் 1 கொரிந்தியர் 15:33-ற்கு ஒரு குறைந்தளவு வயது வரம்பு இருப்பதாகச் சொன்னாரா?
19. பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் என்ன நோக்குநிலையை ஆழப்பதியவைக்க வேண்டும்?
19 நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், உங்களுடைய பிள்ளைகளைக்குறித்து காரணம் காட்டி, தீர்மானங்களை எடுக்கையில் அந்த அறிவுரையை உணர்ந்தவர்களாய் செயல்படுகிறீர்களா? சுற்றுவட்டாரத்தில் அல்லது பள்ளியில் உங்கள் பிள்ளைகளுடன் இருக்கும் மற்ற எல்லா இளைஞரும் நல்லவர்கள் அல்ல என்று இது அர்த்தப்படுத்துகிறதில்லை என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வது ஒருவேளை உதவியாயிருக்கும். உங்களுடைய அயலார், உறவினர், மற்றும் உடன்வேலையாட்களில் சிலரைப்போலவே அவர்களில் சிலர் மனதிற்கு உகந்த தன்மையுள்ளவர்களாகவும் ஒழுங்கானவர்களாகவும் இருக்கக்கூடும். உங்களுடைய பிள்ளை இதைக் கண்டு, கொரிந்தியருக்குப் பவுல் எழுதிய ஞானமான, தகப்பனைப்போன்ற அறிவுரையைப் பொருத்திப்பிரயோகிப்பதில் நீங்கள் சமநிலையுள்ளவர்களாய் இருப்பதைக் கிரகித்துக்கொள்ளும்படி உதவ முயற்சிசெய்யுங்கள். நீங்கள் காரியங்களைச் சமநிலைப்படுத்தும் முறையை அவர்கள் பகுத்துணர்கையில், அது அவர்கள் உங்களைப் பின்பற்றுவதற்கு உதவலாம்.—லூக்கா 6:40; 2 தீமோத்தேயு 2:22.
20. இளைஞரே, நீங்கள் என்ன சவாலை எதிர்ப்படுகிறீர்கள்?
20 நீங்கள் இன்னும் இளைஞராய் இருப்பீர்களானால், பவுலின் அறிவுரை இளைஞராய் இருந்தாலும் சரி அல்லது முதியவராய் இருந்தாலும் சரி, ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் முக்கியமானதாய் இருக்கிறது என்பதை அறிந்தவர்களாய், அதை எப்படிப் பொருத்திப்பிரயோகிப்பது என்பதை பகுத்துணர முயலுங்கள். இது ஒரு சவாலாக இருக்கும், ஆனால் அந்தச் சவாலை எதிர்ப்பட ஏன் மனமுள்ளவர்களாய் இருக்கக்கூடாது? மற்ற இளைஞரில் சிலரை நீங்கள் சிறுவயது முதற்கொண்டு அறிந்திருக்கிறீர்கள் என்பதுதானே, அவர்கள் உங்களுடைய பழக்கங்களைப் பாதிக்க முடியாது என்றும், ஒரு கிறிஸ்தவ இளைஞனாக நீங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் பழக்கங்களைக் கெடுக்க முடியாது என்றும் அர்த்தப்படுத்துவதில்லை என்பதை உணருங்கள்.—நீதிமொழிகள் 2:1, 10-15.
நம்முடைய பழக்கங்களைப் பாதுகாப்பதற்கு உடன்பாடான படிகள்
21. (அ) கூட்டுறவின் சம்பந்தமாக நாம் என்ன தேவையைக் கொண்டிருக்கிறோம்? (ஆ) சில கூட்டுறவுகள் ஆபத்தானவையாக இருக்கலாம் என்று நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்?
21 நம்மெல்லாருக்கும் கூட்டுறவு தேவைப்படுகிறது. என்றாலும், நம்முடைய கூட்டாளிகள் நம்மை நன்மைக்காக அல்லது தீமைக்காகப் பாதிக்க முடியும் என்ற உண்மைக்கு நாம் விழிப்புள்ளவர்களாய் இருக்கவேண்டும். ஆதாமிலும் அப்போது முதற்கொண்டு நூற்றாண்டுகளினூடேயும் அது உண்மையாக நிரூபித்திருக்கிறது. உதாரணமாக, யோசபாத், யூதாவின் ஒரு நல்ல ராஜாவாக இருந்து, யெகோவாவின் தயவையும் ஆசீர்வாதத்தையும் அனுபவித்தார். ஆனால், தன்னுடைய மகன், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகளை மணந்துகொள்ள அனுமதித்தபோது ஆகாபோடு கூட்டுறவு கொள்ள ஆரம்பித்தார். அந்தக் கெட்ட கூட்டுறவு யோசபாத்தின் உயிரை ஏறக்குறைய அபாயத்திற்குள்ளாக்கியது. (2 இராஜாக்கள் 8:16-18; 2 நாளாகமம் 18:1-3, 29-31) நம்முடைய கூட்டுறவுகளைக்குறித்து ஞானமற்ற தெரிவுகளை நாம் செய்தால், அது அதைப்போன்றே ஆபத்தானதாக இருக்கலாம்.
22. நாம் எதை கவனத்தில் கொள்ளவேண்டும், ஏன்?
22 எனவே, நாம் 1 கொரிந்தியர் 15:33-ல் பவுல் நமக்குக் கொடுத்த அன்பான அறிவுரையை கவனத்தில் கொள்வோம். அவை நாம் நினைவிலிருந்து ஒப்பிக்கக்கூடிய அளவிற்கு அடிக்கடி கேட்டிருக்கக்கூடிய வெறும் வார்த்தைகள் அல்ல. அவை கொரிந்திய சகோதரசகோதரிகள்மேல், அதைத் தொடர்ந்து, நம்மேல் பவுலின் தகப்பனைப்போன்ற பாசத்தைப் பிரதிபலிக்கின்றன. மேலும் சந்தேகமின்றி, அவை நம்முடைய பரலோக தகப்பன் கொடுக்கும் அறிவுரையைக் கொண்டிருக்கின்றன, ஏனென்றால் அவர் நம்முடைய முயற்சிகள் வெற்றியடைய வேண்டுமென்று விரும்புகிறார்.—1 கொரிந்தியர் 15:58.
[அடிக்குறிப்புகள்]
[கேள்விகள்]
a அத்தகைய அறிவிப்புப் பலகைகளின் மற்றொரு அபாயம் என்னவென்றால், பதிப்புரிமை உடைய கட்டளைகளை அல்லது பிரசுரங்களை அந்த மூல உரிமைக்காரர் அல்லது சொந்தக்காரரின் அனுமதியின்றி நம்முடைய கம்ப்யூட்டர்களில் நகல் எடுப்பதற்கான சோதனையாகும்; அது சர்வதேச பதிப்புரிமை சட்டங்களுக்கு விரோதமானதாக இருக்கும்.—ரோமர் 13:1.
◻ என்ன குறிப்பிட்ட காரணத்திற்காகப் பவுல் 1 கொரிந்தியர் 15:33-ஐ எழுதினார்?
◻ வேலைசெய்யுமிடத்தில் பவுலின் ஆலோசனையை நாம் எப்படிப் பொருத்திப்பிரயோகிக்கலாம்?
◻ அயலாரைக்குறித்து நாம் என்ன சமநிலையான நோக்கைக் கொண்டிருக்க வேண்டும்?
◻ ஏன் 1 கொரிந்தியர் 15:33-லுள்ள அறிவுரை விசேஷமாக இளைஞருக்குப் பொருத்தமானதாக இருக்கிறது?
[பக்கம் 17-ன் படம்]
பவுல் வேலைசெய்யுமிடத்தை நற்செய்தியை முன்னேற்றுவிப்பதற்காகப் பயன்படுத்தினார்
[பக்கம் 18-ன் படம்]
மற்ற இளைஞர் உங்களுடைய கிறிஸ்தவ பழக்கங்களைக் கெடுக்க முடியும்